FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 31, 2020, 12:46:48 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: Forum on May 31, 2020, 12:46:48 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 233
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/233.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: thamilan on May 31, 2020, 05:54:20 PM
கொரோனாவே
கொன்று குவித்திடும் கொரானாவே
மனிதரை கண்டு மனிதரையே ஓட வைத்தாய்
மனிதரை விட்டு மனிதரை மூன்றடி நிறுத்தி வைத்தாய்

துள்ளித்திரிந்த பெண்களை
வீட்டுக்குள் அடைத்து விட்டாய்
வேலை வீடு என்று ஓடித்திரிந்த பெண்குலத்தை
வீடு சமையலறை என்று சிறைப்படுத்தி விட்டாய்
நான்கு சுவர்களுக்குள் நாட்களை கழிக்கவிட்டாய்

கூண்டுக்கிளிகளாக வளர்ந்தனர் பெண்கள்
ஒரு காலம்
மறுபடியும்  அவர்களை கூண்டுக்குள்
அடைத்து விட்டாயே

உலகத்தை வலம் வந்த பெண்களை
போனும் மடிக்கணணியும்
உலகம் என்றுஆக்கிவைத்தாய்
தூங்க நேரமின்றி ஓடியவர்களை
தூங்கித்  தூங்கி எழவைத்தாய்

கொரோனாவே
காதலர்கள் தான் என்செய்தார்கள் பாவம்
கட்டிப்பிடித்தல் முத்தம் கொடுத்தல்
உன்னால் தடை செய்யப்பட்டு விட்டதே   

உயிர்கொல்லி நோயான உன்னாலும்
உலகில் பல நன்மைகள் உண்டானது
ஓட்டை விழுந்த ஓசான் படலத்தை
ஓசையின்றி மூட வைத்தாய்
ஆலைகளை மூடி
மாசுபடிந்த காற்றை தூய்மைப்படுத்தினாய்
ஆறு நதிகளில் கலந்த
இரசாயன கலவைகளை நிறுத்தி வைத்தாய்

கொரோனாவே
நீ கெட்டது நிறைந்த நல்லவள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: SaMYuKTha on June 01, 2020, 01:00:29 AM
என் இனிய ஊரடங்கே 😍😍

காலங்காத்தால அலாரம் சத்தத்துல
அடிச்சுப்பிடிச்சு எந்திரிச்சு
அரக்கப்பரக்க கெளம்பி
வேர்த்துவிறுவிறுத்து வேளைக்கு போய்சேருர
கொடுமை இப்போ இல்ல…

சொந்தவீட்டுக்குள்ளயே
யாரு இருக்கா இல்லனு தெரியாம
நல்லது கெட்டத பகிராம
மூஞ்சியகூட பாக்காம அந்நியப்பட்டு
பொழைக்குற பொழப்பு இப்போ இல்ல…

மண்ணத்தோண்டி
மீத்தேன் ஈதேன் ஹைட்ரோகார்பன் எடுக்குறதும்
சாயப்பட்டறை கழிவுகளால குடிதண்ணிய
வெஷமா மாத்துறதும்
தொழிற்சாலைப்புகையால காத்த மாசுபடுத்துறதுமான
உசுரக்கொல்லுற அவலமும் இப்போ இல்ல…

திருவிழா தேர்பவனினு சாமிய டிஸ்டர்ப் பண்ற
மைக்குசெட்டு சரவெடினு அலப்பறையகூட்டுற
கல்யாணம் காதுகுத்து கருமாதினு
ஒருநாள்கூத்துக்காக தண்ணியா காசக்கரைக்குற
அக்கப்போரும் இப்போ இல்ல…

Swiggy zomato உபயத்தால
பலவீடுகளில் பூட்டப்பட்ட சமையலறை
சாபவிமோசனம் அடைந்திருக்கிறது இந்நாட்களில்…
இயற்கையும் இயற்கைசார்ந்த உயிரிகளும்
தம் உயிர்ப்பை நிலைப்படுத்தியிருக்கிறது இந்நாட்களில்…
மனிதாபிமானமும் மனிதமாண்பும்
எழுச்சியடைந்திருக்கிறது இந்நாட்களில்…

இவ்வாறாக
அசாத்தியங்களை
சாத்தியப்படுத்தி இருக்கிறது
என் இனிய ஊரடங்கு!
இதுக்கெல்லாம் காரணமான
அடியேய் கொரோனா!!!
யாரு உன்ன கழுவிஊத்துனாலும்
ஐயம் லப்பிங் யூ யூ யூ!!!

