FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on September 14, 2011, 05:45:49 PM

Title: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 05:45:49 PM
                                               முனைப்பாடியர் இயற்றிய

                                 அறநெறிச்சாரம்
 
                       திரு ஆ பொன்னுசாமிப் பிள்ளை உரை
 



பதிப்புரை 

இந்நூல் அருக சமயத்து அறிஞர் முனைப்பாடியார் என்பார் இயற்றியது. இருநூற்றிருபத்தாறு வெண்பாக்கள் கொண்டது. வெண்பாக்களின் அமைப்பும் பொருளும் அறிஞருள்ளத்தைக் கவரும் மாண்பின. அருகக் கடவுளும் அருக சமயமும் அருக ஆகமும் சிறப்பாகக் கொண்டுரைக்கும் வெண்பாக்கள் நீங்க, அறம் ஒழுக்கம் முதலியன கூறும் ஏனைய பாக்கள் செம்பாகமாய்ச் சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் முதலிய அழகு நிறைந்து சமய வெறுப்பின்றி எவரும் பயின்று மேற்கொள்ளத் தக்கனவாயிருக்கின்றன. உருவக முகத்தால் விளக்கியிருக்கும் பாடற் கருத்துக்கள் பசுமரத்தாணிபோல் மனத்திற் பதிந்து நிலைக்கும் பண்பு வாய்ந்தவை.


சங்கச் செய்யுள்கள் முதல் கம்பராமாயணம், நளவெண்பா முதலிய பிற்காலத் திலக்கியங்கள் வரை பன்னூல்களினின்றும் எடுத்த பாக்களின் தொகுப்பே புறத்திரட்டு. அதில் இந் நூலிற் காணும் வெண்பாக்களிற் சில காணப்படுகின்றன. இத்திரட்டு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகட்கு முன் திரட்டப்பெற்றது. ஆகவே, இவ் அறநெறிச்சாரம் ஐந்நூறு ஆண்டு கட்கு முற்பட்டதொரு பழைய நூல்.
இந்நூல் மூலமட்டும் ஏட்டுச்சுவடியிலுள்ளபடி இற்றைக்கு முப்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்னர், திருசிரபுரம் நேஷனல் உயர்நிலைப்பள்ளித் தமிழ்ப்பண்டிதர் திரு. தி. ச. ஆறுமுக நயினார் அவர்களால் வெளியிடப்பெற்றுள்ளது. அவர்கள் பதிப்புக் குறிப்பில் “விரைவில் வெளியிட வேண்டி நேர்ந்தமையால் தக்காரெடுத்து ஒழுங்குபடுத்தி வெளியிடற்கு ஒரு துணையாக இது வெளியிடப் பெறுவதாயிற்று” என்று குறித்துள்ளார்கள்.

பின்னர், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்புலமைச் செல்வர் திருமணம். செல்வக்கேசவராய முதலியார் எம். ஏ., அவர்கள், இந்நூலின் செய்யுளமைதி, நீதி, உருவக வுயர்வு முதலியன கண்டு மகிழ்ந்து, யாவரும் விரும்பி ஏற்றுப் பயின்று அயின்று மகிழ்ந்திடுமாறு நாலடியார்போற் பாகுபடுத்தி வெளியிட முயன்று, அருங்கலச் செப்பின் றுணைகொண்டும், இந்நூல் பதினொன்றாஞ் செய்யுளாகிய “காட்சி யொழுக்கொடு ஞானந்தலை நின்று” என்னுஞ் செய்யுளின் பகுப்புக் கிணங்கவும் பாகுபடுத்தி, அருஞ்சொற் குறிப்புடனும் சில மேற்கோள்களுடனும் 1905 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். குறித்த இவர்கள் வெளியீடு, பின்னிரண்டு பதிப்புகளும் பெற்றுள்ளன.

அருகசமய அருங்கொள்கை விளக்கத்துடன் நல்லொழுக்கம், இல்லறம், துறவறம் ஆகிய இவற்றி னியல்புகளை எளிய தீந்தமிழில் விளக்கி வீடெய்து மாற்றையும் அடைவிக்கும் இந்நூற்கு, காலத்தில் வேண்டப்பெறும், பதவுரை, குறிப்புரை, அருஞ்சொல் விளக்கம் முதலியவற்றை அமைத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்போற் பள்ளி மாணவரும் பிறரும் பயின்று தேர்தற்குத் துணையாக வெளியீடொன்றை விரைவில் வெளியிட்டுதவும்படி தமிழறிஞர்கள் பலர் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிணங்க இதுகாறும் வெளியிடப்பெற்ற மூலநூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் ஒப்புநோக்கிச் சிறந்த மூலபாடங் கண்டோம்; பதவுரை விளக்கவுரை முதலியன எழுதி முடித்தற்கு ஏற்றவர் சேலம் மாவட்டம், இராசிபுரம், நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் திரு. ஆ. பொன்னுசாமிப் பிள்ளை அவர்கள் என்பதை மேற்படி மாவட்டக் கல்வித்துறைத் தலைவரும், நம் கழக வாயிலாகத் தம் அரும்பெறற் புலமை விளக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டு வருபவருமாய் முன் விளங்கிய காலஞ்சென்ற திரு. T.B. கிருஷ்ணசாமி முதலியார், எம்.ஏ., பி.எல்., அவர்கள் வாயிலாக அறிந்து அவர்களைக் கொண்டே பதவுரை முதலியன எழுதி வாங்கலானோம்.

எளிதில் உரைத்தெளிவு காணமுடியாத இந்நூல் 44, 47, 127, 131, 147, 185, 210 ஆம் செய்யுள்களுக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், திருச்சி, துரைத்தன மகம்மதிய உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. அ. நடராச பிள்ளை யவர்கள் ஆகிய இவ்விருவரும் வேண்டும் மேற்கோள்களுடன் உரை விளக்கம் செய்து உதவியுள்ளார்கள்.
இந் நூற் பொருட்பாகுபாடு திருமணம், செல்வக்கேசவராய முதலியாரவர்கள் பதிப்பு முறையைத் தழுவியிருப்பினும், செய்யுட்கள் தனித்தனி நுதல்பொருள் அமைப்பைக் கொண்டிலங்குவது பயில்வார்க்கு இன்பம் பயப்பதாம். குறிப்பு மொழிவழிப் பொருள் நயம் தோற்றுவிக்கும் ஆசிரியரின் ஆற்றல் 207, 208 ஆம் செய்யுட்கள் முதலியவற்றால் விளங்கும். இப் பதிப்பில் அருக சமயத் துணிபுகள் கொண்டு எளிதில் பொருட்டுணிபு விளக்கம் பெறாதிருக்கும் ஆறு செய்யுட்கள் இறுதியில் மூலபாடமாக இணைக்கப்பெற்றிருக்கின்றன.

கழகம் ஏற்பட்ட காலத்திலிருந்தே சங்கமருவிய நூல்களில் பதினெண் கீழ்க்கணக்கைத் திருத்தமான முறையிற் பதிப்பித்து வெளியிடவேண்டித் தாம் அரிதின் ஆராய்ந்து எழுதிவைத்த கையெழுத்துப் படிகளைக் கழகத்திற் குதவி ஊக்கிவந்த தமிழ்ப்பெரும் புலவர் திரு. தி. த. கனகசுந்தரம் பிள்ளை, பி. ஏ., அவர்கள் மூலப்படி யொன்றும் இந்நூல் அச்சிட்டு முடியுங்காலத்தில் ஒப்புநோக்கக் கிடைத்தது. அதிற் கண்ட பாட வேற்றுமைகளும் அடிக்குறிப்பாகச் சேர்க்கப்பெற்றுள்ளன; இதற்கு முந்திய பதிப்புக்களிற் காணாத செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளமை பயில்வார்க்கு உறுதுணையாம். பதவுரையிலும் மூலபாடத்திலும் சிறந்த விளக்கக் குறிப்புகள் கிடைக்குமாயின், அடுத்த பதிப்பை இதனினும் திருத்தமாகப் பதிக்க விரும்புகின்றோம்.

தமிழ்மக்கள் இத்தகைய வெளியீடுகளைப் போற்றி ஊக்க முன் வருவார்களாக.
 
-------------------------------------------------------------------------------------------------------------
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 05:54:38 PM
   
1. கடவுள் வாழ்த்து


தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின்
துதித்தீண் டறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து


(பதவுரை) தா இன்றி-குற்றம் இல்லாமல், எப்பொருளும்- எல்லாப் பொருள்களி னியல்பையும், கண்டு உணர்ந்து-ஆராய்ந்து அறிந்து, தாமரைப் பூவின் மேல்-தாமரை மலரின் மேல், சென்றான்-சென்ற அருகனது, புகழடியை - பெயர்பெற்ற திருவடிகளை, நாவின் துதித்து-நாவினால் புகழ்ந்து, ஈண்டு-இங்கே, அறநெறிச்சாரத்தை- அறநெறிச்சாரமாகிய இந்நூலை, தோன்ற- விளங்க, சுருக்கய் விரைந்து-மிக விரைவாக, விரிப்பன்- விரித்துக் கூறுவேன்.  

(குறிப்பு) இது தற்சிறப்புப்பாயிரம்; ''தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைப்பது'' தற்சிறப்பாகலின். தெய்வம்-வழிபடு கடவுள்; ஏற்புடைக் கடவுளும் ஆம், அறத்திற்கு முதல்வனாகலின். குற்றம்-ஐயம் திரிபுகள். காணல்-ஈண்டு ஆராய்தல்; சென்றான்: வினையாலணையும் பெயர். ''மலர் மிசை ஏகினான்'' என்றார் திருவள்ளுவனாரும.் (1)  
 
   -----------------------------------------------------------------------------------------------------   
     
பாயிரம்


2. அறவுரையின் இன்றியமையாமை


மறவுரையும் காமத் துரையும் மயங்கிய
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.


(பதவுரை) மற உரையும்-பாவத்தினை வளர்க்கும் நூல்களும், காமத்து உரையும்-ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிற உரையும்-பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், மயங்கி-கலந்து, மல்கிய- நிறைந்த, ஞாலத்து- உலகில், அறவுரை-அறத்தினை வளர்க்கும் நூல்களை, கேட்கும்-கேட்கின்ற, திரு உடையாரே-நற் பேற்றினை உடையவர்களே, பிறவியை-பிறப்பினை, நீக்கும்-நீக்குதற்கேற்ற, திருஉடையார்-வீட்டுலகினையுடையவராவர்.

(குறிப்பு) காமத்து-அத்து: சாரியை. பிறவுரை-சோம்பல் முதலியவற்றை வளர்ப்பன. உரை-ஈண்டு நூலை உணர்த்தலின் ஆகு பெயர். திரு-ஈண்டு நற்பேற்றினையும், வீட்டினையும் உணர்த்திற்று. இதனால், அறவுரை கேட்டலின் இன்றியமையாமை கூறப்பட்டது. (2)  
 
    ---------------------------------------------------------------------------------------------------------- 
     
3. அறவுரைக் கின்றியமையா நான்கு  


  உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
  வான்மையின் மிக்கார் வழக்கு.



(பதவுரை) உரைப்பவன்-அறங் கூறுபவனையும், கேட்பான் -அதனைக் கேட்பவனையும், உரைக்கப்படுவது - உரைக் கப்படும் அறத்தினையும், உரைத்ததனால் ஆயபயனும்- உரைப்பதனால் உண்டாகும் பயனையும், புரைப்பு இன்றி- குற்றமிலா வகை ஆராய்ந்து, நான்மையும் போலியை நீக்கி-அந் நான்கனுள்ளும் பிழைபடுவன வற்றை நீக்கி, அவை நாட்டல்-அவையினை நிலைபெறச் செய்தல், வான்மையின் மிக்கார் வழக்கு-ஒழுக்கத்தால் உயர்ந்தோர் கடனாகும்.

(குறிப்பு) உரைப்பவன், கேட்பான், உரைக்கப்படுவது: வினையாலணையும் பெயர்கள். புரைப்பு-குற்றம். வாய்மை- உயர்வு: ஈண்டு ஒழுக்கம். இதன்கண் அறவுரைக் கின்றி யமையா நான்கும் அவற்றின் போலியும் தொகுத்துக் கூறப்பட்டன. அவற்றை மேலே விரிப்பர்.        (3)
 
      -------------------------------------------------------------------------------------------
     
4. அறமுரைப்பவன் இயல்பு  


  அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
  இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
  மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
  பன்னுதற்குப் பாற்பட் டவன்.


(பதவுரை) அறம் கேட்டு-அற நூல்கள் பலவுங் கேட்டவனாயும், அருள் புரிந்து-அருளுடையவனாயும், ஐம்புலன்கள் மாட்டும் இறங்காது-ஐம்பொறிகளால் நுகரப்படும் இன்பங்களை விரும்பாதவனாயும், இருசார் பொருளும் துறந்து-அகப்பற்றுப் புறப்பற்றுகளை விட்டவனாயும், அடங்கி-அடக்கமுடையவனாயும்; மன் உயிர்க்கு-நிலைபெற்ற உயிர்களுக்கு, உய்ந்துபோம் வாயில்- வீடுபேற்றுக்குரிய வழியினை, உரைப்பானேல் - உரைப்பவன் ஒருவனுளனாயின், பன்னுதற்குப் பாற்பட்டவன்-அவன் அறமுரைத்தற்கு உரியவனாவன்.

(குறிப்பு) சார்-பற்று. மன்னுதல்-நிலைபெறுதல். பால்- உரிமை. இதனால், அறமுரைப்பவன் தன்மை விரித்துக் கூறப்பட்டது. அற நூல்களை அறமென்றது ஆகுபெயர். பன்னுதல்-விளக்கிச் சொல்லுதல். ஐம்பலன்கள்-சுவை; ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.  (4)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
5. அறமுரைப்பவராகார் இயல்பு  


  பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி
  வெள்ளை களிவிடமன் வேட்கையான்-தெள்ளிப்
  புரைக்கப் பொருளுணர்வா னென்றிவரே நூலை
  உரைத்தற் குரிமையிலா தார்.


(பதவுரை) பிள்ளை-பாலனும், பேய்-பேய் கொண்டானும், பித்தன்-பைத்தியம் பிடித்தவனும், பிணியாளன்-நோயாளனும், பின் நோக்கி-எட்டிய நோக்கமில்லாதவனும், வெள்ளை - முட்டாளும், களி-கட்குடியனும், விடமன்-பிறர்க்குத் துன்பம் செய்பவனும், வேட்கையான்-பேராசையுடையவனும், தெள்ளிப் புரைக்க பொருள் உணர்வான்-குற்றமுடையன வற்றையே ஆராய்ந்து உட்கொள்பவனும், என்ற இவரே- ஆகிய இவர்களே, நூலை உரைத்தற்கு உரிமை இலாதார்- அறநூலைக் கூறுதற்கு உரிமையில்லாதவராவர்.  

(குறிப்பு) வெண்மை-அறிவின்மை.பிள்ளை முதலியோர் அற முரைப்பவராகார் என்பது கருத்து. பின் நோக்கி - முன்னேற்றத்தில் நோக்கம் இல்லாதவனுமாம். ஏகாரம்: பிரிநிலைப் பொருள் கொண்டது. என்ற+இவரே-என்றிவரே: அகரந்தொகுத்தல் விகாரம். (5)
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 06:19:02 PM
   
6. அறங்கேட்டற்குரியா னியல்பு  


  தடுமாற்ற மஞ்சுவான் தன்னை யுவர்ப்பான்
  வடுமாற்ற மஞ்சித்தற் காப்பான்-படுமாற்றால்
  ஒப்புரவு செய்தாண் டுறுதிச்சொல் சேர்பவன்
  தக்கான் தரும உரைக்கு.


(பதவுரை) தடுமாற்றம் அஞ்சுவான்-தன் சோர்வு படுதலுக்கு அஞ்சுபவனும், தன்னை உவர்ப்பான் - பிறர் தன்னைப் புகழுங்கால் அதனை வெறுப்பவனும், வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான்-பழி வராமல் தன்னைக் காத்துக்கொள்பவனும், படும் ஆற்றால் ஒப்புரவு செய்து-தன்னால் இயன்றவளவு பிறருக்கு உதவிசெய்து, ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன் - அந்நிலையிற் பெரியோர்பால் உறுதி மொழிகளைக் கேட்டு அதன்வழி நிற்பவனுமாகிய ஒருவன், தரும உரைக்குத் தக்கான்-அறநூல் கேட்டற்கு உரியவனாவான்.  

(குறிப்பு) அஞ்சுவான்,உவர்ப்பான்,காப்பான்,சேர்பவன் வினை
யாலணையும் பெயர்கள். ஒப்புரவு-  யாவர்க்கும்ஒருபடித்தாய் உதவி செய்தல்.      (6) 
 
 
     -------------------------------------------------------------------------------------------------------
     
7. அறங்கேட்டற்காகார் இயல்பு  


  தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
  புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான்-இன்சொல்லை
  ஏன்றிருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்
  கான்றவர்கள் கூறா ரறம்.


(பதவுரை) தன்சொல்லே மேல் படுப்பான்-தான் கூறியதே சிறந்ததென்று கூறுபவனும், தண்டி-மானமுள்ளவனும், தடிபிணக்கன்-மிக்க மாறுபாடு கொண்டவனும், புன் சொல்லே போதரவு பார்த்து இருப்பான்-பிறர் கூறும் இழிசொற்களின் வரவினையே எதிர்பார்த்து இருப்பவனும், இன்செல்லை ஏன்று இருந்தும் - இன்பந்தரும் உறுதிமொழிகளைக் கேட்கக் காலமும் இடமும் வாய்த்தும், கேளாத ஏழை-கேளாத மூடனும், என இவர்கட்கு-ஆகிய இவர்களுக்கு, ஆன்றவர்கள்- பெரியோர்கள், அறம் கூறார்-அறநூலைச் சொல்லார்கள்.

(குறிப்பு) தடுமாற்றம்-அம் ஈற்றுத் தொழிற்பெயர். தடுமாறு: பகுதி; போதரவு-போதல்: தொழிற்பெயர்; 'நுண்ணுணர்வின்மை வறுமை' என்றாராகலின். ஏழை-மூடன்.     (7)   
 
  --------------------------------------------------------------------------------------------------------   
     
8. நல்லற வியல்பு


  வினையுயிர் கட்டுவீ டின்ன விளக்கித்
  தினையனைத்தும் தீமையின் றாகி--நினையுங்கால்
  புல்லறத்தைத் தேய்த்துலகி னோடும் பொருந்துவதாம்
  நல்லறத்தை நாட்டுமிடத்து.


(பதவுரை) நினையுங்கால்-ஆராயுமிடத்து, நல்அறத்தை நாட்டுமிடத்து-நல்லறத்தினை நிலைநிறுத்தக் கருதின், (அந்நல்லறமானது) வினைஉயிர் கட்டு வீடு இன்ன விளக்கி வினையும் ஆன்மாவும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இவற்றை நன்கு உணர்த்தி, தினை அனைத்தும் -தினையளவும், தீமை இன்று ஆகி-குற்றமில்லாததாய், புல்லறத்தை-பாவச்செயல்களை, தேய்த்து-அழித்து, உலகினோடும் பொருந்துவதாம்-உயர்ந்தோர் ஒழுக்கத்தோ டும் பொருந்துவதாகும்.  

(குறிப்பு) தகட்டு - பாசம். தினை - சிறிய அளவு. நல்லறத்திற்கு எதிர்மொழியாகப் புல்லறம் எனப் பின்வருவது நினைவிலிருத்தற்குரியது.    (8)   
 
     -----------------------------------------------------------------------------------------------------
     
9. புல்லற வியல்பு  


  ஆவட்டை போன்றறியா தாரை மயக்குறுத்திப்
  பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க்--காவிட்(டு)
  இருமைக்கும் ஏமம் பயவா தனவே
  தருமத்துப் போலிகள் தாம்.


(பதவுரை) ஆவட்டை போன்று-மரணமடையு நிலையிலி ருப்பார் போன்று, அறியாதாரை-அறிவில்லாதவர்களை, மயக்குறுத்தி - மயக்கி, பாவிட்டார்க்கு எல்லாம் - விரும்பினவர்களுக்கெல்லாம், படுகுழியாய் - மிக்க துன்பம் பயப்பவாய், காவிட்டு - துன்பம் உற்றுழி உதவுதலின்றி, இருமைக்கும் ஏமம் பயவாதென - இம்மை மறுமைக ளுக்கு உறுதி பயவாதவை யாவை அவை, தருமத்துப் போலிகள்தாம் - அறநூல்கள் போன்றிருப்பினும் அறநூல்க ளாகா.  

(குறிப்பு) மரண நிலையிலிருப்போர் தன்மையைக் குறித்து 'ஆவட்டை கோவட்டையாயிருக்கிறது' என்று சொல்வது சேர நாட்டிடை வழங்குவதொரு வழக்கு. மரண நிலையிலிருப்பார் அறிவிலிகள். மனத்தில் குழப்பத்தினை யுண்டாக்குபவர் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. ஆவட்டை ஒரு பூண்டுமாம் துன்பம் உற்றுழி உதவுதலாவது சேற்றுநிலத்தி லியங்குவார்க்கு ஊன்று கோல் போன்று உதவுதல். இம்மை மறுமைகட் குறுதி களாவன புகழ் இன்பங்கள் 'பயவாவெனவே' என்பதூ உம் பாடம்; பொருந்தாமையை ஆராய்ந்தறிக. பாவிட்டார்-பாவிடு: பகுதி; இடு: துணை வினை. பாவி - கருது, விரும்பு.   (9)   
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
10. அறவுரையா லாம்பயன்  


  புல்ல வுரைத்தல் புகழ்தல் பொருளீதல்
  நல்ல ரிவரென்று நட்பாடல்--சொல்லின்
  அறங்கேள்வி யாலாம் பயனென் றுரைப்பார்
  மறங்கேள்வி மாற்றி யவர்.


(பதவுரை) சொல்லின்-சொல்லுமிடத்து, மறம் கேள்வி மாற்றியவர் - பாவத்தன்மையை அறநூல்களைக் கேட்டலால் மாற்றிய பெரியோர்கள், புல்ல உரைத்தல்-பலரும் தம்மை அடையுமாறு சொல்லு தலும், புகழ்தல்-பலரானும் புகழப்படுதலும், பொருள் ஈதல்-பொருள் ஈயப்படுதலும், நல்லர் இவர் என்று நட்பாடல்-இவர் நல்லவரென்று கருதிப் பலரும் நட்பினராக வந்தடைதலுமாகிய இவற்றை, அறம் கேள்வியால்-அந் நூல்களைக் கேட்பதனால், ஆம்- வரும், பயன் என்று உரைப்பர்-பயனென்று சொல்லுவார்கள்.  

(குறிப்பு) புல்ல வுரைத்தல் மூன்றும் அறவுரையை அறிந்தமையாலாம் பயனாம். மாற்றியவர் உரைப்பர் எனமுடிக்க.   (10)
 
     
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 06:31:38 PM
   
11. இதுவுமது 


காட்சி யொழுக்கொடு ஞானந் தலைநின்று
மாட்சி மனைவாழ்த லன்றியு--மீட்சியில்
வீட்டுலக மெய்தல் எனவிரண்டே நல்லறங்
கேட்டதனா லாய பயன்.



(பதவுரை) நல்லறம்-சிறந்த அறநூல்களை, கேட்டதனால்- கேட்பதனால், ஆய-உண்டாகும், பயன்-பயன்களாவன, காட்சி ஒழுக்கொடு-அறிவு ஒழுக்கங்களோடு, மாட்சி- பெருமை பொருந்திய, மனை வாழ்தலும்-இல்லறத்தில் வாழ்தலும், அன்றி- அதுவேயன்றி, ஞானந் தலைநின்று- ஞானத்தால் சிறந்து, மீட்சியில்-மீளுதலில்லாத, வீட்டுலகம் எய்தாலும்-வீடுபேற்றினையடைதலும், என இரண்டே-ஆகிய இரண்டே ஆகும்.  

(குறிப்பு) மனை வாழ்க்கையும் வீடுபேறுமாகிய இரண்டுமே அறங்கேட்டதனாலாய பயனாம். மேற்கண்ட பத்துப்பாக்களும் இந்நூற்குப் பொதுவாகிய இன்றியமையா நான்கினையும் விளக்குகின்றமையாற் பாயிரமாயின. (11)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
நூல்


12. அறம் பத்தாவன
 


மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவமடக்கம்
செம்மையொன் றின்மை துறவுடைமை--நன்மை
திறம்பா விரதந் தரித்தலோ டின்ன
அறம்பத்தும் ஆன்ற குணம்.



(பதவுரை) மெய்ம்மை-உண்மையும், பெறையுடைமை- பொறுமையும், மேன்மை-பெருமையும், தவம்-தவமும், அடக்கம்-அடக்கமும், செம்மை-நடுநிலைமையும், ஒன்றின்மை-தனக்கென ஒன்று இல்லாதிருத்தலும், துறவுடைமை-பற்றுவிடுதலும், நன்மை-நல்லன செய்தலும், திறம்பா விரதம் தரித்தலோடு-மாறுபடாத விரதங்களை மேற்கொள்ளுதலுமாகிய, இன்ன அறம் பத்தும்-இவ்வறங்கள் பத்தும், ஆன்ற குணம்-மேலான குணங்களாம்.

(குறிப்பு) ஒன்றின்மை-தனக்கென வொன்றைப் பெறாது பொதுமக்களுக்காகக் காரியஞ் செய்தல். திறம்பா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (12)
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
13. அறமே அனைத்தினுஞ் சிறந்தது  


தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையுஞ் செய்து-- மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோ
டேகமா நண்பொன்று மில்.


(பதவுரை) பொன்னே-இலக்குமி போன்றவளே, தனக்குத் துணையாகி-செய்தவனுக்கு இம்மை மறுமைகளில் துணையாக நின்று, தன்னை விளக்கி-அவனைப் பலரும் அறியுமாறு செய்து, இனத்துள் இறைமையும் செய்து- சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனக்கு இனிய போகம் தருதலால்-மனதிற்கினிமையான செல்வத்தினையுங் கொடுப்பதால், அறத்துணையோடு- அறமாகிய துணையோடு, ஏகமாம்-ஒன்றாக வைத்தெண்ணு தற்குரிய, நண்பு ஒன்றும் இல்-நட்பினர் ஒருவரும் இல்லை.  

(குறிப்பு) மனக்கு: அத்துச்சாரியை பெறாது வேற்றுமை யுருபு ஏற்றுவந்தது. அறத்துணை: பண்புத்தொகை, நண்பு - உதவி செய்வது என்றுமாம். (13)  
 
     --------------------------------------------------------------------------------------------------------
     
14. அறமே மறுமைக்குத் துணையாம்  


ஈட்டிய வொண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர்--மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை.


(பதவுரை) ஈர்ங்குன்ற நாட-குளிர்ந்த மலைநாட்டுக்கரசே! ஈட்டிய-தேடிய, ஒண் பொருளும்-சிறந்த செல்வமும், இல் ஒழியும்-மனையி லேயே நின்றுவிடும், சுற்றத்தார்-உறவினர், காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர்-சுடுகாட்டுவரை கூட அழுதுகொண்டு வந்து நீங்குவர், மூட்டும் எரியின்- மூட்டப்படுகின்ற நெருப்பால், உடம்பு ஒழியும்-உடல் அழியும், தெரியின்-ஆராயின், அறமே துணை-ஒருவனுக்கு துணையாவது அறமேயாகும்.  

(குறிப்பு) அறமே-ஏகாரம: பிரிநிலை. எரியின்- இன; ஐந்தனுருபு ; ஏதுப்பொருள். (14)
 
    --------------------------------------------------------------------------------------------------------- 
     
15. இல்லற துறவறங்களின் ஏற்றம்  


நோற்பவ ரில்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவருக்குச் சார்வா யறம்பெருக்கி--யாப்புடைக்
காழுங் கிடுகும்போல் நிற்குங் கயக்கின்றி
ஆழிசூழ் வையத் தறம்.



(பதவுரை) நோற்பவர்-துறவிகள், இல்லவர்க்கு-இல்லறத் தாருக்கு, சார்வாகி-பற்றுக்கோடாகியும், இல்லவரும்- இல்லறத்தாரும், நோற்பவர்க்கு-துறவிகளுக்கு, சார்வாய்- பற்றுக்கோடாகியும், அறம் பெருக்கி-முறையே இல்லறம் துறவறங்களை வளர்த்தலால், ஆழி சூழ்-கடல் சூழ்ந்த, வையத்து-பூமியில், அறம்-அவ்வறங்கள், கயக்கு இன்றி- சோர்வில்லாமல், யாப்பு உடை-உறுதி பெற்ற, காழும் கிடுகும்போல்-தூணும் சட்டப் பலகையும் ஒன்றுக்கொன்று ஆதரவாயிருத்தல்போல, நிற்கும்-ஒன்றுக்கொன்று ஆதரவாக நிற்கும்.  

(குறிப்பு) நோற்பவர்-நோல்: பகுதி. காழும், கிடுகும் மறைப்பாக அமைக்கப்பட்ட வலுவான ஊன்றுகோலும் மறைப்புத் தட்டியுமாம். ஆழி-ஆழமுடையது; கடல். (15)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 06:44:34 PM
   
16. இளமையி லறஞ்செய்கை  


இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்


(பதவுரை) இன்சொல்-இனியசொல்லே, விளை நிலமா-விளை நிலமாகவும், ஈதலே-ஈகையே, வித்தாக-விதையாகவும், வன் சொல்- கடுஞ்சொல்லாகிய, களை கட்டு-களை பிடுங்கி, வாய்மை-உண்மையாகிய, எரு அட்டி-எருவிட்டு, அன்பு-அன்பாகிய, நீர் பாய்ச்சி-நீரைப் பாய்ச்சி, அறக்கதிர்-அறமாகிய கதிரை, ஈன்றது-ஈனுவதாகிய, ஓர்-ஒப்பற்ற, பைங்கூழ்-பசிய பயிரை, சிறு காலை- இளம்பருவத்திலேயே, செய்-செய்வாயாக.  

(குறிப்பு) நெஞ்சே என்ற விளி வரவழைத்துக் கொள்ளப்பட்டது. (16)  
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
17. இளமையி லறஞ்செய்தலின் இன்றியமையாமை  


காலைச்செய் வோமென் றறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார்--மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால்மற் றென்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு.



(பதவுரை) அறத்தை-அறத்தினை, காலை-இளம் பருவத்திலேயே, செய்வோம் என்று-செய்வோமென்று கருதி, கடைப்பிடித்து-உறுதியாகக்கொண்டு, சாலச் செய்வாரே-மிகச் செய்வோரே, தலைப்படுவார்- உயர்ந்தோராவார், மாலை-இரவில், கிடந்தான்-படுத்தவன், எழுதல்-காலையில் எழுவது, அரிது-அருமை, (அங்ஙனமாகவும்), அறம்-அறத்தினை, காலை-இளம் பருவத்திலேயே, செய்யாதவாறு-செய்யாதிருத்தல், என்கொல்-என்ன அறிவீனமோ?  

(குறிப்பு) கொல்: ஐயப்பொருள்தரு மிடைச்சொல். ஆல், மற்று: அசைநிலைகள். (17)
 
  -------------------------------------------------------------------------------------------------------   
     
18. இளமையி லறஞ்செய்யாமையின் இழிவு  


சென்றநா ளெல்லாம் சிறுவிரல்வைத் தெண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வரிது--என்றொருவன்
நன்மை புரியாது நாளுலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம்.



(பதவுரை) சென்ற நாள் எல்லாம்-ஆயுளில் கழிந்த நாட்களெல்லாவற்றையும், சிறுவிரல் வைத்து எண்ணலாம்-சிறிய விரல்களால் எண்ணிக் கணக்கிட்டு விடலாம், நின்ற நாள்-இனி உள்ள நாட்களை, யார்க்கும் உணர்வு அரிது-இவ்வளவு என்று அளவிட்டறிய யாராலும் இயலாது, என்று-என்று கருதி, ஒருவன் நன்மை புரியாது-ஒருவன் நல்வினையை விரைந்து செய்யாமல், நாள் உலப்ப-ஆயுள்நாள் வீணே அழியுமாறு, விட்டிருக்கும் புன்மை-விட்டிருப்பதால் வருந் துன்பம், புறம்பெரிது- பின் மிகும்.

(குறிப்பு) சிறு விரல் வைத்து-சிறிய சுண்டு விரலை முதலாகக் கொண்டு என்றுமாம். உலப்ப : வினை யெச்சம்; உல : பகுதி, புறம்-அப்புறம்: பின்பு. புன்மை- இழிவென்றுமாம். (18)  
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
19. கூற்றத்தின் நடுவுநிலைமை  


கோட்டுநா ளிட்டுக் குறையுணர்ந்து வாராதால்
மீட்டொரு நாளிடையுந் தாராதால்--வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சா தமைந்திருக்கற் பாற்று.


(பதவுரை) கோட்டுநாள் இட்டு-விதித்த நாளை விட்டு, குறை உணர்ந்து வாராது-குறைநாளில் வருவதுமில்லை; மீட்டு ஒருநாள் இடையும் தாராதால்-விதித்த நாளுக்குமேல் மிகுதியாக ஒருநாள் கூடக் கொடுப்பதும் இல்லை; வஞ்சஞ் செய் கூற்றம்-வருதலை முன்னர் அறிவியாது வந்து வஞ்சிக்கின்ற எமன், வீட்டுதற்கே-அழிப்பதற்கே, வருதலால்- வருவதனால், நன்று ஆற்றி-அறத்தினை மிகவும் செய்து, அஞ்சாது-(மரணத்திற்கு) அஞ்சாமல், அமைந்து இருக்கற்பாற்று-அடங்கியிருத்தல் வேண்டும்.

(குறிப்பு) ஆல் முன்னிரண்டும் அசைநிலைகள்; பின்னது மூன்றனுருபு, கூற்றம் உயிரையும் உடலையும் கூறுபடுப்பது. (19)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
20. உடலும் செல்வமும் நிலையாமை  


இன்றுளார் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே பிறருடைமை யாயிருக்கும்--நின்ற
கருமத்த ரல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
தருமந் தலைநிற்றல் நன்று.



(பதவுரை) இன்று உளார் இன்றேயும் மாய்வர்-இன்றைக் கிருப்பவர் இன்றே அழியினும் அழிவர், அவர் உடைமை அன்றே பிறருடைமை ஆயிருக்கும்-அவர் செல்வம் அவர் இறந்த அப்பொழுதே அயலாருடைய செல்வமாகும், (ஆதலால்) அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்-கொடிய எமனது ஆணையின்கீழ் வாழும் மாந்தர், நின்ற கருமத்தர்-நிலைபெற்ற செயலையுடையராய், தருமம் தலைநிற்றல் நன்று-அறத்தினை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

(குறிப்பு) தலைநிற்றல், ஒருசொல்; மேற்கொண்டொழுகுதல், (20)  
 
     
   
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 07:16:53 PM
   
21. இளமை நிலையாமை  


மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.


(பதவுரை) மின்னும்-மின்னல் போலும், இளமை-இளமைப் பருவமானது, உளதாம்-நிலைத்திருக்கும், என மகிழ்ந்து - என்று மகிழ்ந்து, பின்னை-முதுமையில், அறிவென் என்றல்-அறத்தினைப்பற்றி அறிவேன் என்று கருதுதல், பேதைமை-அறியாமையேயாகும், கூற்றம்-எமன், அணித்தாய்-இளமையிலேயே, வருதலும் உண்டு - ஆயுளைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு, (ஆதலால்) தன்னைத் துணித்தானும்-தனது உடலை வருத்தியேனும், தூங்காது-காலதாமதம் செய்யாமல், அறம் செய்க-அறத்தினை ஒவ்வொருவனும் செய்வானாக.

(குறிப்பு) அறிவென்: என் ஈற்றுத்தன்மை ஒருமை வினைமுற்று. துணித்தல்-துண்டாக்கல், வருத்தல். (21)
 
  ------------------------------------------------------------------------------------------------------   
     
22. அறவரணத்தின் இன்றியமையாமை


மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற வரசன் குறும்பெறியும்-ஆற்ற
அறவரண மாராய்ந் தடையினஃ தல்லால்
பிறவரண மில்லை யுயிர்க்கு.


