Author Topic: ~ இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) ~  (Read 1574 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218404
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)




"இன்னைக்கு பொண்ணுப் பாக்குறப்ப இவன பொண்ணுட்ட பேசவே விடக்கூடாது, எதையோ பேசுறான் அப்பறம் எனக்கு பிடிக்கலங்குறான்" என்று சரவணின் தாய் அவனது அண்ணியிடம் சொல்லியது பக்கத்து அறையில் இருந்த அவனுக்குக் கேட்டுவிட்டது.

இதுவரை மூன்று பெண்கள் பார்த்தாகிவிட்டது, எதுவும் அமையவில்லை. சரவணன் 6.2 அடி உயரம். முதல் பெண்ணை போட்டோவில் பார்த்து சரி என்று சொல்லிவிட்டு நேரில் போய்ப் பார்த்தான். ஐந்து அடிக்கே ஒரு அங்குலம் தேவைப்படும் அளவிற்கு உயரம். அப்பா அம்மாவிற்கு குடும்பம், பெண் பிடித்திருந்தாலும், வேண்டாம் என்று அடம்பிடித்தான்.

இரண்டாவது பார்த்த பெண்ணிற்கு ஏதோ ஒரு காரணத்தினால் சரவணனைப் பிடிக்கவில்லை. மூன்றாவது பெண்ணிடம் சிறிது நேரம் பேசியவுடனே, அவளுக்கு இருந்த ஆடம்பர வாழ்க்கை எண்ணம் தனது நடுத்தர குடும்பத்திற்கு ஒத்துவராது என்று சரவணன் முடிவு செய்துவிட்டான்.

இன்று பார்க்கப் போவது நாலாவது பெண்.

சரவணின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தை மற்றும் தாத்தாவோடு வாடகைக்கு வரவழைக்கப் பட்ட இன்னோவா காரில் கிளம்பினான் சரவணன். அரைமணி நேரத்திற்கு பிறகு கார் அம்மன் கோவிலைக் கடந்து அடுத்த சந்தில் இடதுபுறமுள்ள பெண் வீட்டின் முன் நின்றது.

பெண்ணின் தந்தையும் தாயும் வாசலில் நின்று மகிழ்ச்சியாக வரவேற்றார்கள்.

காரிலிருந்து கடைசியாக இறங்கிய சரவணன், அண்ணி சுமதியின் கையைத் தட்டினான். சுமதி திரும்பினாள்.

"அண்ணி என்ன மட்டும் பொண்ணுட்ட பேசவிடல, கண்டிப்பா நான் கல்யாணாத்துக்கு ஒத்துக்க மாட்டேன். பொண்ணுப் பாக்கவும் வரமாட்டேன்" என்றான் சரவணன்.. அமைதியான குரலில் கம்பீரமாக..

"நான் இருக்கேன்ல சரவணா... வா பாத்துக்கலாம்" என்றாள் சுமதி. புருவங்களைச் சுருக்கி..

"அண்ணி உங்கள நம்பித்தான் உள்ள வாரேன், நீங்க தான் எப்டியாச்சும் பொண்ணோட பேச ஏற்பாடு பண்ணனும்" என்றான் சரவணன். இந்தமுறை அப்பாவியாக...

வீட்டிற்குள் நுழைந்தவுடன், இரண்டு சிறிய தனி சோபாவில் எதிரெதிராக சரவணனையும் தாத்தாவையும் அமர வைத்துவிட்டு, பெரிய சோபாவில் அவனது அண்ணன், அம்மா, அப்பா அமர்ந்தனர். எதிர் மூலையில் அண்ணனுடன் அமரப்போகும் அண்ணியை, தான் இருக்கும் சோபாவின் முனையில் அம்மாவோடு அமரும்படி கண்களால் சைகை கட்டினான் சரவணன். அதைப் புரிந்துகொண்ட சுமதி தலையை அசைத்தபடி வந்து அமர்ந்துகொண்டாள்.

சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெண்ணை வரச்சொன்னார்கள். அறைக்குள் இருந்த கலைவாணி காபி தட்டை ஏந்திக்கொண்டு சற்று தலையைக் குனிந்துகொண்டே வந்தாள். சிவந்த நிறம், அளவான கூந்தல், அல்லிவாறிப் பூசப்படாதா மேக்கப், சாயம் தீட்டப்படாத இயல்பான இதழ்கள். போதுமான வளையல், கலை நயமிக்க சேலை என்று அவளது தோற்றம் உருவகப் படுத்தப்படாமால் உள்ளது உள்ளபடி இருந்தது.

பிஞ்சுக் குரலில் "ஐ சித்தி நல்லாருக்கு" என்றாள் சுமதியின் ஐந்து வயது மகள். கூடி இருந்தோர் அனைவரும் சிரித்தனர். "ஏய் சும்மா இரு" என்று அதட்டினாள் சுமதி.

