Special Category > ஆன்மீகம் - Spiritual

கீதை காட்டும் பாதை

<< < (2/4) > >>

Global Angel:
உயர்ந்த செயலின் ரகசியம்

கீதை காட்டும் பாதை – 6                                                                                                                                                           



கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.

“செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று எண்ணாதே. செயல் புரிவதையும் தவிர்க்காதே.

தனஞ்செயா (அர்ஜுனனின் இன்னொரு பெயர்), பற்றின்றியும் யோகத்தில் உறுதியுடனும் வெற்றி தோல்விகளை சமமெனக் கருதியும் செயல் புரிவாயாக. யோகம் என்பது அத்தகைய சமத்துவ நிலையே.

தனஞ்செயா, செயல் பற்றற்ற செயலை விடத் தாழ்ந்தது. ஆகையால் பற்றற்ற நிலையையே தஞ்சமாகக் கொள். பலனைத் தங்களது நோக்கமாகக் கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது

பற்றற்ற ஞானிகள் செயலின் பலனைத் துறப்பதன் மூலம் பிறவியாகிய பந்தத்திலிருந்து விடுதலை பெற்று எல்லாத் துன்பங்களிலிருந்தும் கடந்த ஆனந்த நிலையை அடைகின்றனர்”

ஒரு செயலை செய்ய முற்படுவதே ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காகத் தானே, பலனைப் பற்றியே நினைக்காமல் செயல் புரிய ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே, இது முரண்பாடாகத் தோன்றுகிறதே என்ற சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இதில் முரண்பாடில்லை என்பதும் ஒரு சிறப்பான செயல் ரகசியத்தைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் என்பது விளங்கும்.

ஒவ்வொரு செயலும் விளைவிலேயே முடிகிறது. விளைவில்லாத செயல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால் செயலிலேயே விளைவும் மறைந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை. விதைத்தது அவரை என்றால் விளைவது துவரையாக முடியாது. எனவே அவரை விதைத்தவன் என்ன பயிர் விளையும் என்ற கவலையில் ஆழ்வது அர்த்தமற்றது.


ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மன ஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்க மாட்டா. உதாரணத்திற்கு சுமார் இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல் திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனது ஆற்றலும், அறிவுக்கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்த செயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவற விடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாக நிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல் செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது.

ஒரு செயலைச் செய்கையில் மற்ற அனைத்தையும் மறந்து அந்த செயலிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த செயல் பரிபூரணமாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கலைஞன் தன் கலையில் தன்னை மறந்து ஐக்கியமாகி விடுகையில் உருவாகும் படைப்புகள் காலத்தை வென்று நிலைத்து நின்று விடுகின்றன. படைக்கின்ற நேரத்தில் அவனுக்கு கிடைக்கக் கூடிய கைதட்டல்கள் பற்றிய எண்ணமோ, மற்றவர்கள் இதை எப்படி விமரிசிப்பார்கள் என்ற சந்தேகமோ அவனுக்கு ஏற்பட்டால் நிச்சயமாக அந்த படைப்பின் தரத்தை அது பாதிக்காமல் இருக்காது. அது ஒரு உன்னதப் படைப்பாக இருக்காது.


அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும், வேதங்களும், உபநிடதங்களும் காலத்தை வென்று நிலைத்து நிற்கக் காரணம் அவற்றை எல்லாம் படைத்தவர்கள் எந்த பாராட்டையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியது போல தங்கள் பணிகளைச் செய்தது தான். இவை எவற்றிலும் அதைப் படைத்தவர்கள் பெயர் இல்லை. எதிர்காலம் எங்கள் பெயரை நினைவு வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அஜந்தா ஓவியங்களை வரைந்த ஓவியர்களோ, எல்லோரா சிற்பங்களை வடித்த சிற்பிகளுக்கோ, வேத உபநிடதங்களைப் பாடிய முனிவர்களுக்கோ இருக்கவில்லை. அவர்கள் படைப்புகள் பரிபூரணமாக வந்திருக்கின்றன என்கிற ஆத்ம திருப்தி மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சிறிய செயலுக்கும் பெரிய விளம்பரம் தேடும் இன்றைய உலகில் அந்த மகத்தானவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமே!

