Author Topic: கல்கியின் பொன்னியின் செல்வன்  (Read 55581 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


முதல் பாகம் : புது வெள்ளம்

1. ஆடித் திருநாள்


ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ம் ஆண்டில் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டுகாத தூரத்தில், அலைகடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீர நாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரை காத நீளமும், கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப் போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது. புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீர நாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் சிறிதும் கவலைப்படவில்லை. அகண்டமான அந்த வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர் வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.

அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானவப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்து நான்கு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான். ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டும் என்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாக இருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேதான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர் நீத்தார் அல்லவா? அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' என்ற சிறப்புப் பெயர் பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தாம்! அவர்கள் வீரத்தில் எப்படியோ அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.

இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென் கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக் கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும் போது கரைக்குச் சேதம் உண்டாகாமல் இருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் புது வெள்ளம் வந்து வீரநாராயண ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

அந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத் தேவன் அங்கே கண்டான்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து, விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவ்வந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள், தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை, அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப் பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள். மிகுந்த குதூகலத்துடன் பாடினார்கள்.

"வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கை பாருங்கள், தோழியரே!
காவேரி புரண்டு வருது
காண வாருங்கள், பாங்கியரே!"

என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

வேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.

ஆதித்தனுடைய மகன் பராந்தக சோழ மகாராஜன் பாண்டியர்களையும் பல்லவர்களையும் சேரர்களையும் வென்று, ஈழத்துக்குப் படை அனுப்பி வெற்றிக் கொடி நாட்டிய மெய்க் கீர்த்தியை இன்னொரு பெண் உற்சாகம் ததும்பப் பாடினாள். ஒவ்வொருத்தியும் பாடியபோது அவளைச் சுற்றிலும் பலர் நின்று கேட்டார்கள். அவ்வப்போது, "ஆ! ஆ!" என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

குதிரை மீது இருந்தபடியே அவர்களுடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு மூதாட்டி கூர்ந்து கவனித்தாள். "தம்பி! வெகு தூரம் இருந்து வந்தாய் போலிருக்கிறது. மிகவும் களைத்திருக்கிறாய்! குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு!" என்றாள்.

உடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு கலகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒருபக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான். அப்படிச் சென்றால் அங்கே நின்ற இள மங்கைமார்கள் பலரும் அவனைச் சூழ்ந்து கொண்டு பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம். அதனால் என்ன? அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா? அவர்கள் தன்னைப் பரிகசித்துச் சிரித்தாலும் அந்த ஒலி தேவகானமாகவே இருக்கும். வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவும் தோன்றினார்கள்!

ஆனால் அதே சமயத்தில் தென்மேற்குத் திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைச் சிறிது தயங்கச் செய்தது. வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டுப் பெரிய ஓடங்கள் வெண் சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பட்சிகளைப் போல், மேலைக் காற்றினால் உந்தப்பட்டு விரைந்து வந்து கொண்டிருந்தன.

ஏரிக் கரையில் பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அந்தப் படகுகள் வரும் திசையையே ஆவலுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்தப் படகுகளிலே ஒரு படகு எல்லாவற்றிற்கும் முன்னதாக விரைந்து வந்து ஏரிக்கரை வடக்கு நோக்கித் திரும்பும் மூலையை அடைந்தது. அந்தப் படகில் கூரிய பிரகாசமான வேல்களை ஏந்திய ஆஜானுபாகுவான வீரர்கள் பலர் இருந்தார்கள்.

அவர்களில் சிலர் ஏரிக்கரையில் குதித்திறங்கி அங்கே இருந்த ஜனங்களைப் பார்த்து, "போங்கள்! போங்கள்!" என்று விரட்டினார்கள். அவர்கள் அதிகமாக விரட்டுவதற்கு இடம் வையாமல் ஜனங்களும் அவரவர்களுடைய பாத்திரங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு விரைந்து கரையேறத் தொடங்கினார்கள்.

வந்தியத்தேவனுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை. இந்த வீரர்கள் யார்? பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? ஒரு வேளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்களோ?

ஏரிக்கரையில் கையிலே கோல் பிடித்து நின்ற பெரியவர் ஒருவரை வல்லவரையன் அணுகினான். "ஐயா! இந்த வீரர்கள் யாரைச் சேர்ந்தவர்கள்? அதோ பின்னால் வரும் அன்னக் கூட்டம் போன்ற ஓடங்கள் யாருடையவை? எதற்காக இவ்வீரர்கள் மக்களை விரட்டுகிறார்கள்? மக்களும் எதற்காக விரைகிறார்கள்?" என்று கேள்விகளை அடுக்கினான்.

"தம்பி! உனக்குத் தெரியவில்லையா, என்ன? அதோ அந்தப் படகுகளின் நடுப் படகில் ஒரு கொடி பறக்கிறதே, அதில் என்ன எழுதியிருக்கிறது, பார்!" என்றார் பெரியவர்.

"பனைமரம் போல் தோன்றுகிறது".

"பனைமரந்தான்! பனைமரக்கொடி பழுவேட்டரையர் கொடி என்று உனக்குத் தெரியாதா?"

"மகாவீரர் பழுவேட்டரையரா வருகிறார்?" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்ட குரலில் கேட்டான்.

"அப்படித்தான் இருக்க வேண்டும். பனைமரக் கொடியை உயர்த்திக் கொண்டு வேறு யார் வர முடியும்?" என்றார் பெரியவர்.

வல்லவரையனுடைய கண்கள் அளவிலா வியப்பினால் விரிந்து படகுகள் வந்த திசையை நோக்கின. பழுவேட்டரையரைப் பற்றி வல்லவரையன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். யார் தான் கேள்விப்படாமலிருக்க முடியும்? தெற்கே ஈழ நாட்டிலிருந்து வடக்கே கலிங்க நாடு வரையில் அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர் என்பவர்களுடைய பெயர்கள் பிரசித்தமாயிருந்தன. உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையிலுள்ள பழுவூர், அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப்புகழ் பெற்றிருந்தது. அக்குடும்பத்தார் சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்து வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை, வீரப் புகழ் இவை காரணமாகவும் பழுவேட்டரையர் குலம் அரச குலத்தின் சிறப்புக்கள் எல்லாம் பெற்றிருந்தது. தனியாகக் கொடி போட்டுக் கொள்ளும் உரிமையும் அக்குலத்துக்கு உண்டு.

இப்போதுள்ள பழுவேட்டரையர் இருவரில் மூத்தவர் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில் அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமில்லை என்று புகழ் பெற்றவர். இப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவர் போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை. ஆனால் சோழ நாட்டு அரசாங்கத்தில் மிக உன்னதமான பல பதவிகளை வகித்து வந்தார். அவர் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி, தான்யாதிகாரி; தன பண்டாரமும் தான்ய பண்டாரமும் அவருடைய அதிகாரத்தில் இருந்தன. அரசியலின் தேவைக்குத் தகுந்தபடி இறை விதித்து வசூலிக்கும் அதிகாரமும் அவரிடம் இருந்தது. எந்தச் சிற்றரசரையும், கோட்டத் தலைவரையும், பெரிய குடித்தனக்காரரையும், "இவ்வாண்டு இவ்வளவு இறை தர வேண்டும்!" என்று கட்டளையிட்டு வசூலிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆகவே, சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்தபடியாகச் சோழ சாம்ராஜ்யத்தில் இப்போது வலிமை மிக்கவர் பழுவேட்டரையர் தான்.

அத்தகைய மகா வீரரும், அளவிலா வலிமையும் அதிகாரமும் படைத்தவருமான, பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் பொங்கியது. ஆனால், அதே சமயத்தில், காஞ்சி நகரின் புதிய பொன் மாளிகையில் இளவரசர் ஆதித்த கரிகாலர் தன்னிடம் அந்தரங்கமாக அழுத்திச் சொன்ன செய்தி அவனுக்கு நினைவு வந்தது.

"வந்தியத்தேவா, நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி, இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும், இன்னொன்றை என் சகோதரி இளைய பிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் இராஜ்யத்தின் பெரிய பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன். ஆகையால் நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்கக் கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது, மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை நிரூபித்திருக்கிறாய். ஆகையால் வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டுவிடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னான் என்று கூடத் தெரியக் கூடாது! நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது!"

சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்துக்குரிய இளவரசரும் வடதிசைச் சைன்யத்தின் மகாதண்ட நாயகருமான ஆதித்த கரிகாலர் இவ்விதம் சொல்லியிருந்தார். மேலும் வந்தியத்தேவன் நடந்துக் கொள்ள வேண்டிய விதங்களைப் பற்றியும் படித்துப் படித்துக் கூறியிருந்தார். இவையெல்லாம் நினைவு வரவே, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வல்லவரையன் அடக்கிக் கொண்டான். குதிரையைத் தட்டி விட்டு வேகமாகச் செல்ல முயன்றான். என்ன தட்டி விட்டாலும் களைப்புற்றிருந்த அந்த குதிரை மெதுவாகவே சென்றது. இன்று இரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கிவிட்டு நாளைக் காலையில் புறப்படும்போது வேறு நல்ல குதிரை சம்பாதித்துக் கொண்டே கிளம்ப வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.
« Last Edit: June 17, 2012, 07:57:09 PM by Global Angel »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முதல் பாகம் : புது வெள்ளம்

2. ஆழ்வார்க்கடியான் நம்பி




ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்திய போது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே? கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தெளிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும், கொன்னை மரங்களும், கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும், செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும்? காவேரியின் இரு கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான சோழ பரம்பரையினர் எடுப்பித்துள்ள அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள் எவ்வளவு அழகாயிருக்கும்?

ஆகா! பழையாறை நகர்! சோழ மன்னர்களின் தலைநகர்! பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்து விட்ட பழையாறை! அந்நகரிலுள்ள மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், கடை வீதிகளும், படை வீடுகளும், சிவாலயக் கற்றளிகளும், திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக் கேட்டோ ர் பரவசமடைவார்கள் என்று வந்தியத்தேவன் கேள்வியுற்றிருந்தான். அவற்றையெல்லாம் கேட்கும் பேறு தனக்கு விரைவில் கிடைக்கப்போகிறது. இது மட்டுந்தானா? சில நாளைக்கு முன்பு வரையில் தான் கனவிலும் கருதாத சில பேறுகளும் கிட்டப்போகின்றன. வீரத்தில் வேலனையும் அழகில் மன்மதனையும் நிகர்த்த பராந்தக சுந்தர சோழ மகாராஜாவை நேருக்கு நேர் காணப்போகிறான். அவ்வளவுதானா? அவருடைய செல்வப் புதல்வி, ஒப்புயர்வில்லாத நாரீமணி குந்தவைப் பிராட்டியையும் காணப் போகிறான்.

ஆனால் வழியில் தடை எதுவும் நேராமல் இருக்கவேண்டும். எந்தத் தடை நேர்ந்தால்தான் என்ன? கையிலே வேல் இருக்கிறது. இடையில் தொங்கிய உறையிலே வாள் இருக்கிறது. மார்பிலே கவசம் இருக்கிறது. நெஞ்சிலே உரமிருக்கிறது. ஆனால் மகாதண்ட நாயகர், இளவரசர் ஆதித்தர், ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்; ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு யாரிடமும் சண்டை பிடிக்கக் கூடாதென்று. அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதுதான் மிகவும் கடினமாயிருந்தது. ஏதோ இவ்வளவு தூரமும் பிரயாணம் செய்த போது நிறைவேற்றியாகி விட்டது. இன்னும் இரண்டு நாளையப் பிரயாணம் தானே மிச்சமிருக்கிறது? அதுவரை பொறுமையுடன் இருந்தே தீர வேண்டும்.

ஆதவன் மறைவதற்குள் கடம்பூரை அடையவேண்டும் என்ற கருத்துடன் சென்று கொண்டிருந்த வந்தியத்தேவன் சிறிது நேரத்துக்கெல்லாம் வீர நாராயணபுர விண்ணகரக் கோயிலை நெருங்கினான்.

அன்று ஆடித் திருமஞ்சனத் திருவிழாவும் சேர்ந்திருந்தபடியால் கோயிலைச் சுற்றியுள்ள மரத் தோப்புகளில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருந்தது.

பலாச் சுளைகளும் வாழைப் பழங்களும் கரும்புக் கழிகளும் பலவகைத் தின்பண்டங்களும் விற்பவர்கள் ஆங்காங்கே கடை வைத்திருந்தார்கள். பெண்கள் தலையில் சூடிக் கொள்ளும் மலர்களையும், தேவ பூஜைக்குரிய தாமரை மொட்டுக்கள் முதலியவற்றையும் சிலர் விற்றுக்கொண்டிருந்தார்கள். தேங்காய், இளநீர், அகில், சந்தனம், வெற்றிலை, வெல்லம், அவல், பொரி முதலியவற்றைச் சிலர் குப்பல் குப்பலாகப் போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வேடிக்கை விநோதங்கள் நடந்து கொண்டிருந்தன. ஜோசியர்கள், ரேகை சாஸ்திரத்தில் வல்லவர்கள், குறி சொல்லுகிறவர்கள், விஷக்கடிக்கு மந்திரிப்பவர்கள் - இவர்களுக்கும் அங்கே குறைவில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சென்ற வந்தியத்தேவன் ஓரிடத்தில் ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருப்பதையும், அந்தக் கூட்டத்துக்குள்ளேயிருந்து யாரோ சிலர் உரத்த குரலில் வாக்குவாதம் செய்யும் சத்தம் வருவதையும் கவனித்தான். என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு ஆவல் பீறிட்டுக்கொண்டு எழுந்தது. அந்த ஆவலை அடக்கிக்கொள்ள அவனால் முடியவில்லை. கூட்டத்துக்கு வெளியே சாலை ஓரமாகக் குதிரையை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான். குதிரையை அங்கேயே நிற்கும்படி தட்டிக் கொடுத்துச் சமிக்ஞையால் சொல்லிவிட்டுக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு உள்ளே போனான்.

அங்கே விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மூன்றே பேர்தான் என்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால் விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூன்றே பேர் தான் என்றாலும், கூட்டத்திலிருந்தவர்கள் பலர் அவ்வப்போது அவரவர்களுக்கு உகந்த வாதக்காரரின் கட்சியை ஆதரித்துக் கோஷங்களைக் கிளப்பினார்கள். அதனாலேயே அவ்வளவு சத்தம் எழுந்தது என்பதை வந்தியத்தேவன் தெரிந்துகொண்டான். பிறகு என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைக் கவனித்தான்.

வாதமிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்வபுண்டரகமாகச் சந்தனம் அணிந்து தலையில் முன்குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி. கையில் அவர் ஒரு குறுந்தடியும் வைத்திருந்தார். கட்டையாயும் குட்டையாயும் வைரம் பாய்ந்த திருமேனியுடன் விளங்கினார்.

இன்னொருவர் தமது மேனியெல்லாம் பட்டை பட்டையாய்த் திருநீறு அணிந்திருந்த சிவபக்தர்.

மூன்றாவது மனிதர் காவி வஸ்திரம் தரித்துத் தலையையும் முண்டனம் செய்து கொண்டிருந்தார். அவர் வைஷ்ணவரும் அல்ல, சைவரும் அல்ல. இரண்டையும் கடந்தவரான அத்வைத வேதாந்தி என்று தெரியவந்தது.

சைவர் சொன்னார்:- "ஓ, ஆழ்வார்க்கடியான் நம்பியே! இதற்கு விடை சொல்லும்! சிவபெருமானுடைய முடியைக் காண்பதற்குப் பிரம்மாவும், அடியைக் காண்பதற்குத் திருமாலும் முயன்றார்களா, இல்லையா? முடியும் அடியும் காணாமல் இருவரும் வந்து சிவபெருமானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்தார்களா, இல்லையா? அப்படியிருக்கச் சிவபெருமானைக் காட்டிலும் உங்கள் திருமால் எப்படிப் பெரிய தெய்வம் ஆவார்?"

இதைக் கேட்ட ஆழ்வார்க்கடியான் நம்பி தன் கைத் தடியை ஆட்டிக் கொண்டு "சரிதான் காணும்! வீர சைவ பாததூளி பட்டரே! நிறுத்தும் உம் பேச்சை! இலங்கை அரசனாகிய தசகண்ட ராவணனுக்கு உம்முடைய சிவன் வரங்கள் கொடுத்தாரே? அந்த வரங்கள் எல்லாம் எங்கள் திருமாலின் அவதாரமாகிய இராமபிரானின் கோதண்டத்தின் முன்னால் தவிடு பொடியாகப் போகவில்லையா? அப்படியிருக்க, எங்கள் திருமாலைக் காட்டிலும் உங்கள் சிவன் எப்படிப் பெரிய தெய்வமாவார்?" என்று கேட்டான்.

இந்தச் சமயத்தில் காவி வஸ்திரம் அணிந்த அத்வைத சந்நியாசி தலையிட்டுக் கூறியதாவது:- "நீங்கள் இருவரும் எதற்காக வீணில் வாதம் இடுகிறீர்கள்? சிவன் பெரிய தெய்வமா, விஷ்ணு பெரிய தெய்வமா என்று எத்தனை நேரம் நீங்கள் வாதித்தாலும் விவகாரம் தீராது. இந்தக் கேள்விக்குப் பதில் வேதாந்தம் சொல்கிறது. நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில் தான் சிவன் - விஷ்ணு என்று சண்டையிடுவீர்கள். பக்திக்கு மேலே ஞானமார்க்கம் இருக்கிறது. ஞானத்துக்கு மேலே ஞாஸம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நிலையை அடைந்துவிட்டால் சிவனும் இல்லை, விஷ்ணுவும் இல்லை. சர்வம் பிரம்ம மயம் ஜகத். ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சாரியர் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...."

இச்சமயம் ஆழ்வார்க்கடியான் நம்பி குறுக்கிட்டு, "சரிதான் காணும் நிறுத்தும்! உம்முடைய சங்கராச்சாரியார் அவ்வளவு உபநிஷதங்களுக்கும் பகவத்கீதைக்கும் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் எழுதி விட்டுக் கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா?

"பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே"

என்று மூன்றுவாட்டி சொன்னார். உம்மைப் போன்ற மௌடீகர்களைப் பார்த்துத்தான் 'மூடமதே' என்று சங்கராச்சாரியார் சொன்னார்!" எனக் கூறியதும், அந்த கூட்டத்தில் 'ஆஹா' காரமும், பரிகாசச் சிரிப்பும், கரகோஷமும் கலந்து எழுந்தன.

ஆனால் சந்நியாசி சும்மா இருக்கவில்லை. "அடே! முன்குடுமி நம்பி! நான் 'மூடமதி' என்று நீ சொன்னது சரிதான். ஏனென்றால் உன் கையில் வெறுந்தடியை வைத்துக் கொண்டிருக்கும் நீ வெறுந்தடியன் ஆகிறாய். உன்னைப் போன்ற வெறுந்தடியனோடு பேச வந்தது என்னுடைய மூடமதியினால்தானே?" என்றார்.

"ஓய் சுவாமிகளே! என் கையில் வைத்திருப்பது வெறுந்தடியல்ல. வேண்டிய சமயத்தில் உம்முடைய மொட்டை மண்டையை உடைக்கும் சக்தி உடையதுங் காணும்!" என்று கூறிக் கொண்டே ஆழ்வார்க்கடியான் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அதைப் பார்த்த அவன் கட்சியார் 'ஓஹோ!' என்று ஆர்ப்பரித்தனர்.

அப்போது அத்வைத சுவாமிகள், "அப்பனே! நிறுத்திக் கொள்! தடி உன்னுடைய கையிலேயே இருக்கட்டும். அப்படியே நீ உன் கைத்தடியால் என்னை அடித்தாலும் அதற்காக நான் கோபங்கொள்ள மாட்டேன். உன்னுடன் சண்டைக்கு வரவும் மாட்டேன். அடிப்பதும் பிரம்மம்; அடி படுவதும் பிரம்மம். என்னை நீ அடித்தால் உன்னையே அடித்துக் கொள்கிறவனாவாய்!" என்றார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி, "இதோ எல்லோரும் பாருங்கள்! பிரம்மத்தைப் பரப்பிரம்மம் திருச்சாத்துச் சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன்!" என்று தடியைச் சுழற்றிக் கொண்டு சுவாமிகளை நெருங்கினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வல்லவரையனுக்கு ஒரு கணம் அந்த முன்குடுமி நம்பியின் கைத்தடியை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு அவனை அந்தத் தடியினால் நாலு திருச்சாத்துச் சாத்தலாமா என்று தோன்றியது.

ஆனால் திடீரென்று சுவாமியாரைக் காணோம்! கூட்டத்தில் புகுந்து அவர் மறைந்துவிட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவ கோஷ்டியார் மேலும் ஆர்ப்பரித்தார்கள்.

ஆழ்வார்க்கடியான் வீர சைவருடைய பக்கமாகத் திரும்பி, "ஓய் பாததூளி பட்டரே! நீர் என்ன சொல்லுகிறீர்? மேலும் வாதம் செய்ய விரும்புகிறீரா? அல்லது சுவாமியாரப் போல் நீரும் ஓட்டம் எடுக்கிறீரா?" என்றான்.

"நானா? ஒருநாளும் நான் அந்த வாய் வேதாந்தியைப் போல் ஓட்டம் எடுக்க மாட்டேன். என்னையும் உம்முடைய கண்ணன் என்று நினைத்தீரோ? கோபியர் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டு மத்தால் அடிபட்டவன் தானே உம்முடைய கண்ணன்!..." என்று பாததூளி பட்டர் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் குறுக்கிட்டான். "ஏன் காணும்? உம்முடைய பரமசிவன் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் அடிபட்டதை மறந்து விட்டீரோ!" என்று கேட்டுக் கொண்டு கைத்தடியை வீசிக் கொண்டு வீர சைவர் அருகில் நெருங்கினான்.

ஆழ்வார்க்கடியான் நல்ல குண்டாதி குண்டன். வீரசைவராகிய பாததூளி பட்டரோ சற்று மெலிந்த மனிதர்.

மேற்கூரிய இருவரையும் விவாதத்தில் உற்சாகப்படுத்தி வந்தவர்கள், தாங்களும் கைகலக்க ஆயத்தமாகி ஆரவாரம் செய்தார்கள்.

இந்த மூடச் சண்டையைத் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனத்தில் உண்டாயிற்று.

அவன் நின்ற இடத்திலிருந்து சற்று முன்னால் வந்து, "எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா? சண்டைக்குத் தினவு எடுத்தால் ஈழ நாட்டுக்குப் போவதுதானே? அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறதே?" என்றான்.

நம்பி சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து, "இவன் யாரடா நியாயம் சொல்ல வந்தவன்?" என்றான்.

கூட்டத்திலே இருந்தவர்களில் சிலருக்கு, வந்தியத்தேவனுடைய வீரத் தோற்றமும் அவனுடைய அழகிய முக விலாசமும் பிடித்திருந்தன.

"தம்பி! நீ சொல்லு! இந்தச் சண்டைக்காரர்களுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லு! உனக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்!" என்று அவர்கள் சொன்னார்கள்.

"எனக்கு தெரிந்த நியாயத்தைச் சொல்லுகிறேன். சிவபெருமானும் நாராயணமூர்த்தியும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் சிநேகமாகவும் சுமுகமாகவும் இருந்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்த நம்பியும், பட்டரும் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?" என்று வல்லவரையன் கூறியதைக் கேட்டு, அக்கூட்டத்தில் பலரும் நகைத்தார்கள்.

