FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 05, 2012, 01:08:36 PM

Title: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்
Post by: ஆதி on September 05, 2012, 01:08:36 PM
மாங்கனி கண்ணதாசனின் க(ன்)னி காவியம், சில சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட இந்த காவியம் பெரும்பேர் பெற்றது..

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைச்சென்ற பொழுதில் சிறையில் அவரால் படைக்கப்பட்ட காவியமே இது, இதன் இன்னொரு சுவாரஸ்யம் இந்தக் காவியத்தை எழுத கண்ணதாசன் எடுத்துக்கொண்டது வெறும் ஆறு நாட்கள், அதுவும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமே அவர் எழுத அமருவாராம்..

இந்த காவியம் நாற்பது பாடல் கொண்டது, நாற்பது பாட்டிலும் நாற்பது சம்பவங்கள் நிறைந்திருக்கும்.. எழுதி இரண்டு வருடம் கழித்தே இந்தக் காவியம் புத்தகமானது..

மாங்கனியை நான் என் நடையில் என் வார்த்தைகளில் எழுத வெகு நாளாய் ஆசையுற்றிருந்தேன்.. கண்ணதாசனே இதைக் காவியமாக தான் எழுதி இருக்கிறார், மீண்டும் இதை தொடர்கவிதையாக எழுத என்னக் காரணம் ?

காரணம் இதுதான், நான் தமிழ் படிக்க ஆரம்பித்த காலம் முதல் காவியங்களில் கதைகளில் வெகு சில பாத்திரப் படைப்புகளை ரசித்திருக்கிறேன் கண்ணகி மாதவி மணிமேகலை பதுமை தமயந்தி என்பன சில அதில்..

கண்ணகி - மாதவி என்று வரும் போது எனக்கு இருவரையும் சமமாய் பிடிக்கும்..

அன்னைக் கண்ணகி எந்த அளவுக்கு கற்பில் சிறந்தவளோ அந்த அளவுக்கு மாதவியும் கற்புடையவளே..

அன்னைக் கண்ணகி பிறப்பால் நற்குலத்தாள், கன்னியியம் கற்பியம் என்று கட்டுப்பாடுகள் பல்துக்குள் வளர்ந்தவள்.. அதனால் அவள் வாழ்வின் நன்நெறிப்படி கணவன் இல்லாத தருணத்திலும் வாழ்ந்தாள்..

மாதவி அப்படி இல்லை கணிகையர் குலத்தில் பிறந்தவள், அவள் வாழ்வுக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை, யாருடனும் எப்போதும் அவள் வாழ அவள் சமுதாயத்தில் இடமுண்டு வசதி உண்டு, இப்படி கட்டுப்பாடு இன்றி வாழ்கிறாள் என்று அவளை உலகம் இடித்தோ இழித்தோ பேசப்போவதில்லை இருந்தும் அவள் கற்புடையவளாய், கொண்ட கோவலனுக்கு மட்டும் மனைவியாய் வாழ்ந்தாளே அந்த கற்பு எனக்கு அவள்மீது அதிகமாய் மரியாதையைக் கூட்டியது..

இதைப் போல சில பாத்திரப் படைப்புகளை காதலித்திருக்கிறேன், அப்படி நான் காதலித்த முதல் பெண் மாங்கனி, இந்த பாத்திரப் படைப்பு கண்ணதாசனின் கற்பனைப் படைப்புதான் சரித்திரத்தில் இந்த பெயரோ ஆளோக் கிடையாது.. மாங்கனியின் காதல் தோற்ற போது அவளைவிட நான் அதிகமாய் அழுதேன்.. அதற்கு பிறகு நான் காதலித்த மற்றொரு பெண் கல்கி அருளிய சிவகாமி சபதத்தின் சிவமாகி.. என்னை அழவைத்த அடுத்த ஒரு நாயகி சிவகாமி இவளையும் நான் அதிகமாய் காதலித்தேன் இந்த கதையைப் படிக்கிறப் போது நரசிம்ம பல்லவனாய் நடமாடியவன் நாந்தான்..

மாங்கனிப் பற்றி சொல்லும் போது கண்ணதாசன் ஒரு இடத்தில் சொல்லியது இதுதான், இந்த காவியத்தைப் படைக்கும் போது என் உணர்ச்சி ஓட்டத்தை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை.. அதனால் வார்த்தைகள் இலக்கணத்தின் வரையரைக்குள் வந்தமரவில்லை.. செந்நாப்புலவர்களே மன்னித்துவிடுங்கள் என்றுச் சொன்னார்..

காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்

என்று பாடிய என் காதல் கவிஞனாலேயே உணர்ச்சி ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நானோ சிறுவன் உணர்ச்சிகள் கட்டவிழ்ந்து மாங்கனியைக் காதலித்ததில் தவறென்ன வியப்பென்ன இருக்கிறது..

அதனாலேயே இந்த காவியத்தை என் மொழிகளில் எழுத ஆசைப்பட்டேன், கண்ணதாசன் அளவுக்கு சுவையாய் தரமுடியாது என்றாலும் என் முழு திறனையும் முயற்சியையும் கொட்டி எழுத முயற்சிப்பேன்..

வழக்கம் போல் அன்பு உறவுகளின் ஊக்கமும் உற்சாக பின்னூட்டமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்..
Title: Re: மாங்கனி - காவியம் - தமிழ் வணக்கம்
Post by: ஆதி on September 05, 2012, 03:06:18 PM
வள்ளுவனோ கம்பனோ இளங்கோவோ சங்க இலக்கியமோ
வாழ்த்தி இறைவனைப் பாடாமல் வளரவில்லை
தெள்ளு தமிழ்தேவி அவளை வாழ்த்தி
சின்னவனென் படைப்பை துவங்குகிறேன்..

தமிழ் வணக்கம்

பெற்றது தாயெனினும்
உற்றது நீயே தமிழே
கற்றதை அறிந்ததை
கையிருப்பில் உள்ளதை
வைத்தே அன்னை உன்னை
வாழ்த்த வடிக்கிறேன் கவி..
பிள்ளைத் தமிழ்
பெரியவர் தமிழாக ஆசிகொடு
செந்நாப் புலவர்
வாய் தவழ்ந்த செந்தமிழே!
எந்நாவிலும் வந்து நடமாடு..
Title: Re: மாங்கனி - காவியம் - பழையனின் அரசவை
Post by: ஆதி on September 05, 2012, 11:20:54 PM
பழையனின் அரசவை


"புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி"





என்றொலித்ததும்
எழுந்தனர் அவையோர் யாவரும்..

வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்
எழிலுடன் வந்தாள்
பூமீது நடந்து
பூலோக நிலவாய் ஒருத்தி..

வெளிச்ச மேகமாய்
வெண்ணிற உடை
முகத்தில் வசீகரம்
முல்லை மாலை
அகத்தின் தெய்வீகம்
அங்கமெலாம் விரிந்து
தகதகக்கும் தாரகையாய்
தரைமீது மிளிர்ந்தாள்..

மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்
அவ்வளவு தெய்வீகம்
அவளின் அழகில்..

ராணியாக வேண்டியவள்
ஞானியாக நோம்பு கொண்டாள்

நாணமும் முகம்வர
நாணும் வீரமகள்
தானமும் தவமும்
தரித்த ஈரமகள்..
போனது துறவானாலும்
போகவில்லை நாட்டைவிட்டு

வேலேந்திய விழியாள்
வேந்தன் மகள்தான்..
பெண்ணரசிப் பெயர் "பொன்னரசி"

அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..

நேரிழை துறந்து
மெய்தவம் பூண்ட
மெல்லியாள் இடை
ஒல்லியாள் அரசகட்டில்
அருகே வந்ததும்
அமைச்சன் "அறிவன்"
முன்னே வந்து
முகற்கண் வணங்கினான்..



தொடரும்...
Title: Re: மாங்கனி - காவியம் - பழையனின் அரசவை
Post by: Global Angel on September 05, 2012, 11:53:12 PM
ஒரு சிறு விளக்கம் வேண்டுகின்றேன் ... இந்த காவியத்தை கண்ணதாசன் எழுதியது கவிதை வடிவிலா இல்லை .. கட்டுரை கதை வடிவிலா... அதை நீங்கள் கவிதை வடிவில் கொடுக்கின்றீர்களா ....? இந்த கவிதை உங்களால் காவியத்தில் இருந்து எழுதபட்டதா ?
Title: Re: மாங்கனி - காவியம் - பழையனின் அரசவை
Post by: ஆதி on September 06, 2012, 12:01:52 AM
அவரும் கவிதை நடையில் தான் எழுதினார், அந்த கதையை உள்வாங்கி நான் என் நடையில் எழுதுகிறேன்

அதவாது கண்ணதாசன் முடித்த இடத்தில் இருந்து நான் துவங்கி இருக்கிறேன்

பொன்னரசி துறவு பூண்டதோடு காவியம் முடியும், அவள் அரச கட்டில் ஏறுவதாக நான் கதை அமைத்து எழுத முயல்கிறேன்

கண்ணதாசன் மரபு பாக்களில் எழுதினார் நான் புதுக்கவிதை, மரபு மற்றும் நவீன இலக்கியம் கொண்டு எழுத திட்டமிட்டு இருக்கிறேன்

கதை மட்டுமே கண்ணதாசனுடையது கவிதை என்னுடையதுங்க‌
Title: Re: மாங்கனி - காவியம் - பழையனின் அரசவை
Post by: Global Angel on September 06, 2012, 12:34:31 AM
நன்று நன்று ...


Quote
வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்

அருமையான உவமான உவமேயம் .... பெண்களை வர்ணிப்பதில்  ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபணபடுத்தி இருக்கீங்க ..

Quote
மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்
அவ்வளவு தெய்வீகம்
அவளின் அழகில்..

என்ன அருமையான ஒரு கரு வெளிப்பாடு ... நன்று  நன்று

Quote
அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..


மோப்பம் குலையும் அனிச்சம்  ... அதாவது சிறு தூண்டளுக்கே சிலிர்த்து ஒடுங்க கூடிய பெண்மை ... என்ன அருமையான கவி ஆளுகை ...

