தமிழ்ப் பூங்கா > வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )

~ புறநானூறு ~

(1/64) > >>

MysteRy:


புறநானூறு, 1. (இறைவனின் திருவுள்ளம்)
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.
பாடப்பட்டோன் : சிவபெருமான். (சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது).
=====================================

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

அருஞ்சொற் பொருள்:-

கண்ணி = தலையில் சூடப்படும் மாலை
கார் = கார் காலம்
நறுமை = மணம்
கொன்றை = கொன்றை மலர்
காமர் = அழகு
தார் = மாலை
ஊர்தி = வாகனம்
வால் = தூய
ஏறு = எருது
சீர் = அழகு
கெழு = பொருந்து
மிடறு = கழுத்து
நவிலுதல் = கற்றல்
நுவலுதல் = போற்றுதல்
திறன் = கூறுபாடு
கரக்கல் = மறைத்தல்
வண்ணம் = அழகு
ஏத்துதல் = புகழ்தல்
ஏமம் = காவல்
அறவு = அழிதல், குறைதல்
கரகம் = கமண்டலம்
பொலிந்த = சிறந்த
அருந்தவத்தோன் = அரிய தவம் செய்பவன் (இறைவன்).

இதன் பொருள்:-

கண்ணி=====> அணிந்தன்று

தலையில் அணிந்திருக்கும் மாலை கார்காலத்து மலரும் மணமுள்ள கொன்றை மலர்களால் புனையப்பட்டது. அவன் தன்னுடைய அழகிய நிறமுள்ள மார்பில் அணிந்திருப்பதும் கொன்றை மலர் மாலையே. அவன் ஏறிச் செல்லும் வாகனம் தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான். நஞ்சினது கருமை நிறம் சிவனது கழுத்தில் கறையாக இருந்து அழகு செய்கிறது.

அக்கறை=====> ஆகின்று

அந்தக் கறை, வேதம் ஓதும் அந்தணர்களால் போற்றப் படுகிறது. சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமான் நெற்றியில் அணிந்துள்ள பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு செய்கிறது

அப்பிறை=====> அருந்தவத் தோற்கே

அப்பிறை பதினெட்டுக் கணங்களாலும் புகழவும் படும். எல்லா உயிகளுக்கும் பாதுகாப்பான நீர் வற்றாத கமண்டலத்தையும் தாழ்ந்த சடையையும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுமுடைய சிவபெருமானே!

MysteRy:



புறநானூறு, 2. (போரும் சோறும்)
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.

செவியறிவுறூஉ = அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல் = தலைவனை வாழ்த்துதல்
======================================

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.

அருஞ்சொற் பொருள்:-

திணிந்த = செறிந்த
விசும்பு = வானம்
தைவரல் = தடவுதல்
வளி = காற்று
முரணிய = மாறுபட்ட
போற்றார் = பகைவர
தெறல் = அழித்தல்
அளி = அருள்
புணரி = பொருந்தி
குட = மேற்கிலுள்ள
யாணர் = புது வருவாய்
வைப்பு = ஊர் நிலப் பகுதி
பொருநன் = அரசன்
பெருமன் = தலைவன்
அலங்கல் = அசைதல்
உளை = பிடரி மயிர்
தலைக்கொள்ளுதல் = கொடுத்தல்
பொலம் = பொன்
பொருதல் = போர் செய்தல்
பதம் = உணவு
வரையாது = குறையாது
சேண் = நெடுங்காலம்
நடுக்கு = சோர்வு
நிலியர் = நிற்பாயாக
அடுக்கம் = மலைச்சரிவு
நவ்வி = மான் கன்று
மா = மான்
பிணை = பெண்மான்
கோடு = மலை, மலைச்சிகரம்.

இதன் பொருள்:-

மண் திணிந்த=====> பெயர்த்தும் நின்

மண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர். மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் நிலத்தைப் போன்ற பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே!

