Author Topic: கனவு  (Read 2858 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கனவு
« on: December 09, 2011, 04:36:16 AM »
கனவு

காலையில் கண் விழித்ததிலிருந்தே நீரஜாவிற்கு அந்த கனவின் நினைவு திரும்ப திரும்ப வந்துக் கொண்டே இருந்தது.

நீரஜாவின் கணவன் ஒரு சந்தேகப் பேர்வழி. அவள் அவனிடம் எதைப் பற்றி பேசினாலும் அதற்கு வேறு ஒரு அர்த்தம் கண்டுபிடிப்பான். பேச்சு அதிகமானால் இருவருக்கும் வாக்கு வாதத்தில் தான் முடியும்.

அவன் பெயர் கோபால், திருமணமாகி இரண்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு தகப்பன், சபல புத்திக்காரன் எனபது அவனது பேச்சில் தெரிந்தது. இன்டர்நெட்டில் பழக்கமானவன். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருவதாக சொன்னான். அவன் செல்போனில் பேசுவதை கேட்டால் அடுத்த ஊரிலிருந்து தான் பேசுகிறானோ என்று நினைக்க தோன்றும், பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் ஆனால் எப்படித்தான் ஒரு மணி நேரம் இவனால் தொடர்ந்து பேச முடிகிறதோ என்று தோன்றுவதுடன் போயும் போயும் இவனிடம் செல்போன் எண்ணை கொடுத்து விட்டேனே என்றும் எரிச்சல் ஏற்ப்படும், ஆனால் இப்படியொருவனை சந்த்தித்தத்தில் கூட ஒரு முக்கியம் இருக்கிறது என்பது பின்னால் தான் உணர முடிந்தது.

கோப்பாலின் பரிச்சயம் கிடைத்த சில நாட்க்களிலேயே அவனைப் பற்றிய அபிப்பிராயம் குறைய ஆரம்பித்தது, அப்படியொரு அபிப்பிராயம் தோன்றிய பின்னும் தொடர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருப்பதை நினைத்து நீரஜாவிற்கு சிறிது ஆச்சர்யம் தான், மிகவும் மாறி விட்டோமோ என்றும் வியப்பாகத்தான் இருந்தது, ஆனால் அந்த வியப்பு நீடிக்கவில்லை. நீரஜாவின் கணவன் வாசு ஒரு நாள் கோப்பாலுடன் நீரஜா பேசும் போது பார்த்து விட்டான், தன்னை சந்தேகப் படுவானோ என்ற பயத்தில் கோப்பாலைப் பற்றி வாசுவிடம் சொல்லி விட்டாள்.

நீரஜாவின் அப்பா இறந்து சுமார் பத்து வருடங்கள் முடிந்து விட்டது, அவர் இறந்த முதல் ஆறு மாதங்கள் வரை நீரஜாவின் கனவில் அவளது அப்பா வருவது வழக்கமாக இருந்தது, அதற்க்கு பின்னர் அப்பாவின் முகத்தை கனவில் கூட பார்க்க முடிவதில்லை என்பது நீரஜாவிற்க்கு மிக்வும் வருத்தம். அவள் அப்பாவின் மீது அவளுக்கு ஏகப்பட்ட அன்பு. அம்மாவிடமும் ஏகப்பட்ட அன்புதான் ஆனால் அவள் அம்மா கனவிலும் நினைவிலும் எப்போதுமே அவளுடனேயே இருந்தார்.

நீரஜாவுடன் அவள் அப்பாவும் லண்டனில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்து நின்று கொண்டிருக்கும் போது சிகப்பு நிற பஸ் ஒன்று பயணிகளுடன் நிறுத்தத்தில் வந்து நிற்கிறது நீரஜாவின் அப்பா ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறி விடுகிறார், நீரஜா ஏறாமல் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளது அப்பாவின் உருவம் ஒரு ஒன்பது அல்லது பத்து வயது சிறுவனைப் போல மாறுகிறது, அந்த சிறுவன் பஸ்ஸில் நின்று கொண்டிருப்பவர்களின் கால்களின் வழியே நுழைந்து திரும்பவும் நீரஜாவின் கண்களுக்கு தெரியும் போது அவன் முப்பது வயது மதிக்க தக்க ஒரு கறுப்பர் இன விளையாட்டு வீரனின் உடை அணிந்து தெரிகிறான்.