பனிக்க தலை சாய்த்தனர் ... கண்கள் பணிக்க ... இந்த அன்பும் அழகும் கொண்ட நன்  மகள் துறவறம் பூண்டதால் .. கண்கள் பனிக்க  தலை வணங்கினார் .. ஆஹா அருமை ...

Quote
நேரிழை துறந்து
மெய்தவம் பூண்ட
மெல்லியாள் இடை
ஒல்லியாள் அரசகட்டில்

அடுக்கு மொழியில் .. அழகாய் வர்ணனை ... மிகவும் அருமை ஆதி ...  தொடரட்டும் உங்கள் காவிய கவிப்பயணம் ...
Title: Re: மாங்கனி - காவியம் - பழையனின் அரசவை
Post by: ஆதி on September 06, 2012, 09:28:24 AM
நன்றிங்க, ஒட்டித்தந்தமைக்கு இன்னொரு நன்றி

இது போன்ற படைப்புகளில்  தீராமல் பெய்கிற சிறபுஞ்சி மழை மாதிரி அடுக்காடுக்காய் இரவு மேகங்கள் நகர்கிற பெங்களூர் வானம் மாதிரி வடியாமல் விரிகிற சென்னை வெயில் மாதிரி வர்ணனைகள் கொட்டிக்கிட்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் உவப்பாக இருக்காது

இன்னொரு விடையம் சரித்திர கதை என்பதால் காட்சிகளை கண்முன் நிறுத்த பல விவரணைகள் தேவைப்படும்

தொடர்ந்து வரும் தங்களின் ஊக்கங்களுக்கு மிக்க நன்றிங்க‌
Title: Re: மாங்கனி - காவியம் - அமர்க கட்டில்
Post by: ஆதி on September 06, 2012, 11:01:46 PM
அமர்க கட்டில்



புத்த மயிலைப்
புகழ்ந்து வரவேற்றான்

மோட்சம் குடிஇருக்கும்
மோகூரின் தேவியே
ஆட்சி ஏற்று
ஆளவந்த காவிநிலவே
வருக! வருக!

பழையன் பெற்ற
இளைய மகளே
விளையும் விடியலின்
விரியும் ஒளியே
வருக! வருக!~

கொற்றவன் பெற்றவன்
குலம் காக்க
உற்ற தவத்தோடு
வந்த உத்தமியே
வருக! வருக!

என்றே அண்ணவன்
பொன்னரசியை வணங்கி வாழ்த்தினான்..

பின்னே இவ்வாறு
பேசத் துவங்கினான்..

ஊழி செய்த
ஊறின் காரணத்தால்
வேலிப் போன்ற
வேந்தனை இழந்தோம்
ஆழிப் பெருங்கடலில்
அடையும் காவிரியில்
தாலிக் கட்டிய
தலைவனுடன் தென்னரசியை
இழந்தோம் நாங்கள்
அன்னை இல்லா பிள்ளையானோம்
அம்மா!

காரிட்ட நீரில் தழைத்த
காட்டுக் கொடியாய்
வேர்விட்டு வளர்ந்து
விருப்பிய வண்ணம் படர்ந்து
சீர்கெட்டு நம்குலம்
சிதைந்து போகக் கூடாது
என்றேப் பதைப்பதைத்து
எங்களை வழிநடத்த வந்த
மங்கள மணிநிலவே
சிங்க கட்டில் கொள்க என்றான்..
Title: Re: மாங்கனி - காவியம் - அமர்க கட்டில்
Post by: Global Angel on September 07, 2012, 12:22:03 AM


மிக எளிய நடையில் சிறப்பாக இருக்கிறது ... நன்று ... இன்னும் நிறைய எழுதுங்கள் இந்த காவியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்
Title: Re: மாங்கனி - காவியம் - அமர்க கட்டில்
Post by: Anu on September 07, 2012, 06:55:44 AM


மிக எளிய நடையில் சிறப்பாக இருக்கிறது ... நன்று ... இன்னும் நிறைய எழுதுங்கள் இந்த காவியத்தை அறிய ஆவலாய் உள்ளேன்
naanum idhai vazhi mozhigiren aathi..
Title: Re: மாங்கனி - காவியம் - அமர்க கட்டில்
Post by: ஆதி on September 07, 2012, 02:25:47 PM
வாசிப்பவர்களுக்கு புரிய வேண்டும் எனும் அதீத கவனத்தாலும் எளிமை தன்னால் சேர்ந்திருக்கலாம்

நன்றி குளோபல் ஏஞ்சல், நன்றி அனு
Title: Re: மாங்கனி - காவியம் - பொன்னரசி சிங்க கட்டில் கொளல்..
Post by: ஆதி on September 07, 2012, 02:28:17 PM
பொன்னரசி சிங்க கட்டில் கொளல்..


வஞ்சமும் பழியும்
வறுமையும் சூதும்
கொஞ்சமும் இல்லா குடிமக்களே!

வெஞ்சின நெஞ்ச வீரர்களே !

தஞ்சமென்றே வந்தவரை
தானையென்று காக்கும் தர்மர்களே!

எஞ்சியது எறும்பளவு ஆனாலும்
எல்லோருக்கும் ஈயும் கொடைஞர்களே..

விஞ்சி விசும்பையும் தமிழால்
வெல்லும் பாவலரே நாவலரே!

பொன்னாடாய் விரிந்த
பொழிவு கொண்ட
நன்னாடாய் இருந்த
நம்நாட்டு மீது
யார் கண் பட்டதோ ?
சின்னாப் பின்னமானது
சிதைக்குழி பல கண்டது!


அப்பா பழையன்
அக்காள் தென்னரசி
அத்தான் அடலேறு
ஆடும்பூ மாங்கனியென
யாவரையும் இழந்தோம் – அறக்
காவலரையும் இழந்தோம்!

நாடாள அழைத்த
நல்ல உள்ளங்களே
பேடாளும் ஆட்சி
பேராட்சி யாக
ஊடூழி வென்று
உயராட்சி யாக
நீடூடி வாழ
நிறையாசீர் தருவீர்!

என்று வேண்டினாள்
அன்பின் இனத்தாள்

சாமரம் வீசுயும்
பணியாள் முதல்
சாமறம் போற்றும்
வீரர் வரை யாவரும்
பூவரும் புத்தமகளை
நாநறும் வார்த்தையால் வாழ்த்த‌
கோவுரு பூண்டாள்
கோயில் குணத்தாள்

சிங்க கட்டிலேறி
தங்கத் தட்டிலிட்ட‌
பொங்கும் நிலவை போல‌
நங்கை அமர்ந்தாள்

முரசும் முழங்கிற்றவள்
அரசு ஏற்றதை
சிரசு தாழ்த்தினர்
பரவச மோகூரார்

Title: Re: மாங்கனி - காவியம் - பொன்னரசி சிங்க கட்டில் கொளல்..
Post by: Global Angel on September 07, 2012, 05:54:57 PM
Quote
நாநறும் வார்த்தையால் வாழ்த்த‌
கோவுரு பூண்டாள்
கோயில் குணத்தாள்




அருமை ... ஒரு வார்த்தையால் அவள் குண நலன்களை சொல்லி முடித்து விட்டீர்கள் ... தொடருங்கள்
Title: Re: மாங்கனி - காவியம் - பொன்னரசி சிங்க கட்டில் கொளல்..
Post by: ஆதி on September 07, 2012, 06:02:42 PM
நன்றிங்க‌, தொடர்ந்து வரும் தங்களின் ஊக்கத்திற்கு
Title: Re: மாங்கனி - காவியம் - மோகூரின் வளம்
Post by: ஆதி on September 07, 2012, 06:05:53 PM
மோகூரின் வளம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்‎

குறுவட்ட நிலவாக சிறுவண்ண மலராக
குவிந்த மோகூர்
தெருமுட்டும் தென்னைமரம் நறுகொட்டும் சோலைவனம்
செரிந்த வாகூர்
பருகற்ற முகத்தவரும் பால்வெள்ளை மனத்தவரும்
பயந்த பாகூர்
வெறுப்புற்று தேவதைகள் விண்விட்டு கணவருடன்
விரும்பி ஏகூர்

வறுமையென்று வந்தவர்க்கு மறுக்காமல் மோகூரார்
உளதை ஈவார்
மறுக்காமல் தருவோர்கள் வளமாக இருந்தாள
திருடர் இல்லை
பெருவான குணமான பெரியோர்கள் ஊராள
பொய்யும் இல்லை
ஒருமாது உறவாக உயிரேற்ற விலைமாது
குலமே இல்லை

தண்டையணி மங்கையர்கள் தண்ணழகை கண்டுமனம்
தாவி ஓடும்
கொண்டையிடை பூக்களது கொங்கைவிட கூர்மையென
சண்டைப் போடும்
நீண்டமதில் கோட்டையதில் நீந்தமுகில் கொத்தளமோ
வானம் மோதும்
மூண்டுஎழில் ஆண்டுவரும் மோகநகர் முன்னிலையில்
சொர்க்கம் தோற்கும்

அந்தநகர் ஒருபுறத்தில் ஆம்பற்பூ பூத்திருக்கும்
அழகு ஏரி
வந்தமரும் நாரைகளோ வாய்வழிய உண்டுசெலும்
மீன்கள் வாரி
மந்தமுகில் எப்பொழுதும் மழைப்பெய்யக் காத்திருக்கும்
வானம் மூடி
பந்துஎன புல்வெளியில் பகல்பொழுதில் கூடவிழும்
பனிகள் தூரி

விடிகின்ற வேளையதில் விரிந்திருந்த வெண்ணிலவும்
விளக வாடும்
படிந்திருந்த இரவிருளின் மடியிருந்த விண்மீன்கள்
பகலைச் சாடும்
முடிவின்றி இருக்கின்ற முதிராத இயற்கைக்கே
விளங்கா போது
பிடிநெருக்கம் நெகிழாமல் பிணைந்திருக்கும் இளசுகளை
சொலவா வேண்டும்!


