Author Topic: தர்மம்!  (Read 739 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தர்மம்!
« on: January 21, 2013, 03:51:16 AM »


"தர்மம்’ என்ற வார்த்தையை, பல இடங்களில் சொல்கிறோம், படிக்கிறோம். பிறருக்கு இலவசமாக கொடுக்கும் பணம் மற்றும் பொருளை தர்மத்துக்குக் கொடுத்ததாகச் சொல்வர். இப்படிச் செய்பவர்களை தர்மவான், தர்மாத்மா என்றெல்லாம் புகழ்வர். மற்றொரு தர்மாத்மாவும் உண்டு. நீதி, நியாயம் தவறாமல் பாவ, புண்ணியங்களுக்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருப்பவனை, "தர்மாத்மா’ என்பர்.
"தர்மத்தை நாம் ரட்சித்தால் அது நம்மை ரட்சிக்கும்…’ என்ற வேத வாக்கியம் உள்ளது. பசுவை நாம் ரட்சித்தால், அது, நமக்குப் பால் கொடுத்து நம்மை ரட்சிக்கிறது. அது போல தர்மத்தையும் சொல்லலாம். வேத சாஸ்திரங்களில், மனு முதலானோர் சொல்லியிருப்பது, "தர்மத்தால் தான் உலகம் ரட்சிக்கப்படுகிறது…’ என்பதாகும். தர்மம் இல்லையேல் உலகம் நிலைத்திராது. அதர்மம் தலை விரித்தாடினாலும் கூட, தர்மம் ஓரளவாவது இருந்து கொண்டேயிருப்பதால் தான், உலகம் ரட்சிக்கப்பட்டு வருகிறது என்பது மகான்களின் வாக்கு.
இது நீதி, நியாயம் தவறாமல் நடந்து வரும் மனிதனைப் பற்றியது. மற்றொரு தர்மம் என்பது தான தர்மம், தன்னிடம் உள்ளதில் ஒரு பகுதியை தேவையுள்ளவர்களுக்கு அளிப்பது. இதனால், புண்ணியமும், பரலோக சுகங்களும் கிடைக்கும் என்று கூறினர். இதில் நம்பிக்கை இருப்பதால் தான் இன்னும் உலகில் பல தான, தர்மங்கள் நடந்து வருகின்றன.
மனிதன், தான் மட்டும் உண்டு வாழாமல், பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற கொள்கையில் தான் தான, தர்மம், பாவ, புண்ணியம், இகபர சுகம் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றனர். அதை, சிலர் பின்பற்றுகின்றனர். இதுவும் தவிர ஆலயங்களுக்கு பணமோ, பொருளோ எதை அளித்தாலும் புண்ணியம், பரலோக சவுக்கியம் கிடைக்கும் என்றனர். இதையும் சிலர் தேடிக் கொள்கின்றனர். தர்மம் ஒருவனை எப்படி ரட்சிக்கும் என்பதற்கு ஒரு விளக்கம் சொல்லி இருக்கின்றனர்.
ஒருவன் செய்யும் தர்மம், ஒரு விருஷபமாகி, பரமேஸ்வரனிடம் சென்று அவரை துதி செய்தது. பரமேஸ்வரன் சந்தோஷப் பட்டு, "என்ன விஷயம்? என்ன வேண்டும்?’ என்று கேட்க, அந்த விருஷபம், "பிரபோ’ என்று வணங்கி, தர்மம் செய்தவனைப் பற்றி புகழ்ந்து எடுத்துரைத்து, அவருக்கு ஆயுள், ஆரோக்கியம், வசதி யாவற்றையும் அளிக்க வேண்டும்…’ என்று வேண்டிக் கொண்டது.
பரமேஸ்வரனும், சந்தோஷப்பட்டு, "அப்படியே ஆகட்டும்…’ என்று அருள் செய்தார். இதன் காரணமாக இங்கே தர்மம் செய்தவன் யாதொரு குறையுமின்றி புத்ர பவுத்ராதிகளுடன் சவுக்கியமாக இருந்து, பின்னர் சாயுஜ்ய பதவியை அடைகிறான்.இப்படியாக ஒருவன் செய்யும் தர்மமானது, அவனுக்கு பரலோக சுகத்தை அளிக்கிறது. அதனால், ஓரளவிற்காவது தர்மம் செய்ய வேண்டும். அதே போல தர்மம் தவறாமல், நீதி, நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நம் நன்மைக்காகத் தான் சொல்லி இருக்கின்றனர். அனுசரித்து நடந்து கொள்வோம்!