அப்போது வீரசைவ பட்டர், "இந்தப் பிள்ளை அறிவாளியாகவே தோன்றுகிறான். ஆனால் வேடிக்கைப் பேச்சினால் மட்டும் விவாதம் தீர்ந்து விடுமோ? சிவன் பெரிய தெய்வமா, திருமால் பெரிய தெய்வமா! என்ற கேள்விக்கு இவன் விடை சொல்லட்டும்!" என்றார்.

"சிவனும் பெரிய தெய்வந்தான்; திருமாலும் பெரிய தெய்வந்தான். இருவரும் சமமான தெய்வங்கள். யாரை வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள். சண்டை எதற்கு?" என்றான் வல்லவரையன்.

"அது எப்படிச் சொல்லலாம்? சிவனும் விஷ்ணுவும் சமமான தெய்வங்கள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் என்ன?" என்று ஆழ்வார்க்கடியான் அதட்டிக்கேட்டான்.

"ஆதாரமா? இதோ சொல்கிறேன்! நேற்று மாலை வைகுண்டத்துக்குப் போயிருந்தேன் - அதே நேரத்தில் பரமசிவனும் அங்கே வந்திருந்தார். இருவரும் சம ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடைய உயரம் ஒன்றாகவே இருந்தது. ஆயினும் ஐயத்துக்கு இடமின்றி என் கையினால் முழம்போட்டு இருவர் உயரத்தையும் அளந்து பார்த்தேன்..."

"அட பிள்ளாய் பரிகாசமா செய்கிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜனை செய்தான்.

கூட்டத்தினர், "சொல்லு, தம்பி! சொல்லு!" என்று ஆர்ப்பரித்தார்கள்.

"அளந்து பார்த்ததில் இருவரும் சமமான உயரமே இருந்தார்கள். அதோடு விடாமல் சிவனையும் திருமாலையும் நேரிலேயே கேட்டு விட்டேன். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு' என்று சொன்னார்கள். அவ்விதம் சொல்லி, தங்களைப் பற்றிச் சண்டை போடுகிறவர்களின் வாயிலே போடுவதற்கு இந்தைப் பிடி மண்ணையும் கொடுத்தார்கள்!" என்று கூறிய வல்லவரையன், மூடியிருந்த தனது வலக்கையைத் திறந்து காட்டினான். அதற்குள்ளே ஒரு பிடி மண் இருந்தது. அதை வீசி உதறினான்.

கூட்டத்திலிருந்தவர்களில் பலர் அப்போது பெரும் உற்சாகங்கொண்டு தலைக்குத் தலை தரையிலிருந்து ஒருபிடி மண் எடுத்து, நம்பியின் தலையிலும் பட்டர் தலையிலும் வீசி எறிய ஆரம்பித்தார்கள். இந்தத் துராக்ரகச் செயலைச் சிலர் தடுக்க முயன்றார்கள்.

"அடே! தூர்த்தர்களா! நாஸ்திகர்களா!" என்று சொல்லிக் கொண்டு ஆழ்வார்க்கடியான் தன் கைத் தடியைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்திற்குள் பிரவேசித்தான்.

ஒரு பெரிய கலவரமும் அடிதடி சண்டையும் அப்போது அங்கே நிகழும் போலிருந்தன.

நல்லவேளையாக, அந்த சமயத்தில், சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது.

"சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள்!" என்று இடிமுழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது.

இவ்வாறு கட்டியம் கூறியவர்கள் முதலில் வந்தார்கள். பிறகு முரசு அடிப்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பனைமரக்கொடி தாங்குவோர் வந்தார்கள். பின்னர், கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வந்தார்கள்.

இவர்களுக்கு பின்னால் வந்த அலங்கரித்த யானையின் மீது ஆஜானுபாகுவான கரிய திருமேனியர் ஒருவர் வீற்றிருந்தார். மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரிய கொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது.

கூட்டத்தில் இருந்தவர்கள் அத்தனைபேரும் சாலையின் இருபுறத்திலும் வந்து நின்றதுபோல் வல்லவரையனும் வந்து நின்று பார்த்தான். யானை மீது இருந்தவர் தான் பழுவேட்டரையர் என்பதை ஊகித்துக் கொண்டான்.

யானைக்குப் பின்னால் பட்டுத் திரையினால் மூடப்பட்ட சிவிகை ஒன்று வந்தது. அதற்குள் இருப்பது யாரோ என்று வல்லவரையன் சிந்திப்பதற்குள்ளே, செக்க சிவந்த நிறத்துடன் வளையல்களும் கங்கணங்களும் அணிந்த ஒரு கரம் சிவிகைக்குள்ளேயிருந்து வெளிப்பட்டுப் பல்லக்கின் பட்டுத் திரையைச் சிறிது விலக்கியது, மேகத்தினால் மூடப்பட்டிருந்த பூரண சந்திரன் மேகத் திரை விலகியதும் பளீரென்று ஒளி வீசுவது போல் சிவிகைக்குள்ளே காந்தி மயமான ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.

பெண் குலத்தின் அழகைக் கண்டு களிக்கும் கண்கள் வல்லவரையனுக்கு உண்டு என்றாலும், அந்தப் பெண்ணின் முகம் பிரகாசமான பூரண சந்திரனையொத்த பொன் முகமாயிருந்தாலும் எக்காரணத்தினாலோ வல்லவரையனுக்கு அம்முகத்தைப் பார்த்ததும் உள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றவில்லை. இனந்தெரியாத பயமும் அருவருப்பும் ஏற்பட்டன.

அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் கண்கள் வல்லவரையனுக்கு அருகில் உற்று நோக்கின. மறுகணம் ஒரு பீதிகரமான பெண் குரலில் 'கிறீச்' என்ற கூச்சல் கேட்டது. உடனே சிவிகையின் பட்டுத் திரை முன்போல் மூடிக் கொண்டது.

வல்லவரையன் தன் அக்கம் பக்கத்தில் நோக்கினான், தனக்கு அருகில் எதையோ யாரையோ பார்த்துவிட்டுத்தான் அந்த மாது 'கிறீச்' சிட்டு விட்டுச் சிவிகைத் திரையை மூடிக்கொண்டாள் என்று அவன் உள்ளுணர்ச்சி சொல்லிற்று. எனவே, சுற்றுமுற்றும் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தனக்குச் சற்றுப் பின்னால் ஒரு புளிய மரத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதைக் கண்டான். அந்த வீர வைஷ்ணவ நம்பியினுடைய முகம் சொல்ல முடியாத விகாரத்தை அடைந்து கோர வடிவமாக மாறியிருப்பதையும் பார்த்தான். வல்லவரையனுடைய உள்ளத்தில் காரணம் விளங்காத திகைப்பும் அருவருப்பும் ஏற்பட்டன.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முதல் பாகம் : புது வெள்ளம்

3. விண்ணகரக் கோயில்


சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன. வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது.

சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.

பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.

"அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன்.

"குருதை என்று சொல்லாதேடா! குதிரை என்று சொல்!" என்றான் இன்னொருவன்.

"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குதிரையா அல்லது கழுதையா என்று தெரிந்துகொள்ளுங்கள்!" என்றான் இன்னொரு வேடிக்கைப் பிரியன்.

"அதையும் பார்த்துவிடலாமா!" என்று சொல்லிக் கொண்டு அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் தாவி ஏற முயன்றான். ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது.

"இது பொல்லாத குதிரையடா! இதன்பேரில் நான் ஏறக் கூடாதாம்! பரம்பரையான அரசகுலத்தவன் தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன்மேல் ஏறவேண்டும்!" என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள்.

ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசிந்துப்போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்கள் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது.

"குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற தாண்டவராயனே மேல் என்பேன்!" என்றான் மற்றொரு வீரன்.

"தாண்டவராயா! உன்னை ஏற்றிக்கொள்ள மறுக்கும் குதிரை நிஜக்குதிரைதானா என்று பார்த்துவிடு! ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்!" என்றான் மற்றொரு பரிகாசப் பிரியன்.

"அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது.

"குருதை ஓடுகிறதடா! நிஜக் குருதைதானடா!" என்று அவ்வீரர்கள் கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும் விரட்டினார்கள்.

குதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன் காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை நெறி கெட்டு வெறிகொண்டு ஓடியது.

இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்துவிட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான்.

"பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை! என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே?' என்று குத்திக் காட்டினான்.

வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைபிடித்தான். பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்கு போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள்.

குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு என்றைக்காவது ஒருநாள் நன்றாகப் புத்தி கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

புளியந்தோப்புக்கு அப்பால், ஜன சஞ்சாரமில்லாத இடத்தில் குதிரை சோகமே வடிவமாக நின்று கொண்டிருந்தது. வந்தியத்தேவன் அதன் அருகில் சென்றதும், குதிரை கனைத்தது. "ஏன் என்னைவிட்டு பிரிந்து சென்று, இந்தச் சங்கடத்துக்கு உள்ளாக்கினாய்?" என்று அந்த வாயில்லாப் பிராணி குறை கூறுவதுபோல் அதன் கனைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தினான். பிறகு அதைத் திருப்பி அழைத்துக் கொண்டு சாலைப்பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, "இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டுவந்தாய், தம்பி! எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது?" என்றார்கள்.

"இந்தப் பிள்ளை என்ன செய்வான்? குதிரைதான் என்ன செய்யும்? அந்தப் பழுவேட்டரையரின் முரட்டு ஆட்கள் அல்லவா இப்படிச் செய்துவிட்டார்கள்?" என்று இரண்டொருவர் சமாதானம் சொன்னார்கள்.

ஆழ்வார்க்கடியான் இன்னமும் சாலையில் காத்துக்கொண்டு நின்றான். "இதேதடா சனியன்? இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே!" என்று எண்ணி வந்தியத்தேவன் முகத்தைச் சுளுக்கினான்.

"தம்பி! நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"நானா? கொஞ்சம் மேற்குப் பக்கம் சென்று, பிறகு, தெற்குப் பக்கம் திரும்பி, சிறிது கிழக்குப் பக்கம் வளைத்துக்கொண்டு போய் அப்புறம் தென்மேற்குப் பக்கம் போவேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்".

"நீ எதற்காக அதைக் கேட்கிறாய்?"

"ஒருவேளை கடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால் எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது..."

"உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய்?"

"இதில் என்ன அதிசயம்? இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள். பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான் போகிறார்கள்.

"மெய்யாகவா?" என்று வந்தியத்தேவன் தன் வியப்பை வெளியிட்டான்.

"மெய்யாகத்தான்! அது உனக்கு தெரியாதா, என்ன? யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் கடம்பூர் அரண்மனையைச் சேர்ந்தவைதான். பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப் போகின்றன. பழுவேட்டரையர் எங்கே போனாலும் இந்த மரியாதையெல்லாம் அவருக்கு நடைபெற்றே ஆக வேண்டும்."

வந்தியத்தேவன் மௌன யோசனையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர் தங்குமிடத்தில் தானும் தங்குவதென்பது எளிதில் கிடைக்ககூடிய வாய்ப்பு அல்ல. அந்த மாபெரும் வீரருடன் பழக்கம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவருடைய முரட்டுப் பரிவாரங்களுடன் ஏற்பட்ட அனுபவம் இன்னும் அவனுக்குக் கசந்து கொண்டிருந்தது.

"தம்பி! எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான்.

"உனக்கு நான் செய்யக்கூடிய உதவி என்ன இருக்கமுடியும்? இந்தப் பக்கத்துக்கே நான் புதியவன்."

"உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன். இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ!"

"எதற்காக? அங்கே யாராவது வீர சைவர் வருகிறாரா? 'சிவன் பெரிய தெய்வமா? திருமால் பெரிய தெய்வமா?' என்று விவாதித்து முடிவு கட்டப் போகிறீர்களா?"

"இல்லை, இல்லை, சண்டை பிடிப்பதே என் வேலை என்று நினைக்க வேண்டாம். இன்றிரவு கடம்பூர் மாளிகையில் பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்குப் பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து - எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை!"

"அப்படியிருந்தாலும், நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்?"

"என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது."

வந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம் வலுப்பட்டது.

"அந்த மாதிரி ஏமாற்று மோசடிக்கெல்லாம் நீ வேறு யாரையாவது பார்க்கவேண்டும். உன்னைப் போன்ற பணியாளன் எனக்குத் தேவையில்லை. சொன்னால் நம்பவும் மாட்டார்கள். மேலும் நீ சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் என்னையே இன்று கோட்டைக்குள் விடுவார்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது."

"அப்படியானால், நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்றுப் போகவில்லையென்று சொல்லு!"

"ஒரு வகையில் அழைப்பு இருக்கிறது. சம்புவரையர் மகன் கந்தமாறவேள் என்னுடைய உற்ற நண்பன். இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடைய அரண்மனைக்கு அவசியம் வரவேணுமென்று என்னைப் பலமுறை அழைத்திருக்கிறான்."

"இவ்வளவுதானா? அப்படியானால் உன் பாடே இன்றைக்குக் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருக்கும்!"

இருவரும் சிறிது நேரம் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

"ஏன் என்னை இன்னும் தொடர்ந்து வருகிறாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அந்தக் கேள்வியையே நானும் திருப்பிக் கேட்கலாம். நீ ஏன் என்னைத் தொடர்கிறாய்? உன் வழியே போவதுதானே?"

"வழி தெரியாத குற்றத்தினால் தான், நம்பி! நீ எங்கே போகிறாய்? ஒருவேளை கடம்பூருக்குத்தானா?"

"இல்லை; நீ தான் என்னை அங்கு அழைத்துப் போக முடியாது என்று சொல்லிவிட்டாயே? நான் விண்ணகரக் கோயிலுக்குப் போகிறேன்."

"வீரநாராயணப் பெருமாள் சந்நிதிக்குத்தானே?"

"ஆம்."

"நானும் அந்த ஆலயத்துக்கு வந்து பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன்."

"ஒருவேளை விஷ்ணு ஆலயத்துக்கு நீ வரமாட்டாயோ என்று பார்த்தேன். பார்க்க வேண்டிய கோயில்; தரிசிக்க வேண்டிய சந்நிதி. இங்கே ஈசுவரமுனிகள் என்ற பட்டர், பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துவருகிறார். அவர் பெரிய மகான்."

"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே கூட்டமாயிருக்கிறதே! கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ?"

"ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம். ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும் சேர்ந்து கொண்டது. அதனால்தான் இவ்வளவு கோலாகலம். தம்பி! ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா?"

"கேட்டதில்லை."

"கேட்காதே! அதைக் காதினாலேயே கேட்காதே!"

"ஏன் அவ்வளவு வைஷம்யம்?"

"வைஷம்யமும் இல்லை; விரோதமும் இல்லை; உன்னுடைய நன்மைக்குச் சொன்னேன். ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்டு விட்டாயானால், அப்புறம் வாளையும் வேலையும் விட்டெறிந்து விட்டு என்னைப் போல் நீயும் கண்ணன் மேல் காதல் கொண்டு விண்ணகர யாத்திரை கிளம்பி விடுவாய்!"

"உனக்கு ஆண்டாள் பாசுரங்கள் தெரியுமா? பாடுவாயா?"

"சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும். பெருமாள் சந்நிதியில் பாடப் போகிறேன் வேணுமானால் கேட்டுக் கொள்! இதோ கோவிலும் வந்து விட்டது!"

இதற்குள் உண்மையிலேயே வீரநாராயணப் பெருமாள் கோயிலை அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள்
* * * * *

விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தக சோழன் 'மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ் பெற்றவன். சோழ சிகாமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.

பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக் கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற் புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்துகொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.

அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-

"பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொள்மின்
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழி தரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்!
தொண்டீர் எல்லீரும் வாரீர்!
தொழுது தொழுது நின்றார்த்தும்!
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடி நின்றாடிப்
பரந்து திரிகின்றனவே!"

இவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. வந்தியத்தேவன் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டுவந்தான். அவனுக்கு கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம் கசிந்துருகியது. ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும் மாறியது. 'இவன் பரமபக்தன்!' என்று எண்ணிக்கொண்டான்.

வந்தியதேவனைப் போலவே கவனமாக அப்பாசுரங்களை இன்னும் சிலரும் கேட்டார்கள். கோவில் முதலிமார்கள் கேட்டார்கள். அர்ச்சகர் ஈசுவரப்பட்டரும் கண்ணில் நீர் மல்கி நின்று கேட்டார். அவருக்கு அருகில் நின்று கொண்டு அவருடைய இளம் புதல்வன் பால்மணம் மாறாப் பாலகன் ஒருவன் கேட்டிருந்தான்.

ஆழ்வார்க்கடியான் பத்துப் பாசுரங்களைப் பாடிவிட்டு

"கலி வயல் தென்னை குருகூர்க்
காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும்
உள்ளத்தை மாசறுக்குமே"

என்று பாசுரத்தை முடித்தான்.

கேட்டிருந்த பட்டரின் குமாரனாகிய பாலகன் தன் தந்தையிடம் ஏதோ கூறினான். அவர் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "ஐயா! குருகூர்ச் சடகோபர் என்னும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறதே? அவ்வளவும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"அடியேன் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. சில பத்துக்கள்தான் எனக்குத் தெரியும்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"தெரிந்தவரையில் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்க வேணும்" என்றார் ஈசுவரமுனிகள்.
* * * * *

பின்னால், இந்த ஊர் பல பெருமைகளை அடையப் போகிறது. பால் வடியும் முகத்தில் தேஜஸ் பொலிய நின்று நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்ட பாலகன் வளர்ந்து, நாதமுனிகள் என்ற திருநாமத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரையில் முதலாவது ஆச்சாரியார் ஆகப் போகிறார். குருகூர் என்னும் ஆழ்வார் திருநகருக்குச் சென்று 'வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின்' ஆயிரம் பாசுரங்களையும் தேடிச் சேகரித்து வரப்போகிறார். அப்பாசுரங்களை அவருடைய சீடர்கள் இசையுடன் பாடி நாடெங்கும் பரப்பப் போகிறார்கள்.

நாதமுனிகள் பேரராக அவதரிக்கப் போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.

இந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸ்ரீ ராமானுஜரே ஒரு நாள் வரப்போகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அதன் எழுபத்து நான்கு கணவாய்களையும் பார்த்து அதிசயிக்கப் போகிறார். ஏரித் தண்ணீர் எழுபத்து நாலு கணவாய்களின் வழியாகப் பாய்ந்து மக்களை வாழ வைப்பது போலவே, நாராயணனுடைய கருணை வெள்ளத்தை ஜீவகோடிகளுக்குப் பாயச் செய்வதற்காக எழுபத்து நாலு ஆச்சார்ய பீடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மகானின் உள்ளத்தில் உதயமாகப் போகிறது. அதன்படியே எழுபத்து நான்கு 'சிம்மாசனாதிபதிகள்' என்ற பட்டத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் ஏற்படப் போகிறார்கள்.

இந்த மகத்தான நிகழ்ச்சிகளையெல்லாம் வைஷ்ணவ குரு பரம்பரைச் சரித்திரம் விவரமாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டு, மறுபடியும் நாம் வந்தியத்தேவனைக் கவனிப்போம்.

பெருமாளைச் சேவித்துவிட்டு ஆலயத்துக்கு வெளியில் வந்ததும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நம்பிகளே! தாங்கள் இத்தகைய பரம பக்தர் என்றும், பண்டித சிகாமணி என்றும் எனக்குத் தெரியாமல் போயிற்று, ஏதாவது அபசாரமாக நான் பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும்" என்றான்.

"மன்னித்து விடுகிறேன்; தம்பி! ஆனால் இப்போது எனக்கு, ஒரு உதவி செய்வாயா, சொல்!"

"தாங்கள் கேட்கும் உதவி என்னால் முடியாது என்றுதான் சொன்னேனே? நீங்களும் ஒப்புக் கொண்டீர்களே?"

"இது வேறு விஷயம். ஒரு சிறிய சீட்டுக் கொடுக்கிறேன். கடம்பூர் அரண்மனையில் நீ தங்கினால் தக்க சமயம் பார்த்து ஒருவரிடம் அதைக் கொடுக்க வேண்டும்."

"யாரிடம்?"

"பழுவேட்டரையரின் யானைக்குப் பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம்!"

"நம்பிகளே! என்னை யார் என்று நினைத்தீர்கள்? இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான் தானா அகப்பட்டேன்? தங்களைத் தவிர வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்..."

"தம்பி! படபடப்பு வேண்டாம்! உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா! ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும். பாதகமில்லை, போய் வா!"

வந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம் கூட நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி விரைவாக விட்டுக்கொண்டு கடம்பூரை நோக்கிச் சென்றான்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முதல் பாகம் : புது வெள்ளம்

4. கடம்பூர் மாளிகை


இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது. ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.

கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்ன வென்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் ஆவலும் ஒரு பக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல்பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது.

தயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்டுக்கொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம்! குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலுபேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான்.

வல்லவரையன் முகத்தில் கோபம் கொதிக்க, "இதுதான் உங்கள் ஊர் வழக்கமா? வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது...?" என்றான்.

"நீ யார் தம்பி இவ்வளவு துடுக்காகப் பேசுகிறாய்? எந்த ஊர்?" என்றான் வாசற் காவலன்.

"என் ஊரும் பேருமா கேட்கிறாய்? வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள்! என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்! தெரிந்ததா?" என்றான்.

"இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரனையும் கூட அழைத்து வருவதுதானே?" என்றான் காவலர்களில் ஒருவன். இதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்தார்கள்.

"நீ யாராயிருந்தாலும் இனி உள்ளே போக முடியாது! இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை!" என்றான் காவலர் தலைவன்.

ஏதோ வாக்குவாதம் நடக்கிறதைப் பார்த்துக் கோட்டைக்குள்ளே சற்று தூரத்தில் நின்ற சில வீரர்கள் அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன், "அடே! நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா!" என்றான்.

"இன்னொருவன் கழுதை என்று சொல்லடா" என்றான்.

"கழுதைமேல் உட்கார்ந்திருக்கிறவன் என்ன விறைப்பாக உட்கார்ந்திருக்கிறான் பாரடா!" என்றான் மற்றொருவன்.

வல்லவரையன் காதில் இந்தச் சொற்கள் விழுந்தன.

அவன் மனதிற்குள், "என்னத்திற்கு வீண் வம்பு? திரும்பிப் போய் விடலாமா? அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா?" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக் கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா? இப்படி அவன் மனத்திற்குள் விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் பழுவேட்டரையர் ஆட்களின் கேலிப் பேச்சு அவன் காதில் விழுந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான்.

"குதிரையை விடுங்கள்; திரும்பிப் போகிறேன்!" என்றான்.

தடுத்த வீரர்கள் குதிரையின் முகக்கயிற்றை விட்டார்கள்.

குதிரையின் அடிவயிற்றில் வந்தியத்தேவன் தன் இரு கால்களினாலும் ஒரு அழுத்து அழுத்தினான். அதே நேரத்தில் உடைவாளை உறையிலிருந்து உருவி எடுத்தான். மின்னல் ஒளியுடன் கண்ணைப் பறித்த அந்த வாள் சுழன்ற வேகத்தினால் அவனுடைய கையில் திருமாலின் சக்கராயுதத்தை வைத்துக் கொண்டு சுழற்றுவது போல் தோன்றியது. குதிரை முன்னோக்கிக் கோட்டைக்குள்ளே பாய்ந்து சென்றது. வழியிலிருந்த வீரர்கள் திடீர் திடீரென்று கீழே விழுந்தார்கள். வேல்கள் சடசடவென்று அடித்துக்கொண்டு விழுந்தன. வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. இந்த மின்னல் தாக்குதலைச் சிறிதும் எதிர்பாராத வீரர்கள் நாற்புறமும் சிதறிச் சென்றார்கள்.