Title: Re: மாங்கனி - காவியம் - மோகூரின் வளம்
Post by: suthar on September 07, 2012, 10:57:15 PM
//மொகூரின் வளம் அருமை
குறுவட்ட நிலவாக சிறுவண்ண மலராக
குவிந்த மோகூர்
தெருமுட்டும் தென்னைமரம் நறுகொட்டும் சோலைவனம்
செரிந்த வாகூர்
பருகற்ற முகத்தவரும் பால்வெள்ளை மனத்தவரும்
பயந்த பாகூர்
வெறுப்புற்று தேவதைகள் விண்விட்டு கணவருடன்
விரும்பி ஏகூர்//
 இந்த நாலு ஊர்ல உங்க ஊரு எதுங்க ஆதி ஒரு சில பேர் அவங்க ஊற உஸ் பனி எழுதுவாங்க,
//வறுமையென்று வந்தவர்க்கு மறுக்காமல் மோகூரார்
உளதை ஈவார்
மறுக்காமல் தருவோர்கள் வளமாக இருந்தாள
திருடர் இல்லை
பெருவான குணமான பெரியோர்கள் ஊராள
பொய்யும் இல்லை
ஒருமாது உறவாக உயிரேற்ற விலைமாது
குலமே இல்லை//
என்ன ஒரு விளக்கம் மொகூராரின்  சிறப்பு, திருடர் இல்லாத மோகூர், பொய் புரட்டு இலாத ஊர், ஒருவனுக்கு ஒருத்தியென கோட்பாடோடு வாழும் ஊர் (விலை மாதுக்கே இடமில்லா ஊர்), என்ன ஒரு சிறப்பு

//  தண்டையணி மங்கையர்கள் தண்ணழகை கண்டுமனம்
தாவி ஓடும்
கொண்டையிடை பூக்களது கொங்கைவிட கூர்மையென
சண்டைப் போடும்
நீண்டமதில் கோட்டையதில் நீந்தமுகில் கொத்தளமோ
வானம் மோதும்
மூண்டுஎழில் ஆண்டுவரும் மோகநகர் முன்னிலையில்
சொர்க்கம் தோற்கும்//

மங்கையின் பெருமை அருமை பெண்ணை நேர்த்தியாக வளபடுதி இருகிறீர்கள், இந்த வரிகளிலே பெண்ணின் வழமையை காணும்போது எங்கே மோகுரின் தெரு வீதிகளில் நடந்து செல்கின்ற கற்பனை என்னுள் (எதுக்குன்னு கேக்றீங்கள... சைட் அடிக்கத்தான்)

// அந்தநகர் ஒருபுறத்தில் ஆம்பற்பூ பூத்திருக்கும்
அழகு ஏரி
வந்தமரும் நாரைகளோ வாய்வழிய உண்டுசெலும்
மீன்கள் வாரி
மந்தமுகில் எப்பொழுதும் மழைப்பெய்யக் காத்திருக்கும்
வானம் மூடி
பந்துஎன புல்வெளியில் பகல்பொழுதில் கூடவிழும்
பனிகள் தூரி//
ஊரின் வளம் அதைவிட பெருமை வளமான பகுதியாக கண்முன் கொண்டு வந்து நிருதிருகிரீர்கள் ஆதி...இங்க எனக்கு ஒரு இடம் பாருங்கப்பா நான் அங்கேயே குடி போய்டுறேன்

//   விடிகின்ற வேளையதில் விரிந்திருந்த வெண்ணிலவும்
விளக வாடும்
படிந்திருந்த இரவிருளின் மடியிருந்த விண்மீன்கள்
பகலைச் சாடும்
முடிவின்றி இருக்கின்ற முதிராத இயற்கைக்கே
விளங்கா போது
பிடிநெருக்கம் நெகிழாமல் பிணைந்திருக்கும் இளசுகளை
சொலவா வேண்டும்!//
வெண்ணிலவே பிரிய மனமில்லாம பிரியும் பொது
இணைந்திருக்கும் இளசுகள் மட்டும் எப்டி ... நல வளமான வரிகள்......
Title: Re: மாங்கனி - காவியம் - மோகூரின் வளம்
Post by: ஆதி on September 08, 2012, 03:15:04 AM
எங்க ஊர் பெயர் எல்லாம் பயன்படுத்தல சுதர்சன்

வார்த்தைகளை புதிதாக உருவாக்கவும், அடி எதுகையோடு எழுதவும் எண்ணி அப்படி எழுதினேன்


மோகூர் - நாடின் பெயர்..

வாகூர் - வாகான ஊர்

வாகு + ஊர் - வாகூர்

பாகூர் - பாகு போன்ற ஊர்

பாகு + ஊர் - பாகூர்

ஏகூர் - ஏகும் ஊர்

ஏகு + ஊர் = ஏகூர்

பின்னூட்டதுக்கு நன்றி சுதர்சன்
Title: Re: மாங்கனி - காவியம் - காவியம் துவங்க நாள் கூறல்
Post by: ஆதி on September 08, 2012, 08:59:25 PM
அறிவன் வேண்டுகோள்

அறுசீர் விருத்தம்



போது கொய்த பூப்போன்ற
...புன்சி ரிப்பு உடையவளே
தாது அன்ன நறுமணக்கும்
...தரள மேனி தண்ணிலவே
மாது மாங்க னிவீரஏறு
...மனையாள் தென்ன ரசிக்காதல்
ஓதும் காவி யமும்சிலையும்
...புனைய நல்கு அனுமதியே
!

ஏற்றாள் பொன்னரசி

அறுசீர் விருத்தம்


அறிவனவன் கருத்தை ஏற்றாள்
...அதைத்துவங்கும் திருநா ளையும்
அறிவித்தாள் பெருகிப் பொங்கும்
...பௌர்ணமிநா ளன்றில் மூவர்
பெருங்காதல் சிறப்பும் ஏத்தும்
...பெருங்காவி யமெழில் சிற்பம்
வருங்காலம் அறிந்து வாழ்த்த
...வடிவெழிலாய் வடிப்போம் என்றாள்.


அலர்ந்தது நிலா

வானவில் கரைத்து வரைந்த போதாய்
ஆணவன் விரல்கள் அலைந்த போது
நாணவில் விரிந்த நங்கை முகமாய்
மாணவன் போல மையலில் மாதின்
பூநகில் மார்ப்பில் புனைந்த தொ(ய்)யிலில்
ஆனவில் போல அலர்ந்த தந்தி..

பாடும் இசைஞர்கள் ஒருபுறம் பரதம்
ஆடும் மஞ்ஞைகள் ஒருபுறம் வாள்கள்
சூடிய வீரகள் ஒருபுறம் பைந்தமிழ்
ஏடேந்திய புலவர்கள் ஒருபுறம் பாவையர்
கூடும் பக்கங்களில் அதிக மாய்நட
மாடும் ஆடவர் கூட்டம் ஒருபுறம்

மொட்டிள விரல்கள் கட்டிளம் பெண்கள்
தொட்டிள பூக்களில் கட்டியத் தோரணம்
நெட்டிள வீதியில் நித்தில வாரணம்
பட்டிள இதழ்கள் படிக்கும் ஆரணம்
எட்டிள உலகும் எட்டியே நிற்கும்
எட்டிட முடியா எழிலின் பூரணம்..

அப்போது..

சுழலும் பூமியில் சூரியன் வற்ற
கழலும் பகலை கரைத்தது இரவு
தழலும் வானின் தனிமையைப் போக்க
மலரென விழிகளை அவிழ்த்தன விண்மீன்
குழலில் நீவும் நெய்யினை போல
குழுமும் இருளில் குழைந்தது நிலவு..
Title: Re: மாங்கனி - காவியம் - காவியம் - காவியம் துவங்க நாள் கூறல்
Post by: kanmani on September 08, 2012, 09:29:45 PM
aadhi romba sirapu vaaindhadhu unga pathipu .. thodarungal
Title: Re: மாங்கனி - காவியம் - காவியம் - காவியம் துவங்க நாள் கூறல்
Post by: Global Angel on September 10, 2012, 01:38:32 PM


எனக்கு உங்கள் கவிதைகளை படிக்கும் போது.. அதாவது இப்பகுதியை ....சரித்திர கதாசிரியர் சாண்டில்யன் நாவல்கள் படிகின்ற உணர்வு .. ஏனெனில் சம்பவங்களையும் பெண்ணையும் வர்ணிக்க .. அவருக்கு நிகர் அவரேதான் .... அவரது கதைகளை படிக்கும் போது எனக்கு என்னமோ ... அந்த இடத்திலே வாழ்வது போன்று ஒரு உணர்வு தோன்றும் .. அதே போல் இருக்கிறது ஆதி  உங்கள் இந்த பகுதி வாழ்த்துக்கள்
Title: Re: மாங்கனி - காவியம் - காவியம் - காவியம் துவங்க நாள் கூறல்
Post by: ஆதி on September 10, 2012, 03:02:43 PM
நன்றி கண்மணி
Title: Re: மாங்கனி - காவியம் - காவியம் - காவியம் துவங்க நாள் கூறல்
Post by: ஆதி on September 10, 2012, 03:22:44 PM
சாண்டில்யனை வாசிக்க வாய்ப்பு அமையவில்லை, கல்கியின் சிவகாமியின் சபதத்தையும், பார்த்திபன் கனவையும் வாசித்திருக்கிறேன், சிவ‌காமி ச‌ப‌த‌ம் போல வேறு எந்த‌ புத்த‌க‌த்தையும் வெறித்த‌ன‌மாக‌ ப‌டித்த‌தில்லை, எனினும் அதுவெல்லாம் ப‌த்துவ‌ருட‌ங்க‌ளுக்கு முன், இந்த இரு நாவல்களை தவிர வேறு சரித்திர நாவல்கள் வாசித்ததில், மாங்கனியை பொருத்தமட்டில் காட்சி விவரணையில் எனக்கு திருப்தியே இல்லை, இன்னும் அழகாக சொல்ல முடியும் என்றே ஒவ்வொரு பாடல் எழுதிய பிறகும் தோன்றுகிறது, ஆனால் பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்

இப்போது நான் பதிந்துவரும் பாடல்கள் முன்பே எழுதியதென்றாலும், மீள் வாசிப்புக்கு உட்படுத்தையில் தோன்று நெருடல்களையும், குறைகளையும் களையவே முயற்சிக்கிறேன்

கோயில் குணத்தாள் எல்லாம் முன்பு எழுதும் போது இல்லை

வார்த்தைகளை கையாளும் வித்தையையும் நுணுக்கத்தையும் நிறைய‌ கற்று கொள்ள உதவியாக இருக்கும் என்பது கூட மாங்கனி எழுத ஒரு காரணமாக இருந்தது