மற்றவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு கடைசியாக சரவணனிடம் காபியைக் நீட்டினாள் கலைவாணி. சரவணன் அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தான். ஏதோ ஒன்று அவளிடம் சிறப்பாக இருப்பதாக அவன் உணர்ந்தான். அது ஒட்டுமொத்தமாக சரவணனை அவளது பக்கம் இழுத்தது. அவளால் சரவணனின் பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடனே தனது அறைக்குத் திரும்பினாள்.

ஒரு புறம் பலகாரமும் மற்றொரு புறம் குடும்ப வரலாறும் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் ஆயிருக்கும். சரவணன் மூன்றாவது முறையாக அண்ணியின் காதோரம் சொன்னான்.

"அண்ணி பொண்ணுட்ட பையன் பேசணும்னு சொல்லுங்க அண்ணி..."

ஆனால் பெரியவர்களுக்கு முன் இவ்வாறு சொல்ல அவளாலும் இயலவில்லை. சரவணன் வெறுப்படைந்தான். ஜன்னலின் வழியாக அவனை ஒரு முறைப் பார்த்தாள் கலைவாணி.

"சரி நல்லது.. போயிட்டு வாரமுங்க" என்று பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் எழுந்து விடை பெற்றனர். சரவணன் கோபமாக எழுந்தான்.

"கொஞ்சம் நில்லுங்க.. நான் பொண்ணுட்ட பேசணும்" என்றான் சரவணன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படிச் சொல்லுவோம் என்று சரவணனும் எதிர்பார்க்கவில்லை. பெரியவர்களுக்கு இந்தச் சூழலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. தவறாக நினைக்க மாட்டார்களா என்று சரவணனும் சற்றும் யோசிக்கவில்லை.

சில நொடி மௌனத்தை உடைத்த பெண்ணின் மாமா, தாராளமா பேசுங்க தம்பி என்றார் சிரித்துக்கொண்டே.

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நண்பர்களிடம் கலகலப்பாக பேசும் சரவணின் கோபம் சற்று தணிந்தது. சிறிய புன்னகையோடு விறுவிறுப்பாக கலைவாணி இருந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினான். அவள் சற்று பயத்தை உணர்ந்தாள்.

உள்ளே நுழைந்து ஒரு நிமிடம் அமைதி காத்தான் சரவணன்.

"எனக்கு என்ன தோணுதோ அதப் பேசுவேன்.. தப்பா நெனச்சுக்காதிங்க" என்று சொல்லிய சரவணன்

"உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா ?" என்றான்.

"ஹ்ம்ம்" என்றாள்..

"உண்மைய சொல்லுங்க. எதோ நான் கேக்குறேங்கரதுக்காக சொல்லவேண்டாம்" என்று சொல்லி சிறிய புன்னகையை தவழவிட்டான்.

"பிடிச்சிருக்கு" என்றாள்..

உண்மையில், இரண்டு நிமிடம் அவன் எதார்த்தமாகப் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது.

பர்ஸில் இருந்து ஒரு பிஸினெஸ் கார்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
"இந்தாங்க இத வச்சுக்கோங்க"

அதில் "சரவணன், சீனியர் எஞ்சினியர்" என்று கம்பனி பெயர், மொபைல் எண்ணுடன் அச்சிடப் பட்டிருந்தது.

கார்டைக் கொடுத்தவுடன், அறையை விட்டு வெளியே நகர்ந்தான். மாப்பிள்ளை வீட்டார் வீட்டை விட்டு நகர்ந்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து சற்று அச்சத்துடன் அப்பாவிடம் பெண் வீட்டார் என்ன சொன்னார்கள் என்று கேட்டான்.

"ஜாதகம் சரி இல்லைன்னு சொல்றாங்கடா, அவங்க பேசறதப்பாத்த அவங்களுக்கு பொண்ண கொடுக்க விருப்பமில்ல போல தெரியுது" மேலோட்டமாகப் பேசினார்.

"அதுக்கு..." என்றான் சரவணன்.

"ஊர்ல என்ன பொண்ணா இல்ல.. இன்னைக்கு ரெண்டு பொண்ணு தரகர் பாத்து சொன்னார். நல்ல குடும்பம், நீ பெங்களூர் போயிட்டு பத்துநாள் கழிச்சு வா, ஒரு பொண்ணு சென்னையில இருந்து வருதாம், பாத்துட்டு போவ" என்றார்...

சரவணனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் பெண் தான் வேண்டும் என்று அம்மா, அண்ணியிடம் சொல்லிவிட்டு பெங்களூர் சென்று விட்டான்.

"அவங்களுக்கு பிடிக்கலேனா நாம எப்படிப்பா வற்புறுத்த முடியும்" என்று அவனது அம்மா தொலைபேசியில் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சித்தாள். இரண்டு மாதங்களாக மற்ற பெண்ணைப் பார்க்க அவனது அப்பா அழைத்தும், வேலைப் பளு, வரமுடியாது என்று தட்டிக் கழித்தான்.

