Author Topic: உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்  (Read 3908 times)

Offline kanmani

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தோறாவது இடத்தை பெறுவது உத்திராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசிக்கும், 2,3,4 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும் சொந்தமானதாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் 1&ம் பாதமானது உடல் உறுப்பில் தொடை, தொடை எலும்பு போன்றவற்றையும் 2,3,4&ம் பாதங்கள் தோள், முட்டிகள் போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் பே, போ,ஐ,ஜி ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஒ, ஓ ஒள ஆகியவையாகும்.

குண அமைப்பு;
     
உத்திர நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள் சமூக நலனுக்காக பாடுபடும் குணம்  உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.

குடும்பம்;
     
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். உற்றார் உறவினர்களாலும் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவர். 22 முதல் 26 வயது வரை ஒரு சில தடுமாற்றமும் குழப்பமும் வாழ்வில் ஏற்பட்டாலும் 40 வயது முதல் பொருளாதார ரீதியாக அதிரடி முன்னேற்றம் உண்டாகும். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகமிருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத்தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.

தொழில்;
      உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்று தேர்ந்திருப்பார்கள். சமுகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியும் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாக கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச்சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். இராணுவத்தில் படை தலை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். எக்ஸி கியூட்டில் ஆபிசர்களாவும், கோயில் மற்றும் தேவ ஆலயங்கள், தர்கா போன்றவற்றிலும் சமூக சேவை செய்வார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதடும் வக்கீல்களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.

நோய்;
     
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கண் நோய், பல் நோய், முதுகு தண்டில் பிரச்சனை, சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படும். தோல் நோய் தொழு நோய், பால்வினை நோய்கள், இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனை, இதய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.

திசை பலன்கள்;

      உத்திராட நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும் இதன் மொத்த காலங்கள் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷமும்,  உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பழமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.
     
மூன்றாவதாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களிலும் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.
     
நான்காவதாக  வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

      ஐந்தாவதாக வரும் குரு திசையும் 6 தாக வரும் சனி திசையும் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.
விருட்சம்;
     
உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தினை ஆகஸ்டு மாதம் இரவு பதினோரு மணியளவில் வானில் காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
     
உத்திராட நட்சத்திரத்தில் நிச்சியதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையை  தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்துப் படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புதுவேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

வழி பாட்டு ஸ்தலங்கள்

கோயம்பேடு;
      சென்னைக்கு மேற்கே 8.கி.மீ தொலைவிலுள்ள குறுங்காலீசுவரர் தர்சம் வர்த்தனி அருள் பாலிக்கும் திருக்கோயில்.

பேளுர்;
      சேலத்துக்கு கிழக்கே 32 கி.மீ தொலைவிலுள்ள தான் தோன்றீசுவரர் அறம் வளர்த்த அம்மையுடன் காட்சி தரும் ஸ்தலம்.

திருப்பூவனூர்;
      மன்னார் குடிக்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் வல்லப நாதர் கற்பக வல்லி ராஜராஜேஸ்வரியுடன் காட்சி தரும் ஸ்தலம்.

காங்கேயநல்லூர்;
      காட்பாடிக்கு தென் கிழக்கே 4.கி.மீ காங்கேசுவரர்& பால குஜாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருப்பூவணம்;
      மதுரைக்கு கிழக்கே 19 கி.மீ தொலைவிலுள்ள பூவண நாதர் சௌந்தர நாயகியோடு அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருஇன்னம்பூர்;
      கும்ப கோணத்துக்கு வடமேற்கே 6 கி.மீ தொலைவிலுள்ள நாதேசுவரர் அன்னை குந்தளாம்பிகை உள்ள ஸ்தலம்.

திருகடிக்குளம்;
      திருத்துறைப் பூண்டிக்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள கற்பக நாதர் அன்னை சௌந்தர நாயகி காட்சி தரும் ஸ்தலம்.

திருக்கோஷ்டியூர்;
      சிவகங்கையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள வைணவ ஸ்தலம்.
 
சொல்ல வேண்டிய மந்திரம்

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
    ஓம் தத்புருஷாய வித்மஹே
      வக்ரதுண்டாய தீமஹி
      தன்னோ தந்தி ப்ரசோதயாத்

என்ற மந்திரத்தை தினமும் கூறலாம்.

பொருந்தாத நட்சத்திரங்கள்
     புனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.