Author Topic: மணி பிளாண்ட் வேகமாக வளர்வதற்கான சில டிப்ஸ்...  (Read 599 times)

Offline kanmani

வீட்டில் மணி பிளாண்ட் வளர்த்தால், அதிர்ஷ்டம் பொங்கும் என்ற மூடநம்பிக்கைகள் உண்டு. அதிலும் இந்த மணி பிளாண்ட்டை வீட்டில் வைத்தால், செல்வம் பெருகி, சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில் குடிக் கொள்ளும் என்ற நம்பிக்கைகளினாலேயே தான். ஆகவே பலர் இந்த மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க ஆசைப்படுவார்கள்.

ஆனால் இந்த மணி பிளாண்ட்டிற்கு அவ்வளவாக எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை. இதை வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியிலோ வளர்க்கலாம். அதிலும் இந்த கொடியின் சிறு தண்டை நீர் நிரப்பிய பாட்டிலில் வைத்து, வீட்டின் உள்ளே வைத்தாலும், எந்த ஒரு முறையாக பராமரிப்பின்றியும் வளரும். ஆனால் இந்த மணி பிளாண்ட்டை வீட்டில் நன்கு செழிப்பாக வளர்க்க வேண்டுமெனில் ஒருசிலவற்றை செய்ய வேண்டும். இதனால் மணி பிளாண்ட்டானது நன்கு வேகமாக வளரும்.


* இந்த கொடியை வளர்ப்பதற்கு, முதலில் மணி பிளாண்ட்டின் சிறு தண்டை தண்ணீரில் வளர்க்க வேண்டும். அதிலும் வேர் விடும் வரை நீரில் வளர்த்து, வேர் வந்ததும், அதனை மண் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியில் மாற்றி வளர்க்க வேண்டும். இதனால் மணி பிளாண்ட்டானது வேகமாகவும், சிறப்பாகவும் வளரும்.

* மணி பிளாண்ட்டிற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதற்காக மண்ணில் புதைத்து வளர்க்கும் போது அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக்கூடாது. ஆனால் மண் வறட்சியடையாதவாறு பார்த்துக் கொள்ள, தினமும் இரண்டு முறை தண்ணீரை ஊற்ற வேண்டும்.

* மணி பிளாண்ட்டை சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைத்தும் வளர்க்கலாம். ஏனெனில் இந்த கொடிக்கு சூரிய வெளிச்சம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இது வேகமாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதனை சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைப்பதற்கு பதிலாக, சற்று நிழலில் வைத்து வளர்ப்பது நல்லது.

* வீட்டிற்குள்ளே வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் போது, சிறிய தொட்டிகளைத் தான் பயன்படுத்தலாம். ஆனால் அதனை வெளியே வளர்க்கும் போது, சற்று பெரிய தொட்டியில் வைத்தால், அதன் வளர்ச்சி அதிகரிக்கும். வேண்டுமெனில் அதனை தொட்டியில் வைக்காமல், நேராக தரையில் வளர்க்கலாம்.

* மணி பிளாண்ட் கொடி என்பதால், அது வளரும் போது படர்வதற்கு ஏற்றவாறு கயிற்றை கட்டிவிட்டு, அந்த கயிற்றில் சுற்றிவிட்டால், அது கொடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

* மணி பிளாண்ட்டின் இலைகள் வாடும் போது, அதனை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். மேலும், அளவுக்கு அதிகமான அளவில் கிளைகள் அல்லது தண்டுகள் வந்தாலும், அதனை லேசாக வெட்டிவிட வேண்டும். இதுவும் கொடியின் வேகமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.