தன்னோடு விடுதியில் தங்கி இருந்த கார்த்திக் மற்றும் ஆண்டனியிடம் நடந்ததைச் சொல்ல, அறையே அதிரும் அளவிற்கு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சரவணன் புண் முறுவலோடு "டே போதும் நிறுத்துங்கடா" என்றான்.

அவனது கலையான கருப்பு முகமும் வெண் பற்களும், அந்த ஜன்னலில் இருந்த கண்ணாடி வழியாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

"மச்சி... மச்சி... தாங்கலடா.. உன் தைரியத்த பரட்டுறதா இல்ல உன் காதலைப் பாரட்டுறதா.. என்ன ஒரு காதல்... என்ன ஒரு காதல்... இதுநாளதான் ரெண்டு மாசமா மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கியா ?" என்று கார்த்திக் சொல்ல, மீண்டும் ஆண்டனியும் கார்த்திக்கும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.

"டே கடுபேத்தாதிங்கடா, சொல்லவே கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனா உளறி கொட்டிட்டேன்" என்று சொல்லிகொண்டே சிரித்த சரவணின் செல்போன் மணி அடித்தது.

"மச்சி.. உன் காதலி கலைவாணியாத்தான் இருக்கும் மச்சி... ஹ்ம்ம் போயிப் பேசு டா... பேசு.." என்று கேலி பேசினான் கார்த்திக்.. சிரிப்பொலி இன்னும் அறையை அதிரவைத்துக் கொண்டிருந்தது...

அறையிலிருந்து வெளியே வந்து மொபைலில் பச்சை பட்டனை அழுத்தி "ஹலோ" என்றான் சரவணன்.

எதிர் முனையில் அமைதியே பதிலானது.

மீண்டும் "ஹலோ... யார் பேசுறது" என்றான்.

சில நொடிகளுக்குப் பிறகு,

"ஹலோ நான் கலைவாணி பேசுறேன்" என்று மெல்லிய அந்த பெண் குரல் கேட்டது.

"இப்படியும் காதல் வரும்..." தொடரும்...
« Last Edit: June 07, 2013, 01:53:06 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218404
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )




"கலைவாணியா ?" நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தோடு கேட்டான் சரவணன்.

அவள் சொன்ன "ஹ்ம்ம்ம்" இனிமையாக வெளிப்பட்டது.

"என் நம்பர் உங்களுக்கு எப்டித் தெரியும் ?"

"ஹ்ம்ம்... நீங்கதான விசிடிங் கார்டு கொடுத்துட்டு வீராப்பா பேசிட்டு போனிங்க, மறந்துருச்சா ?" என்றாள் மென்மையாக.

என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் பேசுகிறோம் என்பது அவனுக்கு அப்போது விளங்கியது.

"ஓ... சரி சரி" என்றான்.

"என்னென்னவோ சொல்லிட்டு வந்திங்க ஆனா எல்லாத்தையும் மறந்திடிங்க போல, என்னையும்...." என்று ஏமாற்றமான குரலில் சற்று இழுத்தாள் கலைவாணி.

அவனுக்கு வேறொரு பெண் பார்த்து விட்டார்கள் என்பதுபோல உணர்ந்தாள். கலைவாணியின் வலது விழியில் ஒரு துளி நீர் முட்டியது. இதயத்துடிப்பும் சற்று எகிறியது.

"ச்சே ச்சே அப்டியெல்லாம் இல்லங்க" என்று நிகழ் காலத்திற்கு திரும்பி நிதானமாகப் பேச ஆரம்பித்தான் சரவணன்.

அவள் மௌனித்தாள்...

"இல்ல அப்படித் தெரியல" என்றாள்.

"நீங்க என்ட பேசுன அந்த நிமிசத்துக்கு பிறகு எந்த மாப்பிள்ளையும் பாக்க நான் ஒத்துக்கல தெரியுமா" என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு, தான் ஏமாந்துவிட்டதாய் எண்ணி வாய்விட்டுஅழத்தொடங்கினாள்.

சரவணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள்மீது கொண்ட அன்பை விளக்க அவனிடம் வார்த்தைகள் சிக்கவில்லை.

"ஐயோ அழுகாதிங்க.. எனக்கு நீங்கதாங்க தான், உங்களுக்காகதான் நானும் காத்துகிட்டு இருக்கேன்" என்று சொல்லிவிட்டு, செல்போனில் சட்டென்று ஒரு முத்தத்தைப் பதித்தான்.

பிறகு "ஸாரி எனக்கு என்ன சொல்றது எப்படி புரிய வைக்கரதுனே தெரியல.. அதான் ஏதேதோ பண்றேன். நான் பண்ணது தப்புதான் ஸாரி ஸாரி..." என்றுசொல்லிவிட்டு மடையா என்று சொல்லி தனக்குத்தானே தலையில் கொட்டிக்கொண்டான்.


