Author Topic: மெல்லினங்களும், வல்லினங்களும்….  (Read 686 times)

Offline sasikumarkpm

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • அதான் personal ஆச்சே...
அது ஒரு மழை பெய்திருந்த நாளின் பிற்பகுதி… காதலனின் நெடுநாள் பிரிவால் கலங்கி குளமாய் போன காதலியின் கண்களை ஒத்திருந்தது அந்த சாலையோரம்..
   தூரத்தே கேட்டு மறையும் ஒரிண்டு குரல்களைத் தவிர வேறெரு சப்தமுமில்லை.. என் அறையின் சாளரம் வழியாக ஆகயத்தினை கைது செய்ய நான் எனை மறந்து முயன்று கொண்டிருந்தேன்..
   இனிப்பினை வாயிலடக்கி பேசும் மழலையின் அழகினை பெற்ற அந்த சில்லென்ற வாடைக்காற்று, கோடை முழுவதுமாய் மறந்திருந்த மண்வாசம், நள்ளிரவினை ஒத்த நிசப்தம், சாளரத்தின் வழியே கசிந்துருகும் மாலைக்கதிரவனின் சிறு தீண்டல் இவையனைத்தும், என் மனதில் மறக்கப்பட்டதாய் மறைக்கப்பட்ட கடந்த காலத்தின் ஒரு பகுதியினுள்  மெல்ல மெல்ல என்னை ஆழ்த்திச் சென்றது..
   பூட்டி வைத்த கணங்களும், புதைத்து வைத்த தினங்களுமாய் அந்த காலத்தாண்டலின் தீண்டல்கள் ஏராளம்..
   விடலைப் பருவ எண்ணங்கள்தாம் எத்துனை வலியவை, எவ்வளவு முயன்றாலும் இமி கூட மறைவதில்லை.. படபடவென தோன்றி மறையும் புன்னகைத்த முகங்களும் நிகழ்வுகளும் அடிமனதினை லேசாய் அசைத்துப் பார்க்கத்தான் செய்கின்றன..
நாளையின் மீது நம்பிக்கை வைத்து ஆடிப்பட்டமாய் கனவுகளைத் தேடித் தேடி விதைத்துக் கொண்டிருந்த இளமை அது.. பிடி கொடாமல் துள்ளிச் செல்லும் ஏறாய் மனம் விண்ணை முட்டிப் பறந்த காலம்.. திரும்பிய பக்கமெல்லாம் உற்சாகம் தான், தோள்திணவுக்கு குறையின்றி வீதிவீதியாய் சுற்றித்திறிந்த நாட்கள்..!!
அன்றுவரை எனக்கு அழகாய் தெரிந்தவை இரண்டு தாம், தனக்கின்றிப் போனாலும் மனங்கோணாமல் எனக்குத் தந்து தன்சுகம் கருதாது என்நலம் குறிகொண்ட அன்னையின் அன்பு முகமும், எத்தனை முறை படித்தாலும் வியப்பை அள்ளித்தந்து மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் பாட்டுத் தலைவன் பாரதியின் வன்வரிகளும் தான்..
இவை இரண்டு மட்டுமே என் பகலையும் இரவையும் நிரப்பிச் சென்று கொண்டிருந்த தருணத்தில் வந்தவள் தான் நீ..
விரைந்து செல்லும் தொடர்வண்டி என்றாவது நாணிக்கோணும் நாணலேறி கவிழ்ந்ததுண்டா?? கடிதுவிரையும் மின்னலது எங்கேனும் மொட்டொன்றில்  மோதி தோற்பதுண்டா?? சமீபமாய் என்னகம் அத்தகைய மாற்றங்களை எற்கப் பழக ஆரம்பித்திருந்தது..
என் தலைவன் பாரதியின் வரிகளை குணமாகவும், தாயின் கனிவான முகத்தின் மறுத்தோன்றலாகவும் இருந்த உன்னை உன்வீட்டு முற்றம் எனக்கு காட்டியது, அடடே அழகு கோலமே அழகாய் கோலமிடுகிறதே..!
கொடிமலரொன்று ஏற்றம் கண்டு என்றாவது ஞாயிறு தழுவுமா? அட அதுவும் சாத்தியப்பட்டது இயற்கையினை தோற்கடிக்கும் இயற்கையான செயலான காதலெனும் பெயரினைக் கொண்டு..!!
என்நாட்களின் நீளங்களை மெல்ல மெல்ல நீ அபகரிகத் துவங்கிய தினங்களவை.. முப்பொழுதும் நின்னோடு.. நின் நினைவோடு..
