Author Topic: இதுவும் கடந்து போய்விடும்  (Read 737 times)

Offline thamilan

அரசன் ஒருவன். அவனுக்கு வயதாகி விட்டது. மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் இரவு அவனுக்கு மரண பயம் வந்தது. அவனால் தூங்க முடியவில்லை.

விடிந்ததும் அமைச்சர்களை அழைத்தான்.

" அமைச்சர்களே நீங்கள் அருகில் இல்லாத போது எனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனையை மிகச் சுருக்கமாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் எழுதித் தாருங்கள் . அதை நான் என் வைர மோதிரத்தில் ஒளித்து வைத்துக்  கொள்வேன். சமயம் வரும் போது எடுத்துப் பார்த்துக் கொள்ளுவேன். " என்றான்.

அமைச்சர்கள் திகைத்தார்கள். எல்லா ஆபத்தான நேரங்களிலும் பின்பற்றக் பின்பற்றக் கூடிய ஒரே ஆலோசனையா? அதெப்படி முடியும்?  அதும் ஓரிரு வார்த்தைகளில்?

அமைச்சர்களில் முதிர்ந்த அறிஞர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு ஆலோசனையை இரண்டே வார்த்தைகளில் சொன்னார்.

அமைச்சர்களுக்கு அது பிடித்துப் போய் விட்டது. அதை ஒரு சிறு துண்டு காகிதத்தில் எழுதி மடித்து அரசனிடம் கொண்டு வந்தார்கள்.

' அரசே நீங்கள் விரும்பியபடி சுருக்கமான ஓர் ஆலோசனையைக் கொண்டு வந்திருக்கிறோம். இதை நீ எந்த ஆபத்தான நேரத்திலும் கடைப்பிடிக்கலாம். இது எப்போதும் உனக்கு உதவும். ஆனால் இதை நீ இப்போது பார்க்கக் கூடாது. ஆபத்தான நேரம் வரும் போது தான் பார்க்க வேண்டும்.' என்று சொல்லி அந்த துண்டு சீட்டை அவனிடம் கொடுத்தார்கள்.

அரசனும் அதை வாங்கி தன வைர மோதிரத்தில் வைத்துக் கொண்டான்.

அரசன் அந்த ஆலோசனையை கடைபிடிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரமே வந்தது.

பக்கத்துக்கு நாட்டரசன் அவன் நாட்டின் மீது படையெடுத்தான்.

அந்த நாட்டரசன் பலமுறை படையெடுத்து இவனால் தோற்கடிக்கப் பட்டவன்.

அடி வாங்கிய அந்த நாட்டரசன் பத்து ஆண்டுகள் கடுமையாக ஆயத்தங்களை செய்து கொண்டு படையெடுத்து வந்திருந்தான்.

வெற்றி அல்லது வீர  மரணம் என்ற முடிவோடு அந்த அரசன் மூர்க்கமாக போரிட்டான்.

அரசனின் படையால் அவர்களை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அது தோற்று சிதறி ஓடியது.

எதிரிகள் அரண்மனையை பிடித்து விட்டார்கள்.

அரசன் மட்டும் தப்பித்து தன குதிரையில் ஏறி வெளிறேறினான்.

ஒரு மலையின் மேல் ஏறிச் சென்றான்.

இதை தெரிந்து கொண்ட எதிரிப் படைகள் அவனைத் தேடி வந்தனர்.

துரத்தில் அவர்கள் பின் தொடர்ந்து வரும் சப்தம் கேட்டது.

அரசன் குதிரையை  வேகமாக ஓட்டினான். அவன் போரில் அதிகம் காயம் பட்டிருந்தான். மலையில் குறுகிய பாதையில் ஏறிச் செல்வது மிகவும் கஷ்டமாக இருந்தது

அந்தப் பாதை ஓரிடத்துக்கு வந்ததும் முடிந்து விட்டது. அதற்கப்பால் அதல பாதளம்

இனி ஓரடி எடுத்து வைக்க முடியாது. பின்னாலும் திரும்பிச் செல்ல முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் அரசன் கலங்கினான்.

அப்போது சூரிய ஒளிபட்டு வைர மோதிரம் மின்னியது.

அப்போதுதான் அவனுக்கு அமைச்சர்கள் தந்த துண்டு சீட்டு நினைவுக்கு வந்தது.

அந்த சீட்டை எடுத்து பிரித்துப் பார்த்தான். அதில் மூன்றே வார்த்தைகள் தான் இருந்தன.

" இதுவும் கடந்து போகும் "

அதை படித்த அரசனுக்கு கவலைகள் எல்லாம் பறந்தோடின. பின் தொடர்ந்து வரும் பகைவர்களை மறந்தான்.

இதும் கடந்து போகும்.

எவ்வளவு பெரிய உண்மை. அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. மன அமைதி உண்டானது.

தான் இருந்த ஆபத்தான சூழ்நிலையை மறந்தான்.

இந்த சூழ்நிலை நிலைக்கப் போவதில்லை. இது கடந்து போகும் என்ற எண்ணம் அவனை புது மனிதன் ஆக்கியது.

