Author Topic: எது தேச துரோகம்!  (Read 734 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
எது தேச துரோகம்!
« on: March 02, 2012, 04:08:59 PM »
போபால் விசவாயுக் கசிவால் ஏற்பட்ட பேரழிவுதான் உலகின் மிகக் கொடூரமான தொழிற்சாலைப் பேரழிவு என்கிறது வரலாறு. அது தொடர்பான வழக்கும் அப்படியொரு கொடிய சாதனையைப் படைக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. சுதந்திர இந்திய வரலாற்றில் மிகக் கொடுமையான அதிகார அராஜகம்- என்றுதான் இந்த வழக்கு தொடுக்கப்பட்ட விதத்தையும், முடிக்கப்பட்ட விதத்தையும் விமர்சிக்க வேண்டியிருக்கிறது.
திரவ நிலையிலிருந்த மீதைல் ஐசோ சயனைடு நச்சு வாயுவாக வெளிப்பட்டது, 1984 டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில். அடுத்த சில நிமிடங்களில் ஒட்டு மொத்த போபாலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த சிலமணி நேரங்களில் இறந்தவர்கள் மட்டும் 5000 பேர். அதற்கடுத்த இரண்டு நாளில் அந்த எண்ணிக்கை இரு மடங்கானது. அதன்பின் இறந்தவர்களையும் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது. இந்த எண்ணிக்கை, கணக்கில் வந்தது மட்டுமே.
எதற்காகச் சாகிறோம் என்பது தெரியாமலேயே உயிரிழந்த அப்பாவிகள் பிணத்துக்கு 75 ஆயிரம் ரூபாயும், பார்வையிழந்து- புற்று நோயால் பாதிக்கப்பட்டு- முகவிகாரம் போன்ற பல்வேறு கோளாறுகளால் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி போபால்வாசிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும்தான் நட்டஈடு. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அந்த இரவில் நீங்களும் நானும் போபாலில் இருந்திருந்தால், நம்முடைய பிணத்தின் விலை வெறும் 75 ஆயிரம்தான். வெட்கக்கேடு! உப்புக்கும் உதவாத இந்த நாட்டில் மனித உயிரைவிட மலிவானது வேறெது!
1984-ல் அந்தப் பேரழிவு நிகழ்கிறது. 26 ஆண்டுகள் கழித்து இப்போது தீர்ப்பு வருகிறது. அதிகார அராஜகம்- என்று தொடக்கத்தில் குறிப்பிட்டது வெற்று வார்த்தையல்ல. இந்த அராஜகத்துக்கு அதிகாரிகள் துணை போயிருப்பார்கள், அரசு வழக்கறிஞர்கள் துணைபோயிருப்பார்கள், அரசியல்வாதிகள் துணை போயிருப்பார்கள்... ஏன்... ஏதாவதொரு நொண்டிச்சாக்கை வைத்துக்கொண்டு நீதிமன்றமும் துணை போயிருக்கலாம். இதற்காக இவர்களுக்கு என்னென்ன போயிருக்கும் என்பதை முதலில் கண்டறியவேண்டும். ஒவ்வொரு வாய்தாவுக்கும் எது காரணமாகச் சொல்லப்பட்டது என்பது அம்பலமானால் எல்லாமே அம்பலமாகிவிடும்.
அப்பாவி போபால் மக்கள் ஒரு அமெரிக்க ஆலையின் தவறால் பிணமாக, நடைப்பிணங்களாக நாதியற்றுத் திரிந்ததை வேடிக்கை பார்த்ததைத் தவிர இந்த நாடு வேறென்ன செய்தது? இந்தியச் சாதி மாதிரி, அச்சத்திலேயே செத்துப் போகிற இன்னொரு சாதியை உலகின் எந்த மூலையிலாவது நீங்கள் பார்க்கமுடியுமா?
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்- ஊர்ச்
சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்
என்று சும்மாவா சொன்னான் பாரதி!
அதனால்தான், மதிப்பிடவே முடியாத ஆயிரமாயிரம் மனித உயிர்களுக்கு ஈடாக ஒரு மட்டமான நட்ட ஈட்டுத் தொகையை ஏற்க ஒப்புக்கொண்டது ஏன் என்று அதிகாரத்திலிருப்பவர்களின் தலையில் தட்டிக் கேட்க நம்மால் முடியவில்லை. கொலை வழக்குக்கு நிகரான ஒரு வழக்கை, லாரி விபத்து, பஸ் விபத்து ரேஞ்சுக்குக் கொண்டுபோய்விட்டீர்களே- என்று நீதியரசர்களைக் கேட்க முடியவில்லை. குற்றவாளி ஆன்டர்சனைத் தப்பவிட்டவன் யார் என்று தேடிக் கண்டுபிடிக்க முயலவில்லை.
தீர்ப்பு வெளியானதும், "நீதியைக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள்" என்று வீர வசனம் பேசிய வீரப்ப மொய்லி, விவரம் தெரியாதவரல்ல.... இந்தியாவின் சட்ட அமைச்சர். அந்தக் கணத்தில், நீதித் துறையின் முகத்திரை கிழிந்தது. நச்சு வாயுவை உமிழ்ந்தது யூனியன் கார்பைடு ஆலை. அதற்காக, அந்த நிறுவனத்தின் தலைவர் ஆன்டர்சன் மீதும் மற்ற குற்றவாளிகள் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 304ம் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அந்தப் பிரிவில் குற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை தண்டனை பெற வழியிருந்தது. உச்ச நீதிமன்ற நீதியரசராயிருந்த அகமதி, இந்த வழக்கை 304-&ஏ பிரிவுக்கு மாற்றியது குறித்த விவாதம் வெளிப்படையாகவே நடக்கிறது. 304&ஏ என்பது, அஜாக்கிரதையால் மரணம் நிகழக் காரணமாயிருத்தல். இதற்கு அதிகபட்ச தண்டனையே 2 ஆண்டுகள்தான்.
