Author Topic: உன் கண்ணில்.......... -  (Read 2930 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
உன் கண்ணில்.......... -
« on: February 03, 2012, 10:34:46 PM »
வீட்டு வேலைகளை பரபரப்பாக செய்து முடித்தாள் மங்கையர்கரசி. ஒடிந்து விழும் தேகமாக இருந்தாலும், திடமாக காணப்பட்டாள். அதை, அதை வைக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக, சுத்தமாக அடுக்கினாள். 'உடம்பு கெஞ்சியது, அசந்து அப்பாடான்னு படுக்கச் சொன்னது. இருந்தாலும் அரை மணி நேரமாவது டி.வி முன்னால் உட்கார வேண்டும். அப்புறம் வேணுமின்னா படுத்துக்கலாம். எங்க படுக்கிறது? சாப்டதற்கு எல்லாம் வந்திடுவாங்க. மருமக சரியா இருந்தா,அவளை எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லிட்டு நம்ப ஓய்வு எடுக்கலாம். ஆனா அவ என்னமோ ரத்தசோகை பிடிச்சவ மாதிரியில்ல இருக்கா.'

இப்படிபட்ட எண்ண ஓட்டங்களுக்கு இடையேயும், கைவேலையை பிசகாமல் செய்து முடித்தாள் மங்கை. டி.வியைப் போட்டு எதிரில் பரிட்சைக்குப் படிக்கும் மாணவி போல் பயபக்தியுடன் பேப்பர் பேனாவுடன் உட்கார்ந்தாள். இதுதான் அவள் வழக்கமாக பார்க்கும் நிகழ்ச்சி. 'இனிய சந்திப்பு' என்ற நிகழ்ச்சி. இன்று யாரை நாம் சந்திக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அவளுடைய நெஞ்சில் இருக்கும். பேட்டி எடுக்கும் பெண்ணும், இயல்பாக நம் நிலையிலிருந்து, கேள்வி கேட்டு, பதில் வாங்கி இனிமையாக புரிய வைப்பதால் அந்தப் பெண்ணையும் இவளுக்குப் பிடிக்கும்.

மங்கைக்கு பெரிய படிப்பு வாசனை இல்லை. கிராமத்தில் பிறந்து, வளர்ந்து சிறுவயதிலேயே திருமணமாகி டவுனுக்கு வந்தவள். பிறகு கணவனை இழந்த போதிலும் நம்பிக்கை இழக்கவில்லை. நிறைய உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமிக்கவள். டி.வி நாடகத்தொடர் பார்வயாளர்களில் இவள் விதிவிலக்கு. தனக்குப் புரிந்தவரை விலங்கு, பறவை பற்றிய இயற்கை உண்மைகளை பார்த்து மகிழக்கூடியவள்தான் இந்த மங்கை.

இன்றைய டி.வி பேட்டியில் டாக்டர் ராஜசிம்மன் எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு, பரிசோதனை முறைகள் இவைகளை படங்களைக் காட்டி விளக்கினார். வழக்கமாய் வருபவர்கள் மேக் அப் கெட்டப்புடன் இருப்பார்கள். அப்படி இவர் இல்லாததால், மங்கை நினைத்தாள். 'இவரைப் பாத்தாலே எய்ட்ஸ் நோயாளி மாதிரி இருக்கு.' என்று களப்பணிகளில் ஈடுபட்டு, உழைத்து சற்றே உருக்குலைந்து வந்திருந்தாலும், எய்ட்ஸ் கட்டுப்பாடு பற்றி விளக்கமாக, எளிதாக அந்த டாக்டர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சி முடிந்ததும் டி.வியை நிறுத்தி விட்டு யோசித்தாள். மங்கைக்கு அந்த டாக்டர் பேசியது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. 'என்னவோ ரிஸ்க் குரூப் என்று சொன்னாரே. இரத்தம் ஏற்றும் போது இன்ஃபெக்ஷன் என்று சொன்னாரே' என்று என்னென்னவோ நினைத்தபடியே இருந்தாள்.

"..லொக்..லொக்"பக்கத்து ரூமிலிருந்துதான் இருமல் சத்தம். மங்கை எட்டிப்பார்த்தபோது. படுக்கையோடு சட்டமாக படுத்திருந்தாள் தங்கம், மங்கையின் மருமகள்.
"அத்தே..புள்ளங்கெல்லாம் வந்திடுச்சா?"
"இல்ல"என்று சொல்லிக் கொண்டே சுடுதண்ணீர் டம்ளரை தங்கத்தின் கையில் கொடுத்தாள் மங்கை.
கை நடுங்க வாங்கிய தங்கத்தைப் பார்க்கும் போது, எப்படி இருந்த இவள் இப்படி ஆகிவிட்டாள் என்று மங்கையின் மனம் புலம்பியது

