Author Topic: மூனாவது வண்ணத்து மேகம்..  (Read 701 times)

Offline sasikumarkpm

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • அதான் personal ஆச்சே...
மூனாவது வண்ணத்து மேகம்..
« on: February 01, 2016, 11:04:41 AM »
டாங்..டாங்..டாங்...டாங்..
எட்டாம் பெல் அடிச்சது தான் லேட்டு.. அத்தன பயலுவலும் செவத்த சேவல் சண்டைக்கு போறாப்ல புழுதிய கெளப்பிட்டு ஓட ஆரம்பிச்சுட்டானுவ..
நானும் மகேசும் மட்டும், ஸ்கூலுக்கு வடவண்டைல இருந்த சின்ன ரூம்புக்கு போனோம்..
மகேசு என் பிரண்டு.. ரெண்டாப்புல இருந்தே.. இப்போ நாங்க நாலாப்பு..
நான் ஓடி போயி அங்க குப்புற கெடந்த பழய பெவிகால் டப்பாக்குள்ள புடிச்சு வச்சு இருந்த தும்பிய எடுத்தேன்.. புஸ்தக பைல இருந்து நூல பல்லால கடிச்சி உருவி ஒரு பக்கம் மரக்குச்சி கட்டி மகேசு அந்த நுலை தும்பி வால்ல கட்டி விட்டான்..
குச்சி கட்னதால சீரா பறக்க முடியாம தும்பி அவன் ஒசரதுக்கு பறந்துச்சு.. ஒரே சந்தோசம் ரெண்டு பேத்துக்கும் ஏதோ எரோப்ளேன் ஒட விட்ட கணக்கா.. வீதி முழுக்க அத பறக்க வச்சுகிட்டே போனோம்..
சந்து தெரு முடிஞ்சதும் மொனைல மகேசு வூடு.. வூட்டு வெளிய "உங்கள் ஓட்டு சாவி சின்னத்துக்கேனு" இருக்கும்.. அதால சாவி வூட்டு மகேசு.. சாவி வூட்டு மகேசுனு பசங்க கேலி பெசுவானுவ.. நாஞ்சொல்ல மாட்டேன், மக்கா, என் வீட்டு செவத்துல பல்பு இல்ல வரஞ்சு இருக்கனுவ.. பல்பு வூட்டு கோவாலு.. பல்பு வூட்டு கோவாலு.. உள்ளார சொல்லி பாத்தா எனக்கே கோவமா பொரண்டு வரும்..
லேய், ஒரு ராவுக்கு எனக்குத் தா..லே. நாளைக்கே திருப்பி தந்துடுரேன்.. மகேசு கிட்ட தும்பிய கேட்டேன்..
போலே நாந்தான் புடிச்சேன்.. என்னோடது தும்பி.. செவப்பு தும்பி கெடக்குறதே கஸ்டம்.. வெரட்டி புடிக்குறதுக்குள்ள டவுசர் கிளிஞ்சது ஒனக்கு தெரியுமா.?. சொல்லிட்டு அவன் பாட்டுக்கு வீட்டுகுள்ளார போய்ட்டான்..
சாவி வூட்டு மகேசு.. மனசுகுள்ள சத்தமா ஒருமொறச் சொல்லிட்டு நானும் அடுத்த தெருவுல இருக்க என் வூட்டுக்கு போனேன்..
ஆச்சி மட்டும் தா வூட்டுல இருக்கும் வழக்கமா, அன்னைக்குனு பாத்து என் ஐயாவும் இருந்தாக.. ஐயா வந்தாலெ எம்பாடு கோண்டாட்டந்தே.. புது சட்ட தெய்க்க மல்லுத்துணியோ.. சீனிப்பனியாரமோ.. கோலி குண்டோ.. எதனாச்சும் வாங்கி வருவாரு.. ஏதும் இல்லாப்டி புதுசினிமாக்கு கூட்டி போவாரு.. அங்கன வச்சு கோனு ஐசோ... பொரிச்ச சோளமோ சமாச்சுடலாம்.. வக வகயா கனவோட ஒட்டமா ஒடி ஐயா மடில ஒக்காந்தேன்..
