Author Topic: சின்ன மனசுகள்  (Read 3138 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
சின்ன மனசுகள்
« on: January 25, 2012, 07:07:27 PM »
கிணற்றடியில் மீனா மும்முரமாக கண்ணாடி மீன்தொட்டியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். அருகே நின்று “எட்டு... ஒம்பது...” எண்ணி எண்ணிக் குதித்தது ஷோபி. புறங்கையால் கூந்தலை ஒதுக்கிவிட்டு, “விழுந்து வைக்கப் போற ஷோபி,” அதட்டினாள்.

சற்றுத் தள்ளி ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவைக் கவிழ்த்துப் போட்டு கன்னத்தில் கைவைத்து அவளைப் பார்த்து அமர்ந்திருந்தது ஷோபி அக்கா, பொட்டு. அது ஒரு ஸ்டிக்கர் பொட்டுப் பைத்தியம்; செல்லமாகக் கூப்பிட ஆரம்பித்து இப்போ கிட்டத்தட்ட அதுவே பெயராகிவிட்டது.

“அக்கா!” மீனா தொட்டி உள்விளிம்பை ஒரு ப்ரஷ்ஷால் தேய்த்துக் கொண்டிருந்தாள். “அக்காவ்....” இரண்டாவது நீளக்கூவலுக்கு நிமிர்ந்து பார்த்தாள். “அது உன்னோட ப்ரஸ்ஸா?”

“ம்!” என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லி வைத்தாள் மீனா.

“இதால பல் விளக்கினா கசக்காது!”

“இது பழசு.” “அதுக்கு உள்ள வேற இருக்கு.”

“”சுவருக்கு வேற இருக்கா?” சம்பந்தமில்லாமல், மீனு வீட்டில் ஒரு ரூமில் வாடகைக்கு இருந்த ஆசிரியரைப் பற்றிக் கேட்கிறார்கள். 'சார்' சொல்ல வராது அவளுக்கு.

“ம்!” வாயைத் திறந்தால் சிதறும் அழுக்கு நீர் உள்ளேயும் தெறித்துவிடும் என்று பயமாக இருந்தது.

திடீரென்று ஷோபி குதிப்பதை நிறுத்திவிட்டு பொட்டு பின்னால் போய்க் கட்டிப்பிடித்தது. இரண்டும் ஒரு நிமிடம் மல்லுக்கட்ட ப்ளாஸ்டிக் டப்பா தாங்காமல் சரிய இரண்டும் விழுந்து வைத்தது.

பொட்டு முழங்காலில் பொட்டாய் இரத்தம். வலிக்காவிட்டாலும் அது கண்ணைக் கசக்கிற்று. கையைத் துடைத்துக் கொண்டு உள்ளே போய் ப்ளாஸ்டர் எடுத்து வந்து ஒட்டிவிட்டாள்.

மீண்டும் ஷோபி குதிக்க ஆரம்பிக்க, “இதுக்கு மேல யாராச்சும் கையைக் காலை ஒடிச்சீங்க.....” மீனு விரலை ஆட்டிப் பேச இரண்டும் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாய்க் கவனித்தன. “டாக்டர் அங்கிள்ட்ட கூட்டிப் போய் ஊசி போடச் சொல்வேன்.”

இரண்டும் சோகமாக ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்தன.

அமைதியாக மட்டும் இருக்க முடியவில்லை. ஷோபி அப்பாவியாகக் கேட்டது “இந்தத் தொட்டிலதான் நீ ராத்திரி தூங்குவியா?” இப்படித்தான் இரண்டும். அவர்கள் உலகம் ஒன்று இருக்கிறது. அங்கு வேறு மொழி. அவர்களோடு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே புரியும். இப்போ மீன்குட்டியையும் மீனுக்குட்டியையும் ஒன்றாக நினைத்துப் பேசிக் கொண்டிருந்தது ஷோபி.

எப்போவாவது தனியே இப்படி மாட்டிக் கொள்வாள் இந்த அழகுக் குழந்தைகளிடம். மீனு அம்மா வெளியே போய் விட்டாள். ஷோபி, பொட்டு அம்மா ஏதோ அவசரம் என்று கிளம்பியவள் உதவி கேட்க மீனுவும் “பார்த்துக் கொள்கிறேன்,” என்று சம்மதித்தாள்.

சீக்கிரம் வேலையை முடித்தால் நல்லது என்று இருந்தது மீனாவுக்கு. தொட்டி உள்ளே இருந்த பாசிபிடித்த பொம்மைகளை எடுத்துக் கழுவ ஆரம்பித்தாள். “உங்க பெரியம்மா ஆஸ்த்ரேலியால இருந்து வராங்களாமே!”

