பெரியார் - திராவிட அரக்கன்
ஏன் வேண்டும் பெரியார் ?
சுயநலம் அறியா ஒரு சகாப்தத்தின் இன்றைய தேவை ஏன் ? என்ற கேள்விக்கு விடையாக இந்த கட்டுரையை தொடங்குகிறேன் .
ஏன் பெரியார் தேவை ?
இன்றைய சூழலில் நாட்டின் ஜனநாயகம் அழிவை நோக்கி பயணித்த கொண்டிருக்கின்றது .
"ஒரே மொழி ஒரே மதம்" என்று கொள்கையை வைத்திருக்கும் ஒரு கும்பல் நாட்டை சூறையாடி கொன்றிருக்கின்றது. இது போன்ற கும்பல்களை களை எடுக்க கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் .
பெரியார் ஒரு உலகளாவிய தலைவர். பெரியாரை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கி வைக்க முடியாது. ஒரு மதத்துக்குள், ஒரு மொழிக்குள், ஒரு சாதிக்குள், ஒரு இனத்துக்குள், ஒரு மாநிலத்துக்குள், ஒரு நாட்டுக்குள் என்று அவரை சுருக்கவோ அடக்கவோ முடியாது .அவர் ஒரு திராவிட அரக்கன் .இன்றும் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய் திகழும் மாபெரும் தலைவன் .
பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கியபோது அவர் குறிப்பிட்டு கூறியது, “இது மற்ற அரசியல் கட்சிகள் போன்ற ஒரு இயக்கம் இல்லை .இது கட்டுப்படுத்தப்பட்ட அடைத்துவைக்கப்பட்ட அறிவை விடுதலை செய்யவைக்கும் இயக்கம் அதனால் மனிதர்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவமும் சுயமரியாதையும் வரவைக்கும் இயக்கம்” என மிகத் தெளிவாக உரைத்தார்
பெரியார் சமூக விஞ்ஞானி :
ஒரு சமூகம் "மானதோடும் அறிவோடும்" இருக்க வேண்டும் என்றால் மனிதன் தன் மீது நம்பிக்கையை வைக்கவேண்டும் . தன் நம்பிக்கை சரியாக இருந்தால் அது மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தூணாய் இருக்கும் அதுவே மூடநம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்தால் அது அழிவை வழிவகுக்கும. ஒரு சமூகம் மட்டும் வளர மூடநம்பிக்கை என்னும் சூழ்ச்சி வலையை மற்ற சமூகத்தின் மீதி திணித்து அவர்களை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களின் சிந்தனையும் சித்தாந்தத்தையும் கண்டறிந்த சமூக விஞ்ஞானி தான் பெரியார். அவ்வாறு வஞ்சகம் நிறைந்த சிந்தனைகள் சிந்திக்கும் மூளையை தன் தடியால் அடித்து நொறுக்கிய அசுரன் தான் பெரியார் .
உலகமே கொரோனவால் தடுமாறி போயிருக்கும் இந்த காலகட்டத்தில் கூட இரவு ஒன்பது மணிக்கு விளக்கு ஏற்றினால் கொரோனா அழிந்துவிடும் கைதட்டினால் கொரோனா அழிந்துவிடும் என்று பொய்யான நம்பிக்கையை கூறி மக்களை திசை திருப்பி, மூடநம்பிக்கைகளை விதைக்கின்றனர் மதவாத அரசியல்வாதிகள். இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அழிக்க இன்றும் கூட பெரியார் நம்மிடயே தேவைப்படுகிறார் .
மாணவர்களின் கனவு நாயகன் :
இரண்டாயிரம் ஆண்டுகளின் பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழிக்க ஒரு திராவிட ஓளியாய் எழுந்தவர் பெரியார். தன் போராட்டங்கள் மூலம் ஆரியத்தின் கட்டமைப்பை சிறிது சிறியதாக உடைத்தவர் பெரியார் . நூறாண்டுகளுக்கு முன் சமஸ்க்ருதம் தெரிந்தால் மருத்துவர் ஆகலாம் என்ற விதியை . பெரியாரும், நீதிக்கட்சியும் முற்றிலும் ஒழித்து அனைத்து தரப்பட்ட மக்களும் மருத்துவர் ஆகலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டுவந்தார் .மாணவர்களின் கனவுகளை நிஜமாகிய கனவு நாயகன் பெரியார் .