இதற்குள் வேறு பல காரியங்கள் நிகழ்ந்து விட்டன. கோட்டைக் கதவுகள் தடால் என்று சாத்தப்பட்டன. "பிடி! பிடி!" என்ற கூக்குரல்கள் எழுந்தன. வேல்களும் வாள்களும் உராய்ந்து 'கிளாங்' 'கிளாங்' என்று ஒலித்தன. திடீரென்று அபாயம் அறிவிக்கும் முரசு 'டடம்!' 'டடம்!' என்று முழங்கிற்று.

வந்தியத்தேவன் குதிரையைச் சுற்றிலும் வீரர்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். இருபது, முப்பது, ஐம்பது பேருக்கு மேலேயே இருக்கும். குதிரையின் மேலிருந்த வந்தியத்தேவன் பாய்ந்து தரையில் குதித்தான். கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, "கந்தமாறா! கந்தமாறா! உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்!" என்று கத்தினான்.

இந்தக் கத்தலைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.

அச்சமயம் மாளிகையின் மேல் மாட முகப்பிலிருந்து, "அங்கே என்ன கூச்சல்? நிறுத்துங்கள்!" என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்திலிருந்து ஏழெட்டுப் பேர் நின்று கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"எஜமான்! யாரோ ஒரு ஆள் காவலை மீறிப் புகுந்து விட்டான். சின்ன எஜமான் பெயரைச் சொல்லிக் கூவுகிறான்!" என்று கீழேயிருந்த ஒருவன் சொன்னான்.

"கந்தமாறா! நீ போய்க் கலவரம் என்னவென்று பார்!" - இவ்விதம் மேல் மாடத்திலிருந்து அதே இடிமுழக்கக் குரல் சொல்லிற்று. அந்தக் குரலுக்கு உடையவர்தான் செங்கண்ணர் சம்புவரையர் போலும் என்று வந்தியத்தேவன் எண்ணினான்.

அவனும் அவனைச் சுற்றி நின்ற வீரர்களும் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள்.

"இங்கே என்ன ஆர்ப்பாட்டம்?" என்ற ஒரு இளங்குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் நின்றவர்கள் விலகிக் கொண்டு வழி ஏற்படுத்தினார்கள். வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். கையில் பிடித்த கத்தியை இலேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல் நின்ற வந்தியத்தேவனை ஒருகணம் வியப்புடன் நோக்கினான்.

"வல்லவா! என் அருமை நண்ப! உண்மையாகவே நீதானா?" என்று உணர்ச்சி ததும்பக் கூவிக்கொண்டு ஓடிச் சென்று வல்லவரையனை அந்த இளைஞன் கட்டித் தழுவிக் கொண்டான்.

"கந்தமாறா! நீ படித்துப் படித்துப் பல தடவை சொன்னாயே என்று உன் வீட்டுக்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இத்தகைய வீர வரவேற்புக் கிடைத்தது" என்று வந்தியத்தேவன் தன்னைச் சுற்றி நின்றவர்களைச் சுட்டிக் காட்டினான்.

அவர்களைப் பார்த்து "சீ! முட்டாள்களே! போங்களடா! உங்கள் அறிவு உலக்கைக் கொழுந்துதான்!" என்றான் கந்தமாறன்.

* * * * *

கந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போனான். அவனுடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்டு ஒரு நண்பன் கிடைத்தால் அதைக்காட்டிலும் ஒருவனைப் பரவசப்படுத்தக் கூடியது வேறு என்ன உண்டு? காதல் என்பது ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காதலில் இன்பமும் குதூகலமும் எத்தனை உண்டோ அதைவிட அதிகமாக துன்பமும் வேதனையும் உண்டு. யௌவனத்துச் சிநேக குதூகலத்திலோ துன்பத்தின் நிழல் கூட விழுவதில்லை. ஒரே ஆனந்தமயமான இதயப் பரவசந்தான்.

போகிற போக்கில், வல்லவரையன், "கந்தமாறா! இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது? இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக?" என்றான்.

"இன்றைக்கு இங்கே என்ன விசேஷம் என்பதைப் பற்றி அப்புறம் விவரமாகச் சொல்கிறேன். நீயும் நானும் பெண்ணையாற்றங்கரைப் பாசறையில் தங்கியிருந்த போது, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்; மழவரையரைப் பார்க்கவேண்டும்; அவரைப் பார்க்கவேண்டும்; இவரைப் பார்க்க வேண்டும்; என்று சொல்வாயே? அந்த அவர், இவர், சுவர் - எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே நீ பார்த்துவிடலாம்!" என்றான் கந்தமாறன்.

பிறகு விருந்தாளிகள் அமர்ந்திருந்த மாளிகை மேல் மாடத்துக்கு வல்லவரையனைக் கந்தமாறன் அழைத்துச் சென்றான். முதலில் தன் தந்தையாகிய சம்புவரையரிடம் கொண்டுபோய் நிறுத்தி, "அப்பா! என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவனைப் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேனே? அவன் இவன் தான்!" என்றான். வந்தியத்தேவன் பெரியவரைக் கும்பிட்டு வணங்கினான். அதைக் குறித்து சம்புவரையர் அவ்வளவாக மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றவில்லை.

"அப்படியா? கீழே அரண்மனை வாசலில் அவ்வளவு கலவரம் செய்தவன் இவன் தானா?" என்று கேட்டார்.

"கலவரத்துக்குக் காரணம் என் தோழன் அல்ல; வாசல் காப்பதற்கு நாம் அமர்த்தியிருக்கும் மூடர்கள்!" என்றான் கந்தமாறவேள்.

"இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருட்டி அரை ஜாமத்திற்குப் பிறகு, இவன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை!" என்றார் சம்புவரையர்.

கந்தமாறவேளின் முகம் சுருங்கிற்று. மேலும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அப்பால் அழைத்துச் சென்றான். வந்திருந்த விருந்தாளிகளுக்கு மத்தியில் நடுநாயகமாக ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த பழுவேட்டரையரிடம் அழைத்துப் போய், "மாமா! இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன். வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா?' என்று கேட்டுக் கொண்டிருப்பான். 'ஒரு நாள் நீயே எண்ணிப் பார்த்துக் கொள்' என்று நான் சொல்லுவேன்" என்றான்.

பழுவேட்டரையர் சுருங்கிய முகத்துடன், "அப்படியா, தம்பி! நீயே எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ? அவ்வளவு அவநம்பிக்கையா உனக்கு? 'வாணர் குலத்தைக் காட்டிலும் வேறு குலத்தில் வீரம் இருக்க முடியுமா?' என்ற சந்தேகமோ?" என்றார்.

தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். தோத்திரமாகச் சொன்னதை இப்படி இவர் குதர்க்கமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

வந்தியத்தேவனுடைய மனத்தில் எரிச்சல் குமுறியது. ஆயினும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், "ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரிமுனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார்?" என்று பணிவுடன் சொன்னான்.

"நல்ல மறுமொழி; கெட்டிக்காரப் பிள்ளை!" என்றார் பழுவேட்டரையர்.

இந்தமட்டில் பிழைத்தோம் என்று வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். அப்போது சம்புவரையர் தமது மகனை அழைத்துக் காதோடு, "உன் தோழனுக்குச் சீக்கிரம் உணவு அளித்து எங்கேயாவது ஒரு தனி இடத்தில் படுக்கச் சொல்லு! நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருக்கிறான்" என்றார்.

பிறகு கந்தமாறன் வந்தியத்தேவனை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே பெண்கள் பலர் இருந்தார்கள். மாறவேளின் அன்னைக்கு வந்தியத்தேவன் நமஸ்காரம் செய்தான். அவளுக்கு பின்னால் கூச்சத்துடன் மறைந்திருக்கும் பெண்தான் கந்தமாறனின் சகோதரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.

'தங்கச்சி'யைப் பற்றி மாறவேள் பல தடவை சொன்னதில் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருந்தான் வந்தியத்தேவன். இப்போது ஒருவாறு ஏமாற்றமே அடைந்தான்.

அந்தப் பெண்களின் கூட்டத்திலே பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த மாது யாராக இருக்கலாம் என்பதை அறிய வந்தியத்தேவனுடைய கண்கள் தேடி அலைந்தன.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முதல் பாகம் : புது வெள்ளம்

5. குரவைக் கூத்து


அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், "கந்தமாறா! கந்தமாறா!" என்று அழைத்தது.

"அம்மா என்னைக் கூப்பிடுகிறாள். இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன் தட்டுத் தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர் அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது.

தன்னைப் பற்றித்தான் அவ்விதம் அவர்கள் கேலிசெய்து சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் வந்தியத்தேவனுக்கு வெட்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது. கந்தமாறன் வெளியே வந்ததும் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துக் கொண்டு, "வா! எங்கள் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்!" என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனான்.

கடம்பூர் மாளிகையின் நிலாமுற்றங்கள், ஆடல் பாடல் அரங்கங்கள் பண்டக சாலைகள், பளிங்கு மண்டபங்கள், மாட கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக்கொண்டு சென்றான்.

இடையில் வந்தியத்தேவன், "கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று கேட்டான்.

"உன்னை பார்த்ததில் அவர்களுக்கெல்லாம் சந்தோஷந்தான். உன்னை அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். ஆனால் உன்னைக் குறித்து அவர்கள் சிரிக்கவில்லை."

"பின்னே எதற்காகச் சிரித்தார்களாம்?"

"பழுவேட்டரையர் இருக்கிறார் அல்லவா? இத்தனை வயதுக்குப் பிறகு அவர் புதிதாக ஒரு இளம் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறார். மூடு பல்லக்கில் வைத்து அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அந்தப்புரத்துக்கு அவளை அனுப்பாமல் அவருடைய விடுதியிலேயே அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறாராம்! அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பார்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக் குறித்துத்தான் சிரிப்பு! அவள சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ, அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள்! பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா?"

"கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன், நீதான் முன்னொரு தடவை சொல்லியிருக்கிறாய். இருக்கட்டும், கந்தமாறா! பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது?"

"மூன்று ஆண்டுக்குள்ளேதான் இருக்கும். மணம் செய்து கொண்டதிலிருந்து அவளைத் தனியாகச் சிறிது நேரம் கூட அவர் விட்டு வைப்பதில்லையாம்! எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும் அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு நடந்து வருகிறது. வந்தியத்தேவா! ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே இருக்கும்?"

"காரணம் அது ஒன்றுமில்லை. உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா, கந்தமாறா? பெண்களே எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே! பெண் உலகமே இப்படித்தான்! உன் குடும்பத்துப் பெண்கள் கருநிறத்து அழகிகள். பழுவேட்டரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலென்று பொன்னிறமாயிருக்கிறாள். ஆகையால் அவளை இவர்களுக்குப் பிடிக்கவில்லை! அது காரணமாக வேறு ஏதேதோ கதை கட்டிச் சொல்கிறார்கள்!..."

"அடே! இது என்ன விந்தை! உனக்கு எப்படி அவளுடைய நிறத்தைப் பற்றித் தெரியும்? அவளை நீ பார்த்திருக்கிறாயா, எங்கே எப்படிப் பார்த்தாய்? பழுவேட்டரையருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் உயிர் உன்னுடையது அல்ல!..."

"கந்தமாறா! இதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல, அது உனக்கு தெரியும். மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. வீரநாராயணபுரத்தில் பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சாலையோடு சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சாலை ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் நீங்கள் அனுப்பி வைத்த மரியாதைகளாமே? அது உண்மையா?"

"ஆம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம். அதனால் என்ன?..."

"அதனால் என்ன? ஒன்றுமில்லை. பழுவேட்டரையருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மரியாதைகளையும் எனக்கு அளித்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். வேறொன்றுமில்லை!..."

கந்தமாறன் இலேசாகச் சிரித்துவிட்டு, "இறை விதிக்கும் அதிகாரிக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அவருக்குச் செலுத்தினோம். சுத்த வீரனுக்கு அளிக்க வேண்டிய வரவேற்பை உனக்கு அளித்தோம். ஒரு காலத்தில், முருகன் அருளால், நீ இந்த வீட்டுக்கு மருமகப் பிள்ளையானால் தக்கவாறு மாப்பிள்ளை மரியாதை செய்து வரவேற்போம்!" என்றான். பிறகு, "வேறு என்னமோ சொல்லவந்தாய்; அதற்குள் பேச்சு மாறிவிட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னாயே, அது எப்படி உனக்குத் தெரிந்தது?" என்றான்.

"கடம்பூர் மாளிகையின் கரிய பெரிய மத்தகஜத்தின் மீது பழுவேட்டரையர், எருமைக்கடாமீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார்! என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருக்கையில் அடுத்தாற்போல், ஒரு மூடு பல்லக்கு வந்தது. மூடு பல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கியது. விலக்கிய திரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும் முகமும் நல்ல பொன்னிறமாயிருந்தன! அவ்வளவுதான் நான் பார்த்ததெல்லாம் நீ இப்போது சொன்னதிலிருந்து அந்தப் பெண்தான் பழுவேட்டரையரின் ஆசை நாயகி என்று ஊகிக்கிறேன்."

"வந்தியத்தேவா! நீ அதிர்ஷ்டக்காரன். ஆண் பிள்ளை எவனும் அந்தப் பழுவூர் இளையராணியைக் கண்ணாலும் பார்த்ததில்லை என்று பேச்சு. ஒரு விநாடி நேரமாவது அவள் கரத்தையும் முகத்தையும் நீ பார்த்தாயல்லவா? பார்த்த வரையில் அவள் எந்த தேசத்தில் பிறந்த சுந்தரியாயிருக்கலாம் என்று உனக்கு ஏதாவது உத்தேசம் தோன்றுகிறதா?" என்று கந்தமாறன் கேட்டான்.

"அச்சமயம் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போது, அவள் ஒருவேளை காஷ்மீர் தேசத்துப் பெண்ணாயிருக்கலாம்; அல்லது கடல்களுக்கு அப்பாலுள்ள சாவகம், கடாரம், யவனம், மிசிரம் முதலிய நாடுகளிலிருந்து வந்த பெண்ணரசியாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அரபு தேசத்துப் பெண்ணாக இருந்தாலும் இருக்கலாம். அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையில் முகமூடி போட்டே வைத்திருப்பார்களாம்!"

அச்சமயம் எங்கேயோ சமீபத்திலிருந்து வாத்தியங்களின் முழக்கம் கேட்கத் தொடங்கியது. சல்லி, கரடி, பறை, புல்லாங்குழல், உடுக்கு ஆகியவை சேர்ந்து சப்தித்தன.

"இது என்ன முழக்கம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"குரவைக் கூத்து நடக்கப் போகிறது! அதற்கு ஆரம்ப முழக்கம் இது! நீ குரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா? அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா?"

ஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது.

"குரவைக் கூத்தை நான் பார்த்ததேயில்லை. கட்டாயம் பார்க்கவேண்டும்" என்றான். அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக் கூத்து மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனாயிற்று. மேடைக்கு முன்னால் சபை கூடவும் தொடங்கி விட்டது.

சுற்றிலும் அரண்மனைச் சுவரும் கோட்டை கொத்தளங்களின் மதிலும் சூழ்ந்த இடத்தில், வெண் மணல் விரித்த விசாலமான முற்றத்தில் குரவைக் கூத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் கோழியைப் போலும், மயிலைப் போலும், அன்னத்தைப் போலும், சித்திரங்கள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். செந்நெல்லை வறுத்த வெள்ளிய பொறிகள், மஞ்சள் கலந்த தினையரிசிகள், பலநிற மலர்கள், குன்றிமணிகள் முதலியவற்றினாலும் அந்த மேடையை அழகு படுத்தியிருந்தார்கள். குத்து விளக்குகளுடன் தீவர்த்திகளும் சேர்ந்து எரிந்து இருளை விரட்ட முயன்றன. ஆனால் நறுமண அகில் புகையுடன் தீவர்த்திப் புகையும் சேர்ந்து மூடுபனியைப் போல் பரவி, தீபங்களின் ஒளியை மங்கச் செய்தன. மேடைக்கு எதிரிலும் பக்கங்களிலும் வாத்தியக்காரர்கள் உட்கார்ந்து அவரவர்களுடைய வாத்தியங்களை ஆவேசமாக முழக்கினார்கள். மலர் மணம், அகில் மணம், வாத்திய முழக்கம் எல்லாமாகச் சேர்ந்து வந்தியத்தேவனுடைய தலை சுற்றும்படி செய்தன.

முக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறுக்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூரிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள்.

சபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முருகனுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன் முதலிய அசூர கணங்களைக் கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். தேவலோகத்துக் கன்னியர் பலர் முருகனை மணந்துகொள்ளத் தவங்கிடந்து வருகையில், அந்தச் சிவகுமாரன் மண்ணுலகத்தில் தமிழகத்துக்கு வந்து, காட்டில் தினைப்புனம் காத்து நின்ற மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதைப் புகழ்ந்து பாடினார்கள். வேலவனுடைய கருணைத் திறத்தைக் கொண்டாடினார்கள். இத்தகைய பாடலும் ஆடலும் பறை ஒலியும் குழல் ஒலியுமாகச் சேர்ந்து பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறி கொள்ளச் செய்தன.

"பசியும் பிணியும் பகையும் அழிக!
மழையும் வளமும் தனமும் பெருக!"

என்ற வாழ்த்துக்களுடன் குரவைக் கூத்து முடிந்தது. பெண்கள் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.

பின்னர், 'தேவராளன்', 'தேவராட்டி' என்னும் ஆடவனும் பெண்ணும் வேலனாட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தியிருந்தனர். செக்கச் சிவந்த செவ்வலரிப் பூமாலைகளைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றியில் செந்நிறக் குங்குமத்தை அப்பிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்திருந்தன.

முதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித் தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியிருந்த வேலைத் தேவராட்டி கையில் எடுத்துக்கொண்டாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான். தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதி குதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கி விட்டாள்.

பிறகு தேவராளன் தனியே மேடை மீது நின்று கையில் வேல் பிடித்து வெறியாட்டம் ஆடினான். சூரன் முதலிய அசூர கணங்கள் தவிடு பொடியாகி விழுந்தனர். அறுக்கப்பட்ட சூரன் தலை திரும்பத் திரும்ப முளைத்தது. முளைக்க முளைக்க வேலனுடைய உக்கிரம் அதிகமாக வளர்ந்தது. அவனுடைய கண்ணிலிருந்து தீப்பொறி பறந்தது. கடைசியில் சூரபத்மன் இறந்து விழுந்தான். தேவராளனும் கை வேலைக் கீழே போட்டான்.

இப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்றுவிட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. "சந்நதம் வந்துவிட்டு" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, "வேலா! முருகா! தேவசேநாபதி! கந்தா! சூரசம்ஹாரா! அடியார்களுக்கு அருள்வாக்குச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டிக்கொண்டான்.

"கேளடா! சொல்லுகிறேன்! என்ன வேண்டுமோ, கேள்!" என்று சந்நதம் வந்தவன் சந்நதம் கூவினான்.

"மழை பொழியுமா? வெள்ளம் பெருகுமா? நாடு செழிக்குமா? நினைத்த காரியம் கைகூடுமா?" என்று பூசாரி கேட்டான்.

"மழை பொழியும்! வெள்ளம் பெருகும்! நாடு செழிக்கும்! நினைத்த காரியம் கைகூடும்! ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை! துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள். மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்!..." என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக்கொண்டே அலறினான்.

"என்ன பலி வேண்டும்?" என்று பூசாரி கேட்டான்.

"கேட்டால் கொடுப்பீர்களா?" என்றான் வெறியாடியவன்.

"கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்!" என்றான் பூசாரி.

"மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள். ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்!" என்று வெறியாடியவன் கோர பயங்கர குரலில் கூவினான்.

மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர் சம்புவரையர், மழவரையர் முதலிய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கினார்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக்கொண்டன.

சம்புவரையர் பூசாரியைப் பார்த்துத் தலையை அசைத்துச் சமிக்ஞை செய்தார்.

பூசாரி உடுக்கு அடிப்பதை நிறுத்தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம்போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போனாள்.

சபை மௌனமாகக் கலைந்தது. வெளியில் எங்கேயோ தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது.

இத்தனை நேரம் பார்த்துக் கேட்டவற்றினால் பரபரப்புக்குள்ளாகியிருந்த வந்தியத்தேவன், நரிகள் ஊளையிடும் சப்தம் வந்த திசையை நோக்கினான். அங்கே, அம்மாளிகையின் வெளிமதில் சுவரின் மீது ஒரு தலை தெரிந்தது. அது ஆழ்வார்க்கடியானுடைய தலைதான்! ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க்கடியானுடைய தலையை வெட்டி அந்த மதில் மேல் வைத்திருந்தது போன்ற பிரமை உண்டாயிற்று. கண்ணிமைகளை மூடித் திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை! அத்தகைய வீண் சித்தப்பிரமைக்குத் தான் உள்ளானது குறித்து வெட்கமடைந்தான். இதுவரை அனுபவித்து அறியாத வேறு பலவகை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தைக் கலங்கச் செய்தன.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

6. நடுநிசிக் கூட்டம்


குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.

பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்; தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.

சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து அக்காலத்தில் வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.

அந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப்பினால் மட்டுமே 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.

இவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.

"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்?" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது. ஏதேதோ தெளிவில்லாத ஐயங்கள் அவன் உள்ளத்தில் தோன்றி அலைத்தன.

மனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான். விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.

"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு, மற்ற விருந்தாளிகளைக் கவனித்து விட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்" என்று கந்தமாறன் சொல்லிவிட்டுப் போனான்

* * * * *

படுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டுவந்தது. மிக விரைவில் நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள். ஆனாலும் என்ன பயன்? மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்துகிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. பொருளில்லாத அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன்.

எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. ஒரு நரி, பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன! ஊளையிட்டுக் கொண்டே வந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தன. காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப்போல் ஜொலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன.

மறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான். அவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் ஜொலித்தன.

நரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான். நல்லவேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது. ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது. அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான். அவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது. "வந்தாயா? வா!" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.

"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன? எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் அரசு புரிகின்றனர்? உண்மையைச் சொல்" என்று பூசாரி கேட்டான்.

"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப்போ!" என்றான் பூசாரி.

திடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமான் காட்சி அளித்தான். கண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக்கொண்டு வந்து நடனம் ஆடினார்கள். இதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், "கண்டோ ம், கண்டோ ம், கண்டோ ம், கண்ணுக்கினியன கண்டோ ம்" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை! ஆழ்வார்க்கடியானுடைய தலை பாடியது! அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்லவரையன் திரும்பினான்; தூணில் முட்டிக்கொண்டான். கனவு கலைந்தது. கண்கள் திறந்தன. ஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.

அவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலைதான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத்தலை அங்கேயே இருந்தது. அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக் கூடியதாயிருந்தது. ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக்கொண்டிருந்தன். அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்!... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்க வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா? தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக்கொண்டிருப்பதா?

வல்லவரையன் துள்ளி எழுந்தான். பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.

மாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான்? அங்கிருந்து புறப்பட்டு மதில் சுவரை நோக்கி நடந்தபோது மேல்மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், விமான ஸ்தூபிகள் தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளைத்தும் நடக்கவேண்டியதாயிருந்தது. சற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக்குரல் வந்ததைக் கேட்டு வல்லவரையன் தயங்கி நின்றான். அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ்சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். பாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ்சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது.

அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான். அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவு கூர்மையாகக் கவனித்துக்கொண்டு வருகிறான். அவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்; அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும். ஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது. அந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன. அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான்! கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது! அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். "இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை!" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தெளிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன்பேரில் சந்தேகப்பட்டுவிடலாம் அல்லவா? ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். "படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்?" என்றால் என்ன விடை சொல்லுவது? கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா! அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்த கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும்! காலையில் கந்தமாறனைக் கேட்டால் எல்லாம் தெரிந்துவிடுகிறது.

அச்சமயம் அக்கூட்டத்தாருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கு வந்தியத்தேவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. ஆ! இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா! அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வெளியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ? அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே? கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூட தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ, ஆகா! இந்த வீராதி வீரரின் தலைவிதியைப் பார்! இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார்! அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை! வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும்! ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும்? அவள் ஒரு வேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம்! அவ்வாறு அவர் செய்யக்கூடியவர்தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும்! அதைப்பற்றி நமக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப் படுத்துத் தூங்கலாம்.

இப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான். உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே? அவன் எங்கே படுத்திருக்கிறான்? நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது. அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணிம் செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும். நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக்கூடாது. அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக்கூடாது ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்..."

இதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவேயில்லை. அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதி செய்துகொண்டான்.

வடதிசை மாதண்ட நாயகர் யார்? சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம்? அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்?

அச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.

"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்கு பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு!" என்றான் கந்தமாறன்.

"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது. ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன். நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம். அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

7. சிரிப்பும் கொதிப்பும்

அரசுரிமையைப் பற்றி பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப்போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும்! இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக்காட்டிலும் வசதியான இடம் வேறு கிடைக்காது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை?

இன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் - இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஏன் நழுவவிட வேண்டும்? ஆகா! தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.

இதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கிவிட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.

"உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் 'இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்கமாட்டார்' என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்!" என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.

"ஜோசியர்கள் என்ன சொல்லுகிறார்கள்?" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.

"ஜோசியர்களைப் போய்க் கேட்பானேன்? சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால் நட்சத்திரம் தெரிகிறதே! அது போதாதா!" என்றார் ஒருவர்.

பின்னர் பழுவேட்டரையர் கூறினார்: "ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது. அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்..."

"அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது? ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே!" என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.

"உண்மைதான். ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார், என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழநாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர் கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை..."

"நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா?" என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.

"ஆகா! நீங்கள் சிரிக்கிறீர்கள்! எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது? இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய 'தேவராளன்' துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். 'ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்' என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்..."

இவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.

சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று 'விர்' என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வெளியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் 'மர்மர' சப்தமும் கேட்டன.

"ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்!" என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.

"நானும் கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதல் சோழராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேரநாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பாடி, வைதும்பர் நாடு, சீட்புலிநாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு - ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்கு காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தான்!..."

"ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்..."

"மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களாகவும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன? மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார்? இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு, பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா? உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார்! பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்ல..."

"பொன் மாளிகை கட்டி முடிந்துவிட்டதா?"

"ஆம். முடிந்துவிட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்று."

"மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா?" என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.

"அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்ன பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்.

"வாழ்க பழுவேட்டரையர்!", "வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்!" "வாழ்க அவர் வீரம்!" என்னும் கோஷங்கள் எழுந்தன.

"இன்னும் கேளுங்கள். பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன? பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்திருப்பதென்ன? நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா? ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்கவேண்டுமாம்! ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்ற உணவு அனுப்பி வந்திருக்கிறேன்..."

"விந்தை! விந்தை!", "இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது!", "இப்படிக் கேட்டதே இல்லை!" என்ற குரல்கள் எழுந்தன.

"இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டுவையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம்! அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்!"

இச்சமயம் கூட்டத்தில் ஒருவர், "படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிடவேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது!" என்றார்.

"அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்! சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்!"

"ஆ! கூடவே கூடாது! தாங்கள் இப்பதவியிலிருப்பது தான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்கவில்லையா?"

"சொல்லாமல் என்ன! பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள். இளைய பிராட்டியிடம் கேளுங்கள்!" என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது! முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்த படியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப் பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப்போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும். எப்படியிருக்கிறது கதை! இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை! இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும்? அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்துவிடுகிறேன்..."

"கூடாது! கூடாது! பழுவூர்த் தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்" என்றார் சம்புவரையர்.

"அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள் தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரன் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்றார் பழுவூர் மன்னர்.

« Last Edit: February 19, 2012, 08:46:04 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

8. பல்லக்கில் யார்?


சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை.

சம்புவரையர் உரத்த குரலில், "பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? தலைக்குத் தலை பேசிக்கொண்டிருந்தால் என்ன ஆகிறது? இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகிவிட்டது. அதோ சந்திரனும் வந்து விட்டது" என்றார்.

"எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்ளவில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!" என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று.

"இப்போது பேசுகிறது வணங்காமுடியார்தானே? எழுந்து நன்றாக வெளிச்சத்திற்கு வரட்டும்!" என்றார் பழுவேட்டரையர்.

"ஆமாம்; நான் தான். இதோ வெளிச்சத்துக்கு வந்துவிட்டேன்."

"என்னுடைய கோபத்தையெல்லாம் நான் போர்க்களத்தில் காட்டுவதுதான் வழக்கம்; பகைவர்களிடம் காட்டுவது வழக்கம்; என் சிநேகிதர்களிடம் காட்டமாட்டேன். ஆகையால் எது வேண்டுமானாலும் மனம் விட்டுத் தாராளமாகக் கேட்கலாம்."

"அப்படியானால் கேட்கிறேன். சுந்தர சோழ மகாராஜாவின் பேரில் பழுவேட்டரையர் என்ன குற்றம் சொல்கிறாரோ, அதே குற்றத்தைப் பழுவேட்டரையர் மீதும் சிலர் சுமத்துகிறார்கள்! அதை நான் நம்பாவிட்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தெளிய விரும்புகிறேன்" என்றார் வணங்காமுடியார்.

"அது என்ன? எப்படி? விவரம் சொல்லவேணும்."

"பழுவூர்த்தேவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மணம் புரிந்துகொண்டது நம் எல்லோருக்கும் தெரியும்..."

இச்சமயம், சம்புவரையரின் குரல் கோபத்தொனியில் "வணங்காமுடியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நம் மாபெருந் தலைவரை, நமது பிரதம விருந்தாளியை, இவ்விதம் அசந்தர்ப்பமான கேள்வி கேட்பது சிறிதும் தகாத காரியம்..." என்றார்.

"சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். வணங்காமுடியார் கேட்க விரும்புவதைத் தாராளமாகக் கேட்கட்டும். மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைவிடக் கூறிக் கேட்டு விடுவதே நல்லது. ஐம்பத்தைந்து பிராயத்துக்கு மேல் நான் ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்மைதான். அதைத் தாராளமாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் தான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் சொல்லிக் கொண்டதில்லை. அந்தப் பெண்ணை நான் காதலித்தேன்; அவளும் என்னைக் காதலித்தாள். பழந்தமிழ்நாட்டு முறைப்படி இஷ்டப்பட்டு மணந்து கொண்டோ ம். இதில் என்ன தவறு?"

"ஒரு தவறும் இல்லை!" என்று குரல்கள் எழுந்தன.

"மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்? ஆனால்..ஆனால்..."

"ஆனால் என்ன! தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டுவிடுங்கள்."

"புது மணம் புரிந்துகொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லாக் காரியங்களிலும் பழுவேட்டரையர் கேட்டு நடப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இராஜரீக காரியங்களில் கூட இளைய ராணியின் யோசனையைக் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தாம் போகுமிடங்களுக்கெல்லாம் இளைய ராணியையும் அழைத்துப் போவதாகச் சொல்லுகிறார்கள்."

இப்போது கூட்டத்தில் ஒரு சிரிப்புச் சப்தம் எழுந்தது.

சம்புவரையர் குதித்து எழுந்து, "சிரித்தது யார்? உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும்!" என்று கர்ஜித்துக் கத்தியை உறையிலிருந்து உருவினார்.

"நான் தான் சிரித்தேன்! பதற வேண்டாம் சம்புவரையரே!" என்றார் பழுவேட்டரையர், பிறகு, "வணங்காமுடியாரே! தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக்கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா? அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான். ஆனால் ராஜரீக காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என்று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை..."

"அப்படியானால், இன்னும் ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் நிவர்த்தி செய்யும்படி பழுவூர்த்தேவரை வேண்டிக் கொள்கிறேன். அந்தப்புரத்தில் இருந்திருக்க வேண்டிய பல்லக்கு இங்கே நாம் அந்தரங்க யோசனை செய்யும் இடத்திற்கு ஏன் வந்திருக்கிறது? பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா, இல்லையா? இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன?"

இவ்விதம் வணங்காமுடியார் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் ஒரு விசித்திரமான நிசப்தம் நிலவிற்று. பலருடைய மனத்திலும் இதே வித எண்ணமும் கேள்வியும் தோன்றியிருந்தபடியால், வணங்காமுடியாரை எதிர்த்துப் பேச யாருக்கும் உடனே துணிவு ஏற்படவில்லை. சம்புவரையரின் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. ஆனால் அவர் வாயிலிருந்தும் வார்த்தை ஒன்றும் கேட்கவில்லை.

அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு பழுவேட்டரையர் கணீர் என்று கூறினார்: "சரியான கேள்வி; மறுமொழி சொல்ல நான் கடமைப்பட்டவன். இந்தக் கூட்டம் கலைவதற்கு முன்னால் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன். இன்னும் அரை நாழிகை பொறுத்திருக்கலாம் அல்லவா? அவ்வளவு நம்பிக்கை என்னிடம் உங்களுக்கு இருக்கிறதல்லவா?"

"இருக்கிறது, இருக்கிறது. பழுவேட்டரையரிடம் எங்களுக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது!" என்று பல குரல்கள் கூவின.

"மற்றவர்களைக் காட்டிலும் பழுவேட்டரையரிடம் எனக்குப் பக்தியும் மரியாதையும் குறைவு என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் மனத்தைத் திறந்து கேட்கச் சொன்னபடியால் கேட்டேன். மற்றபடி அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறேன். இந்தக் கணத்தில் என் உயிரைக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கச் சித்தம்!" என்றார் வணங்காமுடி முனையரையர்.

"வணங்காமுடியாரின் மனத்தை நான் அறிவேன். நீங்கள் எல்லோரும் என்னிடம் வைத்துள்ள நம்பிக்கையையும் அறிவேன். ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம். சுந்தர சோழ மகாராஜா நீடுழி இவ்வுலகில் வாழ்ந்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆளட்டும். ஆனால் ஒரு வேளை ஏதாவது அவருக்கு நேர்ந்துவிட்டால், வைத்தியர்களுடைய வாக்குப் பலித்து விட்டால், சில நாளாகத் தோன்றி வரும் தூமகேது முதலிய உற்பாதங்கள் பலித்துவிட்டால். அடுத்தபடி இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்திற்கு உரியவர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்."

"அது விஷயமாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி கோருகிறோம். தங்களுடைய கருத்துக்கு மாறாகச் சொல்லக் கூடியவர் இந்தக் கூட்டத்தில் யாரும் இல்லை."

"அது சரியல்ல. ஒவ்வொருவரும் சிந்தித்துத் தங்கள் கருத்தை வெளியிட வேண்டும். சில பழைய செய்திகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மகா வீரரும் மகா ஞானியும் புண்ணிய புருஷருமான கண்டராதித்த தேவர் யாரும் எதிர்பாராத வண்ணம் இருபத்து நாலு ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார். அச்சமயம் அவருடைய புதல்வர் மதுராந்தகத் தேவர் ஒரு வயதுக் குழந்தை. ஆகவே தமது தம்பி அரிஞ்சய தேவர் பட்டத்துக்கு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து விட்டுப் போனார். இதை அவருடைய தர்ம பத்தினியும் பட்ட மகிஷியுமான செம்பியன் மாதேவி தான் நமக்கு அறிவித்தார்கள். அதன்படியே அரிஞ்சய சோழருக்கு முடிசூட்டி சக்கரவர்த்தி பீடத்தில் அமர்த்தினோம். ஆனால் விதிவசமாக அரிஞ்சய சக்கரவர்த்தி சோழ சிம்மாசனத்தில் ஓர் ஆண்டுக்கு மேல் அமர்ந்திருக்கவில்லை. அரிஞ்சய சோழருடைய மூத்த புதல்வர் பராந்தக சுந்தர சோழர் இருபது வயது இளங்காளைப் பருவம் எய்தியிருந்தார். எனவே, ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு மந்திரிகளும் சாமந்தர்களும் குறுநில மன்னர்களும் நகரத்தலைவர்களும் கூற்றத் தலைவர்களும் சேர்ந்து யோசித்துப் பராந்தக சுந்தர சோழருக்கு முடிசூட்டினோம். அதைக் குறித்து யாரும் வருத்தப்பட இடமில்லை. ஏனெனில், சுந்தர சோழ மகாராஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் நெறி தவறாமல் நாட்டைப் பரிபாலித்து வந்தார். நம்மையெல்லாம் நன்கு மதித்து யோசனைகேட்டு ராஜ்ய பாரம் நடத்தினார். இதனால் சோழ ராஜ்யம் மேலும் விஸ்தரித்துச் செழித்தது. இப்போது சுந்தர சோழ மகாராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார்? கண்டராதித்த தேவரின் திருக்குமாரர் மதுராந்தகர் இப்போது பிராயம் வந்து ராஜ்ய பரிபாலனம் செய்யக் கூடியவராயிருக்கிறார். அறிவினாலும் கல்வியினாலும் குணத்தினாலும் பக்தி சிரத்தையினாலும் எல்லா விதத்திலும் பட்டத்துக்குத் தகுந்தவராயிருக்கிறார். அவரிலும் ஒரு வயது இளையவரான ஆதித்த கரிகாலர் - சுந்தர சோழரின் புதல்வர் - காஞ்சியில் வடதிசைப் படையின் சேனாதிபதியாக இருந்து வருகிறார். இந்த இருவரில் யார் பட்டத்துக்கு வருவது நியாயம்? குலமுறை என்ன? மனு நீதி என்ன? தமிழகத்தின் பழமையான மரபு என்ன? மூத்தவரின் புதல்வர் மதுராந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா? அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கருத்தை மனம் விட்டுச் சொல்ல வேண்டும்..."

"மூத்தவராகிய கண்டராதித்த தேவரின் புதல்வர் மதுராந்தகர் தான் பட்டத்துக்கு உரியவர். அதுதான் நியாயம், தர்மம், முறைமை" என்றார் சம்புவரையர்.

"என் அபிப்பிராயமும் அதுவே", "என் கருத்தும் அதுவே!" என்று அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்லி வந்தார்கள்.

"உங்கள் அபிப்பிராயம் தான் என் அபிப்பிராயமும், மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது. ஆனால் அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக நாம் ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்யச் சித்தமாயிருக்கிறோமா? உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து போராடச் சித்தமாயிருக்கிறோமா? இந்த நிமிஷத்தில் துர்க்காதேவியின் பாதத்தில் ஆணையிட்டு அவ்விதம் சபதம் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறோமா?" என்று பழுவேட்டரையர் கேட்டபோது அவர் குரலில் அதுவரையில் இல்லாத ஆவேசம் தொனித்தது.

கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சம்புவரையர், "அவ்விதமே தெய்வ சாட்சியாகச் சபதம் கூறச் சித்தமாயிருக்கிறோம். ஆனால் சபதம் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இளவரசர் மதுராந்தகரின் கருத்து என்ன? அவர் சிங்காதனம் ஏறி ராஜ்ய பாரத்தை ஏற்கச் சித்தமாயிருக்கிறாரா? கண்டராதித்தரின் தவப் புதல்வர் உலக வாழ்க்கையை வெறுத்துச் சிவபக்தியில் பூரணமாக ஈடுபட்டுள்ளார் என்று கேள்விப்படுகிறோம். இராஜ்யத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று பலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம். அவருடைய அன்னையார் செம்பியன் மாதேவியார் தமது புதல்வர் பட்டத்துக்கு வருவதற்கு முற்றும் விரோதமாயிருக்கிறார் என்றும் கேட்டிருக்கிறோம். தங்களிடமிருந்து இதைப் பற்றிய உண்மையை அறிய விரும்புகிறோம்."

"சரியான கேள்வி; தக்க சமயத்தில் கேட்டீர்கள். இதைத் தெளிவுபடுத்தும் கடமையும் எனக்கு உண்டு. முன்னமே சொல்லியிருக்க வேண்டும். சொல்லத் தவறியதற்காக மன்னியுங்கள்" என்று பீடிகை போட்டுக் கொண்டு பழுவேட்டரையர் கூறத் தொடங்கினார்: "செம்பியன் மாதேவி தமது ஏக புதல்வரை இராஜ்யபார ஆசையிலிருந்து திருப்பிச் சிவபக்தி மார்க்கத்தில் செலுவத்துவதற்குப் பிரயத்தனப்பட்டு வந்தது நாடு அறிந்த விஷயம். ஆனால் இதன் காரணம் என்னவென்பதை நாடும் அறியாது; மக்களும் அறியார்கள். மதுராந்தகருக்கு இராஜ்யமாளும் விருப்பம் இருப்பதாகத் தெரிந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்து வரலாம் என்று பெரிய பிராட்டியார் பயந்தது தான் காரணம்..."

"ஆஹா!" "அப்படியா?" என்ற குரல்கள் கூட்டத்தில் எழுந்தன.

"ஆம்; பெற்ற தாய்க்குத் தன் ஏக புதல்வன் சிம்மாசனம் ஏற வேண்டும் என்னும் ஆசையைக் காட்டிலும் பிள்ளை உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை தானே அதிகமாயிருக்கும்? அன்னையின் வாக்கே தெய்வத்தின் வாக்கு என்று மதித்து வந்த மதுராந்தகரும் மனத்தை விரக்தி மார்க்கத்தில் செலுத்தியிருந்தார். சிவபக்தியில் முழுதும் ஈடுபட்டிருந்தார். ஆனால் சில காலமாக அவருடைய மனது சிறிது சிறிதாக மாறி வந்திருக்கிறது. இந்தச் சோழ சாம்ராஜ்யம் தமக்கு உரியது. அதைப் பராமரிப்பது தம்முடைய கடமை என்ற எண்ணம் அவருடைய மனத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் அவரை ஆதரிப்பதாகத் தெரிந்தல், தக்க சமயத்தில் பகிரங்கமாக முன் வந்து சொல்லவும் சித்தமாயிருக்கிறார்..."

"இதற்கு அத்தாட்சி என்ன?"

"உங்களுக்கெல்லாம் திருப்தி தரக்கூடிய அத்தாட்சியை இப்போதே அளிக்கிறேன். அளித்தால் அனைவரும் பிரமாணம் செய்யச் சித்தமாயிருக்கிறீர்களா?"

பல குரல்கள் "இருக்கிறோம்! இருக்கிறோம்!" என்று ஒலித்தன.

"யாருடைய மனதிலும் வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லையே?"

"இல்லை! இல்லை"

"அப்படியானால் இதோ அத்தாட்சி கொண்டுவருகிறேன். வணங்காமுடி முனையரையரின் சந்தேகத்தையும் இப்போதே தீர்த்து வைக்கிறேன்!" என்று கூறிக்கொண்டே பழுவேட்டரையர் எழுந்தார். கம்பீரமாக நடந்து அங்கே சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கின் அருகில் சென்றார்.

"இளவரசே! பல்லக்கின் திரையை விலக்கிக்கொண்டு வெளியே எழுந்தருள வேண்டும். தங்களுக்காக உடல்பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யச் சித்தமான இந்த வீராதி வீரர்களுக்குத் தங்கள் முக தரிசனத்தைத் தந்தருள வேண்டும்!" என்று மிகவும் பணிவான குரலில் கூறினார்.

மேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான். பல்லக்கின் திரையை முன்போலவே ஒரு கரம் விலக்கிற்று. அது பொன் வண்ணமான கரம். முன்னே ஒருமுறை அவன் பார்த்த அதே செக்கச் சிவந்த கரந்தான். ஆனால் அவன் முன்னம் வளையல் என்று நினைத்தது உண்மையில் அரச குமாரர் அணியும் கங்கணம் என்பதை இப்போது கண்டான். அடுத்த கணம் பூரண சந்திரனையொத்த அந்தப் பொன் முகமும் தெரிந்தது. மன்மதனையொத்த ஓர் அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வெளியே வந்து புன்னகை புரிந்து நின்றது. ஆகா! கண்டராதித்த தேவரின் புதல்வரான இளவரசர் மதுராந்தகரா இவர்! பல்லக்கினுள் இருந்த படியால் பெண்ணாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் அல்லவா அந்தத் தவறைச் செய்து விட்டோ ம்? தன்னைப் போல் அதே தவறைச் செய்த ஆழ்வார்க்கடியான் நம்பி சுவர்மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கிறானா என்று வந்தியத்தேவன் பார்த்தான். அந்த இடத்தில் மர நிழல் விழுந்து இருள் சூழ்ந்திருந்தது. ஆகையினால் அங்கு ஒன்றும் தெரியவில்லை.

இதற்குள் கீழே, "மதுராந்தகத்தேவர் வாழ்க! பட்டத்து இளவரசர் வாழ்க! வெற்றி வேல்! வீரவேல்!" என்ற ஆவேசமான முழக்கங்கள் கிளம்பின. கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று வாளையும் வேலையும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவ்விதம் கோஷமிட்டதை வந்தியத்தேவன் கண்டான். இனிமேல் அங்கிருப்பது அபாயமாக முடியலாம் என்று எண்ணித் தான் படுத்திருந்த இடத்துக்கு விரைந்து சென்று படுத்துக்கொண்டான்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
9. வழிநடைப் பேச்சு

பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன். ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியத்தேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. "இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வெளிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக்கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!

அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல் இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா? கடவுள் தன்னை மறுமுறையும் காப்பாற்றுவாரா?

அன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவு கூட்டத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க்கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர், தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த்திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார். வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வெளிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்?

சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்? பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்கு கொண்டு போயிருக்கிறாரோ? அடாடா! முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய் விட்டது.

சோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும் உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப் போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை.

ஆனால் நியாய அநியாயங்கள் எப்படி? பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? தன்னுடைய கடமை என்ன? ஆஹா! என்னென்னவோ மனக்கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே? பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோ மே! காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக் கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே? இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே?... இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான். கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.

மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன் பேரில் பட்டபோதுகூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.

"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, "மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!" என்று சொன்னான்.

வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, "குரவைக் கூத்துப் பார்த்துவிட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும். இப்போதுதான் எழுந்திருக்கிறேன். அடாடா! இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே! உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!" என்றான்.

"அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போகவேண்டும்" என்றான் கந்தமாறன்.

"இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை. பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது. ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும். உடனே புறப்பட வேண்டும்" என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.

"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்."

"அதற்கென்ன, அப்போது பார்த்துக்கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!"

"அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம். நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்."

"அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு..."

