FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on April 05, 2024, 12:18:38 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: Forum on April 05, 2024, 12:18:38 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 340

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/340.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: Glarina on April 05, 2024, 09:36:02 AM
அழகிய மாலை பொழுதில், அவள் கண்களை பறித்த தருணம்.....என்னவன் கைகளில் பொதிய பணம் இல்லாத நேரம்....அதை புரிந்து கொண்டவளாய் முகத்தில் புன்னகையோடு நகர்கிறாள் ...

அவள் விரும்பிய பொருளை வாங்கி கொடுக்க இயலாதவனாய் ..
மனதில் சண்ஜலத்துடன நாட்கள் கடந்தது.....
அதிக பாசம் கொண்டவனாய் பணம் சேமிக்க தொடங்கினான் ....
என்னவளுக்காக உழைத்தால் நாட்கள்
வேகமாக நகர்ந்தது...

 அவள் விரும்பிய பொருளை...மனது நிறைந்த காதலோடும்...
சந்தோசத்தோடும்
அதை வாங்கிய வண்ணம் ....
என்னவளின் அருகே சென்றான் ......
அவள் கண்களை தன் கரத்தால் மறைத்த வண்ணம் ....உனக்கு ஒன்று வாங்கி வந்தேன் என கூற ....என்னவள் முகம் நிறைந்த புன்னகையோடு  என்னவாக இருக்கும் ...என்று மிகுந்த ஆசையோடும் வாங்கி பார்த்த நேரம் ....என்னவன் தன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதை உணர்ந்தவளாய் ...
கண்களில் ...நீர் நிரம்பியவளாய்  , என்னவனின் அன்புக்கு சொந்தகாரி தான் மட்டுமே என்று பெருமை கொண்டாள் ......விலைமதிக்க முடியாத அன்பை பெற்றவளாய் தன் என்னவனை கட்டி அனைத்து கொண்டாள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: Lakshya on April 06, 2024, 03:52:04 PM
❤️அழகியே!!!❤️
நூறு கோடி ஆண்கள் இருந்தும் அவர்கள் மத்தியில் உன் மனதில் இருப்பது" நான்" மட்டுமே என்பதை நினைக்கையில் என் இதயம் என்னிடம் இல்லை என்பதை நீ அறிவாயா??

❤️என் காதல் கண்மணியே!!❤️
என்னிடம் பணம், காசு குறைவாக இருந்தாலும் என் அன்பு அனைத்திற்கும் அரசி நீ மட்டுமே என்பதில் சந்தேகம் இல்லை...

என் மனநிலை என்னவென்று அறிந்து அதன்படி செயல் படும் நீ, எதற்காக உன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து சகித்துக் சென்றாய்...இதுவே நீ எனக்கு அளிக்கும் முதல் பரிசாக நான் கருதுகிறேன்...சமயங்களில்  உன்னிடம்  சண்டையிட்டு உன்னை காயப்படுத்தியது என் தவறே...காதல் ஒ‌ன்றை தவிர, உனக்கு பரிசளிக்க என்னிடம் ஏதும் இல்லை கண்மணியே...

❤️கணவனே!!!❤️
அழுகை, கோவம், சண்டை இதில் ஏதுவாக இருந்தாலும் அது உன்னை காயப்படுத்தி விடும் என்று நான் மறைத்து வைத்திருந்த உணர்ச்சிகள்...அதிக அன்பை வெளிப்படுத்தி மயக்கும் அன்பே...உன்னிடம் பரிசு எதிர்பார்ப்பது செரியா???

அதிக பாசத்தை விட அதிக புரிதலை உன்னிடம் நேசிக்கிறேன் நான்..உன்னால் என் மனம் வேதனை பட்டாலும் உன்னை பார்கும் நொடி என் மனம் உன்னை கட்டி அணைக்க எண்ணுகிறது ஏனோ?

