FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on March 20, 2019, 05:27:19 PM

Title: அவன்
Post by: இளஞ்செழியன் on March 20, 2019, 05:27:19 PM
தென்படும் தொலைவு வரை
கடந்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமாதலால் -அவனுக்கு நிலையானதொரு இடமில்லை...

பல்வேறுபட்ட உணர்வுகளிலிருந்து தன்னை பிரித்தெடுத்து பிறர் தொந்தரவாய் உணராதிருக்க - அவன் தனக்கென்று ஒதுக்கிக் கொண்ட சிறையே தனிமை...

மரங்களுக்கு ஏற்றவாரு
தன் நிறங்களை மாற்றியமைத்து வாழும் பச்சோந்தி போலவே மனிதர்களுக்கு ஏற்றவாறு தன் குணங்களையும் மாற்றியமைத்துக் கொள்கிறான்...

நேரம் தவறி கண்ணில் படும் நாகரிகமற்ற மனிதர்களின் கைகளில் சிக்கி ஓணானாய் அடிபட்டு வதைபட்ட காலங்களும் -அவன் சுயசரிதையில் இடம் பெற வாய்ப்புகள் அதிகம்...

உண்டி கிடைக்குமிடத்தில்
உறங்கிக் களிப்புற்று
திருப்பித் தரவியலா நன்றிக்கடனோடு நிதானமாய் நகர்கிறான், கூடில்லா நத்தையாய்...

புல்லில் படியும் பனித்துளியையும் கூட, சுண்டி விட்டு ரசித்தபடியே
சீரும் சிறப்புமாய் அவன் வாழ்ந்ததாய் எண்ணி வருத்தமின்றியே கழித்துக் கொண்டிருக்கிறான் வாழ்க்கையை...

பாஷை முதல் பழக்கவழக்கம் வரை பலதரப்பட்ட நாகரிகங்களைக் கடந்து வந்தமையால் பொதுவானதை மட்டும் பிரித்தெடுத்துத் தனி நாகரிகமொன்றை வடிவமைத்துக் கொண்டான்...

உடலுழைப்பை வெறுக்காத அவன், தற்காலிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி சம்பாத்தியம் என்பதை அனுபவிக்காமல், சோம்பல் முறிக்க புது வகை யுக்தியாய் பயன்படுத்துகிறான்...

பலரும் இவனைப் போல் இருப்பினும், அவர்களுக்குக் கூடவே வரும் ஒரு உறவு கூட, இவனுக்கு உணர்த்திச் செல்லவில்லை உனக்காக நானிருப்பேனென்று...

பொன், பொருள் சேமிக்கும் சாமானியருக்கு மாறாய் அவனும் சேமித்துக் கொண்டான் மனப்பக்குவத்தையும், தைரியத்தையும் தனக்கென்றொரு சொத்தாக...

சிக்கனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத நிலையிலும், கஞ்சத்தனம் என்ற கடலில் கால் நனைக்காமலே கடந்து செல்கிறான்...

இப்படியொரு வாழ்க்கையிலும் பிரிதொரு உறவாய் அவ்வப்போது ஆறுதல் தரும் ஐந்தறிவு ஜுவன்களிடம் கூட தன் புண்களைத் திணிக்காமல், புன்னகையையே பரிசாய்த் தருகிறான்...

வாழ்க்கைத் தத்துவமாய் ஒற்றை வரியில்
"உலகின் நியதிகளை ரசிக்கப் பழகு"
என்று கூறி அதே புன்னகையுடன் நகர்ந்து செல்கிறான்...
Title: Re: அவன்
Post by: Guest 2k on March 22, 2019, 08:07:39 AM

எனக்கு

யாருமில்லை

நான்

கூட.. - நகுலன்
Title: Re: அவன்
Post by: இளஞ்செழியன் on March 22, 2019, 12:44:11 PM
நீ இல்லையென்ற நிஜம் தான்
நீ இருந்திருந்தால் என்ற கற்பனைகளுக்குக் கருவும் உருவும் -  நான்