(பதவுரை) மூப்பொடு தீ பிணி-முதுமையையும் கொடிய நோயையும், முன்னுறீஇ-முன்னரடைவித்து, கூற்ற அரசன்-எமனாகிய அரசன், பின் வந்து-பின்னர் அடைந்து, குறும்பு எறியும்-உடலாகிய அரணை அழிப்பான், ஆராய்ந்து -பலவற்றாலும் ஆராய்ந்து, ஆற்ற அற அரணம்-மிக்க அறமாகிய பாதுகாவலை, அடையின் அஃது அல்லால் - அடைந்தாலன்றி, உயிர்க்கு பிற அரணம் இல்லை - உயிர்களுக்குப் பாதுகாவலான இடம் வேறொன்றுமில்லை.

(குறிப்பு) முன்னுறீஇ: சொல்லிசை யளபெடை. அறவரணம்: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (22)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
23. நன்கு செய்யப்பட வேண்டியது நல்லறமே  


திருத்தப் படுவ தறக்கருமந் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க--பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஞமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு.


(பதவுரை) திருத்தப்படுவது-நன்றாகச் செய்யத் தகுவது, அறக் கருமம்-அறச்செயல்களேயாகும், பெருங் கூற்றம்-வலிமிக்க எமன், பெருக்க வரவும்-உயிர்களைக் கவர்ந்து செல்லப் பலமுறை வருதலையும், வன்கண்-கொடிய, ஞமன்-அவ் யமனது, கீழ்த்தர வறுத்து-கட்டளையை மீறி, மீளாமை-அவனால் கவரப்பட்ட உயிர்கள் திரும்பாமையையும், கண்டு-காணலால், மாண்புடையார்-பெரியோர்கள், தம்மை-தமதுடலை, வருத்தியும்-வருத்தியேனும், செய்க-அவ்வறத்தினைச் செய்வார்களாக.

(குறிப்பு) வன்கண்மை-கொடுமை, ஞமன்-யமன்; யகர ஞகர முதற்போலி; அன்றி நமன் ஞமன் என நகர ஞகரப் போலியுமாம். (23)
 
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
24. அறத்தினை விரைந்து செய்க  


முன்னே ஒருவன் முடித்தான்றன் துப்பெலாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல்?--முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து.


(பதவுரை) முன்னே-தனக்கு முன்னே, ஒருவன்-பிறனொருவன், தன் துப்பு எலாம்-தன் நுகர்பொருள்பலவற்றையும், முடித்தான்-அழித்துச் சென்றான், ஒருவன்-அதனைப் பார்த்த அவன், இகழ்ந்திருத்தல்-(அறத்தினைச்செய்யாமல்) ஏளனஞ் செய்திருத்தல், என்னே-என்ன பேதமை!, முன்னே முடித்த படியறிந்து-முன்னே பெரியோர்கள் செய்த வழியை யறிந்து, முன்முன்-மேலும்மேலும், பெரிதாய் விரைந்து-மிக விரைந்து, அறத்தைப்பிடிக்க-அறத்தினைச் செய்க.

(குறிப்பு) முன்முன்: அடுக்குத் தொடர், விரைவுப் பொருள் கூறியது. பிடிக்க: வியங்கோள். (24)  
 
     -------------------------------------------------------------------------------------------------------
     
25. அறஞ்செய்யாமையால் வருங்கேடு  


குறைக்கருமம் விட்டுரைப்பிற் கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க--பிறப்பிடைக்கோர்
நெஞ்சேமாப் பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரந் தரும்.


(பதவுரை) பிறப்பிடைக்கு-மறு பிறப்பிற்கு, ஓர்-ஒப்பற்ற, நெஞ்சு-தன் மனத்தை, ஏமாப்பு இல்லாதான்-அரணாகக் கொள்ளாதவன், வாழ்க்கை-வாழ்க்கையானது, நிரயத்து-நரகில், துஞ்சா-அழிவில்லாத, துயரம் தரும்-துன்பத்தினைக்கொடுக்கும் (ஆதலால்) அறக் கருமம்-அறவினையை, ஆராய்ந்து செய்க- (நெஞ்சே!) ஆராய்ந்து செய்வாயாக, குறைக்கருமம்-இன்றி யமையா வினைகளை, விட்டு உரைப்பின்-விரித்துக் கூறப்புகின், கொள்ள உலவா-அளவிலடங்கா.

(குறிப்பு) குறைக்கருமம்-வேண்டிய நிலையிற் குறைந்த வினைகள். (25)
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 09:03:35 PM
   
26. உடல் நிலையாமை  


அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரண மென்னை?--மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மை யால்.


(பதவுரை) ஒருவன்-நான்முகன், நாட்டு-படைத்த, விடக்கு ஊர்தி-இறைச்சியாலாகிய வாகனம் (உடல்), அச்சு இறுங்காலத்து-அச்சொடிந்து (உயிர் பிரிந்து) அழியுங் காலத்தில், கூட்டும் திறம் இன்மையால்-அதனைப் பொருத்தி நடத்தும் தன்மை இன்றாகவும், அறம் புரிந்து-அறத்தினை விரும்பி, ஆற்றுவ செய்யாது-இயன்ற அளவு செய்யாமல், மறந்து நாளும் உறங்குதல்-மறந்துபோதலால் எப்பொழுதும் காலத்தை வீணே கழித்தல், என்னை காரணம்-(நெஞ்சே) யாது கருதி?

(குறிப்பு) அச்சு-உயிர்; ஊர்தியாகிய உடலின் ஆதரவான பாகம் . (26)
 
  ------------------------------------------------------------------------------------------------------   
     
27. அறனில்லா வாழ்க்கை யழிவேயாம்


பாவம் பெருகப் பழிபெருகத் தன்னோம்பி
ஆவதொன் றில்லை யறனழித்துப்--பாவம்
பொறாஅ முறைசெய் பொருவில் ஞமன்கீழ்
அறாவுண்ணும் ஆற்றவு நின்று.


(பதவுரை) முறைசெய்-நீதியைச் செய்கின்ற, பொரு இல்-ஒப்பற்ற, ஞமன்-எமன், பாவம் பொறாஅ-நாம் செய்யும் பாவத்தினைப் பொறாமல், ஆற்றவும் நின்று-மிகவும் அசைவின்றி நின்று, கீழ் அறா உண்ணும்-மறைந்து ஆயுளைக் குறைத்து உண்பானாதலின், அறனழிந்து-அறத்தினைக் கொன்று, பாவம் பெருக-பாவம் பெருகவும், தன் ஓம்பி-தன்னை ஓம்பி வாழ்வதால்,ஆவது ஒன்று இல்லை-ஆகும் பயனொன்றும் இல்லை.


(குறிப்பு) பொறாஅ: இசைநிறை யளபெடை, ஞமன்-யமன்; முதற்போலி . (27)
 
-----------------------------------------------------------------------------------------------------     
     
28. அறனை மறவேல்  


முற்செய் வினையின் பயன்றுய்த் ததுவுலந்தால்
பிற்செய் வினையின்பின் போகலால்--நற்செய்கை
ஆற்றுந் துணையும் அறமறவேல் நன்னெஞ்சே!
கூற்றங் குடில்பிரியா முன்.


(பதவுரை) நல் நெஞ்சே-நல்ல மனமே!, முன் செய் வினையின்-முற்பிறப்பிற் செய்த வினையினது, பயன் துய்த்து-பயனை அனுபவித்து, அது உலந்தால்-அஃது அழிந்தால், பின் செய்-இப் பிறப்பில் செய்த, வினையின்பின் போகலால்-வினைவழியே சென்று வேறு பிறப்பினை அடைவதால், கூற்றம்-எமன், குடில் பிரியா முன்-உடலினின்றும் உயிரை வேறு படுப்பதன் முன், நற்செய்கை-நல்வினையை, ஆற்றுந் துணையும்-செய்ய ஆற்றலுளதாங் காலம் முடிய, அறம் மறவேல்-அறத்தினை மறவாது செய்வாயாக.

(குறிப்பு) குடில்-உயிரின் இருக்கையாகிய உடல். மறவேல்: எதிர்மறை ஏவலொருமை வினைமுற்று. (28)
 
   -------------------------------------------------------------------------------------------------------   
     
29. கிடைத்ததைக்கொண்டு அறஞ்செய்க  


திரையவித்து நீராட லாகா உரைப்பார்
உரையவித் தொன்றுஞ்சொல் இல்லை-அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகா துளவரையால்
செய்வதற்கே ஆகுந் திரு.



(பதவுரை) திரை அவித்து நீராடல் ஆகா-அலைகளை ஒழித்துப் பின் கடல் நீராடுதல் எவர்க்கும் ஆகாது (என்று), உரைப்பார் உரை அவித்து-உரைப்பவர் உரையை விட்டால், ஒன்றும் சொல் இல்லை-வேறு மெய்ம்மை பொருந்தும் சொல் இல்லை, (ஆதலின்), அரைசராய்ச் செய்தும் அறமெனினும் ஆகாது-ஒருவர் அரசராய்ப் (பெருஞ் செல்வம்) பெற்றபின் அறத்தினைச் செய்வேமெனக் கருதின் அக்காலத்துச் செல்வம், அவருக்கு அறஞ்செய்ய உதவுவதில்லை, உளவரையால் செய்வதற்கே ஆகும் திரு-பெற்ற அளவினுக்கேற்ப அவ்வப்போது அறஞ்செய்யப் புகுகின்றவனுக்கே அறஞ்செய்வதற்குத் துணையாக நிற்கும் அவனது செல்வம்.

(குறிப்பு) “அலையொழிந்து கடலாடலாகாது” என்பது பழமொழி. உரைவித்து: எச்சத்திரிபு. அரைசர்-அரசர்; இடைப்போலி. (29)
 
   -------------------------------------------------------------------------------------------------------   
     
30. மூடனுக்கு அறவுரையாற் பயனில்லை  


கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லைமற் றொன்றும் அறனுணர்தல்--நல்லாய்
நறுநெய் நிறைய முகப்பினு மூழை
பெறுமோ சுவையுணரு மாறு

.
(பதவுரை) நல்லாய்-நற்குணமிக்க பெண்ணே!, மூழை - அகப்பையானது, நறு நெய்-நல்ல நெய்யோடு கலந்த உணவை, நிறைய முகப்பினும்-நிறைய முகக்கு மாயினும், சுவை உணருமாறு-சுவையினை அறியுந் தன்மையை, பெறுமோ-உடையதாகுமோ? (ஆகாது), அதுபோல, கல்லா ஒருவனை-படியாத ஒருவனுக்கு, காரணம் காட்டினும்-காரணங்காட்டி விளக்கிச் சொன்னாலும், அறன் உணர்தல் மற்று ஒன்றும் இல்லை-அவன் அறத்தினை ஒரு சிறிதும் உணரான்.

(குறிப்பு) ஒருவனை: உருபு மயக்கம். ‘அகப்பை யறுசுவை யறியுமோ?’ என்பது பழமொழி .காட்டினும், முகப்பினும்: உயர்வு சிறப்பும்மைகள். (30)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 14, 2011, 09:35:08 PM
   
31. கீழ்மகன் நெஞ்சில் அறவுரை புகாது  


வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும்--அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு
.

(பதவுரை) வைகலும்- நாள்தோறும், நீருள் கிடப்பினும் - நீரினுள்ளேயே கிடந்தாலும், கல்லிற்கு-கல்லுக்கு, மெல்லென்றல்-மென்மையடைதல், சால அரிதாகும் - சிறிதும் இல்லை, அஃதே போல்-அதுபோல், வைகலும் - நாள் தோறும், நல்லறம்-நல்ல அறநூல்களை, கேட்பினும் - கேட்டாலும், கீழ் கட்கு-கயவர்களுக்கு, நெஞ்சு-மனமானது, கல்லினும் வல்லென்னும்-கல்லைக் காட்டிலும் திண்ணியதாகவே இருக்கும்.  

(குறிப்பு) சால: உரிச்சொல், மிகுதிப்பொருள், பொருளின் போக்குக் கொண்டு சிறிதும் என உரைக்கப்பட்டது. (31)
 
     
     --------------------------------------------------------------------------------------------------

32. கீழ்மக்கட்குக் கட்டாயப் படிப்பாலும் பயனில்லை  


கயத்திடை உய்த்திடினும் கன்னனையா தென்றும்
பயற்றுக் கறிவேவா தற்றால் - இயற்றி
அறவுரை கேட்ட விடத்தும் அனையார்
திறவுரை தேறா தவர்.



(பதவுரை) கயத்திடை - குளத்தினிடை, உய்த்திடினும்-செலுத்தினாலும், கல் நனையாது-கல் மெல்லென ஊறியுறாது, என்றும்-எக்காலத்தும், பயறுகறி-பயறு களுள் பத்தினிப் பயறாக இருப்பது கறியினிடத்தே, வேவாது-வேவதில்லை, அற்று-அது போல், இயற்றி-விதிகளுக்குட்படுத்தி, அறவுரை கேட்டவிடத்தும்-அற நூல்களைக் கேட்குமாறு செய்தாலும், அனையார்-அக் கீழ்மக்கள், திறவுரை தேறாதவர்-உறுதி மொழிகளை யுணராதவர்களே யாவர்.

(குறிப்பு) இடை : ஏழனுருபு. பயறு-முனையினைக் கொண்டிராத பயறு: பத்தினிப் பயறு .அ: பண்டறி சுட்டு. ஆல்: அசை.                  (32)
 
     ------------------------------------------------------------------------------------------------------
     
33. நெஞ்சின் கொடுமை  


அற்ற பொழுதே அறநினைத்தி யாதொன்றும்
பெற்ற பொழுதே பிறநினைத்தி--எற்றே
நிலைமையில் நன்னெஞ்சே! நின்னொடு வாழ்க்கை
புலைமயங்கி யன்ன துடைத்து.



(பதவுரை) அற்ற பொழுதே-பொருளற்ற காலத்தில், அறம் நினைத்தி-பொருளிருப்பின் அறம் செய்யலாம்; இல்லையே என் செய்வது என்று நினைத்து வருந்துகின்றாய், யாதொன்றும் பெற்ற பொழுதே-ஏதாவது ஒரு செல்வத்தினை யடைந்த காலத்திலோ, பிற நினைத்தி-அறத்தினை மறந்து பாவச்செயல்களைச் செய்ய விரும்புகின்றாய், நிலைமையில் நன்னெஞ்சே-ஒரு நிலையில்லாத நல்ல மனமே!, எற்றே-இஃதென்னே, நின்னொடு வாழ்க்கை-உன்னோடு கூடிவாழ்தல், புலைமயங்கி அன்ன துடைத்து-புலைமக்களோடு சேர்ந்து வாழ்வது போலும்.  

(குறிப்பு) புலை-புலைமக்கள், பண்பாகுபெயர். நினைத்தி: முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று. (33)
 
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
34. உடலி னழிவு


ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட--திருவாளா!
வீணாள் படாமைநீ துன்னம்பொய் யேயாக
வாணாள் படுவ தறி.



(பதவுரை) ஒருபால்-ஒருபுறம், திருத்த-தைக்க, ஒருபால்-மற்றொருபுறம், கிழியும்-கிழிகின்ற, பெறுவாழ்க்கை- பெரிய வாழ்க்கையாகிய, முத்தாடை-விலையுயர்ந்த உடலாகிய ஆடையை, கொண்ட-உடுத்த, திருவாளா-செல்வமுடையவனே! நீ துன்னம் பொய்யே யாக-நீ தைத்தல் பயனின்றி, வாணாள் படுவது-ஆயுள் நாள் அழிவதை, வீணாள் படாமை அறி-நாள்கள் வீணாக கழியு முன் அறிக.  

(குறிப்பு) திருவாளன் என்றது இழிவு பற்றியது. தின்னம்-தைத்தல். (34)
 
     
    --------------------------------------------------------------------------------------------------------
 
35. அறஞ்செய்யாமையால் வரு மிழிவு


உள்ளநாள் நல்லறஞ் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாட் போயேன றிடங்கடிந்து--தொல்லை
இடைக்கடையு மாற்றார் இரந்தார்க்கு நின்றார்
கடைத்தலைவைத் தீயும் பலி.


(பதவுரை) தொல்லை இடைக் கடையும் ஆற்றார்-முன் தாம் செல்வமுடையரா யிருந்தகாலத்தில் அறம் சிறிதும் செய்யாமல், இல்லை நாட்போய் ஏன்று இடங்கடிந்து இரந்தார்க்கு-பின் வறியரான காலத்தில் தம்மிடம் விட்டுப் பெயர்ந்து ஆங்காங்குப் போய் ஏற்றுத் திரிந்து பிறர்பால் இரந்தார்க்கு, நின்றார் கடைத்தலை வைத்தீயும் பலி-இரக்கப்படுவார் தம் தலைவாயிலில் வைத்தீயும் பிச்சையானது, உள்ளநாள் நல்லறம் செய்க என்னும் சாற்றன்றோ-செல்வம் பெறும் காலத்தில் நன்மை தரும் அறத்தை செய்க என்று அவர்க்குச் சொல்லும் சொல்லாகு மன்றோ?

(குறிப்பு) சாற்று-சொல், அன்று, ஓ: தேற்றப்பொருளன. செய்க+என்னும்=செய்கென்னும்: அகரந்தொகுத்தல் விகாரம்.        (35)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 15, 2011, 12:51:22 AM
   
36. வயிற்றின் கொடுமை  


ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இருநாளைக் கீந்தாலும் ஏலாய்--திருவாளா!
உன்னோடு உறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே!
நின்னோடு வாழ்தலரிது.


(பதவுரை) இவ்வுடம்பே-இப் பசிநோயால் வருந்தும் வயிறே, ஒருநாளும் நீ தரியாய்-(உணவில்லாத காலத்தில்) ஒரு நாளாவது பொறுத்திராய், உண்ணென்று சொல்லி இரு நாளைக்கு ஈந்தாலும்-(நல்ல உணவை மிகுதியாகப் பெற்ற காலத்தில்) இதனை உண்பாயாக என்று கூறி இரண்டு நாளைக்கு வேண்டு வனவற்றை ஒரே தடவையில் கொடுத்தாலும், ஏலாய்-ஏற்றுக்கொள்ளாய், திருவாளா-திருவுடையோனே, உன்னோடு உறுதி பெரிது எனினும்-உன்னோடு சேர்ந்து வாழ்வதால் அடையும் பயன் சிறந்ததாயினும், நின்னோடு வாழ்தல் அரிது-உன்னோடு வாழ்வது துன்பமே.  

(குறிப்பு) உடம்பு: இடவாகுபெயர். அரிது-கூடாது: கூடின் துன்பமே. ''ஒருநாளுணவை''எனத் தொடங்கும் நல்வழிச் செய்யுளை இதனோடு ஒப்பு நோக்குக. (36)
 
    --------------------------------------------------------------------------------------------------- 
     
37. அறத்திற்கு இன்றியமையாதது அறிவே


கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையுங் கோடு மதுபோலும்--ஒட்டிய
காட்சி திரியி னறந்திரியும் என்றுரைப்பர்
மாட்சியின் மிக்கவர் தாம்.



(பதவுரை) கட்டளை-செங்கல் அறுக்கும் கருவி, கோடித்திரியின்- கோணலானால், கருதிய-அதனால் அறுக்கக் கருதிய, இட்டிகையும்-செங்கல்லும், கோடும்-கோணலாகும், அதுபோலும் -அதுபோல்,ஒட்டிய-பொருந்திய, காட்சி திரியின்-அறிவு வேறுபடின், அறம் திரியும்-அறம் வேறுபடும், என்று மாட்சியின் மிக்கவர் உரைப்பர்-என்று பெரியார் கூறுவர்.

(குறிப்பு) தாம்: அசைநிலை, இட்டிகையும்-உம்: இறந்தது தழுவிய எச்சவும்மை. (37)  
 
     -------------------------------------------------------------------------------------------------------
     
38. அறநூலால் அறியவேண்டிய ஆறு பொருள்கள்  


தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின் றுணிவொடு பக்கம்--மலைவின்றி
நாட்டியிவ் வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி யறமுரைப் பார்.


(பதவுரை) நல் நெறியை-ஒழுக்க நெறியினை, காட்டி-விளக்கி, அறம் உரைப்பார்-அறநூலை உணர்த்துவோர், தலைமகனும்-அருகனும், நூலும்-மெய்ந்நூலும், முனியும்-துறவியும், பொருளும்-உண்மைப் பொருளும், தொலைவின் றுணிவு ஓடு-அழிவின் துணிவையும், பக்கம்-அருகனிடத்தன்பும், இவ்வாறும்-இவ்வாறு பொருள்களையும், மலைவு இன்றி காட்டி-மாறுபாடு அற்றவனாகக் கொண்டு, உரைப்பார்-சொல்லுவார்.  

(குறிப்பு) தொலைவின் துணிவு-அழிவின் நிச்சயம். (38)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
39. சமயம் நம்பிக்கையாலே நடைபெறுவ தென்பது  


இறந்தும் பெரியநூ லெம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதே சென்றாற்றத்--துறந்தார்கள்
தம்பாலே வாங்கி யுரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம்.


(பதவுரை) சென்று-இல்லறத்தினின்று நீங்கி, ஆற்ற துறந் தார்கள் தம்பாலே-அகப்பற்றுப் புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே, வாங்கி உரைத்ததனால்-பெற்றுச் சொன்னதனால், இறந்தும் பெரிய நூல்-மிகவும் சிறந்த நூல், எம்மதே-எம்முடையதே, தெய்வம் அறந்தானும் இஃதே-தெய்வமும் இதுவே அறமும் இதுவே, ஆராய்ந்து-நீவிரும் நன்கு ஆராய்ந்து, நல்ல அறம்-நல்ல அறமாகிய இதனை, நம்புக-நம்பி மேற்கொள்வீர்களாக.

(குறிப்பு) இதன்கண் அறத்தாலாகிய சமய முடிவு கூறப்பட்டுள்ளது. (39)  
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
40. அகத்தூய்மையும் அருளுமே சிறந்த அறங்களாம்  


ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துள்ளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப் பொருடெரிந்-தொன்றோடொன்
றெவ்வா உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே
அவ்வாய தாகும் அறம்.


(பதவுரை) ஒன்றோடு ஒன்று ஒவ்வாத-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பாசண்டத்துள் எல்லாம்-புறச்சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றோடு ஒன்று ஒவ்வா-ஒன்றுக்கொன்று மாறுபட்ட, பொருள் தெரிந்து-பொருள் இவையென ஆராய்ந்தறிந்து, ஒன்றோடு ஒன் ஒவ்வா-பலவகைப்பட்ட, உயிரோம்பி-உயிர்களைக் காத்து, உள்தூய்மை பெற்றதே-அகத்தூய்மை பெற்றதே, அவ்வாயது அறம் ஆகும்-சிறந்த அறமாகும்.  

(குறிப்பு) ஏ-தேற்றப்பொருள் தரு மிடைச்சொல், உள்-அகம்; மனம். (40)  
 
     
     

Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 16, 2011, 05:55:31 PM
   
41. உண்மை நூலை உணரு முறை  


நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.


(பதவுரை) நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான்போல-பொன் வாங்குவோன் அதனைநிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்துவாங்குதல்போல, அறத்திறனும் ஆராய்ந்து உள்புக்கால்-அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால், பிறப்பு-பிறவியினை, அறுக்கும்-நீக்கும்படியான, மெய்நூல்-உண்மைநூலை, தலைப்படலாகும்-அடையலாம், கண் ஓடிக்கண்டதே கண்டு-கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக்கற்பின், ஆகாது-உண்மை நூலை அடைய இயலாது.  

(குறிப்பு) அறுத்தல்-வெட்டிப்பார்த்தல், சுடல் - நெருப்பிலிட்டுக் காய்ச்சி நோக்கல். மற்று:அசைநிலை.ஏ: பிரி நிலைப்பொருள் தரும் இடைச்சொல். (41)  
 
    ---------------------------------------------------------------------------------------------------- 
     
42. நடுநிலை காணு முறை  


காய்த லுவத்த லகற்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையோர் கண்ணதே--காய்வதன்கண்
உற்றகுணந் தோன்றாத தாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்.


(பதவுரை) காய்வதன்கண் உற்ற-வெறுக்கப்படும் பொருளி லுள்ள, குணம் தோன்றாததாகும்-குணம்ஆராய்வா னுக்குத் தோன்றாது. உவப்பதன்கண் -விரும்பப்படு வதன்கணுள்ள, குற்றமும் தோன்றாக்கெடும் - குற்றமும் தோன்றாது மறையுமாதலால்,காய்தல் உவத்தல் அகற்றி-வெறுப்பு விருப்புஇல்லாமல், ஒரு பொருட்கண் ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்தறிதல், அறிவுடையோர் கண்ணதே-அறிவுடையார்செயலாகும்.  

(குறிப்பு) ஏ: தேற்றப்பொருள் தருமிடைச்சொல், உம்மை இறந்தது தழுவியது. (42)  
 
   ---------------------------------------------------------------------------------------------------- 

43. உண்மைத் துறவியினை உணரு முறை  


துறந்தார் துறந்தில ரென்றறிய லாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம்--துறந்தவர்
கொள்ப கொடுப்பவற்றால் காண*லாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை.


(பா-ம்) *‘கொடுப்பவற்றார் காண’
(பதவுரை) துறந்தவர் கொண்டு ஒழுகும் வேடம்-துறவிகள் மேற்கொண்டொழுகும் வேடத்தால், துறந்தார் துறந்திலர் என்று அறியலாகும்-பற்றற்றவர் பற்றறாதவர் என்று அறியலாம், அவர் உள்ளங் கிடந்தவகை-அவர் உள்ளம் பற்றற்ற நிலையினை, துறந்தவர் கொள்ப கொடுப்பவற்றால் காணலாம்-அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் பொருளினின்றும், மற்றவர்கட்குக் கொடுக்கும் பொருளினின்றும் அறியலாம்.


(குறிப்பு) வேடம்-வேஷம், கொள்ளுதல்-பொருளில் அவாவின்றி வேண்டியவற்றைக் கொண்டு மற்றவை விடல், கொடுத்தல். உண்மைப் பொருளைப் பலர்க்கும் உணர்த்தல். மற்று: அசை.                 (43)  
 
      ----------------------------------------------------------------------------------------------------
     

44. உம்ப ருலகுக் குரியார் இவரென்பது  


இந்தியக் கொல்கா விருமுத் தொழில்செய்தல்
சிந்தைதீ ரப்பியத்தின் மேலாக்கல்--பந்தம்
அரித லிவையெய்து* மாறொழுகு வார்க்கே
உரிதாகும் உம்ப ருலகு.


(பதவுரை) இந்தியக்கு-இந்திரியத்துக்கு, ஒல்கா-தளராத, இரு முத்தொழில் - இரண்டு மூன்றுமாகிய ஐந்து இந்திரியங்களின் தொழிலை, செய்தல்-இயற்றுதல், சிந்தை-அவாவினை, தீர-ஆற்ற, அப்பியத்தின்மேல் ஆக்கல்-வெறுத்து அறுத்தல், பந்தம்-பாசக்கட்டினை, அரிதல்-கெடுத்தல், இவை-ஆகிய இவை, எய்தும் ஆறு-பொருந்தும்படியாக, ஒழுகுவார்க்கே-நடக்கிறவர்களுக்கே, உம்பர் உலகு-மேலுலகம், உரி(த்)தாகும்-உரியதாகும்.

(குறிப்பு) இந்தியக்கு-இந்திரியத்துக்கு: அத்துச்சாரியை தொகை. இந்நூலாசிரியரே பின் இந்தியக் குஞ்சரத்தை ‘ஞானவிருங்கயிற்றால்’ என்று குறித்தலும் காண்க. இவ்வாசிரியர், ‘ஆர்வில் பொறி யைந்தில்’ என்பது போல், வள்ளுவரும், “உரனென்னுந் தோட்டியா னோரைந்தும் காப்பான். வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” எனக் கூறியிருத்த லுணர்க. அப்பியம்-அப்பிரியம் என்பதன் விகாரம். இனி அப்பியம் என்பதை அவ்வியம் என்பதின் திரிபாகக் கொண்டு அப்பியத்தின் மேலாக்கல் என்பதற்கு மனத்தைக் கோட்டமின்றிச் செய்தல் என்க. தீர்தல்-மிகுதல், உரித்து என்பது உரிது என எதுகை நோக்கி இடை குறைந்து வந்தது. இருமுத்தொழில் அறுவகைத் தொழிலுமாம். அவ்வியம்-அவியம் என்பதன் விரித்தல் விகாரமுமாம்.              (44)

  (பா-ம்)    * ‘வருவா ரிவையெய்து’

 
 ---------------------------------------------------------------------------------------------------
     
     
45. முனிவர் தொழில்  


அழலடையப் பட்டான் அதற்குமா றாய
நிழலாதி தன்னியல்பே நாடும்--அழலதுபோல்
காமாதி யாலாங் கடுவினைக் கட்டழித்துப்
போமாறு செய்வார் புரிந்து.



(பதவுரை) அழல் அடையப்பட்டான் - சூரிய வெப்பத்தால் தெறப்பட்டவன், அதற்கு மாறுஆய - அதற்குப் பகையான நிழல் ஆதி தன்னியல்பே நாடும் - நிழல் முதலியவற்றையே விரும்பி அடைவான். அழலது போல்-அதனைஅடைந்தவனை விட்டு வெப்பம் நீங்குதல்போல்,காமம் ஆதியால் ஆம்-காமவெகுளி மயக்கங்களால் ஆகிய, கடுவினை கட்டு அழித்து-கொடியவினையாலாகிய தளையை அழித்து, போமாறுபுரிந்து செய்வார்-வீடு பேற்றினையடையப் போகின்ற வழியினை விரும்பித் தவம் செய்வோரேமுனிவர் ஆவர்.

(குறிப்பு) நிழல் ஆதி- நிழல், நீர், காற்று, உணவு,உடை என்பன. (45)
 
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 16, 2011, 06:33:01 PM
   
46. ஒழுக்கமே விழுப்பம் தரும்  


வெப்பத்தா லாய வியாதியை வெல்வதூ உம்
வெப்பமே என்னார் விதியறிவார்--வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத்
துணிப்பதூஉம் தூய வொழுக்கு.



(பதவுரை) விதி அறிவார்-நோய் நீக்கும் நெறியினை அறிந்தோர், வெப்பத்தால் ஆய-வெப்பத்தினாலாகிய,வியாதியை-நோயை, வெல்வதூஉம்-போக்குவதும்,வெப்பமே என்னார்-வெப்பமே என்று சொல்லார்,வெப்பம் தணிப்பதுவும் தட்பமே-வெப்பத்தைப் போக்குவதும் குளிர்ச்சியே, (அதுபோல்) தான் செய்வினையை-தான் செய்த தீவினையை, துணிப்பதூஉம்-அழிப்பதும், தூய ஒழுக்கு-குற்றமற்ற ஒழுக்கமேயாகும்.

(குறிப்பு) தணிப்பதூஉம், வெல்வதூஉம், துணிப்பதூஉம் : இன்னிசை யளபெடைகள், ஏகாரம்: முன்னது அசை நிலை: பின்னது தோற்றம். (46)  
 ------------------------------------------------------------------------------------------------------------
     
     
47. பொய்ந் நூல்களின் இயல்பு  


தத்தம திட்டம் திருட்ட மெனவிவற்றோ
டெத்திறத்தும் மாறாப் பொருளுரைப்பர்--பித்தரவர்
நூல்களும் பொய்யேயந் நூல்விதியி நோற்பவரும்
மால்கள் எனவுணரற் பாற்று.



(பதவுரை) பொருள்-தாம் கூறும் பொருள்களை, தத்தமது - தங்கள் தங்கள், இட்டம்-விருப்பம், திருட்டம்-காட்சி, என இவற்றோடு-என்ற இவையோடு, எத்திறத்திலும் மாறா உரைப்பர்-ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களை,பித்தர் என-பைத்தியக்காரர் எனவும், அவர் நூல்களும்பொய்யே என-அவர் கூறும் நூல் களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல் விதியின்நோற்பவரும் -அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும்,மால்கள் என-மயக்கமுடையார் எனவும், உணரற்பாற்று-உணர்தல் வேண்டும்.

(குறிப்பு) இட்டம்-இஷ்டம்: மனத்தே கண்டது. திருட்டம்-திருஷ்டியிற் படுவது; காட்சி. ஏ: தேற்றப்பொருள். (47)
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
48. மெய்யுணர்வு நற்கதிக் கின்றியமையாமை  


குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டுத் தம்முள்
தெருட்டி வழி *சொல்லிச் சேறல்--திருட்டேட்டம்
மாறு கொளக்கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பா ரியல்பு.



(பதவுரை) திருட்டம்-ஐம்புலக் காட்சியும், இட்டம்- உள்ள உணர்ச்சியும், மாறுகொளக் கிடந்த மார்க்கத் தால் - செலுத்தும் நெறிகள் மெய்ந் நெறிகளின் மாறுபடக்கிடப்பதை (அறியாமல்) அந்நெறியிற் சென்று நற்கதியில் ஏறுதும் என்பார். இயல்பு-நற்கதியை அடையக்கருதுவோர் செயல், குருட்டுச் செவிடர் கள்-குருடுஞ்செவிடுமாகிய இரு தன்மையையும் ஒருங்கே அடைந்த இருவர், கோல்விட்டு-கோலினு தவியாலும், தம்முள் வழி தெருட்டிச் சொல்லி-ஒருவருக்கொருவர் வழியின தியல்பைவிளக்கிக்கொண்டும், சேறல்-குறித்த இடத்தினை அடையக்கருதிச் செல்லு தலை நிகர்க்கும்.  

(குறிப்பு) திருட்டம்-பார்வை: உபலக்கணத்தல் ஐம்புலக்காட்சியினை யுணர்த்தியது. இட்டம் - கருத்து. திருட்ட+ இட்டம்=திருட்டேட்டம்: வடமொழிக் குணசந்தி. சேரல்=செல் + தல். ஏறுதும்: தன்மைப்பன்மை வினைமுற்று. (48)
 
     -------------------------------------------------------------------------------------------------------
     
49. அறவுரையை உரைப்பவரும் கேட்பவரும்  


அற்றறிந்த காரணத்தை ஆராய்ந் தறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே--மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடை யாளரே
கேட்பர் கெழுமி யிருந்து.


(பா-ம்.) *தெருட்டு வழி
(பதவுரை) கற்று அறிந்த மாந்தர்-மெய்ப்பொருளைக்கற்றுத் தெளிந்த மாந்தர், அற்றறியும் காரணத்தை-பற்றற்றுத் துறந்து அறியவேண்டிய மெய்ந் நூல்களை அறியும் காரணத்தையும், அறவுரையை - அறப் பொருளையும், ஆராய்ந்து உரைப்ப - ஆராய்ச்சி செய்து உரைப்பர். அதனை-அவ்வுரையை, மாட்சி புரிந்த மதியுடையாளரே-நற்குணமிக்க அறிவுடையவர்களே,கெழுமி இருந்து-உளமிசைந்து உரிமை யுடன், கேட்பர்-கேட்பராவர்.
 

(குறிப்பு) அறுதல்-பற்றொழிதல். அறவுரை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ: முன்னது அசைநிலை;பின்னது பிரிநிலை. (49)
 
 
     
 -------------------------------------------------------------------------------------------------------
   
50. வீட்டினை அடையும் வழி  


உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொருவில் தலைமகனோ டின்ன--ஒருவாறு
கண்டு கருதிக் கயக்கறத் தேர்ந்தபின்
கொண்டுவீ டேற்க வறம்.


(பதவுரை) உருவும் வடிவமும் ஒழுக்கமும்-நன்னடக்கையும், நூலும்-உரைக்கும் நூலும், பொருளும்-அந்நூலுட் கூறப்படும் பொருளும், பொருவில் தலைமகனோடு இன்ன-ஒப்பில்லாதுயர்ந்த இறைவனுமாகியஇவற்றை, ஒருவாது - நீங்காது, கண்டு - ஆராய்ந்து, கருதி-சிந்தித்து, கயக்கு அற தேர்ந்த பின்-கலக்கமில்லாதுணர்ந்த பின்னர், அறம் கொண்டு-அறத்தினை மேற்கொண்டு, வீடு ஏற்க-முத்தியை அடைய முயல்க.  

(குறிப்பு) உருவு-தொலைப் பொருள்களின் வடிவினையுணருங் காட்சியறிவு. ஏற்க: வியங்கோள் வினை. (50)
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 16, 2011, 06:39:04 PM
   
51. வீட்டினை யுறுவான் இயல்பு  


நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம்
சால்பின்மை காட்டும் சவர்ச்செய்கை--பால்வகுத்துப்
பட்டிமையா லாகா பரமார்த்தம் பற்றின்மை
ஓட்டுவா னுய்ந்துபோ வான்.


