தமிழ்ப் பூங்கா > வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )

இனியவை நாற்பது

(1/9) > >>

Global Angel:
                               பதினெண் கீழ்க்கணக்கு


                                   பூதஞ் சேந்தனார் இயற்றிய

                                        இனியவை நாற்பது


முகவுரை
 
இனியவை நாற்பது இன்னா நாற்பதோடு பெயர் ஒற்றுமை உடையது. இந் நூலாசிரியரும் கடவுள் வாழ்த்தில் கபில தேவரைப் போன்றே சிவபெருமானை முற்படக் குறிக்கின்றார். கபில தேவர் இன்னா என்று சுட்டியதை ஒப்ப, இவரும் தாம்கூறும் அறங்களை இனிது என்னும் சொல்லால் குறிக்கின்றார். இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் இவர் தொகுத்துக் கூறியுள்ளமையால் இவரது நூல் 'இனியவை நாற்பது' எனவழங்கப் பெறுவதாயிற்று.

எனினும், இன்னா நாற்பது போன்ற கட்டுக்கோப்பு இந் நூலகத்து இல்லை. இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. இந் நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்குதான் உள்ளன(1,3,4,5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன ; இவற்றில்
எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின்இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனத்திற்கு உரியது.

மூன்று இனிய பொருள்களை மிகுதியும் எடுத்துக்கூறும் இந் நூல் திரிகடுகத்தோடு ஒத்த பண்புஉடையது என்று கொள்ளலாம். அன்றியும் திரிகடுகத்தில் எடுத்தாளப் பெறும் சொற்பொருளமைதிகளை இனியவை நாற்பதுபெரிதும் அடியொற்றிச் செல்லுகிறது. இவற்றை நோக்கினால், பொருளமைப்பில் திரிகடுகத்தையும், நூல் அமைப்பில் இன்னா நாற்பதையும் இந்த ஆசிரியர் மேற்கொண்டனராதல் வேண்டும். திரிகடுகத்தை இளம்பூரணர் முதலிய பழைய உரைகாரர்கள் எடுத்தாளுதலினாலும், இந் நூலை எவரும் எடுத்தாளாமையினாலும், இந்நூல் திரிகடுகத்திற்குப் பிற்பட்டது என்று கருத இடமுண்டு.

இந் நூலின் பெயரை 'இனியது நாற்பது'என்றும், 'இனியவை நாற்பது' என்றும், 'இனிது நாற்பது'என்றும், 'இனிய நாற்பது' என்றும், பதிப்பாரிசியர்கள் முதலியோர் குறித்துள்ளனர். 'இன்னா நாற்பது' என்பதைப் போல 'இனியவை நாற்பது' எனஇந் நூற் பெயரைக் கொள்ளுதல் நலம்.

இந் நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார். இப் பெயரில் சேந்தனார் என்பது இயற் பெயர். பூதன் என்பது இவர் தந்தையார்பெயர். இவர் தந்தையார் மதுரையில் தமிழாசிரியராய்ச் சிறந்து விளங்கியமை குறித்து, மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப்பெற்றார். சேந்தன் என்பது முருகனுக்கு உரிய பெயர்களில் ஒன்று ஆகும். பதினோராந் திருமுறையில் திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் என்பதும், திவாகரம் செய்வித்தவன் சேந்தன் என்னும் பெயர்பெற்றிருத்தலும் ஈண்டுச் சிந்தித்தற்குரியன.

பூதஞ் சேந்தனார் சிவனை முதலிலும், அடுத்துத் திருமாலையும், பின்னர்ப் பிரமதேவனையும் தமது கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகின்றார்.

பிரமதேவன் வணக்கம் பின் சளுக்கியர் காலத்திலேதான் பிரபலமாகக் காணப்படுகிறது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இவ் வணக்கம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். 'பொலிசை' என இவர் ஆளும் சொல் (39) இலக்கிய வழக்கிலோ சாசன வழக்கிலோ, இக் காலத்திற்கு முன்னர்க் காணப்பெறவில்லை. சீவக சிந்தாமணியிலேதான் (2546) இச் சொல் வழக்கு உள்ளது. எனவே, சீவக சிந்தாமணி தோன்றிய காலப் பகுதியில் இனியவைநாற்பதும் தோன்றியிருக்கலாம்.

கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்றுமே (8 ) பஃறொடை வெண்பா. ஏனைய எல்லாம் நாலடி கொண்ட அளவியல் வெண்பாக்கள். இந் நூல் முழுமைக்கும் செம்மையாய் அமைந்த பழைய உரை உள்ளது.
 

Global Angel:
1

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.