அந்த அமரத்துவ படைப்புகளைப் படைப்பதில் அவர்கள் சிரமங்கள் எத்தனையோ பட்டிருக்கலாம். அத்தனை சிரமங்களும் அந்த படைப்புகள் முழுமையாக அழகுடன் முடிந்த போது அவர்களால் மறக்கப்பட்டு இருக்கும். எத்தனை கஷ்டப்பட்டோம் என்று அவர்கள் சோகக் கதைகளை அந்த படைப்புகளுடன் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

அஜந்தா ஓவியங்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. குதிரை லாட உருவில் அமைந்திருந்த 31 அஜந்தா குகைகளும் உள்ளே கும்மிருட்டு கொண்டவை. பெரிய பெரிய கண்ணாடிகள் மூலம் சூரிய வெளிச்சத்தை உள்ளனுப்பி அந்த வெளிச்சத்தில் இயற்கையாக உருவாக்கிய நிற மைகளால் புத்த பிக்குகள் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். தரையைத் தவிர சுவர்கள், கூரை எல்லாவற்றிலும் வியக்க வைக்கும் நுட்பத்துடன் வரைந்த அந்த ஓவியங்கள் ஒன்றிலும் கூட முன்பு குறிப்பிட்டது போல வரைந்தவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடவில்லை. (காலப் போக்கில் அந்த குகைகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து மறைந்து கிடந்த அந்த குகைகள் 1819 ஆம் ஆண்டு ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி வேட்டைக்கு வந்த இடத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் தான் அந்த அஜந்தா ஓவியங்களின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தன. பின் பார்க்கப் போன நம் மக்கள் அந்த ஓவியங்களுக்கு கீழ் தாங்கள் வந்து விட்டுப் போன தடயமாக தங்கள் பெயர்களை கிறுக்கி விட்டு வந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அந்த ஓவியங்களுக்கு இரண்டடி தள்ளியே நின்று தான் பார்க்கிறபடி தடுப்பு வைத்து இப்படி பெயர் எழுதும் ஆசாமிகளைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்).

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா விட்டாலும் தகுந்த காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த கவலையோ, பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான் பலனைக் குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி விட அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பற்றுடைய செயல் வெறும் செயலாக இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

ஒரு செயலைப் பிரமாதமாகச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ சிறிது குறைந்து போனால் கூட அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு நீங்கள் செய்யப் போகிற அடுத்த செயல்களையும் பாதிக்கும். பாராட்டு, புகழ் கிடைப்பதற்கேற்ற படி உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும். உங்கள் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நீங்கள் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும். எனவே தான் பலன் மீது அதீத அக்கறை வைப்பவர்கள் நிலை பரிதாபகரமானது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன் தானாக வரும் என்கிறது கீதை.


குரானில் ஒரு வாசகம் வருகிறது. “என்னுடைய ஊதியம் அல்லா ஒருவருடைய பொறுப்பேயாகும்” (குரான் 10 – 72). பலன் தருபவன் இறைவன். இறைவன் தக்க சமயத்தில் எல்லாவற்றிற்கும் பலனைத் தந்து கணக்கை சரி செய்யாமல் இருப்பதில்லை. பலன் கிடைக்காமல் ஏமாந்து விடுவோமோ என்கிற எண்ணம் எப்போதும் தேவையில்லை.

மேலும் வெளிப்படையான பார்வைக்குத் தெரிவதைப் போலவே செயலையும், விளைவையும் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. மகாதேவ தேசாய் கூறுவார்: “செயலையோ அதன் விளைவையோ வெளிப்படையான அறிகுறிகளை வைத்து முடிவுகட்டி விடலாகாது. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இம்மியளவும் பிசகாத இந்த அபூர்வத் தராசைக் கொண்டு நிருப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது”.