சரவணனின் இந்தச் செயல், அவளின் முகத்தில் சிறிய புன்னகை மொட்டை அவிழ்த்து விட்டது. முத்தத்தை சிந்திய சரவணன் இறுக்கமான மனநிலையில் இருப்பதை உணர்ந்த கலைவாணி,

"பரவாயில்ல" என்று மெதுவாகச் சொன்னாள். அவள் புன்னகைப்பது அவனுக்குத் தெரியாமல்.
சரவணன் கொஞ்சம் நிம்மதியானான்.

"சரி... நான் பாக்க ரொம்ப கருப்பா இருக்கேன், ஆனா நீங்க பளபளனு செவப்ப இருக்கீங்க, அதுனால ஒரு சந்தேகம்.. என்ன எதுனால உங்களுக்கு பிடிச்சது ?" என்று சிரித்துக் கொண்டே தயக்கத்துடன் வினாவைத் தொடுத்தான் சரவணன்.

"சொல்லியே ஆகணுமா ?"

"அப்பிடி இல்ல.. விருப்பப்பட்டா சொல்லுங்க"

"ஹ்ம்ம்... இப்ப பேசுனிங்களே அதுக்காக.. அந்த எதார்ததுக்காக..." என்றாள்.

சரவணன் சிரித்தான்.

"என்னங்க எதார்த்தமா பேசறதுக்கெல்லாம் பொண்ணுங்களுக்கு பிடிக்குமா என்ன ?" கேள்வியைத் தொடர்ந்தான்.

"ஹ்ம்ம் எதார்த்ததோடு நீங்க சொன்ன அந்த கருப்பும் பிடிக்கும்" என்றாள் கச்சிதமான குரலில்.

மீண்டும் சிரித்தான்.

அவர்களின் காதல் பரிமாற்றம் காற்றுவழித் தொடர்ந்தது. தன்னை வாங்க போங்க என்று சொல்ல வேண்டாம் என்று சரவணனிடம் கேட்டுக்கொண்டாள் கலைவாணி.

அறையை விட்டு வெளியில் வந்த கார்த்திக் "என்ன மச்சி, காதலி கலைவாணியா ? என்ன சொல்றாக ?" என்று நக்கலாகக் பேச்சில் குறுகிட்டான்.

"உன் வாயில சக்கர அள்ளி போட்டுக்க மச்சி" என்றான் சரவணன்.. சந்தோசமாக.

"சரி சரி நான் அப்பறம் பேசுறேன்.. இது அப்பா போன்..என்ட போன் இல்ல" என்றாள் கலைவாணி.

"போன் இல்லையா... ஏன் ?" ஆச்சர்யமாக கேட்டான் சரவணன்.

"பெரியப்பா பொண்ணுக்கு எவனோ போன் பண்ணி தொல்ல பண்ணினதால, எனக்கும் போன் வேணாம்னு அப்பா சொல்லிட்டாரு" என்று சொல்லிவிட்டு போனைத் துண்டிக்க முனைந்தாள் கலைவாணி.

"இருங்க வைக்கதிங்க... பிறகு உங்கள்ட நான் எப்டி பேசறது ? ஸாரி... உன்ட எப்டி பேசறது ?" கேட்டான் சரவணன்.

"வெளில இருந்தாவது எப்பிடியும் நான் உங்களுக்கு போன் பண்ணுவேன்.. ஆனா தயவு செஞ்சு நீங்க பண்ணாதிங்க. பாய்..." சொல்லிவிட்டு போனைத் துன்டித்தாள் கலைவாணி.

மனதின் ஒருபுறம் அலாதி ஆனந்தம், மறுபுறம் மறுபடி எப்போது அழைப்பாள் என்ற கேள்வியும் ஏக்கமும் அவனுள் துளிர்விட்டது. இசை மீது பெரிதாக ஈடுபாடே இல்லாதவன், இளையராஜா பாடல்களை அன்று இரவு முழுதும் கேட்டான்.

இரண்டு பகல் பொழுது கழிந்தது. அன்று இரவு 11 மணிக்கு கலைவாணி அழுத்திய எண்கள், ஒரு அழைப்பையும் தவற விடக்கூடாது என்று தனது தலையணை மேல் வைத்திருந்த சரவணனின் செல்போனை சிணுங்க வைத்தது. உற்சாகமாக போனை எடுத்து "ஹலோ" என்றான்.

"கலை, செல்போன பத்தியம்மா ? 7 மணிக்கு மாமா போன் பண்ணாரு, வண்டி ஓட்டிட்டு வந்ததால அப்பறம் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்" என்றார் கலைவாணியின் தந்தை ஹாலில் இருந்து.

"நான் அப்பறம் கூப்புடுறேன் நீங்க திரும்ப கூப்புடாதிங்க" அவரசமாக அழைப்பைத்  துண்டித்தாள் கலைவாணி.

"என்ட தான்பா இருக்கு, பாட்டு கேட்டுட்டு இருந்தேன்.." என்று சொல்லிக்கொண்டே, சரவணின் எண்ணை டையல்டு காலில் இருந்து நீக்கிவிட்டு தந்தையிடம் போனைக் கொடுத்தாள் கலைவாணி.