(ப-ரை)பிச்சை புக்கு ஆயினும் - பிச்சை யெடுத்துண்டாயினும் ; கற்றல் - (கற்பனவற்றைக் கசடறக்) கற்றல் ; மிக இனிது ; நல் சவையில் - (அங்ஙனங் கற்ற கல்விகள்) நல்ல சபையின் கண் கைக்கொடுத்தல் - (தமக்கு) வந்துதவுதல், சாலவும் - மிகவும், முன் இனிது - முற்பட வினிது ; முத்து ஏர் முறுவலார் - முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது, சொல் - வாய்ச்சொல், இனிது -; ஆங்கு - அது போல, மேலாயார்ச் சேர்வு - பெரியாரைத் துணைக் கொள்ளுதல், தெற்றவும் இனிது - தெளியவுமினிது.‘ஆயினும் என்புழி உம்மை இழிவு சிறப்பு.

" கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே "

என்றார் பின்னோரும். சவை - ‘சபா' என்னும் வடசொல் ‘ஆ' ஈறு ‘ஐ' ஆதல் முறைபற்றிச் ‘சபை' என்றாகி, சகர வகர வொற்றுமை பற்றிச் ‘சவை' என்றாயது.

நற்சவை - சபைக்கு நன்மையாவது நல்லோர் கூடியிருத்தல். அதனை,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

(புறம்: 177)

என்பதனா னறிக. கைக்கொடுத்தலாவது கற்றன வெல்லாம் வேண்டுமுன் நினைவிற்கு வந்து நிற்றல்.

"நெடும்பகற் கற்ற அவையத் துதவாது
உடைந்துளார் உட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால்"

என்னும் நீதிநெறிவிளக்கச் செய்யுள் ஈண்டறியத்தக்கது. ஏர் : உவமவுருபு ; ‘தணிகை வெற்பேரும்' என்றார் பெரியாரும். ‘ஏர்' என்பதற்கு ‘அழகு' எனப்பொருள் கோடலுமொன்று. மகளிர் சொல் இனிதாதலைத் ‘தேன் மொழியார்' என்னும் பெயரானு மறிக. சிலப்பதிகார முடையார்,

"பாகுபொதி பவளந் திறந்து நிலா உதவிய
நாகிள முத்தி னகைநலங் காட்டி"

என்றமையும் அப் பொருளை வற்புறுத்து மென்க. தெற்ற இனிதாதலாவது, மிக வினிதாதல்
 
 

Global Angel:
2

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நான்கு.

(ப-ரை.) உடையான் - பொருளுடையானது, வழக்கு - ஈகை, இனிது -; ஒப்ப முடிந்தால் - மனைவி யுள்ளமுங் கணவனுள்ளமும் (மாறுபாடின்றி) ஒன்றுபடக் கூடுமாயின். மனை வாழ்க்கை - இல்வாழ்க்கையானது, முன் இனிது - முற்பட வினிது ; மாணாதாம் ஆயின் - (அங்ஙனம்) மாட்சிமைப்படா தெனின், நிலையாமை நோக்கி - (யாக்கை முதலியன) நில்லாமையை ஆராய்ந்து, நெடியார் - தாமதியாதவராய், துறத்தல் - (அகம் புறமாகிய இருவகைப் பற்றுகளையும்) விடுதல், தலையாக நன்கு இனிது - தலைப்பட மிக வினிது.

ஒப்பமுடிதலின அருமை தோன்ற ‘ஒப்ப முடிந்தால்' என்றார்.

"காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்"

என நன்னெறியும்,

"மருவிய காதல் மனையாளுந் தானும்
இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ்
செல்லாது தெற்றிற்று நின்று "

என அறநெறிச்சாரமும் கூறுதல் காண்க.

மனைவாழ்க்கை ஏனைய துறவற வாழ்க்கையைக் காட்டிலும் இனிதாதலை,

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"

(குறள்- 46)

எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் கூறினார். துறத்தல் (புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய உடம்பின்கண்ணும் உளதாய பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி) விடுதல் நெடியார் - (செல்லற்குக் காலம்) நீட்டியாதவராய் ; இது முற்றெச்சம் இஃது இப்பொருட்டாதலை,

"இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றஞ்
செல்வம் வலியென்று இவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாமுய்யக் கொண்டு "

என்னும் நாலடிச் செய்யுள் வலியுறுத்தும்.

‘தலையாகத் துறத்தல் ' என முடித்து, ‘தலைப்பட்டார் தீரத்துறந்தார் என்பதற் கொப்பத் ‘(தாம்) தலைப்படுமாறு துறத்தல் ' எனப் பொருளுரைப்பாரு முளர்.
 

Global Angel:
3

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.