எனவே செய்ய வேண்டியதை முழு மனதோடு முறையாகச் செய்யுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. பலன் தரும் வேலை இறைவனைச் சார்ந்தது. அந்த வேலையை அவனிடமே விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பிறவிப் பெருங்கடலை எந்தக் கவலையும் இன்றி ஆனந்தமாகக் கடந்து செல்லலாம் என்கிறது கீதை.

(கர்ம யோகம் அத்தியாயம் வரும் போது இதைக் குறித்து மேலும் விளக்கமாகப் பார்ப்போம்.)

தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து சொன்ன 18 சுலோகங்கங்களில் கீதையின் முழுமுக்கிய சாராம்சத்தையே அடக்கி விடுகிறார். அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும் இனி பார்ப்போமா?

பாதை நீளும்....

Global Angel:
நிலைத்த அறிவுடையவன் யார்?


கீதை காட்டும் பாதை 7


வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லக் கேட்ட அர்ஜுனனிற்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும் இடம் எல்லாம் மறந்தே போய் விட்டது. உண்மையை முழுமையாக அறியும் ஆர்வத்தினால் தன்னை மறந்து போன அவன் இந்த வாழ்க்கைத் தத்துவங்களை எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கிற மனிதன்-ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த அறிவு உடையவன்)- எப்படி இருப்பான், எப்படி நடந்து கொள்வான், எப்படி வாழ்வான் என்றறிய ஆசைப்பட்டான். தத்ரூபமாக அப்படிப் பட்ட மனிதனை விவரிக்கும் படி ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை அடுத்த பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18 சுலோகங்களில் கீதையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம். மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆசிரமத்திலும், அவருடைய நெறிகளை முழுமையாகப் பின்பற்றிய பலர் வீடுகளிலும் இந்த 18 சுலோகங்களும் மாலை நேரத்துப் பிரார்த்தனையின் போது ஓதும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. தினமும் இந்த சுலோகங்களைப் படிப்பதோடு அவற்றின் பொருளை சிந்திக்கவும் செய்தால் அவை கண்டிப்பாக மனிதனை உயர்வழியில் நெறிப்படுத்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.

முதலில் நிலைத்த அறிவுடையவன் யார் என்று ஸ்ரீகிருஷ்ணர் விவரிக்கிறார்.

“பார்த்தா (அர்ஜுனனின் பல பெயர்களில் இதுவும் ஒன்று), ஒரு மனிதன் மனதில் எழும் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தன் ஆன்மாவிலேயே ஆனந்தம் அடைவானாயின் அவனே ஸ்திதப்ரக்ஞன் எனப்படுகிறான்

துக்கங்களைக் கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார் இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ, இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான அறிவுடையவன்.

எவனுக்கு எதிலும் பற்று இல்லையோ, தனக்கு நன்மைகள் ஏற்படுகையில் மகிழ்ச்சியோ, தீமை விளைகையில் கோபமோ இராமல் எவன் உள்ளானோ அவனது புத்தியே உறுதியானது.

ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போல் ஒருவன் தனது புலன்களை வெளிப் பொருள்களில் இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான நிலையை அடைகிறது.

ஒரு மனிதன் புலன்களைப் பட்டினி போடுகையில் புலன்களுக்கான சாதனங்கள் அவனிடமிருந்து விலகி விடுகின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆசை மறைந்து விடுவதில்லை. ஆனால் பரம்பொருளைக் கண்டவுடன் அந்த ஆசையும் மறைந்து விடுகிறது.

கௌந்தேயா (இதுவும் அர்ஜுனன் பெயர்), விவேகம் உள்ளவன் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட அடங்காப் பிடாரியான புலன்கள் பலாத்காரமாக மனதைத் தடுமாறச் செய்து விடுகின்றன.