மல்லுதுதுணி மேல வச்சுருந்த ஆசையோ, இல்ல சீனிப்பனியாரதோட நெனப்போ.. பொறக்கட பக்கமா பசங்க பாண்டி வெளயாடுற சத்தமோ.. என்னோட பிராயமோ.. என்னமோ ஒன்னு என்னைக்கும் என்னய தடவி குடுக்குற என் ஐயா கை அன்னைக்கு கெணத்துல முங்குன கல்லாட்டம் கெடந்தத கவனிக்க விடல..வெளியாற வெளாட்டுச் சந்தடி பனமட்டைல பெஞ்ச மழ போல சட சடனு எம்மனச புடிச்சுகிட தட தடனு ஓடிட்டேன்..
ஆடி ஓஞ்ச போறவு வூட்டுக்கு போகுற நேரத்துல ஐயாவ அங்கன காணல.. ஆச்சி கேப்ப களிய கிண்டியிருந்துச்சு.. ஏஏச்சி.. ஐயா ஏதுங்கொண்டு வரல எனக்கு? கிண்டுன கேப்பய கிண்டிகிட்டே கேட்டேன்.. நெதங்கொண்டு வராதனா கேக்குறதில்ல, இப்ப.. சொகங்கண்ட பூனயா சொக்கி சொக்கி கேக்குறான் சீமத்தொற.. வூடு அடமானதுல கெடக்கு.. அடைக்க வழிய காங்கல.. வட்டி கட்ட வாங்குன கடனுகெல்லாம் இன்னைகு வட்டி கட்ட வேண்டி கெடக்கு,.. கரிசனஞ்சொல்ல நாதி இல்ல.. சொம்மாத்திண்டுட்டு ஒறங்குவீறா, மவராசா..
ஆச்சி அப்டிதேன்.. மொனகிட்டே கெடக்கும்.. ஆச்சி பொலம்புறது என்னனுகூட வெளங்கல.. நாந்திண்னைல போயி சாஞ்சிடேன்.. முந்தின டிரிப்பு வந்த போதுங்கூட ஐயா எதுங்கொண்டாரல.. ஆன மறுநா புதுச்சினிமா கூட்டி போனாரு.. என்ன என்னமோ தினுசான நெனப்புல ஐயா வரதுக்குள்ள திண்ணைலயே ஒரங்கிட்டேன்..
ராவைக்கு எனக்கு ஒன்னுக்கு முட்டிகிடுச்சு.. வழக்கத்துக்கு அடக்கிட்டு பொரண்டுப்பேன் வெடியர வரைக்கும்.. வீட்டு செவத்துல மட்டுந்தே பல்பு கெடக்கும். வூட்டுக்குளார கெடக்க பல்பு மூனு பொங்கலுக்கு முன்னாடி எரிஞ்சதுதாங்கடசி.. இன்னும் ரெண்டு போங்கலு கழிச்சித்தா எரியும்னு ஐயா சொல்லிருந்தாரு, ஏன்னு புரியல.. ராவுல ஆச்சிக்கு கண்ணு வெளங்காது.. தொனைக்கு வராலாகாது.. இன்னைக்கு தேவல..ஐயனிருக்காப்ல..