(பதவுரை) நுண்ணொழுக்கம்-ஒருவன் சிறந்த ஒழுக்கம், நூலுணர்வு காட்டு விக்கும்-அவன் கற்ற நூலின்கணுளதாகும், நுணுகிய உணர்வை வெளிப்படுத்தும், சவர்ச்செய்கை-ஒருவனுடைய வெறுக்கத்தக்க இழிந்த செய்கை, நொய்யவாம் சால்பின்மை காட்டும்-அவனுடைய இழிதகைமையாகிய சிறந்த நூற் பயிற்சியின்மையையும் வெளிப்படுத்தும், பால்வகுத்துப் பயிற்சியின்மையையும் வெளிப்படுத்தும், பால்வகுத்துப் பட்டிமையால்-பகுதிதோறும் வேறுபட்டு ஒருவன் செய்யும் படிற்றொழுக்கத்தால், பரமார்த்தம் ஆகா-பரம்பொருளை அடைதல் இயலாது, பற்றின்மை ஓட்டுவான்-மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன், உய்ந்து போவான்-வீடடைவான்.

(குறிப்பு) நொய்யாவாம் சொல்லின்மை-எளியவாகிய அறிவின்மை எனலுமாம். ஓட்டுவான்: வினையாலணையும் பெயர். (51)
 
     -----------------------------------------------------------------------------------------------------
     
52. வீரமில்லானைப் படைத்துணை கோடல் வீணென்பது  


புனைபடை கண்டஞ்சித் தற்காப்பான் றன்னை
வினைகடியு மென்றடி வீழ்தல்--கனையிருட்கண்
பல்லெலி தின்னப் பறைந்திருந்த பூனையை
இல்லெலி காக்குமென் றற்று.


(பதவுரை) புனை படை கண்டு அஞ்சி-படைக்கலன்களை அணிந்துவரும் படையைக் கண்ட அளவானே பயந்து, தற்காப்பான் தன்னை-தன்னைப் பாதுகாக்க விரைந்து ஒழியும் ஒருவனைப் (பிறனொருவன்), வினை கடியும் என்று அடி வீழ்தல்-தனக்கு வந்த போரைப் போக்கென அவனடி வீழ்ந்து வேண்டுதல், கனையிருட் கண்-நள்ளிருளில் பல்லெலி தின்னப் பறைந்திருந்த பூனையை-பல எலிகளும் வீட்டிலுள்ள பொருள்களைத் தின்றுகொண்டி ருப்பதைக் கண்டு வைத்தும் ஒன்றுஞ் செய்யமுடியாது வரிதே கூச்சல் செய்துகொண்டிருந்த பயந்த பலனற்ற பூனையை, இல்லெலி காக்கும் என்றற்று- (ஒருவன்)தன் வீட்டு எலிகளின் துன்பத்தினின்று காக்குமென்று அத்னைக் கொண்டாற் போலும்.

(குறிப்பு) புனைபடை: வினைத்தொகை. பல+எலி=பல்லெலி. பறைதல்-ஒலித்தல். (52)
 
      -----------------------------------------------------------------------------------------------------
     
53. அவா மிகுந்துள்ளார் ஆசிரியராகார்  

மாடமும் மண்ணீடுங் கண்டடக்க மில்லாரைக்
கூடி வழிபடுங் கோளாமை--ஆடரங்கின்
நோவகமாய் நின்றானோர் கூத்தினை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்ற துடைத்து.


(பதவுரை) மண்ணீடும்-சிறுவீட்டையும், மாடமும்-பெரு மாளிகைகளையும், கண்டு-பார்த்து, அடக்கம் இல்லாரை-அவாவில்லாதிராது ஆசையுடையாரை, கூடி-தலைப்பட்டு, வழிபடும்-ஆசிரியராகக்கொண்டு வழிபாடுசெய்யும் ,கோள்-கொள்கை, அமை ஆடரங் கின்-அமைக்கப்பட்ட நடனசாலையில், நோவகமாய் நின்றானோர் கூத்தினை-தன் பிழைப்பு நோக்கி வருத்தமுடன் நிற்பவனாகிய கூத்தன் நடிக்க அவன், கொண்ட அரசகோலத்தைக் கண்டு மயங்கி அவனை, ஊர்வேண்டிச் சேவகமாய் நின்றதுடைத்து-ஊரார் தங்களை ஆள்கவென்று கூறிப் பணிசெய்து நிற்றலோ டொக்கும்.

(குறிப்பு) கோள்: முதநிலை திரிந்த தொழிற்பெயர். ஆடரங்கு: வினைத் தொகை. ஊர்: இடவாகுபெயர். (53)
 
   ---------------------------------------------------------------------------------------------------   
     
54. ஒழுக்கமும் நோன்பும் இல்லார் உறுதிப்பொருள் உரையார்  


நாற்றமொன் றில்லாத பூவொடு சாந்தினை
நாற்றந்தான் வேண்டி யதுபோலும்--ஆற்ற
மறுவறு சீலமும் நோன்புமில் லாரைஉறுபயன் வேண்டிக் கொளல்.


(பதவுரை) மறுவறு சீலமும்-குற்றமற்ற ஒழுக்கமும், நோன்பும்-தவமும், ஆற்ற இல்லாரை-மிக இல்லாதவர்களை, உறுபயன் வேண்டிக்கொளல்-உறுதிப் பொருள்களை உணர்த்துமறு வேண்டுதல், நாற்றம் ஒன்று இல்லாத-நறுமணம் ஒரு சிறிதும் இல்லாத, பூவொடு சாந்தினை-பூவினையும் சந்தனத்தினையும், நாற்றந்தான் வேண்டியது போலும்-நறுமணத்தை அளிக்குமென்று விரும்பியது போலாம்.

(குறிப்பு) உறுபயன்: உரிச்சொற்றடர்; மிகுந்த பயன் தரும் உறுதிப்பொருள். தான்: அசைநிலை. (54)
 
    -------------------------------------------------------------------------------------------------------- 
     
55. நற்குணமில்லாரிடத்து நயங்கோடல் கூடாது  


மால்கடல்சூழ் வையத்து மையாதாங் காத்தோம்பிப்
பால்கருதி யன்ன துடைத்தென்பர்--மேல்வகுத்து
மன்னிய நற்குண மில்லாரைத் தாம்போற்றிப்
புண்ணியங் கோடுமெனல்.


(பதவுரை) மன்னிய-நிலைபெற்ற, நற்குணம் இல்லாரை - நற்குணங்கள் இல்லாத வர்களை, மேல் வகுத்து-உயர்ந்தோராகக் கொண்டு, போற்றி-துதித்து, தாம் புண்ணியம் கோடும் எனல்-நாம் புண்ணியத்தினை அடைவோம் என்று நினைத்தல், மால்கடல் சூழ் வையத்து-பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில், தாம்-சிலர், மையா காத்து ஓம்பி - மலட்டுப்பசுவை மிகவும் பாதுகாத்து பால் கருதி யன்ன துடைத்து என்பர்-அதனால் பாலை அடையக் கருதியி ருந்தாற் போலும் என்று பெரியோர் கூறுவர்.

(குறிப்பு) மை-மலடாகிய குற்றம், கோடும்=கொள்+தும்: கோடும்: தன்மைப் பன்மை வினைமுற்று. (55)
 

Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 16, 2011, 07:17:13 PM
   
56. பலர் கூறினும் பொய் மெய்யாகாது  


உடங்கமிழ்தங் கொண்டா னொருவன் பலரும்
விடங்கண்டு நன்றிதுவே என்றால்-- மடங்கொண்டு
பல்லவர் கண்டது நன்றென் றமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு.


(பதவுரை) உடங்கு-உயிரும் உடம்பும் கூடிநிற்றற்குக் காரணமாகிய அமிழ்தம் கொண்டா னொருவன்-தேவாமிர்தத்தினைப் பெற்றா னொருவன், விடங்கண்டு பலரும் இதுவேநன்று என்றால்-நஞ்சினைப் பார்த்துப் பலரும் இதுவே தேவாமிர்தமென்று கூறினாலும், பல்லவர் கண்டது நன்று என்று-பலர் கண்டதே உண்மையாக இருக்குமென்று நம்பி, நல்லவனும் மடங்கொண்டு-அமிழ்தத்தைப் பெற்ற அவனும் அறியாமையை யுடையவனாய், அமிழ்து ஒழிய-கையிலுள்ள அமிர்தத்தை நீக்கி, நஞ்சு உண்ணுமோ-நஞ்சினை உண்பானோ? உண்ணான்.

(குறிப்பு) என்றால்:உம்மை தொகுத்தல் விகாரம் பெற்றுள்ளது. நல்லவனும்: உம்மை உயர்வு சிறப்பு. ஓ: எதிர்மறை. (56)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
57. சிட்டராவார் இவரெனல்  


தன்னையும் தன்னிற் பொருளையும் பட்டாங்கிற்
பன்னி யறமுரைக்க வல்லாரை--மன்னிய
துட்ட ரெனச்சிட்டன் தோற்றுவ தல்லாரைச்
சிட்டரென் றேத்தல் சிதைவு.


(பதவுரை) தன்னையும் தன்னிற் பொருளையும் பட்டாங்கிற் பன்னி-தன்னையும் தன்னால் அறியத்தகும் பொருளையும் உண்மையாகக் கூறி, அற முரைக்க வல்லாரை-அறங்கூற வல்லாரை, மன்னிய சிட்டரென-நிலைபெற்ற ஞானமுடையவரென, சிட்டன்-ஞானி, தேற்றுவது-பலருக்கும் தெளிவிப்பது நன்மை பயப்பதாகும், அல்லாரை-அத்தகைய ரல்லாதவர்களை, சிட்டர் என்று-ஞானிகளென, ஏத்தல்-புகழ்தல், சிதைவு-கேடு பயப்பதாகும்.

(குறிப்பு) பன்னுதல்-கூறுதல், பட்டாங்கு-நூல்நெறியெனலுமாம். (57)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
58. ஏகான்மவாதிகளின் இயல்பு  


எத்துணை கற்பினும் ஏகான்ம வாதிகள்
யுத்தியும் சொல்லும் பொலிவிலவாய்--மிக்க
அறிவனூல் கற்றா ரலவெனவே நிற்கும்
எறிகதிர்முன் நீல்சுடரே போன்று.


(பதவுரை) எத்துணை கற்பினும்-மிகப்பல நூல்களைக் கற்றாலும், ஏகான்ம வாதிகள்-ஆன்மா ஒன்றே என்று வாதிப்போரது, புத்தியும் சொல்லும்-அறிவும் சொல்லும், எறி கதிர்முன் நீள்சுடரே போன்று-சூரியன் முன் ஓங்கி எரியும் விளக்கேபோல், பொலிவிலவாய்-விளங்குதலின்றி, மிக்க-பெருமைமிக்க, அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும்-இறைவனோதிய நூலைக் கற்றவரல்லர் என்று சொல்லுமாறே நிற்கும்.

(குறிப்பு) ஏகான்மவாதிகள்-அத்துவைத சமயிகள். ''விரி வெயிலில் விளக்காளியும்............போல் வெட்கி முகம் வெளுத்தான்'' என்ற சிவகாமி சரிதத் தொடரினை ஒப்புநோக்குக. (58)
 
    --------------------------------------------------------------------------------------------------- 
     

59. பிறவிநோயை அறுக்கவல்ல பெரியார் இவரென்பது  


அவ்விநய மாறும் மும்மூட மெண்மயமும்
செவ்விதி னீக்கிச் சினங்கடிந்து-கவ்விய
எட்டுறுப்பி னாய இயல்பினற் காட்சியார்
சுட்டறுப்பர் நாற்கதியிற் றுன்பு.



(பதவுரை) அவ்விநயம் ஆறும்-அச்சத்தால் வணங்குதல் முதலிய ஆறு ந்வ்விநயங்களும், மும்மூடம்-உலக மயக்க முதலான மூன்று மயக்கங்களும், எண் மயமும்-அறிவால் வருஞ் செருக்கு முதலிய எண்வகைச் செருக்குகளுமாகிய இவற்றை, செவ்விதின் நீக்கி-நன்றாகப் (முற்றிலும்) போக்கி, சினம் கடிந்து-வெகுளியையும் நீக்கி, கவ்விய-மேற்கொள்ளுதற்குரிய, எட்டுறுப்பின் ஆய இயல்பின்-ஐய மின்மை முதலான எட்டு உறுப்புக்களோடு கூடிய, நற்காட்சியார்-சிறந்த காட்சியாராகிய அறிவினையு முடையவர்கள், நாற்கதியில் துன்பு-நால்வகைப்பட்ட பிறவியால் வரும் நோயைஇ சுட்டு அறுப்பர்-சுட்டு அறுப்பவராவர்: (அழிப்பவராவர்.)


(குறிப்பு) விநயம்-ஒழுக்கமுடைமை, அவ்விநயம்-ஒழுக்கமின்மை.  ‘மும்மூடமும்’ என உம்மையை விரிக்க அவ்விநய மாறாவன-அச்சம், ஆசை, லௌகிகம், அன்புடைமை, பாசண்டம், தீத்தெய்வ வணக்கம், மும்மூடம்: உலக மூடம், பாசண்டி மூடம், தேவமூடம்.  எண்மயம்-அறிவுச்செருக்கு, புகழ்ச்செருக்கு, குலச்செருக்கு, வீரச்செருக்கு, தவச்செருக்கு, செல்வச்செருக்கு, ஆகூழ்ச்செருக்கு, அழகுச்செருக்கு, எண்வகையுறுப்பு ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை, பழிநீக்கல், நன்னெறியில் நிற்றல், அருளுடைமை, அறப்பொருளை விளக்கல்.  இவற்றையெல்லாம் பின்வருஞ் செய்யுட்களில் விளங்கக் காணலாம்.               (59)
 
 
     
 -------------------------------------------------------------------------------------------------------   

60. அவ்விநயம் ஆறாவன  


அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வ-மெச்சி
வணங்குத லவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களிற் குன்றா தவர்.



(பதவுரை) மாண்ட குணங்களில் குன்றாதவர்-மாட்சிமைப்பட்ட குணங்களால் குறையாத நிறைந்த பெரியோர்கள், அச்சம்-அச்சமும், ஆசை-ஆசையும், உலகிதம்-லௌகிகமும், அன்புடைமை-அன்புடைமையும், மிக்க பாசண்டம்-இழிவு மிக்க புறச்சமயமும், தீத்தெய்வம்-கொடுந்தெய்வத்தை, மெச்சி வணங்குதல்-துதித்து வணங்குதலும், அவ்விநயம் என்ப-விநயமல்லாததென்று சொல்லுவர்.


(குறிப்பு) ஏ: அசைநிலைப் பொருளன.  என்ப: உயர்திணைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று    (60)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 03:31:30 AM

61. அறுவகைப் பெரியோர்கள்  


மன்ன னுடன்வயிறு மாண்புடைத் தாய்தந்தை
முன்னி முடிக்கு முனியாசான்-பன்னியங்
காய குரவர் இவரென்ப வையத்துத்
தூய குலஞ்சாதி யார்க்கு.



(பதவுரை) வையத்து-இப்பூமியில், தூய குலம்-அழுக்கற்ற குல நலனும், சாதியார்க்கு-சாதி நலனும் உடையவர்க்கு, மன்னனுடன்-மன்னனும், வயிறு மாண்புடைத் தாய் தந்தை-தம்மைப் பெறலால் மேம்பட்ட தாய் தந்தையரும், முன்னிமுடிக்கு முனி-கருகியதை முடித்தேவிடும் ஆற்றலுடைய துறவியும், ஆசான்-குருவும், பன்னி-அவர் பத்தினியும், ஆய இவர்-ஆகிய இவர்களே, குரவர் என்ப-குரவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.


(குறிப்பு) “மாண்பு வயிறுடைத் தாய்” எனக் கோடலுமாம்.  அங்கு-ஆங்கு: அசைநிலை குறுக்கல் விகாரம்.         (61)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     

62. கோள்மொழி கேட்கும் குணமிலிகள்


கண்டதனைத் தேறா தவனுங் கனாக்கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும்-பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
கோள்விற்பக் கொள்ளாநின் றார்.


(பதவுரை) வையத்து-பூமியில், கோள்-பொய்யை, விற்ப-மெய்யென்று கூறி விற்க, கொள்ளாநின்றார்-அதனை விலை கொடுத்து வாங்குவோர், கண்டதனை-தானே நேரில் பார்த்ததை, தேறாதவனும்-தெளியாதவனும், கனாக் கண்டு பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும்-கனவில் தன் மனைவி அயலானைச் சேர்ந்திருக்கக் கண்டு அதனை உண்மையென மயங்கி அவளைக்கொன்றவனும், பண்டிதனாய் வாழ்விப்பக்கொண்டானும்-பண்டிதனாக இருந்தும் தனது நல்வாழ்க்கைக்குப் பிறருதவியை நாடுபவனும், போல்வர்-போன்று அறிவிலிகளேயாவர்.

(குறிப்பு) கோள், பிறர்மேல் இல்லது கூறலாதலின் பொய் எனப்பட்டது. (62)
 
    -------------------------------------------------------------------------------------------------------- 
     

63. பாசண்டி மூடம்  


தோல்காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்
கோல்காக் கரகம் குடைசெருப்பு-வேலொடு
பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப் படும்.



(பதவுரை) தோல் காவி சீரை துணி கீழ்விழ உடுத்தல்-தோல் கல்லாடை மரவுரி துணி இவைகளைக் கீழே விழுமாறு உடுத்தலும், கோல் கா கரகம் குடை செருப்பு வேலொடு பல் என்பு தாங்குதல்-தண்டு காவடி கமண்டலம் குடை செருப்பு வேல் பல் எலும்பு இவற்றை மேற்கொள்ளுதலுமாகிய இவை, பாசண்டி மூடமாய் நல்லவரால் நாட்டப்படும்-புறச் சமயிகளது அறியாமையாகப் பெரியோர்களால் சொல்லப்படும்.

(குறிப்பு) தோல்-புலித்தோல், மான்தோல் முதலியவற்றாலாகிய ஆடை.  துணி-நூலாடை.  கல்லாடை-காவியுடை.  கீழ் விழ உடுத்தல்-பாதங்கள் வரை படியுமாறு கட்டிக்கொள்ளுதல், பல் எலும்பு-பற்களாகிய எலும்பு அன்றி, புலிப்பற்களும்-மக்களுடலெலும்புமாம்  (63)
 
     
   --------------------------------------------------------------------------------------------------- 

64. வெளிக்கோலத்தின் வீண்


ஆவரண மின்றி அடுவாளும் ஆனைதேர்
மாவரண மின்றி மலைவானும்-தாவில்
கழுதை யிலண்டஞ் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டி யார்க்கு.


(பதவுரை) ஆவரணமின்றி அடு வாளும்-கேடகமின்றிப் போரில் பகைவரைக் கொல்லும் வாளும், ஆனை தேர் மா அரணம் இன்றி மலைவானும்-யானை தேர் குதிரை முதலிய படைகளும் அரணுமின்றிப் போர் செய்யும் வீரன் செயலும், தா இல் கழுதையில் அண்டம் சுமந்தானும் போல-குற்றமற்ற கழுதையில் ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவன் செயலும்போல், பாசண்டியார்க்குப் பழுதாகும்-போலித் துறவிகளுக்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயனற்றதாகும்.

(குறிப்பு) கேடகமின்றி மேற்கொள்ளும் வாள், போரில் பயன்படாதென்பதாம்.  கோவேறு கழுதை யென்பார், “தாவில் கழுதை” என்றர்ா.  கழுதை+இலண்டம் எனப் பிரித்து, கழுதைச் சாணம் எனலுமாம். (64)

 
      --------------------------------------------------------------------------------------------------
     

65. எண்வகைச் செருக்கு


அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே
உறுவலி நற்றவ மோங்கிய செல்வம்
பொறிவனப்பின் எம்போல்வா ரில்லென்னு மெட்டும்
இறுதிக்கண் ஏமாப் பில.


(பதவுரை) அறிவுடைமை-அறிவாலும், மீக்கூற்றம்-புகழாலும், ஆன குலனே-உயர்ந்த பிறப்பாலும்.  உறுவலி-மிக்க வலிமையாலும், நல் தவம்-நல்ல தவத்தாலும், ஓங்கிய செல்வம்-உயர்ந்த செல்வத்தாலும், பொறி வனப்பின்-நல்லூழாலும் உடல் அழகாலும், எம்போல்வார் இல் என்னும்-எம்மைப் போன்றவர் இல்லையென்று கூறி மகிழும், எட்டும்-எட்டுவிதமான செருக்கும், இறுதிக்கண்-முடிவில், ஏமாப்பு இல-இன்பம் செய்யாவாம்.


(குறிப்பு) மீக்கூறு-மேம்படக் கூறும் புகழ்: அம்: தொழிற் பெயர் விகுதி.  பொறி-ஊழ்.  வனப்பு-மேனியழகு. ஏமாப்பு-பாதுகாப்பு; இன்பம்.    (65)
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 03:38:04 AM


66. சினத்தா லாம்பயன் சிறிது மின்று


உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற் றுண்ண
இழந்திழந் தைங்கணுந் தோன்றச்-சுழன்றுழன்ற
சுற்றத்தா ரல்லாதா ரில்லையால் நன்னெஞ்சே
செற்றத்தால் செய்வ துரை,


(பதவுரை) நல் நெஞ்சே-நல்ல மனமே!, உழந்து உழந்து-முயன்று முயன்று, கொண்ட-நாம் அடைந்த, உடம்பினை-உடல்களை, கூற்று உண்ண-எமன் உண்ண, இழந்து இழந்து-பலகாலும் இழந்து, எங்கணும்-எல்லாவிடத்தும், தோன்ற-பிறத்தலால், சுழன்று உழன்ற-உலக வாழ்க்கையில் நம்மொடு கூடிச் சுழன்று தடுமாறித் திரிந்த மக்களில், சுற்றத்தா ரல்லாதாரில்லை-உறவினரல்லாதார் வேறொருவருமில்லை; (அங்ஙனமாயின்), செற்றத்தால் செய்வது உரை-பிறர்பால் கொள்ளும் வெகுளியால் நீ செய்வது யாதோ? சொல்.

(குறிப்பு) உழந்துழந்து, இழந்திழந்து: அடுக்குத் தொடர்கள்; பன்மை கருதின.  கூற்று-உயிரினையும் உடலினையிம் கூறாக்கிப் பிரிப்பது எமன்.  ஆல் அசைநிலை.  “சுற்றிச் சுற்றிப் பார்ப்போமாயின், தோட்டியும் நமக்கு உதவுவான்” என்ற பழமொழிப் பொருளை ஈண்டுக்கொண்டு நோக்குக. (66)


----------------------------------------------------------------------------------------------------------

67. சினத்தினை நீக்கிக் குணத்தினைக் கொள்க  


உயிரும் உடம்பும் பிரிவுண்மை யுள்ளிச்
செயிருஞ் சினமுங் கடிந்து-பயிரிடைப்
புற்களைந்து நெற்பயன் கொள்ளு மொருவன் போல்
நற்பயன் கொண்டிருக்கற் பாற்று.



(பதவுரை) உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி-உயிரும் உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்து, பயிரிடை புல் களைந்து-பயிர்களின் இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நெல் பயன்கொள்ளும் ஒருவன்போல்-பயிர்களைக் காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போல, செயிரும் சினமுங் கடிந்து-மயக்கம் வெகுளிகளை நீக்கி, நற்பயன்கொண்டு இருக்கற்பாற்று-இன்பத்துக்கேதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

(குறிப்பு) உயிரு முடம்பும் பிரிவுண்மை-உடனிலையாமை, இடை: ஏழனுருபு.  நல்வினையினை அதன் காரியமாகிய பயனாகக் கூறியுள்ளார்.  கடிதல்-விலக்கல்.  (67)


-----------------------------------------------------------------------------------------------------------
 

68. நற்காட்சிக்குரிய எண்வகை உறுப்புகள்  


ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய்பழி நீக்கல் நிறுத்துதல்-மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கஞ் செய்தலோ
டென்றிவை எட்டாம் உறுப்பு
.


(பதவுரை) ஐயம்-சந்தேகமும், அவா-ஆசையும், உவர்ப்பு-வெறுப்பும், மயக்கு இன்மை-மயக்கமுமாகிய இவை யில்லாமையும், செய்பழி நீக்கல்- பழியாயினவற்றினின்று உள்ளத்தை மீட்டலும், நிறுத்துதல்-மனமொழி மெய்களை நன்னெறியில் நிறுத்துதலும், மெய்யாக அன்புடைமை-உயிர்களிடத்து மாறாத அருளுடைமையும், ஆன்ற அறவிளக்கம் செய்தல் ஓடு-சிறந்த அறத்தினைப் பலர்க்கும் விளக்குதலுடனே, என்ற இவை எட்டாம் உறுப்பு-ஆகிய இவ்வெட்டும் நற்காட்சிக்கு உரிய அங்கங்களாகும்.

(குறிப்பு) நற்காட்சி மன அமைதியாலுண்டாம் அரிய கடவுள் தோற்றம்.  இதனை, “மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி யென்றுரைப்பர், எப்பொருளும் கண்டுணர்ந்தார்” என்ற அருங்கலச் செப்புச் செய்யுளால் தெளிக.  ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை என இன்மையை மூன்றிடத்தும் கூட்டுக.  உறுப்பு-பயனுறுங் கருவிகள்.  என்ற+இவை=என்றிவை அகரந் தொகுத்தல்.    (68)



 ---------------------------------------------------------------------------------------------------------


69. அறத்தின் இன்றியமையாமை


மக்க ளுடம்பு பெறற்கரிது பெற்றபின்
மக்க ளறிவும் அறிவரிது-மக்கள்
அறிவ தறிந்தா ரறத்தின் வழுவார்
நெறிதலை நின்றொழுகு வார்
.


(பதவுரை) மக்கள் உடம்பு பெறற்கரிது-மக்கட் பிறப்பினை அடைதல் அருமை, பெற்றபின்-பிறந்தாலும், மக்கள் அறிவும் அறிவு அரிது-மக்களுணர்வாகிய ஆறறிவினையும் அடைதல் அதனினும் அருமை, மக்கள் அறிவது அறிந்தார்-ஆறறிவினையுமுடையராய்ப் பிறந்து அறியவேண்டியதை அறிந்தவர், அறத்தின் வழுவார்-அறநெறியிற் சிறிதும் வழுவார்.  நெறிதலை நின்று ஒழுகுவார்-அன்றியும் அறநெறியை மேற்கொண்டு அதனுக்கேற்ப நடப்பார்.

(குறிப்பு) “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்பராகலின், ‘மக்கள்’ என்பதற்கு, ‘ஆறறிவினையு முடையராய்’ என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது.  அறிந்தார்: வினையாலணையும் பெயர்.  வழுவார் முற்றெச்சம்.  (69)
 
     
     -------------------------------------------------------------------------------------------------------

70. ஒழுக்கமே உயர்வளிக்கும்  


பிறந்த இடநினைப்பின் பேர்த்துள்ள லாகா
மறந்தேயும் மாண்பொழியும் நெஞ்சே!-சிறந்த
ஒழுக்கத்தோ டொன்றி உயப்போதி யன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப் புடைத்து,



(பதவுரை) மாண்பு ஒழியும் நெஞ்சே-பெருமையிலாத நேஞ்சே!, பிறந்த இடம்-இதற்குமுன் பிறந்த இடங்களை, நினைப்பின்-நீ நினைந்து பார்க்கின், மறந்தேயும் பேர்த்து உள்ளலாகா-அவற்றை மறந்தும் திரும்ப எண்ணுதலாகாது (ஆதலின் நீ), புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து-புழுக்கள் கூடி வாழுமிடமாகிய இவ்வுடலைப் பெற்றதால் உண்டாம் மறதியைக் கெடுத்து, சிறந்த ஒழுக்கத்தோடு ஒன்றி-பெரியோர் ஒழுக்கத்தில் நின்று, உயப்போதி-துன்பத்தினின்றும் உய்தி.



(குறிப்பு) உடைத்தல்-நொறுக்குதல்; கெடுத்தல்.  உய்தல்-தப்பிப் பிழைத்தல்.  போதி: இகரவிகுதி பெற்ற ஏவலொருமை வினைமுற்று.  அன்று, ஏ: அசைநிலைகள்.      (70)
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 06:33:33 PM
   

71. கற்றவர்க்குரிய நெறி  


தேசுந் திறனறிந்த திட்பமும் தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத் தில்லாமை-ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றா ரினத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி.



(பதவுரை) தேசும்-கீர்த்தியும், திறன் அறிந்த திட்பமும்-நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய், தேர்ந்து உணர்ந்து-மெய்ப்பொருளை ஆராய்ந்தறிந்து, மனத்தகத்து மாசு இல்லாமை-மனத்திடைக் குற்றமில்லாமல், ஆசு இன்றிக் கற்றல்-மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும், கடன் அறிதல்-தனது கடமையை அறிதலும், கற்றா ரினத்தராய் நிற்றல்-கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகிய, வரைத்தே நெறி-எல்லையினையுடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.

(குறிப்பு) இல்லாமை: எதிர்மறை வினையெச்சம்.  வரைத்து: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.  ஏ: அசைநிலை.  (71)
 
      -----------------------------------------------------------------------------------------------
     

72. மக்கட்குக் கல்வியின் இன்றியமையாமை


எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பிற் பிறிதில்லை-அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,


(பதவுரை) எப்பிறப்பாயினும்-வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட்பிறப்பின்-மக்கட் பிறப்பினைப் போல, ஒருவற்கு-ஒருவனுக்கு, ஏமாப்பு-இன்பம் செய்வது, பிறிது இல்லை, - வேறு ஒன்று இல்லை, அப்பிறப்பில்-அம் மக்கட் பிறப்பில், கற்றலும்-கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவை கேட்டலும்-கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும், கேட்டதன்கண் நிற்றலும்-கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும், கூடப்பெறின்-கூடப் பெற்றால்.

(குறிப்பு) “பெறின்பிறிதில்லை” என முடிக்க. பெறின்: எதிர்கால வினையெச்சம்.  கேட்ட+அதன்கண்=கேட்டதன்கண்: அகரந் தொகுத்தல் விகாரம்.           (72)
 
    ---------------------------------------------------------------------------------------------------------
     

73. கல்விக்கழகு கரவின்றி வாழல்  


கற்றதுவுங் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத்-தெற்றென
நெஞ்சத்துட் டீமையெழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துட் கற்பட்டாற் போன்று
.


(பதவுரை) கற்றது கற்று ஒருபால் நிற்பவும்-கற்கவேண்டிய நூல்களைக் கற்றதனாலாய அறிவு ஒழுக்கத்திற் கலவாது ஒருபுறம் நிற்கவும், கடைப்பிடி மற்றொருபால் போகவும்-எடுத்தகருமத்தை முடிக்கும் துணிவும் அந்நூற் றுணிபுகளிற் றிறம்பிமற்றொருபுறஞ் செல்லவும், மறித்திட்டு-நல்வழிச் செலவைத் தடுத்து, நெஞ்சத்துள்-மனத்தின்கண்ணே, தெற்றென-கடுக, தீமைஎழுதருமேல்-தீய எண்ணந் தோன்றுமாயின், கஞ்சத்துள்-தின்னப் புகுந்த அப்ப வருக்கத்துள், கல் பட்டால் போன்று-பொருந்திய கல்லே போல, இன்னாது-அது மிகத் துன்பந் தருவதாகும்.


(குறிப்பு) கரவு-தீய எண்ணம். எழுதரல்-எழுதல;் தரு: துணைவினை, கஞ்சத்துள்-அழகியதாய் மலர்ந்துள்ள தாமரைப் பூவினிடத்தே எனலுமாம். (73)
 
     
    --------------------------------------------------------------------------------------------------

74. கற்றவர் செய்யுந் தவற்றினைப் பலரும் காண்பர்


விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந் தாக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு.



(பதவுரை) விதிப்பட்ட நூல் உணர்ந்து-ஒழுக்க நூல்களை உணர்ந்து, வேற்றுமை நீக்கி-அவைகளுக் குடன்பாடாகாதனவற்றைச் செய்யாது விடுத்து, கதிப்பட்ட நூலினை-ஞான நூல்களை, கை இகந்து-எல்லையில்லாமல், ஆக்கி-உலகோர் பொருட்டுச் செய்து, பதிப்பட்டு வாழ்வார்-இறைவனையடைய விரும்பி வாழ்கின்றவர், பழியாய செயதல்-பிறர் பழித்தற் கேதுவான செயல்களைச் செய்தல், மதிப்புறத்தில் பட்ட மறு-சந்திரனிடத்துத் தோன்றும் களங்கமே யாகும்.


(குறிப்பு) வேற்றுமை-மதவேறுபாடு முதலியன எனலுமாம்.  பதிப்பட்டு-மனவமைதியுற்று எனலுமாம். வாழ்வார் வினையாலணையும் பெயர்.  (74)
 
      -------------------------------------------------------------------------------------------------
     

75. கற்றறிமூடரைக் கண்டு விலகுக


பற்றொடு செற்றம் பயமின்றிப் பலபொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன-கற்றும்
கடையாய செய்தொழுகும் காரறிவி னாரை
அடையா ரறிவுடை யார்.



(பதவுரை) பற்றொடு செற்றம்பயமின்றி-ஆசையும்பகையும் அச்சமும் இல்லாமல், பல்பொருளும்-பல பொருள்களினியல்பும், முற்ற உணர்ந்தான் மொழிந்தன-விடாது அறிந்த அருகக்கடவுள் கூறியவற்றை, கற்றும்-படித்தும், கடையாய-பழிக்கப்படுவனவற்றை, செய்தொழுகும்-செய்தொழுகின்ற, காரறிவினாரை-அறிவில்லாதவர்களை, அறிவுடையார் அடையார்-அறிவுடை யவர்களைடையார்கள்.

(குறிப்பு) முற்ற உணர்ந்தான்-முழுவது முணர்ந்த இறைவன் எனலுமாம்.  உணர்ந்தான், மொழிந்தன: வினையாலணையும் பெயர்கள்.  கருமை+ அறிவு= காரறிவு, கரிய அறிவு, அறிவின்மை    (75)
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 06:40:42 PM

76. கல்வி முதலியன செல்வங்கட்குக் காரணமாம்


நல்வினைப்பி னல்லால் நறுந்தா மரையாளும்
செல்லாள் சிறந்தார்பி னுயினும்-நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொழுது மில்.



(பதவுரை) சிறந்தார் பின் ஆயினும்-தன்னை நேசிப்பவர்களிடத்திலாயினும், நல்வினைப் பின் அல்லால்-நல்வினை காரணமாக அதன்பின் செல்வாளே யல்லாமல், நறும் தாமரையாளும்-நல்ல தாமரை மலரில் வாசஞ்செய்கின்ற திருமகளும், செல்லாள்-செல்லாள், நல்லவினை-அந்நல்வினை, ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி-கல்வி ஒழுக்கம் தானம் இம்மூன்றும் உள்ளவிடத்து, ஒருபொழுதும் நீத்தல் இல்-எக்காலத்தும் நீங்குதல் இல்லை.

(குறிப்பு) நறுந்தாமரை-அழகின் நலமிக்க செந்தாமரை,  ஓத்து-ஓதப்படும் கல்வி, காரணப்பெயர்.  வழி ஏழனுருபு.  தானம்-பிறர்க்குதவி செய்தலாகிய தருமம்.          (76)
 
     
    --------------------------------------------------------------------------------------------------------
 

77. தன்னை உயர்த்துங் கருவி தானே யாவன்  


தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல்-தன்னை
இறைவனாச் செய்வானுந் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந் தான்.



(பதவுரை) நெறி நிற்பில்-ஒருவன் நன்னெறிக்கண் நிற்பானாயின், தன்னின் தெய்வம் பிறிதில்லை-அவனின் வேறான தெய்வம் ஒன்று இல்லை, தான் ஒன்றானும் நெறிநில்லானேல்-அவன் ஒருவிதத்திலும் நன்னெறிக்கண் நில்லானாயின், அவனிற்றாழ்ந்தது வேறொன்றில்லை, தன்னை இறைவனாச் செய்வானும் தானே-தன்னை மற்றவர்களுக்குத் தலைவனாகச் செய்துகொள்பவனும் தானே, தன்னைச் சிறுவனாச் செய்வானும் தான்-தன்னை மற்றவர்கட்கும் தாழ்ந்தோனாகச் செய்துகொள்பவனும் தானே யாவன்.