வெண்தலை=====> விளங்கி

உன்னுடைய கிழக்குக் கடலில் எழுந்த கதிரவன் வெண்ணிற நுரையையுடைய உன்னுடைய மேற்குக் கடலில் மூழ்கும் புதுவருவாயோடு கூடிய நிலப்பகுதிகளுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! அரசே! நீ வானத்தை எல்லையாகக் கொண்டவன். அசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய். பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும் மாறாத சுற்றத்தாரோடு

நடுக்கின்றி=====> பொதியமும் போன்றே

மலைச்சரிவில் சிறிய தலையையுடைய மான் குட்டிகளோடு கூடிய பெரிய கண்களையுடைய பெண்மான்கள் மாலைநேரத்தில் அந்தணர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செய்யும் அரிய வேள்விக்காக மூட்டிய முத்தீயில் உறங்கும் பொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் நீண்ட நாள் புகழோடு விளங்கிச் சோர்வின்றி நிலைத்து வாழ்வாயாக

MysteRy:



புறநானூறு, 3 (வன்மையும் வண்மையும்).
பாடியவர் : இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
=========================================

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக், கவுரியர் மருக!

செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்

பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற் புலர்சாந்தின்

விலங்ககன்ற வியன்மார்ப!
ஊர்இல்ல, உயவுஅரிய,
நீர்இல்ல, நீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்

அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

அருஞ்சொற்பொருள்:-
(எண்கள் வரிகளின் கணக்கை குறிக்கும்)

1. உவவு = முழு நிலா; ஓங்கல் = உயர்ந்த.
2. நிலவுதல் = நிலைத்திருத்தல்; வரைப்பு = எல்லை; நிழற்றுதல் = கருணை காட்டுதல்.
3. ஏமம் = காவல்; இழும் = ஓசை.
4. நேமி = ஆட்சிச் சக்கரம்; உய்த்தல் = செலுத்தல்; நேஎ நெஞ்சு = கருணையுள்ள மனம்.
5. கவுரியர் = பாண்டியன்; மருகன் = வழித்தோன்றல்.
6. செயிர் = குற்றம்; சேயிழை = சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்.
7. ஓடை = நெற்றிப் பட்டம்; புகர் = புள்ளி; நுதல் = நெற்றி.
8. துன் = நெருங்கு; திறல் = வலிமை; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம்; கடாஅத்த = மதத்தையுடைய.
9. எயிறு = தந்தம்; எயில் = மதில்; இடுதல் = குத்துதல்.
10. மருங்கு = பக்கம்.
11. இரு = பெரிய; பிடர் = கழுத்தின் பின்புறம்.
12. மருந்து இல் = பரிகாரமில்லாத; சாயா = சளைக்காத.
13. கருங்கை = வலிய கை; வழுதி = பாண்டியன்.
15. பொலம் = பொன்; புலர்தல் = உலர்தல்.
16. விலங்குதல் = விலகல்; வியல் = பரந்த.
17. உயவு = வருத்தம்.
18. இடை = வழி.
19. பார்வல் = பகைவர் வரவைப் பார்த்திருக்கும் அரணுச்சி; கவிதல் = வளைதல்.
20. செம்மை = நன்மை, பெருமை, வளைவின்மை; தொடை = அம்பெய்தல்; வன்கண் = கொடுமை.
21. வம்பு = புதுமை; பதுக்கை = கற்குவியல்.
22. திருந்துதல் = அழகு படுதல் (அழகிய); சிறை = சிறகு; உயவும் = வருத்தும்.
23. உன்ன மரம் = இலவ மரம்; கவலை = பல தெருக்கள் கூடுமிடம், இரண்டாகப் பிரியும் பாதை.
24. நசை = ஆசை; வேட்கை = விருப்பம், அன்பு.
26. வன்மை = வல்ல தன்மை

இதன் பொருள்:-

உவவுமதி=====> மருக!

நிலைத்து நிற்கும் கடலை எல்லையாகக் கொண்ட நிலத்திற்கு நிழல் தரும் முழு மதி வடிவில் உள்ள உயர்ந்த வெண்கொற்றக் குடையோடும், பாதுகாப்பான முரசின் முழக்கத்தோடும் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திய, கருணையுள்ள மனமும் நீங்காத கொடையும் கொண்ட பாண்டியரின் வழித்தோன்றலே!


