Author Topic: சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்  (Read 1034 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்



தமிழர் வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் செய்திகள் பல உண்டு.  தமிழ் ஆளுமைகளின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன.  ஆயினும், சிலர் இந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மைந்தர் மன்னர் மன்னன் புரட்சிக் கவிஞரின் நினைவுகளை இடைவிடாது பதிவுசெய்து வருகிறார்.  அதில் பல நமது உண்மை இதழிலும் வெளி-வந்துள்ளது. இப்படி எழுதிய நினைவுகளைத் தொகுத்து விழிகள் பதிப்பகம் இந்நூலைத் தந்துள்ளது.  அந்நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே....
 
வெற்றிக் கனிகள்
 
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதாக வையத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்லும் பெரும் பொறுப்பினை ஏற்று, தமிழ்க் கவிதைப் பணி ஆற்றிவந்த புரட்சிக்கவிஞர் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலே இந்தக் கருத்துகளின் கூறுகள் எங்கும் காணப்படும்.
 
பாரதிதாசனார் என்ன எழுதினாரோ அதன்படி நடக்கிறாரா என்று கூர்ந்து நோக்கும் கண்கள் ஓராயிரம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்ததுதான்!  அவர் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும், எதிர்த்தவர்களும் அவரை வேட்டை நாய்கள் போல் கவனித்து வந்தார்கள்.
 
இதனைப்பற்றித் துளிக் கவலையும் பாரதிதாசனாருக்கு இருந்ததில்லை. இழிவு ஒன்று காணில் அதன் சல்லிவேரையும் கூடக் கல்லி எறிவதில் ஏற்படும் இன்னல் எதுவாயினும் ஏற்பதும், இன்னுயிர் போவதானாலும், தாம் கொண்ட கொள்கையில் இம்மிபிறழாமல் வாழ்வதும் அவருள் ஊறிப்போன பழக்கம்! மாணவப்பருவம் தொடங்கி, தம் மூச்சு முடியும்வரையில் இதையே புரட்சிக்கவிஞர் நிலைநாட்டிக் கொண்டிருந்தார்.
 
புரட்சிக்கவிஞர் தமிழாசிரியராய் வேலை-பார்த்தகாலை, புதுவை, பிரஞ்சிந்தியா என்ற தனியாட்சியில் இருந்ததல்லவா! அக்காலத்தில் தமிழ்ப் பாடநூல் புதுவைக்கென எதுவும் இல்லை. அன்றைய மதறாஸ் கவர்மெண்டார் எதைப் பாட நூலாகத் தந்தார்களோ அதுதான் புதுவைப் பள்ளியிலும் பயிற்றப்படும்.
 
பாலசிட்சை, பாட நூலாக வைத்ததைக் கண்டித்த ஒரே குரல் பாரதிதாசனின் குரல்தான்!  அதற்குக் காரணம் பாரதிதாசனுக்கு இருந்த பயிற்றுமுறைப் பழக்கம்!  தொடக்க நிலையில் உள்ள பிஞ்சுக் குழந்தைகட்கு அ என்ற எழுத்தைக் கற்றுக் கொடுக்க அணில் படம் போட்டு அ குறித்திருக்கும்.  அ பயிலப்போகும் குழந்தை எழுதுவதற்கு அரிதான ணி யை இரண்டாவது எழுத்தாகக் கொண்ட அணில் சொல்லைவிட, தனக்கு மிகப் பழக்கப்பட்ட ஒரே சொல்லான அம்மா என்ற சொல்லை மிக எளிதிற் புரிந்து கொண்டுவிட முடியும் என்பது புரட்சிக் கவிஞரின் கருத்து.
 
என்னவோ நாம் வேலை பார்க்கும் அரசு ஏற்றுக்கொண்டது.  நமக்கு இதில் என்ன கவலை.  போட்டிருப்பதைச் சொல்லிக்கொடுப்போம் என்ற குள்ள மனப்பான்மையோடு பல்லாயிரம் தமிழாசிரியர்கள் பணிந்துவிட்டபோது, தமது கருத்தை விடாது வலியுறுத்தி வந்தார் பாரதிதாசனார்.  மற்றவர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.  பிரஞ்சிந்திய அரசுக்கோ தமிழ் படிக்கும் குழந்தை-களைப்பற்றிக் கவலையில்லை; பாரதிதாசனும் விடவில்லை. தமக்கு ஒதுக்கப்-பட்டிருந்த முதல் வகுப்புப் பிள்ளைகட்கென தாமே பாடநூல் தம் கையினால் எழுதி, தாமே அதற்குரிய வண்ணப்படங்களும் வரைந்து பயிற்றுவித்தார்.  கரும்பலகையில் சுண்ணாம்புக் கட்டியினால் அழகுறப் படங்களை வரைந்து தாம் வகுத்த பாடங்-களைப் பயிற்றுவித்தார்.  உடன் பணியாற்றிய ஆசிரியர் மனத்திலே, பாரதிதாசன் ஒரு வீணன் என்ற படமே தோன்றியது.
 