இந்த கனவைப் பற்றி சொல்லுவதற்கு தனது கணவனைத் தவிர சரியான ஆள் வேறு யாரும் அவளுக்கு இல்லை , ஆனால் இந்த கனவைப் பற்றி சொன்னால் நிச்சயம் அவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவான், சொல்ல முடியாத அளவிற்கு மோசமான கனவு இல்லை தான் என்றாலும் கோப்பாலை மனதில் நினைத்துக் கொண்டு தான் இந்த கனவை நீரஜா கண்டிருக்கிறாள் என்று ஒன்று கிடக்க ஒன்று நினைத்துக் கொள்வான் என்ற மன குழப்பம்.

நீரஜாவின் கணவனுக்கு அவனது பெற்றோரை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது அவனது துரதிஷ்டம், இதனால் தன மனைவியும் அவளுடைய பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பதை பார்க்க பிடிக்காதவன். இந்த தர்ம சங்கடமான நிலையில் இந்த கனவை அவனிடம் சொல்லி எதற்கு வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமலேயே இருந்து விட்டாள்.

ஒரு நாள் கோப்பால் செல் போனில் பேசும் போது ஒலிம்பிக் விளையாட்டுகள் லண்டனில் நடைபெற போகிறதே என்று நீரஜா கேட்ட போது கோப்பாலும் அவனுக்கு தெரிந்திருந்த தகவல்களை சொல்ல ஆரம்பித்தான், அப்போது அவன் சொன்ன தகவல் ஒன்று நீரஜாவை வியப்பில் ஆழ்த்தியது.

கோப்பால் லண்டனில் உள்ள ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக பணி புரிந்து வருகிறான், அவனுடன் வேலை பார்க்கும் ஒரு கறுப்பர் இனத்தவரின் இருபத்து எட்டு வயது மகன் விளையாட்டு வீரனாம், அவனது பத்தாம் வயதிலிருந்தே பல மெடல்களை வாங்கி குவித்தவனாம், இந்த ஒலிம்பிக்கில் விளையாட தன்னை தயார் படுத்தி வந்தானாம்,

ஒரு நாள் ஒரு பயங்கர விபத்தில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள், வீட்டிற்கு பிணத்தை கொண்டு வரும் வழியில் ஒரு பேருந்து மீது மோதி மறுபடியும் விபத்தில் காயம் ஏற்ப்பட்டது அவனுடைய அப்பாவிற்கு, அப்போது அவனுடைய அம்மா ஆஸ்பத்திரிக்கு வந்து அவனுடைய அப்பாவின் நிலைமையை பற்றி விசாரித்த போது அவருக்கு உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் சொன்னதால் மகனை அடக்கம் செய்வதற்காக அவனது உடலை கல்லறைக்கு கொண்டு போக உறவினர்களையும் நண்பர்களையும் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்த சமயம் பிணமாக இருந்த மகனின் உடல் அசைவதை பார்த்து விட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மகன் பேச ஆரம்பித்து விட்டானாம்.

தற்போது அப்பாவும் மகனும் நலமாக இருக்கிறார்கள் என்று சொன்னான் கோப்பால், ஏதோ உள்ளுணர்வில் பொறி தட்டியதைப் போல இது எப்போது நடந்தது என்று ஆவலுடன் விசாரித்தாள் நீரஜா, கோபால் சொன்ன அந்த தேதியும் வருஷமும் நீரஜாவின் சந்தேகத்தை உறுதி படுத்துவது போல இருந்தது, நீரஜாவின் அப்பா இந்தியாவில் இறந்த நாளும் அதே நாள் தான்.

ஒரு சமயம் இரண்டும் ஒரே நாளில் தற்ச்செயலாக சம்பவித்திருக்கலாம், ஆனால் நீரஜா கண்ட கனவு, அதன் அர்த்தமும் கோப்பால் சொன்னதையும் சேர்த்துப் பார்த்தால், தன் கனவில் கண்டது தன் அப்பாவைத்தானே...... ஒரு கறுப்பர் இன விளையாட்டு வீரனாக மாறியது போல தெரிந்தது.....

மறு பிறவியை பற்றி நீரஜா கேள்வி பட்டதுண்டு ஆனால் அதைப் பற்றி சிந்தித்தது இல்லை, தற்ப்போது கோப்பால் சொன்னதும் தனக்கு ஏன் பொறி தட்டியது போல இருந்தது....புரியாத கேள்விகளும் கிடைக்காத பதில்களும் உலகத்தில் நிறைய உள்ளதை உணர்ந்தாள் நீரஜா.