FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on September 15, 2021, 07:25:07 PM

Title: பயணி
Post by: இளஞ்செழியன் on September 15, 2021, 07:25:07 PM
தெரியாது
என்ற வார்த்தையோடு
நான் முடித்துக் கொண்டேன்
என்று நினைக்கையில்
ஏன் தெரியாது
என்று எப்போதும்
யாரோ தொடங்கி வைக்கிறார்கள்
ஒரு வாழ்க்கையையோ
அல்லது உரையாடலையோ...!

அறியாத பக்கங்களை
எல்லாம் நுனி மடக்கி
யாராவது கொடுத்து
வாசிக்கச் சொல்கையில்
வேண்டாம் என்று...
உதடு பிரிக்கும் முன்பே
திணிக்கப்படுகின்றன
விஷயக் குப்பைகள்..!

எல்லாம் மறுத்து
விசய ஞானங்கள் அறுத்து
நச்சாய் நினைத்து ஒதுக்கி...
மெல்ல சுருண்டு
ஒடுங்கி ஜன்னலரோப் பேருந்தில்
வேடிக்கைப் பார்க்கும்
முகமற்ற பயணியாய்
பயணிக்கவே எப்போதும்
விரும்புகிறது மனது...!

செய்திகளோடு வருபவர்களை
எல்லாம் தூர நிறுத்தி
திருப்பி அனுப்பி...
புன்னைகையோடு வரும்
மனிதர்களை மட்டும் சேர்த்து
வார்த்தைகள் இல்லாமல்
என்னோடு வாசம் செய்யுங்கள்
என்ற கட்டளையை
கண்களால் இட்டு
மெளனத்தை பகிர்ந்து
நகரும் என்
இருட்டு பொழுதுகளில்
வெளிச்சமில்லை என்று
சொல்பவர்களுக்கு
எப்படி  தெரியும்...
இருளில் ஜனித்ததுதான்
வெளிச்சமென்று...!