கொடூரமான போபால் பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பலகோடி ரூபாய் மதிப்பிலான அறக்கட்டளையின் தலைவராக இதே அகமதி, பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பொறுப்பேற்றது குறித்தும் இப்போது விவாதம் நடக்கிறது.
நீதித் துறைதான் புகாரை நீர்த்துப் போக வைத்துவிட்டது- என்று இப்போது சொல்கிறார் வீரப்ப மொய்லி. எல்லோரும் சேர்ந்து திருடனைத் துரத்தும்போது, அவனும் சேர்ந்து "பிடி, பிடி" என்று சவுண்ட் கொடுத்துக்கொண்டே ஓடுவதைப்போல், "ஆன்டர்சனை எப்படியாவது இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும்" என்று மற்றவர்களோடு சேர்ந்து தானும் குரல் கொடுக்கிறது, காங்கிரஸ்.
இந்த விவாதத்தையெல்லாம்விட முக்கியமான விவாதப் பொருளாகிவிட்டது, ஆன்டர்சனை இந்த வழக்கிலிருந்து காப்பாற்றியது யார் என்கிற கேள்விதான். இப்படியொரு பேரழிவுக்குக் காரணமென்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆன்டர்சன், கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடப்பட்டார், அவசர அவசரமாக அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் பிரதமர், ராஜீவ் காந்தி. மத்தியப் பிரதேச முதல்வர், அர்ஜுன் சிங். அப்போது ராஜீவுக்கு அருகிலேயே இருந்தவர்கள் பி.சி.அலெக்சாண்டரும் ஆர்.கே.தவாணும். ராஜீவுக்கு அது தெரிந்திருக்கலாம் என்கிறார்கள் இருவரும்.
நடந்தது மிகக் கடுமையான, உலகிலேயே அதுவரை நிகழாத தொழிற்சாலை விபத்து. அதற்குக் காரணம், யூனியன் கார்பைடு ஆலை. போபால் நகர வீதிகளில் சிதறிக் கிடந்த பிணங்களைப் பொறுக்கியெடுத்து அடக்கமோ தகனமோ செய்வதற்குள், அமெரிக்காவிலிருந்து வந்த ஆன்டர்சனால் திரும்பிப் போக முடிந்தது என்றால், ஒரு அப்புசாமியாலோ குப்புசாமியாலோ அவரை அனுப்பி வைத்துவிட முடியாது.
இந்த விசயத்தில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் இருவரின் கருத்து அழுத்தமானதாக இருக்கிறது. ஒருவர், காங்கிரஸ்காரரான திக்விஜய்சிங். இன்னொருவர், பாரதீய ஜனதா கட்சிக்காரரான பாபுலால் கௌர். இரண்டு பேருமே நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளனர்.
அந்தச் சமயத்தில், சகல அதிகாரமும் பலமும் பொருந்திய பிரதமராக ராஜீவ் இருந்ததை திக்விஜய்சிங் சுட்டிக்காட்டுகிறார். அவ்வளவு பலமான பிரதமருக்குத் தெரியாமல், ஆன்டர்சன் விசயத்தில் ஒரு மாநில அரசுடன் அமெரிக்கா பேசியிருக்க முடியாது- என்கிற ரீதியிலான அவரது கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
இரண்டே விசயங்கள்தான் நடந்திருக்க வேண்டும். ஒன்று, குற்றவாளி ஆன்டர்சனைத் தப்பவிட்ட குற்றத்தை ராஜீவ்காந்தி செய்திருக்க வேண்டும். அல்லது, ஒரு குற்றவாளி தப்பிச் செல்ல ஒரு முதலமைச்சரே வழிவகுத்ததைக்கூட அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு விவரமற்ற பிரதமராக அவர் இருந்திருக்க வேண்டும்.
முன்னாள் முதல்வரான பாபுலால் கௌர், இப்போது சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாரதீய ஜனதா அரசில் அமைச்சர். அதுவும், போபால் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான துறையின் அமைச்சர். "குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாகாமல் தப்பித்ததற்கும், நியாயமான நட்ட ஈட்டை பாதிக்கப்பட்டவர்கள் பெற இயலாது போனதற்கும் அப்போதிருந்த மத்திய அரசு காரணம். அதற்குப் பின்வந்த வாஜ்பாய் அரசும், குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்து வருவதில் தீவிரம் காட்டவில்லை" என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கௌர்.
கட்சி விசுவாசம் என்ற பெயரில் மக்களுக்குத் துரோகம் செய்யாமல், மக்களுக்கு விசுவாசமாக இருக்கும் திக்விஜய்சிங், பாபுலால் கௌர் போன்ற அரசியல் தலைவர்கள்தான் இப்போதைக்குள்ள ஒரே நம்பிக்கை. இவர்களை உள்ளடக்கிய ஒரு உயர்நிலைக் குழுவை போபால் சிக்கலைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டுமே தவிர, சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழுவை அமைப்பது அபத்தமானது. "இந்தப் பிரச்னையில் ராஜீவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை" என்று அறிவிப்பதைத் தவிர வேறெதையும் சாதிக்கப் போவதில்லை இக்குழு.
