FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on May 27, 2018, 11:44:07 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: MysteRy on May 27, 2018, 11:44:07 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 186
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/186.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: AshiNi on May 27, 2018, 12:24:49 PM
பூமி அன்னை கருவில் பிறந்த
  மானிட பிறப்புக்களின் மேன்மை,
புனித பிராணனும் வரமான உணர்வுகளுமே!

பிறப்பின் அர்த்தம் புரியா
  மூட சமூகத்தின் மேன்மை,
காகிதமான போதை பணம் மட்டுமே!

உதிக்கும் பிஞ்சு நெஞ்சத்தில்
  ஒருபோதும் கறையில்லை...
செல்வ ஆசை கொண்ட சமுதாயம்
  களங்கமில்லா இள நிலவின் மீதும்
நஞ்சாய் பொழியச் செய்கிறது பணமோகம்!

பணக்கடலில் குளிக்கும் அறியாமை,
  பால்மணம் மாறா சிசுவின் கரங்களில்
தொழில்நுட்பம் தந்து வேடிக்கை காண்கிறது...

பள்ளிமணம் தீண்ட வேண்டிய பருவத்திடம்
  பசியின் வாட்டமும் வறுமையின் கோரமும் காட்டி
கைக்கட்டி நிற்கிறது...

பணத்திற்கு தான் சுய அறிவில்லை!!!
  ஆறறிவு கொண்ட மனிதனுக்குமா
மனிதாபிமானம் துளியுமில்லை..?

தனத்தின் மழையில் நனையும்
  தனி உள்ளம் நினைப்பின் உறுதியாய் முடியும்,
வறுமை விளையாடும் மொட்டுக்களின் வாழ்வை
அணைத்து,
  கல்வி எனும் ஈரம் தெளித்து,
வாசமிகு வண்ண மலர்களாய் மலரச்செய்ய...

அந்த மணித்துளி உணர்த்தும் அம்மலருக்கு
  பணத்திற்கும் தெரியும் மனிதத்தை நிலைநாட்டவென்று...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: thamilan on May 30, 2018, 11:46:03 PM
மனிதனைப் படைத்த இறைவன்
ஏற்ற தாழ்வுகளையும் ஏன் படைத்தான்
ஒரே விதமாக மனிதர்களை படைத்த இறைவன்
வர்க்கங்களாக ஏன் அவர்களைப் பிரித்தான் 

பணத்தில் மிதக்கும் பணக்கார வர்க்கம்
பஞ்சத்தில் அடிபடும் பாமர ஏழை வர்க்கம்
இருப்பதை வீணாய் இறைத்திடும் ஒரு வர்க்கம்
எச்சில் சோற்றுக்கே ஆளாய்ப் பறந்திடும் இன்னொரு வர்க்கம்

அன்று என் பாட்டி
நிலவை காட்டி சோறு ஊட்டினாள்
இன்றோ கணணிகளையும் தொலைபேசிகளையும்
கையில் கொடுத்து சோறு ஊட்டுகின்றோம் நாம்
குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்துவிடுவதத்திற்கு
எடுத்துக்குக் கொடுக்கும் முதல் அடி இது 
உணவு ஊட்ட ,தூங்க வைக்கவென
கணணிகளும், தொலைபேசிகளும் 

தின்பததற்கு உணவின்றி
நாய்களுக்கு போட்டியாக குப்பையை கிளறிடும்
இன்னொரு குழந்தைகள்  வர்க்கம்
பசிக்கு சோறின்றி தாகத்துக்கு தண்ணீரின்றி
வயிறு காய்ந்திடும் குழந்தைகள்
பிற்காலத்தில் வேறுபாதையில்  அவர்கள் செல்ல
எடுத்துக் கொடுக்கும் முதலடி இது

தேவையற்றவைகளை
நம் குழந்தைகள் கையில் கொடுக்கும் நாம்
தேவையறிந்து மற்ற குழந்தைகளையும் பராமரித்தால்
நாளைய தேசம் நமதாகுமே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: JeGaTisH on May 31, 2018, 12:04:15 AM
உண்ண உணவின்றி  உலகம் ஓன்று இயங்குகின்றது
உணவுக்காக உயிரைக்  கூட பறிக்கும் நிலையில்.

