தமிழ்ப் பூங்கா > அகராதி

இலக்கியம் பேசுவோம்...

<< < (2/3) > >>

Maran:



    முனிபரவும் இனியானோ – வேத

       முழுப்பலவின் கனிதானோ

    கனியில் வைத்த செந்தேனோ – பெண்கள்

       கருத்துருக்க வந்தானோ

    தினகரன்போல் சிவப்பழகும் – அவன்

       திருமிடற்றில் கறுப்பழகும்

    பனகமணி இருகாதும் – கண்டால்

       பாவையும்தான் உருகாதோ!

    வாகனைக் கண்டு உருகுதையோ – ஒரு

       மயக்கம் அதாய் வருகுதையோ

    மோகம் என்பது இதுதானோ – இதை

       முன்னமே நான் அறிவேனோ

    ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற

       அன்னை சொல்லும் கசந்தேனே

    தாகமின்றிப் பூணேனே – கையில்

       சரிவளையும் காணேனே!


நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: திரிகூடநாதர்மேல் காதல் கொண்ட வசந்தவல்லி பாடுவது

    (பெரும்பாலும் நேரடியாகவே அர்த்தம் புரிந்துவிடும் பாடல்தான் இது. ஆகவே முடிந்தவரை பாட்டில் இருக்கும் சொற்களையே பயன்படுத்தியிருக்கிறேன்)

    இவன் (அகத்திய) முனிவர் வணங்குகிற இனியவனோ, வேதம் என்கிற முழுப் பலாவின் கனியோ, அந்தக் கனிக்குள் இருக்கும் செந்தேனோ, பெண்களின் நெஞ்சை உருக்க வந்தவனோ!

    சூரியனைப்போல் இவனுடைய சிவப்பழகு, கழுத்தில்மட்டும் கருப்பழகு, இரு காதுகளிலும் பாம்பு ஆபரணங்கள்.. இதையெல்லாம் கண்டு இந்தப் பாவை உருகி நிற்கிறாள்!

    அடடா, இந்த அழகனைப் பார்த்து என் மனம் இளகுகிறதே, ஒருமாதிரி மயக்கமாக வருகிறதே, இப்படி ஓர் உணர்வை நான் இதற்குமுன்னால் அறிந்ததில்லையே, மோகம் என்பது இதுதானா?

    இவனைக் கண்டபிறகு, என் உடம்பெல்லாம் பசலை படர்ந்தது, தாய் சொல் கசந்தது, உடம்பெல்லாம் மெலிந்து கை வளையல்கள் கழன்றுவிட்டன, இவன்மேல் கொண்ட காதலைத்தவிர என் உடலில் வேறு ஆபரணங்களே இல்லை!


Maran:



    ஒன்று அறிவு அதுவே ஒற்று அறிவதுவே

    இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே

    மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே

    நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே

    ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே

    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.



நூல்: தொல்காப்பியம் (பொருளதிகாரம், மரபியல் #571)

பாடியவர்: தொல்காப்பியர்

சூழல்: ஓரறிவு உயிர்களில் தொடங்கி ஆறறிவு உயிர்கள்வரை விவரிக்கும் பாடல்

    உயிர்களை இப்படிப் பிரிக்கலாம்:

        ஓர் அறிவு என்பது, வெறும் உடம்பினால்மட்டும் அறிவது (தொடு உணர்வு). (உதாரணம்: புல், மரம் போன்றவை)

        அதோடு நாக்கு / வாய் (சுவை உணர்வு) சேர்ந்துகொண்டால், இரண்டு அறிவு. (உதாரணம்: சங்கு, சிப்பி)

        இவற்றோடு மூக்கு (நுகர்தல் உணர்வு) சேர்ந்துகொண்டால், மூன்று அறிவு. (உதாரணம்: எறும்பு)

        இவற்றோடு கண் (பார்த்தல்) சேர்ந்துகொண்டால், நான்கு அறிவு. (உதாரணம்: நண்டு, தும்பி)

        இவற்றோடு காது (கேட்டல்) சேர்ந்துகொண்டால், ஐந்து அறிவு. (உதாரணம்: விலங்குகள், பறவைகள்)

        இவற்றோடு மனம் (சிந்தனை) சேர்ந்துகொண்டால், அதுதான் ஆறு அறிவு உயிர்! (உதாரணம்: மனிதன்)


Maran:



    என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்

    தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்

    அஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல்

    மஞ்சில் மறையாதே மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!

    *

    சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்

    எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்

    வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற

    கைத்தலம் நோவாமே அம்புலீ! கடிது ஓடி வா!

    *

    சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர் அவிழ்த்து

    ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண்

    தக்கது அறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே

    மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்!

