Special Category > ஜோதிடம்

2015 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

<< < (3/3)

Maran:

கும்பம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

மற்றவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுபவர்களே! உங்களுடைய ராசிக்கு 3-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடிவடையும். சோம்பல், சலிப்பு, எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்து ஏமாந்து போன தொகையும் கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் நீங்கள் ஆதாயமடைவீர்கள். தடுமாற்றங்கள் நீங்கும். எதிர்த்தவர்களும் அடங்குவார்கள். பழைய கடனை பைசல் செய்வதற்கு தீவிரமாக யோசிப்பீர்கள்.
 
உங்களுடைய ராசிக்கு 6-ல் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கொஞ்சம் பணப்பற்றாக்குறை இருக்கும். சின்ன சின்ன காரியங்களையும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிலர் உங்களை அவதூறாகப் பேசுவார்கள். சிலர் உங்களுக்கு கோபம் வரும்படி உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. கடன் பிரச்னை அதிகமாகிறதே என்றெல்லாம் சில நேரம் யோசிப்பீர்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் குடும்ப வருமானம் உயரும். ஆழ்மனதில் இருந்து வந்த கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். மனநிம்மதியும் உண்டாகும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
 
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். புது வேலைக் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உறவினர், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டீர்களே! அந்த நிலை மாறும். மனதில் ஒரு சாந்தமான சூழ்நிலை உருவாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும்.

ராசிக்கு 8-வது வீட்டில் நிற்பதால் அலைச்சல் ஒருபக்கம் இருந்துக் கொண்டுதான் இருக்கும். திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் இருக்கும். வேற்றுமொழிப் பேசுபவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். வளைதளத்தில் வரக்கூடிய செய்திகளையும், கடிதங்களையும் நம்பி ஏமாறாதீர்கள். 2-ல் கேது நிற்பதால் லேசாக பார்வைக் கோளாறு வரும். கண்ணில் அடிப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். கண்ணில் பெரிய தூசு விழாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். கண் எரிச்சல், கண் உருத்தல் இருந்தால் கை வைத்தியம் பார்க்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவசரப்பட்டு சிலரிடம் அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்லாதீர்கள்.
     
உங்களுடைய ராசிக்கு 12-வது வீட்டில் சுக்ரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரிக்கு திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். செவ்வாய் 12-ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சொத்துகள் வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்துக்களை விற்கும் போதும் ஏமாந்துவிடாதீர்கள். சிலர் சின்ன தொகையை முன்பணமாக கொடுத்துவிட்டு ஆறு மாதம், ஏழு மாதம் கழித்து மீதித் தொகை தராமல் இழுத்தடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள்.
 
வியாபாரத்தில் ஏப்ரல் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். ஜீலை மாதம் முதல் புது ஆடர்கள், ஏஜென்சிகள் எடுப்பீர்கள். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் 10-ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உதவியும் கிடைக்கும். வெளிமாநிலத்தில், அயல் நாட்டிலிருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து விரிவுப்படுத்த வாய்ப்பிருக்கிறது. புகழ் பெற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். கடையை நல்ல இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி உண்டாகும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஜீன் மாதத்திலிருந்து நிம்மதி பிறக்கும். இதுநாள் வரைப்பட்ட கஷ்டங்களெல்லாம் நீங்கும். புது சலுகைகளும் கிடைக்கும். புது அதிகாரி உங்களைப் பாராட்டுவார். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையும் கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில் உத்யோகத்தில் உங்களுக்கு செல்வாக்குக் கூடும். பெரிய பதவியும், பொறுப்புகளும் தேடி வரும்.
     
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! கோபம் குறையும். சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வேலைக் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமைந்து திருமணமும் சிறப்பாக முடியும்.

இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் சிறுசிறு இடையூறுகளை தந்தாலும், மையப்பகுதியில் சந்தோஷத்தையும் பிற்பகுதியில் அதிரடி முன்னேற்றங்களையும் தருவதாக அமையும்.

Maran:

விருச்சிகம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடுபவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் போது இந்தப்புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ரியல் எஸ்டேட், கண்ஸ்டக்ஷன் வகைகளால் லாபம் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும்.

ஆனால் 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தாமதமாக முடியும். சொந்த ஊரில் கோவில் கட்டுவது, ஊருக்கு நல்லது செய்வது, குடிநீர் அமைத்துத் தருவது போன்ற முக்கிய காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சின்ன சின்ன மோதலும் வரும். அவ்வப்போது கனவுத் தொல்லை வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும்.
 
சுக்ரனும், புதனும் வருடம் பிறக்கும் போது சாதகமாக இருப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. அவருக்கு வேலைக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. மகளுக்கு நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல துணை அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது, கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். சூரியன் சாதகமாக இல்லாததால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள்.
 
ராகு இந்தாண்டு முழுக்க லாப வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களுக்கும் அயல்நாட்டில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். அறிவுப்பூர்வமாக யோசிப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் கொஞ்சம் நிதானித்து எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் பழைய கடனை தீர்க்க வழி பிறக்கும்.
 
நட்பு வட்டம் விரிவடையும். தொட்ட காரியங்கள் துலங்கும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். பெரிய பதவிகளும் தேடி வரும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை பாக்யம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் ஜீன் மாதம் வரை தொடர்வதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

வீடு, மனை வாங்கும் அமைப்பு உருவாகும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் ஜென்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
 
வீண் விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மறதியால் செல்போன், விலை உயர்ந்தப் பொருட்களை இழந்துவிடாதீர்கள். திருட்டு பயம் உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூருக்கு செல்லும் போதும் நகை, ரொக்கங்களை பத்திரப்படுத்திவிட்டு செல்வது நல்லது. ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, நீரிழிவு நோய் வரக்கூடும். உணவுக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. லாகிரி வஸ்துக்களை தவிர்க்கப்பாருங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களை தொற்ற வாய்ப்பிருக்கிறது. 
 