என் இனிய ஊரடங்கே!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: SweeTie on June 03, 2020, 05:54:55 PM
என் சிறகை  வெட்டிவிட்டு
கூண்டில் அடைத்துவைத்து 
வேடிக்கை  பார்க்கிறாள்  இவள்
சண்டாளி  பாதகத்தி கொரோனா 

போய் விடுவாள்  போய் விடுவாள்
என எண்ணி எண்ணி வாழுகிறோம்
சுமந்துவிட்டோம்  ஆறு மாதம்
இன்னும்  சுமப்பது எத்தனையோ?

காலையில்  கண்விழித்து
கணினியை திறந்துவைத்து
உலகத்தை பார்க்கிறேன்  நான்
ஒரு மண்ணும்  புரியவில்லை

பறக்கவும்  முடியவில்லை 
ஊன் உறக்கமும்  தினம்  தொல்லை 
என்று முடியும்  இந்த  சதுரங்க விளையாட்டு 
என ஏங்கி தவிக்கிறது என்னுள்ளம். 

சுற்றி நிற்கும்   ராட்சதர்கள் 
கொடூரமாய்   தெரிகிறார்கள்
உடம்பெல்லாம்   ஈட்டி வைத்து
உக்கிரமாய்  பார்க்கிறார்கள்

நா ன்  வளர்த்த  பூனைக்குட்டி
செய்வதேது    புரியாமல். .
என்னை  காத்து  நிக்கிறது
நன்றியுள்ள  மிருகம்  அது
 
மருந்து மாயம்  தெரியாமல்
மருத்துவர்கள்  முழிக்கிறார்கள்
விருந்து  உண்ண  ஹோட்டல் இன்றி
வீடு  வீடாய்   சமைக்கிறார்கள்

சீர்கெட்ட சீட்டாட்டம் 
தீதென்று எண்ணியவர்
இன்று வீட்டோடு  சீட்டாடி 
ஒருமித்து  மகிழ்கின்றார்.

பள்ளி  சென்ற  சிறுவர் எல்லாம்
பள்ளியை  மறந்துவிட்டு   
zoom  skype  whatsup   இல் 
கல்விதனைப்  பெறுகின்றார்.

காலத்தின் மாற்றத்தில் இதுவும் ஒன்று
கடந்துபோம்  இதுவும் ஒரு நாள்
கண்களை   இறுக  மூடி தியானித்து
காத்திருப்போம்  அதுவரையும்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: Raju on June 03, 2020, 08:16:16 PM
இன்றுடன்
அவள்
இனிமையாக பேசி
இரு நாட்கள் கடந்துவிட்டது...

எனக்குத் தெரியும்
என்மீதான அன்பு
எள்ளளவும் குறைய
வாய்ப்பில்லை...


இருந்தும்
அவள் முகத்திருப்பலில்
முடியாமல் தவிக்கிறது மனம்..

சுதந்திரத்தை
புன்னகையாக அணிந்து
கடக்கும் பொழுதுகளை
இன்று
கூண்டில் பறவையாய்
குறுகிய வட்டத்துள்
குமுறிக் கடக்கிறாள்..


நான் அறிந்து
அவள்
கணிணியை நேசித்ததில்லை
இன்று
கணிணியோடு வாழ்வது
அவளை கடுப்பேத்தியிருக்கலாம்..

அவள்
புன்னகையை மறைத்த
முகக் கவசத்தால்
மூச்சுக்கு சிரமமாகி
முணு முணுக்க ஆரம்பித்திருக்கலாம்..


அழகுபடுத்த அவசியமில்லை
அன்றாட உலாவலில்லை
யாரும் நெருங்கவில்லை
அவளே சமைத்து
அவளே உண்ணும் அவலத்தில்
அவள் என்னை
வெறுத்திருக்க வாய்ப்பில்லை...

இருந்தும்..
என் இனிய இதயமே...
மறந்தும் வெள்வராதே...
கிளியுன்னை களவாட
கொரொனா எனும்
கொடிய பூனை
காத்திருக்கிறது..


கவனம்!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: Hari on June 03, 2020, 10:27:51 PM
பாரதி கண்ட புதுமை பெண்ணே
சிகரத்தில் சுதந்திரமாய் சிறகடித்து பறந்த  உன்னை
கொரோனா என்ற உயிர்கொல்லி நோய்
கூண்டில் சிறைபிடித்ததை நீ அறிவாயா....