இரண்டும் உற்சாகமாக ஆரம்பித்தன, “பெரியம்மாவ நான் ஃபோட்டோல பாத்து இருக்கேனே,” இது ஷோபி.

“பெரியம்மா அழகா இருப்பாங்களா?” பேச்சுக் கொடுக்கவென்று கேட்டாள் மீனா.

“அவங்க மூஞ்சி வீ மாதிரி இருக்கும்.”

“அது என்னது வீ?”

“இது கூட தெரியாதா? ஏ பீ சீ டீ வீ!!”

“ஓ! அதுவா?”

அடுத்தது தொடர்ந்தது, “ஓ இல்ல வீ.... எங்கம்மா மூஞ்சிதான் ஓ மாதிரி இருக்கும்,” ‘மக்கு அக்கா’ என்கிற தொனியில்.

அடக்க மாட்டாமல் சிரித்து விட்டாள்.

“இப்போ.. ரெண்டு பேரும் நான் கொடுக்கிறதை எல்லாம் போட்டு உடைக்காம உள்ள கொண்டு வைக்கணும். எங்க, கையை நீட்டுங்க.”

நீட்டாமல் இரண்டும் மதில்மேற் பார்த்து சேர்ந்தாற்போல் ரகசியக் குரலில் “அக்காவ்... கள்ளேன்.” என்று கிசுகிசுத்தன. மீனுவும் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை.

மீண்டும் “அக்கா...” மெதுவே கையைச் சுரண்டிற்று ஷோபி. இப்போ அங்கே இரண்டு கைகள். திக்கென்றது மீனுவுக்கு. இரண்டையும் இழுத்துக் கொண்டு குனிந்து கிணற்றுக் கட்டின் மறைவில் அமர்ந்து கொண்டாள்.

ஷோபி அடங்காமல் இழுத்துக் கொண்டு எட்டிப் பார்த்தது. “ஹை! நீலசர்ட் அண்ணா...” பொட்டுவும் எட்டிப்பார்த்துக் கத்தியது. மீனுவும் எட்டிப்பார்க்க அங்கு தெரிந்த அண்ணா வெள்ளையில் கருப்புக் கோடு ஷர்ட் போட்டிருந்தார்.

இரண்டும் கையை விடுவித்துக்கொண்டு சுவருக்கு ஓடின. “அண்ணா.. சாக்லேட்.” கேட்டது கிடைத்தது. நீலசர்ட் அண்ணா இன்னொரு சாக்லேட் கொடுத்து மீனு அக்காவிடம் கொடுக்கச் சொன்னார்.

வாயில் சாக்லேட்டைக் குதப்பிக் கொண்டு, “அம்மா சாக்லேட் கொடுத்து அனுப்பி இருக்காங்க.......” குடுகுடுவென்று இரண்டும் சந்தோஷமாக மீனுவிடம் ஓடிவந்து கொடுத்தன. பத்திரப்படுத்திக் கொண்டாள். பொட்டு தலையைச் சரித்து சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தது. “பர்ஸ் தானே பனியன் உள்ள வைப்பாங்க!” என்றது.

இரண்டு நாட்கள் கழித்து ஷோபி அம்மா ஒரு சாவு வீடு போகவென்று இரண்டையும் கொண்டுவந்து விட்டிருந்தார்.

மீனு பேசவில்லை; சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். சாப்பிடவும் முடியவில்லை. தலையை வலித்தது. இரண்டும் சோகமாக அவள் அருகே வந்து உட்கார்ந்தன. பொட்டு நெற்றியைத் தொட்டுப் பார்த்தது. “ஜுரம் இல்லியே!” “ஊசி போட்டியா?” ஷோபி கேட்டது. எதற்கும் பதில் சொல்லாமல் கட்டிலில் அமர்ந்திருந்தாள் மீனா.

மீனு அம்மாவுக்கும்தான் சாவு வீடு போக இருந்தது. ஆனால் மீனு உடம்புக்கு முடியாமல் இருக்க தனியாகக் குழந்தைகளை வைத்திருக்க சிரமப்படுவாள் என்று நின்றுவிட்டாள்.

குழந்தைகள் வந்து அரைமணி கழித்தும் வீடு அமைதியாக இருந்தது வித்தியாசமாக இருக்க, அறை உள்ளே எட்டிப் பார்த்தாள். கட்டிலில் மீனுவின் இரண்டு பக்கமும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தன ஷோபியும் பொட்டுவும்.

“என்னடா பண்றீங்க? என்ன ஆச்சு மூன்று பேருக்கும்?” பக்கத்தில் அமர்ந்து ஆதரவாகக் கேட்டாள். மெதுவே ஒவ்வொருவராய்த் தலையைக் கோதி விட மீனு மட்டும் அழ ஆரம்பித்தாள்.

