FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 12, 2018, 05:56:50 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 204
Post by: Forum on November 12, 2018, 05:56:50 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 204
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/204.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 204
Post by: Guest 2k on November 13, 2018, 12:26:02 AM


ஓக் மரத்தடியில் உறங்கும் கறுப்பு நிறக்
குழந்தைக்கு நெடுங்கனவு ஒன்று வந்தது
அடிப்படைவாதிகளும், இனவாதிகளும்,
முதலாளித்துவவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும்,
ஏகாதிபத்தியமும், அடிமைவாழ்வும்,
முகத்தில் அறையும் யதார்த்தங்கள் நிறைந்த,
மனிதர்கள் உலகமது.
பாகுபாடு நிறைந்த
அம்மனிதர்கள் உலகில்
பகிர்ந்துண்ணல் என்றெதுவுமில்லை
சமத்துவமின்மை நிறைந்த
அம்மனிதர்கள் உலகில்
ஒர் இனத்திற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் உண்டு
இனவெறி நிறைந்த
அம்மனிதர்கள் உலகில்
கறுப்பு நிறத்திற்கு மட்டுமே அடிமைப் பூட்டு
சக மனித உணர்வற்ற, சகோதரத்துவமற்ற,
மாய யதார்த்தவாதம் நிறைந்த
அம்மனிதர்கள் உலகில்
என்றும்
வெளுப்பின் தலைமையின் கீழ்
ஒடுங்கி வாழும் நிறம் கறுப்பு

ஓக் மரத்தடியில் உறங்கும் கறுப்பு நிறக்
குழந்தைக்கு நெடுங்கனவு ஒன்று வந்தது
வண்ணத்துப்பூச்சிகளும், பனி பொம்மைகளும்,
தேன்சிட்டுகளும், பஞ்சு மேகங்களும்,
விண்மீண்கள் மிதக்கும் எல்லையற்ற வானமும்,
வண்ண மீன்கள் உலவும் பவளக் கடலும்,
ஊஞ்சலாடும் தேவதைகளுமாக
கற்பனைகள்
நிறைந்த, குழந்தைகள் உலகமது.
பொன் வண்டு பகிரும்
அக்குழந்தைகள் உலகில்
பாகுபாடு என்று எதுவுமில்லை
கட்டுப்பாடுகளற்ற
அக்குழந்தைகள் உலகில்
சமத்துவமின்மை என்று எதுமில்லை
மூடநம்பிக்கைகளற்ற
அக்குழந்தைகள் உலகில்
இனவெறி என்று எதுவுமில்லை
கைக்கோர்த்து ஒவ்வொரு கணமும்
ஒரு புது மாயாஜாலம் நிகழ்த்தி மகிழும் அக்குழந்தைகள் உலகில்
கறுப்பென்றும் வெளுப்பென்றும் ஏதுமில்லை

ஓக் மரத்தடியில் உறக்கம் கலைந்து விழித்த கறுப்பு
நிறக் குழந்தை
யதார்த்தமும் மாய யதார்த்தமும் நிறைந்த நிஜ உலகில் நின்றிருந்தது
பேதங்கள் நிறைந்த
அந்த நிஜ உலகின் ஒருபுறம்
எல்லோருக்கும் வாய்ப்புண்டு
மறுபுறம் அடிமைக்கு வாழ்வென்று
எதுவுமில்லை
சார்புகளும் சார்பற்றவைகளும் நிறைந்த
அந்த நிஜ உலகில்
பொதுவுடமையுமுண்டு
பழமைவாதமமுண்டு
ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த
அந்த நிஜ உலகில்
தள்ளிவிடும் கைகளும் உண்டு தாங்கி நிற்கும் தோள்களும் உண்டு
நியாயத் தராசை கைகளில் ஏந்தி நிற்கும் தேவதை முன்
ஒழுங்கின்மைகள் உயர்த்திப் பிடிக்கவும்படும்
அதே ஒழுங்கின்மைகள் குறித்து
கேள்வி கேட்டவும்படும்
சமூக அவலங்களை சகித்து
சகோதரத்துவம் வேண்டி
நிராயுதபாணியாக நிற்கும்
அக் கறுப்பு நிறக் குழந்தைக்கு
அந்த நிஜ உலகில்
அன்பு மட்டுமே பேராயுதம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 204
Post by: Evil on November 13, 2018, 03:51:48 PM


மண்ணிலே விளையாடும்
மழலை செல்வங்கள்  நாங்கள் !!!