கதை கண்ணதாசனுடையது, அந்த குதிரையை நம்ம திசைக்கு ஓட்டி செல்வது மட்டுமே என் வேலை என்பதால், குதிரையை ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று நம்புகிறேன்
Title: Re: மாங்கனி - காவியம் - காவியம் - காவியம் துவங்க நாள் கூறல்
Post by: Global Angel on September 10, 2012, 04:43:53 PM

 ஆதி நன்று ... சாண்டில்யன் நாவல்களும் சரித்திர கதைகள் தான் .... ஒரு முறை படித்து விடர்கள் என்றால் அவர் நாவல்கள் மீது பித்தாகி விடுவீர்கள் நமது பொது மன்றத்திலேயே நாவல்கள் பகுதியில் நான் பிரசுரித்துள்ளேன் .. ஜவனராணி , நாக தீபம் எனக்கு பிடிதா மிக சிறந்த நாவல் அதுக்குள் .... கடந்த நூறாண்டுகளில் வாழ்ந்த மன்னர்கள் அவர்தம் போர் திறமை ஆஹா படித்து பாருங்கள் நீரம் கிடைளும் போது


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=3108.0
Title: Re: மாங்கனி - காவியம் - காவியம் - காவியம் துவங்க நாள் கூறல்
Post by: ஆதி on September 10, 2012, 05:29:01 PM
ஓ மன்றத்திலேயே இருக்கா, அப்படியென்றால் நிச்சயம் வாசிக்கிறேன்

சுட்டி கொடுத்தமைக்கு நன்றிங்க‌
Title: Re: மாங்கனி - காவியம் துவக்கம்
Post by: ஆதி on September 11, 2012, 12:17:26 AM
துவங்கிக காவியம்

நிறைநிலவின் ஒளிவிரிந்து ஓவியம் போட‌
பிறையுதடு பிரித்துரைத்தாள் காவியம் பாட‌
கரையுடைந்த மடைப்போன்ற நாவியம் கொண்ட‌
திறப்புலவர் படையெடுத்தார் மாவியம் தீட்ட‌


வில்லவன் விழா எடுத்தான்

தொல்லவர் வடவரை துமைத்து இமயத்தில்
கல்எடுத்து கங்கையில் கழுவி ஏற்றி
தலையில் சுமக்க வைத்து கொணர்ந்து
சிலையொன்று கண்ணகிக்கு சமைத்த நாளின்
நினைவாய் வில்லவன் விழாஎடுத்தான்; வற்றா
சுனையென அழகு சுரக்கும் செங்கனி
மாங்கனி அன்று அரங்கேற்றம் செய்தாள்
தேங்கனி பலமனங்களில் சீற்றம் செய்தாள்



மாங்கனி அழகு

மஞ்சள் அரைத்து பனியில் தோய்த்து
கொஞ்சம் பொன்னில் குழைத்து; பொங்கும்
வெஞ்சில் மதியில் விளாவி; மென்முகில்
பஞ்சும் அளாவி பகலில் படரும்
செஞ்சுடர் சாந்து சேர்த்து விரவி
எஞ்சி இருந்த எல்லா அழகையும்
வஞ்சம் இன்றி வார்த்து வனைந்தானோ
வஞ்சி வனப்பை வான சிலைஞன்
விஞ்சி பகையை வெருட்டிய வேந்தரும்
தஞ்ச முறுவர் தப்பி தவறி
அஞ்சுக மேனியை கொஞ்சம் பார்த்தால்
மிச்சம் மீதி இல்லாமல் போவர்!


அழகு வழியும் அமுதப் பாவை
அளந்து வைத்து அரங்கம் நுழைந்தாள்
இளகும் நெஞ்சார் இழந்தார் தன்னை
உளத்தில் ஈரமற்றோர் உருகினர் வெண்ணையாய்

தீங்கனி தேனழகில் சிந்தனை சிந்த
பூங்கனி பொன்னழகை பாடஒரு புலவன்
வெட்டி மறையும் மின்னலிலும் வேகமாய்
சட்டென எழுந்தான் சரியாக நேர்த்தியாய்
கட்டாத மாலையாய் கவிதை பூக்கள்
கொட்டினான் மயக்கதில் குழறினான் உளறினான்




எழுசீர் கும்மி - சிந்து


குழையாட காதில் குழலாட பூக்கள்
குரலோடு வந்து குயில்பாடும்
அலையாட மார்ப்பில் அலையாக விழிகள்
அலைமோதி ஆங்கே அதிலாடும்
சுளையான உதட்டில் சுவையான சாறும்
சுகப்போதை ஊற வழிந்தோடும்
விளையாத பூவாய் விரியாத அழகில்
விடியாத விரக இழையூடும்


(வேறு)

வண்ணமற்ற ஒருமடல் பூவா?
வண்ணத்து பூச்சியா இமைகள்
வளராத பிறைகளின் இரட்டையா ?
வளைந்த மின்னலா புருவம்
விறைத்த வில்லில் கணையாய்
முறைத்துப் பார்க்கும் தனங்கள்
நிறுத்த நயகடை எடையாய்
குறைந்து போன இடையாள்
நிலவாலுன் தாய்க்கரு உற்றாளோ
நிலவையுன் தாய்க்கரு உற்றாளோ
என்றான்; பிறகென்ன சொல்ல புரியாமல்
நின்றான் நிலவை பார்த்த வாறு..


தொடரும்...
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: Global Angel on September 11, 2012, 06:24:50 PM
Quote
மாங்கனி அன்று அரங்கேற்றம் செய்தாள்
தேங்கனி பலமனங்களில் சீற்றம் செய்தாள்

பாவையர் மனதில்தானே ... இவளை எண்ணி சீற்றம் ...ஹஹாஹ்

Quote
வான சிலைஞன்



பிரமனுக்கு புதிதாய் ஒரு பொருத்தமான பெயர் ,  ஆஹா பிரம்மனுக்கு மூடு வந்து இவளை படைத்திருப்பான் ...


Quote
சட்டென எழுந்தான் சரியாக நேர்த்தியாய்
கட்டாத மாலையாய் கவிதை பூக்கள்
கொட்டினான் மயக்கதில் குழறினான் உளறினான்
;D ;D



Quote
குழையாட காதில் குழலாட பூக்கள்
குரலோடு வந்து குயில்பாடும்
அலையாட மார்ப்பில் அலையாக விழிகள்
அலைமோதி ஆங்கே அதிலாடும்
சுளையான உதட்டில் சுவையான சாறும்
சுகப்போதை ஊற வழிந்தோடும்
விளையாத பூவாய் விரியாத அழகில்
விடியாத விரக இழையூடும்



எனக்கு பொறமை வருகிறது என்னை விட அழகாய் இருப்பாள் போலும்


 >:( >:( >:( >:( >:(



அருமை ஆதி ... பெண்களை வர்ணிப்பதில் கவிஞ்சர்கள்  ம்ம்...... ;D
Title: Re: மாங்கனி - துவங்குக ஆடல்
Post by: ஆதி on September 11, 2012, 06:26:58 PM
அடுத்தொருவன் எழுந்துநின்று அழகை பார்த்து
கொடுத்தொன்றே பழகியகொ டைஞரும் கூட‌
நெடுங்கைநீட்டி உன்னிடம்யா சிப்பார் உள்ளம்
எடுத்துனக்கு அள்ளிதருவார் தன்னை கஞ்சர்

பித்தனென்று பிணக்காட்டு சாம்பல் பூசி
செத்தமண்டை ஓடேந்தி புலிதோல் போர்த்தி
கொத்துமுடி லிங்கபோல சடையாய் பூட்டி
ஒத்தையிலே உலவுசிவனும் உன்னை கண்டால்
விறைப்பையெலாம் விட்டுவிட்டு விசும்பின் கண்டன்
முறைப்பையனாய் உனக்காக முயற்சி செய்வான்
கறைநிலவை சடையிருந்து கழட்டி வீசி
பிறைநுதலை சூடிவிட பிரியம் கொள்வான்

ஆல்இலையில் பள்ளிகொள்ளும் மாலும் உன்றன்
பால்விழியின் பரப்பிலொரு படுக்கை கேட்பான்
காலடியின் சுவட்டுமண்ணை அள்ளி கொஞ்சம்
சோலையிலே பட்டிருக்கும் செடிகள் மீது
காலையிலே தூவிவிட்டல் பசுவை ஊறி
மாலையிலே பூத்துவிடும் உடலும் தேறி
காவ‌ல‌ரை க‌ள்ள‌வ‌ராய் மாற்றும் அழகே
கோவலராய் எத்தனைபேர் ஆக உளரோ
 


துவங்குக ஆடல்

சேரன் அமைச்சன் அளும்பிள்வேல்; அவன்மகன்
வீரத் தளபதி அடலேறு; வில்லவன்
மனையாள் மாதரசி; மாசறு பொன்னிற்கு
இணையான சான்றோர்; தூசறு உள்ள
முடைய அரசியல் மேதைகள்; நீசரைப்
புடைக்கும் மறவர்; புலவர், கொடைஞர்
கொலைஞர், மக்கள் அனைவரின் சுற்றும்
விழியின் மைய புள்ளியாய் மாங்கனி
இருந்தாள்; அடலேறு காதல் மையலில்
இருந்தான்; யாரும் அறியாமல், இறக்காமல்
இறந்தான்; நெஞ்சை இளையவன் துறக்காமல்
துறந்தான்; காதல் துறவி யானான்

மதப்புரவி களடக்கும் மறவன் காதல்
மதம்தழுவி னான்;மனப் புரவி கொண்ட
மதத்தை அடக்க முடியாமல் தோற்றான்
மதம்முற்ற மனதை மதத்தில் ஆர்த்தான்

பட்டுநிலா கிரணம் படரும் சத்தம்
எட்டு திசையும் எதிரொ லிக்கும்
அமைதி மொட்டு விரியும் ஒலியும்
இமைகள் முட்டும் ஓசையும் கூட
தெளிவாய் கேட்கும் திருப்பொழுதில் சேரன்
விளித்தான் துவங்குக ஆடல் என்றே!
 