முழிச்சு பாக்கைல ஆச்சியும் ஐயாவுமா பேசி கெடகாங்க.. நானு ஐயா, தோட்டம்போவனும்.. கூடவாங்கனு கேக்கேன்.. ஆச்சி எதோ சொல்லயில.. மத்தியில ஐயா, கெளவி புள்ள இருக்கான்,, சொம்மா இருன்னுட்டு.. என்னைய அள்ளி பொறக்கடை பக்கங்கொண்டு போனாரு.. ஐயா எங்கிட்ட எல இன்னுமா அந்த நாயி அங்கன கெடக்குன்னு கேட்டதயும் மீறி, “அவனையும் தொழிலுக்கு கூட்டி போன்னா… கேக்குறதில்ல.. ராச வூட்டு மவனவன்.. பொத்தி வளக்கானாம்.. நாஞ்சொல்லல.. ஆன காலைல கடங்காரன் கேப்பானே.. என்ன ராச பண்ண போற? ஆச்சி கொரலு கூர வழிய தொரத்தி ஓஞ்சது.. “
அந்த நாயி காணாபோச்சயா. ஆன கருப்பா ஒரு நாயி கெடக்கு. என்னய மட்டும் கொலைக்குது.. மகேசு போன கூடத்தேன் சொல்லிட்டே நடந்தோம்.. அங்கன ஐயா பக்கதுல தொணைக்கு நின்னாரு.. ராத்திரி ஊரே ஒரங்கி கெடக்கு. வேலி ஓரமா.ஒண்ணுக்கு விட்டேன்.. சொர்ருனு சத்தம்… பிம்பாட்டா செவிய கிழிச்சு சில்லுனு காத்து வீசுச்சு.. இன்னைக்கு வரட்டும் கருப்பன்.., மேல வீச இன்னைக்கு ஐயா பேருல மொளச்ச தெம்போட கல்லு ஒன்னு பொறுக்கிட்டேன்.. ஒண்ணுக்கு விட்டு வரும்போது தொரத்தும் அந்த கருப்பன் அன்னைக்கு காங்கல.. மனசுக்குள்ள கெடந்து துடிக்கும் பயங்கூடத்தேன்.. ஐயாவோட நடந்தா ராத்திரி கூட பகலாயிடுது..
பொத்தி..பொத்தி வளத்த பூச்செடி பொட்டுனு போவுமாம்.. போற போக்குல போட்ட காட்டு செடி வூட்ட முட்டுமாம்.. கருப்பனுக்கு எடுத்த கல்லு அந்த கணக்க சும்மா வீசுன ஓணான ஒரசி போச்சு.. போத்துனு விழுந்த ஓணான கொடில சுருக்கு போட்டு புடிச்சேன்.. ஏன்னு கேட்ட ஐயங்கிட்டவெளயாடனு சொல்லி சன்ன கம்பில கெட்டி வச்சேன்.. லேய்.. பாவம்லே.. சொன்ன ஐயா எதும் பேசல மேக்கொண்டு..
ராத்திரி பூரா ஐயாவும் ஆச்சியும் ஒரங்கல.. ஐயன் வேலை செய்யர லாரி கம்பெனி கை மாறி போச்சாம்..எதோ பட்டனத்து ஆளு வாங்கிட்டானாம்.. ஐயாவெல்லம் வேலைக்கு வேணாம்னு சொல்லிடாங்களாம்.. ஏதோ எதோ பேசிட்டே இருந்தாங்க.. பாதி தூக்கதுல கெணால கேட்ட போல இருந்துச்சு..
வெடிய காலைல ஐயன் எங்கனையோ கெளம்பிடாப்லயாம்.. ஆச்சி மொனவுச்சி.. குளிக்க போகயில ஓணான பாத்தே.. பாவமா கெடந்துச்சு.. என்னவோ.. ஐயா மொகந்தேன் மனசுகுள்ள.. மறுக்கா லேய் பாவம்லே.. ஐயங்கொரல் எங்கன இருந்தோ கேட்டாப்ல இருந்துச்சு.. பள்ளிகொடங்கெளம்புற வேளைக்கு யாரோ வந்தாங்க ஆச்சி கிட்ட கோவமா எதோ ஏசுனாங்க... ஆச்சி மன்னிசுக்குய்யானு ஒடஞ்சு மொனகுனதும் கூர வழியா கேட்ட்டுச்சு.. எதோ தொண்டைக்குள்ள கெடந்து பொரல சோரு எரங்கல அதுகுக்கு மேல..