ஆனால் இன்று காவிக்கூட்டம் நீட் தேர்வை முன்னிறுத்தி பலமாணவர்களின் கனவுகளை சிதைத்துக்கொண்டு அனிதா, விக்னேஷ், ஜோதிஸ்ரீ துர்கா. இன்னும் எத்தனைமாணவர்களை இந்த நீட் தேர்வு படுகொலை செய்யப்போகிறது .மொத்தத்தில் மருத்தவ படிப்பு ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது .நவீன வர்ணாசிரமமும் நவீன குலக்கல்வியையும் எதிர்க்க இன்றும் பெரியார் தேவைப்படுகிறார்.
“தகுதியும் திறமையும் பெறுவதற்காகத் தானே பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புகிறோம்? சேர்த்துக்கொள்வதற்கு முன்னே தகுதி, திறமை கேட்கப்படுமானால், 'தகுதி - திறமை' என்பதென்ன? குழந்தை பிறக்கும் போதே தாயின் வயிற்றிலிருந்து கொண்டுவரக்கூடிய ஒரு பொருளா? நம் பிள்ளைகளை என்ன கிணற்றில் தள்ளுவதா 'தகுதி - திறமை' பெற?” என 1940களிலேயே மாணவர்களின் சமமான கல்வி வாய்ப்பிற்காக முழங்கியவர் பெரியார். இன்றோ பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே கல்வி உரித்தானது போல கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சம உரிமைகளற்ற இதுபோன்ற கட்டமைப்புகளை தகர்க்க நம்மிடயே ஆயிரம் பெரியார்கள் இல்லை ஒரே ஒரு பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்.
சமூகநீதி தலைவன் :
இன்றும் சிலமுட்டாள்கள் கேட்கும் கேள்வி "நம்மை திராவிடம் படிக்கவைச்சதுனு சொல்லுறீங்க , அப்போ திருவள்ளுவரை யாரு உங்க பெரியாரா படிக்க வச்சாரு". இவ்வாறு கூறும் மக்களின் அறியாமையை எண்ணி மனது கலங்குகிறது
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவிலே மிகவும் தாழ்த்தப்பட்ட, மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்தது பெரியாரும், பெரியாரை பின்பற்றி வரும் இயங்கங்களும் தான். 1950ல் பெரியார் நடத்திய சமூகபுரட்சி போராட்டமான “இடஒதுக்கீடு போராட்டம் மற்றும் வகுப்புரிமை போராட்டம்” போன்ற போராட்டங்களின் வீரியத்தை உணர்ந்த ஆட்சியாளர்கள் வேலைவாய்ப்புகளிலும், கல்விவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவந்தனர் . அதன் பிறகு தான் இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைத்தது . அன்று தான் சமூகநீதியின் தலைவராக உருவெடுத்தார் பெரியார் .
ஆனால் இன்று அரசு சார்ந்த நிறுவங்கள் அனைத்தும் தனியார்மயம் ஆக்கும் முயற்சியிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாய்ப்புகளை பறிக்கும் முயற்சியிலும் சமூகநீதியை நிலைகுலைய வைக்கும் முயற்சியிலும் ஆரிய கும்பல் ஈடுபட்டுள்ளது .இதை தடுக்கவும் எதிர்க்கவும் இன்று நமக்கு பெரியார் தேவைப்படுகிறார் .