பாடத்திட்டத்தில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வேண்டும் என்று கூறி வந்தார் பாரதிதாசன். வ என்ற எழுத்துக்கு வண்ணான் என்றும் அய் என்ற எழுத்துக்கு அய்யர் என்ற படமும் போட்டிருந்தது கவிஞருக்கு எரிச்சல் ஊட்டியது. இளம் பிஞ்சுகளின் உள்ளத்திலே ஜாதி வேறுபாடு என்ற நச்சினைப் புகுத்துவதாயிற்றே! குமுறினார் பாரதிதாசனார்.  அதற்கேற்றபடி தாம் எழுதிய பாடநூலில் சொற்களையும் படத்தையும் மாற்றியமைத்துப் பயிற்று-வித்தார்.
 
தொடக்க நிலை வகுப்பில் மட்டுந்தானா?  எழுச்சி கொண்ட அந்த உள்ளம் எங்கெங்-கெல்லாமோ தன் பணியை ஆற்றி வந்தது.
 
முதற் பாடப் புத்தகம்; தமிழாசிரியர் பயிற்சியைத் தொடங்கிடப் புத்தகத்தைப் பிரிக்கிறார்; முதல் பக்கம். இவர் நமது ராஜா, இவர் இங்கிலாந்தின் சக்ரவர்த்தி, இவர் பெயர்.... என்ற பாடமும், இங்கிலாந்து நாட்டுப் பேரரசரின் உருவப் படமும் பொறித்திருக்கின்றார்கள்.
 
மீசை படபடக்கிறது. நரம்பு முறுக்கேறு-கிறது.  மடையனுங்க என்று அரிமாக்குரல் எழுப்புகிறார். எதிரில் உள்ள சிறுவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். தாம் குற்றம் புரிந்துவிட்டோமோ என்ற அய்யத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.  பாரதிதாசன், பாடநூலை மூடிவைத்துவிட்டுக் கரும்பலகையில் ஒரு நாயின் படத்தை எழுதிவிட்டு தம் இருக்கையில் அமர்கிறார்.  வகுப்பு நேரத்தில் இந்த இடத்தில் மட்டும் ஓசை கேட்கவில்லையே என்று பக்கத்து வகுப்பாசிரியர் வருகிறார்.
 
கரும்பலகையில் நாயின் ஓவியம்; ஆசிரியர் எதையோ எழுதியபடி இருக்கையில், சிறுவர்கள் மட்டும், தலைமையாசிரியரின் வருகை கண்டு எழுந்து நிற்கிறார்கள்.  பாரதிதாசன் சிறிதும் கவலைப்படாமல் எழுகிறார்.
 
தலைமையாசிரியர் எப்படி, என்னவென்று கேட்பது என்றறியாது நிலை தடுமாறி நிற்கிறார்.
 
பாரதிதாசன் கூறுகிறார்: நம்ம ஊரெல்லாம் குடியரசு நாடுன்னு சொல்லிக்கிறோம். சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற கொள்கையை உலகத்துக்கே வழங்கிய பிரஞ்சுக் குடியரசில், நம்ம பிள்ளைங்க, எடுத்த எடுப்பில் படிக்கிற பாடம் என்ன தெரியுமா? இவர் நமது ராஜா, இங்கிலாந்தின் சக்ரவர்த்தி ரொம்ப நல்லாருக்குங்க/ இப்படிப்பட்ட பாடத்தைச் சின்ன பிள்ளைங்-களுக்குக் கத்துக் குடுத்தா குடியரசு நாட்டுலியும் சக்ரவர்த்தி இருப்பார்னு நினைச்சிடுவாங்களே நமது தேசம் இங்கிலாந்துன்னு பாடம் பண்ணிடுவாங்களே! என்கிறார் தமிழாசிரியர் சுப்புரத்தினம்.  அதற்காக, வரையறுக்கப்பட்ட பாடத்தைச் சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிடலாமா?  நமது கடமையாயிற்றே என்று கூறுகிறார் தலைமையாசிரியர்.
எடுத்துக்காட்ட வேண்டியதும் கடமை-தான் என்ற கருத்தைக் கூறியனுப்பு-கிறார் பாரதிதாசன்.  அதுசரி, நாயின் படத்தை எதுக்கு எழுதி வைக்கணும்? அய்யமும் வியப்பும் தலைமையாசிரியரைத் தள்ளாடச் செய்கின்றன.
 