உற்றார் உறவினர்கள் இருந்தும் சிலர் வீதியிலே
அவர்களுக்கு உணவிட ஒரு உறவில்லாமல்.

மழையை குடித்தும் தீரவில்லை நிலத்தின் தாகம்
மனிதனுக்கென  விட்டுவைத்ததையும்   தரமறுக்கிறது  சில மானிடம்.

தான் உண்டு  மிஞ்சியதை
பிறருக்கு அளித்தால் அது தர்மம்
தான்  மட்டுமே உண்ணவேண்டுமென 
நினைத்தால் வஞ்சகம்.

உணவு இல்லாமல் குழந்தைகள் கை நீட்டியவண்ணம்
உணவு இருந்தும் அதை  உ தாசீனப்படுத்துகிறது  ஒரு மனம்

பசிப்பவர்  யாராயினும் புசிக்க சோறு இடுபவன் உழவன்
அவர் பேர் சொல்லி நீங்களும் உணவு இடுங்கள்.

இருப்பதைக்  கொண்டு  பகிர்ந்து  கொடுத்தால்
பஞ்சம் என்னும் சொல்லும் பஞ்சாகப் பறந்துவிடும் .

உணவு கிடைக்க விவசாயின் உழைப்பு அவசியம்
விவசாயி உழைக்க தண்ணீர் அவசியம்
தண்ணீர்  ஊற்றெடுக்க  மழை அவசியம்
இவை எல்லாம் மரம் எனும்  அட்சயபாத்திரமே   தருகிறது
மரத்தை நட்டு  எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: சாக்ரடீஸ் on May 31, 2018, 01:25:28 PM
ஏன் இந்த ஏற்ற தாழ்வு ...??
எதற்கு இந்த ஏற்றத் தாழ்வு ..??
எப்படி வந்தது இந்த ஏற்றத் தாழ்வு .??
யார் காரணம் ..??
பணமா ??
இல்லை
கார்ப்பிரேட்  அரசியலா ??
எது காரணம் ....

ஏழை பிஞ்சுகள்
மைதானத்தில்
பந்துகளின் பின்னால் ஓடாமல்
தெருக்களில்
உணவை தேடி ஓடுகிறார்கள்
அவர்களின்
கனவுகள் ஏக்கங்கள்
கண்ணீரிலே கரைந்துவிடுகின்றன ....
இதற்கு யார் காரணம்...??

இவ்வுலகில்  ...
பசி தீர்ந்தது
உணவு போதும் என்று
சொல்லும்  பிஞ்சுகளும் உண்டு
பசிக்காக
வழிப்போக்கனிடம் கையேந்தும்
பிஞ்சுகளும் உண்டு
இதற்கு யார் காரணம்..??
 
நிழல் படத்தில் இருக்கும்
இரண்டுமே
உலகத்தை  அறியா பிஞ்சுகள்

விதை விதைத்து
தண்ணீர் ஊற்றி
பொத்தி பொத்தி
பாதுகாத்து வளரும் செடி ஒன்று !!!

இயற்கை அன்னை
கட்டியணைத்து ....
மழை நீரை தாய் பாலாய்
உயிரூட்டி
போர்க்களத்தில் வளரும் செடி ஒன்று !!!

இந்த இரண்டு செடிகளுமே
நிழல்
கனி
நற் காற்று தரும் மரமாய் வளர
நாமே உரமாகவும்
சமூக நலன்  மண்ணாகவும்
மாற வேண்டும் !!!

