Author Topic: ~ சென்னை வெள்ளை ரிப்பன் மாளிகை பற்றிய வரலாற்று தகவல் !!!! ~  (Read 3097 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218397
  • Total likes: 23071
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சென்னை வெள்ளை ரிப்பன் மாளிகை பற்றிய வரலாற்று தகவல் !!!!


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகைக் கட்டிடம். ஆங்கிலேயர் காலத்தைச் சார்ந்த பல கட்டிடங்களும் செக்கச் சேவல் என்று நின்று கொண்டிருக்க இது மட்டும் பவுடர் போட்ட பெரிய பாப்பா மாதிரி வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் இப்போது சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக பரமர்த்து வேலை நடைபெற்று வருகிறது

சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையைத் தேடிப் போனால் அது 1688இல் போய் நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர் ஜோசய்யா சைல்ட் என்பவரின் மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு தேவை என்று அவர் கருதினார். இது குறித்து அப்போது இங்கிலந்தை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார். இதனையடுத்து 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி தொடங்கப்பட்டது.

நதானியேல் ஹிக்கின்சன் (Nathaniel Higginson) என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ஆம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டார். இப்படித் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது. அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் தான் முதல் மாநகராட்சி செயல்பட்டது.

உற்சாகமாகத் தொடங்கப்பட்டதே தவிர அதன் செயல்பாடுகள் அத்தனை உற்சாகமாக இல்லை. ஆறே மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக லிட்டில்டன் என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் எலிஹூ யேலுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் வெடித்தன. அப்படியே சண்டை சச்சரவுகளுடன் போய்க் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727இல் மறுசீரமைக்கப்பட்டது. நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக் கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென புதிய கட்டிடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்தக் காலத்திலேயே ரூ. 7.5 லட்சம் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ - சாரசனிக் பாணியில் பிரம்மாண்டமாக கட்டித்தந்த லோகநாத முதலியார் கூலியாக வாங்கிய தொகை ரூ. 5.5 லட்சம்.

1913இல் இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டிடம் என்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும் வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.

252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தின் முக்கியமான அம்சம், அதன் நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் கீ கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் மெட்ராசிற்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த மெகா சைஸ் கடிகாரத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு முதல் தலைவராக இருந்தவர் (அப்போது மேயர் பதவியை தூக்கிவிட்டார்கள்) பி.எல். மூர். பின்னர் 1919இல் தான் மெட்ராஸ் மாநகராட்சிக்கு முதல் இந்தியத் தலைவர் கிடைத்தார். அவர்தான் சர் பி. தியாகராய செட்டி. மீண்டும் 1933ஆம் ஆண்டு மேயர் பதவி உயிர் பெற்று எழுந்தது. அப்போது முதல் மேயரானவர் குமார ராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார். அதன் பிறகு இதுவரை மேயர் என்ற பதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது ரிப்பன் அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்துவிட்டால், இதுவரை அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ரிப்பன் மாளிகை, தனது வளாகத்திற்குள்ளேயே ரயில் வந்துசெல்லும் காட்சியையும் காணலாம். ரிப்பன் மாளிகை விரைவில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, நாமும் அதற்கு மெட்ரோ ரயிலில் சென்று பூங்கொத்து கொடுக்கலாம்.

* இந்தியாவின் முதல் பெண் மேயரைத் தந்ததும் சென்னை மாநகராட்சிதான். அவர்தான் தாரா செரியன்.

* கிழக்கிந்திய டச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பார்த்துதான் சர் ஜோசய்யா சைல்ட்டுக்கு மாநகராட்சி ஏற்படுத்தும் யோசனை பிறந்ததாக கூறப்படுகிறது.