அதே நொடிபொழுதில் மறுபுறம் சரவணன் வெறுப்படைந்தான். அவனுக்கு இந்த காத்திருப்பல் சுகமாக இருந்தாலும், அவள் மறுபடி அழைப்பாளா ? இல்லையா ? என்ற பயமும் மனதில் குடி கொண்டிருந்தது. அடுத்தநாள் மாலை 4.30 மணிக்கு தான் ஆசிரியராக வேலைபார்க்கும் பள்ளிக்கு அருகில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து கலைவாணி பேசினாள்.

20 நிமிடங்கள் கடந்தது. பொது தொலைபேசியில் இவ்வளவு நேரம் பேசுவது கலைவாணிக்கு புதிது. அடிக்கடி சுற்றும் முற்றும் பார்த்தாள். சற்று பயந்தாள்.

"சரி நான் அப்பறம் கூப்படறேன்" அழைப்பை துண்டிக்க முயற்சித்தாள்.

"நான் சொன்னத ஞாபகம் வச்சுக்கோ, என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. இந்த ஞாயிற்று கிழமை சாதா பாஸ் புடிச்சாவது திருச்சி வருவேன், நீ மலைகோட்டைக்கு வந்துரு" என்று அவன் சொல்லியபோது,

"சரி பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

வெள்ளி, சனிக் கிழமைகள் கடந்தது.

பெங்களூரில் இருந்து இரவுப் பேருந்துப் பயணத்தை முடித்துவிட்டு, திருச்சியில் ஒரு ஹோட்டல் அறையில் குளித்துவிட்டு ஒருவழியாக மலைக்கோட்டையை வந்தடைந்தான் சரவணன். கலைவாணியும் ஏதேதோ சொல்லி வீட்டில் சமாளித்துவிட்டு மாலை நான்கு மணிக்கு மலைக் கோட்டையை வந்தடைந்தாள். கலைவாணியின் அத்தனை நடவடிக்கைகளும் அவளுக்கே புதியதாகத் தெரிந்தது. அடிமனதில் தவறு செய்கிறோமோ என்ற அச்சமும் சேர்ந்து கொண்டது.

உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகே மர நிழலில் அமர்ந்திருக்கும் சரவணனை பார்த்து அடையாளம் கண்டுகொண்டாள் கலைவாணி. எதிரே வரும் அவளை சரவணனும் அவதானித்தான். தனது மனதில் அச்சடிக்கப்பட்ட உருவத்தை இரண்டாவது முறையாக நேரில் பார்த்தான். கலைவாணி அருகில் வந்ததும் சரவணன் சிரித்தான். அவள் வெட்கப்பட்டாள். பயத்தில் அவளது விரல்கள் நடுங்குவதை சரவணன் கவனித்தான்.

அருகில் உட்கார வைத்து பேச ஆரம்பித்தான். சரவணனுக்கு அழகாகப் பேசத் தெரியாது. ஆனால் யார் மனமும் புண்படாமல் மனதில் தோன்றுவதை பிறர் ரசிக்கும் படியாகப் பேசுவான். சரவணனை துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்று தான் எடுத்த முடிவு சரி என்று அவனது பேச்சின் மூலம் உறுதிபடுத்திக் கொண்டாள் கலைவாணி.

ஒரு மணி நேரம் ஆனதும் "வீட்ல தேடுவாங்க.. நான் கெளம்புறேன்" என்றாள் கலைவாணி.

"நான் பெங்களுர்ல இருந்து வந்துருக்கேன் கொஞ்ச நேரம் இரேன்" அன்பு கலந்து வார்த்தைகளாய் கலைவாணியின் காதில் விழுந்தது.

ஆனால் ஐந்து நிமிடத்திற்கு மேல் அவளால் இருக்க முடியவில்லை. கிளம்பினாள். கலைவாணி விடைபெறும் தருணத்தில், தான் பெங்களூரில் இருந்து வாங்கி வந்த செல்போன், திருச்சியில் வாங்கிய சிம் கார்டோடு சேர்த்து அவளிடம் சரவணன் கொடுத்தான். அவளுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்.
"ஹ்ம்ம் ஹ்ம்ம் வேண்டாம், வீட்ல வைக்க முடியாது" என்றாள்.

"நாள் கணக்குல உன்னோட பேசாம காத்துட்டு இருக்க முடியல.. எப்ப கூப்டுவேனே தெரிய மாட்டேனுது. வீட்ல வைக்க முடியாட்டி அட்லீஸ்ட் இத ஸ்கூல்லயே வச்சுக்கோ.. அங்க இருக்கப்ப என்ட தினம் கொஞ்ச நேரம் பேசு.. அது போதும்" என்று மாற்று யோசனை சொன்னான் சரவணன்.