நிழல்கப்பி மலர்தூவும் காஞ்சி மரத்தின் திண்டு வேரிலமர்ந்து உன் கருவிழிகளின் கோளங்களில் பூகோளம் பயில பழகியிருந்த்தேன்..
விலகிப் பிடித்தாலும் ஒன்று சேரும் காந்தப் பிணைப்பின் கந்தர்வ மயக்கத்திலே நீயும் நானும் நாட்களையும்  வாரங்களையும் வருடங்களையும், ஏன் யுகங்களையும் கடந்து பிரயாணிக்க சித்தமாயிருத்தோம்..
இதழிலமர்ந்து முட்டத்தேனைக் குடிக்கும் வண்டிற்கு மலரின் மீது அதிக காதலா? இதழ்விரித்து இடம் கொடுக்கும் மலருக்கு வண்டின்மீது அதிக காதலா?? யார் கண்டது…!
நம்மை, நம்மை மட்டுமே அத்துனை நெருக்கமாக சேர்த்துப் பார்க்க பழகியது அந்த மாலை நிலவும், மரகத வெய்யலும்..
ஊரோர மொட்டைப் பனைமரம் கூட கைகளை விரித்து நம்மை வரவேற்பதாய் தோன்றும் நமக்கு..!
ஆற்றுப் படுகையின் சேற்று குழியில் இதழ் பரப்பி கிடக்கும் செந்தாமரையும் வெட்கிச் சிவக்கும் என் நெற்றிப் பரப்பில் நீ முத்தமிடுவதைக் கண்டு..!!
காட்டு மல்லிகையை சேர்த்துக் கட்டிய உன் கூந்தல் வலையா, இல்லை, தூண்டிலை பிடித்திழுக்கும் மச்சமாய் திரிந்த நின் கயல்விழிகளா??? மெல்லிசைகளை நிதம் பிரசவிக்குமுன் சங்கு கழுத்தா.. நட்சத்திரங்களை தூவிப் பேசும் உன் மந்திர இதழா.. பொலிந்த நிலவாய் பொங்கி இருந்த முகமா?? பாட்டுத்தலைவனின் வரிகளை மெய்ப்பிக்கும் அகமா… ஏதொ ஒன்று என்னை இழுக்க, வேரறுந்த விருட்சமாய் உன்னுள்ளே விருப்பத்துடனே விழுந்தேன்..
என் தனிமைகளுக்கும் இனிமைகளுக்கும் புதுப்புது அர்த்தங்கள் நீ கற்ப்பிக்க ஆரம்பித்திருந்தாய், தினம் என்மீது ஆரோகணித்திருந்தாய்..!!! வேற்றுப்பாதையில் நான் நடையிடத் துவங்கிய நேரமது..
நீ, நான் மட்டும் சுற்றித்திரிந்த சுதந்திர தினங்கள்
நாம் மட்டும் இரசித்து பார்த்திருந்த இயற்கையின் உச்சங்களை இங்கு யார் காணக்கூடும்???
பூத்துக்குலுங்கும் காட்டு மல்லி, கரையில் பரவிக்கிடக்கும் செந்தாமரை, நாற்றின் நடுவிலே நடைபயிலும் நீள்கழுத்து பறவை, காற்றின் வே(மோ)கத்திற்கிணங்கி சரிந்தாடும் நாணற் புதற், மேற்கே மறைந்து நிலவுக்கு வழிகாட்டும் கதிரவன், அதிகாலையின் வெண்பனி, அந்தி மாலையின் பிறைநிலவு, முதல் மழையின் முதல்துளி, அழகழகாய் பறந்து செல்லும் செந்நாரைக்கூட்டம், தான்தோன்றி வடிவெடுக்கும் வெண்முகில் தோட்டம், சிதறிய முத்துக் குவியலாய் பரவிக்கிடக்கும் நட்சத்திரங்கள்.. கால காலத்துக்கும் நம் காதலை இவை பறைசாற்றிக் கொண்டிருந்தன..!!
காதுகளில் நுழையும் மெல்லிசை மெல்ல மெல்ல மனதினை ஆக்கிரமிப்பது போல, விழி வழி என்னுள் சனனித்த நீ  நெஞ்சுக்கூட்டில்  நீக்கமற சயனித்தாய்..