"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!..." என்று கூறிய கந்தமாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். "வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள்தான். ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார். அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரி கூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவென்!" என்றான்.

"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்" என்றான் வந்தியத்தேவன்.

ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். குதிரைகள் மெதுவாகவே சென்றன. பிரயாணம் இன்பகரமாயிருந்தது. மேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்:- "கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது. ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்துகொண்டிருந்தாய்! அவளை நன்றாய் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்கு தான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது."

கந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.

"ஆயினும் பாதகமில்லை. நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே? அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது. அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா? கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?"

"மணிமேகலை!"

"அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்..."

கந்தமாறன் குறுக்கிட்டு, "நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என் தங்கையை நீ மறந்து விடு. அவளைப்பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்து விடு. அவள் பேச்சையே எடுக்காதே!" என்றான்.

"இது என்ன, கந்தமாறா! ஒரே தலைகீழ் மாறுதலாயிருக்கிறதே! நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே!"

"அவ்விதம் நான் சொன்னது உண்மைதான். ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள். மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!"

வந்தியத்தேவன் மனத்திற்குள் "மணிமேகலை வாழ்க!" என்று சொல்லிக் கொண்டான். மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயத்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. மூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள். மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும். பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!

"ஆஹா! நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும்! கந்தமாறா! இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை. ஒரு மாதிரி நான் எதிர்ப்பார்த்ததுதான்..."

"எதிர்பார்த்தாயா அது எப்படி?"

"என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்? ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்? எப்போதோ என் குலத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அரசு செலுத்தினார்கள் என்றால், அது இப்போது என்னத்துக்கு ஆகும்."

"நண்பா! போதும், நிறுத்து, என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே! நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வெளிபடுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்!"

"கந்தமாறா! இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே?"

"அதற்காக என்னை மன்னித்துவிடு. உன்னிடம் கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான். எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு. விஷயம் வெளியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன். அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு. உன்னை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன். என்னை நம்பு!..."

"இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம். ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை! அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா! என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்!"

"அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம். அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம். அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்..."

"இது என்ன? ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா? அல்லது ஈழநாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா?"

"ஈழத்துக்கா? ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய்! ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம்! வெட்கக்கேடு! நான் சொல்வது வேறு விஷயம். கொஞ்சம் பொறுமையாயிரு. சமயம் வரும்போது சொல்லுகிறேன். தயவுசெய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே!"

"சரி, சரி! உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம். வாயைக் கூடத் திறக்க வேண்டாம். அதோ கொள்ளிடமும் தெரிகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

உண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக் கரையை அடைந்தார்கள்.

ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. செக்கச் சிவந்த பெருநீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக் கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு, 'ஹோ' என்று இரைந்து கொண்டு, கீழ்க் கடலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சென்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.

தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது. ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார். அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்தி சிகாமணி என்று தோன்றியது.

கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "சாமி! படகில் வரப்போகிறீர்களா?" என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.

"ஆம்; இவர் வரப்போகிறார். கொஞ்சம் படகை நிறுத்து!" என்றான் கந்தமாறன்.

இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.

"யோசனை இல்லாமல் வந்துவிட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"தேவையில்லை. நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான். இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!" என்றான் கந்தன்மாறன்.

"ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!" என்றான் வந்தியத்தேவன்.

"பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய். இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்!"

"ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப்பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு! அப்பப்பா! இது என்ன ஆறு? இது என்ன வெள்ளம்? சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது!"

இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.

வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.

கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.

படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது. ஓடக்காரர்கள் கோல்போட ஆரம்பித்தார்கள்.

திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, "நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!" என்று ஒரு குரல் கேட்டது.

ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.

கூவிக்கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான். முதற் பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று. அவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான்.

வருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், "விடு! படகை விடு! அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன். அவன் அடுத்த படகில் வரட்டும்!" என்றார்.

ஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, "கொஞ்சம் பொறுங்கள், அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!" என்றான்.

ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
10. குடந்தை சோதிடர்

குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திரம் ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை. அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள் தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் முத்து மலர்களையும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?

பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப்பெண் யார்தான் இருக்க்முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?

கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!

பொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்கு அரிசிலாறு என்று பெயர்! காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது. அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரியவேண்டும். இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன. பிறந்தது முதல் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி அறியாத அரச குலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம். அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.

நல்லது, அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக. சோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக! அடடா! இது என்ன அருமையான காட்சி? அழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது?

சித்திர விசித்திரமாகச் செய்த அன்ன வடிவமான வண்ணப் படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார்? அவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்களையும் ஆளப் பிறந்த சக்கரவர்த்தினியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார்? அவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்த சுந்தரி யார்? இனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார்? அவர்களில் ஒருத்தி மீனலோசனி; இன்னொருத்தி நீலலோசனி; ஒருத்தி தாமரை முகத்தாள்; இன்னொருத்தி கமல இதழ் நயனத்தாள்; ஆஹா வீணையை மீட்டுகிறாளே, அவளுடைய காந்தளை ஒத்த விரல்கள் வீணைத் தந்திகளில் அங்குமிங்கும் சஞ்சரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்வது? அதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது? நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே! மனிதர்களாய்ப் பிறந்தவர்கள், கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் - அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன?

படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்:

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!

இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா? ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை. எனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன. இவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும்! அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள். அடடா! பாடலும் பண்ணும் பாவமும் எப்படிக் கலந்து இழைந்து குழைந்து இவர்களுடைய குரலிலிருந்து அமுத வெள்ளமாகப் பொழிகின்றன? பாட்டாவது, பண்ணாவது, கானமாவது, இசையாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை. இது ஏதோ மாயக் கலை! பாடுகிறவர்கள், கேட்பவர்கள் எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வித்தை!

படகு மிதந்து கொண்டே வந்து, மரங்கள் சிறிது இடைவெளி தந்த ஓடத்துறையில் ஒதுங்கி நிற்கிறது. இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள். அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை. இருவரும் அழகிகள் என்றாலும் ஒருவருடைய அழகுக்கும் இன்னொருவருடைய அழகுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. ஒருத்தி செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். இன்னொருத்தி குமுத மலரின் இனிய அழகை உடையவள். ஒருத்தி பூரண சந்திரன்; இன்னொருத்தி காலைப்பிறை. ஒருத்தி ஆடும் மயில்; இன்னொருத்தி பாடும் குயில். ஒருத்தி இந்திராணி; இன்னொருத்தி மன்மதனின் காதலி. ஒருத்தி வேகவாஹினியான கங்காநதி; இன்னொருத்தி குழைந்து நெளிந்து செல்லும் காவேரி.

வாசகர்களை மேலும் சந்தேக ஆராய்ச்சி நிலையில் விட்டு வைக்காமல் இவர்கள் இருவரும் யார் என்று சொல்லி விடுகிறோம். கம்பீரத் தோற்றமுடைய மங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை. சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ்பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி.

இன்னொருத்தி, குந்தவைப் பிராட்டியுடன் இருக்கும் பாக்கியத்தை நாடி வந்த கொடும்பாளூர்ச் சிற்றரசர் குலப் பெண். பிற்காலத்தில், சரித்திரத்திலேயே இணையில்லாத பாக்கியவதியாகப் போகிறவள். இன்று அடக்கமும் இனிமையும் சாந்தமும் உருவெடுத்து விளங்குகிறவள்.

இந்த இரு மங்கைமார்களும் படகிலிருந்து கரையில் இறங்கினார்கள். குந்தவை மற்ற தோழிப் பெண்களைப் பார்த்து, "நீங்கள் இங்கேயே இருங்கள். ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்துவிடுகிறோம்!" என்றாள். அந்தத் தோழிப் பெண்கள் அனைவரும் தெய்வத் தமிழ்நாட்டில் பற்பல சிற்றரசர்களின் அரண்மனையில் பிறந்த அரசகுமாரிகள். குந்தவை தேவிக்குத் தோழியாக இருப்பதைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பழையாறை அரண்மனைக்கு வந்தவர்கள். இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி 'போய்விட்டு விரைவில் வருகிறேன்' என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.

கரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது. "வானதி! ரதத்தில் ஏறிக்கொள்!" என்றாள் குந்தவை தன் தோழியைப் பார்த்து. வானதி ஏறியதும் தானும் ஏறிக் கொண்டாள். ரதம் வேகமாய்ச் சென்றது.

"அக்கா! நாம் எங்கே போகிறோம்? எனக்குச் சொல்லலாமா?" என்று வானதி கேட்டாள்.

"சொல்லாமல் என்ன? குடந்தை சோதிடர் வீட்டுக்குப் போகிறோம்!" என்றாள் குந்தவை.

"சோதிடர் வீட்டுக்கு எதற்காகப் போகிறோம், அக்கா? என்னத்தைப் பற்றிக் கேட்பதற்காக?"

"வேறு எதற்கு? உன்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான். சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயே? உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்!"

"அக்கா! தங்களுக்கு ரொம்ப புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வேண்டாம். திரும்பி விடுவோம்!"

"இல்லையடி, அம்மா, இல்லை! உன்னைப் பற்றிக் கேட்பதற்காக இல்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் போகிறேன்."

"தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? ஜோசியரிடம் கேட்டு என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?"

"எனக்குக் கலியாணம் ஆகுமா? அல்லது கடைசி வரையில் கன்னிப் பெண்ணாகவே இருந்து காலம் கழிப்பேனா என்று கேட்கப் போகிறேன்."

"அக்கா! இதற்கு ஜோசியரிடம் போய்க் கேட்பானேன்! தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும்? தாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான்! இமய மலை முதல் குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வர மாட்டார்களா? ஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம் கூட வருவார்களே! தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ? அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்!"

"வானதி! நீ சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு தடை இருக்கிறது. எந்தத் தேசத்து அரச குமாரனையாவது மணம் புரிந்து கொண்டால் நான் அவனுடைய நாட்டுக்குப் போக, வேண்டி வருமல்லவா? எனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி! வேறு நாட்டுக்குப் போவதில்லை என்று நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்..."

"அது ஒரு தடையாகாது. தங்களை மணம் புரிந்து கொள்ளும் எந்த ராஜகுமாரனும் தங்கள் காலில் விழுந்து கிடக்கும் அடிமையாகவே இருப்பான். இங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகிறான்."

"ஆகா! எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக்கொள்ளவா சொல்கிறாய்? அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா!"

"எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒருநாள் கலியாணம் செய்துகொண்டுதானே தீரவேண்டும்?"

"அப்படி ஒரு சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கவில்லையடி, வானதி! ஔவையாரைப் பார்! அவள் என்றும் கன்னி அழியாத கவீசுவரியாகப் பல காலம் ஜீவித்திருக்கவில்லையா?"

"ஔவையார் இளம் பிராயத்திலேயே கடவுளின் வரத்தினால் கிழவியாகப் போனவள். தாங்கள் அதைப்போல் ஆகவில்லையே?"

"சரி, அப்படிக் கல்யாணம் செய்து கொள்வது என்று புறப்பட்டால் அநாதையான சோழநாட்டு வீரன் ஒருவனையே நான் மணந்து கொள்வேன். அத்தகையவனுக்கு ராஜ்யம் இராது. என்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு தேசத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டான். இங்கேயே சோழ நாட்டிலேயே, இருந்து விடுவான்..."

"அக்கா! அப்படியானால் இந்தச் சோழ நாட்டை விட்டுப் போகமாட்டீர்களே?"

"ஒரு நாளும் போக மாட்டேன். சொர்க்க லோகத்துக்கு என்னை அரசியாக்குவதாகச் சொன்னாலும் போகமாட்டேன்."

"இன்றைக்குத்தான் என் மனம் நிம்மதி அடைந்தது."

"அது என்னடி?"

"நீங்கள் வேறு நாட்டுக்குப் போனால், நானும் உங்களோடு வந்தே தீரவேண்டும். உங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது. அதே சமயத்தில் இந்தச் சோழ வளநாட்டைப் பிரிந்து போகவும் எனக்கு மனமில்லை."

"கலியாணம் ஆனால் நீ பிரிந்து போய்த்தானே தீர வேண்டும்?"

"நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை, அக்கா!"

"அடியே! எனக்கு செய்த உபதேசமெல்லாம் எங்கே போயிற்று?"

"தங்களைப் போலவா நான்?"

"அடி கள்ளி! எனக்கு எல்லாம் தெரியும். என் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்றா பார்க்கிறாய்? உனக்குச் சோழ நாட்டின் மீது அபிமானம் ஒன்றும் கிடையாது. நீ ஆசை வைத்திருக்கும் சோழநாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது. உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்?"

"அக்கா! அக்கா! நான் அவ்வளவு மூடமதி உடையவளா? சூரியன் எங்கே? காலைப் பனித்துளி எங்கே? சூரியனுடைய நட்புக்குப் பனித்துளி ஆசைப்பட்டால் என்ன பயன்?"

"பனித்துளி சிறியதுதான்! சூரியன் பெரியது, பிரகாசமானது தான்! ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்தித் தனக்குள் வைத்திருக்கிறதா, இல்லையா?"

வானதி உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த குரலில், "அப்படியா சொல்கிறீர்கள்! பனித்துளிகூடச் சூரியனை அடையலாம் என்று சொல்கிறீர்களா?" என்றாள். பிறகு திடீரென்று மனச்சோர்வு வந்து விட்டது. "பனித்துளி ஆசைப்படுகிறது; சூரியனையும் சிறைப் பிடிக்கிறது. ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது. வெயிலில் உலர்ந்து, இருந்த இடம் தெரியாமல் மறைகிறது!"

"அது தவறு, வானதி! பனித்துளியின் ஆசையைக் கண்டு சூரியன் தன்னுடன் பனித்துளியை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். தன் ஆசைக்குகந்த பனித்துளிப் பெண் பிற புருஷர் கன்ணில் படக் கூடாது என்று அவன் எண்ணம். இரவு வந்ததும் மறுபடியும் வெளியே விட்டு விடுகிறான். மறைந்த பனித்துளி மறுபடியும் வந்து உதிக்கிறது அல்லவா?"

"அக்கா! இதெல்லாம் என்னைத் தேற்றுவதற்காகச் சொல்கிறீர்கள்".

"அப்படியானால் உன் மனதில் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லு. இத்தனை நாள் 'இல்லவே இல்லை' என்று சாதித்தாயே? அதனால் தான் குடந்தை ஜோசியரிடம் போகிறேன்."

"என் மனதில் குறையிருந்தால், அதைப் பற்றிக் கேட்கச் சோதிடரிடம் போய் என்ன பயன்?" என்று கூறி வானதி பெருமூச்சொறிந்தாள்.

குடந்தை சோதிடரின் வீடு அந்த நகரின் ஒரு மூலையில் காளி கோயிலுக்கு அருகில் ஒரு தனித்த இடத்தில் இருந்தது. குடந்தை நகருக்குள் புகாமலேயே நகரைச் சுற்றிக் கொண்டு ரதம் அந்த வீடு சென்று அடைந்தது. ரதசாரதி ரதத்தைத் தங்கு தடையின்றி அங்கே ஓட்டிக்கொண்டு போய்ச் சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தோன்றியது.

வீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்.

"பெருமாட்டி! கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே! வரவேணும் வரவேணும்! இந்த ஏழையின் குடிசை செய்த பாக்கியம், மறுமுறையும் தாங்கள் இக்குடிசையைத் தேடி வந்தீர்கள்!" என்றார்.

"சோதிடரே! இந்த வேளையில் தங்களைத் தேடிக்கொண்டு வேறு யாரும் இங்கு வரமாட்டார்கள் அல்லவா?" என்றாள் குந்தவை.

"வரமாட்டார்கள், தாயே! இப்போதெல்லாம் என்னைத் தேடி அதிகம் பேர் வருவதே இல்லை, உலகத்தில் கஷ்டங்கள் அதிகமாகும் போது தான் சோதிடர்களைத் தேடி மக்கள் அதிகமாக வருவார்கள். இப்போது, தங்களுடைய திருத் தந்தை சுந்தரசோழரின் ஆட்சியில், குடிகளுக்குக் கஷ்டம் என்பதே கிடையாது. எல்லோரும் சுக சௌக்கியங்களுடன் சகல சம்பத்துக்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்கிறார்கள். என்னைத் தேடி ஏன் வருகிறார்கள்?" என்றார் சோதிடர்.

"அப்படியானால் எனக்கு ஏதோ கஷ்டம் வந்திருப்பதனால் தான் உம்மைத் தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறீராக்கும்!"

"இல்லை, பெருமாட்டி! இல்லவே இல்லை! நவநிதியும் கொழிக்கும் பழையாறை மன்னரின் திருக் குமாரிக்குக் கஷ்டம் வந்தது என்று எந்தக் குருடன் தான் சொல்லுவான்! உலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது; இவனை மட்டும் கவனிப்பார் இல்லை. ஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள். தாயே! குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும். இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்!" என்று சோதிடர் சமத்காரமாகப் பேசினார்.

ரத சாரதியைப் பார்த்துக் குந்தவை, "ரதத்தைக் கோயிலுக்குச் சமீபம் கொண்டு போய் ஆலமரத்தின் நிழலில் நிறுத்தி வை!" என்றாள்.

பிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள்.

சோதிடர் தம் சீடனைப் பார்த்து "அப்பனே! வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே!" என்று எச்சரித்தார்.

அரச குமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது. சுவரில் ஒரு மாடத்தில் அம்பிகையின் படம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அமருவதற்கு இரண்டு பீடங்கள் சித்தமாயிருந்தன. குத்து விளக்கு எரிந்தது. அங்குமிங்கும் கோலங்கள் பொலிந்தன. ராசி சக்கரங்கள் போட்ட பலகைகளும் ஓலைச் சுவடிகளும் சுற்றிலும் இரைந்து கிடந்தன.

பெண்மணிகள் இருவரும் பீடங்களில் அமர்ந்த பிறகு, சோதிடரும் உட்கார்ந்தார்.

"அம்மணி! வந்த காரியம் இன்னதென்பதைத் தயவு செய்து சொல்லி அருள வேணும்!" என்றார்.

"ஜோசியரே! அதையும் தங்கள் சோதிடத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா?" என்றாள் குந்தவை.

"ஆகட்டும் தாயே!" என்று கூறிச் சோதிடர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் ஏதோ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.

பிறகு கண்ணைத் திறந்து பார்த்து "கோமாட்டி, இந்தக் கன்னிப் பெண்ணின் ஜாதகம் பற்றிக் கேட்பதற்காகவே இன்று முக்கியமாக வந்திருக்கிறீர்கள், அவ்விதம் தேவி பராசக்தியின் அருள் சொல்கிறது. உண்மைதானா?" என்றார்.

"ஆஹா! பிரமாதம்! உங்களுடைய சக்தியை என்னவென்று சொல்வது? ஆம், சோதிடரே! இந்த பெண்ணைப் பற்றிக் கேட்கத்தான் வந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்பு இவள் பழையாறை அரண்மனைக்கு வந்தாள். வந்து எட்டு மாத காலம் மிகக் குதூகலமாய் இருந்து வந்தாள். என் தோழியருக்குள்ளே இவள்தான் சிரிப்பும் விளையாட்டும் கலகலப்புமாக இருந்து வந்தாள். நாலுமாதமாக இவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. அடிக்கடி சோர்ந்து போகிறாள். பிரமை பிடித்தாற்போல் இருக்கிறாள்; சிரிப்பையே மறந்து விட்டாள். உடம்புக்கு ஒன்றுமில்லை என்கிறாள். இவள் பெற்றோர்கள் நாளைக்கு வந்து கேட்டால், என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை..."

"தாயே! கொடும்பாளூர் இளைய வேளாரின் செல்வப் புதல்வி தானே? இவருடைய பெயர் வானதி தானே?" என்றார் சோதிடர்.

"ஆமாம், உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே!"

"இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது. சேர்த்து வைத்திருக்கிறேன்! சற்றுப் பொறுக்க வேணும்!" என்று சொல்லிவிட்டு, சோதிடர் பக்கத்திலிருந்த ஒரு பழைய பெட்டியைத் திறந்து சிறிது நேரம் புரட்டினார். பிறகு, அதிலிருந்து ஒரு ஜாதகக் குறிப்பை எடுத்துக் கவனமாய்ப் பார்த்தார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

11. திடும்பிரவேசம்



இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலே கூட இடம் பெற்றிருக்கும் நகரம் நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் வழங்கப்பட்டு வந்தது. புண்ணியஸ்தல மகிமையன்றி, குடந்தை சோதிடராலும் அது புகழ் பெற்றிருந்தது.

குடந்தைக்குச் சற்று தூரத்தில் தென்மேற்குத் திசையில் சோழர்களின் இடைக்காலத் தலைநகரமான பழையாறை, வானை அளாவிய அரண்மனை மாடங்களுடனும் ஆலய கோபுரங்களுடனும் கம்பீரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

பழையாறை அரண்மனைகளில் வசித்த அரச குலத்தினர் அனைவருடைய ஜாதகங்களையும் குடந்தை சோதிடர் சேகரித்து வைத்திருந்தார். அப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான், கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார்.

சிறிது நேரம் ஜாதகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, சோதிடர் வானதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்ப ஜாதகத்தைப் பார்த்தார். இப்படி மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறந்து ஒன்றும் சொல்லுகிற வழியைக் காணவில்லை.

"என்ன, சோதிடரே! ஏதாவது சொல்லப் போகிறீரா, இல்லையா?" என்று குந்தவை தேவி கேட்டாள்.

"தாயே! என்னத்தைச் சொல்வது? எப்படி சொல்வது? முன் ஒரு தடவை தற்செயலாக இந்த ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன். என்னாலேயே நம்ப முடியவில்லை. இப்படியும் இருக்க முடியுமா என்று சந்தேகப்பட்டு வைத்து விட்டேன். இப்போது இந்தப் பெண்ணின் திருமுகத்தையும் இந்த ஜாதகத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, திகைக்க வேண்டியிருக்கிறது!"

"திகையும்! திகையும்! போதுமானவரை திகைத்துவிட்டு பிறகு ஏதாவது குறிப்பாக சொல்லும்!"

"இது மிகவும் அதிர்ஷ்ட ஜாதகம் தாயே! தாங்கள் எதுவும் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று சொல்கிறேன். தங்களுடைய ஜாதகத்தைக் காட்டிலும் கூட இது ஒருபடி மேலானது. இம்மாதிரி அதிர்ஷ்ட ஜாதகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை!"

குந்தவை புன்னகை புரிந்தாள். வானதியோ வெட்கப்பட்டவளாய், "அக்கா! இந்த துரதிர்ஷ்டக்காரியைப் போய் இவர் உலகத்திலேயே இல்லாத அதிர்ஷ்டக்காரி என்கிறாரே! இப்படித்தான் இருக்கும் அவர் சொல்லுவதெல்லாம்!" என்றார்.

"அம்மா! என்ன சொன்னீர்கள்? நான் சொல்வது தவறானால் என்னுடைய தொழிலையே விட்டுவிடுகிறேன்" என்றார் சோதிடர்.

"வேண்டாம், சோதிடரே! வேண்டாம். அப்படியெல்லாம் செய்து விடாதீர். ஏதோ நாலுபேருக்கு நல்ல வார்த்தையாகச் சொல்லிக் கொண்டிரும். ஆனால் வெறுமனே பொதுப்படையாகச் சொல்கிறீரே தவிர, குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லையே? அதனாலேதான் இவள் சந்தேகப்படுகிறாள்!"