'பதினேழு வயதில் பச்சை கிளியாட்டமா தங்கம்ங்கிற பேருக்கேத்தாப்ல, மெருகோட தகதகன்னு மருமகளா இந்த வீட்டுக்கு வந்தா. என் மகனுக்கென்ன அவனும் ராஜா மாதிரி இருப்பான். அப்புறம் புள்ளைங்களுக்கென்ன? கேக்கணுமா? பையன், பொண்ணு, பையன்னு மாறி மாறி பொறந்துச்சு. கடைசியில பையன் பொறக்கும் போது ஆப்ரேஷன் பண்ணி எடுத்தாங்க. குடும்பக்கட்டுப்பாடு ஆப்ரேஷனும் பண்ணியாச்சு. அவனுக்கே இப்ப ஆறு வயசு ஆகுது. ஆனால் இவ மட்டும் தேறவே இல்ல. மாறாக தேஞ்சுக்கிட்டே போறா. அவ கல்யாண போட்டா இதோ மாட்டி வச்சிருக்கோமே, அதைப்பாத்தா, இவதான் அதுன்னு யாரும் நம்புவாங்களா?'
"அத்தே.. அம்மா, அப்பா வடக்கு பக்கம் டூர் போறாங்களே. நீங்களும் போயிட்டு வந்தா என்ன?"

"இங்க பாரு.. யாரு எங்க போனா எனக்கு என்ன? ஒன்னைய எங்கிட்ட மருமகளா ஒப்படைச்சுட்டாங்க. எனக்கு நீதான் பொண்ணு. ஒன்னை கண்ணு கலங்காம நான் பாத்துக்கணும். உன்னாலே முடிஞ்சா, நீ என்னை ராணி மாதிரி வச்சிக்கமாட்டியா? இந்தப் பய, அதான் என் மவன் இருக்கானே, இந்த வேலை வேணாம்னா கேக்கிறானா? என்னவோ போர்வெல் போடுறேன், அது இதுன்னு சொல்லிகிட்டு லாரியில ஊர் ஊராத் திரியிறான். மாசத்தில ரெண்டு நாள் இங்க வர்ரதே பெரிசு. பிள்ளைங்களோடும், பெண்டாட்டியோடும் இல்லாம என்ன பெரிய உத்தியோகம் கெட்டுப் போச்சு. நான் ஒன் மாமனாரோடு வாழ்ந்த காலம் கொஞ்சம்தான். ஆனா நகமும் சதையுமா இருந்தது உண்மை. அதனாலே என் மனசும் ஒரம் போட்ட மாதிரி இருக்கு. சரி.. சரி அதெல்லாம் இருக்கட்டும். என்னதான் ஒன் ஒடம்புக்கு பண்ணுது? இரு. ஒன்னை ஒரு நல்ல டாக்டர்கிட்ட காட்டப் போறேன்.? என்று முடித்தாள் மங்கை.

'எய்ட்ஸ் கட்டுப்பாடு.எச்.ஐ.வி பரிசோதனை டாக்டர் ராஜசிம்மன்' என்று குறித்து வைத்திருந்த தாளை எடுத்துக் கொண்டு மங்கை புறப்பட்டாள். கதவை சாத்திக் கொள்ள வந்த தங்கத்தை நிமிர்ந்து ஒரு முறை பார்த்தாள் மங்கை. 'சாதாரண நூல் சேலையில் கூட ஜொலிக்கும் தங்கமா இது? ஆப்பிள் பழ கன்னமெல்லாம் எங்கு போச்சு? அந்தக் கண்ணு மட்டும் கொஞ்சமா சிரிக்குது. நான் உன்னை காப்பாத்துவேன்' மனதிற்குள் பேசிக்கொண்டாள். "நான் போய் டாக்டரைப் பார்த்திட்டு வர்றேன்" மங்கை கிளம்பி விட்டாள்.
.........