அரை மனதோடு வாங்கிக்கொண்டு விடைபெற்றாள் கலைவாணி.

பள்ளியில் இருக்கும்போது சிறிது நேரம் பேசுவதும், மாலையில் சுவிட்ச் ஆப் செய்து தனது டிராவில் வைத்துவிட்டுப் போவதையும் வழக்கமாகக்கொண்டிருன் கொண்டிருந்தாள் கலைவாணி. வீடு திரும்பிய பிறகு அவன் குரல் கேட்க ஏங்கும் நேரங்களில், தனது தந்தையின் தொலைபேசியை பயன்படுத்துக் கொண்டாள் கலைவாணி.

அன்று மதிய உணவு இடைவேளையில், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் இருந்து சரவணனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் கலைவாணி. பள்ளிக்கு அருகேயுள்ள EB அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்த வண்டியில் வந்த கலைவாணியின் அப்பா இதை கவனித்தார். அவளது காதில் இருந்த போன், அடிக்கடி அவள் யாரோடோ பேச தனது செல்போனை இரவு நேரங்களில் பயன்படுத்துவதாக நினைத்த அவரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. வண்டியை 30 மீட்டர் தொலைவில் ஓரமாக நிறுத்திவிட்டு, மெதுவாக கலைவாணியின் அருகில் போனார். அவளைத் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் இருக்கவில்லை.

"கலை" என்று பின்புறமிருந்து வந்த தந்தையின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் கலைவாணி. தந்தையைப் பார்த்த அதிர்ச்சியில் கையில் இருந்த செல்போனை கீழே போட்டாள். போனை எடுத்து தனது காதில் வைத்தார் கலைவாணியின் தந்தை.

"ஏய் நீ கவல படாதமா... என்ன ஆனாலும் எனக்கு நீதான், அதுல எந்த மாற்றமும் இல்ல" என்று பெங்களூரில் இருந்து வந்த சரவணின் குரல், அவரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. கோபத்தின் உச்சத்திற்குப் போனார் கலைவாணியின் தந்தை.

"யாருடா நீ ?" என்று கேட்டவர், சரவணனின் பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்து "யார் இவன் ?, யாரோட போன் இது ?" என்று குரலை உயர்த்தி கலைவாணியிடம் கேட்டார்.

அவள் பயந்தாள். பதில் அளிக்க முடியாமல் மௌனமானாள்.

"எந்த அயோக்கியப் பயலோட பேசிட்டு இருக்க ?" என்று கேட்டதோடு

அருகில் இருந்த கல்லில் செல்போனைப் போட்டு உடைத்தார். செல்போன் ஏறி தேங்காயாக சிதறியது. கலைவாணிக்கு எல்லாமே முடிந்துபோனதுபோல் இருந்தது. உணர்வுகளை அடக்க முடியாமல் அழுதாள். கண்ணீர் பெருக்கெடுத்தது.

என்ன நடந்ததென்று தெரியாமல் எதிர் முனையில் சரவணன் தவித்தான்.

தொடரும்...
« Last Edit: June 07, 2013, 01:57:57 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218404
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )




செல்போனை உடைத்த கையோடு வண்டியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக மறைந்தார் கலைவாணியின் அப்பா.

கலைவாணியின் கண்ணீர் நிற்கவில்லை. அழுதுகொண்டே மெதுவாக அமர்ந்தாள். உடைந்துபோன செல்போன் பாகங்களைப் பொறுக்கினாள். அவளால் ஏனோ அதை உயிரற்ற பொருளாக நினைக்க முடியவில்லை. கையில் கிடைத்த பாகங்களைப் பொறுக்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அவளும் நகர்ந்தாள். மீதிப் பொழுது பள்ளியில் அவளுக்கு சரியாகப் போகவில்லை. அலுவலகத்தில் சரவணன் கணினிமுன் கணினி போல அமர்ந்திருந்தான்.

இரவு எட்டுமணி... பள்ளியில் நடந்ததைச் சொல்லி அவன் யார் என்று மகளிடம் கேட்கும்படியாக தனது மனைவியிடம் சொன்னார் கலைவாணியின் அப்பா. கலைவாணி எதற்கும் பதிலளிக்கவில்லை. உணவும் உண்ணவில்லை. ஒரே செல்ல மகள் இவ்வாறு இருப்பதைப் பார்த்து கலைவாணியின் தாய் பயந்தாள். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரவு பதினொரு மணி... கலைவாணியின் தந்தை அவளை மீண்டும் திட்டிவிட்டு எழுந்து போனவர் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். தரையில் படுத்திருக்கும் கலைவாணியை தனது மடியில் கிடத்தினாள் அவள் தாய். ஒரு கையால் அவளது உடலை தட்டிக்கொடுத்தாள். அமைதியாக இருந்த கலைவாணியின் கண்கள் மீண்டும் கண்ணீர் அருவியானது. தாயின் மடியின் முகத்தை இறுக்கமாகப் பதித்துக் கொண்டாள்.

