FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on April 29, 2018, 02:48:41 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: Forum on April 29, 2018, 02:48:41 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 183
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/183.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: JeGaTisH on April 29, 2018, 04:11:10 PM
நிஜத்தில் நடக்கும் நிழல்களை
ஊடகங்கள் தன் சுயநலத்திற்காக
உண்மையை கூட உருமாற்றுகிறது.

ஒளிபரப்பப்படும்  ஒவ்வொரு செய்திகளையும்
உண்மையென நம்பி வாழ்கின்றனர் பலர்
அதில் TRPக்காக விறுவிறுப்பாக்குவது எதற்காக?

அன்று  தேநீர்  கடை ஓரமாக செய்தித் தாள்கள் காலடியில்
இன்று தொலைகாட்சிப்பெட்டி காலடிகளில்.

சிறந்த நிகழ்வுகளை தேடி துருவுவதும் நீங்களே
அதை சுக்குநூறாக அழிப்பதும் ஊடகமான நீங்களே.

சிறிய விடயத்தை கூட பெரிதாக்க ஊடகத்தால் முடியும்
ஆனால் அதிலும் விளம்பரம் பண்ணவும் உங்களால் மட்டுமே முடிகிறது.

நிகழ்ச்சிகள்  மூலமாக கால்களை கட்டிப்போட்டதல்லாமல்
ஏழை எளியவர்களின் மனதை நோகடித்து  அவர்களை  அழவைத்து
அதில் எல்லோரையும் அவர்கள் வசமாக்கிறது.

ஒரு நாட்டின் தலைவர் நன்மையோ தீமையோ
எதை செய்தாலும் எடுத்து காட்டி அவரை
நீதியின் முன் நிறுத்துவதும் தொலைகாட்சி ஊடகமே.

யார் நலமும்  பாராது சுயநலமும் காணாது
எந்த தொலைகாட்சி ஊடகம் செய்யல்படுகிறதோ
அதுவே மக்களின் நம்பிக்கையின் நட்சத்திரமாகிறது.



   அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: AshiNi on April 29, 2018, 05:40:25 PM
 புண்ணியங்கள் கோடி கண்டு
   வாழ்ந்த மண் அன்று
பாவங்கள் வெள்ளமாய் ஓட
   பரிதவிக்கிறது இன்று

புன்முறுவல் பூத்த மக்கள்
   வன்முறைகளை சூடிய
காலம் இது...
பூவாடை சுவாசித்த உலகம்
   இரத்த வாடை உள்ளிழுக்கும்
காலம் இது...

எட்டுத்திக்கும் கேட்கிறது
   சொல்லிற்கெட்டா கோரங்கள்
அஃறிணையும் கண்டு அழுகிறது
   தாங்க முடியா அவலங்கள்

உண்மையின் உச்சமாய்
   இருந்த வையகம்
பொய்யிலே தத்தளித்து
   பாழாய் போகிறதே!

சட்டத்தின் முன்னால்
   அராஜகம் கூத்தாடுகிறதே
நீதி தேவதையும்
   வேதனை தாங்காது
நிரந்தரமாய் கண்கட்டப்பட்டு விட்டாளோ...

முன்பெல்லாம் உண்மையை படம் போட்டு
   காட்டிய ஊடகங்கள்
இன்று பணத்தை விழுங்கி
   பொய்மைக்கு அரியாசனமிடும்
கலியுகம் பிறந்ததோ!

நிரபராதியின் கழுத்தில்
   தூக்குக் கயிறு
குற்றவாளியின் கழுத்தில்
   பொன்மலர் மாலை

நிகழ்கால ஊடகம் பொய்யறியாது
    என போற்றும் மக்களே!
நாம் அனைவரும்
    மூடர் கூட்ட வர்க்கமே!

உயிரைக் குடிப்பவன்
   நற்பிரஜையாம்
உயிருக்காய் அஞ்சினவன்
   தேசத் துரோகியாம்

வெறிகொண்டு எழும்புவீர்!
   நிஜத்தை புதைக்கும்
ஊடகங்களின் ஜாலத்தில்
    மூழ்கி போகாதீர்...!

ஆட்டமும் பாட்டமும்
   வக்கனையாய் காட்டவே
ஊடகங்கள் உண்டு இன்று...
ஊடகப் போலிகளை கண்டு
   நியாயத்தின் மீது
கறை பூசாதிருப்பதே நன்று...

தனிமனிதனாய்
   தலை நிமிர்வோம்
புரட்சி செய்து நீதியை
    வாழவைப்போம்!