❤️கண்ணாளனே❤️
விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாம்,பரிசு வே‌ண்டா‌ம் உன் கை பிடித்து நீ அழைக்கும் இடமெல்லாம் வருவேன் உன்னை நம்பி...உன்னோடு இருப்பதே கடவுள் அளித்த பரிசாக எண்ணுகிறேன்...கண்ணில் இருந்து கையை எடுங்கள்...குழந்தை எழுந்து விட்டாள் ❤️
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: KS Saravanan on April 06, 2024, 06:08:16 PM
காதல் பரிசு..!

அன்பு மழை பொழியும் அன்பானவளே
என்னை மணம் கொண்ட மணவாட்டியே ..!
கைகோர்த்த நாள் முதல் இன்றுவரை
நீ கேட்கவில்லை முதல் பரிசு..!
வலியை யாரிடமும் சொல்லாமல் 
கண்ணீரோடு நினைவுகளை சுமந்து
நம் காதலை மீட்டது தான்
நீ எனக்கு தந்த காதல் பரிசு..!
கேட்காமல் கொடுக்கும் வல்லமை
இருந்திடவில்லை என் சிரசில்.!
வல்லமை தாராயோ எனதன்பே
உனை கேட்காமல் எது வேண்டுமென அறிய ..!

விடை தேடி விழி மூடி
நினைவலையில் செல்கிறேன்
நீ விரும்பியவை யாவென
திரும்பி பார்க்க நினைக்கிறேன்..!
கேட்டவை எல்லாம் எனக்காக கேட்கிராய்
வாங்கியவையெல்லாம் எனக்காக வாங்கினாய்..!
சுயநலம் இல்ல பேரன்பே
புதியதாய் பூக்கும் அத்தனை பூக்களும் நீதானடி..!
பூவின் இதழ்களாக நீயிருக்க
வாசமாக நானிருக்கலாமா..?
இதயத்தை ஆட்கொண்ட கள்வியே
போரிட மனமில்லை மீட்டெடுக்க..
தெரிந்துமே மீண்டும் தோற்கிறேன்
மீட்டெடுக்க முடியாமல்..!

எதை கொடுத்து அன்பே உன்னை வெல்ல..?
அன்பை வெல்ல ஆயுதம் உண்டோ..?
தென்றலாய் தாழம்பூ மணம் வீச
சாரலாய் மழை பொழிய
பின்னலாய் நம் விரல்களை கோர்த்து
மயில்தோகையாய் குடை விரித்து
ஊடுறும் மழைநீரில் நாம் நனைந்து
மணல்வெளியில் நடப்போமடி
வெண்பனி நிலவினை காண்போமடி
ராமன் தேடிய சீதையாய் நீயிருக்க
சீதைக்கேத்த ராமனாய் நானிருப்பதே
உனக்கான பரிசு என்பேன்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: TiNu on April 07, 2024, 11:30:47 AM


ஒருவர் மீதான அன்பை பொழிய
ஆயிரம் ஆயிரம் வழிகள் உண்டு
ஆயிரம் வழிகளில் ஒன்றே பரிசு..

தமிழ் மீது கொண்ட காதலால்..
அதியமான் அவ்வைக்கு கொடுத்த
நெல்லி கனியும் ஓர் பரிசே..

மகாபாரத பஞ்சபாண்டவர்கள்
தன் மனைவிக்கு கொடுத்த
துருயோதனின் குருதியும் ஓர் பரிசே..

நடப்பு மீது கொண்ட காதலால்
கண்ணனுக்கு குசேலன் கொடுத்த
கைப்பிடி அவலும் ஓர் பரிசே..

தவ வலிமையின் மீது கொண்ட ஆணவத்தால்..
விஷ்வாமித்திரர் திரிலோகனுக்கு கொடுத்த.
திடீர் ஸ்வர்க்கமும் ஓர் பரிசே...

