Author Topic: கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்!  (Read 552 times)

Offline Yousuf

மை லாட் என அழைப்பதன் மூலம் கடவுளுக்குச் சமமாக கருதப்பட்ட நீதிபதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருப்பது நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து வருகிறது. நீதிபதிகளின் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசுவதையே நீதிபதிகள் குற்றம் என எண்ணுவது நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.



கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன் புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்து வைத்திருந்ததற்காகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பெரும் ஊழலில் ஈடுபட்டதற்காகவும் இருவரையும் பணிநீக்கம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் முன்குற்றச் சாட்டும் (Impeachment) அதன் மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. அதேபோல், காசியாபாத்தில் நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கையாடல் செய்ததும், சட்டீஸ்கரில் ஒரு நீதிபதி வீட்டின் முன்பு பையில் பல லட்சம் ரூபாய் பணம் கிடந்ததும் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

நீதித்துறையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நடந்து வரும் “நீதிமன்ற அவமதிப்பு" வழக்கு ஒட்டுமொத்த நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே காலியாக்கி விடும் போல் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர் கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் 26 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர். மேலும், 1991 முதல் நீதித்துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், நீதிமன்ற பொறுப்புரிமைக்காகவும் (Judicial Accountability) போராடி வருபவர். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷனின் மகன் என்பதை அறிவோம்.

பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு ஏன்? கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ல் வெளிவந்த ‘டெகல்கா’ இதழில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள். இதை எங்களால் நிரூபிக்க முடியாது. பூஞ்சி, ஆனந்த், சபர்வால் ஆகியோருக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்களை நீக்கக்கோரினோம்’ என பேட்டி அளித்தது தான் காரணம்.

மேலும் அவர் ‘ஊழல் நீதிபதிகளை நீக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டு (Impeachment) நடைமுறை சாத்தியமற்றது. அதற்கு 100 எம்.பி.க்களின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆனால், இவற்றை பெற முடிவதில்லை. ஏனென்றால், பல எம்.பி.க்களின் தனிப்பட்ட அல்லது அவர்களது கட்சி சார்ந்த வழக்குகள் இந்த நீதிபதிகளின் முன்பு நிலுவையில் உள்ளன. நீதிபதி பல்லாவிற்கு எதிராக பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பா.ஜ.க. கையெழுத்திட மறுத்து விட்டது. அந்த நீதிபதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானியை விடுதலை செய்தவர். அந்த நீதிபதி நொய்டாவில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு பெரும் நில வணிகர் ஒருவரிடம் வாங்கியது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த நில வணிகர் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல அந்த நிதிபதியின் கீழுள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

அடுத்து, ரிலையன்ஸ் பவர் தொடர்பானது. அதாவது அவரது மகன் ரிலையன்ஸ் பவரின் வழக்கறிஞராக இருந்தார். நீதிபதி பல்லா லக்னோவில் நீதிபதியாக இருந்த போது இதுகுறித்து ஒரு தனி நீதிமன்றத்தை (Special Bench) அமைத்தார். அவர் ஒரு நீதிபதி வீட்டில் இரவு 11 மணி வரை நடந்த வழக்கு விசாரணையில் அமர்ந்துக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக தடை உத்தரவு கொடுத் தார். நாங்கள் நீதிபதி பல்லா மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதி சபர்வாலிடம் கேட்டோம், அவர் மறுத்துவிட்டார்.

அதேபோல், வீஜேந்தர் ஜெயின் தன் பேத்தியை தன் வீட்டில் திருமணம் செய்து கொடுத்த ஒருவரது வழக்கை நடத்தி அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார். இதுபற்றி மிக குறிப்பான புகார்கள் கொடுத்தும் இந்திய தலைமை நீதிபதி இதுகுறித்து உள்விசாரணை நடத்தவில்லை. அந்த நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதியானார்கள். பல்லா இன்னமும் ராஜஸ்தானின் தலைமை நீதிபதியாக உள்ளார். வீஜேந்தர் ஜெயின் பஞ்சாப் மற்றும் அரியானா தலைமை நீதிபதியானார்.