அவன் சுற்றிலும் பார்த்தான்.

வண்ண வண்ண பூ மரங்கள். பறவைகளின் இனிய நாதங்கள். அருவி எழுப்பும் உல்லாச கீதம்.

அடடா! எவ்வளவு அழகான இடம்!

'நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் இந்த அழகை அனுபவிக்காமல் போனேனே.'

இப்படி ஒரு இடம் என் நாட்டில் இருப்பது எனக்கே தெரியாமல் போனதே.

அரியாசனத்தில் அமர்வது தான் ஆனந்தம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நெருப்பின் மேலே அமர்ந்திருப்பது போலதானே இருந்தது.

இதோ, இந்த மலை உச்சியில் அமர்ந்திருப்பது இயற்கை தாயின் மடியில் அமர்ந்து அவள் மார்பில் பால் குடிப்பதை போல பேரானந்தமாக இருக்கிறதே!

எனக்கு ஏற்பட்ட துன்பமல்லவா என்னை இந்த இன்பகரமான இடத்துக்கு கொண்டு வந்தது.

இதோ இந்த அனுபவத்தில்  எனது துன்பங்கள் கடந்து போய் விட்டதே!

அரசன் உற்றுக் கேட்டான். பின் தொடர்ந்து வந்த பகைவர்களின் சப்தம் கேட்கவில்லை. அவர்கள் வேறு பக்கம் சென்று விட்டனர் போலும்.

இதும் கடந்து போகும். கடந்து போய் விட்டது.

அரசன் கீழிறங்கி வந்தான். சிதறி ஓடிய தன் படைகளை ஒன்று திரட்டினான். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டினான்.

அவனுடைய படைகள் வீராவேசமாக போரிட்டு நாட்டை மீட்டது.

அரசனின் வெற்றியைக் கொண்டாட பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அரசன் ஊர்வலம் வந்தான்.

' இதோ நான் வெற்றி பெற்று விட்டேன். யாரும் என்னை வெல்ல முடியாது என அரசன் எண்ணினான்.

மன்னனுக்கு கர்வம் உண்டானது.

அப்போது சூரிய ஓளி பட்டு வைர மோதிரம் மின்னியது.

உடனே அரசனுக்கு அந்த வாக்கியம் நினைவுக்கு வந்தது.

இதும் கடந்து போகும்.

ஆம். இந்த வெற்றி, இந்த அரசாங்கம், இதும் கடந்து போகும். நான் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.

அவன் கர்வம் அழிந்தது. அமைதி அடைந்தான்.

முற்றிலும் புதிய மனிதனாக அவன் மாறி விட்டான்.

மனித வாழ்க்கை என்பது ஊஞ்சல் பலகை போன்றது.

ஊஞ்சல் ஆடும் போது பலகை ஒரு புறம் மேலே செல்லும். அங்கேயே அது நின்று விடுவதில்லை. மறுபடி இறங்கி மறுபக்கம் மேலே செல்லும். அங்கேயும் நிற்காது. எதிர்புறம் செல்லும்.

மனித வாழ்க்கையும் இப்படித்தான். இன்ப துன்பங்ளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

துன்பம் வரும் போது மனிதன் துவண்டு போகிறான். உலகமே அஸ்தமனமானது போல ஒப்பாரி வைக்கிறான்.

எப்படி வாழ்க்கை என்ற ஊஞ்ச்சல் பலகை இன்பத்தில் இருந்து துன்பத்துக்கு வந்ததோ அதை போலவே துன்பத்தில் இருந்து இன்பத்துக்கு போய்விடும். ஆம் துன்பம் நிலைக்காது. இதும் போய் விடும்.

இதை மனிதன் மறந்து விடுகிறான்.

பகைவனால் விரட்டப்பட்ட அரசன், அதனாலேயே ஓர் அழகான இடத்தை அடைந்து அதன் சுகத்தை அனுபவித்தான் அல்லவா?

அதைப் போலவே துன்பமும் ஏதேனும் ஓர் இன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தி தரலாம்.

அழுது புலம்பிக் கொண்டிருப்பவன் அந்த வாய்ப்பை இழந்து விடுகிறான்.

கண்ணீர் துன்பத்தை தீர்க்காது. வியர்வை தான் தீர்க்கும்.

துன்பம் வந்தால் அதிலிருந்து விடுதலை அடையும் வழியை சிந்தித்து அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

இதைப் போலவே உயர்ந்த பதவியில் இருக்கும் போது இதும் கடந்து போய்விடும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

கோபுரத்தின் இருந்த போது ஆடாத ஆட்டம் ஆடியவர்களை காலம் குப்பைத்தொட்டிக்குள் வீசி எறிந்த்திருக்கிறது.

எனவே மனிதனுக்கு தாழ்வு வரும் போது துணிவும், உயர்வு வரும் போது பணிவும் நிச்சயம் வேண்டும்.
« Last Edit: September 20, 2014, 06:04:31 PM by thamilan »