மொட்டைக் குன்றின் மேல் நாமமர்ந்து கனவாய் கண்டவை, கண்மாய் மடிப்பில் நின்று பார்த்துக்கொண்டவை, பருத்தி தோட்டத்தில் காலநேரம் மறந்து நாம் பேசிக்கொண்டவை…
நிச்சயமவை அமுதருந்தியிருக்கவேணும், இன்றளவும் என்னுள் நிழலாடிகொண்டிருப்பதனால்!!!!
ஆற்றங்கரையில் தனிமையில் என் மடி சாய்ந்து என் முகம் நோக்கி பேசிக்கொண்டிருப்பாய், சில நேரம் நம் வார்த்தைகள் தீர்ந்து போய் ஒருவர் கண் ஒருவர் பார்த்து மெளனித்திருப்போம், என் விழிகளில் அப்படி என்ன கண்டாயோ தெரியாது, வெட்கத்துடன் வேண்டுமென பேச்சை வளர்ப்பாய், 
வாஞ்சையுடன் சில நேரம் வானம் ஏன் நீல நிறமாயிருக்கிறது என வண்ணக்குச்சிகளை முதன் முதலாய் காணும் மழலையின் ஆர்வத்தோடு கேட்பாய், நான் விளையாட்டாய் சொல்லுவேன் அது நீ நிமிர்ந்த போது உன் விழி வண்ணத்தை கண்டு தானும் அந்நிறம் கொண்டதென, நீ இன்னும் வெட்கத்தினால் முகம் சிவப்பாய்,  சட்டென என் கரம் கொண்டு உன் முகம் மறைப்பேன், நாணத்தினால் நீ விக்கித்த அந்நேரம் உன் உள்ளம் பேச நினைத்து மெளனித்த அனைத்தையும் என் கரம் வந்து மோதித்தெறிக்கும் உன் சுவாசம் சொல்லிச் செல்லும்.. ஒருவாராக நீ உன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு என் செயலுக்கான விளக்கம் கேட்பாய்,  நான் நிதானமாய் கூறுவேன் வானம் சிகப்பாய் இருப்பதை விட நீலமாயிருப்பதில் தான் எனக்கு விருப்பமென.. கல கலவென சிரித்துக் கொண்டே என் கரங்களில் உன் இதழ் பதித்து, நாணத்தினால் துள்ளி ஓடி மறைவாய், எனை மறந்து நானிருந்த நாட்களவை..!!!
வானத்தினை சாட்சியாய் வைத்து நானுனக்களித்த வாக்குறுதிகளும், கண்ணீரினால் நீ எனக்கெழுதித் தந்த வாய்மொழிகளும் ஏனோ இன்று ஊமையாகிப் போயின..
உன்மேல் நான்கொண்ட அன்பும் என் மேல் நீ கொண்ட அன்பும், நம் குடும்பம் நம் மேல் கொண்ட நம்பிக்கையின் பேயரிலே மொழியற்றுப் போயின, மனமுவந்து நாம் நம்மை பிரித்துக் கொள்ள ஆயுத்தமானோம்,
அன்றுவரை விண்ணகத்திலே நம் பெருமை பேசித்திர்ந்த வெண்நிலவும், சூரியனும் நம்மை வெகுண்டு நோக்க, அதை எதிர் நேக்கும் சக்தியின்றி நிலமகளுக்கு மட்டும் புரிய, விழிகளினால் கண்ணீர் மடலை நானும் நீயும் தனித்தனியே இயற்றிக்கிடந்தோம்..
காலம் எதையும் ஆற்றும் திறன் படைத்ததாம், காதலிக்காத எவனோ சொல்லிச்சென்றான் போலும்..
உன் அருகினில் கடுகி விரைந்த காலம் இன்றி உன் துணையின்றி நொண்டிக் கொண்டிருக்கிறது என்றேனும் நம் காதல் குறிஞ்சி மீண்டும் பூக்காதா என்ற நப்பாசையுடன்..
ஓரு நாழிகை நேரம் நின்றிப்பேனோ, இல்லை அதையும் தாண்டியிருக்குமோ நானறியேன்..
என்னப்பா சன்னல் வழியா சாரல் முகத்தில் அடிக்குதா?? என வாஞ்சையுடன் என் கண்ணீரின் கனம் புரியாமல் அதை தன் பிஞ்சு விரலால் துடைத்தெடுக்கும் என் மகளின் விழிநோக்கி புன்னகையுடன் ஆமோதித்து அவளை அள்ளியெடுத்து உச்சிமோர்ந்தேன்….
[/center][/right][/pre][/left][/center][/right]
சசிகுமார்..