பள்ளிகொடத்துகு அன்னைக்கு அவ்ளோ ஆசையா போனேன்.. மகேசு கிட்ட ஓணான பத்தி சொன்ன போது அவன் நெசமாலேனு கண்ணாமுழி பெதுங்க கேக்கான்.. எனக்கு உள்ளார குளுந்து போச்சு.. அவனுக்கு காட்ட மாட்டேனு வீம்பு பேசுனேன் வேணுமுனே.. விடாம கேட்டுட்டே இருக்கானவ..
சோத்துக்கு பொறவு மொத வகுப்பு தமிழ்.. டீச்சர் அன்னைக்கு லேட்டா வருவாங்களாம்.. புதுசா ஒரு சார் வந்தாரு.. நேரங்கடத்த அவரு எதோ எதோ பேசுனாரு.. கடைசில யாரு சிங்கம் புலி பக்கதுல போயி நிப்பீங்கனு கேட்டாரு.. ஒரு பய வாய தொரக்கலயே.. ஒரு நிமிசங்கழிச்சு அவரு சொன்னாரு யாரு வேணும்னாலும் போயி நிக்கலாம் அதுக்கு பசி இல்லாத போதுனு..
சிங்கம்புலி எல்லாம் பசிச்சாத்தாங்கொல்லுமாம்.. மத்த நேரத்துல பக்கதுலயே எர கெடந்தலும் ஒன்னும் பண்ணாதாம்… சாரு சொன்னாரு, நெசமா சார், வாயி பொளக்க அம்புட்டு பேரும் கேட்டோம்.. அவரு அதுக்கும் மேல ஒன்னு சொன்னாரு பசியே இல்லாத போதும் கொல்லுறது மனுசன் மட்டுந்தான், பாக்க போன உங்க பக்கதுல நிக்கத்தான் இன்னொரு மனுசன் பயப்படனும்னு..கோல்லுனு எல்லா பசங்களும் சிரிச்சானுவ.. தமிழ் புக்குல “ஓ – ஓணான்” படம் என்னைய பாத்து சிரிச்சது..
சாயங்காலம் வூட்டுக்கு போகும் போது சாவி வூடு வந்துமே அன்னைக்கு மகேசு என்னய விட்டு போகல, எங்கூடவே ஓணான பாக்க வந்தான்.. பொறக்கடை பக்கம் போனோம்.. ஓணான் என்னய சோகமா பாத்துச்சு..
ரெத்த ஓணான் லே.. புடிக்கவே முடியாதுனு என் அண்ணாஞ்சொன்னான்.. மகேசு அசந்தே போயிட்டான்..
இருடா எங்கண்ணன கூட்டியாரேன்.. பைய கீள வீசிட்டு சிட்டாப்பறந்தான்..

நா ஓணாங்கிட்ட போனேன். அது என்னய பாத்து தலைய மேல கீள ஆட்டுச்சு.. சன்னல்ல கட்டி இருந்த சுருக்க அவுத்தேன்.. ஓணான போக விட்டுடேன்.. வேலிய ஒணான் தாண்டும் போது நின்னு என்ன பாத்து தலைய ஆட்டுச்சு. எதோ ட்ரெயின்ல ஏருன சொந்தகாரன் போல.. அப்டி ஒரு சந்தோசம் எனக்குள்ள.. மகேசும் அவன் அண்ணனும் வந்தபோது ஓணானில்ல.. அவன் அண்ணன் அவன் பாத்து சிரிச்சுட்டே புலுகாண்டினு சொல்லி திரும்பி போனான்… மகேசு புரியாம என்ன பாக்க, நான் நிதானமா வூட்டுக்குள்ள போனேன்..

ஆச்சி கிட்ட போயி பெருமையா நாஞ்சிங்கம் தெரியுமான்னேன்.. புரியாம ஆச்சி போடா பொசக்கெட்டவனேன்னுச்சு. பின்னாடி இருந்து ஐயா என்ன தூக்கி வாலே எஞ்சிங்கம், படம்பாக்க போலாம்னு சொல்லி வெளிய கொண்டு போனாரு.. இந்த முறை ஆச்சி மொனகல் கூர வழியா கேக்கவே இல்ல..
சசிகுமார்..