தான் பிறந்த நாட்டுக்கு முரணான கருத்தைக் கூறுபவர்களைவிட, நாயின் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவனே சிறந்தவன் என்று கூறாமல் கூறுகிறார் கவிஞர். சில நாட்களுக்குப் பிறகு கல்வித்துறை அதிகாரியை இந்த உரையாடல் எட்டுகிறது.  அவர் திருத்தத்தை ஏற்று, தமிழாசிரியர்க்கு நன்றி கூறுகிறார். உத்தரவும் பிறக்கிறது.  பாடநூலில் வரும் இந்த அரச வணக்கப் பாடலைக் கற்பிக்க வேண்டியதில்லை என்பதாக!
 
இழிவைத் துடைப்பது - அறிவை வளர்ப்பது -  தாயகப்பற்றை, தாய்மொழிப் பற்றை, ஊட்டுவது!  இவை யாரோ சிலரின் வேலையன்று; அது ஆசிரியரின் தலையாய கடன்; அரசின் நீங்காத பொறுப்பு; கவிஞரின் முதல் வேலை! இந்தப் பொறுப்புகளைச் சரிவர நிறை-வேற்றச் செய்வதில் புரட்சிக்கவிஞர் ஈடுபட்டார்.  வெற்றி பெற்றார்.
 
சங்கராச்சாரிகள் எப்போதும்  அப்படித்தான்!
 
தெய்வத்தின் குரல் (?) அடிக்கடி தமிழினத்தையும், தமிழ் இலக்கியத்தையும் கடித்துக் குதறுவதே வழக்கமாகியிருக்கிறது.  ஆதிமுதல் இதுநாள்வரை ஒரே மாதிரியான செயல்முறைதான். நம்மவர்கள் அடிமை-களாகிக் காலில் விழுவதையும் விட்ட-பாடில்லை. தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேரோடு கல்லி எறிவதில் சங்கராச்சாரிகள் திட்டமிட்டே செயல்-படுகிறார்கள். மனித சமுதாயத்தை மானபங்கப்படுத்துவதில் அவர்கள் வல்லவர்கள்! அடுக்கடுக்காய் ஆவணங்கள் கிடைத்து வருகின்றன.  இங்கே மாதிரிக்கு சங்கராச்சாரிகளின் திருவிளையாடல்கள் சிலவற்றைக் காணலாம்.
 
ஒரு சங்கராச்சாரி 11.12.1926 இல் புதுவைக்கு வந்தார். அவரின் திவ்ய தரிசனம் காண நம் சோணகிரிகள் கூடினர்.  இதுபற்றி அக்காலத்தில் எழுதப்பட்ட ஒரு நாட்-குறிப்பைப் படித்து அறியும் எவரும் பதைத்திடாமல் இருக்க முடியாது.  பாரதியின் அன்பு நண்பரும், நாட்டுரிமைப் போரில் அஞ்சாநெஞ்சத்துடன் ஈடுபட்டவரும், துணிச்சல்மிக்கவகையில் ஓர் அச்சகம் நடத்தியவருமான ஜெகநாதர், தமது நாட்-குறிப்பில் 5.1.1927 இல் எழுதியுள்ளதாவது:
 
காஞ்சி காமகோடி பீடம் கும்பகோணம் ஜகத்குரு (83ஆவது பட்டம்) சங்கராச்சாரிய சுவாமிகள் 11.12.1926இல் புதுவை வந்து ஈஸ்வரன் கோயிலில் தங்கியிருந்து இன்று மாலை புதுவையினின்று போனார்.  நாள் ஒன்றுக்கு 950 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரையில் செலவானது.  இன்று ஈஸ்வரன் கோயில் 2 தெருவையும் அடைத்து வியாபாரிகள் சுமார் 2000 ஏழைகளுக்குச் சாப்பாடு கொடுத்-தார்கள்.  மற்ற நாட்களிலெல்லாம் 400 பிராமணர்களுக்குக் (பெண்களும்) குறையாமல் ஈஸ்வரன் கோயிலிலேயே சாப்பாடு நடந்தது.  சூத்திரர்களுக்குக் கிடையாது. சாமியார், கையினால் சூத்திரர்களுக்குத் திருநீறும் கொடுப்-பதில்லை. இதைக் கண்டித்து சில அனாமதேய கடிதங்கள் சாமியாருக்கு வந்தன.
 