மாங்கனி ஆடும் அழகு

வணங்கும் அபினயம் ஒன்று வைத்தாள்
மனக்குடம் நிறைந்தவரும் தழும்பினர் திங்கள்
வலக்கரம்தான் நீட்டினாள் உளக்குளம் பாதி
கலங்கின; இடக்கரம் பிறகு மடக்கினாள்
இருந்தவரில் மீதி முடங்கினர்; தாம்தீம்
என்றவளாட தத்தைப்பின் விழிகள் ஓட
இன்றுநாம் தகர்ந்தோம் என்றுசிலர் வாட
தத்தோம் என்றுகால் தூக்க மீண்டும்
செத்தோம் எனபலர் வீழ; முடித்தாள்
மாங்கனி; அவையோர் மனங்கள் எல்லாம்
ஏங்கின இன்னும் ஆட வேண்டி..
 
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: Global Angel on September 11, 2012, 06:41:26 PM
Quote
பித்தனென்று பிணக்காட்டு சாம்பல் பூசி
செத்தமண்டை ஓடேந்தி புலிதோல் போர்த்தி
கொத்துமுடி லிங்கபோல சடையாய் பூட்டி
ஒத்தையிலே உலவுசிவனும் உன்னை கண்டால்
விறைப்பையெலாம் விட்டுவிட்டு விசும்பின் கண்டன்
முறைப்பையனாய் உனக்காக முயற்சி செய்வான்
கறைநிலவை சடையிருந்து கழட்டி வீசி
பிறைநுதலை சூடிவிட பிரியம் கொள்வான்

ஆஹா அந்த பரமனையும் விடவில்லையா ...

Quote
காவ‌ல‌ரை க‌ள்ள‌வ‌ராய் மாற்றும் அழகே
கோவலராய் எத்தனைபேர் ஆக உளரோ
 


பெருமாளையும் விடவில்லை ...  உன்மத்தம் கொள்ளும் அழகு ... அருமை


 
Quote
அடலேறு காதல் மையலில்
இருந்தான்; யாரும் அறியாமல், இறக்காமல்
இறந்தான்; நெஞ்சை இளையவன் துறக்காமல்
துறந்தான்; காதல் துறவி யானான்



இந்த காலமல்ல எந்த காலமும் இந்த ஆண்கள் இப்டிதான் ஒருத்தியை அழகாய் இருக்க விடமாட்டார்கள் ...

என்ன அழகு வர்ணனை .. உவமான உவமேயங்கள் அருமை ஆதி ... தங்கள் கவிபுலமை பார்த்து ..ஆச்சர்யபடுகின்றேன் ... தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: ஆதி on September 11, 2012, 08:15:19 PM
சிவனும் திருமாலையும் பதிவிடுவதற்கு முன் தான் எழுதினேன்

கண்ணதாசன் இக்காவியத்தை எழுதுகையில் அவன் திராவிட இயக்கத்தில் தீவிரமாய் இருந்தான், அதனால் கடவுள் மறுப்பாளனாய் இருந்தான்

இந்த காவியத்தில் அந்த வெளியை நான் பயன்படுத்திக் கொண்டேன்

இன்னொன்று, பெண்களின் விழிகளை ஆயுதமாகவே வர்ணித்திருக்கிறோம் ஏன் அரணாக வர்ணிக்க கூடாது என்று நினைத்ததின் பலனே திருமால் உள்வந்தது

ஒவ்வொரு நான்கு ஊழியின் முடிவிலும் பிரளயம் உண்டாகி யாவும் அழியும், அச்சமயத்தில் பிரம்மனும் அழிந்துவிடுவான்

சிவன் கய்லாயத்தில் இருப்பதாலும், திருமாப் ஆலிலை மீது பள்ளி கொண்டு வெள்ளத்தில் இருந்து தப்பிவிடுவார்கள்

ஆல் இலையை திருமால் பிரளய காலத்தில் தான் உயிர் பிழைக்கவே பயன்படுத்துகிறார், பிரளய காலத்தில் ஆல் இலையைவிட இவளின் விழி பாது காப்பானது என்ற பொருள் உள் வைத்து எழுதினேன்

மாங்கனியின் ஆடலை இன்னும் விரிவாய் விவரணை செய்யத்தான் எண்ணினேன் நேரமில்லாததால் ஒரு பத்தியோடு முடித்துக் கொண்டேன், எனினும் அவளின் ஆடல் அழகுதான் எனக்கு கொஞ்சம் திருப்தியாய் இருந்தது

கவிபுலமையை கை கொள்ளத்தான் இந்த முயற்சியே செய்து கொண்டு இருக்கேன், இன்னும் போக வேண்டிய தூரமும் கற்று கொள்ள வேண்டிய விடயமும் நிறைய இருக்கு

தலைப்பே மாங்கனி அப்படியிருக்கும் போது அவளை பற்றி சொல்லும் போது சும்மா சொல்லிவிட்டால் என்னாவது, அதனால்தான் வர்ணினைகள், வர்ணினையோடு சொல்லும் போது கொஞ்சம் தொய்வில்லாமல் இருக்குமில்லையா ?
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: Global Angel on September 11, 2012, 08:34:51 PM
பெண்களையே பொறமை கொள்ள வைக்கும் அழகு வர்ணனை ஆதி தொடருங்கள்
Title: Re: மாங்கனி - அடலேறு காதலுற்றான்
Post by: ஆதி on September 12, 2012, 03:28:12 PM
அவையோர் நிலை அவல நிலை

மென்மயில் நாட்டியம் பன்மையில் மனங்களை
அண்மையில் இழுத்தொரு அயன்மையில் கிடத்திட‌
தன்மையை மீட்டுதொல் தகைமையில் மீண்டிடும்
திண்மையை இழந்தவர் தவித்தப் பொழுதினில்
ம‌ண்முகில் வ‌ண‌ங்கியொரு புன்ன‌கை பூத்தாள்
நுண்மீத‌ முமின்றிமீள் தொலைத‌ன‌ர் ப‌ல‌பேர்


அடலேறு காதலுற்றான்

வெண்பா

மன்னன் மனஅரசி மாதரசி மாலையொன்று
அன்னத்திற்(கு) ஈந்தாள் பரிசாக - பின்னர்
மயிலழகு மாங்கனியை வாழ்த்தினான கோதை
அயில்விழியாள் ஏற்றாள் பணிந்து!

பூரித்து எல்லோர்க்கும் புன்னகையில் நன்றிசொல்லி
நேரிழையாள் ஏகினாள் அங்கிருந்து - ஏரிடை
கட்டுண்ட மாடாய் அவையோர் மனங்களும்
சென்றன மாங்கனி யோடு!


எழுசீர் கும்மி சிந்து


தெளியாத போதை தெய்வீக வஞ்சி
..தெவிட்டாத மதுவால் ஊற்ற
பொழியாத மேகம் புளங்காத மின்னாய்
..புரியாத தாப தீமூட்ட
கிழியாது நெஞ்சை கிரங்காது கொத்தி
...கிளியாக மாது நடைபோட
எலியான வீரன் எழில்மேனி போன
...இடம்பார்த்து நின்றான் மரம்போல

வெடியாக பாவை விறகாக நெஞ்சை
...இருவேறு துண்டாய் பிளந்துவிட்டாள்
கொடியாக கோதை கொம்பாக எண்ணி
...குலவீரன் தன்னை சுற்றிவிட்டாள்
அடியோடு யாரும் அறியாத வண்ணம்
...அடலேறு தன்னை பேர்த்துவிட்டாள்
வடியாத காதல் வழியாத நெஞ்சில்
...வலியாக ஏறு வழியானான்!

(வேறு)


என்ன நிகழ்கிறது என்று அறியாமல்
அன்னம் நடந்தாள் அன்னை பின்னே!
எண்ணம் நிகிழ்ந்திடுமா என்ற கேள்விக்கு
என்ன பதிலென்று யோசித்து குழம்பி
என்ன நிகழுமினி என்று அறியாமல்
ஏறு நடந்தான் வீட்டின் கண்ணே!


அந்தப்புரத்தில் சேரனிருந்தான் அன்னம் மாதரசியோடு

அறுசீர் விருத்தம்

பெண்கடலில் மூழ்கி மன்னம்
...பிரியமுத்து எடுத்த அந்த
மென்பொழுதில் சொர்க்க பாவை
...மாங்கனியின் வனப்பு பற்றி
கண்சங்கால் மையல் பாலை
...காண்போர்க்கு ஊட்டி காதல்
பொன்வீட்டில் பூட்டும் இன்ப
...பொலிவையரசி புகழ்ந்து சொன்னாள்

முகநிலவை கையில் ஏந்தி
...முன்னூறு முத்த மிட்டு
அகச்சூட்டு தகிப்பு கொஞ்சம்
...அடங்கிவிட அமுதை பார்த்து
சகபெண்ணை பற்றி பேச்சு
...சரியில்லை கண்ணே என்றான்
புகையிடையை மீண்டும் அள்ளி
...புதைந்துபோனான் சேர்ந்தான் சொர்க்கம்

மனதாலும் வேறு பெண்ணை
...வருடாத மன்னன் கற்பை
நினைத்துமாது மகிழ்ச்சி கொண்டாள்
...நெகிழ்ந்திறுகி நெருக்கம் கொண்டாள்
இணைகளுக்கு இடையில் சிக்கி
...இடம்பெயர இயலா காற்று
முனகியது "விடடா! என்னால்
...மூச்சிழுக்க முடிய வில்லை"


Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: ஆதி on September 12, 2012, 03:32:36 PM
//பெண்களையே பொறமை கொள்ள வைக்கும் அழகு வர்ணனை ஆதி தொடருங்கள் //

மகிழ்ச்சியாகவும் இருக்கு பயமாகவும் இருக்கு, மகிழ்ச்சி மாங்கனி குறித்து, பயம் எதிர்காலம் குறித்து :D
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: Global Angel on September 12, 2012, 04:58:23 PM
ஆஹா பெண்களை தான் வர்நிகுறேங்க நல்லானு பார்த்தா ...

Quote
இணைகளுக்கு இடையில் சிக்கி
...இடம்பெயர இயலா காற்று
முனகியது "விடடா! என்னால்
...மூச்சிழுக்க முடிய வில்லை"
யம்மாடியோ ...மோகத்தை கூட எப்டிஎலம் வர்ணனை செய்றீங்க .... பொதுவே நான் கேள்விபட்டதுண்டு ... கவிஞ்சர்கள் எல்லாருமே இந்த விஷயங்கள் பத்தி எழுதுவதில் கில்லடின்னு ... பாக்குறேன் ... ஹிஹி நல்லாத்தான் இருக்கு ..