இந்த
ஏற்ற தாழ்வை ஒழிப்போம்
பசி என்னும் சொல்லை
தமிழ் மொழியிலும்
  ஏழைகளின் வாழ்க்கையிலும்
இருந்து அழிக்க முயற்சி கொள்வோம் ....
பசி என்று வந்தவர்களுக்கு உணவளிப்போம் ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: SweeTie on May 31, 2018, 08:24:36 PM
ஆப்பிள் கனிகள்  கணினியாய் மாறிட 
ருசிக்கும் செல்வக் குழந்தையும் இங்கே 
பசியில் துவண்டு ஒட்டிய வயிற்றுடன்
புசிக்க உணவின்றி  தவிக்கும்
ஏழைச்  சிறுவனும்  இங்கே

என்ன உலகமடா இது!!
விண்ணைப் படைத்தவன் 
மண்ணையும் படைத்தான்
இரு கண்ணைப் படைத் தான்  வேற்றுமையின்றி
 ஏன் மனிதனில்  மட்டும்  வேற்றுமை வைத்தான் ?

ஜாதியில் பிரிவினை வைத்தான் - மனிதன்
குலத்  தொழிலிலும் தாழ்மையை வைத்தான்
செய்யாத  பாவத்தின் கணக்கை 
ஊழ்வினை  என்றும்  கூறிவைத்தான

மண்ணில் பிறந்த குழந்தைகள் யாரும்
ஒற்றுமை வேற்றுமை அறிவதில்லை
பாழாய்ப்போன  மனிதர்கள் எனோ
பாம்பாய்  விஷத்தை  ஊட்டுகிறார்

ஒட்டி உலர்ந்த  வயிற்றை    கொஞ்சம்
தட்டி நிமிர்த்த உதவுங்கள் ஜயா !!
செல்வத்தில் பிறந்த   செருக்கில்  ஏழை 
கண்ணீரை  துடைக்க மறவாதீர்

மாற்றங்கள்  ஒருநாள்  தோன்றும்
வேற்றுமை அறவே  அழிந்து போகும்
ஏழையின் உழைப்பின்   கை ஓங்கும்
ஆப்பிள் கணினியும்  ஒருநாள் கை  மாறும்


 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: joker on May 31, 2018, 09:31:14 PM
என் தாய் உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
வாயில் ஊட்டுகையில்
தேவர்கள்  கடைந்த அமிர்தமும்
இது தானோ என தோன்றிடுமே !

அது பழைய சோறு என்றாயினும்
என்றும் நீங்காமல் என் நினைவில்
நிலைத்திருக்கும் அந்த புது சுவை

இன்று

சாப்பிடும் பொருளின் பெயரெல்லாம் வளர்ச்சி கண்டு
சாப்ட்வேர் ஆக மாறியதால்
மனிதன் அதன்  சுவை மறந்து  ஜடமானானோ ?

ஆப்பிள் ஐபேடில் பாட்டு கேட்பவனுக்கு
பசியால்ஏழை படும் பாட்டு கேட்கத்தான் செய்யுமோ?

ருசியாய் சாப்பிட நுனிவிரலில் தடவி
உணவை இருக்கும் இடத்திற்கு வரவைக்கும்
சமூகத்தில் தான்
ஒரு வேளை உண்ணவும் தெரு தெருவாய்
அலையும் கூட்டம் சுற்றி கொண்டிருக்கிறது

உயர்தர தொலைபேசியும் கணினியும்
உங்கள் குழந்தைகளுக்கு,
அவர்கள் மகிழ்ச்சியாய் விளையாட
வாங்கி கொடுக்கும் நீங்கள்
சொல்லிகொடுங்கள்

ஒரு வேளை உணவேணும்
இல்லாதவனுக்கு கொடுத்தால்
அவன் அடையும் மகிழ்ச்சியை உணர

உணவகத்தில் நீ உண்ட உணவு
மிச்சமானால் தயவு செய்து அதை
பொதிந்து வெளியில் பசித்தவனுக்கு
கொடுங்கள்
அவனுக்கு நாய்களுடன் சேர்ந்து
குப்பைத்தொட்டியை தேடும் நேரமேனும்
மிச்சமாகும்

மாதத்தில்
ஒரு நாளேனும்
ஒருவருக்கேனும்
ஒரு வேளையேனும்
ஒரு உணவு வாங்கி கொடுங்கள்
பசித்தவனுக்கு
அவன் வாழ்நாளில்
கண் கண்ட தெய்வமாய்
நீ மாறுவாய்...