நம் கைகள் கோர்த்தால் போதும்
    ஊடக ஒளியில் மறைந்த நீதி,
நம் கண்களின் வெளிச்சத்தில்
     சிகரம் தொடும்...!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: thamilan on May 05, 2018, 11:44:10 AM
ஊடகங்கள்  என்பது
ஒரு சிறு நெருப்புப் பொறி
விளக்கை ஏற்றவும் முடியும்
வீட்டை கொளுத்தவும் முடியும்

ஊடகங்கள் என்பது
பச்சைக்களிமண் போட்டதே
குரங்காய் பிடித்திடவும் முடியும்
பிள்ளையாராய் பிடித்திடவும் முடியும்

ஊடகங்கள்  ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம்
இன்று அந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுவது
பாமர மனிதனை வெட்டிச் சாய்த்திடவே

இந்திய தேசம் சுதந்திரம் பெற்றிட
பெரிதும் உதவியது ஊடகங்களே
உண்மைக்கும் நேர்மைக்கும் துணை நின்று
உண்மையை உரக்கச் சொல்லின
சுதேசி மித்திரன் போன்ற பத்திரிகை ஊடகங்கள்

இன்றோ பணத்துக்கும் பதவிக்கும்
கைகட்டி சேவகம் பார்க்கின்றன
இன்றை ய ஊடகங்கள்

ஒண்ணுக்குமில்லாத விஷயத்திலும்
ஊதி பெருசாக்குவதும்
தலை போகும் விஷயத்தைக் கூட
ஒன்றும் இல்லாதது போல காட்டுவதும்
இன்றை ய ஊடகங்களுக்கு கைவந்தக் கலை

உண்மையை உரக்கச் சொல்லி
உலகத்தை தட்டி எழுப்பவேண்டிய ஊடகங்கள்
அரசியல்வாதிகளின் அடிவருடியாய்
இருப்பதை திரித்து இல்லாததை பெரிதுபடுத்திடும்
அவலநிலையில் இன்றை ய ஊடகங்கள்

நடிகையின் இடைக்கும் நடைக்கும்
முக்கியத்துவம் கொடுத்திடும் ஊடகங்கள்
பாமர மனிதனின் அவலங்களை
கண்டுகொள்ளுவதே இல்லை

சுடச் சுட செய்திகள்
கவர்ச்சி விளம்பரங்கள் களியாட்டங்கள்
 கல்யாணம் என்ற பெயரில் ஒரு நடிகனின் காதல்லீலைகள்
இப்படி மனிதர்களை
வேறுபாதையில் வழிநடத்திடும்  ஊடகங்கள்

இந்த வழிமுறைகள் மாறி
உண்மையை உலகுக்கு  எடுத்து சொல்லுங்கள்
ஆண்டானோ அடிமையோ எல்லோரையும்
ஒன்றென நடத்துங்கள்
உலகத்தை மாற்றி எழுதிடும் வல்லமை
உங்கள் கைகளிலே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: KoDi on May 06, 2018, 02:39:11 AM
செய்தி சுமக்கும்  ஊடகங்கள்
அவை சொல்வனவெல்லாம் நாடகங்கள்
ஊற்றிக்கொண்டது  ஊடகத் துறை
ஊமையானது நேர்மையின் நிலை 

தொழில் நுட்பம் வளர்ந்தது   
தொழில் தர்மம் குறைந்தது 
அவரவர்க்கு  ஒரு சேனல்
அதில் அவர்  துதிப்பாடல்

உடனுக்குடன் ஒரு செய்தி
நொடிக்கு ஒரு  பிரேக்கிங் நியூஸ்
நேரம் இல்லை சிந்திக்க
வேறு வழியில்லை நிந்திக்க

ஊடகங்கள் திரித்ததினால்
ஓநாய்கள் ஆடுகளாயின
வெண்புறாக்களோ கழுகுகளாக்கப்பட்டன
நாங்களோ என்றென்றும்  குழப்பத்தில் 

மறைக்கப்பட்ட செய்திகள்
மரபணு மாற்றப்பட்ட விதைகள்
நடந்தவை மாறாமல் வெளிவந்தால்
உலகின் எட்டாவது அதிசயம்

எங்களை சுற்றிலும்
செய்திக் குப்பைகள் 
அவைகளை  கிளறி எடுக்கும்
பன்றிக் கூட்டமாக   நாங்கள்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: SweeTie on May 07, 2018, 08:08:46 AM
உண்மை எது  பொய் எது
அறியாத சமூகமதில்
மாண்டவனை  மீட்டுவிடும் 
வாழ்பவனை  புதைத்துவிடும் 
மாண்புமிகு  ஊடகங்கள்.

அரசியல்வாதிகள் அரங்கேற்றும்
நாடகத்தில்  பங்குதாரர் ஊடகங்கள்
பண முதலைகளின்  பிச்சைக்காக 
இச்சைகொண்டு  தர்மத்தை
கொச்சைப் படுத்தும்  பிரம்மாக்கள்

நாட்டில் நடக்கும் நல்லவைகள்
இவர்கள் கண்ணில் தெரிவதில்லை
கற்பழிப்பு  மானபங்கம்  போன்றவற்றை
துருவி துருவி ஆராய்ச்சி செய்து
முன்னுரிமை  கொடுத்து  மனிதருக்கு
சபலத்தை ஏற்படுத்தும் சூத்திரதாரிகள்

நான்கு சுவருக்குள் நடக்கும் விடயத்தை
கற்பனையும் ஒப்பனையும்  சேர்த்து
தப்புத்தப்பாய்  தமிழ் மொழியில்
ஒப்பிக்கும் உத்தமர்கள் - இவர்களா
இளைய தலைமுறையின்   வழிகாட்டிகள்?