அவற்றை எல்லாம் நன்றாக அடக்கி யோகத்தில் அமர்ந்தவனாக என்னையே அடைக்கலமாகக் கொண்டு புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ அவனது அறிவே நிலையானது”


இந்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரக்ஞனின் மூன்று முக்கிய குணாதிசயங்களை விவரிக்கிறார்.

1) ஆசைகளைத் துறத்தல்
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்


ஆசைகளைத் துறத்தல்:

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர். வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில் இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.

வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்று ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம். ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம். சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும் ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறு உருவாகப் போவதில்லை.

கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது. அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும், தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது. மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்த சக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழிய அதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)

ஆசைகளின் இயல்பே பூர்த்தியாகாத நிலை தான் என்கிறார் திருவள்ளுவர். அதனால் ஆசையையே ஒழித்தால் தான் நிலைத்த சந்தோஷம் என்கிறார். இதே கருத்தைத் தான் கீதையிலும் பார்க்கிறோம்.


2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்:

இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த நாணயத்தை நீங்கள் எடுத்தீர்களானால் இரண்டு பக்கங்களையும் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் இந்த நாணயத்தை எடுத்துக் கொள்வதையே தவிருங்கள்.

இந்த தத்துவத்தை கம்ப ராமாயணத்திலும் ஓரிடத்தில் ராமன் மூலமாகக் கம்பனும் சொல்கிறான். 14 வருடங்கள் வன வாசம் ராமன் செல்கின்ற போது மந்திரி சுமந்திரன் மிகுந்த வருத்தம் அடைகிறான். அவனைத் தேற்றி ராமன் சொல்கிறான்.

“இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?”

(இன்பம் வந்த போது இனியதாக இருக்குமானால் துன்பம் வரும் போது மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?)

3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்:

ஐம்புலன்களும் நல்ல சேவகர்கள். ஆனால் மோசமான எஜமானர்கள். சேவகர்களாக அவை இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி இருக்கா விட்டால் தானாக அவை எஜமானர்களாக மாறி உங்களை சேவகனாக ஆக்கி விடும். மோசமான ஒரு எஜமானிடம் சேவகனாக இருப்பதே பெரும்பாடு. இதில் பல எஜமானர்களிடம் ஒரு சேவகன் அகப்பட்டுக் கொண்டால் அந்த பரிதாப நிலையை விளக்க வேண்டியதில்லை.

புலன்களைப் பயன்படும் வேலையில் மட்டும் பயன்படுத்தி பின் அடக்கி வைக்க வேண்டும். இல்லா விட்டால் அவை தான் தோன்றித் தனமாக நடந்து கொண்டு தேவையில்லாத பல தகவல்களை நம்மிடம் சொல்லி, நம்மை நம்ப வைத்து, அதன் விருப்பப்படி எல்லாம் செயல்பட வைத்து நம்மை சிக்கலில் ஆழ்த்தி விடும். எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆமை தன் உறுப்புகளை எப்படி தேவைப்படும் போது உள்ளடக்கிக் கொள்கிறதோ அப்படி நம் புலன்களை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உபதேசிக்கிறார்.

இந்த ஆமை உதாரணத்தை திருவள்ளுவரும் சொல்கிறார்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”

ஐம்புலன்களையும் ஆமை போல் அடக்கியாளும் வல்லமை ஒரு பிறவியில் பெற்றால் கூட அது ஏழு பிறவிகளிலும் அவனைக் காக்கும் என்கிறார் அவர்.

இவ்வாறெல்லாம் செய்து பரம்பொருளை அடைக்கலம் அடைந்தால் அந்த அறிவு சிரஞ்சீவியாய் சாசுவதமாக ஒருவனிடம் நிலைத்து விடுகிறது என்கிறது கீதை. பின் எக்காலத்திலும் ஒருவன் பின் நோக்கவோ வருத்தப்படவோ அவசியம் இல்லாமல் போகிறது.

இனி அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் ஆசை அழிவுக்கு எப்படிக் காரணமாக இருக்கிறது என்பதை படிப்படியாக கணிதக் கோட்பாடு போல் விளக்க ஆரம்பிக்கிறார்.