பொறுமையாக கலைவாணியிடம் மீண்டும் பேச ஆரம்பித்தாள் அவள் தாய். சிறிய இடைவெளிக்குப் பிறகு நடந்தது அனைத்தையும் மெதுவாக விவரித்தாள் கலைவாணி. கலைவாணியை குழந்தை முதல் நன்கு புரிந்துகொண்ட அவளது தாயிக்கு தனது மகளின் விருப்பத்தில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் பெண் பார்க்க வந்த சரவணனை அன்றே அவளுக்கும் பிடித்துப்போனது. தனது மகளுக்கு சரியான துணை இவன் என்றே கருதினாள். ஆனால் கலைவாணியின் தந்தை ஜாதகத்தில் அதீத நம்பிக்கை உடையவர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதால் பெண் பார்க்கும் முன் அவரால் ஜாதகம் பார்க்க முடியவில்லை.

பிறகு பார்த்து முற்றிலும் ஒத்துவராது என்று ஜோசியர் சொல்லியதை கலைவாணியின் தந்தை விடாமல் பிடித்துக் கொண்டார். ஒரே பெண்ணின் வாழ்க்கை சரியாக அமையவேண்டும் என்று அவர் கருதினார். ஜாதகப் பொருத்தத்தை வைத்து அதற்கு இந்த வரன் சரிப்பட்டு வரமாட்டான் என்று முடிவுசெய்தார். அவரின் நிலைப்படும் கலைவாணியின் அம்மாவிற்கு தவறாகத் தெரியவில்லை.

இந்த எண்ண அலைகளை ஓடவிட்டுக் கொண்டே, பல வருடங்கள் கழித்து கலைவாணிக்கு உணவு பிசைந்து ஊட்டிவிட்டாள் கலைவனின் தாய். நாள் முழுதும் அழுத கலைவாணியின் கண்கள் தூக்கத்தைத் தழுவியது. மகளை தட்டிக் கொடுத்து உறங்கவைத்தாள். சரவணனால் இரவு முழுதும் உறங்க முடியவில்லை. நடந்ததை அறிந்து, கார்த்திக்கும் ஆண்டனியும் அவனைத் தேற்றினார்கள். தந்தையிடம் பேசும்படி அறிவுறுத்தினார்கள்.

அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் தனது அண்ணிக்கு போன் செய்து நடந்ததைக் விவரமாகக் கூறினான். கலைவாணிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று புலம்பினான். அவளே வேண்டும் என்று அடம் பிடித்தான். இந்தச் செய்தியை தனது மாமனாரிடம் நேரடியாகச் சொல்ல சுமதிக்கு தைரியம் வரவில்லை. மாமியார் வழியாக செய்தி சரவணன் தந்தையை அடைந்தது.

"கொடுக்க முடியாது என்று சொல்வர்களிடம் நான் என்ன கெஞ்சவா முடியும்" என்று அவர்  தரப்பு நியாங்களை முன்வைத்தார் சரவணனின் தந்தை. இருந்தும் அரை மனதோடு பெண் வீட்டாரிடம் பேசுவதாகத் தீர்மானித்தார். கலைவாணியின் மாமா வழியாக அவளது தந்தையிடம் பேசிப் பார்த்தார்கள். அவர் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இதை சரவணனின் தந்தை தனக்கு நிகழ்ந்த அவமானமாகக் கருதினார்.

"பொண்ணப் பெத்தவனுக்கு இந்த பிடிவாதம் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்" என்று தனது பிடிவாதத்தை வெளிப்படித்தினார். இதை அறிந்த சரவணனுக்கு நாட்கள் நகரவில்லை.

கலைவாணி பள்ளிக்குப் போவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. அவளால் சரவணனிடம் பேச முடியவில்லை. அவளுக்கு நாட்கள் நெருப்பின் மீது நடப்பதாக இருந்தது. அங்கு நடப்பதை சரவணின் வழியாக அறிந்துகொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று தனக்குத் தெரிந்த ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

நாட்கள் கழிந்தது. கலைவாணி மாறுவதாக அவளது தந்தைக்குத் தெரியவில்லை. அவர் மற்றுமொருமுறை அவளிடம் பேசிப்பார்த்தார்.

"ஜாதகப் பொருத்தம் சரியா அமஞ்சவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்களா ? ஜாதகத்தவிட உங்களுக்கு என் மனசு முக்கியமா தெரியலயாப்பா ?" என்ற ஆணித்தனமான கேள்வியை காற்றில் வீசிவிட்டு அவளது தந்தையை கட்டி அழுதாள். இந்தமுறை மகள் அழுவதை அவரால் தங்கிக் கொள்ள முடியவில்லை. கலைவாணியின் தாய், அவளது தந்தையிடம் இரவு முழுக்கப் பேசினாள்.

