Author Topic: மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்  (Read 3786 times)

Offline kanmani


மூலம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தொன்பதாவது இடத்தை பெறுவது மூல நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மூலம் தனுசு ராசிக்குரியதாகும். இது இடுப்பு, தொடை, நரம்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் யே. யோ, பா, பீ ஆகியவையாகும். தொடர் எழுத்துக்கள் பு, யூ ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     
மூல நட்சத்திராதிபதி கேது பகவானாவார். இது வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். ஒழுக்க சீலர்கள் கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள். கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி அல்ல. வீண் பழிமொழி என்று சொல்லாம். ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து  சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே  மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும் பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும்.

குடும்பம்;
     
சிறு வயதில் கேது திசை வருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பும் குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும் என்றாலும் வளர வளர குடும்பம் செழிக்கும் பெரியோர் தாய் தந்தை போன்றவர்களிடம் மரியாதை பாசமும் அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்டதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாகும். பிள்ளைகளை திட்டமிட்டு வளர்த்து படிக்க வைப்பார்கள். இவர்களுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பாமலிருப்பது அனைவருக்கும் நல்லது. பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள்.

தொழில்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், ஆர்க்கி டெக்சர், கட்டடம் கட்டுதல், ஏரோனாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். பலர் இராணுவம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிப்பார்கள். பீரங்கி, ஏவுகணை போன்ற போர் தளவாடங்களை கையாள்வதில் கை தேர்ந்தவர்கள். நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று மூல நட்சத்திர காரர்களை கூறலாம். கொடி நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் என வந்து விட்டால் மனதில் உற்சாகம் கொள்வார்கள். பணபுரியம் நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் பணிபுரிவார்கள். மூத்த அதிகாரிகளுக்கும், கடைநிலை ஊழியர்களுக்கும் இடையே பாலமாக விளங்குவார்கள். தனது பதவிகளுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவார்கள். நல்ல அதிகாரமிக்க பதவிகளை வகிப்பார்கள். ஒய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுய தொழில் தொடங்குவார்கள். ஏற்றுமதி இறக்குமதி கெமிக்கல் ஷிப்பிங்  கிளியரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்குவாரி, மருத்துவ கம்பெனி போன்றவற்றால் சிறந்த லாபம் கிட்டும்.

நோய்கள்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பைல்ஸ், கல்லீரலீல் பாதிப்பு நுரையிரலில் பாதிப்பு, இடுப்பு வலி, அஜீரண கோளாறு போன்றவை ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.

திசை பலன்கள்;
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதுமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும்.
     
இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.  இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் செல்வம் செல்வாக்கும் பெருகும்.
     
மூன்றாவதாக வரும் சூரிய திசை 6 வருடங்களும் நான்காவதாக வரும் சந்திர திசை 10வருடங்களும் நடைபெறும் என்பதால் இத்திசை காலங்களில் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
     
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை ஐந்தாவது திசையாகும். செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் இது மாரக திசையாகும். செவ்வாய் பலம்பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.  .

ஸ்தல விருட்சம்;
     
மூல நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பாலுள்ள மாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தினை ஜீலை மாதத்தில்  கும்ப லக்னம் உதயமாகி 4 மணி நேரம் கழித்து நள்ளிரவில் விண்ணில் சுடர் விடுவதை காணலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

பொழிச்சலூர்;
     சென்னைக்கு தெற்கில் பல்லாவரத்துக்கு மேற்கில் 3.கி.மீ தொலைவிலுள்ள அகஸ்தீசுவரர்&ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருமாந்துறை;
     திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5.கி.மீ தொலைவில் உள்ள வடக்கரை மாந்துறை எனப்படும் ஆம்ரவன ஈஸ்வரர் அன்னை அழகம்மை ஆலயம்.

மயிலாடுதுறை;
      மயூரநாதர் அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

குலசேகர பட்டினம்;
      திருச்செந்தூருக்கு 14 கி.மீ தொலைவிலுள்ள விஜய காசி கொண்ட பாண்டீஸ்சுவரர்&அறம் வளர்த்த நாயகி அருள் புரியும் திருத் ஸ்தலம்.

அச்சாள் புரம்;
      சீர்காழிக்கு அருகிலுள்ள சிவலோகத்தியாகேசர் அருள் புரியும் ஸ்தலம்.

பாமணி;
      பாதாளேச்சுரம் எனப்படும் இத்தலம் மன்னார் குடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சர்ப தோஷம் நீக்கும் ஆலயமாகும். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
     
மூல நட்சத்திரத்தில திருமணம் செய்தல், கிரக பிரவேசம், வண்டி வாகனம் வாங்குதல், பயணம் மேற்கொள்வது, விதை விதைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது, பரிகார பூஜை செய்வது, மருந்துண்பது தானியம் வாங்குவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
      வாயு புத்ராய தீமஹி
      தன்னோ மாருதி ப்ரசோயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்
      அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.