இந்தக் குறிப்பை எழுதிய ஜெகநாதர் தலைசிறந்த காந்தியத் தொண்டர்.  பார்ப்பனர்-களுக்குக் கோயிலில் சாப்பாடு.  கோயிலிலேயே சங்கராச்சாரி தங்கியிருந்தார்.  டைரிக் குறிப்பின்படி 25 நாட்கள் கோயிலில் பார்ப்பனர்களுக்குச் சாப்பாடு; நாள் ஒன்றுக்குக் குறைந்தது 900 ரூபாய் செலவு; சூத்திரர்களுக்குத் தம் கையால் சங்கராச்சாரி திருநீறு தருவதில்லை. ஆனாலும், நம் ஏழைகளுக்குத் தெருவில் ஒருநாள் மட்டும் சாப்பாடு!  அந்த ஆண்டில்!  எந்த ஆண்டில்?
 
தந்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில், பார்ப்பனியம் ஜாதி நஞ்சைப் பாய்ச்சுவதைக் கண்டித்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்த காலத்தில்! சுரணை ஏறிய ஏதோ சில அனாமதேயங்கள் கடிதம் எழுதினார்கள் என்னும் அவலநிலை கண்டு நாம் கொதிப்படைய வேண்டியுள்ளது.  தமிழ்ச் சமுதாயம், முதுகுத்தண்டு வளைந்து கூனிக்குறுகித் தெருவில் சாப்பிட்டிருக்கிறது!  சூத்திரர்கள் அவமானப்பட்ட அந்த 1927 ஆம் ஆண்டு இப்படி இருக்க, இன்றைக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்பு சங்கராச்சாரி, தான் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்போல் காட்டிக்கொண்டு உலகப் பொது நீதியாம் திருக்குறளைத் திரித்துக்கூறி வைணவ சமயம் சார்ந்தோர்களை வம்புக்கிழுத்திருக்கிறார். மார்கழி மாதத்தில் பாடப்படும் ஆண்டாள் திருப்பாவைப் பாடல், நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்! என்றிருக்க, தீமை செய்யும் குறளைச் சென்று ஓதோம் என்பதாக வெட்டி ஒட்டி வாய்க்கொழுப்பை வடியவிட்டார் சங்கராச்சாரி.
 
பாவேந்தர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர் சிலர் வெடித்துக் கண்டித்தனர்.
 
தாக்குதலுக்கு உட்பட்ட வைணவர்கள் கண்டனக்குரல் எழுப்பினர்.
 
சென்னை திருவல்லிக்கேணி அழகிய சிங்கராச்சாரியை ஆசிரியராகக் கொண்ட பக்தன் 1963 டிசம்பர் மாத இதழில் நீண்ட கட்டுரை ஒன்றை வழக்குரைஞர் ராமசாமி (அய்யங்கார்) வெளியிட்டுள்ளார்.  கட்டுரை-யின் முதல் பத்தி இவ்வாறு உள்ளது: ஆண்டாள் அருளிய அமுதன்ன திருப்பாவையின் இரண்டாம் பாசுரத்தில் வருகின்றது இச்சொற்-றொடர். இதன் உண்மை வடிவத்தையும் உண்மைப் பொருளையும் சரியானபடி உணராது, ஒரு சிலர் சமீப காலத்தில், திருவள்ளுவ நாயனார், உலகுக்குத் தந்துபோன மாநிதியான திருக்குறள் என்னும் அரிய நூலை தீக்குறள் என்று வைணவர்கள் சொல்லிவருகிறார்கள் என்று சொல்லியும், அந்தத் தப்பு அபிப்பிராயத்துக்குச் சேர தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஒரு பாடத்தை ஏறிட்டும் வருவதாக அறிந்து திடுக்கிட்டுபோனேன்.
 
அடுத்த சில பகுதிகள்:
 
ஆண்டாள் அருளிச் செய்த அச்சொல்லின் மெய்வடிவம் குறளை.  குறள் அல்ல. குறளை என்னும் சொல்லைக் குறள் என்னும் சொல்லின் இரண்டாம் வேற்று-மையாகக் கொண்டால்தான் குறளைச் சென்றோதோம் என்று வரும் குறளை யென்ற முதல் வேற்றுமைச் சொல்லின் இரண்டாம் வேற்றுமை குறளையை குறளையைச் சென்றோதோம் என்று சொல்ல வேண்டுமெப்போது....
 