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப சில சீர்த்திருத்தங்களை செய்வீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், மருந்து, உணவு வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஜீன் மாதம் வரை குரு நன்றாக இருப்பதால் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ரெட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

ஆனால் ஜீலை மாதம் முதல் குரு சாதகமாக இல்லாததால் பெரிய முதலீடுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களை சேர்க்க வேண்டாம். திடீரென்று அறிமுகமாகி சில சலுகைத் திட்டங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏழரைச் சனி நடைபெறுவதால் வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாகப் பேசுவார்கள்.
 
புது சலுகைகள் கிடைக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். ஆனால் ஜீலை மாதத்திலிருந்து குரு 10-ல் நுழைவதால் இடமாற்றமும், அதிகாரிகளுடன் மோதல்களும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் வந்துப் போகும். உங்களை விட வயதில் குறைந்த, அனுபவத்தில் குறைவானவர்களுக்கு கீழ் நீங்கள் வேலைப் பார்க்க வேண்டி வரும். ஜீலை மாதம் முதல் உத்யோகத்தில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.மாணவ-மாணவிகளே!
 
ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபப்படாதீர்கள். கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். முதல் வரிசைக்கு முன்னேறுங்கள். வகுப்பாசியர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்பார்த்தபடி மதிப்பெண் பெற்று விரும்பிய நிறுவனத்தில் உயர்கல்வி மேற்கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நல்ல வேலைக் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஏழரைச் சனி நடைபெறுவதால் காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். போலியான பேச்சில் ஏமாந்துவிடாதீர்கள். இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை ஆழம்பார்த்தாலும், கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் வெற்றியடையச் செய்யும்.

Maran:

மீனம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது ராசியில் இந்த 2015-ம் ஆண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை நீங்கும். அடுத்தடுத்து பணவரவு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள். பக்குவமாகப் பேசி பல முக்கிய காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். முகம் மலரும். சோர்வு நீங்கும். கடந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டீர்களே! இப்போது வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உங்களுடைய ராசிநாதன் குருபகவான் 5-ம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் எதிலும் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. குழந்தை பாக்யம் கிட்டும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
 
 உங்கள் இருவருக்குமிடையே பிரச்னைகளை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் குருபகவான் 6-ல் சென்று மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ஆடம்பரச் செலவுகள் வேண்டாம். அநாவசியப் பேச்சுகளையும் நீங்கள் குறைப்பது நல்லது. சிலர் உங்களுடைய நடவடிக்கைகளை வேவு பார்க்கக் கூடும். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம். பிரபலங்களுடன் சின்ன சின்ன மோதல் வரும். ஜீலை மாதம் முதல் நீங்கள் நாவடக்கத்துடன் செயல்படுவது நல்லது. உங்களிடமிருக்கும் ரகசியங்களை வெளியிட வேண்டாம். ஆரோக்யத்திலும் அக்கறை காட்டுங்கள். மஞ்சள் காமாலை வரக்கூடும். சிறுசிறு வாகன விபத்துகளும் நிகழக்கூடும். காசோலை தருவதற்கு முன்பாக வங்கி சேமிப்பு கணக்கில் இருப்பு எவ்வளவு இருக்கிறது என சரி பார்த்து தருவது நல்லது. யாருக்கும் அநாவசியமாக உறுதிமொழி தர வேண்டாம்.
 
      உங்களுடைய ராசியிலேயே கேது அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். படபடப்பு இருக்கும். சில நேரங்களில் சிலரை நினைத்து கோபப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் யாருமே உண்மையாக நடந்துக் கொள்ளவில்லையென ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலைச்சுற்றல், உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி வந்துப் போகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் ராகு நிற்பதால் கணவன்-மனைவிக்குள் சில நேரங்களில் கடுமையான வாங்குவாதங்கள் வரும். பின்னர் சரியாகும். மனைவிக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். தைராய்டு இருக்கிறதா என பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உங்களுடைய நெருங்கிய நண்பர்களை ஜீலை மாதத்திலிருந்து யாருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாம்.
 
      உங்களுடைய ராசிக்கு சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சையும், ஆரோக்ய குறைவும் உண்டாகும். அவருடன் மனஸ்தாபமும் வரக்கூடும். உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதி பைசலாகும். வருடம் பிறக்கும் போது உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சுக்ரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். சேமிப்புகளும் உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்குவீர்கள். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
 
      வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஒத்துழைக்காத பங்குதாரர்களை நீக்கி விட்டு புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். செல்வாக்குள்ள பங்குதாரர்களை சேர்க்க வாய்ப்பிருக்கிறது. கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட், மருந்து, பெட்ரோ-கெமிக்கல், ஸ்டேஷனரி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களாலும் லாபம் அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக நீங்களும் மூத்த அதிகாரிகளிடம் வாதாடி சில முக்கிய சலுகைகளை பெற்றுத் தருவீர்கள். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
     
மாணவ-மாணவிகளே! படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஓவியம், இசைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு முன்னேறுவீர்கள். புது சலுகைகளும் கிடைக்கும். சிலர் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் அட்மிஷனும் கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த சோம்பல், சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உயர்கல்வி நன்கு அமையும். கோபம் குறையும். பெற்றோர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதையும் உணருவீர்கள். நல்ல வரன் அமையும். ஆகமொத்தம் இந்த வருடம் தொடக்கம் முதலே வெற்றியை தரக்கூடியதாகவும் ஜீலை மாதம் முதல் கொஞ்சம் அலைச்சலையும், செலவினங்களையும் தருவதாக அமையும்.

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version