ஆமா எதிர்காலத்த எண்ணி என்ன பயம் எனக்கு  ஐடியா  இல்லை ஏதும்
 ;D ;D
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: ஆதி on September 12, 2012, 05:01:41 PM
அது ஒண்ணுமில்லைங்க, வீட்டுல என்னை யார் தலையிலயாவது கட்டிவச்சுட்டாங்கனா இப்படியெல்லாம் கவிதை எழுத முடியாது இல்ல அதன நினைச்சு பயந்தேன்
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: ஆதி on September 12, 2012, 05:11:08 PM
மாங்கனியை பொருத்த மட்டில் எல்லா விடயமும் சமமானது

மோகூரின் வளத்தில் இருந்து பல விடயங்கள், சரித்திர கதை என்பதால் நிச்சயம் ஒரு போர் இருக்கனும், அதனால் கற்றுக் கொள்ளவும், கவித்திறனை கூர்மையாக்கிக் கொள்ளவும் ஏகப்பட்ட வாய்ப்பிருக்கு

என்ன எழுதும் போது நமக்கே நேர்மையாக எழுதனும், அதை மட்டும் செய்ய முனைந்தால் பலவிடயங்கள் கற்றுக் கொள்ள முடியும், எழுதனும் என்று எழுத கூடாது

இந்த பகுதியிலும் பார்த்திங்கன்னா, சில பகுதிகளை திருத்திய பதிந்திருக்கேன்

மற்றும், வெண்பா, விருத்தம், சிந்து கும்மி என்று மூன்று வகையா பிரிச்சு எழுதியிருக்கேன், இது எதுவுமே கண்ணதாசனின் காவியத்தில் இல்லை

ஏறு காதல் வயப்படுவது எவ்வளவு அழகான விடயம், அதனால் தான் கும்மி பாட்டு வச்சி, இனி காதல் அவனை கும்மியடிக்க வேற போகுது இல்ல :)

ஒவ்வொரு பா வகை கையாளும் போது அதற்கு ஒரு காரணம் இருக்கனும் என்று நினைத்தேன்

Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: Global Angel on September 12, 2012, 05:33:35 PM
 ;D  ;D  ;D


கட்டி வச்ச என்ன ..? அவங்களுக்கு கவிதை எழுதுங்க ..... ஆமாம் சரித்திர கதைகள் எல்லாம் இப்படி வர்ணனை இல்லாவிட்டால் படிக்க ரசனை குறைவாகவே இருக்கும் ... அருமையாக இருக்கிறது ... கண்ணதாசனை விஞ்சும் கவி திறமை பெற்றுக்கொண்டு இருகின்றீர்கள் போலும் .. வாழ்த்துகள் தொடர ..
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: ஆதி on September 12, 2012, 05:44:45 PM
கண்ணதாசன் இடம் என்பது ஒரு ராஜ நாற்காலி அதனை அடையவே ஒவ்வொரு கவிஞனனும் முயல்கிறான், ஆனால் ஒருத்தன் கூட அங்கு சென்றதில்லை வைரமுத்து உட்பட‌

காதல் பாடலில் கூட தத்துவம் சொல்ல கண்ணதாசனால் மட்டுமே முடியும், துள்ளல் பாடலில் தத்துவம் சொல்ல அவனுக்கே வரும்

ஜெகமே மந்திர பாடல் போதாதா ?

மனித உன் ஜென்மத்தில் எந்நாளும் நந்நாளாம்
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கி நீ ஏறு

அவன் இடம் அது ராஜ மடம் அங்கு யாரும் செல்ல கூட முடியாது

Title: Re: மாங்கனி - போதையுற்ற உள்ளம்
Post by: ஆதி on September 13, 2012, 03:44:15 PM
அடலேறு பாடுகிறான்

பாடல்

இதுவரையில் - என் இமைகரையில்
எந்த நிலவும் விரிந்து மலர்ந்ததில்லை
மலர்ந்ததில்லை - நான் கரைந்ததில்லை...

துளி ஒளியென்னும் உன் விழிகளால்
என்னை துகள்களாய் தகர்த்துவிட்டாய்
சுடும் வெளியன்ன என் இதயத்தில்
காதல் இலைவிட விதைத்துவிட்டாய்
அசையா மலைபோல் நின்றவனை
அடியோடு பேர்த்து சாய்த்துவிட்டாய்

சிரம் கொய்ய ஏவிடும் என் வாளை
பூ கொய்யும் கருவியாய் மாற்றிவிட்டாய்
ஒரு இடத்தில் நிற்காத என் மனதை
உன் நினைவு தியானத்தில் அமர்த்திவிட்டாய்
எனக்கென்று இருந்த நினைவுகளை
உனக்கென்று நீ எடுத்துக்கொண்டாய்


வெண்பா


கோதைமலர் பாவையவள் கோல நினைவினில்
போதையுற்ற வீரமகன் நீந்தினான் - சீதளமாய்
சின்னமகள் தன்னுள்ளே செய்தவிட்ட வேறுபாட்டை
எண்ணியெண்ணி பாடினான் பா!


போதையுற்ற உள்ளம்

மலராக மின்விழியாள் மலர நெஞ்சில்
உலராத சருகாக உதிர்ந்தான் தீரன்
வளராத பிறைபோன்ற வாட்டம் வந்து
தளராத தளபதியின் முகத்தில் சூழ

விரவிகொன்ற தனிமையோடு வீடு சென்றான்
அரவமற்ற நினைவோடு சோலை புக்கான்
அரவமொன்று நெளிந்தாலும் அறியான் போல
மரமிடையே மரமானான் மறவன் பாவம்!

தென்றலொன்று இதமாக தேகம் தீண்ட
பெண்விரல்கள் பட்டதுபோல் அவனில் சூடு
மென்மையாக மேலெழுந்து பரவி ஊட
கண்வானில் வெப்பநிலா காயக் கண்டான்


எண்சீர் விருத்தம்


உடலாறு உற்றவளின் நினைவால் பொங்கி
...உள்ளத்தை வெள்ளம்போல் உடைத்து ஓட
அடலேறு அதில்மூழ்கி இருந்த போது
...அழும்பிள்வேல் வந்துநின்றான் அவனின் பின்னே
மடலிதழை திறந்தழகாய் மகனே என்றான்
...மயக்கத்தில் இருந்தமகன் மதிக்க வில்லை
'அடலேறு' என்றழுத்தி அழைத்தான் மீண்டும்
...அறியாத வரைப்பார்ப்ப வன்போல் பார்த்தான்

யாரென்று அவனிதழ்கள் அசையும் முன்னே
...அருகேவந் தறிவாயா மகனே மற்றோர்
பேரென்றான் அழும்பிள்வேல்; கண்வேல் இட்ட
...புண்ணேஇன் னுமாறாத போது இன்னோர்
போரென்றால் புயலுற்ற நெஞ்சம் எப்படி
...பொறுக்கும்?உ தட்டிலொரு சொல்லு மின்றி
யாரிடமோ அழும்பிள்வேல் பேசு கின்றான்
...என்பதுபோல் நின்றிருந்தான் இளைய ஏறு!



யாருடந்தெ ரியுமாபோர் ? தெரியா தென்றான்
...ஏறுஅமைச் சன்மீண்டும் தொடர்ந்தான் வேந்தன்
ஆருயிர்நண் பன்செவ்வேல் மீது மோகூர்
...அரசன்ப டைத்திரட்டி விட்டான் அந்த
கூருகெட்ட குறுமதியன் மீது தான்போர்
..போருதவி செவ்வேலுக் குசெய்ய நாளை
சேரர்ப டைப்புறப்ப டவேண்டும் நீதான்
...சேனாதி பதியென்றான் தழுவிக் கொண்டான்..


அறுசீர் விருத்தம்

துவங்கிவிட்ட போரே வெற்றி
...தோல்வியென்று ஏது மின்றி
துவண்டுநிற்க தோழ னுக்கு
...துணைசெய்ய தானை ஏற்று
துவங்குநாளை பயணம் என்று
...சொன்னால் ஏ துசெவான் பிள்ளை
நவரசத்தில் இலார சத்தை
...அவன்முகத்தில் வழிய விட்டான்
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: Global Angel on September 13, 2012, 10:40:30 PM
Quote
...சொன்னால் ஏ துசெவான் பிள்ளை
நவரசத்தில் இலார சத்தை
...அவன்முகத்தில் வழிய விட்டான்

ஹஹ்ஹா ... இதுதான் ஜொள்ளு என்ற 10 ரசம் .... ஹிஹி  அருமை ஆதி ஆண்கள் இந்த மயக்கம் வந்தால் அவ்ளோதான் போல ..... ஹிஹி கற்பனையில் கண்டு ரசிக்கின்றேன் .. சிரிக்கின்றேன் ... வெட்கம் கூட வருகிறது ... ஹஹஹா அந்த மாங்கனி நானாகவே மாரிவிட்டேனோ 
Title: Re: மாங்கனி - காவியம் துவங்கம்
Post by: ஆதி on September 14, 2012, 06:09:43 PM
ஹா ஹா ஹா

நன்றிங்க,  சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம பசங்க எப்பவும் பாங்க
Title: Re: மாங்கனி - மாங்கனி இல்லம்
Post by: ஆதி on September 14, 2012, 06:27:30 PM
மாங்கனி இல்லம்

ஏறின் மயக்கம்


அறு சீர் விருத்தம்

அனிச்சமலர் நினைவில் மீண்டும்
...ஆழ்ந்தான்;மான் அருகில் அற்ற
தனிமையில்தான் தத்த ளித்தான்
...தளர்ந்தநடை போட்டு; பார்வை
பனிச்சிந்து பாவை வீடு
...பயணமானான்; முற்றம் வந்து
துணிச்சலற்று நின்றான்; நீண்ட
..சுவாசமிழுத் தான்,உள் சென்றான்