நீதிபதி கப்பாடியா ஒரிசாவி லுள்ள நியம்கிரி சுரங்க குத்தகை வழக்கை தீர்மானித்தார். வேதாந்தா நார்வே அரசால் கருப்புக் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குத்தகை கொடுக்க முடியாது என்று கூறினார். பின்னர், வேதாந்தாவின் கீழுள்ள வெளிப்படையான பட்டியலில் (Publicly Listed) உள்ள ஸ்டெர் லைட் கம்பெனிக்கு அந்த குத்தகையைக் கொடுத்தார். அது வெளிப்படையான பட்டியலில் உள்ளது ஏன் தெரியுமா, அதில் எனக்கு பங்கு உள்ளது என  நீதிபதி கப்பாடியா கூறினார். அதனால்தான் அதற்கு ஆதரவாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு வழக்கு நடத்துவதற்கு எதிராக சட்டம் உள்ளது. ஆனால், அவர்கள் அதனை சுலபமாக தாண்டிவிடுகின்றனர். நீங்கள் இதற்கு எதிராக புகார் செய்ய முடியாது, ஏனென்றல் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்' என நீதித்துறையில் நிலவும் எல்லையற்ற ஊழல் பற்றி மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் அந்த பேட்டியில் பிராசாந்த் பூஷன் கூறியிருந்தார். நீதிபதி கப்பாடியா தற்போது இந்தியாவின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

டெகல்காவிற்கு அளித்த இந்த பேட்டியால் பிரசாந்த் பூஷன் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இதற்காக ஒருவேளை அவர் தண்டிக்கப் படலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக ஒரு “பண்டோரா பாக்சை” திறந்துவிட்டது. இந்த வழக்கில், பிராசந்த் பூஷன் மற்றும் மகனைக் காப்பாற்ற அவரது தந்தையார் சாந்தி பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் ஊழல்கள் “நீதித் துறையைக் கறைபடிய” செய்துள் ளது. அவற்றைப் பிறகுப் பார்ப்போம்.

Offline Yousuf

1950-க்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் இருந்ததில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அப்போதெல்லாம் நீதித்துறையில் ஊழல் என்பதைப் பெரும் குற்றமாக கருதினார்கள். சிறிய தவறு நேர்ந்தாலும் நீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காலமது. 1949-ல் ‘பெடரல் நீதிமன்றங்கள்’ (Federal Courts) இருந்த போது அலகாபாத் நீதிபதியாக இருந்த சிவபிரசாத் சின்கா நீதித்துறையின் வரம்புக்கு அப்பாற்பட்டு இரண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஊழல் செய்த தாக ஆதாரங்கள் நிறைய இருந்தும் நீதிபதிகள் ராமசாமி முதல் பி.டி.தினகரன் வரை யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியவில்லை. இதற்கு பாராளுமன்ற நடைமுறையில் உள்ள குறைபாடு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.



பிரசாந்த் பூஷன் டெகல்காவிற்கு அளித்த பேட்டியில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள்’ என்று கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவது குறித்துப் பார்த்தோம். இவ்வழக்கில், அவரது தந்தையார் சாந்தி பூஷன் தன்னையும் இணைத்துக் கொள்ள உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்திய தலைமை நீதிபதிகளாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடசல்லயா, ஏ.எம்.அகமதி, ஜெ.எஸ்.வர்மா, எம்.எம்.பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பருச்சா, பி.என்.கிரிபால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திர பாபு, ஆர்.சி.லகோதி, வி.என்.கரே, ஒய்.கே.சபர்வால் ஆகிய 16 நீதிபதி களில் 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல்வாதிகள் 2 நீதிபதிகள் ஊழல்வாதிகளா அல்லது ஊழலற் றவர்களா என்பதைக் கூற முடியவில்லை. 6 நீதிபதிகள் உறுதி யாக நேர்மையானவர்கள் என்று கூறியதோடு அல்லாமல், இதில் யார் யார் எந்தப் பட்டியலில் வருகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதனை ‘சீலிட்ட உறையில்’ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ளார் சாந்தி பூஷன்.