26 ஆண்டுகள் கழித்து வந்திருக்கும் போபால் தீர்ப்பு பற்றி சோனியாகாந்தி வாயே திறக்காததைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, போபால் விசயத்தில் மரணத்தின் வியாபாரிகள் யார்- என்று கேட்கிறார். சோனியாவிடமிருந்து இதற்கும் பதிலில்லை. ஈழ மண்ணில் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் வரை திறக்காமலேயே இருந்த வாயாயிற்றே, அந்த மௌன மாதாவின் வாய், அவ்வளவு சுலபத்தில் திறந்துவிடுமா! காங்கிரஸ்தான் பூட்டப்பட்ட வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட திருடனைப்போல் அலறித் துடிக்கிறது. ராஜீவுக்கு அதில் தொடர்பேயில்லை- என்று தொடங்கியது. ராஜீவ் மீது இப்படியெல்லாம் புகார் கூறுவோர் தேசப்பற்று இல்லாதவர்கள்- என்று இப்போது முடித்திருக்கிறது. அற்பமான பதவிகளுக்காக இவர்கள் ராஜீவ் மீது வைத்திருக்கும் பற்று வேறு, அப்பாவி இந்தியர்கள் தேசத்துக்காகவே தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்று வேறு என்பதே தெரியாத நிலைக்குப் போய்விட்டது காங்கிரஸ்.
டெல்லி அமெரிக்கத் தூதரகத்திலிருந்த உயர் அதிகாரி ஒருவர், "இந்தியா வந்த ஆன்டர்சனை பத்திரமாகத் திருப்பி அனுப்புவதாக இந்தியா உறுதியளித்தது" என்று இப்போது சொல்ல, திருட்டு முழி முழிக்கிறது காங்கிரஸ். இந்தியா உறுதியளித்தது- என்பதற்கு, ராஜீவ் உறுதியளித்தார் என்று அர்த்தமா, அர்ஜுன்சிங் உறுதியளித்தார் என்று அர்த்தமா? ஹார்வர்டு அகராதியில் தான் இதற்கு அர்த்தம் தேடவேண்டும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் ஆரம்பித்து போபால் வரை, கொலைகாரர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி ஒருவரை பதவியில் வைத்திருக்கிறது. அந்தப் பிரகஸ்பதி, பிரணாப் முகர்ஜி. போபால் மக்கள் கடுமையான கோபத்தில் இருந்தனர், அங்கே சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் இருந்தது, அப்போதைய சூழ்நிலை கருதி ஆண்டர்சனை விடுவிப்பதென்று அர்ஜுன்சிங் முடிவெடுத்திருந்தால் அது சரியான நடவடிக்கைதான்- என்றும் கூசாமல் பேச முடிகிறது முகர்ஜியால்! போபால் சம்பவத்தில் தன் குடும்பத்தினர் பலியாகியிருந்தால் இப்படிப் பேசியிருப்பாரா அவர்! நாட்டின் மானத்தைவிட ராஜீவின் மானம் தான் முக்கியமென்றோ, ராஜீவின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் தேசத் துரோகிகள் என்றோ காங்கிரஸ் கருதினால், காங்கிரச’டமிருந்து நாட்டைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.
போபர்ஸ், போபர்ஸ் என்று ஒரு வழக்கு இருந்தது உங்களுக்கு மறந்திருக்காது. நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட பீரங்கிகளுக்கே கமிசன் பெறப்பட்டதாக புகார். அப்போதும் இதே ராஜீவ் தான் பிரதமர். அந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர்களில் ஒருவர், இத்தாலியரான குவாத்ரோச்சி. கடைசி வரை அவரை முழுமையாக விசாரிக்கக்கூட இந்தியாவால் முடியவில்லை. அவரை விசாரித்திருந்தால், அந்தக் கமிசன் பணம் எங்கே போயிற்று என்பது தெரிந்திருக்கும் என்று சொல்லப்பட்டது. அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர அதிகாரிகள் தலைகீழாக நின்றார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆன்டர்சனைப் போலவே, அவரையும் கொண்டுவர முடியவில்லை. வேறெதற்காக இவர்கள் தலைகீழாக நின்றார்கள் என்பது தெரியவில்லை.
போபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிசன் கைமாறியதாகச் சொல்லப்பட்டது உண்மையென்றால், அதை மூடி மறைக்கவும் குவாத்ரோச்சியைத் தப்பவிடவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான் தேசத் துரோகமாக இருக்குமே தவிர, ராஜீவின் ஆட்சிக் காலத்தில் நடந்த இமாலயத் தவறுகள் பற்றி கேள்வி எழுப்புவது தேசத்துரோகமல்ல.
எதனால் சாகிறோம் என்பதே தெரியாமல் ஒரு நள்ளிரவில் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்த அப்பாவி போபால் மக்களுக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும். 20 ஆயிரம் உயிர்களுக்கு வெறும் வாய்க்கரிசி மட்டுமே போட்டுவிட்டுத் தப்பித்துவிட ஒரு அமெரிக்க நிறுவனத்தை நாம் அனுமதித்துவிடக் கூடாது. அமெரிக்காவில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனைதான் கிடைத்திருக்கும். இந்த விசயத்தில் நாமும் போராடியாக வேண்டும். அமெரிக்காவுக்குப் போய்ப் போராட வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு நகரத்திலும், அமெரிக்கத் தூதரகமோ கலாச்சார மையமோ வேறேதாவதோ இல்லையா என்ன!

