FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 03, 2018, 09:07:40 AM

Title: ஒரு இரயில் பயணம்
Post by: Guest on December 03, 2018, 09:07:40 AM
ஒரு இரயில் பயணம்
----------------------------

தொடர் வண்டியில்
படார் சத்தங்கள் இன்னும்
தீர்ந்தபாடில்லை - மின்
கம்பியை உரசிச்செல்வதால்
புகையை தின்று நம்மை
பகைத்திருக்கிறது....
*
கை வண்டியும் கஷுவண்டியும்
கேரள இரயில் நிறுத்தங்களில்
இப்போதும் இருக்கின்றன - இதயத்தை
விட்டு விலக மறுக்கும்
முதல் காதல் போல்
போர்டர்களின் கைகளை விட்டு
அகல மறுக்கிறது சிவப்பும் கை கை வண்டியும்....
*
கண்ணாடி விலகி
காகித டம்ளர்களானபோது
இரயில் வண்டிக்குள்
காஃபி கம்மியாகி விலை
வளர்ந்துபோயிருக்கிறது....
*
இப்போதெல்லாம்
பக்கத்து இருக்கைகள்
பேசுவதே இல்லை - செல் ஃபோண்
பக்கங்களை தேய்த்து தேய்த்து
சாங்கேதிக யுத்தம் நடத்துகின்றன
வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும்....
*
பிணங்களோடு பயணிப்பதுபோல்
ஒரு நிசப்தத்தின் மொழியும்
தனியே சிரித்துக்கொண்டு
திடீர் நிமிர்தலில் அகலக்கண் விரித்து
பீதி கொள்ளும் பார்வைகளில்
சந்தேகத்தின் முகங்களாகிப்போகிறது
சந்தோஷமான பயணங்கள்கூட....
*
கைபேசியின் உயிர்
ஊசலாடும்போதுகூட
என் பெயர் கேட்டு
மதமென்னவன்றறிந்து
சார்ஜர் கேட்கிறது
முன்னிருக்கை...
*
இரயில் நிறுத்தங்களில்
இதயம் நனைக்கும்
கண்ணீருக்குப் பஞ்சமில்லை - தொண்டை
நனைக்கும் தண்ணீருக்கு
மட்டுமே பஞ்சம்....
*
ஆணோ பெண்ணோ
ஏதோ ஒரு முகம் என்னைப்பார்த்து
சிரிக்கவேண்டும் என்று
என் மனம் ஆசைப்படுகிறது
பயணத்தினூடே சிலபல காரணங்களேதுமின்றி....
*
எல்லா நிறுத்தங்களிலும்
ஒலி பெருக்கிகள் இன்றும்
கரகரத்து அடங்குவது
புரிபடாத அதே மொழிகளோடும்
மறந்துபோகாத வசனங்களோடும்...
*
காடுகளை மட்டுமே
அதிகமாய் சுற்றுகிறது
இரயில் பெட்டிகள் -மனிதர்களை
வைத்துக்கொண்டு ஊழையிடும்
சத்தத்தில் வெளிப்படுவது
ஆயிரமாயிரம் அலங்காரமும் அழுகையும்தான்...
*
எழுதத்தோன்றுகிறது
வார்த்தைகள் பிரழ்கிறது - வாசிக்க
தூண்டும்போது கண்கள்
தூங்கநினைக்கிறது...
*
ஒரு இரயில் பயணம்
ஒராயிரம் இலக்குகளை
சுமந்து செல்கிறது - ஒராயிரம்
இலக்குகளில்....

Title: Re: ஒரு இரயில் பயணம்
Post by: joker on December 04, 2018, 08:00:13 PM
உயிரற்ற பொருள்களின் மேல்
உயிர் கொண்ட மனிதன்

உயிர்கொண்ட சகமனிதனை
உயிரற்ற ஜடமாய் காண்கிறான்

தங்கள் கவிதையில் உயிர் உண்டு

தற்போது ரயில் சிநேகிதம் என்பது
கைபேசியின் உயிர் மரிக்கும் தருணம்
மட்டும் உயிர் பெறுகிறது

தொடர்ந்து எழுதுங்கள் சகோ


வாழ்த்துக்கள்
Title: Re: ஒரு இரயில் பயணம்
Post by: Guest on December 05, 2018, 08:18:02 PM
நன்றி ஜோக்கர்....

கவிதைக்கு கவிதையாகவே மறுமொழி இடும் உங்கள் அன்பிற்க்கு
அன்பும் நன்றியும்...
Title: Re: ஒரு இரயில் பயணம்
Post by: NiYa on December 16, 2018, 08:17:38 PM
செல் ஃபோண்
பக்கங்களை தேய்த்து தேய்த்து
சாங்கேதிக யுத்தம் நடத்துகின்றன
வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும்""


நிதர்சனமான நிஜங்கள்
சடப்பொருளுக்கு இருக்கும்
மதிப்பு கூட உயிருக்கு இல்லை இப்போது

அருமையான கவி நண்பரே