ஏன்  சமையல் கற்றுக்கொள்ளவேண்டும்
என்ற  உன் வைராக்கியத்தை  உடைத்து
சமைத்து சாப்பிட வைத்தது   சூப்பர் ஹீரோ
 கொரோனா என்பதை புரிவாயா....

எப்போது   கொரோனா மருந்து கண்டுபிடிப்பார்கள்...
எப்போது  முகக்கவசத்துக்கு  விடுதலை கொடுப்பது ..
எப்போது  நாம் இயல்புநிலைக்கு திரும்புவது
என்று மதில் மேல் இருக்கும் பூனை போல
ஏக்கத்துடன் காத்துகொண்டு இருக்கிறாயா?  ....

ஒருபுறம் மனிதகுலத்திற்கு பேராபத்து
மறுபுறம் இவுலகிற்கு  நன்மைகள் ..
நச்சுக்கலந்த காற்றை சுவாசித்த நாம்
 இன்று  தூய்மையான காற்றை சுவாசிக்கிறோம்
...
நகர் புறங்களில்  பறவைக்  கூட்டங்கள்
சுதந்திரமாய்   அணிவகுத்து பறக்கின்றன
மனித நடமாட்டத்தை கண்டு அஞ்சிய   வன விலங்குகள்
இன்று  பாடசாலைகளில்   ஒய்யார நடை பயில்கின்றன

Pizza, burger   சாப்பிட்டு   நோய்களை  தேடிய சமூகம்
மருத்துவ குணம் கொண்ட   பாரம்பரிய  உணவுகளை
உண்டு மகிழ்கின்றனர்  .
.
மனிதன் தன்  தொழில்நுப்பதால்   இயற்கையை   அழித்து
பேராபத்தை   வாங்கிக்கொண்டதால்
நான்கு சுவர்களுக்குள்  முடங்கி கிடக்கிறான்

நாம் இயற்கையை அழித்தால் வந்த சாபமா.?...
இல்லை விஞ்ஞாண வளர்ச்சியால் வந்த விபரீதமா.?..
இந்த உயிர்கொல்லி நோய்க்கு  நமக்கு விடை கிடைக்குமா ?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: MoGiNi on June 03, 2020, 11:15:29 PM
சில பரீட்சார்த்தங்களுக்கு
அப்பாற்பட்டிருக்கிறது
இந்த நாட்கள்...

சிறகொடிந்த கிளியொன்றின்
வாழ்வுதனை
ஒத்திருக்கிறது
பொழுதுகள்...

சுதந்திரக் காற்றின்
தீண்டலுக்காக
தவமிருக்கிறது
நாட்காட்டி...

எங்கிருந்தோ ஒலிக்கும்
ஆலயமணிக்கு
அலறித் துடிக்கிறது
இருதயம்  .

அமானுஷ்யத்தின்
கைகளுக்குள்ளே
அடங்கியிருக்கும்
வாழ்க்கைச் சக்கரம்
என்றுதான் உருளும்....?
உனக்கும் சரி எனக்கும் சரி
ஏன்
உலகத்துக்கே
புரியாத ஒன்று.!!

கணணியோடு விழித்து
கணணியோடு தூங்கி
என் கண்ணிமைகள்
கழித்திடுமோ
காலத்தை...

தூங்காத
என் இரவுகளுக்கு
துணையிருக்கும்
என் செல்லப் பூனை நீ..
உனக்கும்
என்னைச்சேர
உத்தரவாதமில்லை..

உன்னுருவில் கூட
கொடிய வைரஸ் தாக்கலாம்..

பொறு
முத்தத்துக்கு
சிறு
விடுமுறை விடலாம்..

முடிந்தால்
உன்னை மனமார
தழுவ சந்திக்கிறேன்
இல்லையெனில்

பிணமாக.....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: TiNu on June 04, 2020, 01:57:19 AM
என் இனிய நுண்கிருமியே...
உன்னாலே நானும் வாழ்கிறேன்..

அதிகாலை எழுந்து...
சோம்பல் தீர நீராடி...
கடவுளை தொழுது...
உண்ணாமல் திண்ணமால்..
பாடசாலை.. தேடி ஓடி..