“என்ன ஆச்சு என் செல்லப் பொண்ணுக்கு?” பதில் வராமல் விசும்பல் மட்டும் தொடர்ந்தது.

“ஆன்டி! அக்கா பாவம்,” என்றது பொட்டு சோகமாய்.

“அதானா? மருந்து போட்டு இருக்காங்க. அவங்களுக்கு சீக்கிரம் சரியாகிரும்?” ஆறுதல் சொன்னாள்.

“இல்ல...” ‘சொல்லலாமா? வேண்டாமா?’ என்பது போல் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன இரண்டு குழந்தைகளும்.

“அம்மா எங்க போயிருக்காங்க?” “இங்க பக்கத்துலதான். வந்துருவாங்க சீக்கிரம்.”

“நீலசர்ட் அண்ணா வீட்டயா?”

“ஆமாம்.”

“அந்தண்ணாவா செத்துப் போச்சு?”

இப்போ மீனு கேவல் கொஞ்சம் அதிகமான மாதிரி இருந்தது.

ஏற்கனவே மனது கனத்துப்போயிருந்தது மீனு அம்மாவுக்கு. மரியாதையான பையன்; உதவியான பையன்; எல்லோருக்கும் பிடித்த பிள்ளை; ஏதோ கவனத்தில் சைக்கிள் ஓட்டி முன்னே வந்த லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே முடிந்து போனான்.

குழந்தைகளிடம் என்ன பேசுவது! பேச்சை மாற்ற விரும்பி “உங்களுக்கு சாக்லேட் தரட்டுமா?” என்றாள்.

“வே..ணாம்.” மீண்டும் அமைதியாகின குழந்தைகள்.

“சரி, சொல்ல மாட்டீங்க. இப்பிடியே உம்முன்னு இருங்க. எனக்கு வேலை இருக்கு நான் போறேன்.” கிளம்பவும் மெதுவே துணியைப் பிடித்து இழுத்தது பொட்டு. “இல்ல... அந்தண்ணா... அக்கா ஃப்ரெண்டு.”

திக்கென்றது. “என்னடி சொல்றீங்க?”

“அம்மா ப்ளீஸ்மா. சத்தம் போடாதீங்க.” காலைப் பிடித்தாள் மீனு. “படிச்சு முடிச்சுட்டு சொல்லலாம்னு இருந்தோம்மா. அதுக்குள்ள...” குமுறிக் குமுறி அழுதவளைச் சமாதானம் செய்வது சிரமமாக இருந்தது. சின்னது இரண்டும் “அக்கா... அழாத அக்கா. அழாத அக்கா.” என்று சேர்ந்து அழுதன.

உடைந்து போயிருந்த மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டாள். ஷோபியும் பொட்டும் கவலை தோய்ந்த முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. மெதுவே உட்கார்ந்து பேசினார்கள் தாயும் பெண்ணும்.

இந்த ஒரு கோரம் மட்டும் நடக்காமலிருந்தால் நிச்சயம் எல்லாம் சரியாக நடந்திருக்கும். யாரும் மறுப்புத் தெரிவித்திருக்க மாட்டார்கள். இருவரும் நன்றாகவே இருந்திருப்பார்கள் என்று தோன்றிற்று அவளுக்கு. ஒரே மகள் அழுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை.

“அம்மா.. கடைசியா ஒரே ஒரு தடவை பார்க்கணும் போல இருக்கும்மா.” “நீங்க போறப்ப கூட்டிப் போறீங்களா? பிறகு இந்தப் பேச்சே எடுக்க மாட்டேன். ப்ளீஸ்மா.”

கண்ணைத் துடைத்துக்கொண்டாள். “சரி, போகலாம். இப்போ முதல்ல முகத்தைக் கழுவிட்டு இரு. யாரும் பார்த்தா ஏதும் கேட்டு வைக்கப் போறாங்க.” மெதுவே எழுந்தாள்.

கெஞ்சலாய் தாயை நிமிர்ந்து பார்த்தாள் மீனு. “யாருக்கும் தெரிய வேணாம்மா. எனக்கு.. கஷ்டமா இருக்கு.”

“நான் சொல்லலடா.” ஆதரவாய்த் தலையைத் தடவி விட்டாள்.

“நானும் சொல்லல.” என்றது பொட்டு கம்மிப்போன குரலில்.

“நானும்...” என்று அருகே வந்து அவள் கண் துடைத்து ஆறுதல் சொல்லிற்று ஷோபி.

இரண்டையும் அணைத்துக் கொண்டு சரிந்து உட்கார்ந்து மீண்டும் அழ ஆரம்பித்தாள் மீனு.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்