தொல்லை தரும் தொலைக்காட்சி 
நுண்ணறிவின்  அத்தியாயம்
தொலைநோக்கு   அங்கில்லை
குடும்பத்தை  கூறுபோடும் சீரியல்களால்
குட்டிச்சுவராகும்  குடும்பங்கள்   
மருத்துவரை நாடும் வயோதிகர்கள்
படிப்பில் கோட்டை விடும் மாணவர்கள் 
தொலைந்தவர்களே  அதிகம்!

கண்டது கற்க பண்டிதனாவான்
அன்று முன்னோர்  சொன்னது
கண்டதையும் கற்காதீர் காணாமல் போவீர்
இன்று ஊடகம்கள் கற்பிப்பது
ஊடகங்களே!  நற்பணி  செய்யுங்கள் 
மக்களை நலம்  பெற செய்யுங்கள்! 

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: VipurThi on May 08, 2018, 08:07:11 AM
திரையின் முன்னே கண்கள்
திரைக்கு பின்னே கைகள்
இயக்குபவனின் இசைவுக்கு
கைபொம்மையாம் ஊடகங்கள்

நேற்றைய மெய்
இன்றைய பொய்
நாளை அதுவே
காற்று கரைத்த பேனா மை

யூகங்கள் எல்லாம் தலையங்கமாய்
இவர்கள் வகுத்த வியூகங்கள்
அதுவே நாளை பொய்த்துவிட்டால்
சிறு ஓரத்தில் “தவறுக்கு மன்னியுங்கள்”

அன்று மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
இன்று பணத்தின் விளிம்பில்
மனிதாபிமான எதிர்பார்ப்பு

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
ஏமாளி முகத்திரையை நீ கிழித்தெறிய
ஊடக ஊழ்வினைகள் அழித்தொழிய
மனிதாபிமான மனிதன் தலை தூக்குவான்

                           
                               **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: joker on May 08, 2018, 09:47:14 PM
காணாத உலகை
கண்முன்னே
கொண்டுவருவான்

இவன் சொல்லி தந்து
நான் கற்றதோ ஏராளம்
ஆனால்
இன்று
தன்னையே மறந்து
நம்மையும்
திக்குத்தெரியாத
காட்டில் விட்டு
வேடிக்கை பார்க்கிறான்

இவன் வழி நடந்து
அரியாசனம் ஏறியவரும்
உண்டு
இவன்தனை நம்பி
வாழ்க்கையில்
கெட்டவருமுண்டு

உலகில் விதைத்த
விளைவுகள் யாவும்
இவன் கைவசம்.

இன்று இவனோ
எடுப்பார் கைப்பிள்ளை
போல் எடுப்பார் வசம்

இவன்
உண்மையை உரக்க சொன்ன
காலம் உண்டு
இன்று
இவன் சொல்லும் செய்திகளை
உண்மையா என்று விவாதிக்க
இவன் நண்பர்கள்
பலருண்டு

இவன் செய்த சாதனைகள் சொல்ல
ஒரு நாள் போதாது
சுதந்திரமாய் இவன் பணி செய்தால்
சுதந்திரத்தையும் நமக்கு
பரிசளிப்பான்

இவன்
பரிணாம வளர்ச்சி கண்டு
விஞ்ஞான துணை கொண்டு
உருவம் மாறி பயணித்து
கொண்டிருக்கிறான்

இவன் மேல் காதல் கொண்டு
உயிரை பணயம் வைத்து
உண்மையை உரக்க சொல்ல
உழைப்பவரும் உண்டு

இவனுக்கு சமூக பொறுப்புமுண்டு
இவனுக்கோர் சமூகத்தில் பெயருமுண்டு
அதுதான்
"ஊடகம் "



[/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 183
Post by: MysteRy on May 09, 2018, 09:19:16 AM
நம் அன்றாட வாழ்வினில்
தொலைக்காட்சியைத் திறந்தால்
பத்திரிகையை திறந்தால்
மற்றவர் வாழக்கை பொறிக்குள்
அகப்பட்ட எலியாகிறோம் நாங்கள்

தங்கள் சொந்த இலாபத்துக்காக
தங்கள் சொந்த வருமானத்துக்காக
சிறு துரும்பையும் மலையாக்குவது
ஊடகங்களுக்கு கைவந்தக் கலை

விளம்பரங்கள் என்ற பெயரில்
செய்திகள் என்ற பெயரில்
இல்லாததை இருப்பதாக உருவகிப்பதே
ஊடகங்களின் உன்னத கடமை
நேரம் போவது தெரியாமல்
எது பொய் எது உண்மை புரியாமல்
குழம்பிப் கிடப்பதே நமது மடமை

இந்த பொய்யான உலகினில்
உண்மையை உரைத்திட
நாம் என் பேனையை எடுக்க கூடாது
நமது தட்டச்சில் உண்மைகளை தட்டலாமே
நமது புகைப்படக் கருவிகளில்
உண்மைகளை பதிவிக்கலாமே
உண்மைகளை உலகுக்கு அறிவிக்கலாமே