(குறிப்பு) தானே-ஏ: பிரிநிலைப் பொருள்.  “நெறிநில்லானேல், அவனிற் றாழ்ந்தது வேறொன்றில்லை” என விரித்து முடித்தது இசையெச்சம்.     (77)
 
 
     
     --------------------------------------------------------------------------------------------------

78. தீவினையை ஒழித்து நல்வினையை நாடுவாயாக  


அஞ்சினா யேனு மடைவ தடையுங்காண்
துஞ்சினா யென்று வினைவிடா-நெஞ்சே
அழுதா யெனக்கருதிக் கூற்றொழியா தாற்றத்
தொழுதேன் நிறையுடையை யாகு.



(பதவுரை) நெஞ்சே அஞ்சினாயேனும்-மனமே! துன்பத்தைக் கண்டு அச்சமுற்றாயானாலும், அடைவது அடையும் காண்-வரும் துன்பம் வந்தே சேரும், துஞ்சினாய் என்று வினை விடா-தீவினைப் பயனைப் பொறாமல் இறந்தாயென்று கருதிச் செய்த வினைகள் மறுபிறப்பில் உன்னைத் தொடராமலிரா, அழுதாயெனக் கருதி-இறப்புக் கஞ்சி அழுதாய் என்று கருதி, கூற்று ஒழியாது-வந்த யமன் உயிரைக்  கவராது நீங்கான்: (ஆதலால்), ஆற்றத் தொழுதேன்-உன்னை மிக வணங்குகின்றேன், நிறை உடையை ஆகு-நிறையுடையை ஆகுவாயாக.

(குறிப்பு) நிறை-மனத்தை நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க வழக்கங்கள், ஆகு: ஏவலொருமை வினைமுற்று. (78)
 
     
    ----------------------------------------------------------------------------------------------------

79. தற்புகழ்ச்சியினை யொழிப்பாயாக  


பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலாகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
.


(பதவுரை) அலர் கதிர் ஞாயிற்றை-பரந்தகதிர்களையுடைய சூரியனை, கைக் குடையும் காக்கும்-கையிலுள்ள சிறிய குடையும் மறைக்கும்; (ஆதலால்) யாம் பல கற்றோம் என்று-யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று, தற்புகழ வேண்டா-ஒருவன் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளலாகாது, பல கற்றார்க்கு-பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்கட்கும், அச்சு ஆணி அன்னது ஓர் சொல்-அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல், சில கற்றார் கண்ணும் உளவாம்-சில நூல்களைப் பயின்றாரிடத்து உளவாதலும் உண்டு.


(குறிப்பு) கைக்குடையும், சிலகற்றார் கண்ணும்: உம்மைகள் இழிவு சிறப்புப் பொருளை அச்சு ஆணி-தேர்ச் சக்கரத்தின் இருசில் கோக்கும் ஒருவகை இருப்பாணி; அது சக்கரத்தினைக் கழன்றோடவிடாமல் காக்கவல்லது.   (79)
 
      ------------------------------------------------------------------------------------------------
     
80.   பொறுமையினை மேற்கொள்ளு முறை  


தன்னை யொருவன் இகழ்ந்துரைப்பின் தானவனைப்
பின்னை யுரையாப் பெருமையான்-முன்னை
வினைப்பயனு மாயிற்றா மென்றதன்கண் மெய்ம்மை
நினைத்தொழிய நெஞ்சினோ யில்.

 
(பதவுரை)  ஒருவன் தன்னை இகழ்ந்து உரைப்பின்-ஒருவன் தன்னை இகழ்ந்து கூறினால், பின்னை-பின்னர், தான்-தானும், அவனை உரையாப் பெருமையான்-அவனை இகழ்ந்து கூறாத பெருமையை உடையோன், முன்னை வினைப்பயனும் ஆயிற்றாம் என்று-முற்பிறப்பில் தான் செய்த தீவினைப்பயனும் இதனால் முடிந்தது என்று, அதன்கண் மெய்ம்மை நினைத்து ஒழிய-அதன் உண்மையை நினைத்து அதனைக் கருதாதொழிய, நெஞ்சில் நோய் இல்-அவன் மனத்தின் கண்ணும் துன்பம் இலவாம்.

(குறிப்பு) உரையா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  நோய்-வருத்தம்; துன்பம்.  “நெஞ்சினும்” எனற்பாலது தொகுத்தல் பெற்று, ‘நெஞ்சின்’ என நின்றது.  (80)
 
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 06:45:30 PM
   
81.    பொறுமையே சிறந்த தவமாகும்


எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும்-மெள்ள
அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதொன்று* வேண்டா தவம்.

 
(பதவுரை)  பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல்-தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல்.  கொள்ளி வைத்தாற் போல்-நெருப்பினாற் சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது எனினும்-தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவென்னும் நீரால்-அறிவாகிய நீரால், மெள்ள-அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின்-அத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம் பிறிது ஒன்றும்-வேறு தவம் ஒன்றும், வேண்டா-செய்ய வேண்டுவதில்லை.

(குறிப்பு) கொள்ளி-எரிகின்ற கொள்ளிக்கட்டை, இன்னாச் சொல்-வசை மொழி; துன்பம் விளைத்தலின் அங்ஙனம் கூறப்பட்டுள்ளது.  மெள்ள: குறிப்புவினையெச்சம்.   (81)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
82.  கடுஞ்சொல் களைகணையும் ஒழிக்கும்  


நம்மைப் பிறர்சொல்லும் சொல்லிவை நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கிவையென் றெண்ணி
உரைகள் பரியர் துரைப்பாரில் யாரே
களைகண தில்லா தவர்.

 
*பிறிதெனினும்
 
(பதவுரை)  நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை-நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்லவேண்டுமென்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் எண்ணாது பிறரைச் சொல்லும் இழுக்கு இவை-நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை, என்று எண்ணி-என்று ஆராய்ந்து உரைகள் பரியாது உரைப்பாரில்-தாம் பிறர்பால் இரங்காது கடுஞ்சொற் கூறுவராயின் அவரைப்போல், யாரே களைகணது இல்லாதவர்-பற்றுக் கோடற்றவர் பிறர் யார்? ஒருவருமிலர்.

(குறிப்பு) களைகண்-ஆதரவு: பற்றுக்கோடு இல்: ஐந்தனுருபு: ஒப்புப்பொருள்.  ஏ: எதிர்றை வினாவிடைச் சொல்.  அது: சாரியை.  (82)
 
    ----------------------------------------------------------------------------------------------------- 
     
83.  முற்பகல் செய்வன பிற்பகல் விளையும்


பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை
பிறர்க்கின்னா தென்றுபே ரிட்டுத்-தனக்கின்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலிற்
பித்து முளவோ பிற.

 
(பதவுரை)  பிறர்க்கு இன்னா செய்தலின்-மற்றவர்கட்குத் துன்பம் செய்தலைக் காட்டிலும், பேதைமை இல்லை-அறியாமை வேறு ஒன்று இல்லை, பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டு-மற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்து, தனக்கு இன்னாவித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலின்-தனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும், பிற பித்தும் உளவோ-பிற அறியாமைதான் வேறு உண்டோ? நீயே கூறு.

(குறிப்பு) இன்: இன்: ஐந்தனுருபு, எல்லைப்பொருள்.  “வேலிக்கிடு முள் காலுக்காம்” என்பது பழமொழி.  ஓ: எதிர்மறை வினாவிடைச் சொல்.   (83)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
84.  புறங்கூறலின் இழிவு  


முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்துப்-பின்னின்
றிழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை

 
(பதவுரை)  தேவர் விழித்து இமையார் நின்ற நிலை-தேவர்கள் விழித்தகண்மூடாமல் நிற்பதற்குக் காரணம், ஒருவன் முன்னின்று-ஒருவன் எதிரில் நின்று, கல் நின்று உருக-கல்லும் உருகுமாறு முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து-முகமலர்ந்து வாயால் இன்சொற்கூறி அவனைப் புகழ்ந்து, பின் நின்று-அவள் அகன்ற பின்னர், இழித்துரைக்கும்-அவனையே இகழ்ந்து கூறுகின்ற, சான்றோரை அஞ்சியே-கயவர்களைக் கண்டு கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும்.

(குறிப்பு) அஞ்சியே: ஏகாரம் தேற்றப்பொருள் கொண்டுள்ளது.  தேவர்கள் இயல்பிலே இமையாமல் நின்ற நிலையினை இங்ஙனத் தொடர்புபடுத்திக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாம்.  கயவர்களைச் சான்றோர் என்றது இழிவுபறறியாம். (84)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
85.  புறங்கூறாமையின் உயர்வு  

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும்-மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.

 
(பதவுரை)  புறனுரையைத் தன்மேல் படாமை தவிர்ப்பான்-புறங்கூறலாகிய தீமை தன்கண் நிகழாமல் காப்பவன், பொய்ம்மேற்கிடவாத நாவும்-பொய்யை மேற்கொள்ளாத நாவையும், மெய்ம்மேல் பிணிப் பண்பு அழியாமையும்-மெய் பேசுதலில் பிணிப்புண்டிருக்கும் பண்புடைமை நீங்காமையையும், பெற்ற பொழுதே-பெற்றவப்போதே, தணிக்கு மருந்து தலை-பிறவிப் பிணி தணிக்குந் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

(குறிப்பு) “தவிர்ப்பானும்” என்பதன்கண் உள்ள உம்மையைப் பிரித்தெடுத்து, “பண்பழியாமையும்”எனக் கூட்டுக. பொழுதே: ஏகாரம் பிரிநிலைப் பொருளது.  (85)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 07:10:04 PM
   
86.  குடியால் உண்டாகுந் தீங்கு  


ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடைய ரென்றுரைக்கும் தேசும்-களியென்னும்
கட்டுரையால் கோதப் படுமேல் இவையெல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து.

 
(பதவுரை)   களி என்னும் கட்டுரையால்-"கட்குடியன்" என்னும் பொருள்சேர் பழிச்சொல்லால், கோதப்படுமேல்-ஒருவன் குற்றப்படுத்தப்படுவானானால், ஒளியும்-எல்லோராலும் நன்கு மதிக்கப்படுதலும், ஒளி சான்ற செய்கையும்-அம் மதிப்பினுக்கேற்ற செயலும், சான்றோர் தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் "இவர் தெளிந்த அறிவினையுடையவர்" என்று கூறும் புகழும், இவையெல்லாம்-ஆகிய இவை யெல்லாம், வேறாய்-வேறுபட்டு, விரைந்து-விரைவில், விட்டொழியும்-அவனை விட்டு நீங்கும்.

(குறிப்பு) கோதப்படல்-குற்றப்படுத்தப்படல்.  களி=கள்+இ; கள்ளினை உட் கொள்பவன்; இ: வினைமுதற்பொருள் தரும் விகுதி.       (86)
 
   -------------------------------------------------------------------------------------------------   
     
87.  சூதுப் போரால் விளையும் தீமை


ஓதலும் ஓதி யுணர்தலும் சான்றோரால்
மேதை யெனப்படும் மேன்மையும்-சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை.

 
(பதவுரை)   சூது பொரும் என்னும் சொல்லினால்-சூதாடுவான் என்னும் பழியால், புல்லப்படுமேல்-ஒருவன் பற்றப்படுவானாயின், ஓதலும்-அறிவு நூல்களைக் கற்றலும், ஓதி உணர்தலும்-கற்றவற்றை ஆராய்தலும், மேதை எனப்படும் மேன்மையும்-அறிவுடையன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும், இவை ஒருங்கே-ஆகிய இவை முழுதும், இருளாம்-அவனை விட்டு மறையும்.

(குறிப்பு) பொருதல்-போர் செய்தல்; ஆடுதல், சூதுப் போரால் அறிவு மழுங்கி விடும் என்பது கருத்து,       (87)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
88. மானங் கெடின் மடிதலே நன்று


தனக்குத் தகவல்ல செய்தாங்கோ ராற்றால்
உணற்கு விரும்புங் குடரை-வனப்பற
ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித்
தேம்பத்தாங் கொள்வ தறிவு.


(பதவுரை) தனக்கு தகவு அல்ல செய்து-தனக்குத் தகுதியல்லாத காரியத்தைச் செய்து, ஓர் ஆற்றால் உணற்கு விரும்புங்குடரை-ஒருவாறு உண்ணுதலை விரும்புகின்ற குடலை, ஆம்பம்தாள் வாடலேபோல-நீரற்றவிடத்தில் ஆம்பற்கொடி வாடுதலே போல, வனப்பு அற-அழகு கெடவும், தேம்ப-இளைக்குமாறும், தாம் அகத்தடக்கிக்கொள்வது-தாம் உள்ளே அடக்கிக்கொண்டிருப்பது, அறிவு-அறிவுடைமையாகும்.

(குறிப்பு) குடர்-குடல்: இறுதிப்போலி.  கொள்வது தொழிற்பெயர்.  வனப்புற என்பதும் பாடம்.  ஆங்கு: அசைநிலை,      (88)

                             
 -----------------------------------------------------------------------------------------------------------
     
     
89. பிறன்மனை விரும்பேல்  


அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடைய னென்றுரைக்கும் தேசும்-பிறனில்
பிழைத்தா னெனப்பிறரால் பேசப் படுமேல்
இழுக்காம் ஒருங்கே யிவை.


(பதவுரை) பிறன் இல் பிழைத்தான் என-அயலான் மனைவியை விரும்பினான் என்று, பிறரால் பேசப்படுமேல்-மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அறனும்-அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த செய்கையும்-அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே-இவை முழுவதும், இழுக்கு ஆம்-பழியாம்.

(குறிப்பு) இல்-மனையாள் இடவாகுபெயர்.  அறன் திறன் என்பன அறம், திறம் என்பவற்றின் போலி.  (89)

 
      -----------------------------------------------------------------------------------------------------
     
90. காமக் கருத்தின் கொடுமை


சாவாய்நீ நெஞ்சமே! சல்லிய வென்னைநீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்கொட்டாய்-ஓவாதே
கட்டழித்துக் காமக் கடற்கென்னை ஈர்ப்பாயே
விட்டெழுங்கால் என்னாவாய் சொல்.


(பதவுரை) நெஞ்சமே நீ சாவாய்-மனமே! நீ கெடுவாயாக, சல்லிய என்னை-கலக்கமுற்ற என்னை, ஆவதன்கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய்-நன்னெறியில் ஒருசிறிதும் நிற்குமாறு விடாமல், ஓவாதே-ஒழிவின்றி, கட்டு அழித்து-உறுதியைக் கெடுத்து, காமக் கடற்கு-ஆசையாகிய கடலுக்கு, என்னை ஈர்ப்பாய்-என்னை இழுக்கின்றாய், விட்டெழுங்கால்-உன் பற்றைவிட்டு நான் எழுங்கால், நீ என் ஆவாய்-நீ யாது நிலையடைவாய், சொல்-அதனை எனக்குக் கூறு.

(குறிப்பு) ''ஒட்டாய்'' என்பது முற்றெச்சம்.  நிற்க+ஒட்டாய்-நிற்கொட்டாய்: அகரந் தொகுத்தல்.  ஈர்ப்பாயே என்பதில் 'ஏ' ஈற்றசை.  ஓவாதே என்ற எதிர்மறை வினையெச்சத்தில் ஓவு: பகுதி; ஏ: அசைநிலை.    (90)

 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 07:18:22 PM
   
91. காமக் கருத்தை விலக்கல்


பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றிக்
கழிபெருங் காமநோய் வாங்கி-வழிபடா(து)
ஓடுமன னேவிடுத் தென்னை விரைந்துநீ
நாடிக்கொள் மற்றோ ரிடம்.


(பதவுரை) கழி பெருங் காமநோய் வாங்கி-மிகப் பெரிய ஆசை நோயை உட்கொண்டு, வழிபடாது-என் வழியே இணங்காமல், கன்றி ஓடும் மனனே-பெண்கள்பால் மிக்கு வருந்திச் செல்லுகின்ற மனமே!, நீ பழியொடு பாவத்தைப் பாராய்-நீ பழி பாவங்களைப் பாராய் (ஆதலால்), என்னை விடுத்து-என்னின் நீங்கி, மற்றோரிடம்-சேர்தற்குரிய வேறோரிடத்தை, நீ விரைந்து நாடிக்கொள்-நீ விரைந்து தேடியடைவாயாக.

(குறிப்பு) பழியொடு பாவம்-ஓடு: இடைச்சொல்; எண்ணும்மைப்பொருட்டு.  கழிபெரும்: மீமிசைச் சொல்; ஒரு பொருட் பன்மொழி; கழி: மிகுதிப்பொருள்தரு முரிச்சொல். (91)

 
 -----------------------------------------------------------------------------------------------------
     
     
92. காமிகள் மக்கள் எனக் கருதப்படார்  


மக்களும் மக்களல் லாரும் எனஇரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம்-மக்கள்
அளக்குங் கருவிமற் றொண்பொருள் ஒன்றோ
துளக்குறு* வெள்வளையார் தோள்.


(பதவுரை) குண்டு நீர் வையகம்-ஆழமாகிய கடல் சூழ்ந்த உலகம், மக்களும் மக்களல்லாரும் என இரண்டு குப்பைத்தே-மனிதரும் மனிதரல்லாதாரும் என்ற இரண்டு குவியல்களை உடையது, மக்கள் அளக்குங் கருவி-மக்களை அளந்து காட்டுங் கருவிகள், ஒண் பொருள் ஒன்றோ துளக்குறுவெள் வளையார் தோள்-சிறந்த செல்வமும் விளக்குகின்ற சங்கவளையலை யணிந்த மகளிரது தோளுமாம்.

(குறிப்பு) குப்பைத்தே என்பதில் ''ஏ'' அசை, ''மற்று'' அசைநிலை. ''ஒன்றோ'' எண்ணிடைச்சொல். துளக்குறு என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. ''துளக்கறு'' என்ற பாடம் பொருளொடு பொருந்தாமை காண்க. பிறர்பொருள்களையும், பிறர் மனைவியரையும் விரும்பாதவர்களே மக்களாவர் என்பது கருத்து.           (92)

(பா-ம்) *துளக்கறு.  
 
      -------------------------------------------------------------------------------------------------
     
93. நன்னெறி காட்டுவோரே நட்பினராவர்


இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.



(பதவுரை) இம்மை-இப் பிறப்பில், அடக்கத்தைச் செய்து-மன மொழி மெய்களால் அடங்குமாறு செய்து, புகழ் ஆக்கி-புகழினைப் பெருக்கி, உம்மை-மறுபிறப்பில், உயர்கதிக்கு உய்த்தலால்-வீடுபேற்றையடைவித்தலால் பட்டாங்கு-இயல்பாகவே, மெய்ம்மை அறம் உரைக்கும்-அத்தகைய உண்மை யறத்தினை உரைக்கும், பண்புடையாளரே-குணமுடையவர்களே, நட்டார் எனப்படுவார்-நட்பினர் என்று கூறப்படுதற்கு உரியராவார்.

(குறிப்பு) ஏகாரமிரண்டும் முறையே ஈற்றசையும், பிரிநிலையுமாம்.  எனப்படுவார்; எழுவாய் வேற்றுமையின் சொல்லுருபுமாம்.  (93)     
 
      -------------------------------------------------------------------------------------------------
     
94. பிறநெறி விளக்குவார் பெருநட்பாளர்  


நாட்டா ரெனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பலபிறப்புத் துன்பமென்-றொட்டி
அறநெறி கைவிடா தாசாரங் காட்டிப்
பிறநெறி போக்கிற பவர்.


(பதவுரை) நாடுங்கால்-ஆராயுமிடத்து, நட்டார் எனப்படுவார்-நட்பினரெனப்படுதற்குரியார், வையத்து-பூமியில், பல பிறப்பு-பல பிறவிகளால், துன்பம் பட்டாம்-துன்பமடைந்தோம், என்று-என்று சொல்லி, ஒட்டி-துணிந்து, அறநெறி கைவிடாது- அறநெறியினைச் சோரவிடாது, ஆசாரம் காட்டி-ஒழுக்கத்தினையுணர்த்தி, பிறநெறி போக்கிற்பவர்-தீநெறியினின்றும் நீக்குபவரே யாவர்.

(குறிப்பு) கைவிடாது என்பதில், கைவிடு: பகுதி.  பட்டாம்: தன்மைப்பன்மை வினைமுற்று; தனித்தன்மைப் பன்மையுமாம்.  அறநெறி: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (94)
 
      -----------------------------------------------------------------------------------------------------

     
95. தந்நலமற்றோரே தனிப்பெறா நட்பினர்


நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்!
விட்டாரை யல்லால் கொளல்வேண்டா-விட்டார்
பொறிசுணங்கு மென்முலைப் பொன்னன்னாய்! உய்ப்பர்
மறிதர வில்லாக் கதி.


(பதவுரை) நறுமென் கதுப்பினாய்-நறுமணம் பொருந்திய மெல்லிய கூந்தலையுடையாய்!, நட்டாரை வேண்டின்-நட்பினரையடைய விரும்பின், விட்டாரையல்லால் கொளல் வேண்டா-பற்றற்ற பெரியோர்களை யல்லது பிறரை நட்பினர்களாகக் கொள்ள வேண்டா, பொறி சுணங்கு மென்முலை பொன் அன்னாய்-பொலிவினையும் தேமலையும் மென்மையினையுங் கொண்ட கொங்கையினையுடைய இலக்குமி போன்றவளே!, விட்டார்-அப் பற்றற்ற பெரியோர்கள், மறிதரவில்லாக் கதி உய்ப்பர்-பிறவாமைக் கேதுவாகிய வீடுபேற்றினை யடைவிப்பர்.

(குறிப்பு) விடுதல்-ஈண்டுப் பற்றை விடுதல்; தன்னலமற்று வாழ்தல்.  மறிதல்-மடங்குதல்; திரும்புதல்,  கதுப்பினாய், பொன்னன்னாய்: மகடூஉ முன்னிலைகள். (95)   
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 07:22:55 PM
   
96. தந்நலமற்ற பெரியோர் தாயினை யொப்பர்  


காலொடு கையமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப்
பாலொடு நெய்பெய்யும் தாயனையர்-சால
அடக்கத்தை வேண்டி அறன்வலிது நாளும்
கொடுத்துமேற் கொண்டொழுகு வார்
.

(பதவுரை) சால-மிக, அடக்கத்தை வேண்டி-அடங்கியிருக்குமாறு செய்யக் கருதி, நாளும்-ஒவ்வொரு நாளும், அறன் வலிது கொடுத்து-அறத்தினைத் தாமாகவே வற்புறுத்திக் கூறி, மேற் கொண்டு ஒழுகுவார்-அடக்கியாளும் பெரியோர், காலொடு கை அமுக்கி-காலையும் கையையும் ஆட்டாதவாறு இறுகப் பற்றிக் கொண்டு, வாய் நெறித்து-வாயைப் பிளந்து, பிள்ளையை-குழைந்தைக்கு, பாலொடு நெய் பெய்யும்-பாலையும் ஆமணக்கு நெய்யையும் அருத்துகின்ற, தாயனையர்-தாய்க்கு நேராவர்.

(குறிப்பு) ஒழுகுவார் தாயனைய ரென்க.  பிள்ளையை: உருபு மயக்கம்.  ''வாய்வெறித்து'' எனவும் பாடம்.  நெறித்தல்-சுண்டித் திறப்பித்தல்.  (96)                                       
 
 
     
     ----------------------------------------------------------------------------------------------------


97. பெரியோர் நட்பாற் செல்வம் பெருகும்
 

கழியும் பகலெல்லாம் காலை யெழுந்து
பழியொடு பாவம் படாமை-ஒழுகினார்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு.


(பதவுரை) கழியும் பகலெல்லாம்-கழிகின்ற நாட்களிலெல்லாம், காலை எழுந்து-அதிகாலையில் எழுந்து, பழியொடு பாவம் படாமை-பழி பாவங்களுக்குக் காரணமாகிய செயல்கள் தங்கண் நிகழாமல், ஒழுகினார்-ஒழுகின பெரியோர்களை, உய்க்கும்-தம்மாட்டு அடைவிக்கும், பொறியாரை- திருவுடையாரை, நாடி-தேடி, துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு-அனுபவித்தற்குரிய பொருள்கள் பலவுஞ் சேர்ந்து, உழிதரும்-அடையும்.

(குறிப்பு) பெரியார்களை அடைவிக்கும் நல்வினைச் செல்வமுடையாரைத் தேடி உலகத்திலுள்ள பொருளெல்லாம் தாமே அடையுமென்பதாம்.  படாமை: எதிர்மறை வினையெச்சம்.  ஒழுகினார்: வினையாலணையும் பெயர்.  (97)                                          
 
     
     ---------------------------------------------------------------------------------------------------


98. தீ நட்பினர் திருடர்களே யாவர்
 

காய உரைத்துக் கருமஞ் சிதையாதார்
தாயரோ டொவ்வாரோ தக்கார்க்கு-வாய்பணிந்து
உள்ள முருக உரைத்துப் பொருள்கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம
.

(பதவுரை) காய உரைத்து-சோர்வுற்றவழி மனமழுங்கக்கூறி, கருமஞ் சிதையாதார்-எடுத்த வினையை முடிக்குமாறு செய்கின்றவர்கள், தக்கார்க்கு-பெரியோர்களுக்கு, தாயரோடு ஒவ்வாரோ-தாயை நிகர்வர், உள்ளம் உருக-கேட்போர் மனமுருகுமாறு, வாய் பணிந்து உரைத்த-வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, பொருள் கொள்வார்-உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குகின்றவர்கள்; கள்ளரோடு ஒவ்வாரோ-திருடரை நிகர்வர்.

(குறிப்பு) ''ஒவ்வாரோ'' இரண்டெதிர்மறைகள் ஓர் உடன் பாட்டையுணர்த்தின.  தாம்: அசைநிலை.  காய உரைத்தல்-தவறு கண்டவழி இடித்துரைத்தல்.  ஒவ்வுதல்-ஒப்பாதல். (98)   
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     

99. தீ நட்பினர் சேர்க்கை தீங்கே பயக்கும்

 
அறுதொழில் நீ்த்தாரை மெச்சா தவற்றோ(டு)
உறுநரைச் சார்ந்துய்யப் போதல்-இறுவரைமேல்
கண்ணின் முடவன் துணையாக நீள்கானம்
கண்ணிலான் சென்ற துடைத்து.



(பதவுரை) அறு தொழில் நீத்தாரை-அவ்விநயமாகிய அறு தொழில்களையும் விட்டவர்களை, மெச்சாது-விரும்பியடையாமல், அவற்றோடு உறுநரை-அவற்றைச் செய்தொழுகுகின்றவர்களை,சார்ந்து-அடைந்து, உய்யப்போதல்-பிறவிப் பிணியினின்றும் நீங்கக் கருதுதல், இறுவரை மேல்-கற்கள் நெருங்கின மலையின் மேல் உள்ள, நீள் கானம்-நீண்ட காட்டைக் கடத்தற்கு, கண்ணில் முடவன் துணையாக-கண்ணுங் காலுமில்லாத ஒருவனைத் துணையாகக்கொண்டு, கண்ணிலான் சென்றதுடைத்து-குருடன் போவதுபோலும்.

(குறிப்பு) அறுதொழில்:-அச்சம், ஆசை, இலௌகிகம், அன்புடைமை, பாசண்டம், தீத்தெய்வ வணக்கம் என்பன.       (99)
                                             
   
     -------------------------------------------------------------------------------------------------------
     
100. தீ நட்பினர் சேர்க்கையால் பெரியோர் விட்டுப் பிரிவர்


குற்றத்தை நன்றென்று கொண்டு குணமின்றிச்
செற்ற முதலா உடையவரைத்-தெற்ற
அறிந்தாரென் றேத்து மவர்களைக் கண்டால்
துறந்தெழுவர் தூய்க்காட்சி யார்.


(பதவுரை) குற்றத்தை நன்று என்று கொண்டு-தீமையை நன்மையாகக் கருதி, குணமின்றி-நற்குணமென்பது சிறிதுமில்லாமல், செற்ற முதலா உடையவரை-வெகுளி முதலியன உடையவர்களை, தெற்ற-மாறுபட, அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால்-அறிவாளிகள் என்று கருதித் துதிப்பவர்களைப் பார்த்தால், தூய்க் காட்சியார்-நல்ஞானமுடையோர், துறந்து எழுவர்-அவர்களை விட்டு நீங்குவர.

(குறிப்பு) தூய்க் காட்சியார் கண்டால், துறந்தெழுவர் என முடிக்க.  தெற்ற-தெளிவாக எனலுமாம்.                                      (100)
 
     
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 07:34:58 PM
 
101. ஊனினை ஒழித்தால் ஊறுபாடில்லை  


கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம்.



(பதவுரை) கொன்று-உயிர்களைக் கொன்று, ஊன் நுகரும்-புலால் உண்ணும், கொடுமையை-தீச்செயலை, உள் நினைந்து-மனத்தாலாராய்ந்து, அன்றே-அப்பொழுதே, ஒழியவிடுவானேல்-புலாலுண்ணலை முற்றிலும் நீக்குவானானால், என்றும் இடுக்கண் என உண்டோ-எக்காலத்தும் அவனைத் துன்பங்களணுகா, இவ்வாழ்க்கைக் குள்ளே படுத்தானாம் தன்னைத் தவம-அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற நெறியினின்று தவஞ் செய்வாரை நிகர்வன்.

(குறிப்பு) புலாலுண்ணாமையொன்றே தவத்தாலாகும் பயன்களை அடைவிக்கு மென்பதாம்.  ஊன்-இறைச்சி: னகரவொற்றுச் சாரியை.  ஓ: எதிர்மறை வினா. (101)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
102. புலால் உண்ணல் புத்தியற்ற காரியமாம்
 
தன்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
செம்புண் வறுத்த வறைதின்பர்-அந்தோ!
நடுநின் றுலக நயனிலா மாந்தர்
வடுவன்றோ செய்யும் வழக்கு.


(பதவுரை) தம் புண் கழுவி மருந்திடுவர்-தமக்கொரு புண்வரின் உலகத்தவர் அதனை நன்றாகக் கழுவி மருந்திட்டு ஆற்றுவர், தாம் பிறிதின் செம் புண் வறுத்தவறைதின்பர்-ஆனால் அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாகிய இறைச்சி வறுத்த வறுவலை விரும்பி உண்பர், அந்தோ-ஐயகோ!, நடு நின்று-நடு நிலையாக நின்று, உலக நயன் இலாமாந்தர்-உலக நீதியை உணராத மனிதர், செய்யும் வழக்கு-செய்யும் முறைமை, வடு அன்றோ-குற்றமேயாகும்.

(குறிப்பு) வறை-ஐ: செயப்படுபொருளுணர்த்தும் விகுதி.  நயம்-நயன்; நீதி: இறுதிப்போலி.  அந்தோ: இரக்கக் குறிப்பு.  அன்று, ஓ: தேற்றப்பொருளன. (102)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
103. நா முதலிய உறுப்புக்களின் தூய்மை  

அறங்கூற நாவென்ப நாவுஞ் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர்-பிறன்றாரத்(து)
அற்றத்தை நோக்காத கண்ணென்ப யார்மாட்டும்
செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு,



(பதவுரை) அறம் கூறும் நா என்ப நாவும்-அறத்தினைக் கூறுகின்ற நாவே நா ஆகும் என்பர், செவியும் புறங்கூற்று கேளாத என்பர்-புறங்கூறுதலைக் கேளாத செவியே செவியாகும் என்பர், பிறன் தாரத்து அற்றத்தை நோக்காத கண் என்ப-அயலான் மனைவியினது சோர்வை எதிர்பாராத கண்ணே கண் என்பர், யார் மாட்டும் செற்றத்தை தீர்ந்ததாம் நெஞ்சு-தீமை செய்வாரிடத்தும் பகைமையின்றி இருப்பதே மனம் ஆகும்.

(குறிப்பு) கூற்று-கூறப்படுவது; சொல், செற்றம்-நெடுங்காலமாகக் கொண்டுள்ள சினம்.    103
 
     --------------------------------------------------------------------------------------------
     
104. பிறர் பெண்டிர் முதலியவற்றை விரும்புவார்க்குத்
தூய்மை முதலியன இலவாம்

 

பெண்விழைவார்க் கில்லை பெருந்தூய்மை பேணாதூன்
உண்விழைவார்க் கில்லை உயிரோம்பல் எப்பொழுதும்
மண்விழைவார்க் கில்லை மறமின்மை மாணாது
தம்விழைவார்க் கில்லை தவம்.



(பதவுரை) பெண் விழைவார்க்கு பெருந் தூய்மை இல்லை-பிற மகளிரை விரும்புவாரிடத்து மாசின்மை இல்லை, பேணாது ஊன் உண் விழைவார்க்கு உயிரோம்பல் இல்லை-அருளை விரும்பாமல் புலாலுண்ணலை விரும்புவாரிடத்து உயிர்களைக் காக்குந் தன்மை இல்லை, எப்பொழுதும் மண் விழைவார்க்கு மறமின்மை இல்லை-எக்காலத்தும் அயலானது நாட்டினைக் கவர விரும்புவாரிடத்து அறம் இல்லை, மாணாது தம் விழைவார்க்கு தவம் இல்லை-பெருமைக் கேலாத செயல்களைச் செய்து தம்மைக் காக்க விரும்புவாரிடத்துத் தவவொழுக்கம் இல்லை

(குறிப்பு) உண்-உண்ணல் முதனிலைத் தொழிற்பெயர்.  மறமின்மை-அறம் மறத்தின் எதிரது அறமாதலின்.       104
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
105. பொல்லாரும் நல்லாரும் இன்னர் என்பது


கல்லான் கடைசிதையும் காமுகன் கணக்காணான்
புல்லான் பொருள்பெறலே பொச்சாக்கும்-நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்
நடுக்கமும் நன்மகிழ்வு மில்.



(பதவுரை) கல்லான் கடை சிதையும்-கல்லாதவன் கடையனாய் அழிவான், காமுகன் கண் காணான்-காமுற்ற ஒருவன் கண் தெரியாதவனாவான், புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும்-அற்பன் பொருள் பெற்ற அளவிலேயே தன் நிலையை மறந்து ஒழுகுவான், நல்லான்-அறிவுடையவன், இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும், நடுக்கமும் நன்மகிழ்வும் இல்-துன்பமுற்றவிடத்து வருந்துதலும் இன்பமுற்றவிடத்து மகிழ்தலும் இலனாவன்.

(குறிப்பு) காமுகன் கண்காணானாதலாவது காம மயக்கத்தால் தான் சேர்தற்குரிய மகளிர் இவரெனவும் சேரத் தகாதார் இவரெனவும் அறியானாய் ஒழுகுதல்.  ''காமத்துக்குக் கண்ணில்லை'' என்பது பழமொழி. அன்றி, அக் கெட்ட வொழுக்கத்தால் உடனிலை கெட்டுக் கண்பார்வையினை இழப்பான் எனலுமாம்.  கடை-கடையன்; இழிந்தவன்: குணவாகுபெயர்.    (105)                               
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 07:59:50 PM
   
106. பழிப்பிலாத வாழ்க்கைக்குரியன  


தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும்-மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழுந் திறம்.


(பதவுரை) தானத்தின் மிக்க தருமமும்-உயர்ந்தோரை நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினுஞ் சிறந்த அறமும், தக்கார்க்கு-பெரியோர்க்கு, ஞானத்தின் மிக்க-அறிவைக் காட்டிலும் சிறந்த, உசாத்துணையும்-ஆராயுந் துணைவனும், மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம்-பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த நல்லொழுக்கமும், இல்லை-இல்லை, பழியாமல் வாழுந் திறம்-இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.

(குறிப்பு) உசாவுதல்-கேட்டறிதல், அழியா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  மிக்கதூஉம்: இன்னிசை யளபெடை. (106)                               
 
     
     .-------------------------------------------------------------------------------------------------------

107. மிகவும் உயர்வாகிய முக்குணங்கள்  


தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும்* துன்பங்கள்
ஆய பொழுதாற்றும் ஆற்றலும்-காயவிடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையு மிம்மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை.


(பதவுரை) தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும்-குற்றமில்லாமல் சொல்லுங் குணமும், துன்பங்கள் ஆய பொழுதாற்றும் ஆற்றலும்-துன்பமடைந்த விடத்தும் அதனால் தளர்ச்சியடையாதிருக்கும் பொறுமையும், காய்விடத்தும் வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும்-தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை கொள்ளாத உண்மை நிலையும், இம்மூன்றும் சாற்றுங்கால் சாலத்தலை-கூறுமிடத்து இவை மூன்றும் மிக உயர்ந்தனவாகும்.