பாதை நீளும் .....

Global Angel:
ஆசையிலிருந்து அழிவு வரை ...

கீதை காட்டும் பாதை 8

                                                               

நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து விடுகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.

”புலன்களுக்கான சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அவற்றில் பற்றுதல் எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது; ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது. மனமயக்கத்தால் மறதி ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி பாழானால் மனிதன் அடியோடு அழிகிறான்”

எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உயர்விற்கும் அழிவிற்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே. புலன்கள் வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு சக்தி இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன் வழிப் பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது இயற்கை. அவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை அடைய ஆசை பிறக்கிறது. இந்த தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று விடுகிறது.

விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான். தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான்.

எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

மலை மீதிருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீழே வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில் இருந்து தள்ளி விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம். தள்ளி விட்ட பின் கல்லைத் தடுக்க முயற்சிப்பது வீண். கல் தன் பயணத்தை முடித்தே நிற்கும். எனவே கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள் எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீது கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கிறது.

புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே மனிதனின் துன்பங்களிற்குக் காரணம் என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே பூர்த்தியடையாத, திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே சந்திக்கிறான் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் விளக்குகள் எரியும் போது திருடர்கள் உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத இருட்டு வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம் கூறுகிறார். இங்கு விழிப்புணர்வு தான் விளக்காக உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக சித்திரிக்கப்படுகின்றன. வீட்டு எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள் நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

விழிப்புணர்வு என்பது நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக இருக்க முடியும். அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க ஆரம்பிக்கும் முதல் கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள் பலப்படும் முன்னர் அவற்றை அழித்து விடுகின்றான். களைகளை முளை விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை வேர்விட்டு பலமடைந்த பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான் எண்ணங்கள் தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார். “புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவனது அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறது.” இது மிக அழகான உதாரணம். புயல்காற்றில் சிக்கிய படகு எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல ஆசைவழி சென்ற பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறான்.


கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும் கூறுகின்றார். “சுக்கானில்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன”

இந்த படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை படகும், கப்பலும். அந்தப் பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப் பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அப்படி இருக்கையில் ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம் பயணத்தின் வழி மாறி அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். ‘ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே’ என்று கவிஞர் பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி செல்லாமல் சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள ஆரம்பித்த அந்த இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத காரியமாகி விடும்.

சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக் கூறுகிறார். “மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.
இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்”.

ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம் ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை உதறி விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும் போது, தூண்டிலை வீசும் போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன் மூலமாகவே ஒருவன் துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகக் கூறுகிறார்.

சில சமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்திற்கும், அழிவிற்கும் மூலகாரணமாகி விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப் பொன்மானைக் கண்டு ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின் காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும் துக்கத்தில் ஆழ நேரிட்டது. சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா வலிமைகளையும் போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.

மேலும் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து, இனி போதும் என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக இன்பங்களை பல்லாண்டுகள் சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல காலம் சுகங்களை அனுபவித்தும் நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை இல்லை என்பதை இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான யயாதி.

எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும் சக்தியை விட அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து எல்லைக்கு வந்த போது அங்கிருந்த துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும், அமைதியையும், சாந்தியையும் கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது. கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து இமயம் வரை கடந்து வந்த இடங்களையெல்லாம் வென்ற மாவீரன். அவன் வாழ்நாள் நீடித்திருந்தால் உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த துறவிகளிடம் கண்ட போது அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு உண்மையான வெற்றி எது என்று புரிந்திருக்கும். இந்த உண்மையான வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும் நிலைத்த அறிவுடையவனாலேயே பெற முடியும்.

பாதை நீளும்.....

Global Angel:

நேரெதிர் கோணங்கள்

கீதை காட்டும் பாதை 9

                                                                     

நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.

“சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்”

நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.

சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.

மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்திற்கான தூண்டில்கள் என்றும், என்னேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.

சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது. அகத்திற்கும், புறத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.


ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான். அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்திற்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.

ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.

“நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை.அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை”

இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். “ஆன்மா மாகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை.”

நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிட்ம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.

சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.

அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான். மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.

இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்.

பாதை நீளும்.....

Global Angel:
செயலில் பாவனை மிக முக்கியம்!


கீதை காட்டும் பாதை 10

                                                                               

ஸ்ரீகிருஷ்ணர் இது வரையில் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு அர்ஜுனனிற்கு அவர் பற்றற்ற நிலையையே உண்மையான அறிவு என்று சொல்வது புரிந்தது. உடனே அவன் ”செயலைக் காட்டிலும் அந்த அறிவே சிறந்தது என்றால் இந்தக் கொடுமையான காரியத்தில் என்னை ஏன் புகுத்துகிறாய்? புதிராகப் பேசி என்னைக் குழப்பாமல் எதைச் செய்தால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ அந்த ஒரு வழியை மாத்திரம் எனக்குச் சொல்” என்று பொறுமையிழந்து சொல்கிறான்.

வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளுக்கு எளிமையான ஓரிரு வார்த்தைகளில் பதில் கிடைத்தால் தேவலை என்று தோன்றுவது மனிதனிற்கு இயல்பே. அர்ஜுனனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஓரிரு வார்த்தைகள் பதிலில் வாழ்க்கையின் ரகசியங்கள் முழுமையாக விளங்கி விடுவதில்லை. எனவே ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் மூன்றாம் அத்தியாயமான கர்மயோகத்தில் அர்ஜுனன் கேள்விக்கு விரிவான பதிலை சொல்ல ஆரம்பிக்கிறார்.

“பாவமற்ற அர்ஜுனா! இந்த உலகில் அடைய வேண்டிய இரண்டு நிலைகள் பற்றி உனக்கு கூறியிருக்கிறேன். ஒன்று சாங்கியர்களின் ஞான யோக நிலை, மற்றொன்று யோகிகளின் கர்மயோக நிலை.

ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைவதும் இல்லை. இன்னொருவன் துறவியாவதால் ஈடேறுவதுமில்லை.

எந்த மனிதனும் ஒரு கணம் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கையில் உள்ள குணமே மனிதனைத் தொழில் புரிய வைக்கின்றது”

ஒரு மனிதனால் செயலற்று இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே உண்மையான பதில். சும்மா இருப்பது சுகம் என்று தோன்றினாலும் சும்மா இருப்பது சுலபமில்லை. அதை முயன்று பார்த்தவர்களுக்குப் புரியும். வேலை எதுவும் இல்லை என்றால் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, ஏதாவது வேடிக்கை பார்ப்பது என்று எதிலாவது ஈடுபடுவார்கள். அதையும் மீறி சும்மா இருக்க நேர்ந்தால் கடைசியில் காலையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அமைதியாக அமர்ந்திருப்பது அவர்களுக்கு இயலாத காரியமே.

இது புறத்தில் நடக்கும் வேலைகள். மனிதனின் அகத்தில் நடக்கும் வேலைகளுக்கோ ஓய்வே இல்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்லும் நேரம் தவிர மனதின் அலைதலுக்கு ஒரு அளவே இல்லை. ‘கள் குடித்த குரங்கிற்கு தேளும் கடித்து பேயும் பிடித்துக் கொண்ட நிலை’யை மனதின் நிலையாக சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். குரங்கின் இயல்பே ஒரு கணம் சும்மா இருக்க முடியாதது. அது கள்ளும் குடித்து, அதைத் தேளும் கடித்து, பேயும் பிடித்தால் அதை விட ஒரு அதிக செயல்களும், குழப்பமும், ஆர்ப்பாட்டமும் உள்ள ஒரு நிலையை ஒருவரால் சித்தரித்து விட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலும் மனித மனம் இருக்கிறது. வெளியே சும்மா இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளே உள்ள நிலைமை இப்படியாக இருக்கையில் செயலற்ற நிலை என்பது பரிபூரணமாக அமைவது கோடிகளில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.