பிரசாந்த் பூஷன் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்திய தலைமை நீதிபதி கப்பாடியா மீது கூறும் குற்றச்சாட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீதிபதி கப்பாடியா பணம் பெற்றுக் கொண்டு ஊழல் செய்தவராக கூறப்படாவிட்டாலும், அவர் தனக்கு வேண்டப்பட்ட கம்பெனி க்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் என்பதும் ஊழலின் ஒரு பகுதி என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

பிரபலமான ‘ஸ்டெர்லைட் ஆலை’ தனது சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றை ஒரிசா மாநிலத்திலுள்ள லஞ்சிகார்க் என்னும் ஊரிலுள்ள வனப் பகுதியில் தொடங்க ‘வேதாந்தா அலுமினா லிட்’ என்ற தன்னுடைய துணை நிறுவனத்திற்கு மாற்றியது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பழங்குடியின மக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தனக்கு கீழுள்ள நிபுணர் குழு (Centrally Empowered Committee - CEC)  )  ஒன்றை 12.05.2005-ல் அமைத்தது. இக்குழு விரிவான விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை செப்டம்பர் 2005&-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் ‘வேதாந்தா தனது சுத்திகரிப்பு திட்டத்தோடு, சுரங்கத் திட்டத்தையும் தொடங்குவதை மறைத்து சுற்றுச்சூழல் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக நியம்கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலமும், சுரங்கத்திற்காக 672.018 ஹெக்டர் வன நிலமும் தேவைப்படுகிறது. இதனால், வன நிலங்களும், காடுகளும், விலங்குகளும், நீர் நிலைகளும், அரிய வகை உயிரினங்களும் அழிந்துப் போகும். காட்டையே நம்பியிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிந்துப் போகும். மேலும், இத்திட்டத்திற்குச் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அனுமதி அளித்ததன் மூலம் அளவற்ற உதவி செய்துள்ளது. பெரும் நிதி முதலீடு உடைய இத்திட்டம் குறித்து சுற்றுச்சூழல், வனம் ஆகிய கோணங்களில் தொடக்கத்திலேயே எதிர்ப்பு வந்ததால், இந்த இடத்தில் இந்த திட்டத்தைத் தொடங்குவதைக் கைவிட வேண்டும். மேலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற வேண்டும். அதுவரையில் அங்கு எந்தப் பணியும் நடக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தெளிவாக கூறியிருந்தது.
இந்த வழக்கு 26.10.2007-ல் உச்சநீதிமன்றத்தில் வனம் சம்பந்தப் பட்ட வழக்குகளை விசாரிக்கும் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கைப் பற்றி எதுவும் விவாதிக்காமலும், இத்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய பழங்குடியினர் சார்பில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீது வாதிட அவர்களது வழக்கறிஞர் சஞ்சய் பாரிக்கை அனுமதிக்காமலும் நேரிடையாக சுரங்கம் அமைப்பது தொடர்பான வரைமுறைகள் குறித்து விவாதம் நடந்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேதாந்தா, ஒரிசா அரசு, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை மற்றும் நீதிமன்றம் அமைத்த நடுநிலை விரிவுரையாளரான (Amicus Curiae)  ஜூனியர் வழக்கறிஞர் உதய லலித் ஆகியோரின் வாதங்களை மட்டுமே நீதிபதிகள் செவி மடுத்தனர்.
இவ்வழக்கில் 23.11.2007 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிபதி கப்பாடியா எழுதியிருந்தார். அதில் ’வேதாந்தா அலுமினியா லிட்’ கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலை இத்திட்டத்தை தொடங்க விண்ணப்பிக்கலாம்’ எனக் கூறியிருந்தார். மேலும், நிபுணர் குழு சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை ஆட்சேபித்தும், அதற்கு ஆதரவாக பல்வேறு காரணங் களையும் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய நீதிபதி கப்பாடியா, ‘இன்னொரு பக்கம் லஞ்சிகார்க் பகுதியிலுள்ள பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. அங்கு மக்கள் மிகவும் வறுமை நிலையில் வாழ்கின்றனர் என்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. இந்திய பொருளாதாரம் அண்மைக் காலமாக வளர்ந்து வருகிறது. இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இந்த இரண்டு எல்லைகளையும் கணக்கில் கொண்டு இந்த நீதிமன்றம் சுற்றுச் சூழல் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சி (Sustainable Growth) கொள்கைகளையும் மனத்தில் கொண்டுள்ளது’ எனக் கூறி அனுமதி வழங்கியுள்ளார். 