(குறிப்பு) காய்வு: தொழிலாகுபெயர். சால: உரிச்சொல். கொண்டாடல்-மேற் கொள்ளல்.   (107)
  (பாடம்) *வண்மையும

 
   -----------------------------------------------------------------------------------------------------
   
     
108. உலக வாழ்க்கைக்குரிய மூன்று  


வெம்மை யுடைய தடிசில் விழுப்பொருட்கள்
செம்மை யுடையதாஞ் சேவகம்-தம்மைப்
பிறர்கருதி வாழ்வதாம் வாழ்க்கை இம்மூன்றும்
உறவருவ தோர்வதாம் ஓர்ப்பு.




(பதவுரை) வெம்மை உடையது அடிசில்-வெப்பத்தோடு கூடியிருப்பதே உண்டியாகும், விழுப்பொருட்கண் செம்மையுடைய தாம் சேவகம்-மிக்க வருமானத்தோடு நடுவுநிலைமை தவறாமலிருப்பதே உத்தியோகமாகும், தம்மைப் பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை-தம்மை மற்றவாக்ள் நினைத்து வாழ்வதற்கேற்ற ஈகைக் குணத்தோடு வாழ்வதே வாழ்க்கையாகும், இம்மூன்றும் உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு-இம் மூன்றையும் அடைவிப்பதே ஆராய்ந்து தெளிதலாகிய கருமம் முடிக்குந் துணிவாகும்.

(குறிப்பு) அடிசில்: அடப்பட்டது; உண்டி.  ஓர்ப்பு-நினைவு: நினைந்து தீர்மானிக்கும் துணிவினை ஈண்டு உணர்த்தியது.      (108)
 
 
     

---------------------------------------------------------------------------------------------------

     109. தீமையினை நன்மையினாலே வெல்
 


ஒறுப்பாரை யானொறுப்பன் தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கு நான்மடங்கே என்ப-ஒறுத்தியேல்
ஆர்வம் மயக்கம் குரோதம் இவைமூன்றும்
ஊர்பகை நின்கண் ஓறு.



(பதவுரை) நெஞ்சே! ஒறுப்பாரை யான் ஒறுப்பன்-என்னைத் துன்புறுத்துகின்றவர்களை யான் துன்புறுத்துவே னெனவும், தீயார்க்கும் தீயேன்-கொடியவர்களுக்குக் கொடியவனாவேன் எனவும், வெறுப்பார்க்கு நான் மடங்கே என்ப-வெறுப்பவர்களை நான்கு மடங்கு வெறுப்பேன் எனவும் உலகத்தார் கூறுவர்.  ஒறுத்தியேல்-நீ இவற்றை மேற்கொண்டு பிறரை அடக்கக் கருதுவாயாயின், ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்-ஆசை அறியாமை வெகுளி என்னும் மூன்றும், ஊர் பகை-நின்னை மேற்கொள்ளும் பகைகளாகத் தோன்றும், நின்கண் ஓறு-ஆதலின் உன்னிடத்து அவை உளவாகாவாறு அடக்கு.

(குறிப்பு) ஊர் பகை: வினைத்தொகை.  ''அடிக்கு அடி; குத்துக்குக் குத்து; பொய்க்குப் பொய்; கோளுக்குக் கோள்;''

என்ற கூற்று மக்களிடைப் பெருங் குழப்பத்தினை உண்டாக்குமாகலின், எக்காலும் பொறுமையினை மேற்கொள்ளல் மக்களுக்கு இன்றியமையாதது என்பது கருதது. (109)


 
      ------------------------------------------------------------------------------------------------
     
110. குலம் குப்பையிலே பணம் பந்தியிலே
 

குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர்-வினைப்பயன்கோல்
கல்லார் குலமில்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார்பின் சென்ற நிலை.


(பதவுரை) குலத்துப் பிறந்தார்-உயர்குடியிற் பிறந்தவர்களும், வனப்புடையார்-அழகுடையவர்களும், கற்றார்-கற்றவர்களும், நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர்-மானமழிந்ததை நினைக்குமிடத்து நின்ற இடத்திலேயே உயிர்விடக்கூடியவர்களுமாகிய பெரியோர்கள், கல்லார்-கல்லாதவர்களும், குலமில்லார்-இழிகுலத்தவர்களும், பொல்லார்-தீயவர்களும், தறுகட்பம் இல்லார்-தீவினை செய்ய அஞ்சாதவர்களுமாகிய செல்வமுடைய இழிந்தோர்களை, பின் சென்ற நிலை-வழிபட்டு நிற்பதற்குக் காரணம், வினைப் பயன்கொல்-அவர்கள் முன்செய்த தீவினைப் பயன்தானே?

(குறிப்பு) செல்வமானது சில வேளைகளில் மானிகளையும் மயக்கிவிடுகின்றது என்பது கருத்து.  தறுகட்பம்: பெருமையெனலுமாம்.  கொல்: ஐயவினாப் பொருள்.      (110)

 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 08:04:47 PM
   
111. பெண்ணென்றால் விண்ணும் நிறையும்


வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா
ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்
கூதற்குக் கூதி ரனைத்து.


(பதவுரை) கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-மூதேவி போன்ற ஒருத்தியைப் பாடுமிடத்து, ஞாலத்தார் விரைந்து ஓடி வேட்டு அவாய்க் கேட்பர்-உலகத்தவர் விரைந்து சென்று அதனை மிக விரும்பி கேட்பர், கோட்டிலா ஓதுமின்-மாறுபாடில்லாத அற நூல்களைக் கற்பீர்களாக, ஓதி அடங்குமின்-கற்று அவற்றிற்குத் தகவொழுகுங்கள், என்னுஞ் சொல்-என்று பெரியோர் கூறுஞ்சொல், கூதற்குக் கூதிரனைத்து-முன்னமே குளிரால் நடுங்கிய உடலினிடத்தே வீசிய குளிர்காற்றை யொக்கும் (வெறுக்கப்படும்.

(குறிப்பு) கிழத்தியைப் பாடுங்கால்: பெண்ணொருத்தி பாடுமிடத்து எனலாம்.  இப்பொருள் முதல் வேற்றுமையினிடத்தே இரண்டாம் வேற்றுமை மயக்கம் கொள்க.  கோட்டில்லா (தன) வினையாலணையும் பெயர்.  கூதற்கு; வேற்றுமை மயக்கம்.  விண்-ஆகாயம்.                          (111)
 
 
      ----------------------------------------------------------------------------------------------------

     
112. உணவொடுங்கினால் உயிரொடுங்கும்  


இறையிறை யின்சந்தித் தென்பொடூன் சார்த்தி
முறையின் நரம்பெங்கும் யாத்து-நிறைய
அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச்சுருக்கில் பூட்டா விடும.


(பதவுரை) இறை இறையின் சந்தித்து-உறுப்புக்களின் மூட்டு வாய்களை ஒன்றோடொன்று பொருத்தி, என்பொடு ஊன்சார்த்தி-எலும்போடு தசையை இணைத்து, முறையின்-முறையே, நரம்பு எங்கும் யாத்து-நரம்பால் எல்லாவிடங்களையும் உறுதியாகக் கட்டி, நிறைய அவாப் பெய்த பண்டியை-ஆசையாகிய சரக்கை நிறைய ஏற்றிய உடலாகிய வண்டியை, ஊர்கின்ற பாகன்-ஏறிச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், புகாச் சுருக்கில் பூட்டாவிடும்-ஆகாரத்தைக் குறைத்தால் அதனைச் செலுத்துதலைவிட்டு நீக்குவான்.

(குறிப்பு) ''அன்ன மொடுங்கினால் ஐந்து மொடுங்கும்'' என்ற பழமொழியின் பொருளை இங்குக் காண்க.  பூட்டுதல்: பொருத்திச் செலுத்துதல்.                          (112)

 
 ---------------------------------------------------------------------------------------------------------
     
     
113. உடலின் நிலையாமை


ஆசையும் பாசமும் அன்வும் அகத்தடக்கி
பூசிப் பொதிந்த புலாலுடம்பு-ஊசல்
கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத்
தெயிறுற் றிடைமுரிந்தக் கால்
.

(பதவுரை) ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி-பொருள்கள்மேல் வேட்கையையும் உற்றார்பால் தளைப்பட்ட அன்பையும், மனைவிபால் வைத்த காதலையும் உள்ளே அடக்கி, பூசிப்பொதிந்த-தசையால் கட்டிய, புலால் உடம்பு-புலால் நாற்றம் வீசும் உடம்பானது, கூற்றத்து எயிறு உற்று இடை முரிந்தக்கால்-எமனது பல்லில் சிக்கி அழிந்தவிடத்து, ஊசல் கயிறு அற்றால் போலக் கிடக்கும்-கயிறற்றவிடத்து ஊஞ்சலே போல அது செயலற்று வீழ்ந்து கிடக்கும்.

(குறிப்பு) ஏ: அசைநிலை.  முரிந்தக்கால்: எதிர்கால வினையெச்சம்.   (113)

 
 ------------------------------------------------------------------------------------------------------
     
     
114. உலகவாழ்க்கை உறுதியன்று


மறந்தொருவன் வாழுமிம் மாயமாம் வாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேல் இல்லை--செறிந்தொருவன்
ஊற்றம் இறந்துறுதி கொள்ளாக்கால் ஓகொடிதே
கூற்றம் இடைகொடுத்த  நாள்.


(பதவுரை) ஒருவன் மறந்துவாழும் இம்மாயம் ஆம் வாழ்க்கை- ஒருவன் தனது ஆன்ம சொரூபத்தை மறந்து வாழ்வதலாகிய இப்பொய்யாகிய வாழ்க்கை, ஒருவன் அறிந்து வாழுமேல் இல்லை-இவன் ஆன்மவடிவை அறிந்து வாழ்வானாயின் இல்லையாகும்; ஒருவன் செறிந்து ஊற்றம் இறந்து-ஒருவன் மிகவும் பற்றைவிட்டு, உறுதிகொள்ளாக்கால்-ஞானத்தையடையானாயின், கூற்றம் இடைகொடுத்த நாள்-அவன் கூற்றினிடம் அகப்படும் ஞான்று, ஓ கொடிதே-அனுபவிக்கும் துன்பம் மிகக்கொடியதாகும்.

(குறிப்பு) அழியுந்தன்மைத்தாய உடம்பு உள்ளபொழுதே அழிவல்லாத ஞானத்தை முயற்சியா லடையவேண்டுமென்பது கருத்து. ஓ, ஏ: இரக்கப் பொருளன.                         (114)

 
 -----------------------------------------------------------------------------------------------------
     
     
115. இவ்வுலகம்  ஏமாற்றமாகிய மாய வித்தையாம்


தோற்றமும் சம்பிரதம் துப்புரவுஞ் சம்பிரதம்     
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்--தோற்றம்
கடைப்பட்ட வாறறிந்து கற்றறிந்தார் துஞ்சார்
படைப்பட்ட நாயகனே போன்று


(பதவுரை) தோற்றமும் சம்பிரதம்-பிறப்பும் சித்தே, துப்புரவும் சம்பிரதம்-பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் சித்தே, கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்-உலகில் வாழும் உயிர்களை எமன் கவர்ந்துபோதலும் சித்தே, கற்று அறிந்தார்-அற நூல்களை ஓதியுணர்ந்தவர்கள், தோற்றம் கடைப்பட்டவா றறிந்து-பிறப்பின் இழிவை யறிந்து-படைப்பட்ட நாயகனே போன்று-போர் முனையை அடைந்த சேனாதிபதியேபோல, துஞ்சார்-சோர்வில்லாமல் பிறப்பினை யறுக்க முயல்வர்.

(குறிப்பு) சித்து-வியத்தகு செய்தி; மாயவித்தை. ஏ: அசைநிலை, கடை: இறுதியாகிய இழிவு. (115)

 
     
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 08:30:13 PM
   
116. சின்னாள் வாழ்க்கையைத் தெளியார்


தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப்--பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக்குற் றுண்பார் பலர்.


(பதவுரை) தெரிவு இல் இளமையும்-பொருள்களை ஆராய்தற்கேலாத இளமைப்பருவத்தையும், தீப்பிணியும்-கொடிய நோய்களையும், மூப்பும்-கிழத்தன்மையையும், பிரிவும்-உற்றாரைப் பிரிதலையும், துயிலும்-மரணத்தால் வருந் துன்பங்களையும், உறீஇ-அடைந்து, பருவந்து-வருந்தி, பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு- பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, வித்துக்குற்று உண்பார் பலர்-உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.

(குறிப்பு) ''நனிபேதையே நயனில் கூற்றம்'' என்ற புறநானூற்றுச் செய்யுளில் ''விரகின்மையின் வித்தட்டுண்டனை'' என்னுந் தொடரை நோக்குக. உறீஇ: சொல்லிசையளபெடை.  (116)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
117. மதியிலா மாந்தரின் மயக்கம்
 

பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர்--குறைக்கூடாச்
செல்வம் கிளைபொருள் காமமென் றின்நான்கும்
பொல்லாப் பொறியறுக்கப்பட்டு


(பதவுரை) பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இந்நான்கும்- பிறப்பு இறப்பு மூப்பு நோய் என்ற இந்நான்கினையும், மதியிலா மாந்தர் மறப்பர்-அறிவில்லாத மக்கள் மறந்து வாழ்வர்; (அவர் அவைகளை மறத்தற்குக் காரணமாய) குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்று இந்நான்கும்-குறையாத செல்வம், சுற்றம், மக்கள், காதன் மனைவி ஆகிய இந்நான்கும், பொல்லாப் பொறியறுக்கப்பட்டு (போம்)-இடையே தீயுழ்வர ஒழிந்துபோயினும்போம், ஆதலால் அறிவுடையார் பிறப்பு முதலியவற்றை மறவார்.

(குறிப்பு) குறைக்கூடா: விரித்தல் விகாரம். ''குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்றிந் நான்கும் பொல்லாப் பொறியறுக்கப்பட்டுப் போமென்னும் மதியிலாமாந்தர் பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் நான்கும் மறப்பர்'' எனக் கொண்டு கூட்டலுமாம். பொருள்-மக்கள்; ''தம்பொரு ளென்பதம் மக்கள்'' என்பதனாற் கொளக.   (117)
 
      --------------------------------------------------------------------------------------------------------
     
118. உடற்குறுதி ஒப்பற்ற தவமே


மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு மெல்லாம் சலமிலவாய்--நோக்கீர்
பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு.


(பதவுரை) மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரல் சாக்காடும் எல்லாம்-மூப்பு நோய் மனைவி மக்களைப் பிரிதல் வறுமை மரணம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும், சலமிலவாய் நோக்கீர்-பொய்யின்றி மெய்யாக ஆராயமாட்டீர், பருந்துக்கு இரை ஆம்-கழுகுகளுக்கு இரை ஆகிய, இவ் யாக்கையைப் பெற்றால்-இவ்வுடலைப் பெற்றால், மருந்து மறப்பதோ மாண்பு-இனி உடலையடையாவாறு தடுக்கும் மருந்தாகிய தவத்தினை மறப்பது பெருமையாகுமோ? ஆகாது.

(குறிப்பு) ''பருந்துக் கிரையா மிவ் யாக்கையைப் பெற்றால், நோக்கீர், மறப்பதோ மாண்பு'' எனக் கூட்டிப் பொருள் காணலுமாம். யாக்கை-உடல்: தொழிலாகுபெயர். ஓ:எதிர்மறை வினா. (118)  
 
     
     ----------------------------------------------------------------------------------------------------

119. மெய்யுணர்வில்லார் மிக நலிவடைவர்  


நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும்
இன்பத் தியல்பறி யாதார்.


(பதவுரை) துறந்து எய்தும் இன்பத்து இயல்பு அறியாதார்-பற்று விடுவதனால் அடையும் இன்பத்தின் தன்மையை அறியாதவர்கள், நீக்க அருநோய்-தீர்த்தற் கரியநோயும், மூப்பு-கிழத்தன்மையும், தலைப்பிரிவு-மனைவி மக்களைப் பிரிதலும், நல்குரவு-வறுமையும், சாக்கடு-மரணமும், என்ற ஐந்து களிறு உழக்க-ஆகிய ஐந்து யானைகளும் வருத்த, போக்க அரிய துன்பத்துள் துன்பம் உழப்பர்-நீக்குதற்கு அரிய மிகப்பெருந் துன்பத்தினை யனுபவிப்பார்கள்.

(குறிப்பு) ''களிறு உழக்க'' என்பது குற்றுகரப் புணர்ச்சி. சாக்காடு: தொழிற்பெயர்; காடு, தொழிற்பெயர் விகுதி. (119)
 
      ------------------------------------------------------------------------------------------------
     
120. இறத்தல் உறுதி : துறத்தல் பெறுதி !  


எக்காலும் சாதல் ஒருதலையே யானுனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன்--மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தன்மேற் சார்தல் தலை.


(பதவுரை) (நெஞ்சே) எக்காலும் சாதல் ஒருதலையே - எப்பொழுதாவது இறப்பது உறுதி, யான் உனக்கு புக்கில் நிறைய தருகிலேன்-நான் உனக்கு அழியும் தன்மைத்தாகிய உடலை மேலும் மேலும் கொடுத்துக்கொண்டிரேன், மிக்க அறிவினை வாழ்த்தி-உயர்ந்தோனாகிய அருகக்கடவுளைத் துதித்து, அடவி துணையா-வனத்தைத் துணையாகக் கருதியடைந்து, துறத்தல்மேற் சார்தல் தலை-துறவறத்தினை யடைந்து வாழ்தல் சிறந்ததாகும்.

(குறிப்பு) புகு+இல்=புக்கில்: உயிர்புகும் வீடு: உடல், துணையா: ஈறு கெட்ட செயவென்வாய்பாட்டு வினையெச்சம். ஒரு தலை-உறுதி; ஒரு சொன்னீர்மைத்து. (120)  
 
     
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 08:36:32 PM
   
121. உயிர்கள் கூத்தனை யொத்து உழல்கின்றன  


அங்கம் அறவாடி அங்கே படமறைத்(து)
அங்கே ஒருவண்ணங் கோடலால் என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
சுழன்றாடு தோற்றப் பிறப்பு.



(பதவுரை) உயிர்-உயிர்கள், சுழன்றாடு தோற்றப் பிறப்பு-எழுவகைப் பிறவிகளிலும் சுழலுதற்குக் காரணமாகிய தோற்றத்தினையுடைய பிறப்பால், அங்கம் அற ஆடி-உடல் நீங்குந் துணையும் உலகில் ஆடித்தொழில் செய்து,அங்கே பட-பின் உயிர் நீங்க, மறைந்து உலகினின்றும்மறைந்து, அங்கே ஒரு வண்ணங் கோடலால்-அப்பால் வேறொரு வடிவத்தைக் கொள்ளு வதால், என்றும் அரங்காடு கூத்தனே போலும்-நாடகத்திலே அங்கம்முடியுந் துணையும் ஆடியும், பின்பட மறைந்தும்-பின்வேறோர் அரங்கத்தில் வேறோர் வண்ணங்கொண்டுஆடியும் திரிகின்ற கூத்தனை ஒக்கும்.

(குறிப்பு) உயிர்: எழுவாய். கூத்தனே போலும்: பயனிலை. ஏ: தேற்றம். தான்:அசைநிலை.அரங்கு-கூத்தன் ஆடுமிடம்.(121)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
122. தீய மக்களினும் விலங்குகள் மிக நல்லன  


இக்காலத் திவ்வுடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை--மெச்சா(து)
அலந்துதம் வாய்வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக.



(பதவுரை) இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையின்-இவ்வுடல் இப்பொழுதே அழியுந் தன்மையாயிருத் தலையறிந்து,பொச்சாவாப் போற்றி நோற்பாரை-மறவாமல் குறித்துக்கொண்டு மறம் தங்கண் நிகழாவழித் தம்மைப் பாதுகாத்துத் தவம் முயல்கின்றவரை, மெச்சாது-புகழாமல்,அலந்து-நொந்து, தம் வாய் வந்த கூறும் அவரின்-தம் வாயில் வந்த சொற்களைச் சொல்லி இகழுகின்றவர்களைக் காட்டிலும்,விலங்குகள் மிக நல்ல-மிருகங்கள் மிகநல்லனவாகும்.  

(குறிப்பு) ஆல், தாம்: அசைநிலை. இகழ்வால் வரும் பாவத்தையடையாமையின் விலங்குகள் நல்லனவாயின. (122)
 
 
     
   -------------------------------------------------------------------------------------------------------
 
123. பிறப்பின் கொடுமை கண்டு பின் வாங்குக


எண்ணற் கரிய இடையூ றுடையதனைக்
கண்ணினாற் கண்டுங் கருதாதே-புண்ணின்மேல்
வீக்கருவி பாய இருந்தற்றால் மற்றதன் கண்
தீக்கருமஞ் சோர விடல்



(பதவுரை) எண்ணற்கு அரிய-எண்ணமுடியாத, இடையூறு உடையதனை-துன்பத்துக்கு இடமானது உடல் என்பதனை, கண்ணினால் கண்டும் கருதாதே-கண்ணாற் கண்டும்
பிறப்பினை ஒழிக்க முயலாமல், மற்று அதன்கண் தீக்கருமம் சோரவிடல்-அதன்மேலும் தீய செயல்களில் மனத்தினைச் சோரவிடுதல், புண்ணின்மேல் வீக்கருவி பாய இருந்தற்றால்-புண்ணின்மேல் வாள் தாக்க அதனைத் தடுக்காது இருந்தாற் போலும்
.  

(குறிப்பு) வீக்கருவி சாவினை எய்துவிக்கும் கருவி; அன்றி, மலையினின்றும் நீங்கி விழுகின்ற அருவி நீர் எனலுமாம்.வீ-சாவு; நீக்கம். வீக்கு+அருவி=வீக்கருவி; வீக்குதல்-உயர்ந்த இடத்திலிருந்து விழுதல். வீ+கருவி=வீக்கருவி (123)
 
   -----------------------------------------------------------------------------------------------------   
     
124. உடம்பின் இழிவு  


நெடுந்தூ ணிருகாலா நீண்முதுகு தண்டாக்
கொடுங்கோல் விலாவென்பு கோலி--உடங்கியநற்
புன் தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை
இன்புறுவ ரேழை யவர்.



(பதவுரை) இரு கால் நெடுந் தூணா-இரண்டு கால்களையும் நெடிய தூண் களாகவும் ஊன்றி, நீள் முதுகு தண்டா-நீண்ட முதுகெலும்பைச் சட்டமாக இட்டு, விலா என்பு கொடுங்கால் கோலி-விலா வெலும்புகளைக் கொடுங்கைகளாக வளைத்து, உடங்கிய-அவை கூடி நிற்றற்கு, நல்புல் தோலால் வேய்ந்த-நல்ல மிருதுவான தோலால் மூடின, புலால் வாய்க் குரம்பையை-இறைச்சிமயமான உடலாகிய சிறிய மனையை, ஏழையவர்-அறிவில்லாதவர்கள், இன்புறுவர்-பார்த்துப் பார்த்து மகிழ்வார்கள்.  

(குறிப்பு) உடங்கிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். குரம்பை-குடில்: சிறு வீடு. (124)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
125. உடலின் தூய் தன்மை  


என்புகா லாக இருதோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்றறாத்--துன்பக்
குரம்பை யுடையார் குடிபோக்கு நோக்கிக்
கவர்ந்துண்ணப் போந்த கழுகு.


(பதவுரை) என்பு காலாக-எலும்பையே இரு தூண்களாகவும், இருதோளும் வேயுளா-இரண்டு தோள்களையும் வேய்ந்தமாடமாகவுமுடைய, ஒன்பது வாயிலும்-ஒன்பது வாயில் களிலும், ஊற்று அறா-மலமொழுக்குதலை இடையீடின்றிச் செய்கின்ற, துன்பக்குரம்பையுடையார்-துன்பத்துக்கேதுவான குடிலை (உடலை) யுடையவர்கள், குடி போக்கு நோக்கி -அதிலிருந்து நீங்கியதைப்பார்த்து, கழுகு-கழுகுகள், கவர்ந்து உண்ண-அக்குடிலை பிடுங்கித் தின்ன, போந்த-வந்தன.

(குறிப்பு) வேயுள்: தொழிலாகுபெயர். உள்: தொழிற்பெயர் விகுதி. போந்த: அன்சாரியை பெறாது வந்த பலவின்பால் வினைமுற்று. (125)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 08:43:22 PM
   
126. உடலின் இழிவு கண்டும் உலகிற்கு அறிவில்லை


ஒருபாகன் ஊருங் களிறைந்தும் நின்ற
இருகால் நெடுங்குரம்பை வீழின்--தருகாலால்
பேர்த்தூன்ற லாகாப் பெருந்துன்பங் கண்டாலும்
ஓர்த்தூன்றி நில்லா துலகு.



(பதவுரை) ஒரு பாகன் ஊரும்-மனமாகிய ஒரு பாகன் ஏறிச் செலுத்துகின்ற, களிறு ஐந்தும் நின்ற-ஐந்து புலன்களாகிய யானைகளைந்தும் நின்ற, இருகால்-இரண்டு கால்களோடு கூடிய, நெடுங்குரம்பை - நெடிய உடலானது, வீழின் - வீழ்ந்தால், தருகாலால்-வேறு கால்களால், பேர்த்து ஊன்றலாகா-மீட்டும் நிலைபெறச் செய்யவியலாத, பெருந்துன்பங் கண்டாலும் - மிக்க துன்பச் செயலை நேரில் பார்த்தாலும், உலகு ஓர்த்து ஊன்றி நில்லாது-உலகினர்யாக்கை நிலையாமையை ஆராய்ந்து நன்னெறியில் நிலையாக நில்லார், இஃதென்ன பேதமை?

(குறிப்பு) ஆகா: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உலகு: இடவாகுபெயர். (126)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
127. மக்களின் கடமைகள் இவையென்பது  


நீத்தொழிந்த ஆறைந் தடக்கிப்* பின் நிச்சயமே
வாய்த்தமைந்த வாயில்பெண் ஆனையுங்**--கூத்தற்கு
வாளேறோ டோசை விளைநிலம் இவ்வல்லாற்
கேளா யுடன்வருவ தில்.



*அடங்கியபின். **பெண்ணாளையும்.

(பதவுரை) நீத்து-நீந்துதற் றொழிலானது, ஒழிந்த-நீங்கிய, ஆறு-வழியாக நிலை, ஐந்து அடக்கி-தலை கால் முதலிய ஐந்து உறுப்புக்களையும் இடருற்ற காலத்தே ஓட்டினுள் மறைத்துக் கொள்வதாகிய யாமை, பின் நிச்சயமே-பின்பு உறுதியாக, வாய்த்து-பொருந்தி, அமைந்த-திருந்திய, வாயில்-வாசலாகிய கடை;பெண் ஆனையும்-பிடியும், கூத்தற்கு-சிவபெருமானுக்கு, வாள் ஏறு - வாளாயுதம் எறிவதாலுண்டாகிய புண், ஓசை - ஒலிப்பதாகிய இயம்; விளைநிலம்-விளையுங் கழனியாகிய செய்(தலும்) ஆகிய, இவ் அல்லால்-இவ்விரண்டுமன்றி (வேறாக), கேள் ஆய்-உறவாய், உடன் வருவது-மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது, இல்-இல்லையாம்.

(குறிப்பு) ''நிலையாமை கடைப்பிடியும், சிவபுண்ணியஞ் செய்தலுமாகிய இவ் விரண்டும் அன்றி, வேறாக உறவாய் மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது இல்லையாம்'' எனத்தடித்த எழுத்திலிட்ட மொழிகளைக் கூட்டிக் கருத்தினைக் காண்க. இவை குறிப்பால் பொருள்தரு மொழிகளாம். இவற்றை நன்னூல் சொல்லதிகாரம் பெயரியலில், ''ஒன்றொழி பொதுச்சொல்'' என்ற சூத்திரத்தாற் கொள்க. மூலத்தின்கணுள்ள திருத்தங்களையும் அங்குள்ள விருத்தியுரையாற் காணலாம். (127)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
128. நாள் சில; பிணி மூப்பு முதலியன பல


வாழ்நாளிற் பாகம் துயில்நீக்கி மற்றவற்றுள்
வீழ்நா ளிடர்மூப்பு மெய்கொள்ளும்--வாழ்நாளுள்
பன்னோய் கவற்றப் பரிந்து குறையென்னை
அன்னோ அளித்திவ் வுலகு.


(பதவுரை) வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி-ஆயுட்காலத்தில் பாதியை உறக்கத்தில் கழித்து, மற்றவற்றின்-மறுபாதியில்,வீழ் நாள் - தளர்கின்ற காலத்தில், இடர்-துன்பத்துக்குக் காரணமாகிய, மூப்பு-கிழத்தன்மையை, மெய்கொள்ளும்- உடல் அடையும், வாழ்நாளுள்-துயிலும் மூப்பும் போக உள்ள வாழ்நாளில், பல் நோய்கவற்ற-பல துன்பங்கள் வருத்த, பரிந்து குறை என்னை - வருத்துவதனாலாங் காரியம் யாது? இவ்வுலகு அன்னோ அளித்து-இவ்வுலக வாழ்க்கை ஐயோ, இரங்கத்தக்கது.  

(குறிப்பு) அன்னோ: இரக்கக் குறிப்பிடைச் சொல். 'எவன்' என்னும் வினாவினைக் குறிப்பு 'என்னை' என மருவியது. (128)
 
 
     
     ---------------------------------------------------------------------------------------------------

129. தவமில் வாழ்வு அவ வாழ்வு


உடம்புங் கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்துபின் செல்லாமை கண்டும்--அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள்.


(பதவுரை) உடம்பும்-உடலும், கிளையும்-சுற்றமும், பொருளும்- செல்வமும், பிறவும்-மனை முதலியனவும், பின்தொடர்ந்து செல்லாமை கண்டும்-தம்மையுடையவன் இறந்தவிடத்து அவனைப் பின்பற்றிச் செல்லாதிருத்தலைப் பார்த்தும், அடங்கி-மனமொழி மெய்களானடங்கி, தவத்தோடு தானம் புரியாது-தவத்தினையும், தானத்தினையுஞ் செய்யாமல், வாழ்வார்-வாழ்கின்றவர்களுக்கு, கழிகின்ற நாள்-கழிகின்ற நாட்கள், அவத்தம்-வீணேயாகும்.  

(குறிப்பு) அவம்+அத்து+அம்=அவத்தம்; அத்து: சாரியை; அன்றி, அபத்தம் அவத்தம் என மாறிய வடமொழியாக்கலுமாம். ஓடு; எண்ணுப் பொருளில் வந்தஇடைச்சொல். (129)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
130. இச்சகம் பேசேல்  


போற்றியே போற்றியே என்று புதுச்செல்வம்
தோற்றியார் கண்ணெல்லாம் தொண்டேபோல்--ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப(து) எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு.


(பதவுரை) புதுச் செல்வம் தோன்றியார்கண் எல்லாம்-புதிதாகச் செல்வத்தை யடைந்தாரிடத் தெல்லாஞ்சென்று, கொண்டேபோல்-அடிமையைப் போல், போற்றியே போற்றியே யென்று-நீ என்னைக் காத்தல் செய்வாயாக, நீ என்னைக் காத்தல் செய்வாயாக என்று, ஆற்றப் பயிற்றிப் பயிற்றி-மிக பலகாற்சொல்லி, பல உரைப்ப தெல்லாம்-அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாடுவ தெல்லாம், வயிற்றுப் பெருமான் பொருட்டு-வயிறு வளர்த்தற் பொருட்டேயாகும்.

(குறிப்பு) அடுக்குகள் பன்மைகுறித்து நின்றன. வயிற்றுப் பெருமான் என்றது இழிவுப்பொருள் கருதியது.மானிடரைப் புகழ்வது அறமன்று என்றவாறு. (130)   
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 08:50:19 PM
   
131. உடலினைமட்டும் ஓம்பலாற் பயனில்லை  


புகாஉண்பார் அல்லுண்ணார் போகுந் துணைக்கண்
தவாவினை வந்தடையக் கண்டும்--அவாவினைப்
பற்றுச்செய் தென்னை பயமின்றால் நன்னெஞ்சே!
ஒற்றி உடம்போம் புதற்கு


(பதவுரை) நன்னெஞ்சே-எனது நல்ல நெஞ்சமே!, புகா உண்பார்-பகலில் சோறுண்டாரும், அல்லுண்ணார் -இரவில் சோறுண்ணவிராது மாய்வர், போகுந் துணைக்கண் -உயிர் நீங்குங்காலத்தில், தவாவினை-தவறாது ஒருவன் செய்த வினையே (அவனை) வந்தடையக் கண்டும்-வந்து சேர்வதை அறிஞர்வாய்க் கேட்டுணர்ந்தும், ஒற்றி உடம்போம்புதற்கு - உடைமையல்லாத இவ் வுடம்பினைப் பாதுகாத்தற்கு, அவாவினைப் பற்றுச் செய்தென்னை-பொருள்களிடத்து ஆசை கொள்ளுதலால் விளைவதென்னை?, பயமின்று - யாதொரு பயனுமில்லை.

(குறிப்பு) தவா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஆல்: அசைநிலை. ஒற்றி - அடைமானமாய்க் கொண்டுள்ளபொருள். (131)
 
 
     
    ------------------------------------------------------------------------------------------------------
 
132. மூப்பு இறப்புகளின் கொடுமை  


புழுப்போல் உவர்ப்பூறிப் பொல்லாங்கு நாறும்
அழுக்குடம்பு தன்னுள் வளர்ந்தாய்--விழுத்துமிழ்ந்(து)
இன்ன நடையாய் இறக்கும் வகையினை
நன்னெஞ்சே! நாடாய்காண் நற்கு


(பதவுரை) புழுப்போல் உவர்ப்பு ஊறி - புழுக்கள்போல் வெறுக்கத் தக்க குணங்களும் மிகுதலால், பொல்லாங்கு நாறும்-தீமைகள் பிறப்பதற்கிடமாக இருக்கின்ற, அழுக்கு உடம்பு தன்னுள்-தூயதல்லாத உடம்பினிடத்தே, நல்நெஞ்சே-நல்ல மனமே! வளர்ந்தாய்-நீ வளரா நிற்கின்றாய், விழுத்து உமிழ்ந்து-நீ வளரும் உடம்பு படுக்கையிடை வீழ்ந்து கோழையைக் கக்கி உமிழ்ந்து, இன்ன நடையாய் இறக்கும் வகையினை-இவைபோன்ற பிற ஒழுக்கத்தோடும் இறக்கு மென்பதனை, நற்கு நாடாய்-நன்கு ஆராய்ந்தறிந்து அதன்மீதுள்ள பற்றினை விடுவாயாக.

(குறிப்பு) 'விழுத்து' என்பது விழுந்து என்பதன் விகாரம். நன்கு நற்கு என்றாயது. ''மென்றொடர் மொழியிற் சில வேற்றுமையில் தம்மின வன்றொடர்.'' என்ற விதியாலாம். காண்: முன்னிலையசை. (132)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
133. ஒழுக்கமிலாதான் உயிர்விடுதல் நன்று  


ஒழுக்க மிலனாகி ஓர்த்துடைய னேனும்*
புழுப்பொதிந்த புண்ணிற் கொடிதாம்--கழுக்கிரையை
ஓம்பின்மற் றென்னை உறுதிக்கண் நில்லாக்கால்
தேம்பி விடுதலே நன்று.
*ஓர்த்துடைய யென்னும்.


(பதவுரை) ஓர்த்து உடையனேனும் - அறிவு நூல்களை ஆராய்ந்துணர்ந்த அறிவினனே யெனினும்,புழுப்பொதிந்த-புழுக்கள் நிறைந்த, புண்ணிற்கொடிதாம் கழுக்கிரையை-புண்ணினுங் கொடியதும் கழுகுகளுக் கிரையாவதுமாகிய உடலை, ஒழுக்கமிலனாகி ஓம்பின் - தீயொழுக்கத்தை மேற்கொண்டு வளர்த்து வருவானாயின், மற்று என்னை-அவன் அவ் வறிவாலடையும் பயன் யாது?, உறுதிக் கண் நில்லாக்கால்-நன்னெறிக்கண் நில்லாதவிடத்து, தேம்பி விடுதலே நன்று-அவன் அழிந்துவிடுதலே நல்லது.

(குறிப்பு) கழுகுக்கிரை என்பது கழுக்கிரை எனக்குறைந்தது. கழுகுக்குன்றம் என்பது கழுக்குன்றம் எனவருதல் போல. (133)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
134. உண்மைப் பெரியார் உலக வாழ்க்கையை வெறுப்பர்  


முடையுடை அங்கணம் நாடோறும் உண்ட
கடைமுறைவாய் போதரக் கண்டுந்--தடுமாற்றில்
சாவாப் பிறவாஇச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு.