செயிர்தீர்=====> புலர்சாந்தின்

குற்றமற்ற கற்பும் சிறந்த அணிகலன்களும் உடையவளின் கணவனே! பொன்னாலாகிய பட்டத்தை அணிந்த புள்ளிகளுடைய நெற்றியும் எவரும் அணுகுதற்கரிய வலிமையும் மணம் கமழும் மதநீரும் கொண்டது உன் யானை. அந்த யானை தன் கொம்புகளைப் படைகருவிகளாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தி வீழ்த்தும். கயிற்றால் கட்டப்பட்ட கவிழ்ந்த மணிகள் உள்ள பக்கங்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய அந்த யானையின் பெரிய கழுத்தின் மேலிருந்து, தனக்கு மாற்றில்லாத கூற்றுவனைப் போல் பொறுத்தற்கரிய கொலைத் தொழிலில் சளைக்காத, உன் வலிய கையில் ஒளி பொருந்திய வாளையுடைய பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனே! கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!

விலங்ககன்ற=====> வன்மை யானே.

உன்னைக் காண்பதற்கு வரும் வழியில் ஊர்கள் இல்லை; அது பொறுத்தற்கரிய வருத்ததைத் தரும் நீரில்லாத நீண்ட வழி; அவ்வழியே வருவோரை அரண்களின் உச்சியிலிருந்து கையை நெற்றியில் வளைத்து வைத்துக் கண்களால் பார்த்துக் குறி தவறாது அம்பு எய்யும் கள்வரின் அம்புகளால் அடிபட்டு இறந்தோரின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள் உள்ளன. அழகிய சிறகுகளும் வளைந்த வாயும் உடைய பருந்துகள் இறந்தோர் உடலைத் தின்ன முடியாமல் இலவ மரத்தில் இருந்து வருந்துகின்றன. இலவ மரங்கள் நிறைந்த கடத்தற்கரிய பல பிரிவுகளுடைய பாதைகள் வழியாக உன்னைக் காண்பதற்கு இரவலர் வருகின்றனர். இரவலர்களின் உள்ளக் குறிப்பை அவர்கள் முகத்தால் உணர்ந்து அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உனக்கு இருப்பதால்தான் அவர்கள் பல இன்னல்களையும் கடந்து உன்னைக் காண வருகிறார்கள். ஆகவே, நிலம் பெயர்ந்தாலும், நீ உன் சொல்லிலிருந்து மாறாமல் இருப்பாயாக.

MysteRy:



புறநானூறு, 4 (தாயற்ற குழந்தை).
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
=========================================

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;

தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;

களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி

மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:-

1. வலம் = வெற்றி; மறு = கரை.
2. வனப்பு = நிறம் அழகு.
3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன.
4. மருப்பு = கொம்பு.
5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல்.
6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி.
7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது.
9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல்.
10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல்.
11. நுதி = நுனி; கோடு = கொம்பு.
13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை.
14. பொலம் = பொன்; பொலிவு = அழகு.
15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல்.
16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல்.
17. ஆகன் மாறு = ஆகையால்.
18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை.
19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

இதன் பொருள்:-

வாள்வலந்தர=====> மருப்புப் போன்றன

போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன

தோல் துவைத்து=====> புலி போன்றன

கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன. குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

களிறே கதவு=====> பொலிவு தோன்றி

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன. நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது,

மாக் கடல்=====> உடற்றியோர் நாடே

பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.

MysteRy:



புறநானூறு, 5. (அருளும் அருமையும்)
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆகும்.
====================================

எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.

அருஞ்சொற் பொருள்:-

இடை = இடம்
பரத்தல் = பரவுதல்
ஓர் = ஒப்பற்ற
நிரயம் = நரகம்
ஓம்பு = காப்பாற்றுவாயாக
மதி - அசைச் சொல்
அளிது = செய்யத் தக்கது

இதன் பொருள்:-

எருமை=====> மொழிவல்

எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீயோ பெருமகன், நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன்.

அருளும்=====> அருங் குரைத்தே

அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல், தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version