    *

    அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா

    மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்

    குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்

    புழை இல ஆகாதே நின் செவி புகர் மாமதீ!


நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (பெரியாழ்வார் திருமொழி 1-4-2 முதல் 1-4-5 வரை)

பாடியவர்: பெரியாழ்வார்

சூழல்: குழந்தைக் கண்ணனுடன் விளையாட நிலாவை அழைத்துப் பாடும் யசோதை

    நிலாவே, என் சின்னப் பிள்ளை கண்ணன், எனக்கு இனிய அமுதம் போன்றவன், அவன் தன்னுடைய சின்னக் கைகளைக் காட்டி உன்னை அழைக்கிறான், அந்தக் கார்மேக வண்ணனோடு விளையாட உனக்கு ஆசை இல்லையா? ஏன் மேகத்தில் மறைந்துகொள்கிறாய்? மகிழ்ச்சியாக இங்கே ஓடி வா!


    உன்னைச் சுற்றிலும் ஒளிவட்டம், உலகம் எங்கேயும் வெளிச்சத்தைப் பரப்புகிறாய், ஆனாலும்கூட, நீ என் மகன் முகத்துக்கு இணையாகமாட்டாய். வித்தகன், வேங்கடவாணன், அவன் உன்னைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கை வலிக்க ஆரம்பித்துவிடும், அதற்குள் சீக்கிரமாக ஓடி வா!


    கையில் (சுதர்சனச்) சக்கரம் ஏந்திய கண்ணன், அவன் தன்னுடைய அழகான பெரிய கண்களை விரித்து உன்னையே ஆர்வமாகப் பார்க்கிறான், சுட்டிக்காட்டுகிறான், பார்! இப்போது என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியாதா? நீ குழந்தைகளைப் பெறாதவனா? அவற்றோடு விளையாடி மகிழாதவனா? பிடிவாதம் பிடிக்காமல் சீக்கிரம் வா!


    குழந்தைக் கண்ணன் வாயில் ஊறும் அமுத எச்சில் தெறிக்க, தெளிவில்லாத மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கிறான், அதைக் கேட்டும் கேட்காததுபோல் போகிறாயே, உனக்குக் காது இருந்து என்ன பலன்? அந்தக் காதுகளில் துளை இல்லாமல் போகட்டும்!


Maran:



    தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

    துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

    தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த

    தெத்தாதோ தித்தித்த தாது?


நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: முற்றிலும் ‘த’கர எழுத்துகளைமட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா இது – கீழே உள்ள ‘சுருக்’ விளக்கம் மொக்கையாகத் தோன்றுகிறதே என்று நினைக்கவேண்டாம், இதைச் சொல்வதற்காக அவர் எப்பேர்ப்பட்ட வார்த்தை விளையாட்டு ஆடியிருக்கிறார் என்பது கொஞ்சம் கவனமாகப் பிரித்தால்தான் விளங்கும் – முழு விளக்கத்தைப் படிக்கவும்



    ’சுருக்’ விளக்கம்: வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?

    முழு விளக்கம்:

    வண்டே,

    தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்

    தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்

    துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்

    துதைது – அடுத்த பூவுக்குச் சென்று

    அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்

    தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?


Maran:



    பொல்லாத மூர்க்கர்க்கு எத்தனைதான்

               புத்தி போதிக்கினும்

    நல்லார்க்கு உண்டான குணம் வருமோ?

               நடுச் சாமத்திலே

    சல்லாப் புடவை குளிர் தாங்குமோ?

               பெரும் சந்தையினில்

    செல்லாப் பணம் செல்லுமோ? தில்லை

               வாழும் சிதம்பரனே!


நூல்: தனிப்பாடல்

பாடியவர்: படிக்காசுத் தம்பிரான்

    (நேரடியாகப் படித்தாலே பொருள் புரியக்கூடிய பாடல்தான். இருந்தாலும் ஒரு சாத்திரத்துக்கு விளக்கம் எழுதிவைக்கிறேன்


    சிதம்பரத்தில் வாழும் இறைவனே,

    நடுச்சாமப் பொழுது, நடுங்கவைக்கும் குளிர், அந்த நேரத்தில் ஒரு மெலிதான புடவையை எடுத்துப் போர்த்திக்கொண்டால் குளிர் தாங்குமா? ஒரு பெரிய சந்தையில் செல்லாத பணத்தைக் கொடுத்தால் யாராவது வாங்கிக்கொள்வார்களா? அதுபோல, பொல்லாதவர்களுக்கு நாம் என்னதான் அறிவுரை சொன்னாலும், அவர்களுக்கு நல்லவர்களுடைய குணம் வரவே வராது!


Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version