(பதவுரை) முடை யுடை-அழுகல் நாற்றத் தினையுடைய, அங்கணம்-சாக்கடையினைப்போன்று, நாடோறும்-தினந்தோறும், உண்ட-சாபிட்ட உணவுப் பொருள்கள், கடைமுறை-இழிவான நிலையில், வாய் - எருவாய் முதலியவற்றின் வழியாக, போதர - வெளி வருதலைச் செய்ய, கண்டும்-பார்த்திருந்தும், தடுமாறு இல்-(மக்கள்) மனமயக்கத்தினாலே, சாவா-செத்தும், -பிறவா-பிறந்தும்(வாழுகின்ற) இச் சம்பிரத வாழ்க்கைக்கு - இம்மாயமான உலக வாழ்க்கையிடத்தே, மெய்கண்டார் - உண்மைப்பொருளையுணர்ந்த பெரியோர்களின், நெஞ்சு - மனம், மேவாதாம்-பொருந்தாததாகும்.

(குறிப்பு) இல்: ஐந்தனுருபு; ஏதுப்பொருளானது. சாவா, பிறவா, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். வாழ்க்கைக்கு: வேற்றுமை மயக்கம். (134)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
135. அறிவாளிகளின் கடமை


வயிறு நிறைக்குமேல் வாவின்மிக் கூறிச்
செயிரிடைப்பா டெய்துமாஞ் சீவன்--வயிறுமோர்
பெற்றியால் ஆர்த்திப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்.



(பதவுரை) வயிறு நிறைக்குமேல் - உணவால் வயிறு நிறைக்கப்படுமாயின், சீவன்-உயிர், வாவின் மிக்கு ஊறி-மிக்கு அவாவினை யடைந்து, செயிரிடைப் பாடு எய்தும்-தீவினைகளிடைக் கேட்டினை யடையும் (ஆதலால்), வயிறும்-வயிற்றையும், ஓர் பெற்றியால் ஆர்த்தி-கரணங்கள் தொழிற்கு உரியனவாகுமாறு சிறிது உண்பித்து, பெரும்பயன் கொள்வதே-இவ்வுடம்பால் இனிப் பிறவாமைக்கு ஏதுவாகிய காரியங்களைச் செய்து பெரும்பயன் கொள்வதே, கற்று அறிந்த மாந்தர் கடன்-அறிவு நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.

(குறிப்பு) வாவின்: தலைக்குறை. இடை: ஏழனுருபு. ஏ: தேற்றம். (135)
 
     
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 08:54:57 PM
   
141. அடக்கம் அனைத்தையும் தரும்  


தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை--தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.


(பதவுரை) தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்-தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னைத்தான் எய்தா நலன் இல்லை-பின்னர் அவனால் அடையமுடியாத இன்பம் எவ்வுலகத்து மில்லை; தன்னைக் குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்-தன்னைத்தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பிடி படுக்கப்பட்ட களிறு-பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத் தகப்பட்ட களிறேபோல் எஞ்ஞான்றும் வருந்துதற்குக் காரணமாகும்.

(குறிப்பு) களிறு-ஆண் யானை; பிடி-பெண் யானை. குறுமை+ஏவல்=குற்றேவல்; எளிய வேலைகள். கரி-சான்று, சாட்சி. (141)
 
    ---------------------------------------------------------------------------------------------------- 
     
142. உள்ளத்துயர்வே உயர்வுறும்  


உள்ளூர் இருந்துந்தம் உள்ளமறப் பெற்றாரேல்
கள்ளவிழ் சோலையாங் காட்டுளார் காட்டுள்ளும்
உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூ ருளார்.


(பதவுரை) உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்-இல் வாழ்க்கையை மேற்கொண்டு நடுவூரின்கண்ணே வாழ்ந்தாலும் தம் மனமடங்கப் பெறுவாராயின், கள் அவிழ்சோலை ஆம் காட்டு உளார்-அவர், தேன் சொரிகின்ற மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டின்கண்ணே வாழும் துறவியே ஆவர்; காட்டுள்ளும் உள்ளம் அறப்பெறுகல்லாரேல்-துறவறத்தை மேற்கொண்டு காட்டின்கண்ணே வாழ்ந்தாலும் தம் மனமடங்கப் பெறாராயின், நாட்டுள்ளும் நடுவூர் நண்ணி உளார்-அவர் நாட்டின் கண்ணதாகிய நடுவூரில் மனைவாழ்க்கையை மேற்கொண்டிருந்து, தீய செயல்களைப் பொருத்தி வாழும் கயவரையொப்பர்.

(குறிப்பு) உள்ளூர், மக்கள் கூடிவாழும் இடமாதலின் இல்வாழ்க்கையைக் குறிக்கவல்லதாயிற்று. நடுவூர் மக்களிடையே நெருங்கி வாழும் இடமாதலின் தீய செயல்களைச் செய்யப்படுமிடமாகக் கருதப்பட்டது. (142)
 
 
     
  ---------------------------------------------------------------------------------------------------------

   
143. மனத்தை யடக்குவார் மாபெருஞ் சிறப்படைவர்  


நின்னை யறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன்--நின்னை
அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற் றீண்டே
துறக்கம் திறப்பதோர் தாழ்.


(பதவுரை) நல் நெஞ்சே நின்னை அறப் பெறுகிற்கிலேன்-நல்ல நெஞ்சே! உன்னைச் சிறிதும் என் வசமாக்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றேன்; பின்னை-இனி, யான்-உன்னையே வசமாக்கிக்கொள்ளாத யான், யாரைப் பெறுகிற்பேன்-மற்றையவர்களை எங்ஙனம் வசமாக்க வல்லவனாவேன்!, நின்னை அறப்பெறுகிற்பேனேல்-உன்னை முற்றிலும் என்வசமாக்கிக் கொள்வேனாயின், துறக்கம் திறப்பது ஓர் தாழ்-துறக்க உலகத்தினைத் திறந்துவிட வல்லதாகிய ஒப்பற்ற திறவுகோலை, ஈண்டே பெற்றேன்-இம்மையிலேயே பெற்றவனாவேன்.

(குறிப்பு) கில்: ஆற்றல் இடைநிலை: பெற்றேன்: உறுதிபற்றி வந்த காலவழுவமைதி. மற்று: அசைநிலை. ஏ: பிரிநிலை. (143)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
144, ஐம்பொறிகளும் ஆடம்பரத் தோழர்களாம்  


ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண்கிளைஞர்--தோழர்
வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன்.



(பதவுரை) ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு-அறிவில்லாதவனும் மிக்க மயக்கத்தையுடையவனுமாகிய ஒருவனுக்கு, தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர்-ஐம்பொறிகளாகிய நட்பினரைவரும் இடுக்கண் வந்துழி உதவாத உறவினரேயாவர்: தோழர்-அந்நட்பினர், வெறுப்பனவும்-அறிஞர்களால் வெறுக்கப்படும் தீவினை காரணமாக வருவனவற்றையும், உண்டு-உவகையோடு நுகர்ந்து, எழுந்து போனக்கால்-உடம்போடு எழுந்துபோன (மரணத்தின்) பின்னர், உண்ட கடன்-அவர்களை உண்பிக்கத் தான்பட்ட கடனாகிய தீவினையை, ஆதன் இறுக்கும் ஆம்-அவ்வறிவில்லாதவன் அதனால் வரும் துன்பத்தை மறுமையில் அனுபவத்தே தீர்ப்பவனாவான்.

(குறிப்பு) இதனால் அறிவில்லாதவர்கள் மறுமைக்காகச் செய்து கொள்வது துன்பமேயன்றி இன்பமில்லை என்பது பெறப்பட்டது. ‘உண்ட’ என்பது பிறவினைப்பொருளில் வந்தது. (144)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
145. மனத்தை யடக்கியவன் மாபெருந் தெய்வம்  


தன்னொக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல்--என்னை
எழுந்தெண்ணே நோக்கி இருமையுங் கண்டாங்(கு)
அருட்கண்ணே நிற்ப தறிவு.


(பதவுரை) தன்னைப் பின்னை மனம் அறத்தான் பெற்றானேல்-இன்பம் பயப்பது போன்ற தன்னைத் தீநெறிகளில் முன்னர்ச் செலுத்திப் பின்னர் வருந்துகின்ற மனத்தினை ஒருவன் அடக்குவானாயின், தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை-அவனை நிகர்க்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை; எழுத்து எண்ணே நோக்கி என்னை-இலக்கணம் சோதிடம் முதலியவற்றையே ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது, இருமையும் கண்டு-இம்மையிற் புகழும் மறுமையிலின்பமும் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து, அருட்கண்ணே நிற்பது அறிவு-அருளை மேற்கொண்டு ஒழுகுதலே அறிவுடைமையாகும்.

(குறிப்பு) ஆங்கு: அசைநிலை; ஏழனுருபு. (145)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 09:28:58 PM
   
146. அறிவார்க்கும் அறியார்க்கும் கவலை யொன்றே  


தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்*
விடுமாற்றந் தேர்ந்தஞ்சித் துஞ்சார்--தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார்தம் ஐம்புலனும்
ஆரும்வகை யாதாங்கொ லென்று.


*தம்மையுடையார்

(பதவுரை) தடுமாற்றம் அஞ்சிய தன்மையுடையார்-கலக்கத்திற்குக் காரண மாகிய பிறப்பு இறப்புகளை அஞ்சிய பெரியோர்கள், விடுமாற்றம் தேர்ந்து அஞ்சித் துஞ்சார்-அவற்றைப் போக்கும் உபாயத்தினை ஆராய்ந்துகொண்டே அவ்வச்சத்தால் துயிலார், தடுமாற்றம் யாதும் அறியாரும்-பிறப்பு இறப்புகளைச் சிறிதும் சிந்தியாதவர்களும், தம் ஐம்புலனும் ஆரும் வகை யாதாம் என்று துஞ்சார்-தம் ஐம்பொறிகளாலும் இன்பத்தை நுகருதற்கேற்ற உபாயம் யாது? என்று ஆரய்ந்துகொண்டே கவலையால் துயிலார்.

(குறிப்பு) ஆர்தல்-நுகர்தல்; தடுமாற்றம்-தடுமாறுதல்: அம் ஈற்றுத்தொழிற்பெயர். கொல்: ஐயம். 'பாலுக்குச் சர்க்கரையில்லை யென்பார்க்கும் பருக்கையற்ற, கூழுக்குப்போட உப்பில்லை யென்பார்க்கும்......விசனமொன்றே' என்ற தொடர்மொழியின் பொருளை ஈண்டு ஒப்பு நோக்குக. (146)
 
 
     
   ---------------------------------------------------------------------------------------------------
 
147. ஐம்பொறிகளால் ஆங்காலுந் துன்பம், போங்காலுந் துன்பம்  


ஆர்வில் பொறியைந்திற் காதி இருவினையால்
தீர்விலநீ கோதாதி சேர்விக்குந்--தீர்வில்
பழியின்மை யெய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலு முண்டு
.


(பதவுரை) நீ ஆர்வில் பொறி ஐந்திற் காதி-நீ செல்வமுற்ற காலத்து நிரப்புதற் கொண்ணாத மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் ஆளாகின்றாய்; இன்மை எய்தின்-நீ வறுமையுற்ற காலத்து, இரு வினையால்-நல்வினை தீவினை என்னுமிருவினைகளால், தீர்வில கோதாதி சேர்விக்கும்-விட்டு விலக இயலாத குற்றமுதலியவற்றில் படிவிக்கும்படியான, தீர்வில் பழி-நீங்குதலில்லாத பழியும், பறையாத பாவம்-இத்தன்மையதென் றியம்ப வொண்ணாத கொடிய நிலையும், வழியும்-அப்பொறிகளின் வழியாக, வருதலும்உண்டு-ஏற்படுதலும்கூடும்.

(குறிப்பு) சேர்விக்கும்: பிறவினைப் பெயரெச்சம். வழியும்-உம்: அசைநிலை, வருதலும்-உம்: எதிர்மறைப்பொருளது. (147)  
 
     ----------------------------------------------------------------------------------------------------
     
148. மனத்துறவுள்ளோர் மயக்கில் அகப்படார்  


அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர்நிலா தாகும்--அலைவிற்
புலன்களில் நிற்பினும் பொச்சாப் பிலரே
மலங்கடி வாளா தவர்க்கு.



(பதவுரை) அலை புனலுள் நிற்பினும்-அலைகளையுடைய நீரின் கண்ணே நின்றாலும், தாமரை ஈன்ற இலையின்கண்-தாமரையிலையிடத்து, நீர் நில்லாது ஆகும்-நீர் ஒட்டி நில்லாது; (அதுபோல), அலைவிற் புலன்களில் நிற்பினும்-சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு கூடியிருந்தாலும், தவர்க்கு-முனிவர்களை, கடிவுமலம் ஆளா-அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளா; பொச்சாப்பு இலர்-அவர்களும் மறதியால் அவற்றின் வயப்படுதலு மிலர்.

(குறிப்பு) 'தவர்க்கு' என்பதில் இரண்டனுருபுக்கு நான்கனுருபு வந்துள்ளது: உருபு மயக்கம். ஏ: ஈற்றசை. அலை புனல்: வினைத்தொகை. (148)
 
    ----------------------------------------------------------------------------------------------------- 
     
149. தன்னலமற்ற அறமே தலையாய அறமாம்  


பெற்றி கருமம் பிழையாமற் செய்குறின்
பற்றின் கண் நில்லா தறஞ்செய்க--மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும்.


(பதவுரை) பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்-நெஞ்சே! நற்குணமிக்க செயல்களைத் தவறாமல் செய்யக்கருதினால், பற்றின்கண்நில்லாது அறஞ்செய்க-அவாவின்றி அறத்தினைச் செய்வாயாக, அது-அவ்வறம், பொன்றாப் புகழ் நிறுத்தி-இம்மையில் அழிவில்லாத புகழை நிலைபெறச் செய்து, போய்ப் பிறந்த ஊர் நாடி-மறுமையில் நீ சென்று பிறந்த ஊரைத்தேடி, கன்று உடை தாய்போல் வரும்-தாய்ப்பசு தன் பாலை யருந்தத் தன் கன்றை நாடி விரைந்து வருதல்போலத் தன் பயனாகிய இன்பத்தை நுகர்விக்க உன்பால் விரைந்து வரும்.

(குறிப்பு) பொன்றா: பொன்றாத என்பதன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ''பல்லாவுள'' எனத் தொடங்குகின்ற நாலடியாரின் செய்யுட் பொருளை ஈண்டு ஒப்பு நோக்குக. (149)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
150. இன்பமும் துன்பமும் ஒன்றென எண்ணுக  


பேறழிவு சாவு பிறப்பின்பத் துன்பமென்
றாறுள அந்நாள் அமைந்தன--தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து)
இவையிவை என்றுணரற் பாற்று.



(பதவுரை) பேறு-செல்வம், அழிவு-வறுமையும், சாவு-இறப்பும், பிறப்பு-பிறப்பும், இன்பம்-இன்பமும்,துன்பம்-துன்பமும், என்ற ஆறு-என்று சொல்லப்படுகின்ற ஆறும், அந்நாள் அமைந்தன உள-முன்செய்த வினைகாரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; அவையவை வந்தால்-இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும், விம்மாது-மகிழாமலும், அழுங்காது-வருந்தாமலும், இவை-நம்மை நாடி வந்த இவை, இவை என்று தேறி உணரற்பாற்று-இன்ன வினைகளால் வந்தவை என்று ஆராய்ந்தறிந்து அடங்குதலே செயத்தக்கது.

(குறிப்பு) என்ற+ஆறு=என்றாறு: அகரம் தொகுத்தல். அவை அவை: அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளது. (150)
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 09:37:31 PM
   
151. உயர்வுக்குந் தாழ்வுக்கும் ஒருவன் செயலே காரணம்


தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி


(பதவுரை) தனக்குப் பகைவனும் நட்டானும் தானே-தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பினனும் தானேயாவான், பிறரன்று; தனக்கு மறுமையும் இம்மையும் தானே-தனக்கு மறுமையின்பத்தையும் இம்மை யின்பத்தையும் செய்துகொள்பவனும் தானே, தான் செய்த வினைப்பயன் தானே துய்த்தலால்-தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால், தனக்குக் கரி தானே-தான்செய்த வினைகளுக்குச் சான்றா வானும் தானேயாவன்.

(குறிப்பு) ஏகாரங்கள் பிரிநிலைப் பொருளன; அன்றி, தேற்றமுமாம். உம்மைகள் எண்ணுப்பொருளன. (151)  
 
   ----------------------------------------------------------------------------------------------   
     
152. செய்வினையே ஒருவனுக்குச் சிறந்த துணையாம்  


செய்வினை யல்லால் சிறந்தார் பிறரில்லை
பொய்வினை மற்றைப் பொருளெல்லாம்--மெய்வினவில்
தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு.


(பதவுரை) நெஞ்சு-நெஞ்சே!, செய்வினை அல்லால்-நீ செய்த வினை உனக்குத் துணையாவதன்றி, சிறந்தார் பிறரில்லை-சிறந்த துணைவராவர் பிறரிலர், மற்றைப் பொரு ளெல்லாம்-நிலையானவை யென்று நீ கருதுகின்ற மற்றைப் பொருள்களெல்லாம், பொய்வினை-அழியுந் தன்மையனவே, மெய்வினவில்-உண்மையையறிய விரும்பிக் கேட்பாயாயின், தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர் நீ யார்-தாயும் மனைவியும் தந்தையும் மக்களுமாகிய இவர்கள் நின்னோடு எத்தகைய தொடர்பினையுடையார்? நினை-அவர்கள்நிலையான தொடர்புடையவர்களா? என்பதை ஆராய்ந்து அறிவாயாக.

(குறிப்பு) வாழி: முன்னிலையசை: நினை: முன்னிலை யேவலொருமை வினைமுற்று. (152)  
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
153. உடம்பின் உண்மைநிலை


உயிர்திகிரி யாக உடம்புமண் ணாகச்
செயிர்கொள் வினைகுயவ னாகச்--செயிர்தீர
எண்ணருநல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
எண்ணருநோய் துன்பம் அவர்க்கு.


(பதவுரை) செயிர் கொள் வினை-குற்றம் தரும் வினை, குயவன் ஆக-குலாலனாக நின்று, உயிர் திகிரியாக-உயிர்காற்றையே தண்ட சக்கரமாகவு, உடம்பு மண்ணாக-எழுவகைத்தாதுவையே களிமண்ணாகவுங் கொண்டு, செயிர் தீரா-குற்றத்தின் நீங்காத, எண் அரு நல்யாக்கைக் கலம் வனையும்-நினைத்தற்கரிய உடலாகிய பாண்டத்தைச் செய்யும், அதனுள்-அவ்வுடலுள், அவர்க்கு-அதனை யனுபவிக்கும் சீவர்க்கு எண் அரு நோய் துன்பம்-அளவிடற்கரிய கொடிய நோய்கள் பல உளவாம்.

(குறிப்பு) உயிர், உடம்பு, வினை, யாக்கை, நோய் முதலியன திகிரி, மண், குயவன், கலம், துன்பமாக உருவகிக்கப்பட்டுள்ளது. மற்று: அசை நிலை. (153)  
 
      --------------------------------------------------------------------------------------------------
     
154. மக்களாகப் பிறந்தோர் மறுமையைக் கருதல்வேண்டும்


முற்பிறப்பில் தாஞ்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந் தின்புறா* நின்றவர்--இப்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம் கடிந்தறத்தை
முன்னி முயன்றொழுகற் பாற்று.
*இப்புறத் தின்புறா.


(பதவுரை) முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் - முற்பிறப்பில் தாம் செய்த அறங் காரணமாக, நல்லதோர் இல்பிறந்து இன்புறா நின்றவர்-உயர்குடியிற் பிறந்து இன்பத்தை நுகர்கின்றவர்கள், இப் பிறப்பே-இம்மை யின்பத்தையே, இன்னும் கருதுமேல்-இன்னமும் கருதி முயல்வாராயின், ஏதம்-மறுமையில் உறுவது துன்பமேயாகும்; (ஆதலால்) கடிந்து-இம்மையின்பத்தில் செல்லுங் கருத்தை ஒழித்து, அறத்தை முன்னி முயன்று ஒழுகற்பாற்று-மறுமை யின்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைக் கருதி முயன்று செய்தலே தக்கது.

(குறிப்பு) இன்: ஐந்தனுருபு; ஏதுப்பொருளது. ஆநின்று: நிகழ்கால இடைநிலை. ''இற்பிறந் தின்புறா நின்றவ ரிற்பிறப்பே''என்றும் பாடம். (154)  
 
      --------------------------------------------------------------------------------------------
     
155. மறுமையறஞ் செய்யார் மாமூட ராவர்  

அம்மைத்தாஞ் செய்த அறத்தினை வருபயனை
இம்மைத்துய்த் தின்புறா நின்றவர்--உம்மைக்(கு)
அறம்செய்யா(து) ஐம்புலனும் ஆற்றல் நல்லாக்
கறந்துண்பஃ தோம்பாமை யாம்.


(பதவுரை) அம்மை-முற்பிறப்பில், தாம் செய்த அறத்தின் வரு பயனை-தாம் செய்த அறங் காரணமாக வரும் இன்பத்தை, இம்மை-இப்பிறப்பில், துய்த்து-நுகர்ந்து, இன்புறா நின்றவர்-மகிழ்கின்றவர்கள், உம்மைக்கு-மறுமையின்பத்தின் பொருட்டு, அறஞ்செய்யாது-அறத்தினைச் செய்யாமல், ஐம்புலனு மாற்றுதல்-ஐம்பொறிகளாலும் நுகரப்படு மின்பங்களை நுகர்ந்துகொண்டு வாளா இருத்தல், நல் ஆ-நல்ல பசுவினை, கறந்து-பாலைக் கறந்து, உண்டு-மகிழ்ச்சியோடு பருகி, அஃது ஓம்பாமை ஆம்-பின் பசுவை உணவிட்டுக் காவாதிருத்தல் போலாம்.

(குறிப்பு) வருபயன்: வினைத்தொகை. ஓம்பாமை: மையீற்றுத் தொழிற்பெயர். (155)  
 
     
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 09:48:30 PM
   
156. நல்வினை தீவினைகளே ஒருவரின் நற்பிறப்புத்
தீப்பிறப்புக்குக் காரணம்
 


இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக--பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து)
எய்தும் வினையின் பயன்.



(பதவுரை) தாம்-மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும், இறந்த பிறப்பில்-முற்பிறப்பில், செய்த வினையை-செய்த நல்வினை தீவினைகளை, பிறந்த பிறப்பாலறிக-பிறந்த இப் பிறவியில் அடைகின்ற இன்ப துன்பங்களால் அறிவார்களாக, இனிப் பிறந்து எய்தும் வினையின் பயன்-இனி வறுமையில் அடையும் இன்ப துன்பங்களையும், பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக-இம்மையில் தாம் பிறந்து செய்யும் நல்வினை தீவினைகளால் அறிவார்களாக.

(குறிப்பு) அறிக: வியங்கோள் வினைமுற்று. (156)  
 
      ------------------------------------------------------------------------------------------------
     
157. வீடுறாப் பிறவி விழற்கிறைத்த நீரே


தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தா
ராய்வந்து தோன்றி அருவினையால்--மாய்வதன்கண்
மேலைப் பிறப்பும் இதுவானால் மற்றென்னை?
கூலிக் கழுத குறை.


(பதவுரை) அருவினையால்-மக்கள் வேறொரு தொடர்பு மின்றித் தத்தம் வினைகாரணமாக, தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தாராய் வந்து தோன்றி-(உலகிடைத் தம்முள்) தாயுந் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் சுற்றத்தாருமாக வந்து பிறந்து, மாய்வதன்கண்-வீடுபேற்றினையடைய முயலாமல் தம்முட் சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்து, மேலைப் பிறப்பும் இதுவானால்-வரும் பிறப்பிலும்அவர் மீண்டும் அங்ஙனம் தோன்றி அவருள் வேறு சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்தால், கூலிக்கழுத குறை-அவர் வாழ்க்கை ஒருவர்க்கொருவர் கூலியின் பொருட்டு அழுத காரியமாக முடியுமேயன்றி, மற்று என்னை-அதனாலாகும் பயன் வேறு யாது?

(குறிப்பு) மற்று: பிறிது என்னும் பொருளது. (157)
 
     
     -----------------------------------------------------------------------------------------------

158. மாறில்லா மனையறம் தவத்தினும் மாண்டதாம்  


வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின்--புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லன் விருந்தோம்பிச்
சொல்லெதிர் சொல்லா னெனில்.


(பதவுரை) வினை காத்து-தீவினைகளை விலக்கி, வந்த விருந்து ஓம்பி-தன்பால் வந்த விருந்தினரைப் பேணி, நின்றான்-வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனது, மனைவாழ்க்கை தவத்தின் நன்று-இல்வாழ்க்கை தவத்தினும் சிறந்ததாகும், புனைகோதை-அழகிய கூந்தலையும், மெல் இயல்-மெல்லிய இயலையுமுடைய, நல்லாளும்-பெண்ணும், விருந்து ஓம்பி-வந்த விருந்தினரைப் பேணி, சொல் - கணவன் சொல்லுக்கு, எதிர் சொல்லாள் எனில்-மாறுபாடாக எதிர்த்தொன்றும் சொல்லா திருப்பாளாயின், நல்லள் - சிறந்தவளே யாவள்.

(குறிப்பு) நின்றான், நல்லாள்:வினையாலணையும் பெயர்கள். கோதை-கூந்தல்; பெண்மயிர்; அன்றிப் பூமாலை யெனினுமாம். (158)
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
159. மனைவியாவாட்குரிய நற்குணங்கள்  


கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை--விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போ டுணர்வுடையாள் பெண்.



(பதவுரை) கொண்டாள் குறிப்பு ஒழுகல்-கணவன் குறிப்பறிந்து ஒழுகுதலும், கூறிய நாணுடைமை-மகளிர்க்குக் கூறிய நாணினையுடைமையும், கண்டதுகண்டு விழையாமை-எப் பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமையும், விண்டு வெறுப்பன செய்யாமை-கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையுமாகிய, (இவற்றை) வெஃகாமை-விரும்பாமையாகிய தீக்குணத்தினை, நீக்கி-விலக்கி (அஃதாவது விரும்பி மேற்கொள்ளுதலோடு), உறுப்போடு உணர்வுடையாள் பெண்-உடலழகும் அறிவும் உடையவளே பெண்ணாவாள்.

(குறிப்பு) கொண்டான்-மனையின் வாழ்க்கைப் பொறுப்பை மேற்கொண்டவன் (கணவன்): வினையாலணையும் பெயர். (159)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
160. நற்பெண்டிர் இவரென்பது  


மடப்பதூஉம் மக்கட் பெறுவதூஉம் பெண்பால்
முடிப்பதூஉம் எல்லாருஞ் செய்வர்--படைத்ததனால்
இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிரென் பார்.


(பதவுரை) மடப்பதூஉம்-இளமைப் பருவமாகிய மங்கைப் பருவத்தை யடைதலும், மக்கட் பெறுவதூஉம்-புதல்வர்களைப் பெறுதலும், பெண்பால் முடிப்பதூஉம்-பெண்களுக்குரிய அணிகலன்களை அணிந்துகொள்ளுதலுமாகிய இவற்றை, எல்லாரும் செய்வர்-எல்லா மகளிருஞ் செய்வர்; படைத்ததனால் - பெற்ற பொருள் சிறிதேயாயினும் அதனால், இட்டு- இரப்பார்க்கு இட்டு, தாம் உண்டு-தாமும் உண்டு, இல் வாழ்க்கை புரிந்து - மனை வாழ்க்கைக்குரிய மற்றைய கடன்களையும் விரும்பிச் செய்து, நல் அறத்தே நிற்பாரே-கற்பு நெறியின் வழுவாது நிற்பவர்களே, பெண்டிர் என்பார்-பெண்டிரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்.

(குறிப்பு) மடப்பதூஉம், பெறுவதூஉம், முடிப்பதூஉம்:இன்னிசை யளபெடைகள். ஏ: முன்னது ஈற்றிசை; பின்னது பிரிநிலை. (160)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 09:56:20 PM
   
161. கொண்டாள் தன்னைக் கொண்டாடும் வழி  


வழிபா டுடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்தாங்--கெதிருரையா(து)
ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து.



(பதவுரை) வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்-கணவன் கொள்கையைப் பின்பற்றி வாழ்க்கையினை நடத்தி, சொல்லிற்று முனியாது செய்து-அவன் உரைத்ததை வெறுப்பின்றிச் செய்து, எதிர் உரையாது-வெகுண்டு உரைத்தவிடத்தும் எதிர்த்துக் கூறாமல், ஏத்திப் பணியுமேல்-புகழ்ந்து வணங்குவாளாயின், இல்லாளை-மனைவியை, ஆண்மகன்-கணவன், புரிந்து-விரும்பி, போற்றிப் புனையும்-காத்தல் செய்வான்.

(குறிப்பு) நடாஅய்: இசைநிறை யளபெடை, ஆங்கு:அசை நிலை. (161)  
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
162. கற்பிற்கிழுக்கான காரியங்கள்


தலைமகனில் தீர்ந்துரைதல் தான்பிறரில் சேர்தல்
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல்--கலனணிந்து
வேற்றூர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்
கோற்றொடியாள் கோளழியு மாறு.


(பதவுரை) தலைமகனில் தீர்ந்து உறைதல்-கணவனின் நீங்கி வாழ்தலும், தான் பிறர் இல் சேர்தல்-அடிக்கடி அயலார் வீடுகளைத் தானே அடைதலும், நிலைமை இல் தீப்பெண்டிர்ச் சேர்தல்-நெறியில் நீங்கிய தீய மகளிரைச் சேர்ந்து பழகுதலும், கலன் அணிந்து வேற்றூர் புகுதல்-அணிகளை அணிந்து கொண்டு அயலூரைத் தனியே அடைதலும், விழாக்காண்டல்-தனியே சென்று திருவிழாக் காண்டலும், நோன்பிடுதல்-கணவன் கட்டளையின்றி விரதம் இருத்தலுமாகிய இவை, கோல் தொடியாள் கோள் அழியும் ஆறு-திரண்ட வளையலணிந்த பெண்ணினுடைய கற்பழிதற்குரிய வழிகளாம்.

(குறிப்பு) இல்: முன்னது ஐந்தனுருபு; நீக்கப்பொருள்; இரண்டாவது, வீடு என்னும் பொருளது; மூன்றாவது இன்மைப் பொருளது. (162)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
163. கற்பில் மகளிர் கணவர்க்குக் கூற்றுவர்  


அயலூ ரவன்போக அம்மஞ்ச ளாடிக்
கயலேர்கண் ஆர எழுதிப்--புயலைம்பால்
வண்டோச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று.


(பதவுரை) அவன் அயலூர் போக-கணவன் வேற்றூரை யடைந்த சமயம் பார்த்து, அம் மஞ்சள் ஆடி-அழகினைத் தரும் மஞ்சளைப் பூசிக் குளித்து, கயல் ஏர் கண் ஆர எழுதி-கெண்டைமீனையொத்த கண்களுக்கு அழகு பெற மையெழுதி, புயல் ஐம்பால் வண்டோச்சி நின்று உலாம்-கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மயிரிலுள்ள தேனை உண்ணவரும் வண்டுகளை ஓட்டிக்கொண்டு வெளியில் நின்று உலாவுகின்ற, வாள் ஏர் தடங்கண்ணாள்-வாள் போன்ற பெரிய கண்களையுடையவள், தண்டு ஓச்சிப் பின் செல்லும் கூற்று-கதாயுதத்தினை ஓங்கிக்கொண்டு அவனறியாவண்ணம் தன்னைக் கொண்டானது பின்சென்று தாக்குகின்ற கூற்றேயாவள்.

(குறிப்பு) ஏர்: உவமவுருபு, ஐம்பால் கூந்தல்: குழல்கொண்டை, சுருள், பனிச்சை, முடி என ஐவகையாக முடிக்கப்படுதலின். (163)  
 
     -----------------------------------------------------------------------------------------------------
     
164. இணைபிரியாக் காதலே இல்வாழ்க்கைக் குயிராம்


மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால்--ஒருவரால்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று.



(பதவுரை) மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும்-ஒத்த அன்பினையுடைய மனைவியும் கணவனுமாகிய இருவரும், பூண்டு-மேற்கொண்டு, உய்ப்பின் அல்லால்-செலுத்தினாலன்றி, ஒருவரால்-அவ்விருவருள் ஒருவரால், இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம்-இல்வாழ்க்கையாகிய அழகிய உயர்ந்த வண்டி செலுத்தப்படின், தெற்றிற்று நின்று செல்லாது-செல்லாமல் தடைப்பட்டு நின்றுவிடும்.

(குறிப்பு) சகடம்-சகடுகளையுடையது: காரணப் பெயர். சகடு-சக்கரம். (164)  
 
      ----------------------------------------------------------------------------------------------
     
165. இல்லறத்தான் இயல்புகள்


பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்றாரம்
நிச்சலும் நோக்காது பொய்யொரீஇ--நிச்சலுங்
கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு.


(பதவுரை) பிச்சையும் ஐயமும் இட்டு-இரந்தார்க்கும் துறந்தார்க்கும் வேண்டுவனவற்றை ஈந்து, பிறன் தாரம் நிச்சலும் நோக்காது-அயலான் மனைவியை எக்காலத்திலும் விரும்பாது, பொய் ஒரீஇ-பொய்பேசாது, நிச்சலும் கொல்லாமை காத்து-கொலைத்தொழிலை எஞ்ஞான்றும் செய்யாது, கொடுத்து உண்டு வாழ்வதே-விருந்தினரை உண்பித்துத் தாமும் உண்டு வாழ்தலே, இல்வாழ்க்கை இயல்பு என்னும்-இல்வாழ்க்கைக்குரிய இயல்பு என்று நூல்கள் கூறும்.

(குறிப்பு) பிச்சை-இரப்போர்க்கிடுவது, ஐயம்-அறவோர்க்கிடுவது. ஒரீஇ: சொல்லிசையளபெடை. நிச்சல்-நித்தல்; தகர சகரப்போலி. (165)
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 10:03:30 PM
   
166. இல்லறத்தானாகான் இயல்புகள்  


விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெருந்தக் கவரையும் பேணான்--பிரிந்துபோய்க்
கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமேல்
இல்வாழ்க்க்கை யென்ப திருள்.



(பதவுரை) விருந்து புறந்தரான்-தன்பால் வந்த விருந்தினரை யோம்பாமலும், வேளாண்மை செய்யான்-இரப்பார்க்கு ஒன்று ஈயாமலும், பெருந்தக்கவரையும் பேணான்-பெருமையிற் சிறந்தோரையும் மதியாமலும், பிரிந்துபோய்க் கல்லான்-மனைவி மக்களைப் பிரிந்து சென்று அறிவு நூல்களைக் கல்லாமலும், கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல்-தீவினையை மேற்கொண்டு ஒருவன் வாழ்வானாயின், இல்வாழ்க்கை என்பது இருள்-அவனால் நடத்தப்பெறும் மனைவாழ்க்கை அவனுக்கு நரகமேயாகும்.

(குறிப்பு) புறந்தரான், செய்யான்,பேணான்,கல்லான்,என்பன முற்றெச்சங்கள்; எண்ணும்மைகள் தொக்கன. ஒருவன் என்னும் எழுவாயினை வருவிக்க. (166)  
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
167. செயலற்றார்க்குச் செய்யும் அறமே சிறப்பானதாம்  


அட்டுண்டு வாழ்வார்க் கதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சி உடையவர்--அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை.



(பதவுரை) அட்டு உண்டு வாழ்வார்க்கு-சமைத்து உண்டு வாழ்கின்ற இல்லறத் தார்க்கு, அதிதிகள்-விருந்தினராவார், எஞ்ஞான்றும்-எக்காலத்தும், அட்டு உண்ணா மாட்சி உடையவர்-சமைத்து உண்ணாத பெருமையினையுடைய துறவறத்தினரே யாவர், அட்டு உண்டு வாழ்வார்க்கு-சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு, வாழ்வார்-அவ்வாறு வாழும் இல்லறத்தார், அதிதிகள் என்று உரைத்தல்-விருந்தினராவர் என்று சொல்லுதல், வீழ்வார்க்கு-மலையுச்சியினின்றும் நிலமிசை வீழ்வார்க்கு, வீழ்வார்-அங்ஙனம் வீழா நின்றவர், துணை-துணையாவரென்று கருதுதல் போலாம்.