தன் வாழ்நாள்.. அனுபவ சாதனையால்..   
ஓர் தந்தை தன் மகனுக்கு கொடுக்கும்
அணுகுமுறை அனுபவ அறமும் ஓர் பரிசே.. (அறம் - தர்மம்,கடமை)

கடவுளின் பிரதிநியாக பூமியில் வாழும்..
ஓர் அன்னை தன் மகளுக்கு கொடுக்கும்..
உயிர்களை அரவணைக்கும் தாற்பரியமும் ஓர் பரிசே.  (தாற்பரியம் - நோக்கம்)

குருவுக்கும் மாணவனின் பரிசு - நற்பெயர்..
தொழிலாளிக்கு முதலாளியின் பரிசு.-. சன்மானம்..
உழவனுக்கு பூமியின் பரிசு.. - மகசூல்..

பரிசு,
தானத்திலும் அடங்காது.. உதவியிலும்.. சேராது...
அது.. கொடுப்பவர் பெறுபவர் மீதான
அளவு கடந்த அன்பின் வெளிப்பாடே..

உலகின் உயரிய பரிசு யாதென்று அறிவீரோ...
அன்பு கணவனே..  மனைவியின் பரிசு.....
காதல் மனைவியே..   அவனின் ஆசை.. பரிசு...

நாளைய உலகை எதிர்பார்ப்புகளோடு காண துடிக்கும்..
பால்மணம் மாற சின்னசிறு மழலைகளுக்கு.. அவர்களின்
அன்போடு வாழும் பெற்றோர்களே மாபெரும் பரிசு...



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: VenMaThI on April 07, 2024, 07:35:55 PM



மாய உலகில் பிறந்த மானுடனே
பிறப்பு முதல் இறப்பு வரை
பிரபஞ்சத்தில் அனைத்துமே நமக்கான பரிசு..
நன்மையும் உண்டு தீமையும் உண்டு
நடப்பது எதுவாயினும் அவை அனைத்தும்
கற்று தரும் பாடமே நமக்கான பரிசு....

நன்மையும் தீமையும் பிறர்தர வாராது..
தத்தித் தவழும் குழந்தை முதல்
தள்ளாடும் கிழடு வரை இதை உணர
 வாழ்க்கையில் பாடங்கள் கிடக்கு தாராளமாய்
பட்டும் திருந்தாத உள்ளங்கள்
இவ்வுலகில் இன்னமும் இருக்கு ஏராளமாய்...

தாய்க்கான பரிசாய் தந்தையும்
தந்தைக்கான பரிசாய் தாயும் கிடைக்க..
உற்றாரும் சுற்றாரும் உற்சாகமாய்
பொன்னையும் பொருளையும் பரிசாய் கொடுக்க..
இறைவனின் படைப்பில் அந்த இயற்கை மட்டுமல்ல
குடும்பத்தின் வாரிசும் ஒரு பரிசே.....

குழந்தை பெண்ணாகி பெண் தாயாவதும் . இளமை முதுமையென மாற்றம் நிகழ்வதும்
பூ காயாகி கனியாகி செடியாகி பூப்பதும்
இரவுபகலென வெப்பநிலை மாறுவதும்.. என
இவ்வனைத்தும் நமக்கு கற்றுக்கொடுப்பது
மாற்றம் நன்மையே என்பதாகும்....

மாற்றம் ஒன்றே மாறாதது.. இவ்வுலகில்
அதுவே என்றும் நிலையானது
இதை மனதில் பதித்துக்கொள்வோம்...
மாற்றங்கள் பழகிவிடின்
பல மாற்றத்தால் நிகழும்
ஏமாற்றங்களும் பழகிவிடும்.....

இறைவனின் பரிசான பிறப்பை ஏற்றதுபோல்..
நமக்கான நாள் வருகையில்
இறப்பையும் நம் பரிசாய்  ஏற்ப்போம்...
இருக்கும் வரை இறைவனின் பரிசை
இன்னமுகத்துடன் ஏற்று இன்பமுற வாழ்வோம்.....
வாழ்வதும் வீழ்வதும் நமக்கான
இவ்வாழ்க்கையின் வரமென நினைப்போம்...