ஆசிரியரின்  அன்பு
அர்ச்சனைகளை வாங்கி..
தோழியர்களுடன்.. விளையாடி...
தோழியர் ஊட்டிய
உணவை உண்டு...

பின் பணியிடம் ஓடி..
அங்கே சீனியரிடம்
அன்பு மொழி வாங்கி (திட்டுகள்.. வாங்கி.. )
இட்ட பணி முடித்து
வீடு திரும்பி...

வீட்டு பாடங்கள் முடித்து..
விடுபட்ட வேலைகளை முடித்து..
என்னை நான் உணரும் நேரமோ....
இரவு 12 மணியே.... அதுவும்
என் நித்திரையில்...

என் அன்பு கிருமியை..
நீ வந்த பின்னே... நானே
என்னை உணர்தேன்...

நீ வந்த பின்னே... ஒலித்தது..
அதிகாலை பறவைகளின் 
அழகிய.. ரீங்காரம்..

நீ வந்த பின்னே.. உணர்ந்தேன்......
என் வீடு தோட்டத்தில்  இரு வகை
வண்ண சங்கு பூ  கொடி உண்டென..

நீ வந்த பின்னே.. கண்டேன்..
என் கை விரல் நகங்களின்
அதி நீளத்தை...

நீ வந்த பின்னே.. பிரமித்தேன்..
என் நிழல் கண்ணாடியில்
என் துரு துரு விழியும்.. குறும்பு சிரிப்பும்...

நீ வந்த பின்னே பார்த்தேன்....
எதிர் வீட்டின்  அழகு... கட்டிட அழகல்ல..
கட்டிடத்தை.. அழகாக்கிய  அண்ணனை.....

நீ வந்த பின்னே... இணைந்தேன்....
தொலைந்த போன என் சிறுவயது
தோழிகளின் நட்புடன்..

என் பாச தோழியே(கொரோனாவே)...
நீயும் என்னுடனே.... வா....
சேர்ந்தே... உலகை காண்போம்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: Ninja on June 04, 2020, 09:56:05 AM
பகலில் ஊர் சுற்றி இரவில் வீடடையும் பறவையைப் போல் இருந்த
காலம் போய்
வீடே உலகம் என சிறு கூண்டுக்குள் தஞ்சமடைவோம் என யார் கண்டது?
வெளியே சுற்றித் திரியும் சிட்டுக்குருவிகள் திமிராக வீட்டு ஜன்னலை தட்டி
உள்ளிருக்கும் மனிதர்களை கெக்கலிக்கிறது.
கூண்டென இருக்கும் வீட்டை சுற்றி உலாவருகின்றன நாய்களும் பூனைகளும் இரவு உணவிற்கு
வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் புதுவிதமான அலங்காரங்களுடன் ஜொலிக்கிறது இத்தனை நாள் நான் இங்கே தான் இருந்திருக்கிறேன் என!
மல்லிகைகொடி புதுமொட்டு விடுவதை
இதற்கு முன் அவ்வளவு சுவாரசியமாக கண்டதில்லை
அரக்கப்பரக்க எழுந்து அவசரமாய் கிடைத்தை வாயிலிட்டு கொண்டு வீட்டை வெளியே பூட்டிவிட்டு சென்ற
காலங்கள் கடந்து
உள்ளே பூட்டிவிட்டு வீட்டில் அடைந்திருக்கும் காலம் இப்பொழுது வாய்த்திருக்கிறது

இந்த கொரோனா காலத்தில்
வீட்டில் ஒரு கூண்டுக் கிளியினை போல் அடைந்து கிடப்பதை எண்ணி புலம்பிக் கொண்டிருக்கும்பொழுதே
வீடடற்று இருப்பவர்களை எண்ணி கொள்வோம்
பணக்காரர்கள் கொண்டு வந்த கொரோனா எனும் கொடிய அரக்கனால்
வேலையிழந்து, வீடிழந்து, ஒரு வேளை உணவிற்கும் கூட வழியில்லாமல் திரியும் ஏழைகளை மனதில் நிறுத்தி
இத்தகைய காலத்தில் கூட
விதவிதமாய் விருப்பப்பட்டதை சமைத்து உண்ணும் பாக்கியமேனும் இருக்கிறதே என எண்ணி அமைதியுறுங்கள்!
வீடுள்ளவர்களுக்கு வீடே கடவுள்
வீட்டை கூண்டென எண்ணாமல்
தனித்திருத்தலை கொண்டாட்டமாக்கி கொண்டால் மட்டுமே 
கொரோனா எனும் கொடிய அரக்கன்
தரும் மன அழுத்ததிலிருந்து விடுபட முடியும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 233
Post by: Unique Heart on June 04, 2020, 12:07:30 PM
"பெண்மையும் அவள் பெருமையும்"

பெண் என்பவள் அணைத்து சிறப்பிற்கும் உரியவள் என்ற பொழுதிலும். 

