தமிழ்ப் பூங்கா > அகராதி

இலக்கியம் பேசுவோம்...

<< < (3/3)

Maran:


    பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

    மெய்போலும்மே; மெய்போலும்மே.

    மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையினால்

    பொய்போலும்மே; பொய்போலும்மே.

    அதனால்

    இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே

    இருவரும் பொருந்த உரையார் ஆயின்

    மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்

    மனம் உற மருகி நின்று அழுத கண்ணீர்

    முறை உறத் தேவர் மூவர் காக்கினும்

    வழிவழி ஈர்வது ஓர் வாளாகும்மே.


நூல்: வெற்றிவேற்கை / நறுந்தொகை

பாடியவர்: அதிவீரராமப் பாண்டியர்

சூழல்: ஒரு பிரச்னையை எப்படி விசாரித்து நியாயம் சொல்வது என்பதற்கான வழிமுறையைச் சொல்லும் பாடல் இது

    ’சுருக்’ விளக்கம்: பேச்சில் மயங்கவேண்டாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது நிஜமும் பொய்யும் புரியாது. அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள். தீர விசாரித்து அறிவதே உண்மை.

    முழு விளக்கம்:

    ஒருவருக்கு நல்ல பேச்சுத்திறமை இருந்தால், அவர் பொய்யைக்கூட நிஜம்போல் சொல்லிவிடுவார்.

    இன்னொருவர், உண்மைதான் சொல்கிறார், ஆனால் பாவம், அவருக்குச் சரியாகப் பேசத் தெரியவில்லை, எனவே அது நமக்குப் பொய்போலத் தோன்றுகிறது.

    ஆக, ஒருவர் சொல்வது உண்மையா பொய்யா என்று வெறும் பேச்சைமட்டும் வைத்து முடிவு செய்வது சரியல்ல.

    உங்கள்முன்னால் ஒரு பிரச்னை வந்து நிற்கும்போது, இருதரப்பினருடைய வாதத்தையும் தலா ஏழு முறை தெளிவாகக் கேளுங்கள். அதன்பிறகு, அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்ப்பைச் சொல்லுங்கள்.

    அப்படிச் செய்யாமல் மேலோட்டமான சொற்களில் மயங்கி, அவசரப்பட்டு ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டால், நியாயம் தவறிவிடும். வழக்கில் தோற்றுப்போனவர் வருந்தி அழுவார். அந்தக் கண்ணீர், தப்பான தீர்ப்புச் சொன்னவரைச் சும்மா விடாது. அவருடைய சந்ததியையே அறுக்கும் வாள் ஆகிவிடும். மூன்று தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தால்கூட அவர்களைக் காப்பாற்றமுடியாது.

Maran:



    பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்

    தாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை

    முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா! நீ

    என்னையே முற்றாய்? விடு.

    விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும்

    கடுவய நாகுபோல் நோக்கித் தொடுவாயில்

    நீங்கிச் சினவுவாய் மற்று.

    நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்று ஆங்கு

    வன்கண்ணல் ஆய்வு அரல் ஓம்பு.

    யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்

    கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,

    நீ அருளி நல்கப் பெறின்.

    நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇக்

    கனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம்

    மாறு எதிர்கூறி, மயக்குப் படுகுவாய்!

    கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்

    வருவையால் – நாண் இலி நீ!

நூல்: கலித்தொகை (முல்லைக்கலி #16)

பாடியவர்: நல்லுருத்திரனார்

சூழல்: கன்றை இழுத்துக்கொண்டு வயல் பக்கம் செல்கிறாள் ஒரு பெண். அவளை வழிமறிக்கிறான் ஒருவன். அங்கே நடக்கும் சுவாரஸ்யமான நாடகம் இது – ஈவ் டீஸிங்காகவும் பார்க்கலாம் – ’கலித்தொகை’ ஓர் ‘அக’ப்பாடல் நூல் என்பதால், சுவையான காதல் விளையாட்டாகவும் பார்க்கலாம், உங்கள் இஷ்டம்

    (முன்குறிப்பு: மேலே பாடலில் தடித்த (bold) எழுத்துகளில் உள்ளவை பெண் சொல்வது, மற்றவை ஆண் சொல்வது)

    அவள்: நான்பாட்டுக்குத் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். திடீரென்று என்னை வழிமறிக்கிறாய். என்னுடைய கன்றின் தாம்புக்கயிறைப் பிடித்து இழுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா? வழியை விடு.