நிலையில்லா இவ்வுலகில்
என்றுமே எதுவுமே நிரந்திரமில்லை..





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: Sun FloweR on April 07, 2024, 11:43:01 PM
எப்படி மறக்க முடியும்?
நம்முடைய அந்த முதல் பார்வையை..
நம்முடைய அந்த முதல் காதலை..
நம்முடைய அந்த முதல் முத்தத்தை..
நம்முடைய அந்த முதல் நெருக்கத்தை..
உன்னுடைய அந்த
முதல் காதல் பரிசை..

என் பின்புறம்
தழுவி அணைத்து,
என்னுடைய கண்களை
உன் இரு கைகளால்
பொத்தியபடி நீ எனக்களித்த கோடி இன்பத்தை,
எப்படி மறப்பேன்?

உனக்காக என் இதயத்தை பரிசளிக்க விரும்பி, இந்த சிறு வெகுமதியை தருகிறேன் என்று தாலி வரம் தந்தாய் ..

உனக்காக வானவில்லை கொண்டு வருவேன், நீ கட்டும் புடவைகளாக உடுத்த என்றாய்..

உனக்காக நிலவினை சுமந்து வருவேன், நெற்றிப் பொட்டாய் வைத்துக் கொள்ள என்றாய்..

உனக்காக உலக மலர்களின் சுகந்தத்தை சிறை பிடிப்பேன்,
உன் அங்கம் பரப்பும் நறுமணமாய் மாற்றிக் கொள்ள என்றாய்..

உனக்காக வான் மழையை சேகரிப்பேன், நீராடும் உன் மேனியை நனைக்க என்றாய்..

இன்னும் ஏதேதோ சொல்லி பிதற்றினாய்...
ஆசை வார்த்தைகளை
அள்ளி வீசினாய்...
உன் உதடுகள்
உதிர்த்த சொற்கள்
யாவும் ஆகாய தாமரை ஆனதென்ன..?
இன்று உன் வாக்குகள் யாவும்
கானல் நீர் ஆனதென்ன?

நீ தந்த சத்தியங்கள்
காற்றில் கரையலாம்..
கற்பனை ஆகலாம்..
ஆனால் ஏற்றுக் கொண்ட என் மனது
காற்றிலும் கரைவதில்லை..
கற்பனையும் ஆவதில்லை..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: Vethanisha on April 08, 2024, 06:44:55 AM
பணி முடிந்தது வீடு வருகிறேன்
 கூறி அரை நாழியானது

எங்கே அவர் !

அடிக்கடி வாசலை நோக்கி
நடந்து நடந்து களைத்தன கால்கள்
நகரும் உருவங்கள் அனைத்தும் அவரோ
 என தேடி தேடி களைத்தன விழிகள்
வரட்டும் வரட்டும் என செல்லமாய் 
சிணுங்கி கொண்டன இதழ்கள்
 ;)

சட்டென்று வருடியது ஒரு தீண்டல்
பின்னிருந்து   என் விழிகளை ஒரு கை மூட

என்னவனின்  ஸ்பரிசம் 🌹
பஞ்சாய் கரைந்தது மனம்
முகத்தில் மட்டும் சிறு போலி கோபம்

'என்னவாம்' என  கேட்டுத்தான் வைத்தேன்

மன்னிப்பாயா என அவர் வினவ
அடுத்த பத்து   நொடி அமைதி
 என்னை பாடாய் படுத்த

மன்னிப்பா ???

அதிகம் நச்சரிக்கிறாய்
இனி நீ வேண்டாம் என சொல்வாரோ ..
அதிகம் பேசுகிறாய்
 இனி  நம்மிடையிடையே  பேச்சு
வார்த்தை இல்லை என சொல்வாரோ ..
நிம்மதி வேண்டும்
உன் அன்னை வீடு செல் என்பாரோ ..
உன் மீது ஈர்ப்பு போனது
புது துணை வேண்டும் என சொல்வாரோ..
இனி நீ எனக்கு தேவையே இல்லை
என சொல்லித்தான் விடுவாரோ ..
 
