Author Topic: என்னுள் மீண்டும் பிறக்கும் அவள் !!!!  (Read 707 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என்னுள் மீண்டும் பிறக்கும் அவள் !!!!



மனித மனதிற்கு இல்லாத அல்லது கிடைக்காத எதையோ ஒன்றை நினைத்து ஏங்குவது வழக்கமுண்டு, சில ஏக்கங்கள் நியாயமானவை சில ஏக்கங்கள் அதர்மமானவை சில ஏக்கங்கள் அபரிமிதமானவை என்று எத்தனையோ வகைகளுண்டு, தன்கைக்கு எட்டும் தூரத்தில் கிடைத்துவிடகூடிய இடத்திலிருக்கும் ஒன்றின் மீது ஏனோ மனம் வயப்படுவது குறைவு, அதே ஒன்று இனி கைக்கு எட்டாமலே இருந்து விடும் நிலைக்கு சென்றுவிடும் போது இந்த பாழும் மனது கிடந்து தவியாய் தவிக்குதே, இந்த நிலை மனிதனுக்கு துயரை மட்டுமே தரக்கூடியதாகவும் பல சமயங்களில் இவற்றை மாற்றிக்கொள்வதற்கு பிரயத்தனங்களை உபயோகித்து போராட வேண்டிய தர்மசங்கடம் ஏற்ப்படுவதை தவிர்க்க இயலாது போகிறது.

பேரழகி என்றால் அது என் தாய்தான், எத்தனை அழகு, இப்போதெல்லாம் அந்த பேரழகு தேவதைக்கு என்ன குறை இருந்தது என நான் பல முறை யோசிக்கிறேன், சுருண்டு அடர்ந்த(இந்த அடர்த்தியை நான் வேறெங்கும் பார்த்ததே கிடையாது) கூந்தலின் நீளம் பாதங்களை தொடவா என்று கேட்க்கும், பஞ்சாப் கோதுமையின் நிறம், மிதமான உயரம், அழகிய மெல்லிய விரல்கள் இப்படி அடுக்கிகொண்டே போகலாம், அழகு அதிகமிருக்கும் இடத்தில் குணமிருக்காது என்பார்கள், ஆனால் அவள் ஒரு தேவதை, அவளை வெறுத்தவர் யார் என்பது இதுவரை எனக்கு தெரிந்து இல்லை, போகட்டும், ஒரு நாளேனும் யாரையாவது வசை சொல்லாடி இருந்தாளா, இல்லவே இல்லை, அவளை யாரும் வசை சொற்களால் பேசிக்கூட கேட்டதே இல்லை.

தாய் வீட்டு சொத்துக்களை அவளுக்கு கொடுக்காத உறவினர்களைக் கூட அவள் தன் வாயால் மனத்தால் வசைபாடியது கிடையாது. அவளது தேவையெல்லாம், தினம் குளிக்க தேங்காய் எண்ணையும் நீரும், சவுக்காரமும் மட்டும்தான். சோறில்லாமல் கடும் பட்டினியில் நாட்கள் பல கடந்தாலும் பத்தினித்தாய் தன் கணவனை வசைபாடி ஒருபோதும் கேட்டதில்லை. வாயில்லா ஜீவன் என்று சொல்லுவார்களே அது இவளுக்கு மிக பொருந்தும். அவள் சௌந்தரியம் அவளுக்கு பல வேதனைகளை கொடுக்கத் தவறவில்லை, நாட்டியத்தில் வாய்பாட்டில் என்று கலைகள் அத்தனையும் அவள் கைக்குள் அடக்கம், மாமனார் மாமியாரின் முழு அன்புக்கு மட்டுமில்லை மனிதர்களின் ஒட்டுமொத்த அன்பையும் தனக்கே சொந்தமாக்கிக் கொண்டவள்,

தமிழை அவள் தன் பாலோடு கலந்து எனக்கு அமுதூட்டியவள், என் ஒவ்வொரு அசைவிலும் பூரிப்படைந்தவள், வேலைக்காரியைப்போல் வாழ தன் தகுதியை எனக்காக இழக்கத்தயாராக வாழ்ந்தவள், எழுதி தீர்க்கவியலாத பள்ளிக்கூடப் பாடங்களை எழுதி, படிக்க உதவியவள். மென்மையே உருவாகக் கொண்டவள், மாடு போல் உழைப்பதில் அவளையொத்த ஒருத்தியை என் குடும்பம் இதுவரை காணவில்லை, பக்குவமாய் நேர்த்தியாய் சமைத்து மாமியாரின் கைபாகம் கற்றவள், மாமியார் இறந்த செய்தி கேட்டு மயக்கமுற்று விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாமியாரின் உயிரற்ற உடலை காண சகியாத அன்புள்ளம் கொண்டவள்,பெண்ணென்றால் இவளைப்போலல்லவா இருத்தல் வேண்டும் என்று அதிசயிக்கத்தக்க அற்ப்புதம் அவள்.

பேத்திகள் கூட 'என் பாட்டியைப் போல் யாரிருக்க முடியும்' என்று போற்றும் விந்தைக்காரியவள். பத்துமாதம் சுமந்துப் பெற்ற மகவு எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் கல்லறைக்குள் போனதாலே மனம் நிலைகுலைய துடித்தவள், காலம் கடந்த பின் இனியொரு குழந்தையா என்று வேதனையில் தவிர்த்தவள், இந்த மங்கைக்கு வயது முப்பதேதான், அத்துடன் ஒருநாள் அதிகமாய் இவள் பூமியிலே வாழ்ந்தாலும் இனி நான் ஜாதகம் பார்ப்பதை விட்டுவிடுவேன் என்று மலையாள ஜோதிடம் கணித்த காலக்கெடுவை மனதில் வைத்து, இனியொரு குழந்தை வேண்டாம், அப்படியே பிறந்தாலும் அதன் ஐந்து வயதுவரையில் கூட நான் வாழ இயலாதே என்று அசுயை கொண்டாளாம்.