அடுத்தநாள் காலை, கலைவாணியின் மாமா வழியாக சரவணனின் தந்தையிடம் கலைவாணியின் தந்தை பேசினார். அவர்கள் இறங்கி வந்ததைப் பார்த்துவிட்டு சரவணனின் தந்தைக்கு வேண்டாம் என்று தூக்கிஏறிய மனதில்லை. அவரும் ஒத்துக்கொண்டார். இந்தச் செய்தி கலைவாணிக்கும் சரவணனுக்கும் காற்றுவழி பறந்தது. கலைவாணி பள்ளி போவதைத் தொடர்ந்தாள். சுதந்திரப் பறவையானாள். முன்னைவிட சரவணனிடம் பேசும் நேரம் அதிகமானது.

நாள், நேரம் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது. இரண்டு மாதத்தில் திருமணம் நல்லபடியாக முடிந்தது. சரவணனுக்கு நிகழ்ந்ததை நினைத்து கார்த்திக்கும் ஆண்டனியும் சந்தோசப் பட்டார்கள். தேன் நிலவிற்கு சிம்லா போவதாக சரவணன் திட்டமிட்டான். ஆனால் ஒரே மகளை மொழி தெரியாத ஊரிற்கு அவ்வளவு தூரம் அனுப்ப கலைவாணியின் தந்தை பயந்ததை அறிந்த சரவணன், தேன் நிலைவை கோடைக்கானலோடு முடித்துக்கொண்டான்.

பெங்களூர் மடிவாளா பகுதியில் குடியேறிய சரவணன் வீட்டிற்கு அடிக்கடி போய் வருவான் கார்த்திக். சில மாதங்கள் கழித்து சரவணன் வேலை நிமிர்த்தமாக கலைவாணியுடன் காரைக்குடிக்கு குடி மாறினான்.

சரவணனை கார்த்திக்கும், ஆண்டனியும் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் "You know what, I don't talk to stupid bachelors" என்று சொல்லி கலகலப்பாக சிரிப்பான்.

"எங்களுக்கும் ஒரு நேரம் வரும்டா" என்று சொல்லி கார்த்திக்கும் சிரிப்பான். சில மாதங்களுக்குப் பிறகு இவர்கள் அடிக்கடி பேசிக்கொள்வது வேலைப்பளு, குடும்ப சூழல்  காரணமாக குறைந்துபோனது.

ஒரு வருடம் உருண்டோடியது.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கார்த்திக் செல்போனிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

"ஹலோ..."

"டேய் உயிரோட இருக்கியா ?"

"யார் பேசறது ?"

"டேய் தெரியலையாடா மச்சி... சரவணன் டா"

"அடே அங்கிள்.. எப்பிடி இருக்க ? கலைவாணி, அப்பா, அம்மா எல்லாம் எப்பிடி இருகாங்க ?. என்னடா புது நம்பர்ல இருந்து கால் பண்ற... நம்பர மாத்திட்டியா ?"

"எல்லாம் நல்லாருகாங்கடா.. இது ஆபீஸ் மொபைல் மச்சி.."

"ஓ அப்படியா ?"

"ஆமா ஆமா.. அப்பறம் ஒரு முக்கியமான விசயம்டா. ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் அப்பாவா ஆகிட்டேன். பெண் கொழந்த பொறந்திருக்கு. ரொம்ப வேலையா இருந்ததால உடனே சொல்ல முடில. இன்னைக்குதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தோம்"

"அடே அடே... சூப்பர் டா... பாப்பா எப்பிடி இருக்கா ? வெயிட் எல்லாம் சரியா இருக்கா ?"

"பாப்பாவெல்லம் நல்லாதான் இருக்கா ? ஆனா !"

"என்னடா ஆனா ?"

"பொறந்தது பொறந்துச்சே, அவ அம்மா மாதிரி செவப்ப பொறந்துச்சா ? என்ன மாதிரி கரு கருன்னு இருக்குடா மச்சி" சொல்லிவிட்டு சிரித்தான் சரவணன். கார்த்திக்கும் விழுந்து விழுந்து சிரித்தான்.

சற்று நேரம் பேசிவிட்டு

"சரிடா மச்சி... பாப்பா, கலைவாணிய நல்லா பத்துக்கோ. நான் அப்பறம் பேசுறேன்"

"டேய் இருடா.. ரொம்ப நாள் கழிச்சு அப்பாவா ஆகி போன் பண்ணிருக்கேன். அதுக்குள்ள வைக்கிறேங்குற"

"You know what, I don't talk to married uncles" என்று சொல்லிவிட்டு கார்த்திக் சிரித்தான். சரவணனும் சிரித்துக் கொண்டே

"டேய் டேய்... கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்கணும் மச்சி.. ப்ளீஸ் பேசுடா" என்றான்.

அருகில் அமர்ந்திருந்த கலைவாணி, புன்முறுவலோடு சரவணை செல்லமாக அடித்துவிட்டு அவனது முழங்கையோடு தனது கைகளைப் கோர்த்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அருகில் இருந்த தொட்டிலில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.

முற்றும்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                    

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218404
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/