உலகில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் மனிதனால் சும்மா இருக்க முடியாததாலேயே ஏற்படுகின்றன. செய்ய உருப்படியான வேலைகள் இல்லாதவர்களே சும்மா இருக்க முடியாமல் அடுத்தவர்கள் விஷயங்களில் அனாவசியமாய் தலையிட்டும், செய்யக் கூடாதவற்றை செய்தும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு அவரவர் இருந்தார்களேயானால் எத்தனையோ அனாவசியப் பிரச்னைகளும், குழப்பங்களும் குறையும்.

எனவே ஞான மார்க்கம் சிறந்தது என்றாலும் அந்த மார்க்கத்தில் செல்வது அவ்வளவு சுலபமில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். ஆரம்பத்தில் துறவியாகப் போவது மேல் என்ற முடிவுக்கு அர்ஜுனன் வந்ததல்லவா. அது சொன்ன அளவிற்கு கடைபிடிப்பது சுலபமில்லை என்று புரிய வைக்கிறார்.

மனிதனின் இயற்கையாக உள்ள குணங்கள் பண்பட்ட அறிவால் மாறினால் ஒழிய அவை தன்னிஷ்டப்படி அவனை ஆட்டிப்படைக்கவே செய்யும். வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் எந்த உண்மையான மாற்றமும் ஒருவரிடத்தில் உண்டாகி விடப்போவதில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: ”கர்மேந்திரியங்களை அடக்கும் ஒருவன் புலன்களுக்கான சாதனங்களை மனதில் சிந்தித்த வண்ணம் இருப்பானாயின் அத்தகைய மூடனை ஒரு மோசக்காரன் என்றே கூற வேண்டும்”.

போலித் துறவிகள் இன்றைய சமூகத்தில் மலிய இதுவே காரணம். தோற்றங்களை மாற்றத் தெரிந்த அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளையும், எண்ணப்போக்கையும் மாற்றத் தெரியவில்லை என்பதே உண்மை. அவர்களில் சிலரது ஆரம்ப நோக்கம் உயர்வாகவே இருந்திருக்கலாம். ஆனால் அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே எண்ணங்களும் வாழ்க்கை முறையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தெய்வீக நிலையை அடைய முடியும். இல்லா விட்டால் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களாகவே இருந்து விட நேரிடும். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை கடுமையாக மூடர்கள், என்றும் மோசக்காரர்கள் என்றும் வர்ணிக்கிறார்.

இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்.

“ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா

பேதையின் பேதையார் இல்.”

உயர்ந்த புனித நூல்களைப் படித்துணர்ந்தும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் அதன்படி தான் அடங்கி நடக்காமல் இருப்பவனைப் போன்ற முட்டாள்களில் மோசமான முட்டாள் யாரும் இருக்க முடியாது என்கிறார் வள்ளுவர். அறியாதவன் தறிகெட்டு நடப்பதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் அறிந்தவன் அப்படி நடந்தால் அறிவு இருந்தும் அது அவனுக்குப் பயன்படாமல் போவது பரிதாபமே அல்லவா?

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். ”உனக்கு இடப்பட்டுள்ள கடமையை நீ செய். செயலற்று இருப்பதை விடச் செயல் மேலானது. செயலற்றிருந்தால் உடம்பே உனக்கு பாரமாய் போய் விடும்.