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Yousuf

Re: எது தேச துரோகம்!
« Reply #1 on: March 02, 2012, 04:56:43 PM »
போபாலில் மட்டும் அல்ல இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

போபால் விசா வாயு விபத்தில் இறந்தவர்களுக்கு ருபாய் எழுபத்தி ஐந்தாயிரம் நிவாரணம் வழங்குகிறார்கள் ஒரு மனிதனின் உயிர் இவ்வளவுதான என்று கேள்வி எழுகிறது.

இந்த இடத்தில் ஒன்றை சிந்திக்க வேண்டும் இந்தியாவால் மக்களின் உயிர்க்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஒரு தொழிற்சாலையில் சரியான பாதுகாப்பு இல்லாமல் இருபது ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரை விட்டிருகிரார்கள்.

இந்த நிலையில் கூடங்குளம் அணு உலை மூலம் ஒட்டு மொத்த தமிழர்களின் உயிரரியும் குடிக்க தயாராகிவிட்டது நடுவண் அரசு. ஏற்கனவே பேரழிவு ஆயுதங்களை வழங்கி ஈழ தமிழனை அழித்தொழித்தது போதது என்று இப்பொழுது தமிழகத்தில் உள்ள தமிழர்களையும் அழித்தொழிக்க ஆயத்தமாகி விட்டது.

மக்களை பாதுகாக்க வக்கற்ற இந்த அரசுக்கு எதிராக மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்று கருதி குரல் கொடுக்க கூடிய ஒரு சில மனிதநேயம் மிக்கவர்களையும் இந்த அரசு தேச துரோகிகள் என்று கூறுகிறது.

அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த இந்த இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினர் தேச துரோகிகள் இல்லையாம் மக்களை பாதுகாக்க குரல் கொடுப்பவர்கள் தேச துரோகிகலாம்.

அப்படியென்றால் நானும் தேச துரோகியாகவே இருக்க ஆசை படுகிறேன். போலி தேச பக்தி எங்களுக்கு தேவை இல்லை. இறுதி வரை இப்படி கேடு கேட்ட கேவலமான ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்க முன் வருவோம்!

நல்ல பதிவு சகோதரி தர்ஷினி!