உள்ளே  எண்ண அலைகள் என்னை கொன்று குவிக்க
இதய துடிப்பு இமய மலையையும் தாண்டி எகிற

"தாமதம் ஆனது அன்பே  அதனால் ஒரு  மன்னிப்பு
என் அன்பு மனைவிக்கு சிறு அன்பளிப்பு "
சாந்தமாய்  அவர் தொடர

வயிற்றில் பாலை வார்த்தாய் என்  இறைவா !
புயலாய் வெளியேறியது பெருமூச்சு !

அன்பளிப்பா ???

வாசமிகு மலரோ
அன்று கேட்ட சுடிதாரோ
புதிதாய் வந்த கைபேசியோ
மாமா கடை பிரியாணியோ
எனக்கு பிடித்த இன்னடோ
இல்லை வெறும் ஏப்ரல் "fool" oh

என மனம்  மீண்டும் எதையோ நினைக்க

என் கையில் அழுத்தினார் 
அழகான இளம்சிவப்பு பெட்டி
வசீகரமாய் சிரித்தது உள்ளே 
விலைமதிப்பில்லா மெட்டி

கண்களின் கண்ணீரை துடைத்து கொண்டு
நாணத்தோடு அவரை நோக்க 

இன்னும் கோபமா.. அடியே !
ஏன் ஒன்றும் பேச வில்லை என்றவரிடம்

"Nothing"  என்றபடி இறுக  கட்டியணைத்தேன்

இந்த பெண்களின் நொதிங் (Nothing) யை புரிந்தவர்
இன்றும் உலகத்தில் யாருமில்லை
என்றபடி கன்னத்தில்  இட்டார்  மீண்டும் ஒரு பரிசை ❤️


VethaNisha.M
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: Hazel on April 08, 2024, 08:54:50 AM
தினம் தினம் உன் முகத்தை பார்த்து விடியும் என் காலை
மனம் எங்கும் இன்பம் பொங்கும் அவ்வேளை

உன் காதல் அனைப்பின் ஸ்பறிசமும்
எனக்கு பழகிப்போன உன் விரட்களின் தன்மையும்

மனதில் எழும் ஆனந்த உணர்ச்சிகளும்
என்ன தான் செய்ய முயற்சிக்கிறான் என்ற எதிர்பார்ப்பும்

உன் அன்பை நினைத்து பூரிக்கும் என்னை
அள்ளி அனைத்து அன்பாய்
என் கண்களை மூடிக் கொண்ட உன்னை
இவ்வளவு நேசிக்கிறேனா..
என என்னை நானே கேட்டு கொள்ளும் தருணமிது

என்ன பரிசளிக்க போகிறாய் என ஆலோசிப்பதை விட என் மேல் உனக்கு இவ்வளவு காதலா..
எனும் என் எண்ண ஒட்டம்
தடம் புரண்டு ஓடும் இன்ப உணர்ச்சி வெள்ளம்

என்னை எனக்கே புதிதாய் காட்டினாய்
என் கோபங்கள் என் மனநிலை மாற்றங்கள் சகித்தாய்

உன் அன்பெனும் சாரல் மழையில் நனையும் சிறு பிள்ளை ஆகிறேன்
உன் தோள் சாய்ந்து வாழ்வெனும் வானவில்லை ரசிக்கிறேன்
அதிகாலை பனிதுளி ஏந்தும் மெல்லிய பூவிதழ் ஆகிறேன்

உனக்காய் என்ன செய்து விட்டேன் நான்
சொற்களால், செயல்களால் உன்னை காயப்படுத்தியவளே நான்

கண்களில் எட்டி பார்க்கும் ஆனந்த கண்ணீரை மறைக்க முயன்றும் முடியாமல் போய்விட்ட என் பெருமுயற்சி ஒரு பக்கம்
சிறு ஈரம் பட்டதும் பதறி போய் கைகளை எடுத்து விடுவாயோ என்ற தவிப்பு மற்றொரு பக்கம்

