Author Topic: பொது இடங்களில் பின்பற்ற தங்க விதிகள் பத்து  (Read 1579 times)

Offline RemO

நாம் ஒவ்வொருவரும் விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் பல சந்தர்ப்பங்களில் தனியாகவும் குடும்பத்தினருடனும் வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டி வரலாம். அன்றாடம் அலுவல் காரணமாகவும் பஸ், ரயில் போன்ற பொது வாகனங்களிலும் செல்ல நேரிடலாம். அப்பொழுது நாம் பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாட்டு விதி முறைகளை அறிந்து கொள்வோம்.

1. ஒவ்வொருவரும் வீட்டைவிட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போது பொது இடங்களில், பஸ், ரயில் போன்ற பயணங்களில் வியர்வையினால் நாற்றம் ஏற்பட்டு சக பயணிகள் முகம் சுழிக்கலாம். குறிப்பாக வெயில் காலங்களில் நின்றபடியே பயணம் செய்ய நேரும்பொழுது அருகிலிருப்பவர்களுக்கு அருவருப்பையும் தரலாம்.

இத்தருணங்களில் துர்நாற்றத்தைப் போக்கக் கூடிய வாசனைத் திரவியங்களை (Deodorant liquid) வீட்டிலிருந்து கிளம்பும்போதே அக்குள் பகுதியிலும், ஆடையின் மீதும் தெளித்துக் கொள்ளலாம். கடைகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. முக்கியமாக, பேசும்பொழுது வாய் துர்நாற்றத்தைப் போக்க Biotene, Listerine போன்ற வாய் கொப்பளிக்கும் மருந்தை உபயோகித்து பிறரின் முகச்சுழிப்பைத் தவிர்க்கலாம். 

2. ரயில் பயணங்களின்போது பிறருக்கு அசூயை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட வேண்டாம். பிறர் அமரும், உறங்கும் இடங்களில் சாப்பிட்டு மீந்த உணவுகளையும், தண்ணீர், காப்பி போன்றவற்றையும் சிந்தி சக பயணிகளுக்கு சிரமம் தரக் கூடாது. பொது இடங்களில் போதைப் பொருட்களை உபயோகிக்காமலும், மதுபானங்களை அருந்தாமலும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

3. பஸ், ரயில் பயணங்களின்போது இரண்டு, மூன்று பேர் அமரும் இருக்கைகளில் ஜன்னல் ஓர இருக்கைகளைக் காலியாக விட்டு அமரக் கூடாது. ஜன்னல் பக்கம் நகர்ந்து அமர்ந்தால் அடுத்து வரும் முதியோர்களும், கர்ப்பிணிப் பெண்களும் சிரமமின்றி உட்கார ஏதுவாயிருக்கும்.

4. பயணங்களின்போது கைபேசியில் சப்தமாகப் பேசுவது பிறருக்கு இடைஞ்சலாகயிருக்கும். கைபேசியில் சப்தமாகப் பேசி சகபயணிகள் ஆட்சேபித்தால் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள்.  ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு முக்கியமான காரணம் கைபேசியில் பொது இடங்களில் உரக்கப் பேசுவதே எனப்படுகிறது.

5. உங்கள் கைகளில் நகம் வெட்டுவது, தலை முடியை சீவுவது, வாய் கொப்பளிப்பது, எச்சில் துப்புவது, பழம், கடலைத் தோல்களைக் கீழே போடுவது போன்ற செயல்கள் பொது இடங்களில் அருவருப்புக்கும், ஆட்சேபத்துக்கும் உரிய செயலாகும்.     

6. சாதாரணமாக தானியங்கி கதவுகள் உள்ள ரயில், பஸ், லிப்ட் போன்ற இடங்களில் பிறருக்கு உதவுகிறேன் என்று தேவையற்ற  சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தின்றி உதவலாம்.

7. பஸ், ரயிலில் பயணிகள் ஏறி இறங்கும் வழிகளில் அதை அடைத்துக் கொண்டு நிற்கவோ, அமரவோ கூடாது. வழியில் இருக்க நேர்ந்தால், பிற பயணிகள் வரும்பொழுது அங்கிருந்து நகர்ந்து அவர்களுக்கு வழி விடவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணச்சீட்டு வாங்குமிடங்களில், பஸ், ரயிலில் ஏறுமிடங்களில், வணிக வளாகங்களில், Rest room என்று சொல்லக்கூடிய கழிப்பிடங்களில் கூட 'Are you in the queue?' என்று கேட்டபடி மிகவும் கட்டுப்பாடாகவே செயல்படுவார்கள்.   

8. பொது இடங்களில் பிறர்க்கு இடைஞ்சல் தரும் வகையில் உரக்கப் பாடவோ, ஒலி எழுப்பவோ கூடாது. அரட்டை அடிக்காமலும், கூச்சலிடாமலும் அமைதியாகப் பயணிக்க வேண்டும். முதியோர்கள், பெண்களிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

9. இருமல், தும்மல் வந்தால் பிறர்க்கு நோய் பரவாமல் இருக்க வாயைக் கைகளால் அல்லது கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும். வேறு ஏதாவது உடல்நிலைக் கோளாறு அல்லது சிரமம் இருந்தால், சற்று நேரம் பொறுத்து பிறர்க்கு தொல்லை தராத வகையில் பயணம் செய்யவேண்டும். பொது இடங்களில் புகை பிடிப்பதால் தங்களுக்கு மட்டுமின்றி, பிறர்க்கும் புகையை சுவாசிப்பதால் ( Passive smoking)  உடல்நலம் கெட வாய்ப்புண்டு. எனவே பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது ஆட்சேபனைக்குரியது.

10. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக பயணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால், ஆரவாரமின்றி அமைதியாகவும், உடன் பயணிப்பவர்களுக்கு இடையூறு இன்றியும் பயணிப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உங்கள் பயணம் இனிதாகுக.

- டாக்டர்.வ.க.கன்னியப்பன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
hi daakdar kanniyappan nalama..... nalla thagaval koduthikenga daakdoor thanksu :)
                    

Offline RemO

antha dr enga irukanu than theduren