"குறிப்பாகச் சொல்ல வேண்டுமா? இதோ சொல்லுகிறேன்! நாலு மாதத்திற்கு முன்னால் அபசகுனம் மாதிரி தோன்றக் கூடிய ஒரு காரியம் நடந்தது. ஏதோ ஒன்று தவறி விழுந்தது; ஆனால் அது உண்மையில் அபசகுனம் இல்லை. அதிலிருந்துதான் இந்தக் கோமகளுக்கு எல்லா அதிர்ஷ்டங்களும் வரப்போகின்றன!"

"வானதி! நான் என்னடி சொன்னேன்? பார்த்தாயா?" என்றாள் குந்தவை தேவி.

"முன்னாலேயே இவருக்கு நீங்கள் சொல்லி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது!" என்றாள் வானதி.

"பார்த்தீரா சோதிடரே இந்தப் பெண்ணின் பேச்சை!"

"பேசட்டும் தாயே! இப்போது எது வேண்டுமானாலும் பேசட்டும்! நாளைக்கு மன்னர் மன்னனை மணந்துகொண்டு..."

"அப்படிச் சொல்லுங்கள். இளம் பெண்களிடம் கலியாணத்தைப் பற்றிப் பேசினால் அல்லவா அவர்கள் சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்?..."

"அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன், தாயே! திடுதிப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக்கூடாது அல்லவா? எடுத்தால், 'இந்தக் கிழவனுக்குப் புத்திக் கெட்டுவிட்டது' என்று சொல்லி விடுவீர்கள்!"

"இவளுக்கு புருஷன் எங்கிருந்து வருவான்? எப்போது வருவான்? அவனுக்கு என்ன அடையாளம்? - ஜாதகத்திலிருந்து இதையெல்லாம் சொல்லமுடியுமா, சோதிடரே!"

"ஆகா! சொல்ல முடியாமல் என்ன? நன்றாய்ச் சொல்ல முடியும்!" என்று கூறிவிட்டு, சோதிடர் ஜாதகத்தை மறுபடியும் கவனித்துப் பார்த்தார். கவனித்துப் பார்த்தாரோ, அல்லது கவனித்துப் பார்ப்பது போல் அவர் பாசாங்குதான் செய்தாரோ நமக்குத் தெரியாது.

பிறகு, தலைநிமிர்ந்து நோக்கி, "அம்மணி! இந்த இளவரசிக்குக் கணவன் வெகு தூரத்திலிருந்து வரவேண்டியதில்லை. சமீபத்தில் உள்ளவன் தான். ஆயினும் அந்த வீராதி வீரன் இப்போது இந்நாட்டில் இல்லை. கடல் கடந்து சென்றிருக்கிறான்!" என்றார் சோதிடர்.

இதைக் கேட்டதும் குந்தவை வானதியைப் பார்த்தாள். வானதியின் உள்ளத்தில் பொங்கிய உவகையை அவள் அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. முகம் காட்டி விட்டது.

"அப்புறம் அவன் யார்? என்ன குலம்? தெரிந்துகொள்ள ஏதாவது அடையாளம் உண்டா?"

"நன்றாக உண்டு. இந்தப் பெண்ணை மணந்து கொள்ளும் பாக்கியசாலியின் திருக்கரங்களில் சங்கு - சக்கர ரேகை இருக்கும், அம்மா!"

மீண்டும் குந்தவை வானதியைப் பார்த்தாள். வானதியின் முகம் கவிந்து பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"அப்படியானால், இவளுடைய கைகளிலும் ஏதேனும் அடையாள ரேகை இல்லாமற் போகுமா" என்றாள் குந்தவை பிராட்டி.

"தாயே! இவளுடைய பாதங்களை எப்போதாவது தாங்கள் பார்த்ததுண்டா?..."

"ஏன் சோதிடரே! இது என்ன வார்த்தை! அவளுடைய காலைப் பிடிக்கும்படி என்னைச் சொல்கிறீரா?"

"இல்லை; அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ஆயிரமாயிரம் மன்னர்குலப் பெண்கள், பட்ட மகிஷிகள், அரசிளங்குமரிகள், ராணிகள், மகாராணிகள், இந்தப் பெண்ணரசியின் பாதங்களைத் தொடும் பாக்கியத்துக்காகத் தவம் கிடப்பார்கள் தாயே!"

"அக்கா! இந்தக் கிழவர் என்னைப் பரிகாசம் செய்கிறார். இதற்காகவா என்னை அழைத்து வந்தீர்கள்? எழுந்திருங்கள் போகலாம்!" என்று உண்மையாகவே பொங்கி வந்த கோபத்துடன் கூறினாள் வானதி.

"நீ என்னத்துக்குப் பதறுகிறாயடி, பெண்ணே! அவர் ஏதாவது சொல்லிக்கொண்டு போகட்டும்..."

"நான் ஏதாவது சொல்லி விடவில்லை. எல்லாம் இந்த ஜாதகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான் சொல்லுகிறேன். 'பாதத் தாமரை' என்று ஏதோ கவிகள் உபசாரமாக வர்ணிப்பார்கள். இந்தப் பெண்ணின் உள்ளங்காலைச் சிறிது காட்டச் சொல்லுங்கள். அதில் தாமரை இதழ்களின் ரேகை கட்டாயம் இருக்கும்."

"போதும்! சோதிடரே! இவளைப்பற்றி இன்னும் ஏதாவது சொன்னால் என்னைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள். இவளுக்கு வாய்க்கப்போகும் கணவனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்..."

"ஆகா! சொல்கிறேன்! இவளைக் கைப்பிடிக்கும் பாக்கியவான் வீராதி வீரனாயிருப்பான்! நூறு நூறு போர்க்களங்களில் முன்னணியில் நின்று வாகை மாலை சூடுவான். மன்னாதி மன்னனாயிருப்பான். ஆயிரமாயிரம் அரசர்கள் போற்றச் சக்கரவர்த்தியின் சிம்மாசனத்தில் பன்னெடுங் காலம் வீற்றிருப்பான்..."

"நீர் சொல்வதை நான் நம்பவில்லை. அது எப்படி நடக்க முடியும்?" என்று கேட்ட குந்தவை தேவியின் முகத்திலே ஆர்வமும் மகிழ்ச்சியும் ஐயமும் கவலையும் கலந்து தாண்டவமாடின.

"நானும் நம்பவில்லை. இவர் எதையோ நினைத்துக் கொண்டு பேசுகிறார். இப்படிச் சொன்னால் தங்களுக்குச் சந்தோஷமாயிருக்கும் என்று கூறுகிறார்!" என்றாள் வானதி.

"இன்று நீங்கள் நம்பாவிட்டால் பாதகமில்லை. ஒரு காலத்தில் நம்புவீர்கள். அப்போது இந்த ஏழைச் சோதிடனை மறந்து விடாதீர்கள்..."

"அக்கா! நாம் போகலாமா?" என்று மறுபடி கேட்டாள் வானதி. அவளுடைய கரிய விழிகளின் ஓரங்களில் இரு கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

"இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். அதைக் கேட்டுவிட்டுப் புறப்படுங்கள். இந்த இளவரசியை மணந்து கொள்ளப் போகும் வீரனுக்கு பற்பல அபாயங்களும், கண்டங்களும் ஏற்படும். பகைவர்கள் பலர் உண்டு..."

"ஐயோ!"

"ஆனால் அவ்வளவு அபாயங்களும் கண்டங்களும் முடிவில் பறந்து போகும். பகைவர்கள் படுநாசம் அடைவார்கள். இந்தத் தேவியை அடையும் நாயகன் எல்லாத் தடைகளையும் மீறி மகோன்னத பதவியை அடைவான்... இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு தாயே! நான் வயதானவன். ஆகையால் உள்ளதை ஒளியாமல் மனம் விட்டுச் சொல்கிறேன். இந்தப் பெண்ணின் வயிற்றை நீங்கள் ஒரு நாள் பாருங்கள். அதில் ஆலிலையின் ரேகைகள் இல்லாவிட்டால் நான் இந்த சோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்..."

"ஆலிலையின் ரேகையில் என்ன விசேஷம், சோதிடரே?"

"ஆலிலையின் மேல் பள்ளிக்கொண்ட பெருமான் யார் என்பது தெரியாதா? அந்தத் திருமாலின் அம்சத்துடன் இவள் வயிற்றில் ஒரு பிள்ளை பிறப்பான். இவளுடைய நாயகனுக்காவது பல இடைஞ்சல்கள், தடங்கல்கள், அபாயங்கள், கண்டங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில் அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடும்; எடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்; அவன் கால் வைத்த இடமெல்லாம் புலிக்கொடி பறக்கும். தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும். ஜயலஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள். அவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும் பரவும். அவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்!..."

இவ்வாறு சோதிடர் சொல்லி வந்த போது குந்தவை தேவி அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டு, அவர் கூறிய வார்த்தைகளை ஒன்று விடாமல் விழுங்குபவள் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அக்கா!" என்ற தீனமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

"எனக்கு என்னமோ செய்கிறது!" என்று மேலும் தீனமாகக் கூறினாள் வானதி. திடீரென்று மயங்கித் தரையில் சாய்ந்தாள்.

"ஜோசியரே! சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!" என்று குந்தவை சொல்லிவிட்டு, வானதியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள். சோதிடர் தண்ணீர் கொண்டு வந்தார். குந்தவை தண்ணீரை வாங்கி வானதியின் முகத்தில் தெளித்தாள்.

"ஒன்றும் நேராது. அம்மா! கவலைப்படாதீர்கள்..." என்றார் சோதிடர்.

"ஒரு கவலையும் இல்லை. இவளுக்கு இது வழக்கம். இந்த மாதிரி இதுவரையில் ஐந்தாறு தடவை ஆகிவிட்டது! சற்றுப் போனால் கண் விழித்து எழுந்திருப்பாள். எழுந்ததும் இது பூலோகமா, கைலாசமா என்று கேட்பாள்!" என்றாள் குந்தவை.

பிறகு சிறிது மெல்லிய குரலில், "ஜோசியரே! முக்கியமாக ஒன்று கேட்பதற்காகவே உங்களிடம் வந்தேன். நாடு நகரங்களிலே சில காலமாக ஜனங்கள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களாமே? வானத்தில் சில நாளாக வால் நட்சத்திரம் தோன்றுகிறதே? இராஜ்யத்துக்கு ஏதாவது ஆபத்து உண்டா? மாறுதல், குழப்பம் ஏதேனும் ஏற்படுமா?" என்று இளையபிராட்டி கேட்டாள்.

"அதை மட்டும் என்னைக் கேட்காதீர்கள், தாயே! தேசங்கள், இராஜ்யங்கள், இராஜாங்க நிகழ்ச்சிகள் - இவற்றுக்கெல்லாம் ஜாதகமும் கிடையாது; ஜோசியமும் சொல்ல முடியாது. நான் பயின்ற வித்தையில் அதெல்லாம் வரவில்லை. ஞானிகளும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும் ஒருவேளை ஞான திருஷ்டியில் பார்த்துச் சொல்லலாம். இந்த ஏழைக்கு அந்தச் சக்தி கிடையாது. இராஜரீக காரியங்களில் நாள், நட்சத்திரம், ஜாதகம், ஜோசியம் எல்லாம் சக்தியற்றுப் போய்விடுகின்றன..."

"ஜோசியரே! மிக சாமர்த்தியமாகப் பேசுகிறீர்! இராஜாங்கத்துக்கு ஜோசியம் பார்க்க வேண்டாம். ஆனால் என் தந்தையைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் பார்த்துச் சொல்லலாம் அல்லவா? அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் இராஜாங்க ஜாதகத்தைப் பார்த்ததுபோல் ஆகிவிடும் அல்லவா?"

"சாவகாசமாக இன்னொரு நாள் பார்த்துச் சொல்கிறேன். அம்மா! பொதுவாக, இது குழப்பங்களும் அபாயங்களும் நிறைந்த காலம். எல்லோருமே சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதான்..."

"ஜோசியரே! என் தந்தை சக்கரவர்த்தி... பழையாறையை விட்டுத் தஞ்சாவூருக்குப் போனதிலிருந்து எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது."

"முன்னமே சொன்னேனே, தாயே! மகாராஜாவுக்குப் பெரிய கண்டம் இருக்கிறது தங்கள் குடும்பத்துக்கும் பெரிய அபாயங்கள் இருக்கின்றன. துர்க்கா தேவியின் அருள் மகிமையினால் எல்லாம் நிவர்த்தியாகும்."

"அக்கா! நாம் எங்கே இருக்கிறோம்?" என்று வானதியின் தீனக் குரல் கேட்டது.

குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைபோல் கொட்டி மலர மலர விழித்தாள்.

"கண்மணி! இன்னும் நாம் இந்த பூலோகத்திலேதான் இருக்கிறோம்! சொர்க்க லோகத்துக்கு அழைத்துப் போக புஷ்பக விமானம் இன்னும் வந்து சேரவில்லை. எழுந்திரு! நம்முடைய குதிரை பூட்டிய ரதத்திலேயே ஏறிக்கொண்டு அரண்மனைக்குப் போகலாம்!" என்றாள் குந்தவை.

வானதி எழுந்து உட்கார்ந்து கொண்டு, "நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேனா!" என்றாள்.

"மயக்கம் போடவில்லை; அக்காவின் மடியில் படுத்துக் கொஞ்சம் தூங்கிவிட்டாய்! தாலாட்டுக்கூடப் பாடினேன். உன் காதில் விழவில்லையா?"

"கோபிக்காதீர்கள், அக்கா! என்னை அறியாமலே தலை கிறுகிறுத்து வந்துவிட்டது."

"கிறுகிறுக்கும், கிறுகிறுக்கும். இந்த ஜோசியர் எனக்கு அப்படி ஜோசியம் சொல்லியிருந்தால் எனக்குக் கூடத்தான் கிறுகிறுத்திருக்கும்."

"அதனால் இல்லை. அக்கா! இவர் சொன்னதையெல்லாம் நான் நம்பிவிட்டேனா?"

"நீ நம்பினாயோ, நம்பவில்லையோ? ஆனால் ஜோசியர் பயந்தே போய்விட்டார்! உன்னைப் போன்ற பயங்கொள்ளியை இனிமேல் எங்கும் அழைத்துப் போகக் கூடாது..."

"நான் தான் சோதிடரிடம் வரவில்லையென்று அப்போதே சொன்னேனே! நீங்கள்தானே...?"

"என் குற்றந்தான். எழுந்திரு, போகலாம். வாசல் வரையில் நாலு அடி நடக்க முடியுமா? இல்லாவிட்டால் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு போக வேணுமா?"

"வேண்டாம்! வேண்டாம்! நன்றாய் நடக்க முடியும்."

"சற்றுப் பொறுங்கள், தாயே! தேவியின் பிரஸாதம் தருகிறேன், வாங்கிக் கொண்டு போங்கள்" என்று ஜோசியர் சொல்லி விட்டு ஓலைச் சுவடியைக் கட்டத் தொடங்கினார்.

"ஜோசியரே! எனக்கு என்னவெல்லாமோ சொன்னீர்கள்; அக்காவுக்கு ஒன்றுமே சொல்ல வில்லையே?" என்று வானதி கூறினாள்.

"அம்மா! இளைய பிராட்டிக்கு எல்லாம் சொல்லியிருக்கிறேன். புதிதாக என்ன சொல்ல வேண்டும்?"

"அக்காவை மணந்து கொள்ளப் போகும் வீராதி வீரர்..."

"அசகாய சூரர்" என்று குந்தவை குறுக்கிட்டுச் சொன்னாள்.

"சந்தேகம் என்ன? மகா பராக்கிரமசாலியான இராஜகுமாரர்..."

"முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவர்; புத்தியில் பிரகஸ்பதி; வித்தையில் சரஸ்வதி; அழகிலே மன்மதன்; ஆற்றலில் அர்ஜுனன்!"

"இளைய பிராட்டிக்கு ஏற்ற அந்த ஸுகுமாரரான இராஜகுமாரர் எங்கிருந்து எப்போது வருவார்."

"வருகிறார், தாயே! வருகிறார்! கட்டாயம் வரப்போகிறார் அதி சீக்கிரத்திலேயே வருவார்."

"எப்படி வருவார்? குதிரை மேலே வருவாரா? ரதத்தில் ஏறி வருவாரா? யானைமேல் வருவாரா? கால் நடையாக வருவாரா? அல்லது நேரே ஆகாசத்திலிருந்து கூரையைப் பொத்துக் கொண்டு வந்து குதிப்பாரா!" என்று குந்தவை தேவி கேலியாகக் கேட்டாள்.

"அக்கா! குதிரை காலடிச் சத்தம் கேட்கிறது!" என்று வானதி சிறிது பரபரப்புடன் சொன்னாள்.

"ஒருவருக்கும் கேளாதது உனக்கு மாத்திரம் அதிசயமாய்க் கேட்கும்!"

"இல்லை, வேடிக்கைக்குச் சொல்லவில்லை. இதோ கேளுங்கள்!"

உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று விரைந்து வரும் காலடி சத்தம் கேட்டது.

"கேட்டால் என்னடி? குடந்தைப் பட்டணத்தின் வீதிகளில் குதிரை போகாமலா இருக்கும்?" என்றாள் குந்தவை.

"இல்லை; இங்கே வருகிறது மாதிரி தோன்றியது!"

"உனக்கு ஏதாவது விசித்திரமாகத் தோன்றும். எழுந்திரு, போகலாம்!"

இச்சமயத்தில் அந்த வீட்டின் வாசலில் ஏதோ குழப்பமான சத்தம் கேட்டது. குரல் ஒலிகளும் கேட்டன.

"இதுதானே ஜோசியர் வீடு?"

"ஆமாம்; நீ யார்?"

"ஜோசியர் இருக்கிறாரா?"

"உள்ளே போகக் கூடாது!"

"அப்படித்தான் போவேன்!"

"விடமாட்டேன்"

"ஜோசியரைப் பார்க்க வேண்டும்."

"அப்புறம் வா"

"அப்புறம் வர முடியாது; எனக்கு மிக்க அவசரம்!"

"அடே! அடே! நில்! நில்!"

"சற்று விலகிப்போ! தடுத்தாயோ, கொன்றுவிடுவேன்..."

"ஐயா! ஐயா! வேண்டாம்! உள்ளே போக வேண்டாம்!"

இத்தகைய குழப்பமான கூச்சல் நெருங்கி நெருங்கிக் கேட்டது; படார் என்ற வாசற் கதவு திறந்தது. அவ்வளவு பிரமாதமான தடபுடலுடன் ஒரு வாலிபன் உள்ளே திடும்பிரவேசமாக வந்தான். அவனைப் பின்னாலிருந்து தோள்களைப் பிடித்து இழுக்க ஒருவன் முயன்று கொண்டிருந்தான். வாலிபன் திமிறிக்கொண்டு வாசற்படியைக் கடந்து உள்ளே வந்தான். வந்த வாலிபன் யார் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள். நமது வீரன் வந்தியத்தேவன்தான்!

வீட்டுக்குள்ளே இருந்த மூன்று பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன.

வந்தியத்தேவனும் உள்ளிருந்தவர்களைப் பார்த்தான். இல்லை; உள்ளேயிருந்தவர்களில் ஒருவரைத் தான் பார்த்தான். அது கூட இல்லை. குந்தவை தேவியை அவன் முழுமையாகப் பார்க்கவில்லை. அவளுடைய பொன் முகத்தை மட்டுமே பார்த்தான். முகத்தையாவது முழுமையும் பார்த்தானா என்றால், அதுவும் இல்லை! வியப்பினால் சிறிது விரிந்திருந்த அவளுடைய பவளச் செவ்வாயின் இதழ்களைப் பார்த்தான்; கம்பீரமும் வியப்பும் குறும்புச் சிரிப்பும் ததும்பியிருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்த்தான். கண்ணிமைகளையும் கரிய புருவங்களையும் பார்த்தான். தங்க வர்ண நெற்றியைப் பார்த்தான். குங்குமச் சிவப்பான குழிந்த கன்னங்களைப் பார்த்தான். சங்கையொத்த வழுவழுப்பான கழுத்தைப் பார்த்தான். இவ்வளவையும் ஒரே சமயத்தில் தனித் தனியாகப் பார்த்தான். தனித்தனியாக அவை மனத்தில் பதிந்தன.

இதெல்லாம் சில விநாடி நேரந்தான். உடனே சட்டென்று திரும்பிச் சோதிடருடைய சீடனை நோக்கி, "ஏனப்பா, உள்ளே பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நீ சொல்லக் கூடாது? சொல்லியிருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா?" என்று கேட்டுக் கொண்டே சீடனை மறுபக்கம் தள்ளிக் கொண்டு வாசற்படியை மீண்டும் கடந்தான். ஆயினும் வெளியில் போவதற்குள் இன்னும் ஒரு தடவை குந்தவைதேவியைத் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போனான்.

"அடே அப்பா! புயல் அடித்து ஓய்ந்தது போல் அல்லவா இருக்கிறது?" என்றாள் குந்தவைப் பிராட்டி.

"இன்னும் ஓய்ந்தபாடில்லை; அதோ கேளுங்கள்!" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

வாசலில் இன்னமும் வந்தியத்தேவனுக்கும் சோதிடரின் சீடனுக்கும் தர்க்கம் நடந்துகொண்டிருந்தது.

"ஜோசியரே! இவர் யார்?" என்றாள் குந்தவை.

"தெரியாது, தாயே! யாரோ அசலூர்க்காரர் மாதிரி இருக்கிறது. பெரிய முரட்டுப் பிள்ளையென்று தோன்றுகிறது."

குந்தவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தாள்.

"எதற்காக அக்கா சிரிக்கிறீர்கள்."

"எதற்காகவா? எனக்கு வரப்போகும் மணாளன் குதிரையில் வரப்போகிறானா, யானையில் வரப்போகிறானா, அல்லது கூரை வழியாக வந்து குதிக்கப் போகிறானா என்று பேசிக்கொண்டிருந்தோமே அதை நினைத்துக் கொண்டு சிரித்தேன்!"

இப்போது வானதிக்கும் சிரிப்புத் தாங்க முடியாமல் வந்தது.

இருவருடைய சிரிப்பும் கலந்து அலை அலையாக எழுந்தது.

வெளியில் எழுந்த சச்சரவுச் சப்தம் கூட இந்த இரு மங்கையரின் சிரிப்பின் ஒலியில் அடங்கிவிட்டது.

சோதிடர் மௌன சிந்தனையில் ஆழ்ந்தவராய், அரச குமாரிகள் இருவருக்கும் குங்குமம் கொடுத்தார்.

பெற்றுக் கொண்டு இருவரும் எழுந்தனர். வீட்டுக்கு வெளியில் சென்றனர்.

சோதிடரும் கூட வந்தார்.

வீட்டு வாசலில் சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன், பெண்மணிகளைப் பார்த்ததும், "மன்னிக்கவேண்டும். உள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை. ஆகையினால்தான் அப்படி அவசரமாக வந்துவிட்டேன்! அதற்காக மன்னிக்க வேண்டும்!" என்று உரத்த குரலில் சொன்னான்.

குந்தவை மலர்ந்த முகத்துடன் குறும்பும் கேலியும் மிடுக்கும் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு வார்த்தையும் மறுமொழி சொல்லவில்லை. வானதியை ஒரு கையினால் பிடித்து இழுத்துக் கொண்டு ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள்.

"குடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதையே தெரியாது போலிருக்கிறது. ஏதடா ஒரு மனிதன் வலிய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ?" என்று வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது.

ரதத்தில் குதிரையைப் பூட்டிச் சாரதி ஆயத்தமாக நிறுத்தியிருந்தான்.