(குறிப்பு) அட்டுண்ணா மாட்சி-சமைத்தற்கியலாநிலை எனினுமாம். (167)
 
      -----------------------------------------------------------------------------------------------
     
168. கொடுத்துண்டு வாழ்தலே குறையா வாழ்க்கையாம்  


நொறுங்குபெய் தாக்கிய கூழார உண்டு
பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்
அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற் றெல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளீஇ யற்று.



(பதவுரை) நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு-நொய்யாற் சமைத்த கூழினை வயிறார வுண்டு, பிறங்கு இருகோட்டொடு பன்றியும் வாழும்-விளங்குகின்ற இரண்டு கோரப் பற்களோடு பன்றியும் வாழும், அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கை-ஆதலால் அறத்தினைச் செய்து வாழ்வதே மக்கள் வாழவேண்டிய இல்வாழ்க்கையாகும், மற்றெல்லாம்-அறத்தினைச் செய்யாது தம்முடலைப் பேணி வாழ்வாருடைய இல்வாழ்க்கை யெல்லாம், வெறும் பேழை தாழ்க்கொளீஇயற்று-தன்னகத்தொன்றுமில்லாத பெட்டியைத் தாழிட்டுப் பூட்டிவைத்தல் போலாம்.

(குறிப்பு) பன்றியும்-உம்மை: இழிவு சிறப்பு. ஏ: பிரிநிலை. மற்று: பிறிது என்னும் பொருளது. கொளீஇ: சொல்லிசையளபெடை. (168)
 
   ------------------------------------------------------------------------------------------------------   
     
169. உடலும் பொருளும் பிறர்க்குதவவே உண்டாயின  


உப்புக் குவட்டின் மிசையிருந்(து) உண்ணினும்
இட்டுணாக் காலத்துக் கூராதாம்--தொக்க
உடம்பும் பொருளும் உடையானோர் நன்மை
தொடங்காக்கால் என்ன பயன்


(பதவுரை) உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும்-குன்று போன்ற உப்புக் குவியலின்மீது ஒருவன் அமர்ந்து உணவினை உண்டாலும், இட்டு உணாக்காலத்து கூராது-அவுணவில் உப்பினை இடாது உண்பானாயின் அதன் சுவை உணவில் பொருந்தாது, தொக்க உடம்பும் பொருளும் உடையான்-எழுவகைத் தாதுக்களும் கூடிய உடம்பினையும் செல்வத்தினையும் உடையான், ஓர் நன்மை தொடங்காக்கால்-ஒப்பற்ற அறத்தினை தொடங்கிச் செய்யானாயின், என்ன பயன்-அவற்றால் அவன் ஒரு பயனையும் அடையான்.

(குறிப்பு) கூர்தல்-மிகுதல், நிறைதல். உண்ணினும்: உம்மை உயர்வு சிறப்புப்பொருளது. ஆம்: அசைநிலை. (169)
 
   ---------------------------------------------------------------------------------------------------------   
     
170. கிடைத்தவற்றில் சிறிதினை அவ்வப்பொழுது எளியார்க்குதவுக  


பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவதொன்(று)
இற்றைநாள் ஈத்துண் டினிதொழுகல்--சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை
முதனின் றிடைதெரியுங் கால்.


(பதவுரை) நெஞ்சே! பெற்றநாள் பெற்றநாள்-செல்வத்தினை யடையுந்தோறும், பெற்றதனுள்-பெற்ற அச் செல்வத்தில், ஆற்றுவது-செய்வதற்குரிய, ஒன்று-அறத்தினை, இற்றை நாள்-இப்பொழுதே செய்வோமென்று கருதி, ஈத்து-இரப்பவர்க்குக் கொடுத்து, உண்டு-நீயும் உண்டு, இனிது ஒழுகல்-இனிமை பயக்கும் நன்னெறிக்கண் நின்று ஒழுகுவாயாக, அதனை-அவ்வறஞ் செய்தற்குரிய வழியை, முதல்நின்று இடை தெரியுங்கால்-முதலிலிருந்து முழுவதும் ஆராயுமிடத்து, சுற்றும்-எவ்விடத்தும், இதனில்-இதைக் காட்டினும், இலேசு உடை காணோம்-எளியது வேறொன்றும் இல்லை.

(குறிப்பு) பெற்றநாள் பெற்றநாள்: அடுக்குத்தொடர்: பன்மைப்பொருளது. ஒழுகல்: அல்லீற்று வியங்கோள். (170)
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 10:15:05 PM
   
171. முன் கொடுத்தலால் வந்த செல்வத்தை மேலுங் கொடாதிருப்பது மூடத்தனம்

கொடுத்துக் கொணர்ந்தறம் செல்வங் கொடாது
விடுத்துத்தம் வீறழிதல் கண்டார்--கொடுப்பதன்கண்
ஆற்ற முடியா தெனினுந்தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமைகாண் பார்.


(பதவுரை) கொடுத்து-தாம் முற்பிறப்பில் செல்வம் பெற்ற காலத்து வறியோர்க்கு வழங்கியதால், அறம் கொணர்ந்த செல்வம் கொடாது விடுத்து-(விளைந்த) அறம் கொண்டுவந்து கொடுத்த செல்வத்தினை வறியோர்க்குக் கொடாது விடுத்து, தம் வீறு அழிதல் கண்டார்-தம் பெருமை யழிகின்ற பிறரைக் கண்ட பெரியார், கொடுப்பதன்கண் ஆற்ற முடியாதெனினும்-வறுமையால் இரந்தோர்க்கு வள்ளன்மையோடு மிகுதியும் வழங்கமுடியாதெனினும், தாம் ஆற்றுவார்-தம்செல்வநிலைக்கேற்றவாறு கொடுத்துதவுவார், மாற்றார்- இரந்தவர்கட்கு இல்லை என்று கூறார், மறுமை காண்பார் - மறுமையின்பத்தை யடையுமவர்.

(குறிப்பு) கொணர்தல்-கொண்டுவருதல்; கொணா: பகுதி வீறு-மற்றொன்றற் கில்லாச் சிறப்பு. கொணர்ந்த+அறம்=கொணர்ந்தறம்: அகரந் தொகுத்தல். 'அறங் கொணர்ந்த செல்வம்' என பிரித்துக் கூட்டுக. (171)

 
      --------------------------------------------------------------------------------------------------
     
172. பகுத்துண்டு வாழல் பருவுடம்பின் பயன்  

பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாட்செறிந்து
விட்டொழிவ தல்லாலவ் வெங்கூற்றம்--ஒட்டிக்
கலாய்க்கொடுமை செய்யாது கண்டதுபாத் துண்டல்
புலாற்குடிலா லாய பயன்.


(பதவுரை) பட்டார்ப்படுத்து-முற்பிறப்பில் அறம் செய்யாது குறைந்த வாழ் நாளை இப் பிறப்பில் பெற்றோர்களைக் கொன்றும், படாதார்க்கு வாட்செறிந்து -முன்னை அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளைப் பெற்றோர்க்கு அவர்க்கு முன் தன் வாளையுறையுள் புதைத்து அவரைக் கொல்லாது, விட்டு-விடுதலை செய்து, ஒழிவதல்லால் - செல்வதல்லாமல், அவ்வெங்கூற்றம்-கொடிய யமன், ஒட்டிக் கலாய்க் கொடுமை செய்யாது-தன்மனம் சென்றவாறு முறையின்றிக் கோபங் கொண்டு துன்பம் செய்யான்; ஆதலால், கண்டது பாத்துண்டல்-ஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல், புலால் குடிலாலாய பயன் - புலாலினாலாய உடம்பினைப் பெற்றதாலுண்டாம் பயன்.

(குறிப்பு) புலால்-இறைச்சி. பாத்து-பகுத்து; பிரித்து. (172)
 
---------------------------------------------------------------------------------------------------------     
     
173. அறிவிலார்க்குரிய ஐந்தும், அறிவுடையார்க்குரிய ஐந்தும்
 


தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப் பழுக்காறென்(று)
ஐந்தே கெடுவார்க் கியல்பென்ப--பண்பாளா!
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொற்கற்
றாய்தல் அறிவார் தொழில்.


(பதவுரை) பண்பாளா-நற்குணமுடையாய்!, தண்டாமம்-(பெரியோர்களைப் பணியாமைக்குஞ் செய்யத் தகுவனவற்றைச் செய்யாமைக்கும் காரணமாகிய) நன்மையின் நீங்கிய மானமும், பொய்-பொய்யே பேசுதலும்,வெகுளி-கோபித்தலும், பொச்சாப்பு-மறத்தலும், அழுக்காறு - பொறாமையும், என்ற ஐந்து-என்று சொல்லப்படுகிற ஐந்தும்,கெடுவார்க்கு இயல்பு என்ப-அழிகின்றவர்களுக்கு உரிய குணங்களாகுமெனவும், ஈதல்-இரப்ப வர் குறிப்பறிந்து ஈதலும், அறிதல்-நல்லனவற்றை ஆராய்ந்தறிதலும், இயற்றுதல்- அறிந்தவற்றைச் சோர்வின்றிச் செய்தலும், இன்சொல்-யாவர்மாட்டும் இன்சொல் சொல்லுதலும், கற்றுஆய்தல்-அறிவு நூல்களைக் கற்று ஆராய்தலுமாகிய இவ்வைந்தும், அறிவார் தொழில் என்ப-அறிவுடையோர் தொழில்களாகுமெனவுங் கூறுவர் பெரியோர

(குறிப்பு) என்றைந்து: அகரந் தொகுத்தல். ஏ: பிரிநிலை. என்ப: பலர்பால் எதிர்கால வினைமுற்று. ப: பலர்பால் விகுதி. (173)
 
    -------------------------------------------------------------------------------------------------------- 
     
174. துறவிகளை யுண்பிப்பதே தூய அறமாம்


நீத்தாற்றின் நின்ற நிலையினோர் உண்டக்கால்
ஈத்தாற்றி னாரும் உயப்போவார்--நீத்தாற்றிற்
பெற்றிப் புணையன்னார் பேர்த்துண்ணா விட்டக்கால்
எற்றான் உயப்போம் உலகு.


(பதவுரை) நீத்து ஆற்றின் நின்ற நிலையினோர் - பற்றுவிட்டுத் துறவற நெறிக்கண்ஒழுகும் பெரியோர், உண்டக்கால்-உண்பாராயின், ஈத்து ஆற்றினாரும் - அவர்களை உண்பித்து அந் நெறியிடை வழுவாமல் செலுத்தினோரும்; உயப்போவார்-பிறவிப்பிணியின் நீங்கப் பெறுவர், நீத்த ஆற்றின்-தமது துறவொழுக் கத்தால், புணை அன்ன பெற்றியார்-ஏனையோரையும் பிறவிக் கடலினின்று கரையேற்றவல்ல, புணைபோலுந் தன்மையையுற்ற அவர், பேர்த்து-தமது இருக்கையினின்றும் பேர்ந்து, உண்ணா விட்டக்கால்-உண்ணாதொழியின், உலகு என்றான் உயப்போம்-இல்லறநெறியிடைப்பட்ட உலகினர் அக் கடலின் றெங்ஙனம் கரையேறுவர்?

(குறிப்பு) உண்டக்கால்: கால் ஈற்று வினையெச்சம். உலகு: இடவாகு பெயராய் உலகினரை யுணர்த்தியது. ஈந்து: ஈத்து; வலித்தல் விகாரம். (174)  
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
175. தீயோரை யுண்பிப்பது தீங்காம்  


கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
வடுத்தீர்த்தார் உண்ணிற் பெறலாம்--கொடுத்தாரைக்
கொண்டுய்யப் போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டீத்து வீழ்வார் கிழக்கு.


(பதவுரை) குணமுடையார்-துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய குணங்களையுடையார், கொடுத்தாரை-தமக்கு உண்டி முதலியன உதவினாரையும், கொண்டு உய்யப்போவார்-பிறவிப் பிணியின் நீக்கத் தாமும் நீங்குவர், அல்லாதார்-அக்குணங்களில்லாதவர்கள், உண்டு-பிறர் கொடுப்பதை உண்டு ஈத்து கிழக்கு வீழ்வார்-தம்மை உண்பித்தாரையும் இழுத்துச்சென்று நரகிடை வீழ்த்துத் தாமும் வீழ்வர்; (ஆதலால்) கொடுத்து உய்யப்போமாறு கொள்வான்-இல்லற நெறிக்கண் நின்று ஈகையால் உய்யும் நெறியை அடையக் கருதுகின்றவன், குணத்தில் வடுத்தீர்ந்தார் உண்ணில் பெறலாம்-குற்றமற்ற குணத்தினையுடைய துறவிகளை ஊட்டின் அதனை அடையலாம்.

(குறிப்பு) கிழக்கு-பள்ளம்; ஈண்டு நரகம். ஈர்த்து என்பது ஈத்து என இடைக் குறைந்து. (175)
 
     
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 10:25:46 PM
   
176. மூவகை ஈகை  


அடங்கினார்க் கீதல் தலையே அடங்கா(து)
அடங்கினார்க் கீதல் இடையே--நுடங்கிடையாய்!
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃதென்ப
தோற்பாவைக் கூத்தினுள் போர்.



(பதவுரை) நுடங்கு இடையாய்-துவளுகின்ற இடையினையுடைய பெண்ணே!, அடங்கினார்க்கீதல் தலை-கொடுப்போர் பணிவுடன் மனம் பொறி வழி போகாது அடங்கினவர்களுக்கு உண்டி முதலியன உதவுதல் தலையாய அறம், அடங்காது அடங்கினார்க் கீதல் இடை-அங்ஙனம் அவர் பணியாது அடங்கின வர்களுக்கு ஈவது இடையாய அறம், ஏற்பானும் தானும் அடங்காக்கால்-தானும் அடங்காது அடங்காதவனுக்கு ஈயின், அஃது-அவ் வீகை, கூத்தினுள் தோற்பாவைப் போர் என்ப-நாடக மேடையில் தோலாற் செய்த பொம்மைகள் ஒன்றோடொன்று போர்புரிதலை யொக்கும் என்று கூறுவர் பெரியோர்.

(குறிப்பு) அடங்காதார் அடங்காதார்க் கீதல் கடை என்ப. இது தோற்பாவைப் போர் எனப்பட்டது. ஏ:முன்னது சிறப்புப் பொருளது; பின்னது தெரிநிலைப் பொருளது. முதலடி ஐஞ்சீர் பெற்றுள்ளது. (176)
 
  ------------------------------------------------------------------------------------------------------   
     
177. ஊண் கொடையே உயர்ந்த கொடையாம்


வாழ்நா ளுடம்பு வலிவனப்புச் செல்கதியும்
தூமாண் நினைவொழுக்கங் காட்சியும்--தாமாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோடு
ஒன்றுங் கொடையொப்ப நில்.


(பதவுரை) மாண்ட உண்டி கொடுத்தான் - மாட்சிமைப்பட்ட உணவினைக் கொடுத்தவன், வாழ்நாள் உடம்புவலி வனப்பு செல்கதி தூமாண் நினைவு ஒழுக்கம் காட்சி கொடுத்தலால்-ஆயுள் உடல்வலிமை அழகு மறுமைப்பயன் தூயசிறந்த எண்ணம் ஒழுக்கம் நற்காட்சி முதலியவற்றையும் அவ் வுணவு வாயிலாகக் கொடுப்பதால், ஊண் கொடையொடு ஒப்பது கொடை ஒன்றும் இல்-பசித்தவர்கட்கு உணவு கொடுத்தலோடு ஒத்த கொடை வேறொன்றும் இல்லை.  

(குறிப்பு) 'உண்டி முதற்றே உணவின் பிண்டம்,' என்ற புறநானூற்றடி யீண்டு நோக்கற்பாலது. மாண்ட-மாண்: பகுதி. முதலிரண்டடிகளில் வரும் உம் இரண்டும் பெயர்ச் செவ்வெண்- உண்ணப்படுவது ஊண். (177)
 
    ------------------------------------------------------------------------------------------------------- 
     
178. கொடுப்பவர் கொடையினும் இரப்பவர் கொடை யேற்றமாம்


பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை- இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்த லால்.



(பதவுரை) இரப்பவர் இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்தலால்-இரப்பவர் இம்மையிற் புகழையும் மறுமையில் இன்பத்தையும் ஈவோருக்கு உதவுதலால், பரப்பு நீர் வையத்துப் பல்லுயிர்கட்கெல்லாம்-கடல் சூழ்ந்த உலகில்உள்ள எல்லா மக்களுயிர்கட்கும், இரப்பாரின் வள்ளல் களுமில்லை-இரப்பார் போன்ற சிறந்த வள்ளல்கள் பிறரிலர்.

(குறிப்பு) இரப்பாரின்: இன் உருபு, ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள். (178)  
 
      --------------------------------------------------------------------------------------------------
     
179. செல்வர்கள் செய்ய வேண்டுவன


செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு--நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு.


(பதவுரை) செல்வத்தைப் பெற்றார்-பொருளையடைந்தவர்கள், சினங்கடிந்து-வெகுளியினீங்கி, செவ்வியராய்-காண்டற்கு எளியராய், பல்கிளையும் வாடாமல்-சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாவண்ணம், பாத்து உண்டு-அவர்கட்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு, நல்ல ஆம்-இம்மை வறுமைப் பயன்களை யடைவிக்கின்ற, தானம் மறவாத தன்மையரேல்-அறத்தினையும் மறவாது செய்யுந்தன்மையராயின், அஃது வானகத்து வைப்பதோர் வைப்பு என்பர்-அத்தன்மையைமேலுலகத்தில் தமக்கு உதவுமாறு வைக்கின்ற ஒப்பற்றசேமநிதி என்று பெரியோர் கூறுவர்.

(குறிப்பு) வைப்பு-பாதுகாப்பாக வைக்கப்படுவது, பொருள் முதலியன. பாத்து பகுத்து: மரூஉ. (179)

---------------------------------------------------------------------------------------------------
     
180. தானஞ் செய்வார்க்கு வானம் வழி திறக்கும்  


ஒன்றாக நல்ல(து) உயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்த் தடங்கினார்க் கீத்துண்டல்--என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து.



(பதவுரை) ஒன்றாக நல்லது உயிரோம்பல்-அறங்களுள் தன்னோடொப்ப தின்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்-அதனையடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன்-இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி யடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது-வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

(குறிப்பு) என்றிரண்டு: அகரந்தொகுத்தல். வருகென்று: அதுவுமது. குன்றா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (180)
 
     
     

Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 10:38:11 PM
 
181. தன்னைப் போற்றுவதும் தனிப்பெரும் ஈகையே


சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப் பாகன்மற்(று)
ஈரப் படினும் அதுவூரான்--ஆரக்
கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல.



(பதவுரை) சோற்றூர்திப் பாகன் சோராப் பசிக்குமேல் ஈரப்படினும் அது ஊரான்-உணவால் நிலைபெறும் உடலாகிய ஊர்தியைச் செலுத்தும் உயிராகிய பாகன் மிக்க பசியை அடையுமாயின் வாளால் அறுப்பினும் அதனைச் செலுத்தான், அதனால் முடிக்கும் கருமம் பல-அவ்வுடலால் செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் பல இருப்பதால், ஆரக் கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும்-அவ்வுடலைத் தொழிற்படுத்தற் கேற்ற நிலைமையில் உண்பித்துக் காரியங்களை முடித்துக்கொள்ளுதல் வேண்டும்.

(குறிப்பு) சோர-சோரும்படி: வினையெச்சம். சோர்தல்-தளர்தல். சோற்றூர்தி-உடல். மற்று: அசைநிலை. (181)  
 
   ---------------------------------------------------------------------------------------------------   
     
182. ஈகையைப்போன்று மறுமைக்கேற்றது எதுவுமில்லை


ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவருங் கொள்ளாத வாறெண்ணி--மேவரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுதோர்ந்து தம்முடமை
பற்று விடுதல் இலர்.
[/color]

(பதவுரை) தம் உடைமை உலகத்தில் யாவரும் கொள்ளாதவாறு - தமது பொருளை உலகில் மற்றை யாவரும் கவரா வண்ணம் காக்கவல்லதும், மேவ அரிய மற்றுடம்பு கொள்ளும் பொழுது-அப் பொருளை அடைதற்கரிய மறுபிறவியைத் தாம் அடையுங்காலத்தும் அதனைத் தம்பால் அடைவிக்க வல்லதும், எண்ணி ஓர்ந்து-அறமே என்பதனை ஆராய்ந்தறிந்து, பற்றுவிடுதல் இலர்-அப் பொருளின்கண் வைத்த பற்று நீங்காராய் ஈதலால், ஈவாரின் உலோபர் இல்லை-இரப்பவருக்கு அவர் வேண்டுவதை ஈவார் போன்ற கடும் பற்றுள்ளம் உடையார் வேறு இலர்.  


(குறிப்பு) மேலரிய: அகரந்தொக்கது. எண்ணி ஓர்ந்து என்ற வினை யெச்சங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆராய்ந்தறிந்து எனப்பொருள்பட்டன. ஈகையின் சிறப்பினை உயர்த்துக் கூறுவான்,“ஈவாரின் உலோபர் இலர்” என்றார். (182)
 
     ------------------------------------------------------------------------------------------------
     
183. உலோபி தடியடிக் குதவுவன்  


இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார்--நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து.



(பதவுரை) பட்ட-தம்பால் உள்ள பொருள்களை, ஈண்டும் இட்டக் கடைத்தரார்-நெருங்கிய நட்பினர்களுக்கும் கொடாமலும், பலிமரீஇ வழங்காத பான்மையார்-பிச்சை யேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் உலோப குணமுடையார், நட்ட சுரிகையாற்கானும்-உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், சுலாக்கோலாற்கானும்- தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், ஆபோல் சுரந்து சொரிவது ஆம்-பசு கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும்.


(குறிப்பு) சுரிகையாற்கானும், சுலாக்கோலாற்கானும் என்பதிலுள்ள ‘ஆன்’ இரண்டும் சாரியைகள். மரீஇ: சொல்லிசையளபெடை. (183)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
184. அறிவுப்பொருளை ஈதலும் பெறுதலும்


கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின்--அடுத்தடுத்துச்
சென்றாங் கடைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து.



(பதவுரை) கொடுப்பான்பசை சார்ந்து கொள்வான் குணத்தில் கொடுக்கப் படுதல் அமையின்-ஞானாசிரியன் அன்போடு தன்னையடைந்த மாணாக்கனது திறமைக்கேற்ப உபதேசிக்க வல்லவனாதல் அமையின், அடுத்தடுத்துச் சென்று ஆங்கு அடைந்து-பலமுறை அவன்பாற் சென்று அவன் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டு, களைவினை என்பரே வென்றார் விளங்க விரித்து-‘பிறவிக்குக் காரணமாய வினைகளை நீக்குமின்’ எனப்புலன்களை வென்ற முனிவர் யாவரும் உணறுமாறு விரித்துக் கூறுவர்.

(குறிப்பு) ‘அடுத்தடுத்துச்’ சென்றாங் கடைந்து களைவினை என்றதன் குறிப்பால், கொடுப்பான் கொள்வான் என்பன ஆசிரியனை யும் மாணக்கனையும் முறையே உணர்த்தி நின்றன. அடுத்தடுத்து: அடுக்குத்தொடர். பன்மைப் பொருள் தந்துநின்றது. (184) 

--------------------------------------------------------------------------------------------------------
     
185. ஈதலும் ஏற்றலும் இல்லெனில், யாதும் இல்லையாம்


கொடுப்பான் வினையல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப் படும்பொருளும் அன்றால்--அடுத்தடுத்து
நல்லவை யாதாங்கொல் நாடி யுரையாய்நீ
நல்லவர் நாப்பண் நயந்து.



(பதவுரை) கொடுப்பான்-இவ்வுலகத்திலே கொடுக்குங் கொடையாளி, வினை யல்லன்-கொடுக்குஞ் செயலை மேற்கொள்ளாதவனாயும், கொள்வான்-கொள்பவனாகிய இரவலன், அல்லன்-அல்லாமல் யாவரும் செல்வராயும், கொடுக்கப்படும் பொருளும்-வழங்குவதற்குரிய பொருளும், அன்றால்-வழங்குதற்கல்லாமல் ஓரிடத்தே நிலைத்திருக்குமானால்; நாப்பண்-சன்றோர்களிடையே, அடுத்தடுத்து-அடிக்கடி(ஏற்படவேண்டிய), நல்லவை-நற்காரியங்கள், யாது ஆம்-எங்ஙனம் ஏற்படும் (என்பதை), நீ நயந்து-நீ உலக நன்மையை விரும்பியவனாய், நாடி-ஆலோசித்து, உரையாய்-சொல்வாயாக.

(குறிப்பு) புரவலரும் இரவலருமின்றி உலகமிருக்குமானால் நல்வினைக்கே இடனின்றி யாவும் நிலைத்திணைப்பொருளாய் நிற்குமென இங்கு நினைப்பூட்டலாயினர். ‘கொடுக்கப்படு பொருளுமன்றால்’ என்ற பாடபேதம் திருவாளர் செல்வக்கேசவராய முதலியார் கண்டதாம். இதனைத் தமிழ்ச் செல்வம் என்ற நீதிநூற்றொகையாலும் காணலாம். (185)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 18, 2011, 10:45:31 PM
   
186. நன்ஞானத்தின் இயல்பு  


அறிவு மிகப்பெருக்கி ஆங்காரம் நீக்கிப்
பொறியைந்தும் வெல்லும்வாய் போற்றிச்--செறிவினான்
மன்னுயி ரோம்புந் தகைத்தேகாண் நன்ஞானந்
தன்னை உயக்கொள் வது.


(பதவுரை) நன்ஞானம் தன்னை உயக்கொள்வது-நன்ஞானம் தன்னை யுடையவனுக்கு உய்யும் நெறியை யருளுவதாவது, அறிவு மிகப் பெருக்கி-அறிவினை மிகப் பெருகுமாறு செய்து, ஆங்காரம் நீக்கி-ஆங்காரத்தினைப் போக்கி, பொறியைந்தும் வெல்லும் வாய்போற்றி-ஐம்பொறிகளையும் வெல்லும் வழியினை வளர்த்து, செறிவினான்-அடக்கத்தோடு,மன்னுயிர் ஓம்பும் தகைத்து-நிலைபெற்ற உயிர்களைத் துன்பம் அணுகாவகை காக்கும் தன்மையை உடையனாக்குவதேயாகும்.

(குறிப்பு) காண்: முன்னிலை அசை. வாய்-வழி. ஏ: அசை நிலை. தகைத்து: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.(186)
 
     ----------------------------------------------------------------------------------------------------
     
187. செயற்கரிய செய்வதே சிறப்பாம்


சோறியாறும் உண்ணாரோ? சொல்லியாருஞ் சொல்லாரோ?
ஏறியாரும் வையத்துள் ஏறாரோ?--தேறி
உரியதோர் ஞானங்கற் றுள்ளந் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு.


(பதவுரை) சோறு யாறும் உண்ணாரோ, சொல்யாரும் சொல்லாரோ, ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ-சோறு உண்ணுதலையும், அரியன செய்வேனென்று சொல்லுதலையும், ஊர்திகளில் ஏறிச் செல்லுதலையும் உலகத்துள் எல்லாரும் செய்வர், உரியதோர் ஞானங்கற்றுத் தேறி-கற்றற்குரிய ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்து, உள்ளந்திருத்தி-மனமாசறுத்து, அரிய துணிவதாம் மாண்பு-செயற்கரியன செய்து வீடுபேற்றினையடையக் கருதுவதே பெருமையாகும்.

(குறிப்பு) சோறு+யாரும்=சோறியாரும், இகரம் குற்றியலிகரம். ஏறு: ஏறப்படுவது. அரிய: அன்சாரியை பெறாத பலவின்பால் வினையாலணையும் பெயர். (187)
 
    ---------------------------------------------------------------------------------------------------- 
     
188. ஒரே பொருள் இடவேறுபாட்டால் உயர்வும் தாழ்வும்


பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு தெண்ணீர் அமுதமாம்--ஓம்பற்(கு)
ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு.


(பதவுரை) பாம்பு உண்ட நீரெல்லாம் நஞ்சு ஆம்(அது போல்)-பாம்புகள் பருகிய நீரனைத்தும் நஞ்சாக மாறுதல் போல, கடையாயார் மாட்டு ஞானம் களியாம்-கயவர்கள்கற்கும் ஞானநூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்; பசு உண்ட தெண்ணீர் தேம்படு அமுதம் ஆம் அதுபோல்-பசுக்கள் பருகிய தெளிந்த நீர் இனிய பாலாக மாறுதல்போல, உயர்ந்தார்கண் ஞானம் ஓம்தற்கு ஒளியாம்-உயர்ந்தோர்கள் கற்கும் ஞான நூல்கள் அவர் மாட்டுப் போற்றுதற்குரிய அறிவினை வளர்க்கும்.

(குறிப்பு) களி-களிப்பைத் தருவது; மயக்கம். தேம்-இனிமை; நல்ல சுவை படுதல்-பொருந்துதல், ''அதுபோல'' என்பதனை ஈரிடத்தும் கூட்டுக.(188)
 
   ---------------------------------------------------------------------------------------------------   
     
189. ஞான நூல்களின் ஆராய்ச்சி எப்பொழுதும் வேண்டும்


கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப் படுவது அருளே--அடுத்தடுத்து
உண்ணப் படுவது நன்ஞானம் எப்பொழுதும்
எண்ணப் படுவது வீடு.



(பதவுரை) நாளும் கெடுக்கப்படுவது தீக்கருமம்-எக்காலத்தும் அழிக்கப்படு வது தீவினையே, கொடுக்கப்படுவது அருளே-பிறர் பால் செய்தற்குரியது அருளே, அடுத்தடுத்து உண்ணப் படுவது நன் ஞானம்-பலமுறையும் ஆராய்ந்து இன்புறுதற் குரியது நல்ல ஞான நூலே, எப்பொழுதும் எண்ணப்படுவது வீடு-எஞ்ஞான்றும் மனத்தால் நினைக்கப்படுவது வீடுபேறேயாம்.


(குறிப்பு) வீடு-விடப்படுவது: முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடுத்தடுத்து: அடுக்குத்தொடர். (189)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
190. வீட்டுலகடைய வேண்டுவோர் இயல்பு


இந்தியக் குஞ்சரத்தை ஞான இருங்கயிற்றால்
சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே--பந்திப்பர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்து வார்.



(பதவுரை) இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப் படுத்துவார்-இம்மையிற் புகழையும் மறுமையில் வீடுபேற்றையும் தவறாமலடையக் கருது கின்றவர்கள், இந்தியக் குஞ்சரத்தைச் சிந்தனைத் தூண் பூட்டிச் சேர்த்தியே-இந்திரியங்களாகிய யானைகளை உள்ளமாகிய தூணிடைச் சேர்த்து (விலகாவகை) ஞான இருங் கயிற்றால் பந்திப்பர்-ஞானமென்னும் வலியகயிற்றால் இறுகக் கட்டுவர்.


(குறிப்பு) இந்தியம்-இந்திரியம், இந்தியம், ஞானம், சிந்தனை மூன்றும் முறையே குஞ்சரம், கயிறு, தூண்களாக உருவகிக்கப்பட்டுள்ளது. (190)
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 19, 2011, 07:38:58 PM
   
191. பிறவிப் பிணியினைப் பெயர்க்கும் வழி


உணர்ச்சியச் சாக உசாவண்டி யாகப்
புணர்ச்சிப் புலனைந்தும் பூட்டி--உணர்ந்ததனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடைய னாகுமேல்
பேர்கின்ற தாகும் பிறப்பு.


(பதவுரை) உணர்ச்சி அச்சாக உசா வண்டியாக - அறிவை அச்சாணியாகவுடைய ஆராய்ச்சி யென்னும் வண்டியில், புணர்ச்சி புலனைந்தும் பூட்டி- ஐம்பொறி களாகிய புரவிகளைந்தையும் சேர்த்துப் பூட்டி, உணர்ந்து அதனை ஊர்கின்ற பாகன்-செலுத்தும் நெறியை அறிந்து அவ் வண்டியைச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், உணர்வு உடையனாகுமேல்-தெளிந்த அறிவினையும் உடையனாயின், பிறப்புப் பேர்கின்றதாகும்-பிறவிப்பிணி அவனை விட்டு நீங்குவதாகும்.  

(குறிப்பு) உணர்ச்சி உசா புலன் இவை முறையே அச்சு வண்டி புரவிகளாக உருவகிக்கப்பட்டுள்ளன. பெயர்தல்-பேர்தல்: மரூஉ. (191)  
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
192. பிறவியை யொழித்தலே பேரறிவாம்


தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக் குறுதி உயிரோம்பி வாழ்தல்
அறிவிற் கறிவாவ தெண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு வாரா நெறி.


(பதவுரை) எண்ணின்-ஆராயின், தறுகண் தறுகட்பம் - அஞ்சாமையுள் அஞ்சாமையாவது, தன்னைத்தான் நோவல்-தன்கண் குறையுளதாயின் அதனைக் கண்டு வருந்துதலாம், உறுதிக்குறுதி உயிரோம்பி வாழ்தல்-நல்ல செயல்களுள் நல்ல செயலாவது பிறவுயிர்களைப் பாதுகாத்து வாழ்தலாம், அறிவிற்கறிவாவது ஈண்டு மறுபிறப்பு வாராநெறி-அறிவினுள் அறிவாவது இவ்வுலகில் மீட்டும் பிறவாமைக்கேதுவாகிய நெறியின்கண் ஒழுகுதலாம்.

(குறிப்பு) தறுகண்-அஞ்சாமை, ''தந்திரிக் கழுகு தறுகண் ஆண்மை'' என்ற தொடரில் இப்பொருள் காண்க. தறுகட்டறு கட்பம்-பெருமைக்கெல்லாம் பெருமை என்பாருமுளர். மற்று: அசைநிலை. (192)  
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
193. வீட்டுலகினை யுறும்விதம்


உயிர்வித்தி ஊன்விளைத்துக் கூற்றுண்ணும் வாழ்க்கைச்
செயிர்வித்திச் சீலத்தின் றென்னை?--செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாங்
கூற்றங் குறுகா இடம்


(பதவுரை) உயிர் வித்தி ஊன்விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கை-உயிர்களாகிய விதையை விதைத்து உடல்களாகிய தானியத்தை விளைவித்து, கூற்றுவன் உண்ணுதற்குக் காரணமாகிய இவ்வுலக வாழ்க்கையை மெய்யென நம்பி, செயிர் வித்தி - தீமையை விதைத்து, சீலம் தின்று என்னை - நல்லொழுக்கமாகிய விதைகளை விதையாமல் தின்பதால் வரும் பயன் யாது?, செயிரினை மாற்றி- தீவினையை மாற்றி, மறுமை புரிகிற்பின்-மறுமை இன்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைச் செய்யின், கூற்றம் குறுகா இடம் காணலாம்-எமன் அணுகாத வீட்டினை அடைந்து இன்புறலாம்.

(குறிப்பு) உயிர், ஊன், இவ்விரண்டும் விதைகளாகவும் விளைபொருளாகவும் கூறப்பட்டுள்ளன. (193)  
 
  -----------------------------------------------------------------------------------------------------   
     
194. நல்லொழுக்கமே வீட்டிற்கு வித்தாம்


இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை--கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர்.


(பதவுரை) உலகத்து இயற்கை இருளே-இவ்வுலகம் அறியாமை என்னும் இருளால் நிறைந்ததேயாகும்,கற்ற அறிவுடைமை இருள் அகற்றும் கைவிளக்கே- ஞான நூல்களை கற்றதனலாய அறிவுடைமை அவ் விருளைப்போக்கும் கைவிளக்கேயாகும்; நெஞ்சத்து அருளுடைமை கைவிளக்கின் நெய்யே-மனத்தின்கண்ணுள்ள அருள் அவ்விளக்கெரித்தற்குக் காரணமாகிய நெய்யேயாகும், நெய் பயந்த பால்போல் ஒழுக்கத்தவரே-நெய்க்குக் காரணமாகிய பால்போன்ற தூய ஒழுக்கமுடையவரே, பரிவு இல்லா மேல் உலகம் எய்துபவர்-துன்பமற்ற வீட்டுலகத்தினை யடைபவராவர்.