நண்பர்கள் கூட்டமொன்று வருடம் தவறாமல் நாகைப்பட்டினத்தில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று வருவதுண்டாம், அந்த கூட்டத்திலிருந்த என் தந்தையின் நண்பர் ஒருவர் இவ்வருடம் எங்கள் குழுவுடன் வேளாங்கண்ணிக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க என் அப்பாவும் அம்மாவும் என் அப்பாவின் அண்ணனும் அந்தக் குழுவுடன் வேளாங்கண்ணிக்கு பயணம் சென்றனர், என் அம்மா ஐதீக ஹிந்து குடும்பத்தைச் சார்ந்தவர், மனம் மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர், பொதுவாக நாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவப்பிரிவில், இயேசுவின் அன்னையாகிய மேரியை தெய்வமாக வழிபடுவது கூடாது என்பதால் வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவோ விரும்பவோ மாட்டார்கள். அதனால் பக்தியாக அல்லாமல் சுற்றுலாவாக போகலாம் என்று முடிவு செய்தனர்.

அப்போதெல்லாம் நாகை வேளாங்கண்ணி ஆலயம் என்பது தற்போது இருக்கும் பொலிவில் இல்லை, மிகவும் சிறிய ஒற்றை அறையில் ஒரு சிலுவை மட்டுமிருந்ததாக சொன்னார்கள், நாகைப்பட்டினம் ரயில்நிலயத்திலிருந்து அங்கு செல்வதற்கு பேருந்துகளோ வேறு வாகன வசதிகளோ கிடையாது என்பதால் ரயிலை விட்டிறங்கி அங்கிருந்து நடந்துதான் செல்வார்களாம். அப்படி இந்த கூட்டம் சென்று கொண்டிருந்தபோது சூரியன் அஸ்த்தமித்துவிட்டதால், போதிய வெளிச்சமின்றி ஏற்க்கனவே பல முறை அங்கு சென்றவர்களுடன் இணைந்து கடற்க்கரையோரமாக இருட்டில் நடந்து சென்றனராம், கடலின் அலைகள் மட்டும் இருட்டில் லேசான வெள்ளை நிறத்தில் தெரிந்தபோது புதிதாக போனவர்கள் மிகவும் பயந்தனராம்,

கடற்கரையோர மணலில் ஆங்காங்கே சில கட்டுமரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன, கோவிலின் விளக்கு வெளிச்சம் கண்ணுக்குத் தென்படாததால் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தனர், அப்போது இருட்டில் ஒரு உருவம் வெள்ளை சீலை உடுத்தி பெண் குரலில் 'கோவிலுக்குத்தானே போறீங்க, ஒண்ணும் பயப்படாதீங்க, இன்னும் கொஞ்சம் நடந்தா கோவிலின் விளக்கு வெளிச்சம் தெரியும், அப்படியே நேராகவே போங்க' என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டும் நேரத்திற்குள் உடனே மாயமாய் மறைஞ்சு போச்சுதாம். அப்போதைக்கு யாரும் அந்த உருவத்தைப்பற்றியோ திடீரென்று கண்ணுக்குத் தெரிந்து விட்டு திடீரென்று மறைந்ததைப் பற்றி சிந்திக்கவே இல்லை, தொடர்ந்து நடந்து கொண்டே சென்ற பின் கோவிலில் இருந்த விளக்கு வெளிச்சத்தை சற்று தூரத்தில் பார்த்தப் பின்னர்தான் பெண்ணொருவர் திடீரென்று கூட்டத்தின் முன் தோன்றி மறைந்த அதிசயத்தைப் பற்றி நினைவு வந்ததாம்.

அதேப் போன்று பலருடைய தேவைகளுக்கும் பெண்ணொருவர் திடீரென்று தோன்றி உதவி செய்ததாக பின்னர் செய்தி அறிந்துகொண்டனர். பெண்ணுருவில் வந்து உதவியவரை அந்த கோவிலில் இருக்கும் மாதா என்று நம்புகின்றனர். அடுத்தநாள் அந்த கோவிலில் தனக்கொரு குழந்தை வேண்டும் என்றும் ஜாதகத்தில் ஜோதிடர் குறித்ததுபோல முப்பதாவது வயதில் இறந்து போய் குழந்தை அனாதையாக்கப்படக் கூடாது' என்று என் அம்மா வேண்டிக் கொண்டதாகவும் வேண்டிக்கொண்ட அடுத்த ஆண்டு நான் பிறந்து என்னை நாற்ப்பத்தி இரண்டு வயதுவரை பாதுகாத்தார் அந்த தேவதை என்கிற அழகி. தாய் தந்தை என்பவர்களை நம்மால் தேர்ந்தெடுக்க முடிவதில்லை, கடவுள் மனிதர்களுக்கு பூமியில் கொடுக்கும் பல ஆசீர்வாதங்களில் முதன்மையானது பெற்றோர்தான். கண்கண்ட தெய்வம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அழகி என்னை விட்டு பிரிந்த பின்னரே அவளது தீராத நினைவலைகள் என்னுள் எழுப்பும் அற்ப்புதம் அவளை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறது.
                    

Offline RemO

கண்கண்ட தெய்வம் என்று சொன்னால் அது மிகையாகாது