(வேறு)
அமைச்சன் மைந்தன் அவ்விடம் போம்முன்
அவள்வீட்டில் நிகழ்ந்த வற்றை காண்போம்  


சுற்றி போட்டாள் அன்னை

பொழிலகத்து பூமதியாள் வந்த பின்பு
எழில்குலத்து மாங்கனிக்கு சுற்றி போட்டாள்
வெளிர்குழலி அன்னை;பூவை முற்றும் காறும்
மொழிமறுத்து நின்றாள்;தன் அறைக்கு சென்றாள்


மாங்கனியின் அறைக்கு சென்றாள் அன்னை

அறுசீர் விருத்தம்

வெற்றிலை சிவந்த செவ்வாய்
...வெண்மணி யாடும் மார்பள்
முற்றிய வயதள்; சிந்தை
...முதிர்ந்தவள்; இளங்கா ளைகள்
சுற்றிமுன் வட்ட மிட்ட
...சொப்பண பூ;சு ருங்கி(ய)
நெற்றியாள்; எதையோ பேச
...நிலவவள் அறைக்கு சென்றாள்


அன்னையின் ஆசையும் மாங்கனியின் கோபமும்

எண்சீர் விருத்தம்

அறைபோன இளநங்கை; அரசி தந்த
...அழகுமாலை ரசித்திருந்தாள்; எண்ண வெள்ளம்
கரைபுரண்டு நெஞ்சிலோட அவையில் பெற்ற
...கரஓசை காததிர அரும்பின் செல்வி
உறைந்திருந்தாள் பெருமிதத்தில்; சுருக்கம் கொண்ட
...பிறைபோன்ற நெற்றியோடும் நெருக்கம் கொண்ட
கறையான பல்லோடும் அங்கே அன்னை
...கனியோடு உரையாட வந்து நின்றாள்


தோய்ந்திருக்கும் நினைவுகளின் மகிழ்ச்சி ஆற்றில்
...தொலைதூரம் போனவளோ திரும்பி மீள
காய்ந்திருக்கும் மலர்போன்ற இதழை கூப்பி
...கனியேயென கூப்பிட்டாள்; விரியும் பூபோல்
சாய்ந்திருக்கும் இமைதூக்கி தாயை பார்த்தாள்
...ஜாடையிலே சங்கதியென்ன என்றாள்; அன்னை
ஓய்ந்திருக்கும் குலதொழிலோ உன்னால் மீண்டும்
...ஒளிகொள்ள வேண்டுமென விருப்பம் சொன்னாள்

அவ்வார்த்தை கேட்டவுடன் கோதை வெப்ப
...அணல்க்கக்கும் கோபமுற்றாள், உன்னை போன்று
ஒவ்வொருநாள் ஒவ்வொருத்தன் என்று தாவி
...உடைகழட்டி வாழஎனக்(கு) விருப்ப மில்லை
அவ்வாழ்க்கை வாழுதற்கு மாறாய் சாதல்
...அமுதமென்றாள்; அடித்தபுயல் ஓய்ந்தார் போல
மௌனமானாள்; மாங்கனியின் கற்பை பேச்சை
...மனதுக்குள் எண்ணியெண்ணி மகிழ்ந்தாள் அன்னை!
Title: Re: மாங்கனி - மாங்கனி இல்லம்
Post by: Global Angel on September 14, 2012, 06:36:59 PM


அச்சோ மாங்கனி கணிகையர் குலத்தவளா...? அப்போ அரசி இல்லையா அவள் ... :( ::)
Title: Re: மாங்கனி - மாங்கனி இல்லம்
Post by: ஆதி on September 17, 2012, 12:35:33 PM
அது அவள் குற்றமில்லையே, தொடர்ந்து வரும் பின்னூட்டத்துக்கு நன்றிங்க‌
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: ஆதி on September 18, 2012, 03:21:43 PM
இந்த உலகம்

எண்சீர் விருத்தம்

இத்தெளிவு எனக்கு முன்பே இருந்தி ருந்தால்
...இவ்வாழ்வில் உழன்றிருக்க மாட்டேன்; என்று
தத்தளித்தாள் தனக்குள்,த வித்தாள் காலம்
...சாய்ந்தபின்பு உணர்ந்தென்ன ஆகும் என்றே
அச்சுருங்கி ய,தோலினாள்தான் தேற்றி கொண்டாள்
...அழகைபார்த்து வேசிவீட்டில் பிறந்த உன்னை
இஜ்ஜெகத்தில் கற்போடு யார்தான் பார்ப்பர்
...இல்வாழ்க்கை நமக்கெல்லாம் வாய்கா தென்றாள்


அறுசீர் விருத்தம்

மாதவி குலத்தில் வந்த
...மாதவி, மனதில் கொண்ட
காதலன் நினைவில் கற்பை
...காக்கலை யா?பூ போன
பாதையில் நானும் ஏகி
...பத்தினி தன்மை காப்பேன்
மாதவன் எய்யும் அம்பாய்
...வாடகை மகளாய் வாழேன்!

என்றாள், சீதை யைநெருப்பில்
...இறங்கி கற்பை நிரூபிக்க
சொன்ன உலகம் கணிகைகுல
...தோகை உன்னை யாநம்பும்
அன்னை கூறி ய,அனைத்தும்
...அழகின் நெஞ்சில் அமிலமூற்ற
எண்ணம் கலங்கி இளயசெல்வி
...வெம்மை கண்ணீர் உகுத்திருந்தாள்..


பாவம் ஏறு


அப்போது அங்கேறு வந்தான்; யார்க்கும்
ஒப்பேதும் இல்லாத வீரன் மீது
தப்பேது? அன்னைமகள் உற்ற ஊடல்
எப்படிதான் அறிந்திருப்பான் அந்த பிள்ளை..

வெங்கனியாய் மாங்கனியாள் கண்ணீர் வேகும்
சங்கதியை உணராமல் மையல் கையால்
செங்கனியாள் கண்ணிரண்டை சேர்த்து மூட
தங்கமகள் தோழியென்று தட்டி விட்டாள்..

வேறுஇதம் கைகளிலே விரிய கண்டு
யாருஎன்று கோபமாக திரும்பி பார்த்தாள்
ஏறுமகன் காதலோடு ஏங்கி நிற்க
தாறுமாறாய் வார்த்தைகளை இதழ்த ரித்தாள்..

காமனை மாமனாய் எணும்கு லத்தாள்
ஆமென ஆசையில் அடைவேன் என்று
ஏமமுற வந்தீரோ நாட்டைக் காக்கும்
தூமகரே நாடுகாக்கும் திறம்தான் ஈதோ ?

நீர்ப்பட்ட கனகாம்ப ரவிதை போல
நீர்முட்டும் கண்ணுடையாள் வெடித்தாள் தூய
தீர்வொன்று காதலுக்கு தேடி வந்து
சீர்க்கெட்ட பேருற்றான் சேர மைந்தன்..
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Global Angel on September 18, 2012, 05:56:23 PM
இப்டிதான் சமயம் அறியாமல் இந்த பசங்க பேசப்போய் ... திட்டு வாங்குறதே பொழப்ப போச்சு ... இனிக்கு நேற்று இல்ல அன்னிக்கும் இதுதான் வழக்கம் போல .. ஆதி தங்கை கவி கையாள்கை நெறியோடு அருமையாய் உள்ளது ... நிச்சயமாக இந்த காவியத்தை உங்கள் பெயரில் நூலாக வெளியிட்டால் என்ன
Title: Re: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்
Post by: ஆதி on September 18, 2012, 06:43:45 PM
ஹாஹ்ஹா உண்மைதான், பாவம் தான் பசங்க, இவ்வளவுதான் கூருனு பொண்ணுங்களாவது புரிஞ்சுகலாம் இல்லையா ?

இந்த கோரிக்கையை அகில உலக வாலிபர்கள் சார்ப்பாய் வைக்கிறேன் எல்லா பெண்ணகளிடத்தும்,  நாங்க‌ என்ன வச்சுட்டா வஞ்சன பண்றோம், புரிஞ்சுக்கோங்க‌
Title: Re: மாங்கனி - சோர்ந்தான் ஏறு
Post by: ஆதி on September 21, 2012, 02:25:10 PM
சோர்ந்தான் ஏறு


பனிக்காற்று போல்ப்பாவை பிணைந்தி ணைந்து
பருவநெஞ்சில் பக்குவமாய் படர்ந்து றைந்து
மணிக்கணக்கு தெரியாமல் மயங்கி ஆர்ந்து
மயிலிறகு போன்றுமேனி முழுதும் ஊர்ந்து
இனிக்காற்று நுழைந்துவிட இடமே இல்லை
என்பதுபோல் நெருங்கிடுவாள் என்று எண்ணி
மனக்கணக்கு போட்டுவந்த நினைப்ப னைத்தும்
மரத்தூளாய் பொடிந்ததனால் மறவன் சோர்ந்தான்

வெறுமையொன்று வேகமாக ஊடி நெஞ்சின்
விளிம்புவரை மீதமின்றி இருப்புக் கொள்ள
இறும்பாடை பூண்டிருக்கும் சேர வீரன்
வெறும்பானை போலானான் வஞ்சி சொன்ன
வெறுப்பான வார்த்தைகளும் நெஞ்சில் வந்து
நெருநெருக்க வெடித்திட்டான் அவ்வப் போழ்து
கறுத்துப்போ னமுகில்போல் முணுமு ணுத்தான்
கருத்துப்போ னால்முனகா தென்ன செய்வான் ?

திருவோடாய்த் தனைஏந்தி பாவை வீட்டுத்
தெருவோடு பொடிநடையாய் நடக்க லானான்
ஒருநிலையில் புத்திநிற்க வில்லை; எண்ணம்
ஒருநொடியும் மௌனமாக இல்லை; தாபம்
பெருமணலாய் அவனுள்ளே விரிய; தானே
சிறுகாசாய் அதில்தொலைத்து விட்டான்; போரில்
பெருயானை எலாம்வீழ்த்தும் வீரன் பாவம்
மனயானை அடக்கமுடி யாமல் தோற்றான்
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Global Angel on September 21, 2012, 03:09:31 PM
Quote
ஒருநொடியும் மௌனமாக இல்லை; தாபம்
பெருமணலாய் அவனுள்ளே விரிய; தானே
சிறுகாசாய் அதில்தொலைத்து விட்டான்; போரில்
பெருயானை எலாம்வீழ்த்தும் வீரன் பாவம்
மனயானை அடக்கமுடி யாமல் தோற்றான்

எந்த பெரிய வல்ல வீரனும் இந்த வியாதி வந்துவிடால் இப்டித்தான் போலும் ... ஹஹா .. அருமை ஆதி 
Title: Re: மாங்கனி - நெஞ்சம் தெளிந்தான் ஏறு
Post by: ஆதி on September 25, 2012, 03:48:00 AM
நெஞ்சம் தெளிந்தான் ஏறு

நிமிர்ந்துநடக் கும்சேரன்
நினைவுநோவ முதன்முதலில்
நிலைசாய்ந்த மரம்போல
தலைசாய்ந்து நடந்தான்..