இளவரசிகள் இருவரும் ரதத்தில் ஏறிக் கொண்டதும், ரத சாரதியும் முன்னால் ஏறிக் கொண்டான்.

ரதம் அரிசிலாற்றங்கரையை நோக்கி விரைந்து சென்றது.

வந்தியத்தேவன் ரதம் மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

12. நந்தினி


கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா?

ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி! உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால் இவனை இந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்!" என்றார்.

"நம்பி அடிகளே! தங்களுடைய திருச்செவியில் விழுந்ததா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சாஷாத் சிவபெருமானுடைய பஞ்சாட்சரத் திருமந்திரத்தைச் சொல்லக் கூடாது என்று இவன் யார் தடை செய்வதற்கு? முடியாது! முடியாது!

கற்றூணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயவே!"

என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார்.

"நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!"

என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.

"சிவ சிவ சிவா!" என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார்.

ஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை எடுத்தார்.

ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி! நீயே அந்த வீர சைவரைக் கொஞ்சம் கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறாரே? ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை அலம்பி விட்டுத்தான் இந்தக் கொள்ளிட நதி கீழே வருகிறது. பெருமாளின் பாதம்பட்ட தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக்காவலில் அந்தத் தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார்?" என்று சொல்லுவதற்குள்ளே சைவப் பெரியார் மிக வெகுண்டு ஆழ்வார்க்கடியான் மீது பாய்ந்தார். படகில் ஓரத்தில் இரண்டு பேரும் கைகலக்கவே, படகு கவிழ்ந்து விடும் போலிருந்தது. ஓடக்காரர்களும் வந்தியத்தேவனும் குறுக்கிட்டு அவர்களை விலக்கினார்கள்.

"பக்த சிரோமணிகளே! நீங்கள் இருவரும் இந்தக் கொள்ளிட வெள்ளத்திலே விழுந்து நேரே மோட்சத்துக்குப் போக ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இன்னும் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் மிச்சமிருக்கின்றன!" என்றான் வந்தியத்தேவன்.

ஓடக்காரர்களில் ஒருவன், "கொள்ளிடத்தில் விழுந்தால் மோட்சத்துக்குப் போவது நிச்சயமோ, என்னமோ தெரியாது! ஆனால் முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம்! அதோ பாருங்கள்!' என்றான்.

அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் முதலை ஒன்று பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டு காணப்பட்டது.

"எனக்கு முதலையைப் பற்றிச் சிறிதும் அச்சம் இல்லை; கஜேந்திரனை ரட்சித்த ஆதிமூலமான நாராயண மூர்த்தி எங்கே போய்விட்டார்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"எங்கே போய்விட்டாரா? பிருந்தாவனத்து கோபிகா ஸ்திரீகளின் சேலைத் தலைப்பில் ஒரு வேளை ஒளிந்து கொண்டிருப்பார்!" என்றார் சைவர்.

"அல்லது பத்மாசுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்கு இன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம்" என்றான் நம்பி.

"திரிபுர சம்ஹாரத்தின் போது திருமால் அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை போலிருக்கிறது!" என்றார் சைவப் பெரியார்.

"சுவாமிகளே! நீங்கள் எதற்காகத்தான் இப்படிச் சண்டை போடுகிறீர்களோ, தெரியவில்லை! யாருக்கு எந்தத் தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே?" என்றான் வந்தியத்தேவன்.

சைவப் பெரியாரும் ஆழ்வார்க்கடியானும் ஏன் அவ்விதம் சண்டையிட்டார்கள்? வீர நாராயணபுரத்தில் ஏன் இதே மாதிரியான வாதப் போர் நடந்தது என்பதைப் பற்றி வாசகர்களுக்கு இச்சமயத்தில் சொல்லிவிடுவது உசிதமாயிருக்கும்.

பழந் தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுநூறு வருஷ காலம் பௌத்த மதமும் சமண மதமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்தச் செல்வாக்கினால் தமிழகம் பல நலங்களை எய்தியது. சிற்பம், சித்திரம், கவிதை, காவியம் முதலிய கலைகள் தழைத்தோங்கின. பின்னர், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றினார்கள். அமுதொழுகும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்களைப் பொழிந்தார்கள். வைஷ்ணவத்தையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்தார்கள். இவர்களுடைய பிரசார முறை மிகச்சக்தி வாய்ந்ததாயிருந்தது. சமயப் பிரச்சாரத்துக்குச் சிற்பக் கலையுடன் கூட இசைக் கலையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆழ்வார்களின் பாசுரங்களையும் மூவர் தேவாரப் பண்களையும் தேவகானத்தையொத்த இசையில் அமைத்துப் பலர் பாடத் தொடங்கினார்கள். இந்த இசைப் பாடல்கள் கேட்போர் உள்ளங்களைப் பரவசப்படுத்தி பக்தி வெறியை ஊட்டின. ஆழ்வார்களின் பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலங்களும் மூவரின் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களும் புதிய சிறப்பையும் புனிதத் தன்மையையும் அடைந்தன. அதற்கு முன் செங்கல்லாலும் மரத்தினாலும் கட்டப்பட்டிருந்த ஆலயங்கள் புதுப்பித்துக் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. இந்தத் திருப்பணியை விஜயாலய சோழன் காலத்திலிருந்து சோழ மன்னர்களும், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாகச் செய்துவந்தார்கள்.

அதே சமயத்தில் கேரள நாட்டில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. காலடி என்னுமிடத்தில் ஒரு மகான் அவதரித்தார். இளம் பிராயத்தில் அவர் உலகைத் துறந்து சந்நியாசி ஆனார். வடமொழியிலுள்ள சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டார். வேத உபநிஷதம், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் - இவற்றின் அடிப்படையில் அத்வைத வேதாந்தக் கொள்கையின் கொடியை நாட்டினார். வடமொழியில் பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைத மடங்களை ஸ்தாபனம் செய்தார். இவருடைய கொள்கையை ஆதரித்த அத்வைத சந்நியாசிகள் நாடெங்கும் பரவிச் சென்றார்கள்.

இவ்விதம் தமிழ் நாட்டில் நம் கதை நடந்த காலத்தில் அதாவது சுமார் 980 வருஷங்களுக்கு முன்பு, (1950ல் எழுதியது) பெரியதொரு சமயக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பிலிருந்து தீங்கு தரும் அம்சங்கள் சிலவும் தோன்றிப் பரவின. வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் ஆங்காங்கு முளைத்தார்கள். இவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சண்டையில் இறங்கினார்கள். இந்த வாதப் போர்களில் அத்வைதிகளும் கலந்து கொண்டார்கள். சமய வாதப் போர்கள் சில சமயம் அடிதடி சண்டையாகப் பரிணமித்தன.

அந்த காலத்து சைவ - வைஷ்ணவப் போரை விளக்கும் அருமையான கதை ஒன்று உண்டு.

ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக்காவல் ஆலய வெளிச் சுவரின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல் விழுந்தது. காயமாகி இரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார். கோபுரத்தில் ஒரு காக்கை உட்கார்ந்தபடியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். உடனே அவருக்குக் காயமும் வலியும் மறந்து போய் ஒரே குதூகலம் உண்டாகி விட்டது. "ஸ்ரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே! திருவானைக்காவல் சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு!" என்றாராம்.

அந்த நாளில் இத்தகைய சைவ - வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது. இதைத் தெரிந்து கொள்ளுதல், பின்னால் இந்தக் கதையைத் தொடர்ந்து படிப்பதற்கு மிக்க அனுகூலமாயிருக்கும்.

ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நீ நாசமாய்ப் போவாய்!" என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார்.

வந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன் பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப் போனான். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள். அந்த மரத்தின் விசாலமான அடர்ந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மதுரமான கலகலத்வனி செய்து கொண்டிருந்தன.

வந்தியத்தேவனும் நம்பியும் ஒருவருடைய வாயை ஒருவர் பிடுங்கி ஏதாவது விஷயத்தைக் கிரஹிக்க விரும்பினார்கள். முதலில் சிறிது நேரம் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.

"ஏன் தம்பி! கடம்பூர் மாளிகைக்கு என்னை அழைத்துப் போகாமல் விட்டு விட்டுப் போனாயல்லவா?"

"நான் போவதே பெரிய கஷ்டமாகப் போய்விட்டது நம்பிகளே!"

"அப்படியா? பின் எப்படித்தான் போனாய்? ஒரு வேளை போகவில்லையோ?"

"போனேன், போனேன், ஒரு காரியத்தை உத்தேசித்து விட்டால் பின்வாங்கி விடுவேனோ? வாசற் காவலர்கள் தடுத்தார்கள். குதிரையை ஒரு தட்டு தட்டி உள்ளே விட்டேன். தடுத்தவர்கள் அத்தனை பேரும் உருண்டு தரையில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொள்வதற்குள் என் நண்பன் கந்தமாறன் ஓடி வந்து என்னை அழைத்துப் போனான்."

"அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். மிக்க தைரியசாலி நீ. சரி அப்புறம் என்ன நடந்தது? யார், யார் வந்திருந்தார்கள்?"

"எத்தனையோ பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது. பழுவேட்டரையர் வந்திருந்தார். அவருடைய இளம் மனையாளும் வந்திருந்தாள். அப்பப்பா! அந்த பெண்ணின் அழகை என்னவென்று சொல்வது?..."

"நீ பார்த்தாயா என்ன?"

"ஆமாம், பார்க்காமலா? என் நண்பன் கந்தமாறன் என்னை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே பார்த்தேன். அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"

"அடேயப்பா! ஒரேயடியாக வர்ணிக்கிறாயே? பிறகு என்ன நடந்தது? குரவைக் கூத்து நடந்ததா?"

"நடந்தது, மிகவும் நன்றாயிருந்தது. அப்போது உம்மை நினைத்துக் கொண்டேன்."

"எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. இன்னும் என்ன நடந்தது?"

"வேலனாட்டம் நடந்தது. தேவராளனும் தேவராட்டியும் மேடைக்கு வந்து ஆவேசமாக ஆடினார்கள்."

"சந்நதம் வந்ததா? ஏதாவது வாக்குச் சொன்னார்களா?"

"ஆகா! நினைத்த காரியம் கைக்கூடும்; மழை பெய்யும்; நிலம் விளையும்; என்றெல்லாம் சந்நதக்காரன் சொன்னான்..."

"அவ்வளவுதானா?"

"இன்னும் ஏதோ இராஜாங்க விஷயமாகச் சொன்னான். நான் அதையொன்றும் கவனிக்கவில்லை."

"அடாடா! இவ்வளவுதானா? கவனித்திருக்க வேண்டும், தம்பி! நீ இளம் பிள்ளை; நல்ல வீர பராக்கிரம் உடையவனாய்த் தோன்றுகிறாய். இராஜாங்க விஷயங்களைப் பற்றி எங்கேயாவது யாராவது பேசினால் காதில் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்."

"நீர் சொல்வது உண்மை. எனக்குக் கூட இன்று காலையில் அப்படித்தான் தோன்றியது."

"காலையில் தோன்றுவானேன்?"

"காலையில் கந்தமாறனும் நானும் பேசிக்கொண்டே கொள்ளிடக்கரை வரையில் வந்தோம். இராத்திரி நான் படுத்துத் தூங்கிய பிறகு, கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்த விருந்தாளிகள் கூட்டம் போட்டு ஏதேதோ இராஜாங்க விஷயமாகப் பேசினார்களாம்."

"என்ன பேசினார்களாம்?"

"அது எனக்குத் தெரியாது. கந்தமாறன் ஏடாகூடமாகச் சொன்னானே தவிர, தெளிவாகச் சொல்லவில்லை, ஏதோ ஒரு காரியம் சீக்கிரம் நடக்கப் போகிறது. அப்போது சொல்கிறேன் என்றான். அவன் பேச்சே மர்மமாயிருந்தது. ஏன், சுவாமிகளே! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"

"எதைப் பற்றி?"

"நாடு நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே? வானத்தில் வால் நட்சத்திரம் காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்; அப்படி, இப்படி - என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப் பேச்சு எட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி, அடுத்து பட்டத்துக்கு யார் என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது? - அடுத்து பட்டத்துக்கு யார் வரக்கூடும்?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது, தம்பி! இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறவன்!"

இவ்வாறு ஆழ்வார்க்கடியான் கூறி, "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று பாடத் தொடங்கவும், வந்தியத்தேவன் குறுக்கிட்டு, "உமக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், நிறுத்தும்!" என்றான்.

"அடடா! தெய்வத் தமிழ்ப் பாசுரத்தை நிறுத்தச் சொல்கிறாயே?"

"ஆழ்வார்க்கடியான் நம்பிகளே! எனக்கு ஒரு சந்தேகம் உதித்திருக்கிறது அதைச் சொல்லட்டுமா?"

"நன்றாய்ச் சொல்லு!"

"தடியைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டீரே?"

"உன்னையா? உன்னை அடிக்க என்னாலே முடியுமா?"

"உம்முடைய வைஷ்ணவம், பக்தி, ஊர்த்தவ புண்டரம், பாசுரப் பாடல் - எல்லாம் வெறும் வேஷம் என்று சந்தேகிக்கிறேன்."

"ஐயையோ! இது என்ன பேச்சு? அபசாரம்! அபசாரம்!"

"அபசாரமும் இல்லை, உபசாரமும் இல்லை. உம்முடைய பெண்ணாசையை மறைப்பதற்காக இந்த மாதிரி வேஷம் போடுகிறீர். உம்மைப் போல் இன்னும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணாசைப் பித்து பிடித்து அலைகிறவர்கள். அப்படி என்னதான் பெண்களிடம் காண்கிறீர்களோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கிறது."

"தம்பி! பெண் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர்களோடு என்னைச் சேர்க்காதே, நான் வேஷதாரி அல்ல. நீ அவ்விதம் சந்தேகிப்பது ரொம்பத் தவறு."

"அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர்? அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா? நீர் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும் அவளைப் பார்ப்பதற்குத்தானே? இல்லை என்று சொல்ல வேண்டாம்!"

"இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீ கூறிய காரணம் தவறு. வேறு தகுந்த காரணம் இருக்கிறது. அது பெரிய கதை."

"குதிரை இன்னும் வரக்காணோம். அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன்! கேட்கலாம்!"

"கதை என்றால், கற்பனைக் கதை அல்ல; உண்மையாக நடந்த கதை. அதிசய வரலாறு! கேட்டால் திகைத்துப் போவாய்! அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?"

"இஷ்டமிருந்தால் சொல்லுங்கள்!"

"ஆம், சொல்லுகிறேன். கொஞ்சம் எனக்கு அவசரமாய்ப் போக வேண்டும், இருந்தாலும் சொல்லிவிட்டுப் போகிறேன். மறுபடியும் உன்னிடம் ஏதாவது உதவி கோரும்படியிருந்தாலும் இருக்கும். அப்போது தட்டாமல் செய்வாய் அல்லவா?"

"நியாயமாயிருந்தால் செய்வேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்."

"இல்லையில்லை! உன்னிடம் கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். அந்த இரணியாசுரன் பழுவேட்டரையரின் இளம் மனைவி இருக்கிறாளே, நான் ஓலை கொண்டு போகச் சொன்னேனே, அவள் பெயர் நந்தினி. அவளுடைய கதையை நீ கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவாய். உலகில் இப்படியும் அக்கிரமம் உண்டா என்று பொங்குவாய்!" இந்த முன்னுரையுடன் ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பற்றிய கதையை ஆரம்பித்தான்.

ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய குடும்பத்தார் பரம பக்தர்களான வைஷ்ணவர்கள். அவனுடைய தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ள நந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு பெண் குழந்தை அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன் போற்றிக் காப்பாற்றினார்கள். நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி வந்தான்.

நந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்தது போல் பெருமாளிடமும் பக்தியும் வளர்ந்து வந்தது. அவள் மற்றொரு 'ஆண்டாள்' ஆகிப் பக்தர்களையெல்லாம் ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. தந்தை இறந்த பிறகு அப்பெண்ணை வளர்க்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். நந்தினி துளசிமாலை அணிந்து பக்திப் பரவசத்துடன் பாசுரம் பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.

ஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் திருவேங்கடத்துக்கு யாத்திரை சென்றான். திரும்பி வரக் காலதாமதமாகிவிட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்துவிட்டது.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில் நடந்தது. பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. வீரபாண்டியன் உடம்பெல்லாம் காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான். அவனுடைய அந்தரங்க ஊழியர்கள் சிலர் அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர் தப்புவிக்க முயன்றார்கள். இரவுக்கிரவே, நந்தினியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு மனமிரங்கி நந்தினி அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் சீக்கிரத்தில் சோழ வீரர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நந்தினியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். நந்தினியின் அழகைக் கண்டு மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்.

இது மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தது. பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பார்க்கவே முடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இது வரையில் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை...

இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர் மாளிகையில் பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன் என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு, ஏதோ ஒன்று மனத்தில் தடை செய்தது. ஒரு வேளை இந்தக் கதை முழுதும் ஆழ்வார்க்கடியானின் கற்பனையோ என்று தோன்றியது. ஆகையால் கடம்பூர் மாளிகையில் தான் அறிந்து கொண்ட இரகசியத்தைச் சொல்லவில்லை.

அப்போது சற்று தூரத்தில், கடம்பூர் வீரன் குதிரையுடன் வந்து கொண்டிருந்தான்...

"தம்பி! எனக்கு நீ உதவி செய்வாயா?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"நான் என்ன உதவி செய்ய முடியும்? பழுவேட்டரையர் இந்தச் சோழப் பேரரசையே ஆட்டுவிக்கும் ஆற்றல் உடையவர். நானோ ஒரு செல்வாக்குமில்லாத தன்னந் தனி ஆள். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று வந்தியத்தேவன் ஜாக்கிரதையாகவே பேசினான். பிறகு, "நம்பிகளே! இராஜாங்க காரியங்களைப் பற்றி உமக்கு ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டத்துக்கு உரியவர் யார் என்று உம்மால் சொல்ல முடியாதா?" என்றான்.

இப்படிக் கேட்டு விட்டு, அடியானுடைய முகபாவத்தில் ஏதாவது மாறுதல் ஏற்படுகிறதா என்று வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான், லவலேசமும் மாறுதல் ஏற்படவில்லை.

"அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி! குடந்தை ஜோசியரைக் கேட்டால் ஒருவேளை சொல்வார்!" என்றான் நம்பி.

"ஓஹோ! குடந்தை சோதிடர் உண்மையிலே அவ்வளவு கெட்டிக்காரர்தானா?"

"அசாத்திய கெட்டிக்காரர்! சோதிடமும் பார்த்துச் சொல்வார்; மனதையும் அறிந்து சொல்வார்; உலக விவகாரங்களை அறிந்து, அதற்கேற்பவும் ஆருடம் சொல்லுவார்!"

"அப்படியானால் அவரைப் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் மனதில் தீர்மானித்துக் கொண்டான்.

ஆதிகாலத்திலிருந்து மனித குலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் பிரேமை இருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரேமை உண்டு; ஆண்டிகளுக்கும் உண்டு; முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு; மூடமதியினர்களுக்கும் உண்டு. இத்தகைய பிரேமை, நாடு நகரங்களைக் கடந்து பல அபாயங்களுக்குத் துணிந்து, அரசாங்க அந்தரங்கப் பணியை நிறைவேற்றுவதற்காகப் பிரயாணம் செய்துகொண்டிருந்த நம்முடைய வாலிப வீரனுக்கும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

13. வளர்பிறைச் சந்திரன்

இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்தபிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார். அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

"தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?" என்று கேட்டார். வந்தியத்தேவன் சிரித்தான்.

"என்னப்பா, சிரிக்கிறாய்?"

"இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான சோதிடர், என்னைக் கேள்வி கேட்கிறீர்களே? நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று சோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா?"

"ஓகோ! அதற்கென்ன? பார்த்துக்கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்று தான் யோசிக்கிறேன்."

வந்தியத்தேவன் புன்னகை செய்துவிட்டு, "சோதிடரே! இப்போது இங்கே வந்துவிட்டுப் போனார்களே? அவர்கள் யார்?" என்று கேட்டான்.

"ஓ! அவர்களா? நீ யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. நீ என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது இங்கே இருந்தார்களே, அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா? ரதத்தில் ஏறிக்கொண்டு, பின்னால் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே? அவர்களைப் பற்றித் தானே?" என்று குடந்தை சோதிடர் சுற்றி வளைத்துக் கேட்டார்.

"ஆமாம், ஆமாம்! அவர்களைப் பற்றித்தான் கேட்டேன்..."

"நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார் சொன்னது? அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள்!"

"அது எனக்கே தெரிந்து போய்விட்டது. சோதிடரே! நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான் வித்தியாசம் கண்டுபிடித்து விடுவேன். பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்து போய்விடும்."

"பின்னே என்ன கேட்கிறாய்?"

"பெண்கள் என்றால், அவர்கள் இன்னார், இன்ன ஜாதி..."

"ஓகோ! அதையா கேட்கிறாய்! பெண்களில் பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு. உனக்குச் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கொஞ்சம் பயிற்சி இருக்கும் போலிருக்கிறது. அந்த நாலு ஜாதிகளில் இவர்கள் பத்மினி, காந்தர்வி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்."

"கடவுளே!..."

"ஏன்? அப்பனே!"

"கடவுளை நான் கூப்பிட்டல், நீங்கள் 'ஏன்?' என்று கேட்கிறீர்களே?"

"அதில் என்ன பிசகு? கடவுள் சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா? பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாக கிடையாது போலிருக்கிறது! எனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். உனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். நீ இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாயே, அந்த என் சீடனுக்குள்ளே இருப்பவரும் கடவுள்தான்..."

"போதும், போதும், நிறுத்துங்கள்."

"இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான்; இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான்!"

"சோதிடரே! இப்போது இங்கேயிருந்து போனார்களே, அந்தப் பெண்கள் யார், எந்த ஊர், என்ன குலம், என்ன பெயர் - என்று கேட்டேன், சுற்றி வளைக்காமல் மறுமொழி சொன்னால்..."

"சொன்னால் எனக்கு நீ என்ன தருவாய் அப்பனே!"

"என் வந்தனத்தைத் தருவேன்."

"உன் வந்தனத்தை நீயே வைத்துக்கொள். ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு!"

"பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாகச் சொல்லுவீர்களா?"

"அதுவும் சொல்லக்கூடியதாயிருந்தால்தான் சொல்லுவேன்! தம்பி! இதைக் கேள். சோதிடன் வீட்டுக்குப் பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால் அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்."

"ஆகா! ஆழ்வார்க்கடியான் நம்பி தங்களைப் பற்றிச் சொன்னது முற்றும் உண்மைதான்."

"ஆழ்வார்க்கடியாரா? அவர் யார் அப்படி ஒருவர்?"

"தங்களுக்குத் தெரியாதா, என்ன, ரொம்பவும் தங்களைத் தெரிந்தவர்போல் பேசினாரே? ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா?"

"ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும்; பெயர் ஞாபகம் இராது. கொஞ்சம் அடையாளம் சொல்லு, பார்க்கலாம்!"