வேதாந்தா, தொழிலாளர் சட்டங்களையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்காததால் நார்வே நாட்டினால் கறுப்புப்பட்டியலில் (ஙிறீணீநீளீ லிவீstமீபீ)  வைக்கப்பட்டுள்ள நிறுவனமாகும். கறுப்புப்பட்டி யலில் உள்ளதால் வேதாந்தா விற்கு அனுமதி அளிக்க மறுத்த நீதிமன்றம் அதன்கீழுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தான் அமைத்த நிபுணர் குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்தது. இத்திட்டம் செயல்படுத் தப்பட் டால் மிகவும் பாதிப்புக்குள்ளா கும் பழங்குடியின மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறியது.

மேலும், இது தொடர்பாக அதே நீதிபதிகள் மற்றொரு உத்தரவை 8.8.2008-ல்  பிறப்பித்தனர். அதில், இத்திட்டத்திற்காக நியம் கிரி மலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலைக்காக 58.93 ஹெக்டர் வன நிலத்தினையும், சுரங்கத்திற் காக 672.018 ஹெக்டர் வன நிலத்தினையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியிருந் தனர். சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது ஆச்சரியத்தை அளிக் கிறது.   

இதனிடையே, நீதிபதி கப்பாடியா ஸ்டெர்லைட் ஆலை யில் பங்குதாரராக இருந்தார் என்பது குறித்து பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தவிர யாரும் இந்த வழக்கிலிருந்து நீதிபதி கப்பாடியா விலகிக் கொள்ள வேண்டுமென கோரவில்லை. இந்தியாவிலும் சரி, சர்வ தேச அளவிலும் சரி ஒரு நீதிபதி வழக்கில் தொடர்புடை யவர்களோடு சிறிய அளவில் தொடர்பு இருந்தாலும் அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நீதிபதி விலகிக் கொள்வதே நெறியாகும். ஆனால், நிதிபதி கப்பாடியா அவ்வாறு செய்யாமல் வழக்கை நடத்தியதோடு அந்த நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது “ஊழல்” இல்லாமல் வேறு என்ன?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றைப் பதம் பார்த் தால் போதும் என்பது போல தற்போதைய இந்திய தலைமை நீதிபதியின் நிலையே இதுவென் றால் மற்ற நீதிபதிகளின் நிலைக் குறித்து இங்குக் கூறத் தேவையில்லை.

நீதித்துறையில் அளவின்றி ஊழல் புரியும் நீதிபதிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? நீதிபதிகள் மக்களுக்குப் பொறுப்பாகுதல் குறித்து தற்போது மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள சட்டம் இவற்றைக் கட்டுப்படுத்துமா? என்பது பற்றி பிறகுப் பார்ப்போம்.

Offline Yousuf

இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர் சித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 


ஊழல் நீதிபதியான பி.டி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் நடந்த போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த நீதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி பத்திரிகை களும், ஊடகங்களும் வெளிப் படுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலித் மக்களின் உரிமைகளுக்காக அயராது போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் 90-களில் இருந்து ஊழல் மற்றும் சாதியத்தோடு பணியாற்றிய, பணியாற்றும் நீதி பதிகள் குறித்து மிக வெளிப் படையாக துண்டறிக்கைப் போட்டு விநியோகித்தும், சுவ ரொட்டி அச்சிட்டு ஒட்டியும், கூட்டங்கள் நடத்தியும் செய்த பிரச்சார நடவடிக்கைகள் போதிய பயன் அளித்தன என்றே சொல்ல வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும், ஊழல் செய்யும் கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதானதல்ல என் பதை கடந்த கால அனுபவங் கள் உணர்த்துகின்றன.


ஊழல் செய்வது என்பது ஊழல் தடுப்புச் சட்டப்படி கைது செய்யப் படக் கூடிய (சிஷீரீஸீவீக்ஷ்ணீதீறீமீ ளியீயீமீஸீநீமீ)  குற்றமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி(Criminal Procedure Code) கைது செய்யப்படக் கூடிய குற்றம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவுச் செய்யப்பட வேண்டும். ஆனால், நீதிபதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி 1974-ல் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பாக 1991-ல் உச்சநீதிமன்றம் ‘எந்த நீதிபதி மீதும் இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இதுநாள் வரையில் எந்தவொரு நீதிபதி மீதும் வழக்குப் பதிய எந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளிக்கவில்லை என்பது கவனிக் கத்தக்கது.


ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாரா ளுமன்றத்தின் மக்களவை உறுப்பி னர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற் கொண்டு அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில் பாராளுமன் றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடிய வில்லை.


1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன் றத்தில் குற்றச்சாட்டு (Impeachment)  சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச் சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித் துக் கொண்டார். அவர் தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.


கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் 1993-ல் ஒரு வழக்கில் 34 லட்ச ரூபாய் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் அவரை மேற் குவங்க ‘லாபி’ காப்பாற்றி வருவதாக செய்திகள் வருகின்றன. அவரை பணியிலிருந்து ராஜி னாமா செய்யவும் அல்லது விருப்ப ஓய்வில் செல்லவும் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியும் அவர் அதனை மதிக்கக்கூட தயாராக இல்லை. அவர் மீது பாராளுமன்றத்தில் 58 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ளும் இரண்டாவது நீதிபதி சவுமித்ரா சென்.


தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி பி.டி.தினகரன் 540 ஏக்கர் அளவுள்ள புறம்போக்கு நிலங் களையும், தலித் மக்களின் நிலங் களையும் அபகரித்த குற்றச்சாட்டு குறித்தும், அனுமதியின்றி அடுக்குமாடி வணிக வளாகம் கட்டியது உள்ளிட்ட ஏராளமான சட்டவிரோத நடவடிகைகள் பற்றியும் 75 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த 12 குற்றச்சாட்டுகள் பற்றி பாராளு மன்ற குழு விசாரித்து வருகிறது. அவர் மீது ஆதாரங்கள் பல இருந்தும் அவரை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. அவருக்கு நீதித்துறை வழங்கியிருக்கும் மிகப் பெரிய தண்டனை, அவரை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றல் செய்துள்ளதுதான். இன்றைக்கு தலித் நீதிபதி என்று கூறி பி.டி.தினகரன் செய்த ஊழல்களையும், நில அபகரிப்புகளையும் நியாயப் படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இந்திய அரசியல் சட்ட மறுஆய்வுக் குழு, 2003 மார்ச் 31-ல் அரசுக்கு அளித்த அறிகையில் நீதிபதிகள் பணிநீக்கம் செய்வது பற்றிய 7-வது அத்தியாயத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிகள் தவறு செய்வதைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கி யுள்ளது. அதாவது இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு அதன் அறிகையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அந்த அறிகையின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைக்காக எழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. மேலும், ஊழல் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்வதை கடுமையாக ஆட்சேபித் துள்ளது.


இந்திய அரசியல் சட்ட அவையில் ஊழல் நீதிபதிகள் மீதான நடவடிக்கை குறித்து அதிகம் விவாதம் நடந்ததாக தெரியவில்லை. ஏனென்றால் நீதிபதிகள் இந்தளவு ஊழல் செய்வார்கள் என்று அரசியல் சட்ட அவை உறுப்பினர்கள் கருதவில்லை போலும். அதனால்தான் பாராளுமன்ற குற்றச்சாட்டு மூலம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற சிக்கலான, சாத்தியமற்ற நடைமுறையை கொண்டு வந்தனர் அரசியல் சட்ட அவையினர்.


நீதிபதிகள் மீது பாராளுமன் றத்தின் மூலம் நடவடிக்கை எடுக் கும் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. பாராளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத் திட்டால்தான் ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. மேலும், ஒரு சில ஊழல் நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாராளு மன்றம் நடவடிக்கை எடுக்கும் முறையை எளிதாக்கினால், அது நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என சில நேர்மையான நீதிபதிகள் கூறுவ தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘நீதிபதிகள் தரம் மற்றும் பொறுப்பாதல் மோசோதா’  பரிசீலிக்கப்பட்டு சென்ற அக்டோபர் 5-ல் மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிலுள்ள பெரும் பாலான பிரிவுகள் நீதிபதிகளின் ஊழல்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என சட்டவல்லுநர்கள் தரப்பி லிருந்து கடும் எதிர்ப்புக் கிளம் பியுள்ளது. இதனைப் பிறகுப் பார்ப்போம்.

Offline Yousuf

நீதித்துறையில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும், நீதிபதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் இடர்பாடுகள் இல்லாமலும் இருக்க வேண்டுமென சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள அபரிதமான நம்பிக்கை குறையாமல் இருக்க இந்த மசோதாவில் சட்ட வல்லுநர்கள் கூறும் அம்சங்களை உள்ளடக்கி நிறைவேற்ற மத்திய அரசு திறந்த மனதோடு செயலாற்ற வேண்டும்.

‘நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968’ போதிய அளவில் பயன் அளிக்கவில்லை என்ற காரணத்தால் தான் தற்போது மத்திய அரசு ‘நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா 2010’ என்ற புதிய சட்ட முன்வரைவை அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த சட்டப்படி நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கினைப் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மேலும் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நீதித்துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும். மேலும், நீதிபதிகள் எந்தவொரு வழக்கறிஞரோடும் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தான் பணியாற்றும் நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞரோடு உறவு வைத்துக் கொள்ள கூடாது.

நீதிபதிகளின் ஊழல் பற்றி விசாரிக்க ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இக்குழுவில், அட்டர்னி ஜெனரல், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் ஒரு முக்கிய பிரமுகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். நீதிபதிகள் மீது இந்த குழுவிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதும் புகார் கூறலாம்.

இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிப்பதற்காக நீதிபதிகள் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்படும். உச்சநீதிமன்ற நீதிபதி மீது புகார் என்றால் ஓய்வுப் பெற்ற இந்திய தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். உயர்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பணியிலிருக்கும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும். இந்த விசாரணை குழு உறுப்பினர்களை அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் நியமிப்பார்கள். தமைமை நீதிபதிகள் மீதான புகாரை உயர்மட்ட குழுவே விசாரிக்கும்.

இந்த குழுக்களுக்கு ஒரு சிவில் நீதிமன்ற அதிகாரம் இருக்கும். இக்குழு எந்தவொரு ஆவணத்தையும், சான்றுகளையும் சம்மன் அனுப்பி பெற முடியும். மேலும், புகாரின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்படும் நீதிபதி மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டு மென்மையானதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அறிவுரையோ அல்லது எச்சரிக்கையோ விடுக்கலாம். குற்றச்சாட்டு கடுமையானதாக இருந்தால் அவரை பணியிலிருந்து விலக அறிவுறுத்தலாம். இதற்கு நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை என்றால் குடியரசுத் தலைவர் மூலம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

முந்தைய சட்டத்தில் மாற்றங்கள் செய்தும், சட்ட ஆணையம் கூறிய பல கருத்துக்களை உள்ளடக்கியும் கொண்டு வரப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பாராளுமன்றத்தின் மூலம் குற்றசாட்டுகள் (Impeachment) பதிவு செய்து நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற பழைய முறையே இச்சட்டத்தில் இறுதி நடவடிகையாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது கடந்த காலங்களில் தோல்வி அடைந்துள்ளதையும், இதுவரையில் ஒரு நீதிபதிகூட இவ்வாறு பணிநிக்கம் செய்யப் படவில்லை என்பதையும் முன்னர் பார்த்தோம்.

பணியிலிருக்கும் நீதிபதிகளை இதுபோன்ற விசாரணைக் குழுவில் நியமிப்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அதிகப்படியான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக அவர்களுக்குப் பணிச் சுமை அளிப்பது நீதிபதிகளின் வேலைத் திரனைக் குறைக்கும். விசாரணகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். மார்ச் 31, 2010 கணக்குப்படி உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 717 வழக்குகள், இந்தியாவிலுள்ள 21 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 4 கோடிக்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏதாவது ஒரு மனித உரிமை மீறல் நடக்குமானால் உடனடியாக பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை கோருவது வழக்கம். ஆனால், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்கூறிய காரணங்களைக் காட்டி அரசுகள் தட்டிக் கழிப்பது உண்டு. ஒரு சம்பவம் குறித்து விசாரிக்கவே இந்த நிலை என்றால், நீதிபதிகள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நுட்பமாகவும், ஆழமாகவும், பல்வேறு கோணங்களில் ஆராயவும் கவனம் செலுத்த முடியாத நிலையே உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், தன்னோடு பணியாற்றும் ஒரு நீதிபதி மீது புகார் கூறப்படுமானால் அதனை விசாரிப்பதில் உடன் பணியாற்றும் நீதிபதிக்கு நெருடல் இருக்கும். மேலும், பல சந்தர்ப்பங்களில் உடன் பணியாற்றும் நீதிபதியை விசாரணை நீதிபதிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நீதிபதி பி.டி.தினகரன் ஊழல் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் அவரோடு பணியாற்றிய நீதிபதி சிர்புர்கர் இடம்பெற்றதற்கு எதிர்ப்புப் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அக்குழுவில் இருந்து விலகியதும் இதற்கு வலுசேர்க்கிறது.

‘ஒரு நீதிபதி செய்யும் குற்றத்தை ஒரு நீதிபதி கொண்டே விசாரிக்கலாம் என்றால் ஏன் ஒரு டக்டர் செய்யும் குற்றத்தை ஒரு டாக்டரைக் கொண்டே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செய்யும் குற்றத்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டே, ஒரு திருடன் செய்யும் குற்றத்தை ஒரு திருடனைக் கொண்டே விசாரிக்க கூடாது’ என்று மிகக் கோபமாக கேள்வி எழுப்பியதோடு, ‘இந்த புதிய சட்டம் மக்களிடத்தில் ஒரு பாதுகாப்பு வழிமுறை உள்ளது என்ற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி’ என்கிறார் சாந்தி பூஷன்.

புலன் விசாரணை அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டுமென நீதித்துறையில் ஊழலுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது. நீதித்துறைக்கு அப்பாற்பட்டவர்கள் நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க ஒப்புக் கொண்டால் அது நீதித்துறையின் சுயேட்சைத் தன்மையையும், சுதந்தரத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீதித்துறையில் மட்டுமல்ல இன்று அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. எளிதாக வேலையை முடிக்க லஞ்சம் கொடுப்பதுதான் வழிமுறை என்பதை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று நாம் யாராவது கூறினால் இன்றைய சூழலில் அது மிகப் பெரிய நகைச்சுவை ஆகிவிடும். சட்டத்தின் ஆட்சியை விரும்புகிறவர்கள் ஊழலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஊழல்களினால் பாதிக்கப்படுவது அடித்தட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள்தான். அதுவும் கடைசிப் புகலிடமாக உள்ள நீதித்துறையில் ஊழல் அளவிட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அண்மையில் வருமான வரித் துறை அதிகாரி ஒருவரின் ஊழல் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் ‘அரசு ஏன் ஊழலை சட்டபூர்மானதாக ஆக்கக் கூடாது’ என்று கிண்டலாக கேள்வி எழுபியுள்ளனர். அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை ஒழிக்க நீதிபதிகள் அக்கறை காட்டும் அதே வேளையில், நீதித்துறையில் நிலவும் ஊழலையும் களைய உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் இதுபோன்ற ஒரு கேள்வியை நீதித்துறையினர் மீது மக்கள் எழுப்பும் காலம் விரைவில் வரக்கூடும்.



-கோ. சுகுமாரன்

(நிறைவுப் பெற்றது)

Offline RemO

Veliye payirai meinthu kondirukum pothu ena seivathu