பெரியார் பகுத்தறிவு பகலவன் :
பெரியார் "கடவுள் இல்லை என்றார்." ஏன் அப்படி கூறினார் .ஜாதி என்றாலே இந்தியாவில் தான் ஜாதிகள் உள்ளது என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், “வர்ணாஸ்ரம தர்மம்” என்ற முறையிலிருந்து தான் “ஜாதிய முறை”, ஜாதிகள் தோன்றின என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. “வர்ணாஸ்ரமம்” முறைப்படி, பிராமணர், சத்திரர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று தான் இருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர ஆயிரக்கணக்கில் ஜாதிகள் உருவாக்கப்பட்டன / உருவாகிக் கொண்டிருந்தன, இருக்கின்றன.கடவுளின் பெயரால் மனிதர்களை நீ உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று பிரிவை ஏற்படுத்தியதால் தான் பெரியார் கடவுள் இல்லையென்றார்..அன்றைய காலகட்டத்திலே ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி காட்டிய பகுத்தறிவு பகலவன் தான் நம் பெரியார் .
ஆனால் இன்று ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தால் கௌரவ கொலைகள் செய்யும் வழக்கம் அதிகரித்துவிட்டது .இது போன்ற சமூக அவலங்களில் இருந்து மனிதர்களை மீட்டுகொண்டுவர பெரியார் இன்றும் தேவை படுகிறார் .
பெரியார் எனும் பெண்ணுரிமை போராளி :
முன்பே கூறியதைப் போல பெரியாரை எந்த வரையறக்குள்ளும் அடக்கிவைக்க முடியாது. ஒரு ஆணாக இருந்தாலுமே கூட அவரை போல் பெண்ணியம் பேசிய ஒரு ஆண் உலக வரலாற்றில் இல்லை. பெண் என்பவள் பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரமாகவும் அடுப்பங்கரையில் சமையல் செய்பவளாகவும் ஆண்களுக்கு அடிமைகளாகவும் இருந்த நிலையை மாற்றி சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை , ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்பு ,கருத்துரிமை என்று பெண்களுக்காகவும் பெண்ணுரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெண்ணியப் போராளி தான் பெரியார் .
ஆனால் இன்று பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் ,பெண்களின் சம உரிமை சுதந்திரம் பறிப்பு மற்றும் பெண்களை அடக்கிவைப்பது என பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது . மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்க இன்றும் பெரியார் நம்மிடயே தேவைப்படுகிறார் என்பதை நம்மால் மறுக்க இயலாது.
இந்துக்களின் எதிரி பெரியார்:
பெரியார் இந்து விரோதி என்று சித்தரிக்கப்பட்டார் ,அவர் இந்து கடவுள்களை மட்டும் விமர்சனம் செய்கிறார் ,கிறிஸ்துவ மதத்தையோ இஸ்லாமிய மதத்தையோ அவர் விமர்சனம் செய்வது இல்லை என்று ஒரு பொய் பிம்பத்தை தொடர்ந்து பார்ப்பனியம் பேசும் கும்பல் பரப்பி வருகின்றது அது முற்றிலும் தவறு .எந்த மதங்களில் சமூகநீதிக்கு எதிரான கருத்துக்களின் கூறுகள் உள்ளதோ ,எந்த மதங்கள் பிறப்பால் ஏற்ற தாழ்வை கற்பிக்கிறதோ, எந்த மதங்களில் மூடநம்பிக்கைகள் இருக்கின்றதோ .அந்த மதங்கள் எல்லாவற்றையும் பெரியார் விமர்சனம் செய்துள்ளார் . இஸ்லாமிய பொதுமேடையில் நின்றுகொண்டு சமாதியை வழிபடும் மூடநம்பிக்கையை எதிர்த்து கடுமையான் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் பெரியார். ஒரு பகுத்தறிவுவாதியாக மட்டுமே அவர் கடவுள்களை எதிர்த்தார் ஆனால் என்றுமே ஒரு மதத்தை மட்டும் குறிப்பிட்டு அவர் விமர்சனம் செய்தது இல்லை .மூடநம்பிக்கைகளும் ஏற்றத்தாழ்வுகளும் அதிகம் நிறைந்த இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.பெரியார் இந்து விரோதி என்றால் அவர் ஏன் கோவில்களுக்காக போராட வேண்டும்? அவர் இந்து மக்களின் எதிரி என்றால் ஏன் அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று போராடினர்? பெரியார் இந்து விரோதி என்றால் அவர் ஏன் சாதி மக்களின் இடஒதுக்கீடுக்காக போராடவேண்டும்?