(குறிப்பு) ஒருவன் கல்வியறிவொளியாலும் நெஞ்சத்தருளாலும், தூய ஒழுக்காலும் மேலுலக மெய்துவன் என்பது கருத்து. பயந்த-பய: பகுதி. இஃது ஐந்தடிகளான் வந்த பஃறொடை வெண்பா. (194)

 
      -----------------------------------------------------------------------------------------------------
     
195. வீட்டு நெறியின் இயல்பு  


ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டு நெறியென்பார்--நீர்புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழிவியக்கு மாறு.



(பதவுரை) ஆர்வமும் செற்றமும் நீக்கி-காமவெகுளிகளை நீக்கி, அடங்குதல்- மனமொழி மெய்களால் தீயன புரியா தடங்குதல், சீர்பெறு வீட்டுநெறி என்பர்-சிறப்புடைய வீடுபேற்றினை யடைவிக்கும் நெறி என்று ஆன்றோர் கூறுவர், (அவ்வழி அடங்காது) நீர் புகப் பட்டிமை புக்கான் - புனல் மூழ்கித் துறவி வேடமட்டுங் கொண்டான், அடங்கினன் என்பது-அடங்கினனாகப் பாவித்திருத்தல், கெட்டார் வழி வியக்குமாறு-தீயூழினையுடையார் அதனை வியந்து பின்பற்றுவதை யொக்கும்.

(குறிப்பு) என்பர்: பலர்பால் எதிர்கால வினைமுற்று. கெட்டார் வழி வியக்கும் ஆறு-தவறிய ஒழுக்கமுடையார் அவ்வொழுக்கினை வியப்பது எனலுமாம். (195)
 
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 19, 2011, 07:45:36 PM
   
196. அற்றது பற்றெனின் உற்றது வீடு


அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும்--தெருளா
விழைவின்பத் தால்வளரும் காமமக் காம
விழைவின்மை யால்வளரும் வீடு.



(பதவுரை) அருளல் அறம் வளரும்-துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்செய்வதால் அறமானது வளரும், ஆள்வினையால் ஆக்கம்-முயற்சியால் பெருவாழ்வு உளதாம், நாளும் பொருளால் பொருள் வளரும்-எக்காலத்தும் செல்வத்தால் செல்வம் உண்டாம், தெருளா விழை வின்பத்தால் காமம் வளரும்-மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், காம விழைவின்மையால் வீடு வளரும்-ஆசையைவிட வீடுபேறு உளதாம்.

(குறிப்பு) தெருள்-அறிவு. இதன் எதிர்மொழி மருள். தெருளா விழைவு-புணர்ச்சி, இணை விழைச்சு. விழைவு-விருப்பம். (196)
 -------------------------------------------------------------------------------------------------------
     
     
197. வீட்டுக்குரிய பொருளை வினவலே செவிப்பயனாம்  


பண்ணமை யாழ்குழல் கீதமென் றின்னவை
நண்ணி நயப்ப செவியல்ல--திண்ணிதின்
வெட்டெனச் சொன்னீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி.


(பதவுரை) பண் அமை யாழ் குழல் கீதம் என்றின்னவை நண்ணி நயப்ப செவியல்ல-இசையொடு பொருந்திய யாழ் குழல் இசைப்பாட்டு என்பவற்றை அவை நிகழுமிடங்களை யடைந்து விரும்பிக் கேட்பன செவிகளாகா, திண்ணிதின் - உறுதியொடு, வெட்டெனச் சொல் நீக்கி-பிறர் கூறுங் கடுஞ் சொற்களைக் கேளாது, விண்ணின்பம் வீட்டொடு கட்டுரை கேட்ப செவி - துறக்க இன்பத்தினையும் வீடுபேற்றையும் பயக்கும் உறுதிமொழிகளைக் கேட்பனவே செவிகளாகும்.

(குறிப்பு) இயற்கையிற் செவிக் கின்பஞ்செய்யும் யாழ் குழல் பாட்டு இவற்றால் மகிழ்வுறும் செவி செவியல்ல என்றபடி. (197)
 
   -------------------------------------------------------------------------------------------------   
     
198. அஞ்செவிக் கழகு அறிவுரை கேட்டல்  


புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல--நுண்ணூல்
அறவுரை கேட்டுணர்ந்(து) அஞ்ஞான நீக்கி
மறவுரை விட்ட செவி
.


(பதவுரை) புண்ணாகப் போழ்ந்து-புண்ணாகுமாறு துளைக்கப்பட்டு, புலால் பழிப்பத் தாம் வளர்ந்து-புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்து, வண்ணப்பூண் பெய்வ செவியல்ல-அழகிய அணிகள் அணியப் படுவன செவிகளல்ல, நுண் அறநூல் உரை கேட்டு உணர்ந்து-நுண்ணிய அறநூற்பொருள்களைக் கேட்டாராய்ந்து, அஞ்ஞானம் நீக்கி - அறியாமையைப் போக்கி, மறவுரை விட்ட செவி-பாவத்துக்குக் காரணமான சொற்களைக் கேளா தொழிவன செவிகளாகும்.

(குறிப்பு) நுண்மை நூல்-நுண்ணூல். போழ்தல்-பிளத்தல்; குத்தல். அறம்xமறம்: எதிர்மொழிகள். அம் - அழகு. (198)
 
      ----------------------------------------------------------------------------------------------
     
199. அறநூலைக் கேட்டறிந்தனவே அழகிய செவிகளாம்  


கண்டவர் காமுறூஉங் காமருசீர்க் காதிற்
குண்டலம் பெய்வ செவியல்ல--கொண்டுலகில்
மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச்
சூன்று சுவைப்ப செவி.


(பதவுரை) கண்டவர் கமுறூஉம் காமருசீர் காதில் குண்டலம் பெய்வ செவியல்ல-பார்த்தவர் விரும்பும் சீரிய அழகினையுடைய காதில் குண்டலங்க ளணியப்படுவன செவிகள் ஆகா, உலகில் மூன்றும் உணர்ந்து கொண்டு-உலகின்கண் அறம் பொருள் இன்பங்களை யுணர்த்தும் நூல்களைக் கேட்டறிந்துகொண்டு, அவற்றின் -அவற்றுள், முன்னது-தலைமையான அறநூலை, முட்டு இன்றி-ஒழிவின்றி, சூன்று சுவைப்ப செவி-கேட்டு ஆராய்ந்து இன்புறுதற்குக் காரணமாவன செவிகளாகும்.

(குறிப்பு) சூன்று: சூல் என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். சூலல்-தோண்டுதல்; ஈண்டு ஆராய்தல். ''நுங்கு சூன்றிட்டன்ன'' நாலடி. காமுறூஉம்: இன்னிசை யளபெடை. (199)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
200. கடவுட் காட்சிகளைக் கண்டனவே கண்களாம்  


பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணிபோன் றெங்கும்
இருளறக் காண்பனகண் ணல்ல--மருளறப்
பொய்க்காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்
.


(பதவுரை) பொருள் எனப் போழ்ந்தகன்று-பொருள் என்று சொன்னவளவில் மிகத் திறந்து, பொன் மணி போன்று-அழகிய நீலமணிபோல, எங்கும் இருளறக் காண்பன கண் அல்ல -எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்களாகா, மருள் அற-காம வெகுளி மயக்கங்கள் நீங்குமாறு, பொய்க்காட்சிநீக்கி-பொய்யான காட்சிகளை அறவே ஒழித்து, பொரு அறு முக்குடையான்-ஒப்பற்ற மூன்று குடைகளையுடைய அருகனது, நற்காட்சி காண்பன கண்-நிலைபெற்ற திருவுருவைக் காண்பனவே கண்களாகும்.

(குறிப்பு) பொரு-ஒப்பு. முக்குடை: சந்திராதித்தியம், நித்திய விநோதம், சகலபாசனம். ''முச்சக நிழற்று முழுமதி முக்குடை, அச்சுதன் அடிதொழ தறைகுவன் சொல்லே,'' பவணந்தி. (200)
 
     
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 19, 2011, 07:50:44 PM
   
201.   திருவடிமலர்களைச் சேர்ந்து முகர்வதே மூக்காம்  


சாந்தும் புகையும் துருக்கமுங் குங்குமமும்
மோந்தின் புறுவன மூக்கல்ல--வேந்தின்
அலங்குசிங் காதனத் தண்ணல் அடிக்கீழ்
இலங்கிதழ் மோப்பதா மூக்கு.

 
(பதவுரை)  சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும் மோந்தி்ன்புறுவன மூக்கல்ல-சந்தனம், அகிற்புகை, கத்தூரி, குங்குமப்பூ முதலியவற்றை முகந்து மகிழ்வன மூக்கன்று; ஏந்து இன் அலங்கு சிங்காதனத்து-உயர்ந்து இனிது விளங்குகின்ற சிம்மாதனத்தில் எழுந்தருளியிருக்கும், அண்ணல் அடிக்கீழ் இலங்கு இதழ் மோப்பது மூக்கு ஆம்-அருகனின் திருவடிகளிற் பெய்து விளங்குகின்ற மலர்களை முகந்து இன்புறுவதே மூக்காம்.

(குறிப்பு) அலங்கு-விளங்கு.  இதழ்: சினையாகுபெயர்.    (201)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
202. திருவடிப்புகழைச் செப்புவதே நாவாம்


கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம்
உப்பிரதங் கொள்வன நாவல்ல-தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந் தெப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.

 
(பதவுரை)  கைப்பன காப்பு துவர்ப்பு புளி மதுரம் உப்பு இரதங் கொள்வன நா அல்ல-கைப்பு கார்ப்பு துவர்ப்பு புளிப்பு இனிப்பு உப்பு என்னும் அறுவகைச் சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவன நா அல்ல; தப்பாமல் வென்றவன் சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும் நின்று துதிப்பது நா ஆம்-தவறாமல் காம வெகுளி மயக்கங்களை வென்ற அருகனின் செய்ய திருவடிகளை எக்காலத்தும் மிக்க விருப்பத்தோடு நின்று துதிப்பதுவே நாவாம்.

(குறிப்பு) வேட்டு-வேள் என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகால வினை யெச்சம், செம்மை+அடி=சேவடி.      (202)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
203.  நன்ஞான முயற்சியில் நடப்பனவே கால்களாம்  


கொல்வதூஉங் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையிற்
செல்வதூஉஞ் செய்வன காலல்ல-தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பாற்சென்(று)
அறவுரை கேட்பிப்ப கால்.

 
-(பதவுரை)  கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர் மனையிற் செல்வதூஉம் செய்வன கால் அல்ல-பிற வுயிரைக் கொல்லவும் பிறருடைமையைத் திருடவும் அல்லாமல் அயலான் மனைவியிடத்தே விழைந்து கூடவும் செல்வதற்கு உதவுவன கால்களாகா, தொல்லைப் பிறவி தணிக்கும் பெருந்தவர்பாற் சென்று அறவுரை கேட்பிப்ப கால்-துன்பத்தை விளைவிக்கும் பிறவிப் பிணியைப் போக்கி யருளும் மிக்க தவத்தினையுடைய முனிவர்பா லடைந்து அவர் கூறும் அறவுரையைக் கேட்குமாறு செய்வனவே கால்களாகும்.

(குறிப்பு) மனை-மனைவி: இடவாகு பெயர்.  கேட்பிப்ப: பலவின்பால் பிறவினை வினையாலணையும் பெயர்.  தொல்லைப் பிறவி-பழைமையாக வரும்பிறப்பு எனவும் கொள்ளலாம்.  கொல்வதூஉம், கள்வதூஉம், செல்வதூஉம், இன்னிசை யளபெடைகள்.   (203)

 -------------------------------------------------------------------------------------------------
     
     
204.  திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைத்து  


குற்றம் குறைத்துக் குறைவின்றி மூவுலகின்
அற்றம்* மறைத்தாங்(கு) அருள்பரப்பி-முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்ல அல்ல
சிறந்தான்றாள் சேரா தலை.

 
*பூவுலகில் நற்ற.
(பதவுரை)  குற்றம் குறைத்து-காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்து, மூவுலகின் அற்றம் குறைவின்றி மறைத்து-மூவுலகத்தினும் உள்ளவர்களது அச்சமனைத்தும் துடைத்து, அருள்பரப்பி-அவர்கட் கருள்செய்து, முற்ற உணர்ந்தானை-இயல்பாகவே எல்லா முணர்ந்த இறைவனை, பாடாத நா அல்ல-பாடாதன நா அல்லவாம், சிறந்தான் தாள் சேராதலை அல்ல-அவன் திருவடிகளை வணங்காதன தலைகளாகா.


(குறிப்பு) பாடாதே, சேரா பலவின்பால் வினையாலணையும் பெயர்கள்.  குற்றம்-மறுதலை மொழி நற்றம்.     (204)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
205.  உயிருடன் தொடர்ந்து செல்லும் பிணி அறியாமையே  


உடன்பிறந்த மூவ ரொருவனைச் சேவித்
திடங்கொண்டு சின்னாள் இருப்பர்-இடங்கொண்ட
இல்லத் திருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன்பின் சிறந்து.-

 
(பதவுரை)  உடன் பிறந்த மூவர்-உயிர் பிறக்கும்பொழுது உடன் தோன்றிய காம வெகுளி மயக்கங்கள், ஒருவனைச் சேவித் திடங்கொண்டு சின்னாள் இருப்பர்-தம்மை வழிபடுமாறு அதனை அடிமைகொண்டு சிலகாலம் அதனோடு உடலிடை உறையாநிற்கும், இடங்கொண்ட இல்லத்து இருவர் ஒழிய-பின்னர் இடமாகக் கொண்ட உடலொடு காம வெகுளிகள் நீங்க, ஒருவனே அவன் பின் சிறந்து செல்லும்-மயக்கமானது அவ்வுயிரை விடாது தொடர்ந்து செல்லும்.

(குறிப்பு) உயிர்களுக்கு அவிச்சை அநாதியே உள்ளதென்பதும் உடலோடு கூடி நின்றவழியே காம வெகுளிகள் தோன்றுமென்பதும் இதனாற் கூறினார்.  ஏ: பிரிநிலை.  (205)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 19, 2011, 08:38:55 PM
   
206.  சினத்தை வென்றவர் சிவபதம் பெறுவர்


கட்டெனச் சொல்லியக்கால் கற்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடிக்குங் குரோதத்தை-வெட்டெனக்
காய்த்துவரக் கண்டக்கால் காக்குந் திறலாரே
மோக்க முடிவெய்து வார்.

 
(பதவுரை)  காய்த்து கட்டெனச் சொல்லியக்கால்-தம்மை வெகுண்டு பிறர் வன்சொற்களைச் சொல்லுமிடத்தும், வெட்டென வரக்கண்டால்-கடுகடுத்துத் தம்மைத் தாக்க வருதலைக் காணுமிடத்தும், கல்பிளப்பில் தீயேபோல்-கல்லை உடைக்குங்கால் அதனிடைத் தோன்றுந் தீயேபோல், பொட்டப் பொடிக்கும் குரோதத்தை-விரைந்து தோன்றும் வெகுளியை, காக்கும் திறலாரே-மேலெழாவண்ணம் அடக்கவல்லவர் யாரோ அவரே, மோக்க முடிவு எய்துவர்-முத்தியின்பத்தினை யடைபவராவர்.

(குறிப்பு) மோக்கம்-மோட்சம்: வடமொழி ஏ: முன்னது இசைநிறைப் பொருளது: பின்னது பிரிநிலைப் பொருளது.       (206)
 -------------------------------------------------------------------------------------------------------
     
     
207.  வீட்டுநெறிகட் குரியன  


நல்வினை நாற்கால் விலங்கு நவைசெய்யுங்
கொல்வினை யஞ்சிக் குயக்கலம்-நல்ல
உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்
இறுதியில் இன்ப நெறி.

 
(பதவுரை)  நல் வினை நாற்கால் விலங்கு-நல்வினைகளைச் செய்ய முயல்; நவை செய்யும் கொல்வினை யஞ்சிக் குயக்கலம்-துன்பத்தைத் தரும் தீவினைகளை யஞ்சி அகல்; நல்ல உறுதி நாட்பேர்-சிறந்த ஆன்மலாபத்தைப் புல்(தழுவு); அல்ல மரப்பேர்-ஆன்மலாபமல்லாதவற்றை, முனி (வெறுத்துவிடு); இறுதியில் இன்பநெறி-இவை வீடுபேற்றினுக்குரிய நெறிகளாகும்.

(குறிப்பு) குயக்கலம்-குயவனால் செய்யப்பட்ட மட்பாண்டமாகிய அகற்சிட்டி; அகல்-விலகு; நாட்பேர்-புல்; அனுடநாள்.  மரப்பேர்-முனி; அகத்திமரம்; அன்றிப் பலாசமரமுமாம்.           (207)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
208.  மறுபிறப்பினை ஒழிக்க வழி


பறவை அரும்பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்கண் ஊன் உண் விலங்கு-சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்திண்டு வாரா நெறி.

 
(பதவுரை)  அரும்பொருள் பறவை-இரப்போர்க்கு அரிய பொருள்களை ஈ; இன்சொல் முதிரை-இனிய சொற்களைக் கொள்; உறுதிக்கண் ஊன் உண் விலங்கு-ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் மடங்கல் (நிலை தளராதே); சிறியன நீர்ப்புள்-அற்ப இன்பங்களை உள்ளல் (கருதாதே); புல்லவை குயக்கலம்-அற்பர்களது அவையை அகல் (சேராதே); ஊர்வது பேர்த்து ஈண்டு வாராநெறி-இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.


(குறிப்பு) ஈ-பறக்கும் சிறிய உயிர்களில் ஒன்று; கொடு.  கொள்-காணம் என்னும் தானியம் கொள்வாய்.  மடங்கல்-சிங்கமாகிய ஊன் உண்ணும் விலங்கு (மிருகம்); பின்வாங்காதே.  உள்ளல்-உள்ளான் என்னும் நீர்வாழ் பறவை; நினைக் (208)
 
     --------------------------------------------------------------------------------------------------
     
209.  அழியாப்பேற்றினை யடைவோர் கருதவேண்டியன  


உட்கப் படுமெழுத்(து) ஓரிரண் டாவதே
நட்கப் படுமெழுத்தும் அத்துணையே-ஒட்டி
இழுக்கா வெழுத்தொன் றிமிழ்கடல் தண்சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டு பவர்க்கு.

 
(பதவுரை) இமிழ் கடல் தண் சேர்ப்ப-ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்றுறையை யுடையவனே!, விழுச் சார்வு வேண்டுபவர்க்கு-அழியா நிலையையடைய விரும்புவோரால், உட்கப்படுமெழுத்து ஓரிரண்டாவதே-அஞ்சத் தகுவது இரண்டெழுத்துக்களாலாகிய வினையே, நட்கப்படமெழுத்தும் அத்துணையே-விரும்பத்தகுவதும் அவ்விரண்டெழுத்துக்களாலாகிய வீடே ஆகும், ஒட்டி இழுக்கா எழுத்து ஒன்று-நட்பாகக்கொண்டு அதனின் வழுவாதிருக்கத் தகுவது ஓரெழுத்தாகிய ஆ (சிவஞானம்) ஆகும்.


(குறிப்பு) வேண்டுபவர்க்கு; வேற்றுமை மயக்கம்.  வினை-நல்வினைகளும், தீவினைகளுமாம்.  வீடு-மோட்சம்.  ஆ-சிவஞானம்.     (209)
 
   ----------------------------------------------------------------------------------------------------   
     
210.  துறவியின் தூய்மையும் பெருமையும்  


முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத்
தப்பிய பின்றைதம் பேரொழித்து-அப்பால்
பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்(து)
உறுமவனை எல்லா மொருங்கு.

 
(பதவுரை) முப்பெயர்-மூன்றாகப் பெயர்பெற்ற, மூன்றும்-உலகமூடம், பாசண்டிமூடம், தெய்வமூடம் என்ற மூன்றனையும், உடன் கூட்டி-ஒன்றுசேர்த்து, ஓர் இடத்து-அமைதியான ஒரிடத்திலே அமர்ந்து ஆலோசித்து, தப்பிய பின்றை-அம் மூன்றையு மொழித்து விலக்கிய பிறகு, தம் பேர் ஒழித்து-தம் ஆணவமாகிய பெயரினையும் விலக்கி, அப்பால்-துறவுநிலைக்குப்பின், பெறு பெயரை-பெறக்கடவதாகிய தூயோன் என்ற புகழ்ச் சொல்லையும், காய-வெறுக்க, பெறுபவேல்-மக்கள் பெறுவார்களேயாயின், வையத்து-இவ் வுலகத்திலே, அவனை எல்லாம் ஒருங்கு உறும்-அவ்விதம் பெற்ற அப் பெரியோனை எல்லாப் பொருளும் ஒன்றாக அடையும்.

(குறிப்பு) துறவிகளுக்குத் தம்பெயர் கூறலும் கூடாவாகலின் பேரொழித்தல் கூறப்பட்டது.  பேர் கூறல் "நான்" எனும் நினைவு தலைப்படுதலாமென்பது சான்றோர் கருத்தாதலின், "ஆணவமாகியபெயர்" எனக் கண்ணழிக்கப்பட்ட தென்க.  இங்ஙனம் உயர்ந்த துறவு நிலைபெறுதல் ஆயிரத்தொருவர்க்கே கூடுமாதலின், "பெறுபவேல்," எனப் பலர்பாற் சொற்கொண்டு தொடங்கி "அவனை" என ஆண்பாற் சொல்லான் முடிக்கலாயினர்.  இது சிறப்புக் கருதி வந்த வழுவமைதி யென்க.     (210)  
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 19, 2011, 08:46:10 PM
   
211. உலகோரால் தூற்றப்படுவோன் ஒழிந்துவிடல் நலமாம்


ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும்
தேற்றா னெனப்பட்டு வாழ்தலின்-மாற்றி
மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
நனையில் உடம்பிடுதல் நன்று.


 
(பதவுரை) ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும் தேற்றான் எனப்பட்டு வாழ்தலின்-துன்பங்கள் மிக அறிவில்லாமல் தன்னுயிர்க்காவதோர் உறுதி ஒன்றும் தெரியாதவனெனப் பலரானும் இகழப்பட்டு வாழ்தலினும், மாற்றி மனையின் அகன்று-இல்வாழ்க்கையை விட்டு மனையி னகன்று, மாபெருங் காட்டில் போய்-விலங்குகள் வழங்கும் பெரிய காட்டிடைச் சென்று, நனை இல் உடம்பு இடுதல் நன்று-இனிமை பயவாத அவ்வுடலினை விடுதல் நல்லது.

(குறிப்பு) இன்: ஐந்தனுருபு, எல்லைப்பொருளது.  இடுதல்-போடுதல், இறக்க   (211)
 
   -----------------------------------------------------------------------------------------------------   
     
212. உண்மைச் சுற்றத்தார் இவரென்பது  


நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

 
(பதவுரை) நல்லறம் எந்தை-நல்லறமே என் தந்தை, நிறை எம்மை-அறிவே என்தாய், நன்குணரும் கல்வி என்தோழன்-நன்மையை யுணர்தற்குக் காரணமாய கல்வியே என்னுடைய தோழன், துணிவு எம்பி-மனத்தெளிவே என்னுடைய தம்பி, பொருளாய இச் சுற்றத்தாரில் எனக்கு-உறுதிபயக்கும் இச்சுற்றத்தார்போல எனக்கு, அல்லாத பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ-இவையில்லாத தந்தை தாய் தோழன் உடன் பிறந்தவர்களாகிய பொய்ச்சுற்றத்தார் உறுதி பயப்பரோ? பயவார்.


(குறிப்பு) என்+அம்மை=எம்மை.  எம்+தம்பி=எம்பி.  ஓ: எதிர்மறை வினாப்பொருளது.  இல்: ஐந்தனுருபு; ஒப்புப் பொருள்.  நிறை-மனவடக்க மெனினுமாம்.       (212)
 
     
     -----------------------------------------------------------------------------------------------------

213. பொய்ச்சுற்றத்தார் இவரென்பதும், அவரால் வருந்துயரமும்  


மக்களே பெண்டிர் மருமக்கள் தாய்தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்றிவர்கள்-மிக்க
கடும்பகை யாக உழலும் உயிர்தான்
நெடுந்தடு மாற்றத்துள் நின்று.

 
(பதவுரை) மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை ஒக்க உடன்பிறந்தார் என்ற இவர்கள்-மக்களும் மனைவியரும் மருமக்களும் தாய் தந்தையரும் தன்னுடன் பிறந்தாருமாகிய இவர்கள், மிக்க கடும் பகையாக-இன்பம் பயப்போர் போன்றே மிகக் கொடிய துன்பத்தைச் செய்வதால், உயிர்-உயிரானது, நெடுந் தடுமாற்றத்துள் நின்று உழலும்-மிக்க கலக்கத்துக்குக் காரணமாய உலக வாழ்க்கையிடைப் பட்டு வருந்தும்.


(குறிப்பு) என்ற+இவர்கள்=என்றிவர்கள்; அகரத்தொகுத்தல்.  தான்: அசைநிலை.  ஏ: எண்ணுப்பொருளது.  பகையாக: காரணப்பொருளில் வந்த செயவென் வாய்பாட்டு வினையெச்சம்.          (213)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
214. உடலின் இன்றியமையாமை  


அளற்றகத்துத் தாமரையாய் அம்மலர்ஈன் றாங்கு
அளற்றுடம் பாமெனினும் நன்றாம்-அளற்றுடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுத லான்.

 
(பதவுரை) அளற்றகத்து ஆய்தாமரை அம்மலர் ஈன்றாங்கு-சேற்றினிடத்து வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல, அளற்றுடம்பின் நன் ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை-தூயதல்லாத உடம்போடு கூடி நின்றவழியே நன்ஞானம் நல்லறிவு நல்லொழுக்கம் என்பன, தன்னால் தலைப்படுதலான்-ஒருவனால் அடையக்கூடுமாதலால், உடம்பு அளறு ஆம் எனினும் நன்றாம்-உடம்பு மலமயமானதேயெனினும் அதனோடு கூடிவாழ்தலே நல்லது.

(குறிப்பு) ஆங்கு: உலம உருபு, எனினும்: உம்மை இழிவு சிறப்பு.  அளறு-கு (214)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
215. மயக்கவுணர்வால் வரும் துன்பங்கள்  


தேற்றமில் லாத ஒருவனைப் பின்னின்றாங்(கு)
ஆற்ற நலிவர் இருநால்வர்-ஆற்றவும்
நல்லார்போல் ஐவர் பகைவளர்பார் மூவரால்
செல்லும் அவன்பின் சிறந்து.

 
(பதவுரை) தேற்றம் இல்லாத ஒருவனை-உண்மைப்பொருளின் தன்மை இதுவெனத் தெளியாத ஒருவனை, இரு நால்வர் பின்னின்று ஆற்ற நலிவர்-அப்பிரத்தியாக்கியான குரோதம் முதலிய வெட்டும் பின்பற்றி மிக மெலிவிக்கும், ஐவர் நல்லார் போல ஆற்றவும் பகைவளர்ப்பர்-மெய் முதலிய  பொறிகளைந்தும் இன்பம் பயப்பன போன்று மிக்க துன்பத்தையே வளர்க்கும், மூவரால் அவன்பின் சிறந்து செல்லும்-ஐவளி பித்து என்னும் மூன்றன் மாறுபட்டால் அவன் பின் மரணமடைவான்.

(குறிப்பு) "இரு நால்வர்" என்றது எண்வினையை.  அவை அப்பிரத்தி யாக்கியான குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான லோபம், பிரத்தியாக்கியான குரோதம்-பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்பன.  "பின் சிறந்து செல்லும்" என்பது மங்கல வழக்கு.  இதனால் உண்மை யுணர்வில்வழி வருவதோரிழுக்குக் கூறப்பட்டது.  ஆங்கு: அசைநிலை.          (215)
 
Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 19, 2011, 08:52:26 PM
   
216. அறிவாளிகட்கே உண்மைப்பொருள் உணர்த்தலாகும்


அருவினையும் ஆற்றுள் வருபயனும் ஆக்கும்
இருவினையும் நின்ற* விளைவும்-திரிவின்றிக்
கண்டுணர்ந்தார்க் கல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டுரைப்பான் நிற்றல் குதர்.


*இருவினையுநின்று. 
(பதவுரை) அருவினையும் ஆற்றுள் வருபயனும்-துறவையும் அத் துறவின்கண் எய்தும் பயனையும், ஆக்கும் இருவினையும் நின்ற விளைவும்-உலகோர் செய்யும் நல்வினை தீவினைகளையும் அவற்றால் எய்த நின்ற இன்ப துன்பங்களையும், திரிவு இன்றிக் கண்டு உணர்ந்தார்க்கல்லது-உள்ளவாறே ஆராய்ந்து அறிய விரும்புவோர்க்கன்றி, காட்டதரும் நாட்டதரும்-உலக நெறியையும், வீட்டு நெறியையும், கொண்டுரைப்பான் நிற்றல் குதர்-உட்கொண்டு சொல்லத் தொடங்குதல் வீணேயாகும்.


(குறிப்பு) அதர்-வழி; நெறி.  உலகப்போக்கு, பல பெருந் துன்பங்கள் மலிந்து நிற்றலின், ?காட்டதர்? எனப்பட்டது.  வீட்டு நெறி; காரண காரியங்களாற் கூறி நாட்டிச்  செய்கின்றமையின், ?நாட்டதர்? எனப்பட்டது.    (216)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
217. அறநெறிச்சாரத்தால் அறிவு விளங்கும்  


ஆதியின் தொல்சீர் அறனெறிச் சாரத்தை
ஓதியுங் கேட்டும் உணர்ந்தவர்க்குச்--சோதி
பெருகிய உள்ளத்த ராய்வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது.

   
(பதவுரை) ஆதியின் தொல்சீர் அறநெறிச்சாரத்தை-முதற்கடவுளால் அருகனது பழமையான புகழை விளக்கும் இவ் அறநெறிச்சாரத்தினை, ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்கு-கற்றும் கேட்டும் அறிந்தவர்கட்கு, கருதியவை கூடல் எளிது-கருதிய காரியங்கள் எளிதில் முடியும், சோதி பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து-அவர் ஞானவொளி பெருகிய மனத்தவராய் இருவகை வினைகளினின்றும் நீங்கப் பெருவதால்.

(குறிப்பு) உணர்ந்தவர், உள்ளத்தவராய், தீர்ந்து கூடல் எளிது என முடிக்கலுமாம் (217)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
218. அறநெறிச்சாரம் வீட்டினை யடைவிக்கும்


எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொய்ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து--மெய்ந்நூல்
அறநெறிச் சாரம் அறிந்தான்வீ டெய்தும்
திறநெறிச் சாரந் தெளிந்து.


(பதவுரை) பொய்ந்நூல் எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் அவற்றின் பொருள் தெரிந்து என்செய்யும்-பொய்ந்நூல் களாகிய மற்றை நூல்களைக் கற்றும் கேட்டும் அவற்றின்பொருளையறிதலால் யாது பயன்? மெய்ந்நூல் அறநெறிச்சாரம் அறிந்தான்-உண்மை நூலாகிய இவ் அறநெறிச்சாரத்தினைக் கற்றும் கேட்டும் அறிந்தவன், திறநெறிச்சாரம் தெளிந்து-உறுதி பயக்கும் நெறியின் பயனை அறிந்து அந் நெறியில் நின்று, வீடு எய்தும்-வீடு பேற்றினை அடைவான்.

(குறிப்பு) அறிந்தான்: வினையாலணையும் பெயர். (218)
 
     ------------------------------------------------------------------------------------------------------
     
219. சிவனைச் சிந்திக்க அவமேதும் இல்லை


அவன்கொல் இலன்கொலென் றையப் படாதே
சிவன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை--சிவன்றானும்
நின்றுகால் சீக்கும் நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.


   
(பதவுரை) அவன்கொல் இவன்கொல் என்று ஐயப்படாதே சிவன்கண்ணே சிந்தை செய்ம்மின்கள்-இறைவனாவான் அவனோ இவனோ என்று ஐயமுறாமல் சிவன்பாலே சிந்தையை நிறுத்துங்கள், சிவன்றானும்-அச்சிவனும், நின்று கால் சீக்கும்-எப்பொழுதும் அடைந்தாரது இடரைத் துடைக்கும், நிழல் திகழும்-அருள்மிக்க, பிண்டிக்கீழ்-அசோகின்கீழ் எழுந்தருளியிருக்கும், வென்றி-வெற்றியையுடைய, சீர்-சிறந்த, முக்குடையோன்-மூன்று குடைகளுடை யவனாகிய, வேந்து-அருகனே யாவான்.

(குறிப்பு) நின்று கால் சீக்கும் நிழல் திகழும் எண்பதைப் பிண்டிக்கு அடையாக்கி, எப்பொழுதும் அடைந்தாரது வெம்மையைத் துடைக்கும் குளிர்ச்சி மிக்க என்றுபொருள் கூறினும் பொருந்தும். சிந்தையை நிறுத்துதலாவது இடைவிடாது சிந்தித்தல். கொல்: ஐயப்பொருள்.      (219)  
 
      ---------------------------------------------------------------------------------------------
     
220. இறைவனைப் பாடிப் பெற்ற பரிசில்  


முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
றனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டழித்து வீட்டின்ப நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீமீக வென்றான்*
நிறைவிளக் குப்போ லிருந்து.


*வந்தோற்கு......நீமீ கென்றான்.   
(பதவுரை) முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன்றனை-திருமுனைப் பாடியின்கண் எழுந்தருளியிருப்பவனும் தெய்வத்தன்மைவாய்ந்த மூன்று குடைகளுடைய செல்வனுமாகிய அருகனை, பாடிவந்தேற்கு-பாடியடைந்த எனக்கு, தந்த பரிசில்-அவன் அருளிய பரிசிலாவது, வினைப்பாடு கட்டழித்து-மிக்க வினைத் தொடர்பை அழித்து, வீட்டின்பம் நல்கி-முத்தியின்பத்தை யருளினதேயன்றி, நிறை, விளக்குப்போலிருந்து-நந்தாவிளக்கே போன்று விளங்கி, நினைப்பாடி வந்தோர்க்கும்-உன்னைப் பாடியடைந்தவர்கட்கும், நீம் ஈக என்றான்-அறிவினை நல்குவாயாக என்று கூறியருளியதுமாகும்.


(குறிப்பு) சூர்-தெய்வம். நீம்: நீமம் என்பதன் இடைக்குறை. நீமம்-ஒளி. நினைப்பாடி-நினைத்து எனலுமாம். இச்செய்யுள் ஐந்தடியால் வந்த பஃறொடை வெண்பா.               (220)




   அறநெறிச்சாரம் மூலமும் விருத்தியுரையும் முற்றும்  
 
     
     

Title: Re: அறநெறிச்சாரம்
Post by: Global Angel on September 19, 2011, 08:54:39 PM
                        பிற்சேர்க்கை

    அருள்வட்ட மாக அறிவு கதிராய்ப்
    பொருள்வட்ட மெல்லாம் விளக்கி--இருள்வட்டம்
    மாற்றும் அறிவான ஞான வளரொளியான்
    வேற்றிலிங் கந்தோன்றும் வென்று.                  1   

    மாமாங்க மாடல் மணற்குவித்தல் கல்லிடுதல்
    தாமோங் குயர்வரைமேற் சாவீழ்தல்--காமங்கொண்
    டாடோ டெருமை யறுத்தல் இவையுலக
    மூடம் எனவுணரற் பாற்று.                        2

    சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன்
    புத்தன் கபிலன் கணாதரனென்--றெத்திறத்
    தேகாந்த வாதிக ளெண்கேட்ட ஆதன்போல்
    ஆகாதாம் ஆத்தன் றுணிவு.                       3

    கடம்பன்றான் றன்னொடு காம்படுதோள் வள்ளி
    உடம்பினுங் கூட்ட மதுவுவந்து கேட்பர்
    கொடுத்துண்மின் கொண்டொழுக்கங் காணுமினென்பார்
                                                  சொல்
    அடுப்பேற்றி யாமைதீந் தற்று.                     4

    நன்ஞான நற்காட்சி நல்லொழுக்க மென்றிவை
    தன்னான் முடித்தறா னில்லையேற் பொன்னேபோல்
    ஆவட்டஞ் செய்த வணிகலந் தேயகிற்போ
    லாய்வட்ட நில்லா துடம்பு.                        5

    நாலிறகிற் கண்ணில தேயெனினு நன்பொருளின்
    பேரிறையா னுண்பெயரிற் பிற்சிறக்கு மோரும்
    இருகண் னுளதே யெனினு மதனை
    வெருண்டு விலங்காமற் கா.                       6



குறிப்பு : இந்த ஆறு செய்யுட்களும் பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டன.