மங்கை நீட்டிய அத்தனை மருந்து சீட்டுகளையும் பார்த்தார் டாக்டர் ராஜசிம்மன். மங்கை கண்கலங்கிச் சொன்னாள், "டாக்டர்.. அவ தோலெல்லாம் கறி மாதிரி ஆகுதுங்க. எதனாலே அப்படி?
"எச்.ஐ.வி பரிசோதனைக்குப் பிறகு பேசலாம்"என்று டாக்டர் விளக்கினார்.
.........
பரிசோதனையில் பாஸிடிவ் மட்டுமில்லாமல், எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு, மருமகள் மரணத்தை தொட்டுக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மை நெருப்பாகச் சுட்டது மங்கையை.
"குணப்படுத்திடுங்க டாக்டர் எப்படியாவது." கண்ணில் நீர் வற்றும்வரை கண்ணீரில் கரைந்த மங்கைக்கு, ஆறுதல் சொல்ல முடியாதபடி தவித்தார் டாக்டர்.
"இங்க பாரும்மா ஒரு மாமியார் இப்படி தவிச்சுப் போறத என் சர்வீஸ்ல இப்பதான் பார்க்கிறேன். இதுக்காகவே இறைவன் இரக்கம் வைக்கட்டும். ஆனா இந்த நோயை வராம காப்பாற்றி காத்துக் கொள்ளலாம். வந்துட்டா சரியான மருந்தோ சிகிச்சையோ இப்ப இல்லை. இங்க பாருங்க.. இந்த அச்சடிச்ச பேப்பரெல்லாம் அதுக்குதான். படிச்சுப் பாருங்க" என்று நீட்டினார் டாக்டர்.
"இதெல்லாம் டி.வியில பார்த்து குறிச்சு வச்சிருக்கேன். அதில ஏதோ ரிஸ்க் குரூப்புன்னு கூட சொன்னீங்க."
"ஆமாம் இராப்பகலா ஊரு ஊரா போறவங்க மாசக்கணக்கா பொண்டாட்டிய பார்க்காதவன் இப்படி எத்தனையோ காரணம். பணம் பண்ணும் போது வழியில வடை சாப்பிட்டு, டீ குடிச்சு பசி தீர்த்துக்கற மாதிரி.. பல தகாத உறவுகள் நடந்துகிட்டேதான் இருக்கு. இது தடுக்கப்படணும். கணவன்மார்களால் எத்தனை மனைவிகளுக்குப் பரவுது. இன்னைக்கு நம்ப இந்தியா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்குது தெரியுமா?"

"டாக்டர் ஐயா..அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி சிஸேரியன் பண்ணினாங்க தங்கத்துக்கு. குடும்பக்கட்டுப்பாடும் செய்தாங்க. அப்புறம் இரத்தப்போக்கு ரொம்ப இருந்துச்சி. கர்ப்பப்பை எடுத்தாங்க. இரத்தம் ஏத்தினாங்க. ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சிகிட்டே இருக்கோம். தங்கம் நோயாளியாகி நாளுக்கு நாள் தேஞ்சுகிட்டே இருக்கா."
"நாங்க மருந்து கொடுக்கிறோம். நீங்க வீட்ல வச்சு அன்பா பார்த்துக் கொள்ளுங்க. இருந்தாலும் இன்னும் முன்னாடியே கவனிச்சிருக்கலாம்." என்று சொன்ன டாக்டரிடம் விடைப் பெற்று கிளம்பினாள்.

ஏழெட்டு வயசுப்பிள்ளையின் உடம்பைப் போலாகி, மிகவும் நலிந்து காணப்பட்டாள் தங்கம். அவளுடைய புருஷன் வந்திருந்தான்.
ஈஸிச்சேரில் சாய்ந்திருந்தாள். யாரோடும் பேசுவதில்லை. முடியவில்லை போலும். பிள்ளைகள் அவளை நெருங்கப் பயந்தனர். எழுந்திருந்து பாத்ரூம் போகும் வழியிலேயே அவளுடைய கழிவுகள் வெளிப்பட்டன. அதிலேயே விழப் போனாள். தங்கத்தின் கணவன்தாங்கிப் பிடித்தான். மங்கையோ முகம் சுளிக்காமல் கழிவுகளை நீக்கி தரையை சுத்தப்படுத்தினாள்.

தங்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஓ!அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. வெறுமனே ஒரு துணி போர்த்தப் பட்டிருந்தாள். தங்கத்தின் அருகில் அவளது பெற்றோர், காலருகில் கணவன் இருந்தனர். பிள்ளைகள் கலக்கத்துடன் பயப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் தங்கத்தின் கண்கள் மட்டும் ஒளி குறையாமல் மங்கை என்கிற தன் மகத்தான மாமியாரைப் பார்த்து நிலைத்திருந்தது.

மங்கைக்கு தன் மருமகளின் பார்வையில் இருந்த ஏக்கம், நன்றி புரிந்தது. அதனால் ஏற்பட்ட தாக்கம் அதிகம் இருந்தது. 'உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி. இந்த மாதிரி உயிர்க்கொல்லி நோய் ஒழிய நான் ஏதாச்சும் பண்ணனும்' மங்கை தன் மனதிற்குள் முடிவு செய்தாள். தன் பெற்றோருக்கு விருப்பம் இல்லாத நிலையிலும், தங்கம் மருமகளாக வந்தாள். அன்பாகவே இருந்தாள். ஆம் இப்போது உடல் நிலையில் அணு அணுவாய் செத்தவளுக்கு சாவு சம்பவித்தது.
'எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையும், இதற்கு எதிரான சமூக மனப்பான்மையும் மாற வேண்டும்.'


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்