 ****ஜோக்கர் ****



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: NiYa on May 31, 2018, 09:43:29 PM
கருவறை தொடக்கம் கல்லறை வரை
நீண்டு கொண்டே போகிறது எமது பசிகள்
எல்லாருக்கும் எதோ ஒரு தேடல்
எதோ ஒருவித பசி

சிலருக்கு பணத்தின் மீது பசி
இன்னும் சிலருக்கு பதவியில் பசி
மற்றும் சிலருக்கு படத்தில் பசி
ஆனால் பலருக்கோ வயிற்று  பசி

கால் வயிறு நிரம்பாத என்று
எங்கும் குழந்தை  ஒரு புறம்
IPAD திரையில் கண்விழிக்கும்
குழந்தை இன்னும் ஒரு புறம்

எல்லாம் நாம் வகுத்த
ஏற்ற தாழ்வுகள் தான்
அறிவியல் வளர்ச்சியால் எம் மூளை
 போட்டுக்கொண்ட வரையறைகள்

செல்வந்தனுக்கு இன்னும்
செல்வத்தின் மீது ஆசை
ஏழைக்கோ இன்றாவது
என் வயிறு நிரம்பாத என்ற ஆவல்
இதுதான் இன்றைய எம்
சமுதாயத்தின் நிலை

நம்வாழ்வது சிலநாட்களே
என்பது நம்மில் பலருக்கு தெரிந்தும்
பணபசியால் அன்றாடம் உணவுக்கு
உழைக்கும் மக்களை சுரண்டுவது நியாயமா ?

உங்கள் சந்ததிக்கு சேர்க்கும்  பசியை
கற்றுக்  கொடுக்கலாமல் மற்றவருக்கு கொடுக்கும்
பசியை  கற்றுக்  கொடுங்கள்
இனி வரும் சமுதாயத்தில் ஆவது
வறுமை மறையட்டும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 186
Post by: பவித்ரா on May 31, 2018, 11:24:30 PM

மனது மகிழ்வுறும்போது அடைத்த
சொத்தைப்பல் தெரிய சிரிக்கும் மனிதா ,
சோகத்தின் பிடியில் சிக்கினால்
கடவுளை நிந்திப்பதேன்... ?

உணவகத்தில் உன்கையில்
சுவைஇல்லையெனில் முதலாளியை பழிப்பதும்
பிடித்தமாயின் பரிமாறினவனுக்கு பரிசளித்து
கடைசில் சமைத்தவனை மறக்கிறோம் ....

இயற்கையின் படைப்பில் அதிசயங்கள்
ஆயிரம் படைத்தான் இறைவன்
பானை செய்ய தெரியா குயவன்
கோனை செய்து நாசமாகி நாளாயிற்று ...

இறைவனை நிந்திப்பானே
அவன் தான் நல்லவர்களாகிய
உங்களை படைத்திருக்கிறானே
நீட்டுங்கள் உதவிக்கரம் ...

சொத்தெழுதி வைக்கவேண்டாம்
நீ உண்ண கொதிக்கும் உலையில்
இன்னொருவனுக்கும் சேர்த்து சமை
எச்சிலிலை ஏந்தாமல்
பசித்தவன் புசிக்கட்டுமே ....

கொடுத்துப்பார் கொடுப்பதில் வரும்
மனநிறைவு வேறுஎதிலும் வராது
வயிற்றுப்பசி தீர்த்து  அறிவுப்பசிக்கு
வழிவகுத்து தோள் தூக்கி விடு .... 

கற்றெழுந்தால் கண்டிப்பாக
பிறருக்கும் அவன் தோள் கொடுப்பான்
கை கணினி என்ன உன்னை தாண்டி
விண்ணை தாண்ட எத்தனிப்பான் ...

எதை எதையோ மாற்ற துடிக்கும் மானிடமே !
நீ நினைத்தால் இல்லாமை இல்லாமல் போகுமே!
இறைவன் எழுதியதை மாற்றியமைக்கும்
வல்லமை உன்னிடமே உண்டு .....