பெரியாருக்கு கடவுள்மீதும் நம்பிக்கை இல்லை ,கோவில்கள் மீதும் நம்பிக்கை இல்லை ஆனாலும் இந்து மக்களுகாகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய ஒப்பற்ற தலைவன் பெரியார் .
ஆனால் இன்று மீண்டும் ஒரு குறிப்பிட்ட மக்களையும் குறிப்பிட்ட இயக்கத்தையும் இந்துக்களின் எதிரி என்றும் விரோதி என்றும் சித்தரித்து விநாயகர் சிலை ஊர்வலம் மூலம் மதக்கலவரத்தையும் ,வேல் பூஜை என்று மக்களை திசை திருப்பும் முயற்சியில் பார்ப்பனிய கும்பல் புதுவடிவிலான மத கலவரத்தை கையில் எடுத்துள்ளது .இதை எல்லாம் முறியடிக்க பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்பது இன்று நாம் உணர்ந்துள்ள உண்மை.
பெரியார் வாழ்ந்து முடித்த ஒரு சகாப்தம் .ஆனால் இன்றும் நம்முடன் அவரின் கருத்தியல் மூலமாகவும் ,சிந்தனை மூலமாகவும் ,தத்துவங்கள்மூலமாகவும் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒரு சித்தாந்தம் . அவர் பெரையும் அவர் செயல்முறைகள் இங்க இருந்து அகற்ற வேண்டும் என்று முயற்சிகளை பார்பனிய கூட்டம் செய்துகொண்டு இருக்கின்றது .தந்தை பெரியாரின் சிலைகளை ,படங்களை அவமானப்படுத்துவதன் மூலம் அதனை சாதித்துவிடலாம் என்று அலைந்துகொண்டு இருக்கின்றது .பெரியார் என்னும் பெருந்தலைவரை இங்கிருந்து அகற்றவேண்டும் என்றால் ஜாதிக் கொடுமை ,மதக்கலவரம், மூடநம்பிக்கை இல்லாத, ஆணாதிக்கம் இல்லாத சமூகம் அமைந்தால் மட்டுமே பெரியாரின் கனவு நிறைவேறி பெரியார் ஓய்வு பெறுவார் .
ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் இன்றும் பெரியார் தேவைப்படுகிறார் என்று நான் முடித்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் மீண்டும் பெரியார் பிறந்து வர வேண்டும் என்பதற்கு அல்ல நாம் அனைவரும் பெரியாரை போல சிந்திக்கவேண்டும் ,செயல்படவேண்டும் ,சகமனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், சுயமரியாதையோடு நடந்துகொள்ளவேண்டும், மூடநம்பிக்கைகளற்று மானத்தோடு வாழவேண்டும். இவ்வாறு வாழ்ந்தாலே போதும் பெரியாரின் தேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஒவ்வொருவருமே பெரியாராக வாழலாம்.
இறுதியாக,
"அப்படி என்னடா பெரியார் செஞ்சிட்டாரு?" என்ற கேள்வியை கேட்கும் மக்களுக்கு நான் தரும் ஒரே பதில்
"தெருவில் ஒரே ஒரு முறை சட்டை இல்லாமல், செருப்பு போடாமல் ,உன்னை விட ஜாதியில் உயர்ந்தவன் என்று கூறும் ஒருவனை கூனிக்குறுகி 'கும்புடுறேன் சாமி ' என்று அழைத்து பாருங்கள்" அன்று புரியும் ஜாதியின் வலியும், பெரியாரின் தேவையும் .
-சாக்ரடீஸ்.