அனைவரையும் கவர்ந்திடும்
 அன்பு குழந்தைகள்  நாங்கள் !!!

எம் தாய் தந்தைக்கு
செல்ல  பிள்ளைகள் நாங்கள் !!!

மண்ணை உண்ணும்
மண்ணின் மைந்தர்கள்  நாங்கள் !!!

 வஞ்சகமே இல்லா 
நெஞ்சம்கொண்டவர்கள் நாங்கள் !!!

கள்ளமில்லா உள்ளம் கொண்ட
கடவுளின் வரப்பிரசாதம்  நாங்கள் !!!

கண்களில் காதல் என்ற
அன்பு வெள்ளம் பொங்கிடும் கண்ணன் நாங்கள் !!!

தீமைகள் எங்களை தீண்டாமல் காத்திடும்
தாய் தந்தைக்கு தவப் புதல்வர்கள் நாங்கள் !!!

மணலில் விளையாடினாலும்
மாசில்லா மாணிக்கங்கங்கள் நாங்கள் !!!

கற்பனையில் காலத்தை வென்றிடும்
 கணிப்பொறிகள் நாங்கள் !!!

மாளிகை கோட்டை  கட்டிடும்
 மன்னர்கள் நாங்கள் !!!

கனவிலே காவியம் எழுந்திடும்
கவி புலவர்கள் நாங்கள் !!!

புழுதி தமிழ் புரண்டிடும்
இந்த பூவுலகின் புதல்வர்கள் நாங்கள் !!!

அனைவரும்  ஆனந்தமாய் அன்போடு அள்ளி
அரவணைத்திடும்  குழந்தைகளே நாங்கள் !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 204
Post by: regime on November 14, 2018, 01:55:45 PM
 

இக் குழந்தைகள்


தண்ணீர் வற்றிப்போன ஆறுகளைப் போல் இதன் கண்களும் சிந்த கண்ணீர்

இல்லாமல் வறண்டு போயின...!


பட்டாசு வெடிச்சத்தங்களாகின என் அழுகுரல்  மத்தாப்பு ஒளிச்சிதறல் மரிந்து போன

புன்னகை தீப்பெட்டிக்குள் அடுக்கப்பட்டிருக்கும்தீக்குச்சிகள் போல்தான் நாங்கள்...!   
 

பள்ளிகளை கடக்கும் போது படிக்க ஆசை வரவில்லை என் அற்ப ஆசையெல்லாம்

பள்ளிக்கூட ஆசை இழந்தோம்..!
 

கள்ளமும் கவலையுமில்லா அந்த புன்னகையை என் உதடும் சிந்திவிட

கற்பனையில் வளந்தோம்..!


கற்பனை கோட்டையை நெஞ்சினில் சுமந்து கொண்டு கலைந்து சென்ற

கனவுகளையும என் எதிர்காலத்தையும் தேடி அழைகின்றோம்..!
 

யார் நான் என்ற அடையாளமில்லாமல் தொடர்கிறது எந்தன் பயணம்

முடிவற்ற  வாழ்கையா அழைகின்றோம்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 204
Post by: thamilan on November 14, 2018, 10:26:38 PM
இது வேறு உலகம்
குழந்தைகளின் தனி உலகம்
குதூகலமிக்கதொரு குழந்தைகள் உலகம்

இங்கே ஜாதி பேதமில்லை
கருப்பு வெள்ளையென நிற வெறியில்லை
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளில்லை
இந்து முஸ்லீம் கிறிஸ்தவன் என்ற மதவெறியில்லை