அன்று முதல் இன்று வரை,  பெண் என்பவள் சிறைப்பட்டே கிடக்கின்றாள்.

அதற்க்கு முழுவதுமான காரணம் இச்சமுதாயம்.

நம்மில் யாவரும் அறிவோம், நம்மை படைத்தவன் இறைவன் என்ற பொழுதிலும், நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய இணையற்ற அன்பிற்கு உரித்தானவள் தாய்.  அவளும் பெண்ணே..

சங்கடங்கள் நிறைந்து நிற்பினும், சகோதரி ஒருத்தி இருப்பின்,  அவள் சிரித்த முகத்துடன் சிலிர்த்து கொண்டு சொல்லும் வார்த்தை அதற்க்கு ஈடு இல்லை, (பரவலா விடுடா எல்லாம் சரி ஆகிடும் பாத்துக்கலாம் .)

நம்மில் பெண்மக்களை நட்பின் உறவுகளாய் கொண்ட அன்பர்களுக்கு தெரியும் ஸ்நேகிதி அவளின் பாசமும், நடிப்பும்..

அன்று ஒரு காலம் இருந்தது பெண்மையை என்னி பெருமிதம் கொண்ட மக்கள்..

பெண்மையே ஆண்மையை முழுமை பெறச்செய்யும் என்று என்னிய மக்கள்....


இன்றோ பெண்மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் எத்தனை ? 

பெண்பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் மனதில் கவலைகள் எத்தனை?

பெண்ணிற்க்கு நடக்கும் கொடுமையை விடவும், பெண் குழந்தை என்றும் பாராமல் சீறாப்புகள் எத்தனை?

பெண்ணியத்தை பாதுகாப்பது, ஆண்மக்களின் கடமை அல்லவா??

பெண்ணுடம் என்பது மானுடம் காக்க வந்த மாணிக்கம் அல்லவா  ?????

இத்தனை சிறப்பிற்குரிய பெண் அவளை பெருமை படுத்த மனமில்லாதாகினும்,  சிறுமை படுத்தியது ஏனோ ?....

பெண்மையையும், பெண் மக்களையும் சிறைப்படுத்தி வைத்திருக்கும் சமூதமே !!!
சிறிதும் சிந்திக்க மாட்டாயா ??????

பெண்மையை பாதுகாக்க மறந்த எந்த சமூகமும் முன்னேற்றம் பெறாதென்பது இறைவனின் வாக்குறுதி...

இதையே  "திரு குர்ஆனில்"  இறைவன் கூறுவது - தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்கிறான்.  இதன் பொருள் எவர் ஒருவன் தன் தாயிற்கு உதவியாய் இருந்து, உபகாரம் செய்து அவளின் வாழ்நாள் தனில் முகம் சுளிக்கா வண்ணம் நடந்து கொண்டு அரவனைப்பாரோ அவருக்கு நாம் சுவர்க்கத்தை பெறுவதை இலகுவாக்குவோம் என்பது பொருள்...

இப்படியாக படைத்தவனே பெருமைப்படுத்திக் காட்டும் பெண்மையை,  படைப்பினங்கள் பாதுகாக்க மறந்ததேனோ ????...

கொரோனாவிற்கு அஞ்சி சிறைப்பட்டிருப்பதை விடவும்,  சமூதாயத்தில் இருக்கும் மனித கிருமிகள் இடத்தில் சிறைப்பட்டிருப்பது கொடுமை.....

சிறைப்பட்டிருப்பினும் பெண் சமூகம் பெருமைக்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர்களே.. 💐💐💐

குறிப்பு : மக்களே!  இந்த கவிதைய நான் picture பாத்தப்போவே எழுதிட்டேன்.  ஆனா பதிவுல போடல.
இப்போ இத கடைசியா போட்டதோட நோக்கம் மக்கள் படிக்கனுன்னு மட்டும் தான்.  நன்றி.....