பற்றின்றி செய்யப்படும் தொழில்கள் தவிர மற்ற தொழில்கள் எல்லாம் மனிதனுக்கு விலங்கு. ஆதலால் அர்ஜுனா, பற்றை விட்டு விட்டு எத்தொழிலையும் ஈஸ்வர கடமை எனக் கருதிச் செய்”

மொத்தத்தில் செயலற்று இருப்பது சுலபமல்ல, மனிதனின் இயல்பான குணங்கள் அவனைப் பலவிதங்களில் செயல்படத் தூண்டும் என்பதால் மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வது மேன்மையானது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கடமைகளைச் செய்யாதவன் சும்மா இருந்து விடப் போவதில்லை. தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவான், வீணாய் போவான் என்பதால் கடமைகளையே செய்து கடைத்தேறுவது புத்திசாலித்தனம் என்கிறது கீதை. அதையும் பற்றில்லாமல் இறைவன் விதித்த கடமை என்ற உணர்வுடன் சிறப்பாகச் செய்யவும் கீதை வலியுறுத்துகிறது.

முன்பே விளக்கியது போல பற்றில்லாமல் செய்வது என்றால் வேண்டா வெறுப்பாக செயல்புரிவதல்ல. மாறாக விளைவுகள் குறித்த கவலையோ, பயமோ, அதீத பற்றோ இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் செயல் புரிவதன் நோக்கம் முக்கியம் என்கிற செய்தியை இங்கே கூடுதலாகச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எந்த ஒரு செயலும் எந்த பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு அமைகிறது. சாதாரண மனிதன் சுயநலத்தோடு ஒரு செயலைச் செய்வதால் அதன் மதிப்பு அற்பமாகவே இருக்கிறது. கர்மயோகி சுயநலமின்றி செயல்புரிவதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகி விடுகிறது. டால்ஸ்டாய் கூறுகிறார். “மக்கள் ஏசுநாதரது தியாகத்தை வெகுவாகப் புகழ்கிறார்கள். ஆனால் உலக வாழ்வில் உள்ள இந்த மக்கள் தினந்தோறும் தம் ரத்தம் சுண்ட எவ்வளவு ஓடியாடி உழைக்கிறார்கள்! இரண்டு கழுதைச் சுமையை முதுகிலே தாங்கிக் கொண்டு வளைய வரும் இந்த மக்களுக்கு ஏசுநாதரை விட எவ்வளவு அதிகக் கஷ்டமும் அவமானமும் ஏற்படுகிறது! இதில் பாதியளவாவது இறைவனுக்காகப் பாடுபடுவார்களேயானால் உண்மையில் இவர்கள் ஏசுவையும் மிஞ்சி விடுவார்களே!”.

எனவே எதையும் எவ்வளவு பாடுபட்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பாவனையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வினோபா அழகாகக் கூறுகிறார். “கர்மத்தை ரூபாய் நோட்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். பாவனை என்ற முத்திரைக்குத் தான் மதிப்பே அன்றி செயல் என்ற காகிதத்திற்கு மதிப்பில்லை”

ஒரு கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். மூன்று பேர் ஒரு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழிப்போக்கன் மூன்று பேரிடமும் என்ன செய்கிறீர்கள் என்று தனித்தனியே கேட்டான். ஒருவன் சொன்னான். “கல்லுடைத்துக் கொண்டிருக்கிறேன்”. இரண்டாமவன் சொன்னான். “வயிற்றுப் பிழைப்புக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்”. மூன்றாமவன் சொன்னான். “கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்”. மூவர் செய்வதும் ஒரே வேலை என்றாலும் பாவனைகள் இங்கு வேறு வேறாகத் தான் இருக்கின்றன. மூவருக்குமே கூலி கண்டிப்பாகக் கிடைக்கத் தான் போகிறது என்றாலும் ஒவ்வொருவரும் அந்த வேலையால் அடைகிற நிறைவு ஒரே போல இருக்கப் போவதில்லை அல்லவா?

பாவனை மேன்மையாக இருந்தால் மட்டுமே சிறிய செயலோ, பெரிய செயலோ அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் நிறைவும் உயர்வாக இருக்கும்.

ஒவ்வொரு கடமையையும் ’இது இறைவன் எனக்கு விதித்தது. இதை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்ற பாவனையுடன் செய்து பாருங்கள். வாழ்க்கையே தெய்வீகமாக மாறி விடும்.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version