ஒரு மாங்காயை
ஒன்பது பேர் சாப்பிடுவோம்
ஒரு குச்சி ஐஸ்கிரீமை
ஒவ்வொருவரும் சுவைத்திடுவோம்
எச்சில் கூட இனிக்கும்
எங்கள் இனிய உலகிலே

கோபம் வந்தால்
குடுமிப்பிடி சண்டையிடுவோம்
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிக்  குலாவிடுவோம்
புழுதி வாரி இறைத்திடுவோம்
சேற்றிலும் புரண்டிடுவோம்
சில்மிஷங்களும்  செய்திடுவோம்

எங்கள் நட்பு என்ற உலகத்திலே
நாங்கள் அன்னையின் பேச்சையும் கேட்பதில்லை
ஆசிரியர் பேச்சையும் கேட்பதில்லை
நண்பனுடன் பேசாதே என்றாலும்
பழகாதே என்றாலும்
யார் பேச்சையும் கேட்பதில்லை நாங்கள்

பெரியவர்களே
சிறுவர்கள் எங்களை
சிறுவர்களாகவே இருக்க விடுங்கள்
உங்கள் மனவக்கிரகங்களை 
எங்கள் மேல்  திணிக்காதீர்கள்
உங்கள் கோபதாபங்களை
எங்கள் மனதிலும் விதைக்காதீர்கள் 
நாங்கள் சிறுவர்கள்
சிறுவர்களாகவே இருந்து விட்டுப் போகிறோம் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 204
Post by: JeSiNa on November 15, 2018, 03:36:39 PM
சிவப்பு வண்ண விளையாட்டு
காரில் சேர்ந்து விளையாட
மனம் இல்லையே...!
தூய்மை படுத்த
ஏழை சிறுவர்களா ?

சிறுபிள்ளை மனதில்
தாழ்வு மனப்பான்மையை
விதை போட்டு வளர்க்கும்
பணக்கார பெற்றோர்களே...!!

பண திமிரால்
மனிதனை மதிக்காத
தலை கணத்தோடு...!!
அழிந்து விடுவீர்களே
கொண்டு செல்வது என்னவோ ....?

சீர்கெடுக்கும் இந்நாட்டில்
சீரழிந்து போய்விடும்
உம்பிள்ளைகள்...!!
சிறு வயந்தினிலே நல்ல
சிந்தனைகளை புகட்டுங்கள்...!!

பிஞ்சு மனதில்
நஞ்சை விதைக்காமல் ...!!
அனைவரும் சமம் என்ற
தன்மையது வளருங்கள்...!!

தாழ்வு மனப்பான்மை
எண்ணங்களை குழி தோண்டி
புதையுங்கள் ...!!
நாளைய சமுதாயம்
ஒற்றுமை காணட்டும்...!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 204
Post by: SweeTie on November 18, 2018, 11:21:25 AM
வஞ்சகம் இல்லாப்  பிஞ்சுகள் உலகில்
கொஞ்சமும் இல்லை வேற்றுமைகள்
தன்னலம் பேணும் தரணியிலே  இவர்கள்
இன்னல்கள் இன்றி வாழட்டும்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அதைவிட  எதுவும் தெரியாது
பின்வரும் காலம்  எத்தனை கொடுமை
என்பது  எதுவும்  அறியார்கள்

கொடுப்பதை உண்டு களித்திடும் பருவம்
வரவும் செலவும்  தெரியாது
கிடைப்பதைக்  கொண்டு திளைப்பார்கள் 
வாழ்க்கையின் ரகசியம் புரியாது

நாளைய உலகின் நாயகர்கள் 
நலமுடன் வாழ வழி வகுப்போம்
நல்லவை தீயவை  அறிந்திடவே
நம்மாலான  பணி செய்வோம்

கழுகுகள்  வாழும் இக்கலியுகத்தில்
குழந்தைகள் இவர்களைக் காத்திடுவோம் 
நாளைய  சமூகம்  தழைத்தோங்க
நலமுடன் தமிழையும்  வளர்த்திடுவோம்