குறளை யென்றால் கோள் சொல்லல், குற்றம் என்று அகராதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது.  இப்படி அன்று தொட்டு இன்றுவரை ஒருமிடறாக அனைவரும் குறளை யென்ற சொல்லையே பாடமாக வைத்து, அனுபவித்து வந்திருக்கும்போது எப்படித்தான் இப்போது ஒரு சிலருக்கு குறள் என்ற சொல்லை அதைக் கொள்ள வேண்டுமென்றும், அதிலும் வள்ளுவர் வாக்கான திருக்குறளே  திருக்குறள் நூலே அதற்குப் பொருளாகக் கொள்ளப்-படவேண்டும் தோன்றிற்றோ அறிகிலோம் நீள்கிறது கட்டுரை.
 
அறிகிறோம் என்பதை விட்டுநீங்கி அறியப்-புகுந்தால், தன் சமயம் சார்ந்து சங்கராச்சாரி மாற்று சமயத்தை மாசுபடுத்த முற்பட்டார் என்பதைவிட தமிழர் தம் தனி நிதியான திருக்குறளைத் தீயிட்டு எரிக்கும் முயற்சியே என்பது நமக்குப் புலப்படும்!  இனி இப்போது  சங்கராச்சாரி தமிழர்களையும்  தமிழையும் தாழ்த்தி நடத்திய தாண்டவம், சொத்துகளைப் பறிப்பதற்கும் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ள விவரத்தை அறிய முடிகிறது.
 
திருமலையில் ஆதிசங்கரர்தான் யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்தார்.  அதனால்தான் இவ்வளவு கூட்டமும் பணமும் வருகிறது.  வைகாநஸ முறைப்படி பூஜைகள் நடப்பதால், இக்கோயிலில் வைணவர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை...எனவே சிறீ வைஷ்ணவரான சிறீமத் நாராயணராமானுஜ ஜீயர் வைகாநஸக் கோயிலான திருக்கோயிலின் நிருவாகங்களில் தலையிடக் கூடாது! என்று சங்கராச்சாரி கபளீகர நடவடிக்கைக்கு முன்னுரை எழுதிவிட்டார்.  இந்தத் திமிர்வாதம் குறித்து, இந்த நிலையில் காஞ்சி பீடாதிபதி திருமலை வழிபாட்டு உரிமையைப்பற்றித் தேவை-யில்லாத கருத்துகளைக் கூறியிருப்பது வருந்தத்தக்கது எனவும் நாயன்மார்கள் பாடாத தலத்தை, ஆழ்வார்களில் பதின்மரும் பாடிப் பரவியிருக்கிறார்கள். அப்படியானால் அது சைவ தலமா?  வைணவ தலமா?  இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?  என்றும் கருத்துரைத்திருக்கிறது ஆலயதரிசனம் என்கிற மாத இதழ் - புவனகிரியிலிருந்து!
பொடியாய்த் தூவிடாமல், வெடியாய்த் தனது ஆக்கிரமிப்பை வெளியிட்ட சங்கராச்-சாரிக்குப் பதிலடியாக வைஷ்ணவத் தலங்-களில் மிகவும் போற்றப்படுவதும் வரலாற்று ஆதாரங்கள் நிறைந்ததுமான திருமலை சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிருவாக அதிகாரங்களையும் சொத்துகளையும் தன்வசம் கொண்டுவரவேண்டும் என்ற மறைமுக முயற்சியில் காமகோடி மடாதிபதி இறங்கி உள்ளார் என்பதையே அவரது அறிவிப்புகள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன என்று உண்மையை உடைத்திருக்-கிறார் ஜீயர்!
 
மக்களை மட்டப்படுத்துவது,  குறளைக் குரைப்பது, சொத்துகளை நோட்டம் விட்டுத் தேட்டை போடுவது - சங்கராச்சாரிகள் எப்போதும் அப்படித்தான்!  இப்படியே தொடரும்!
 
எதுவரை?  தமிழர்ஜாதி எழுந்து நிற்கும்-வரை!  முட்டிபோட்டுத் துதிக்கும் தமிழனின் முதுகுத் தண்டு நிமிரும்வரை!
« Last Edit: November 26, 2011, 03:28:51 AM by Global Angel »