(ப-ரை.) ஏவது மாறா - ஏவலை மறாது செய்யும், இளங்கிளைமை - மக்களுடைமை, முன்இனிது - முற்பட வினிது ; நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய், நாளும் கற்றல் - நாடோறுங் கற்றல், மிக இனிது -; ஏர் உடையான் - (தனதென) உழுமாடுகளையுடையானது, வேளாண்மை - பயிர்த்தொழில், இனிது -; ஆங்கு - அதுபோல , தேரின் - ஆராயின், திசைக்கு - (தான் செல்லுந் திசையில், கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல், இனிது -;

ஏவது ‘ஏவு' முதனிலைத் தொழிற்பெயரும், ‘உணர்வதுடையார் ' (நாலடி) என்புழிப்போல ‘அது' பகுதிப் பொருள் விகுதியுமாம். அன்றி, ‘மேவா ரிலாஅக் கடை' (திருக்குறள்) என்புழிப்போல, ‘ஏவுவது' என்பது விகாரமாயிற் றென்பது மொன்று. இனி ‘ஏவியது' என்னும் வினையாலணைந்த பெயர் ‘ஏவது எனக் குறைந்த தென்பாருமுளர். இளங்கிளையாவார் மிக்க ளென்க ; ‘ கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி ' என்னும் நாலடிச் செய்யுள் காண்க. ஏர் - எருது ; ‘ஏரழ குழுபெற்றப்பேர் ' என்னும் 11 ஆவது நிகண்டு. நாளுங்கற்றல் - நாண்முழுதுங் கற்றலுமாம். வேற்றூராகலின் நட்புக் கோடல் நன்றென்பார், ‘கோணட்புத் திசைக்கு ' என்றார். திசைக்கு : வேற்றுமை மயக்கம் . ‘ தான் செல்லுந், திசைக்குப் பாழ் நட்டாரையின்மை என்னும் நான்மணிக்கடிகையும் ஈண்டுக் கருதத்தக்கது.

 

Global Angel:
4

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே1
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு.


(ப-ரை.) யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை, காண்டல் - (அரசன்) செய்து கொள்ளுதல் முன் இனிது - முற்பட வினிது ஊனை தின்று - (பிறிதோ ருயிரின்) தசையைத் தின்று ; ஊனைப்பெருக்காமை - (தன்) உடம்பை வளர்க்காமை, முன் இனிது -; கான்யாற்று அடை கரை ஊர்-முல்லை நிலத்து யாற்றினது நீரடை கரைக்கண் உள்ள ஊர், இனிது - வாழ்தற் கினிது ; ஆங்கு - அவைபோல, மானம் உடையார் - மானமுடையவரது, மதிப்பு கொள்கை , இனிது -;


"கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென
வுடல்சின வுருமென"

(குணமாலையார் - 123)

எனவும்,

"காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக்
கூற்றென "

(கனக மாலையார் - 281)

எனவும் சிந்தாமணி யுடையார் கூறியபடி, விசையாற் காற்றும், ஒலியாற் கடலும், வடிவால் வரையும், அச்சத்தா லுருமும், கொலையாற் கூற்று மெனத்தக்க யானைகளைப் பெறுதலின் அருமையும், பெற்ற வழி யுளதாம் பயனுந் தோன்ற ‘யானையுடைய படைகாண்டன் முன்னினிதே ' எனவும்.

"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙன மாளு மருள் "

(குறள் - 251)

என்றபடி, தன்னூன் வளர்த்தல் கருதிப் பிறிதோருயிரின் தசையைத் தின்பவன் அருளிலனாய் அவ்வுலகத்தை இழத்தலின், ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே' எனவும்,

"மானயா நோக்கியர் மருங்கல் போல்வதோர்
கானயாற் றடைகரைத் கதிர்கண் போழ்கலாத்
தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணல் "

(கனகமாலையார் - 266)

எனச் சிந்தாமணியுடையார் உரைத்தவாறு, நுடக்கமும் அழகுமுடைய கான்யாற்று நீரடைகரை பொழில் செறிந்து வெண்மணல் பரந்திருத்தலின் வாழ்தற்கு வசதியுண்மை தோன்றக் ‘கான்யாற்றடை கரை யூரினிது' எனவும், தம் நிலையிற் றாழாமையுந் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாகிய மானமுடையார் கொள்கை,

"இம்மையு நன்றா மியனெறியுங் கைவிடா
தும்மையு நல்ல பயத்தலாற் - செம்மையி
னானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண்
மான முடையார் மதிப்பு "

என்று நாலடியாரிற் கூறிவண்ணம் இருமையும் பயத்தலின் ‘ மானமுடையார் மதிப்பு இனிதே' எனவுங் கூறினா ரென்க.

காண்டல் - செய்தல் ; ‘நகரங் கண்டான் ' என்னும் வழக்குண்மை தெரிக. இனி , ‘காண்டல்'‘பார்த்தல் ' என்பாருமுளர்.

பின்னர் நிற்கும் ‘ஊன்' கருவியாகுபெய ரென்க.
 

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version