    அவன்: ம்ஹூம், நான் வழி விடமாட்டேன். உன்னுடைய எருமைக்கன்றை யாராவது வழிமறித்தால் அது என்ன செய்யும்? முட்டித் தள்ளிவிட்டு மேலே போகும் அல்லவா? அதுபோல, வேண்டுமென்றால் நீயும் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் போ.

    அவள்: ச்சீ, இதென்ன பேச்சு? ஒழுங்காக வழியை விடு. தன்னுடைய கன்றிடம் யாராவது வம்பு செய்தால் அதன் தாய்ப்பசு பாய்ந்து வந்து முட்டும். அதுபோல, நீ இங்கே தொடர்ந்து கலாட்டா செய்தால் என்னுடைய தாய் வந்துவிடுவார், உனக்கு நல்ல பாடம் சொல்லித்தருவார்.

    அவன்: உன் தாய் என்ன? இந்த நாட்டு அரசனே வந்தாலும் நான் பயப்படமாட்டேன், உன் அன்புமட்டும் இருந்தால் போதும், நான் யாரையும் எதிர்த்து நிற்பேன்.

    அவள்: அடப்பாவி, உனக்கு வெட்கமே கிடையாதா? என்ன புத்தி சொன்னாலும் புரியாதா? நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுகிறாய், எவ்வளவு மழை பெய்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் மாட்டைப்போல முரண்டு பிடிக்கிறாய், உன் தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை இதோடு விட்டுவிடுவாயா? நாளைக்கு நான் பால் கறக்கும் பாத்திரத்தோடு பசுவைத் தேடி வயலுக்குச் செல்வேன், அங்கேயும் வந்து இதேபோல் ’தொந்தரவு’ செய்வாயா?


Maran:
    பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த

    நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

    மாவேறு சோதியும் வானவரும் தாம் அறியாச்

    சேஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!

    *

    நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை ஆர் அறிவார்

    வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

    ஊன் ஆர் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்

    தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ!


நூல்: திருவாசகம் (திருக்கோத்தும்பி #1 & 2)

பாடியவர்: மாணிக்கவாசகர்

சூழல்: வண்டுகளின் அரசனை (கோத்தும்பி) அழைத்து சிவபெருமானின் காலடிக்குச் ‘சென்று ஊதுவாய்’ என அறிவுறுத்தும் பாடல்

    வண்டுகளின் அரசனே,

    (தாமரை) மலரில் அமர்ந்துள்ள பிரம்மன், இந்திரன், திருமால், பிரம்மனின் நாக்கில் தங்கிய அழகிய கலைமகள், நான்கு வேதங்கள், பெருமை மிகுந்த ஒளி வடிவான ருத்திரன், மற்ற தேவர்கள் என யாராலும் அறியமுடியாதவன், காளை வாகனத்தில் ஏறும் சிவபெருமான், அவனுடைய காலடியைச் சென்று நீ வணங்குவாய்!

    *

    தேவர்களின் தலைவன் என்மீது கருணை வைத்தான், என்னை ஆட்கொண்டான், அவன்மட்டும் அப்படி அருள் புரியாவிட்டால் நான் என்னவாகியிருப்பேன்! என் உள்ளம், என் அறிவெல்லாம் என்ன நிலைமைக்குச் சென்றிருக்கும்! என்னை யாருக்குத் தெரிந்திருக்கும்? (நான் இன்று கற்றவை, பெற்றவை எல்லாம் அவனால் கிடைத்தது)

    ஆகவே, மாமிசம் ஒட்டியிருந்த மண்டை ஓட்டில் பிச்சை பெற்று உண்கின்ற அம்பலவாணன், அவனுடைய தேன் நிறைந்த தாமரை போன்ற காலடியைச் சென்று நீ வணங்குவாய்!

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version