சிம்மம் போன்ற வீரன்
விம்ம தயரானான்

கூர்வேல் கொண்டு
குற்றினாலும் வேலேயுடையும்
அம்மிப்போற் தின்மார்ப்பு அமைந்தவன்
குண்டூசி எறிந்தாலே
குலைந்திடும் அளவிற்கு
மனவலி குன்றியிருந்த போதில்

கூர்வேலோடு வந்தொருவன்
குனிந்து வணங்கி "தளபதி
தார்வேந்தன் தன்மனைக்கு
தங்களை அழைக்கின்றான்"
என்று தகவல் சொன்னான்

"இம்"மென்று சொன்னான் எனினும்
"உம்"மென்றே இருந்தான் ஏறு

அடர்ந்த மௌனம் உடைய
அதிரும் குரலால் சேவகன்
"அரசன் உம்மை
அழைக்கிறான்" என்றான்

ஆழ்ந்த உறக்கதில்
அரண்டு எழுந்தவன் போல்
எதிர் நின்றவனைப் பார்த்து
விதிர்விதிர்க்கும் இதழ்களால்
"வருகிறேனென சொல்" என்றான்

விடைபெற்றான் சேவகன்
உடைப்பட்ட நெஞ்சொடு
நடையிட்டான் தளபதி
அவனை கவனியாமல்..

கொடியிடையாள் வார்த்தை
இடிப்படையால் தன்னை
தாக்கியதில் தப்பில்லை
நோக்கத்தையும் உண்ட
ஏக்கத்தையும் சொல்ல
சென்றநேர முமிடமும்
நன்றில்லை என்பதனால்
நன்மனதின் எண்ணத்தையும்
நஞ்சென்று எண்ணிவிட்டள்..

தவநிலையே பூண்டாலும்
சரசத்துக் கேயழைக்கும்
அவலநிலை அவள்நிலை
துவன்ட‌மன துயரைதானே
துவட்டிக் கொண்டான்
சமாதானம் ஆனான்..

தொடாமல் பேசியிருந்தால்
சுடாமல் பேசியிருப்பாள்
கெடாமல் இருந்திருக்கும்
கௌரவமென்று காற்று
உலவும் சருகாக
புலம்பிக் கொண்டான்..

ஆறாத ரணம்தான்
ஆனாலும் அவளுகாய்
ஆற்றிக் கொண்டான்
அவள்தானே பேசினாலென்று
தேற்றிக் கொண்டான்

கொஞ்சம் தெளிந்ததும்
நெஞ்சம் இளகியது
அஞ்சுக நினைவால்
அயர்ச்சியை துடைத்தான்

வாமனை யென்ற
கோமகம் நினைவுவர‌
கோமனை நோக்கி
மாமறன் ஏகினான்..
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Anu on September 25, 2012, 12:18:20 PM
இப்டிதான் சமயம் அறியாமல் இந்த பசங்க பேசப்போய் ... திட்டு வாங்குறதே பொழப்ப போச்சு ... இனிக்கு நேற்று இல்ல அன்னிக்கும் இதுதான் வழக்கம் போல .. ஆதி தங்கை கவி கையாள்கை நெறியோடு அருமையாய் உள்ளது ... நிச்சயமாக இந்த காவியத்தை உங்கள் பெயரில் நூலாக வெளியிட்டால் என்ன
romba nalla iruku aadhi
en vendukolum idhu thaan aadhi :)
ippadivum kavithai ezhuda mudiyumaanu thonudhu..
kavithaiya ezhudaravanagluku  ookkuvipaagavum
padikiravangalukum nal anbalippagavum irukum..
en vaazthukkal :)
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: ஆதி on September 25, 2012, 12:35:57 PM
உங்களை போல நல்ல வாசிப்பனுபவம் உள்ளவரிடம் இருந்து கிடைத்த இந்த வார்த்தைகள் மிக பெரிய அங்கீகாரம்

இந்த கவிதைகள் என் கவிதை திறமையை செம்மை படுத்திக் கொள்ள கூராக்கி கொள்ள நான் செய்யும் முயற்சி

மரபுப்பாக்கள் எழுதி பார்த்து வார்த்தைகளை கையாளும் நுணுக்கங்களை கற்று கொண்டிருக்கிறேன்

எவ்வளவோ பெரிய ஜாம்பவாங்கள் இருக்கிறார்கள் அவர்கள் முன் நானெல்லாம் சிறு தூசு அக்கா
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Global Angel on September 25, 2012, 01:26:59 PM
Quote
ஆறாத ரணம்தான்
ஆனாலும் அவளுகாய்
ஆற்றிக் கொண்டான்
அவள்தானே பேசினாலென்று
தேற்றிக் கொண்டான்

இந்த பசங்களுக்கு ரோசமே வராதா .... எவ்ளோ திட்டினாலும் இபோ வரத்து செட் ஆனா வரும் .. ஹிஹி  அருமையான மனநிலை விளக்கம் ஆதி
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Gotham on September 25, 2012, 01:33:34 PM
Mananilai villakkam alla. ithu thannilai vilakkam. G A. :D
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Global Angel on September 25, 2012, 02:07:37 PM
ஒ அப்போ ஆதியும் காதலில் தொபுகடீரா  ;D ;D
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Gotham on September 25, 2012, 02:09:08 PM
எனக்கு எதுவும் தெரியாது..  :P
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Global Angel on September 25, 2012, 02:11:01 PM
கூட்டு களவாணிங்களா இருப்பாங்களோ மை லோர்ட் ::)
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: ஆதி on September 25, 2012, 02:12:28 PM
G A, Gotham,

என்னை வச்சு காமிடி கீமிடி பண்ணலையே
Title: Re: மாங்கனி - பாவம் ஏறு
Post by: Global Angel on September 25, 2012, 02:18:22 PM
கோல்மால் அசிஸ்டன்ட்  இதுதான்   G A கோதம் கு அர்த்தமா  ::) ::)
Title: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்
Post by: ஆதி on April 09, 2013, 02:15:18 PM
வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்

தாபமகன் போனபின்பு
கோபமயில் படுகையிலே
தூபபுகை போல்மெல்ல அமர்ந்தாள் - தனை
தூக்கத்தில் எறிந்துவிட நினைந்தாள்..

தலையணையில் தலைசாய்த்தாள் தளிர்மங்கை
உலையிட்ட இறும்பாய்ச் சிவந்தகண்கள்
இளைப்பாற மெல்லிமைப்போர்த் தினாளெனினும்
அலகழிக்கும் எண்ணங்கள் தேங்கனியை
உறங்கவிட வில்லைஉள்ளம் வெதும்பினாள்
கரமிட்டு தன்காதல் சொன்னாலும்
தரம்கெட்டு நடக்காத அம்மகனை
சுரம்கெட்ட வார்த்தைகளால் தூற்றினோமே
வருந்தமுற்றாள் கருத்தெல்லாம் அவனையள்ளி
இருத்திவிட்டாள் தந்தவறை எண்ணியெண்ணி
இறுக்கமுற்றாள் நினைவலையை அவந்திசையில்
திருத்திவிட்டாள் காதல்தீ கொளுத்தவிட்டாள்..

கடைப்பால் உடைப்பெடுத்த மடைப்போல் பொங்க
இடைப்பால் ஈர்ப்புண்டோர் மத்தியில் காம
தடைப்போட்டு காதல்நி னைப்புக்கு என்பால்
விடைக்கேட்டு வந்தவரின் நெஞ்சம்புண் ணாக
நப்பளித்து பேசிவிட்டே னேநொந்து கொண்டாள்
தப்பாய் நம்மிடம் நடந்தி ருந்தாலும்
இப்பால் அதனையெவர் பெரிதாக நினைப்பார்
குப்பைப்பூ தானேவென் றிழித்துரைத் திருப்பார்
ஆனால் அந்தமகன் அறத்தோடு நின்றார்
தானாய் ஊறும்பால் கிண்ணத்தை மண்ணில்
வீணாய் தள்ளிவிட்டேன் தேடிவந்த வாழ்வை
நானே தவறவிட்டேன் வெங்கனியாள் கண்கள்
தழும்பினாள் இனியென்னை காண்பாரோ என்று
புலம்பினாள் சம்மதம் சொன்னாலும் கொள்வாரோ
குழம்பினாள் எவ்வாறு அவர்முன்போய் நிற்பேன்
கலங்கினாள் வெதும்பினாளே வேதனைநெஞ் சோடு..
Title: Re: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்
Post by: Global Angel on April 09, 2013, 05:35:36 PM
இந்த பொம்புளைன்களே இப்டிதான் ... கொள்ளுங்க எசமான் கொள்ளுங்க :D :D   கொல்லுங்க ... அருமை ஆதி அவசரத்தில் இப்படிதான் பெண்கள் வாயை விடுவார்கள் அப்புறம் உக்காந்து பொலம்புறதே பொழப்பா இருக்கும் அதுவும் அழகான பொண்ணுங்கண்ணா கேட்கவே வேண்டாம் .
Title: Re: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்
Post by: suthar on November 19, 2015, 10:49:22 AM
Enna aachu aathikku neenda idaiveli inneram kaaviyam mudinjieukkum padichi mudichidalam nu vanthen. Mudivadayamal iruku thedi pudichituvaanga aathi ya yaarachum meethi thodarai mudikka sollunga
Title: Re: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்
Post by: JasHaa on November 15, 2018, 11:43:29 PM
ஆதி  அவர்களே 
மிக மிக அருமையான  பதிவு .ஒரு சரித்திர   நாவல் படித்த மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள்