FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 30, 2021, 11:56:41 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: Forum on May 30, 2021, 11:56:41 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 268

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/268.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: எஸ்கே on May 31, 2021, 12:58:54 AM
வானில் கருமேகம் சூழ்ந்த வானிலை
தோகை விரித்து ஆடும் ஆண் மயில்
இளங்காற்று வீசும் அற்புத தருணம்...
இமயமலை சாரல் போன்ற மழைத்துளி...
மழையில் நனையவே பிஞ்சு குழந்தை
போல்  ஏங்குகிறேன்!



நிலத்தில் தேவதையாய் இறங்கிய மழைத்துளி
நாசியை துளைக்கும் மண் வாசனை...
சொட்டு சொட்டாய் விழும் மழைதுளியின் சங்கீதம்...
சோ என பெய்யும் இரைச்சல் நாதம்...
மெல்லிய வெள்ளி கயிறு போன்ற மின்னல் கீற்று...
 அட டா இவையனைத்தும்  என்னை
 பால்ய நினைவுகளுக்கு  அழைத்து செல்கிறது!!


தாயிடம் வசவு வாங்கி மழையில் நனைந்து
தந்தையிடம் காகித கப்பல் செய்து வாங்கி
தங்கைகளோடும்,தம்பிகளோடும் காகித கப்பல்
 கத்தி கப்பல் நீரில் விட்ட தருணம்...
அட டா என்ன அற்புத மாயம் மழையே!!!


விவசாயத்திற்குஆதாரமாக,ஜீவராசிகளின் உயிர் நீராக..
நெய்தலுக்குரிய வருன பகவானே வருக வருகவே ...
நீரின்றி அமையாது வையகம்
மழை அதுவே உலகத்தின் ஜீவன்
உலகம் தழைக்க பல்லுயிர் உருவாக
பசுமை நிலைக்க மாரி மழை பெய்கவே!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: thamilan on May 31, 2021, 05:51:41 AM
மழையே உன் ரசிகன் நான்
சிறுவயது முதலே உன்மேல்
அளவில்லாத காதல் எனக்கு
உன் தீண்டுதலின் மேல் 
தீராத மோகம் எனக்கு

உன் ஒவ்வொரு துளியும்
என்மேல் படும் போதெல்லாம்
என்காதலி தரும் முத்தத்தைவிட
சுகமான ஒரு இன்பம் எனக்கு

சிறு வயதினிலே
மழை வந்துவிட்டால்
தீபாவளி வந்தது போலே
பேரானந்தம் எனக்கு
இடியும் மின்னலுமாக மழை பெய்யும் போது
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது
போலவே தோன்றும் எனக்கு

மழையில் நனையாதே
காய்ச்சல் வரும் உனக்கு
மழையில் நனையாதே
சளி பிடிக்கும் உனக்கு
மழை வந்து விட்டால்
அம்மாவின் புலம்பல் இது
இது ஏதும் காதுக்குள் விழாது

மழை வந்து விட்டால்
ஓடி ஒளிபவர்களை பார்த்தால்
சிரிக்கத் தோன்றும் எனக்கு
இயற்கையை ரசிக்காத  தெரியாத மூடர்கள்
என எண்ணத் தோன்றும்

உடைகளை நனைத்து
உள்ளத்தை குளிர்வித்து
காலை முத்தமிட்டு சாலையில் ஓடிடும்
மழையில் மழைநீர் தெறிக்க
குதித்து குதித்து நடப்பது
பேரானந்தம் எனக்கு
வீடு வந்ததும் அம்மாவிடம் திட்டு வாங்குவது
பழகிப்போன ஒன்று எனக்கு

இன்று வரை குடை பாவித்ததில்லை நான்
மழையைக் கண்டு ஒதுங்கியதும் இல்லை நான் 
கொட்டும் மழையில் சொட்டச்சொட்ட நனைவது
பிடித்துப்போன ஒன்று எனக்கு
இயற்கையின்  ரசிகன் நான்
மழையின் காதலன் நான் 

நாம் உயிர்வாழ்வதும் இந்த மழையால் தான்
ஆறு ஏரி குளம் குட்டைகள் எல்லாம்
நிரம்பி வழிவதும் மழையால் தான்
வயல்வெளிகள் தோட்டங்கள் எல்லாம்
ஏங்கி கிடப்பதும் இந்த மழைக்காகத் தான்
 
மரங்களை அழித்து
காடுகளை வெட்டி
இயற்கையை சீரழிப்பதால் தான்
மழையின்றி குடிக்க நீரின்றி
அல்லல் படும் மனிதக்கூட்டம் நாம்

இயற்கையை பாதுகாப்போமாக
இறைவன் படைப்பு ஒவ்வொன்றையும்
உள்ளதால் நேசிப்போமாக
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: AgNi on May 31, 2021, 09:50:16 AM


இடி மின்னல் மழை..
இயற்கை விளையாடும் நேரம்..
தரையில் கோலமிடும் சாரல்
தாவி குதிப்போம் வா!

வானம் நெய்த வண்ணசேலை
பூமி பெண்ணுக்கு சீதனம்...
வனமெங்கும் நேசதூரல்கள்
மனம் குளிர குளிக்க வா!


வானமங்கை நீலபொட்டிட்டு
வானவில்லாய் கை அசைக்க...
காற்றின் இதமான வருடலில்
கவிதை ‌படைக்கலாம் வா!

மேகத்து ஊஞ்சல் தாலாட்டி
விளையாட அழைக்க
மின்னல் ஒளிப்படமெடுத்து
கண்ணடிக்க....
மாலை நேர மழையோ..
யாரையோ காணாது
மயங்கி பொழிய...
மழைதேசத்தில் மகிழ்வோடு
குடியேரலாம் வா!

தாமரை இலைதன்னை
பட்டும்படாமல் தலையில் வைத்து
நனையா நாடகம் நடத்தும்
சிறு பிள்ளையாவோம் வா!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: suthar on May 31, 2021, 05:58:39 PM
கார்க்காலம் வந்துவிட்டால்
கார்முகில்கள் கொஞ்சி விளையாடும்
காதோரம் சிலிர்க்காற்று சலசலக்கும்
காக்கும் கடவுளின் கைங்கர்யத்தால்
கார்த்திகை பொழுதுகள் முழுதும்
காற்றோடு மழைபொழியும்...
காடுகள் தழைத்து வலங்கொழிக்கும்
காய்த்து குலுங்கும் பழங்களை
கொத்திதின்றும் பறவைகள் கிறீச்சிடும்
காக்கைகள் கரைந்து ஆரவாரிக்கும்
காடைகள்  கூட்டத்தோடு இடம்பெயரும்
காலையில் கொட்டிதீர்த்த மழையில்
காய்கணிகள் நீரில் மிதந்துவரும்..
காளான்கள் குடைபோல் முளைத்திருக்கும்..
காளையர் கூட்டம் நனைந்து மகிழ்ந்திருப்பர்..
குளத்தில் கமலம் பூத்துக்குலுங்கும்
கமலத்தின் இலைகள் நீரில் பளபளக்கும் -நீரில்
கால்பதித்து மழலைகள் கும்மாளமிடுவர்
கமலத்தின் இலை பறித்து
குடைபிடித்து நனைந்தபடியே
காகிதக்கப்பலை நீரிலிட்டு மகிழ்வர்
காலங்கள் கணிந்ததால் விவசாயம் செழிக்கும்
கார்முகிலை தந்து காத்தவனுக்கு
காணிக்கை செலுத்தி  நன்றி கூறுவர்
கடவுள் அருளால் வாழ்வு சிறக்கும்...!

காலங்கள்  வெகுண்டோடும்
காற்று பலமாய் அசைந்தாடும்
கார்முகிலும் கலைந்தோடும்
கரைபுரண்டோடிய நீர்நிலையெல்லாம்
காணல் நீரே தெரியும்
காடுகள் காய்ந்து  இலையுதிர்ந்து
கானும் இடம்யாவும்
காலனின் மரணஓலமே கேட்கும்
காடுகளை அழித்ததன் பயனாய்
காக்கும் கடவுளும்
கைகட்டி வேடிக்கை பார்ப்பான்
கணமழையில் மூழ்கிய
காகிதக்கப்பல் போல் வாழ்வும்
கெட்டொழிய நேரிடும்...
காப்பவன் கைகட்டி கொண்டதால்
காலம் கடந்து சென்று
கார்த்திகை வந்தாலும்
கார்க்காலமும் கார்முகிலும்
காணல் நீராகும்...
காளையரே சிந்திப்போம்
காடுகளை உருவாக்குவோம்...!
கார்க்காலத்தை காத்திடுவோம்...!!.


உங்கள் புதுமை கவிஞன்
சுந்தரசுதர்சன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: சிற்பி on June 01, 2021, 07:52:50 AM
உனகாகவே இந்த
மழை வந்தது
சின்ன பூவே..
நீ சிரிக்கும் நிலவு
தேவதையின் பரிசு
பூமியின் பொக்கிஷம்

உனக்காக மழை வந்தது
உனை தேடியே
மழை வந்தது

வண்ணத்து பூச்சிக்கு
பூக்கள் நீ
பூக்களுக்கு
தென்றல் நீ
மழையை ரசித்து
இருக்கிறேன்
மழையோடு
மின்னல்கள்
வானவில் இருக்கும்
அழகை வியந்து இரசித்து இருக்கிறேன்
ஆனாலும் இன்றுதான்

மழைதுளிகளும் இரசிக்கிறது உன்னை
வானவில்லும்
மேகங்களும்
மின்னல்களும்
ஓரே இடத்தில்
நிலைகொண்டது உனக்காக
அங்கே தான்
நிலை  கொண்டது மழைகாலம்

வெறும் காகிதங்களாக
இருந்த என் கவிதைகள்
நீ விடும் காகித கப்பல்களில்
மிதந்துகொண்டிருக்கிறது...

உயிருள்ள பூக்கள்
உணர்வுகள் உள்ள பூமி
மழை ..மரம்..செடி
கொடி...மேகம் ..
வானம்..நிலா..
வெயில்..குளிர்...
என எல்லா தன்மைகளும்...
உனக்காகவே ...

உன்னை இயற்க்கை
நேசிக்கிறது
ஆனாலும் அதை
கண்டுக்கொள்ளாமல்
நீயோ ..எதை செய்துகொண்டு
விளையாடிகொண்டு
இருக்கிறாய்...
கண்டுகொள்ளாத போது
காதல் அதிகரிக்கும்...

அதானால் தான் உன்னை
காதலிக்க மழை வந்துவிட்டது...😊
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: இணையத்தமிழன் on June 01, 2021, 10:44:48 AM
மழை
கார்மேகம்  சூழ்ந்திட
காற்றோ கானம் பாடிட
மின்னலோ வாணவேடிக்கை நடத்திட
இடியோ இன்னிசை இசைத்திட
மண்வாசமோ மனதைக்கவர்ந்திட
மழலையரும் மகிழ்ந்திட

தார்ரோடும் தடாகம் ஆனது

தவழ்ந்தோடும் காகித கப்பலில்
மிதந்தோடின
மழலையர் மனமோ
மரமும் குடையாகிட
மனமும் உன்னை தேடிட

அன்றோ
என்கண்ணில் தோன்றிய மழையும் மறைத்ததடி
பெண்ணே
விண்ணில் தோன்றிய மழையால்

மனமோ கனத்திட
மழையோ கரைத்திட
நினைவின் மொழியும் அறிந்தேனடி
பிரிவின் வலியில்

காத்திருப்பேன் என்றும்
கண்ணீரோடு அல்ல
எந்தன் காதலோடு
                 - இணையத்தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: KuYiL on June 01, 2021, 02:10:51 PM


அம்மா தேடுவாக!  அப்பா ஏசுவாக !
ஆனாலும்  உனபாக்க ஆசையா
ஓடியாந்தேன் வரப்போர மேட்டுல !

மழையே !

நீ  விரிச்ச  பச்ச   கம்பளத்தில ,
சேறு   சகதிய  சந்தனமா  பூசி ...
குடை  பிடிச்சா கோச்சுக்கிட்டு 
போயிடுவேன்னு ...
இலை புடுச்சு உக்காந்தேன்
ஒய்யார கோழிக்குஞ்சாய் !

பூவுக்கும் காய்க்கும் இல்லாத வாசனை
மழையே ...
நீ தொட்ட மண்ணக்கு மட்டும்
எப்படி மணக்குது ?

வெள்ளை காளான் கிரீடம்
வச்சு நிக்க ...
தலையாட்டி   அசைந்தாடும்
இலைதழை     கொடி கூட
பச்சகொடி      பிடிச்சு     உன்ன
வரவேற்க நா வந்தேன் !

தட்டான்களும்,  தும்பிகளும் ஆர்ப்பரிக்க
பட்டாம்பூச்சியும் பொன்வண்டும்
வர்ணஜாலம் காட்ட ...
வானவில்லயாய்  வானத்திலே -   நீ
வளைஞ்சு போடுறே  கோலத்தை
கண்சிமிட்டி கைகொட்டி சிரித்து காண ஆசை!


கிழிச்சு போட்ட என் நோட்டு பக்கம்
கப்பல் ரெண்டா அசஞ்சு ஆட ...நா
எழுதின எழுத்த அழிச்சு
என பார்த்து சிரிச்சு ஓடுது
மண்ணை அணைச்சு ஓடும்
மழைத் தண்ணி ......

தொலைக்காட்சி பாக்க  ஆசை வரலே!
தமிழ்த்தாய் வாழ்த்து படிச்ச
பள்ளிக்கூடம் திறக்கல!

நல்ல பண்புகளை சொல்லிக்கொடுக்காத
பாடம் பிடிக்கல!
ஒன்னும் புரியாம தலையாட்டி
பொம்மையா ....
எத்தனை நேரம் உக்கார......
என்னை யாருன்னே
தெரியாத வாத்தியார் முன்னால !

அன்புனா என்னன்னு உன்னை
பாத்து கத்துகிறேன் ....
பாரபட்சம் பார்க்கமா படியளக்கும் ராஜா நீ !

அரசனும் ஆண்டியும் ஒன்னும் தான்
உன் சாம்ராஜ்யத்திலே !

கடல பிறந்து மண்ணுக்கு வந்த நீ
கூலி கேக்காத கொடையாளி !

நேரத்தையும் கடமையும் காத்துல
விட்டுட்டோம் நாங்க .....
மரத்தை வெட்டி காட்ட அழிச்ச
எங்களுக்கு .....

கண்ணுக்குத்தெரியாத உயிர்க்கொல்லியை அழிக்கத்தெரியல !

அதான் ....

குடை பிடிச்சா கோச்சுக்கிட்டு போய்டுவேன்னு
இலை பிடிச்சு உக்காந்து இருக்கேன் ஒய்யார கோழிக்குஞ்சாய் !























Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: TiNu on June 01, 2021, 02:46:46 PM


மழையே!!!!
அன்றோ, உன் மீது எனக்கு வெறுப்பு மட்டுமே...
உனை கண்டாலே எனக்கு பிடிக்கவே பிடிக்காது....
ஏன் எனில், உன்னுடன் கைகோர்த்து ஓடி வரும்..
என் உயிரை துளைக்கும் இடி ஓசையே...

இடி மட்டுமின்றி,
பரந்து விரிந்த..  கருநீல வானில்.. யாரோ ஒருவள்..
நெருப்பு துண்டு ஒன்றெடுத்து... பட்டென வீசியது போல..
என் கண்முன்னே... சீறி பறக்கும்.. வாளின் நுனி போல
கீற்றொளியாய் பட்டு தெறிக்கும் மின்னல் ஒளியுமே...

மேலும்,
வாய் மூடு.. ஏன் இப்படி... ஊஊ.. ஓஓஓஓ.. ஆஆஆஆ...
என ஓசையெழுப்பி எழுப்பி...  என்னை பயமுறுத்துகிறாய்...
என்று.. என் விழிகள் கோபத்தில் சிவக்க.. பல நேரங்களில்...
உன்னிடம்... கடும் சண்டை பிடித்து இருக்கின்றேனே ... ...

அச்சமயமெல்லாம்,
நானோ.. மதம் கொண்ட களிறாய்.. பித்து பிடித்தவளாய் .. 
என் கைகளிலே..  கிடைத்த பொருள்களை எடுத்ததே...
உன் மீது வீசி வீசி எறிந்து.. என்னுள் உண்டான..
வெறுப்பை எல்லாம் உன் மீது கொட்டி தீர்த்தேனே...

இன்றோ,
நானோ! விளையாட ஆளின்றி... தன்னந்தனியே நிற்க...
என் செவிகளில் தேனென ஒலித்தன..  உன் கட கட...  இடியோசை...
என் கண்களும் மகிழ்ந்தென... உன் சர் சர்.. மின்னலொளியிலே.
விழிகளில் கண்ணீர் தழும்ப.. ஓடினேன் என் முற்றம் நோக்கியே...

முற்றத்தில்,
ஆனந்தம்.... என் முகமெங்கம் துள்ளி விளையாடிட ..
ஆர்வமாய்.. நான் வின் நோக்கி உன்னை தேடினேன்..
ஆதவன் ஒளியை நேசித்து..  பருக துடிக்கும்  மலராய்...
ஆசையாய் நீயும் எனை தழுவிட.. நானும் சிலையானேன்.. உன் கைசிறையில்!!!!

மழையே!!!..
இன்று முதல்... நீயே என் முதல்  விளையாட்டு தோழன்!...
இக்கணம் உன் மீது... எனக்கு சினமில்லை.. வெறுப்பு இல்லை.. 
இனி நீயே!! என் இனிய தோழன்... முத்தான முதல் நண்பன்...
இவ்வுலகம் இருக்கும் மட்டும் வா... நம் கை கோர்க்கலாம்...




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 268
Post by: Mr Perfect on June 02, 2021, 12:32:36 AM


💜💜பிரசவ அறைக்கு வெளியே உன் முதல் அழுகை கேட்ட நொடி, அப்பாவாய் நான் பிறந்தேன் கண்மணியே! 

💜💜 அக்கனமே என் இளவரசிக்கு அழுகை அறியா ஓர் உலகை கொடுக்க தயாரானேன் ஒரு தகப்பனாய்!

💜💜 இந்த பூமியில் பூத்த புன்னகை தேவதை இவள்! 

💜💜அவள் தரும் முத்தத்தில் என் இன்னலை மறக்கச் செய்பவள்! 

💜💜சிரிப்பின் ஓசையால் என் சினத்தை சிதறச் செய்பவள்! 

💜💜அவளின் கை விரல் தீண்டலால் என் காயங்களை ஆறச் செய்பவள்! 

💜💜அவளின் மழலை மொழியில் உலகையே மறக்கச் செய்பவள்! 

💜💜அவள் விடும் கண்ணீர் துளியில் என் மனதை கலங்கச் செய்பவள்! 

💜💜அவள் ஊட்டிவிடும் ஒரு வாய் சோற்றில் தாயின் அன்பை தருபவள்! 

💜💜அவள் கொலுசின் ஓசையால் பல கீதங்களை இசைப்பவள்! 

💜💜என் விரல் பிடித்து அழகாய் நடை பழகுபவள்! 

💜💜என் உயிரிலே கலந்தவள்!  💜💜என் உலகமென மாறியவள்! 

💜💜அப்பா என்ற ஒரு வார்த்தையால் என்னை கட்டிப்போட்டவள்! 

💜💜 என்ன தவம் செய்தேன் நீ என் மகளாய் பிறப்பதற்கு! 

💜💜உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை

💜💜எனினும் ஆயுள் உள்ளவரை என் நெஞ்சில் சுமப்பேன் கண்மணியே!💜💜