என்ன தான் செய்யமுடியும் என்னால்
செயலிழந்து போகிறேன்

உன் சுயநலமற்ற பரிசுத்த காதலின் முன் ஒவ்வொரு முறையும் நான்
தோற்று தான் போகிறேன்
உன்னிடம் மட்டும்
தோற்றுப்போய்க் கொண்டே இருக்கும் எனக்கு, ஒவ்வொரு முறையும் அன்பையே பரிசளிக்கும் உன்னை
என்னவென்று சொல்வது
என் வாழ்வின் வரமென்றா...
இல்லை....
என் வாழ்வே நீ தான் என்றா..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
Post by: விழியாள் on April 16, 2024, 11:59:51 AM
அச்சச்சோ , எனது ஓய்வு நேரம் முடிந்தே போனது .
இந்த சிகப்பு நிற பெட்டிக்குள் கொஞ்ச நேரம் சிறை வாசம் வேறு
காய்ந்து போன களிமண் போல
கடின உழைப்பால் இறுகி போன இவன் கைகள்
என்னை எத்துணை  சாதுரியமாக கையாள்கிறது !
அப்பப்பா! எத்துணை ஆர்வம் எத்துணை ஆர்ப்பரிப்பு இவன் கண்களில் ,
 

நான் யார் என்றா கேட்கிறீர்கள்
அதற்குள்ளே மறந்தால் எப்படி,
பள்ளிக் காலங்களில்
அடம்பிடித்து வாங்கிய ஐம்பது பைசா காசுக்குள்
அவளுக்கு நீ வாங்கிக் கொடுத்த கைச்சுத்து முறுக்காகவும் வேர்கடலையகவும்
கல்லூரியில் அவனுக்கு நீ வாங்கிக் கொடுத்த ஐம்பது ரூபாய சாக்லெட் ஆகவும்
முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு பரிசளித்த கதர் சேலையாகவும் 
தேவையையும்  தவிப்பையும் ஒருசேர நிறைவேற்றும் நான்
எடுத்த பல அவதாரங்கள் தான் இவை
நான் இறைவனல்ல!
ஆனால் எங்கும் நிறைந்திருப்பேன்
விலை கொடுத்து வாங்கி விடலாம்
ஆனால் விலை மதிப்பில்லாதவன்
என் முதலாளியின் அன்பே என்னை தீர்மானிக்கும் மின்னணு தராசு .


அப்பாடா!சிறை வாசத்திலிருந்து விடுதலை.
ஆனால்;
"அன்பே மன்னித்துவிடு நான் உன்னை காதலிக்கிறேன் இனிமேல் நம் காலம்  இனிதாய் அமையும் "
எனச் சொல்லி அவள் கைகளில் என்னை ஆயுள் கைதியாய் சேர்த்து விட்டான்

அவளோ எனக்கும் அவனுக்கும் முத்தமிட்டாள் !😊
யாருக்கு முதல் முத்தம் என்பதை கூட கணிக்க முடியாமல் இலயித்துப்  போய் அவள் கைகளை பற்றிக் கொண்டேன் .
Glarina,lakshya,tinu,Saravanan,sunflower,vethanisha,hazel ஆகியோரின் கைகளில் தவழும் பரிசுகளும்  என் அவதாரங்களே '
என்னை புகழும் அவர்களிடம் எப்படிச் சொல்லுவேன்
அவளுக்கு அவனும்
அவனுக்கு அவளும்
பரிசாய் மாறிப்போய் இருக்க இங்கே எனக்காக ஓர் பரிசு!😍

கைக்கடிகாரம் நான் இனி ஓட வேண்டியது இல்லை
அவள் முகம் பார்த்து என் இதயம் துடிப்பதே
நேரம் ஆகிப் போகும்.
இனி நிற்காது துடிக்கும் என் இதயம் !