"கட்டையாயும் குட்டையாயும் இருப்பார். முன் குடுமி வைத்திருப்பார். இளந் தொந்தியில் வேட்டியை இறுக்கிக் கட்டியிருப்பார். சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். சைவர்களைக் கண்டால் சண்டைக்குப் போவார். அத்வைதிகளைக் கண்டால் தடியைத் தூக்குவார். சற்றுமுன்னால் 'நீயும் கடவுள், நானும் கடவுள்' என்றீர்களே, இதை ஆழ்வார்க்கடியான் கேட்டிருந்தால் 'கடவுளை கடவுள் தாக்குகிறது!" என்று சொல்லித் தடியினால் அடிக்க வருவார்..."

"தம்பி! நீ சொல்லுவதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் திருமலையப்பனைப் பற்றிச் சொல்லுகிறாய் போலிருக்கிறது..."

"அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா?"

"ஊருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவர்."

"ஆளுக்குத் தகுந்த வேஷமும் போடுவாராக்கும்!"

"ஆகா! சமயத்துக்குத் தகுந்த வேஷமும் போடுவார்."

"சொல்லுவதில் கொஞ்சம் கற்பனையும் பொய்யும் கலந்திருக்குமோ?"

"முக்காலே மூன்றரை வீசம் பொய்யும் கற்பனையும் இருக்கும். அரை வீசம் உண்மையும் இருக்கலாம்."

"ரொம்பப் பொல்லாத மனிதர் என்று சொல்லுங்கள்!"

"அப்படியும் சொல்லிவிட முடியாது. நல்லவர்க்கு நல்லவர்; பொல்லாதவர்க்குப் பொல்லாதவர்."

"அவருடைய பேச்சை நம்பி ஒன்றும் செய்ய முடியாது."

"நம்புவதும் நம்பாததும் அந்தந்தப் பேச்சைப் பொறுத்திருக்கிறது..."

"உதாரணமாக, தங்களிடம் போய்ச் சோதிடம் கேட்டால் நல்லபடி சொல்லுவீர்கள் என்று அவர் கூறியது..."

"அவர் பேச்சில் அரை வீசம் உண்மையும் இருக்கும் என்றேனே, அந்த அரை வீசத்தில் அது சேர்ந்தது."

"அப்படியானால் எனக்கு ஏதாவது ஆருடம் சொல்லுங்கள். நேரமாகிவிட்டது. எனக்குப் போகவேண்டும், ஐயா"

"அப்படி அவசரமாக எங்கே போகவேண்டும், ஐயா"

"அதையும் தாங்கள் சோதிடத்தில் பார்த்துச் சொல்லக் கூடாதா? எங்கே போகவேண்டும். எங்கே போகக் கூடாது. போனால் காரியம் சித்தியாகுமா என்பதைப் பற்றியெல்லாந்தான் தங்களைக் கேட்க வந்தேன்."

"சோதிடம், ஆருடம் சொல்வதற்கும் ஏதாவது ஆதாரம் வேண்டும் அப்பனே! ஜாதகம் வேண்டும்; ஜாதகம் இல்லாவிடில், பிறந்தநாள், நட்சத்திரமாவது தெரியவேண்டும்; அதுவும் தெரியாவிடில், ஊரும் பேருமாவது சொல்லவேண்டும்."

"என் பெயர் வந்தியத்தேவன்!"

"ஆகா! வாணர் குலத்தவனா?"

"ஆமாம்."

"வல்லவரையன் வந்தியத்தேவனா?"

"அவனேதான்"

"அப்படிச் சொல்லு, தம்பி! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? உன் ஜாதகம் கூட என்னிடம் இருந்ததே! தேடிப் பார்த்தால் கிடைக்கும்."

"ஓஹோ! அது எப்படி?"

"என்னைப் போன்ற சோதிடர்களுக்கு வேறு என்ன வேலை? பெரிய வம்சத்தில் பிறந்த பிள்ளைகள் - பெண்கள் இவர்களுடைய ஜாதகங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்."

"நான் அப்படியொன்றும் பெரிய வம்சத்தில் பிறந்தவன் அல்லவே..."

"நன்றாகச் சொன்னாய்! உன்னுடைய குலம் எப்பேர்ப்பட்ட குலம்! வாணர் குலத்தைப் பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடியிருக்கிறார்கள்! ஒருவேளை நீ கேட்டிருக்க மாட்டாய்."

"ஒரு கவிதையைத்தான் சொல்லுங்களேன், கேட்கலாம்."

சோதிடர் உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:

"வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன்
வாணன் பெயரெழுதா மார்புண்டோ - வாணன்
கொடி தாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ
அடிதாங்கி நில்லா அரசு!"

சோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும்போது வெளியாயிற்று. ஆயினும் பாடலைப் பண்ணில் அமைத்து மிக விளக்கமாகவும் உருக்கமாகவும் பாடினார்.

"கவி எப்படியிருக்கிறது?" என்று கேட்டார்.

"கவி காதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய கொடியை ஏதாவது ஒரு மாட்டின் கொம்பில் நானே கட்டி விட்டால்தான் உண்டு. அரசமரத்துக் கிளைமேல் ஏறி நின்றால் தான் அரசு என் அடியைத் தாங்கும். அது கூடச் சந்தேகம்தான். கனம் தாங்காமல் கிளை முறிந்து என்னையும் கீழே தள்ளினாலும் தள்ளும்!" என்றான் வந்தியத்தேவன்.

"இன்றைக்கு உன் நிலைமை இப்படி; நாளைக்கு எப்படியிருக்கும் என்று யார் கண்டது?" என்றார் சோதிடர்.

"தாங்கள் கண்டிருப்பீர்கள் என்று எண்ணியல்லவா வந்தேன்?" என்றான் வல்லவரையன்.

"நான் என்னத்தைக் கண்டேன், தம்பி! எல்லாரையும்போல் நானும் அற்ப ஆயுள் படைத்த மனிதன் தானே? ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் வருங்கால நிகழ்ச்சிகளைச் சொல்லுகின்றன. அவை சொல்லுவதை நான் சிறிது கண்டறிந்து கேட்பவர்களுக்குச் சொல்கிறேன். அவ்வளவுதான்!"

"கிரஹங்களும் நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன, சோதிடரே?"

"நீ நாளுக்கு நாள் உயர்வாய் என்று சொல்லுகின்றன."

"சரியாக போச்சு! இப்போதுள்ள உயரமே அதிகமாயிருக்கிறது. உங்கள் வீட்டில் நுழையும்போது குனிய வேண்டியிருக்கிறது! இன்னும் உயர்ந்து என்ன செய்வது? இப்படியெல்லாம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பாக ஏதாவது சொல்லுங்கள்."

"நீ ஏதாவது குறிப்பாகக் கேட்டால், நானும் குறிப்பாகச் சொல்லுவேன்."

"நான் தஞ்சாவூருக்குப் போகிற காரியம் கைகூடுமா? சொல்லுங்கள்."

"நீ தஞ்சாவூருக்கு உன் சொந்த காரியமாகப் போகிறதானால் போகிற காரியம் கைகூடும். இப்போது உனக்கு ஜயக்கிரகங்கள் உச்சமாயிருக்கின்றன. பிறருடைய காரியமாகப் போவதாயிருந்தால், அந்த மனிதர்களுடைய ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லவேண்டும்!"

வந்தியத்தேவன் தலையை ஆட்டிக் கொண்டு மூக்கின் மேல் விரலை வைத்து, "சோதிடரே! தங்களைப் போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை!" என்றான்.

"முகஸ்துதி செய்யாதே, தம்பி!" என்றார் சோதிடர்.

"இருக்கட்டும். கேட்க வேண்டியதைத் தெளிவாகவே கேட்டுவிடுகிறேன். தஞ்சாவூரில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்புகிறேன், அது சாத்தியமாகுமா?"

"என்னைவிடப் பெரிய சோதிடர்கள் இருவர் தஞ்சாவூரில் இருக்கிறார்கள். அவர்களைத் தான் கேட்க வேண்டும்."

"அவர்கள் யார்?"

"பெரிய பழுவேட்டரையர் ஒருவர்; சின்ன பழுவேட்டரையர் ஒருவர்."

"சக்கரவர்த்தியின் உடல்நிலை மிக மோசமாகியிருப்பதாகச் சொல்கிறார்களே? அது உண்மையா?"

"யாராவது ஏதாவது சொல்லுவார்கள்! சொல்லுவதற்கு என்ன? அதையெல்லாம் நம்பாதே! வெளியிலும் சொல்லாதே!"

"சக்கரவர்த்திக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டம் யாருக்கு என்று சொல்ல முடியுமா?"

"அடுத்த பட்டம் உனக்குமில்லை; எனக்குமில்லை; நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?"

"அந்த மட்டில் தப்பிப் பிழைத்தோம்!" என்றான் வந்தியத்தேவன்.

"உண்மைதான், தம்பி! பட்டத்துக்குப் பாத்தியதை என்பது சாதாரண விஷயம் அல்ல; மிக்க அபாயகரமான் விஷயம் இல்லையா!"

"ஜோசியரே! தற்சமயம் காஞ்சியில் இருக்கிறாரே, இளவரசர் ஆதித்த கரிகாலர்."

"இருக்கிறார். அவருடைய சார்பாகத்தானே நீ வந்திருக்கிறாய்!"

"கடைசியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள்; சந்தோஷம் அவருடைய யோகம் எப்படி இருக்கிறது."

"ஜாதகம் கைவசம் இல்லை, தம்பி! பார்த்துத்தான் சொல்ல வேண்டும்."

"மதுராந்தகரின் யோகம் எப்படி?"

"அவருடையது விசித்திரமான ஜாதகம் பெண்களின் ஜாதகத்தை ஒத்தது. எப்போதும் பிறருடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பது..."

"இப்போதுகூடச் சோழ நாட்டில் பெண்ணரசு நடைபெறுவதாகச் சொல்கிறார்களே? அல்லி ராஜ்யத்தைவிட மோசம் என்கிறார்களே?"

"எங்கே அப்படிச் சொல்லுகிறார்கள்?"

"கொள்ளிடத்துக்கு வடக்கே சொல்லுகிறார்கள்?"

"பெரிய பழுவேட்டரையர் புதிதாக மணம் புரிந்துகொண்ட இளைய ராணியின் ஆதிக்கத்தைப்பற்றிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது."

"நான் கேள்விப்பட்டது வேறு."

"என்ன கேள்விப்பட்டாய்?"

"சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவைப் பிராட்டிதான் அவ்விதம் பெண்ணரசு செலுத்துவதாகச் சொல்கிறார்கள்!"

சோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். சற்று முன் அந்த வீட்டிலிருந்து சென்றது குந்தவை தேவி என்று தெரிந்து கொண்டுதான் அவ்விதம் கேட்கிறானோ என்று முகத்திலிருந்து அறிய முயன்றார். ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.

"சுத்த தவறு, தம்பி! சுந்தர சோழ சக்கரவர்த்தி தஞ்சையில் இருக்கிறார். குந்தவை பிராட்டி பழையாறையில் இருக்கிறார். மேலும்..."

"மேலும் என்ன? ஏன் நிறுத்திவிட்டீர்கள்?"

"பகலில் பக்கம் பார்த்துப் பேச வேண்டும்; இரவில் அதுவும் பேசக் கூடாது. ஆனாலும் உன்னிடம் சொன்னால் பாதகமில்லை. இப்போது சக்கரவர்த்திக்கு அதிகாரம் ஏது? எல்லா அதிகாரங்களையும் பழுவேட்டரையர்கள் அல்லவா செலுத்துகிறார்கள்!"

இப்படி சொல்லிவிட்டுச் சோதிடர் வந்தியத்தேவனுடைய முகத்தை மறுபடியும் ஒரு தடவை கவனமாகப் பார்த்தார்.

"ஜோசியரே! நான் பழுவேட்டரையரின் ஒற்றன் அல்ல. அப்படிச் சந்தேகப்பட வேண்டாம். சற்று முன்னால் ராஜ்யங்களும் ராஜவம்சங்களும் நிலைத்து நில்லாமையைப் பற்றிச் சொன்னீர்கள். நான் பிறந்த வாணர் குலத்தையே உதாரணமாகச் சொன்னீர்கள். தயவுசெய்து உண்மையைச் சொல்லுங்கள். சோழ வம்சத்தின் வருங்காலம் எப்படியிருக்கும்?"

"உண்மையைச் சொல்கிறேன்; சந்தேகம் சிறிதுமின்றிச் சொல்கிறேன். ஆனி மாதக் கடைசியில் காவேரியிலும் காவேரியின் கிளை நதிகளிலும் புதுவெள்ளம் வரும். அப்போது அது நாளுக்கு நாள் பெருகப்போகும் புது வெள்ளம் என்பது காவேரி தீரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆவணி, புரட்டாசி வரையிலும் வெள்ளம் பெருகிக் கொண்டுதானிருக்கும். கார்த்திகை மார்கழியில் வெள்ளம் வடிய ஆரம்பிக்கும். இது வடிகிற வெள்ளம் என்பதும் காவேரிக் கரையில் உள்ளவர்களுக்குத் தெரிந்து போகும். சோழ சாம்ராஜ்யம் இப்போது நாளுக்கு நாள் பெருகும் புதுவெள்ளத்தை ஒத்திருக்கிறது. இன்னும் பலநூறு வருஷம் இது பெருகிப் பரவிக் கொண்டேயிருக்கும். சோழப் பேரரசு இப்போது வளர்பிறைச் சந்திரனாக இருந்து வருகிறது. பௌர்ணமிக்கும் இன்னும் பல நாள் இருக்கிறது. ஆகையால் மேலும் மேலும் சோழ மகாராஜ்யம் வளர்ந்து கொண்டேயிருக்கும்..."

"இத்தனை நேரம் தங்களுட்ன் பேசியதற்கு இந்த ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். வந்தனம், இன்னும் ஒரு விஷயம் மட்டும் முடியுமானால் சொல்லுங்கள். எனக்கு கப்பல் ஏறிக் கடற் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது..."

"அந்த விருப்பம் நிச்சயமாகக் கைகூடும். நீ சகடயோகக்காரன். உன் காலில் சக்கரம் இருப்பது போலவே ஓயாமல் சுற்றிக் கொண்டிருப்பாய். நடந்து போவாய்; குதிரை ஏறிப் போவாய்; யானை மேல் போவாய்; கப்பல் ஏறியும் போவாய்; சீக்கிரமாகவே உனக்குக் கடற் பிரயாணம் செய்யும் யோகம் இருக்கிறது."

"ஐயா! தென் திசைப் படையின் சேனாபதி, தற்சமயம் ஈழத்திலே யுத்தம் நடத்தும் இளவரசர், அருள்மொழிவர்மரைப் பற்றித் தாங்கள் சொல்லக்கூடுமா? கிரஹங்களும் நட்சத்திரங்களும் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றன?"

"தம்பி! கப்பலில் பிரயாணம் செய்வோர் திசையறிவதற்கு ஒரு காந்தக் கருவியை உபயோகிக்கிறார்கள். கலங்கரை விளங்கங்களும் உபயோகப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம்விட, நடுக்கடலில் கப்பல் விடும் மாலுமிகளுக்கு உறுதுணையாயிருப்பது எது தெரியுமா? வடதிசையில் அடிவானத்தில் உள்ள துருவ நட்சத்திரந்தான். மற்ற நட்சத்திரங்கள், -கிரஹங்கள் எல்லாம் இடம் பெயர்ந்து போய் கொண்டேயிருக்கும். ஸப்தரிஷி மண்டலமும் திசைமாறிப் பிரயாணம் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் இருந்த இடத்திலேயே இருக்கும். அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்றவர் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கடைக்குட்டிப் புதல்வரான இளவரசர் அருள்மொழிவர்மர். எதற்கும் நிலைகலங்காத திட சித்தமுடையவர். தியாகம், ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவே வீரபௌருஷத்திலும் சிறந்தவர். கல்வியறிவைப் போலவே உலக அறிவும் படைத்தவர். பார்த்தாலே பசி தீரும் என்று சொல்லக் கூடிய பால் வடியும் களைமுகம் படைத்தவர். அதிர்ஷ்ட தேவதையின் செல்வப் புதல்வர். மாலுமிகள் துருவ நட்சத்திரத்தைக் குறி கொள்வது போல், வாழ்க்கைக் கடலில் இறங்கும் உன் போன்ற வாலிபர்கள் அருள்மொழிவர்மரைக் குறியாக வைத்துக் கொள்வது மிக்க பலன் அளிக்கும்."

"அப்பப்பா! இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி எவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள்? காதலனை காதலி வர்ணிப்பது போல் அல்லவா வர்ணிக்கிறீர்கள்?"

"தம்பி! காவிரி தீரத்திலுள்ள யாரைக் கேட்டாலும் என்னைப் போலத்தான் சொல்வார்கள்."

"மிக்க வந்தனம், சோதிடரே! சமயம் நேர்ந்தால் உங்கள் புத்திமதியின்படியே நடப்பேன்."

"உன்னுடைய அதிர்ஷ்டக் கிரகமும் உச்சத்துக்கு வந்திருக்கிறது என்று அறிந்துதான் சொன்னேன்."

"போய் வருகிறேன் சோதிடரே. என் மனமார்ந்த வந்தனத்துடன் என்னால் இயன்ற பொன் தனமும் கொஞ்சம் சமர்ப்பிக்கிறேன். தயவு செய்து பெற்றுக் கொள்ளவேணும்."

இவ்விதம் கூறி, ஐந்து கழஞ்சு பொன் நாணயங்களை வந்தியத்தேவன் சமர்ப்பித்தான்.

"வாணர் குலத்தின் கொடைத்தன்மை இன்னமும் பட்டுப்போகவில்லை!" என்று சொல்லிக்கொண்டு சோதிடர் பொன்னை எடுத்துக் கொண்டார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

14. ஆற்றங்கரை முதலை


குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசிலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன.

குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறை பார்க்கும் போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்துகொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமியப் பாடல்களைப் பாடினார்கள்.

கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள் அமைத்திருந்தார்கள். சென்ற ஆண்டில் பயிரிட்ட முற்றிய கருப்பங்கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில் கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்து வந்து மூக்கைத் தொளைத்தன.

தென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, "கொக்கரக்கோ!" என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. "கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?" என்று அலட்சியத்துடன் அக் குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்து கொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிச பட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான். எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.

ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் 'டணார், டணார்' என்று கேட்டது. அந்த உலைக்களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றுடன், கத்திகள், கேடயங்கள், வேல்கள், ஈட்டிகள் முதலியன குப்பல் குப்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்.

சிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளே சேமக்கலம் அடிக்கும் சத்தமும், நகரா முழங்கும் சத்தமும், மந்திரகோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன.

மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்து ஆடிக்கொண்டும் உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள்.

கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள். அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள்!

குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத்தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

வீட்டுக் கூரைகளின் மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய்ப் பெண் மயில்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தன.

புறாக்கள் அழகிய கழுத்தை அசைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றின.

பாவம்! கூண்டுகளில் அடைபட்ட கிளிகளும் மைனாக்களும் சோக கீதங்கள் இசைத்தன.

இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையை மெல்லச் செலுத்திக் கொண்டு சென்றான்.

அவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும் அவன் உள் மனத்திலே இலேசாகப் பனியினால் மூடுண்டது போல், ஒரு பெண்ணின் முகம் தெரிந்து கொண்டேயிருந்தது. ஆகா! அந்தப் பெண் அவளுடைய செவ்விதழ்களைத் திறந்து தன்னுடன் சில வார்த்தை பேசியிருக்கக் கூடாதா? பேசியிருந்தால் அவளுக்கு என்ன நஷ்டமாகியிருக்கும்? அந்தப் பெண் யாராயிருக்கும்? யாராயிருந்தாலும் கொஞ்சம் மரியாதை என்பது வேண்டாமா? என்னைப் பார்த்தால் அவ்வளவு அலட்சியம் செய்வதற்குரியவனாகவா தோன்றுகிறது? அந்தப் பெண் யார் என்பதைச் சொல்லாமலேயே அந்தச் சோதிடக் கிழவர் ஏமாற்றிவிட்டார் அல்லவா! அவர் கெட்டிக்காரர்; அசாத்தியக் கெட்டிக்காரர். பிறருடைய மனத்தை எப்படி ஆழம் பார்த்துக் கொள்கிறார்? எவ்வளவு உலக அனுபவத்துடன் வார்த்தை சொல்லுகிறார்? முக்கியமான விஷயம் ஒன்றும் அவர் சொல்லவில்லைதான்! இராஜாங்க சம்பந்தமான பேச்சுக்களில் அவர் மிகவும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அல்லது எல்லோருக்கும் தெரிந்ததையே விகசித சாதுரியத்துடனே சொல்லிச் சமாளித்துக்கொண்டார். ஆனாலும் தன்னுடைய அதிர்ஷ்ட கிரகங்கள் உச்சத்துக்கு வந்திருப்பதாக நல்ல வார்த்தை சொன்னார் அல்லவா? குடந்தை சோதிடர் நன்றாயிருக்கட்டும்!...

இவ்வாறெல்லாம் சிந்தித்துக்கொண்டு வந்தியத்தேவன் சென்றான். அவ்வப்போது எதிர்ப்பட்ட காட்சிகள் இடையிடையே அவனைச் சிந்தனை உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு இழுத்தன.

கடைசியில் அரிசிலாற்றங் கரையை அடைந்தான். சிறிது தூரம் ஆற்றங் கரையோடு சென்றதும், பெண்களின் கைவளை குலுங்கும் சத்தமும், கலகலவென்று சிரிக்கும் ஒலியும் கேட்டன. அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அரிசிலாற்றங் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. எங்கிருந்து அப்பெண்களின் குரல் ஒலி வருகிறது என்று கண்டு பிடிக்க வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றான். திடீரென்று, "ஐயோ! ஐயோ! முதலை! முதலை! பயமாயிருக்கிறதே!" என்ற அபயக் குரலையும் கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குதிரையைத் தட்டிவிட்டான். அந்தப் பெண்கள் இருந்த இடம் இரு மரங்களின் இடைவெளி வழியாக அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் பலருடைய முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அதிசயம்! அதிசயம்! அவர்களிலே இருவர் சோதிடர் வீட்டிற்குள்ளே வந்தியத்தேவன் பிரவேசித்ததும் புறப்பட்டுச் சென்றவர்கள்தான். இதையெல்லாம் நொடி நேரத்தில் வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொண்டான். அதை மட்டுமா பார்த்தான்? ஓர் அடர்ந்த நிழல் தரும் பெரிய மரத்தின் அடியில், வேரோடு வேராக, பாதி தரையிலும் பாதி தண்ணீரிலுமாக ஒரு பயங்கரமான முதலை வாயைப் பிளந்துகொண்டிருந்தது. சமீபத்திலே தான் கொள்ளிட நதியில் ஒரு கொடூரமான முதலை வாயைப் பிளந்து கொண்டு வந்ததை வந்தியத்தேவன் பார்த்திருந்தான். முதலை எவ்வளவு பயங்கரமான பிராணி என்பதையும் கேட்டிருந்தான். ஆகவே இந்த முதலையைப் பார்த்ததும் அவன் உள்ளம் கலங்கி, உடல் பதறிப் போனான். ஏனெனில், அந்த முதலை பீதி கொண்ட அந்தப் பெண்களுக்கு வெகு சமீபத்தில் இருந்தது. வாயைப் பிளந்து கொண்டு கோரமான பற்களைக் காட்டிக்கொண்டு, பயங்கர வடிவத்துடன் இருந்தது. முதலை இன்னும் ஒரு பாய்சல் பாய வேண்டியதுதான். அந்தப் பெண்களின் கதி அதோகதியாகி விடும்! அந்தப் பெண்களோ, பின்னால் அடர்த்தியாயிருந்த மரங்களினால் தப்பி ஓடுவதற்கும் முடியாத நிலையில் இருந்தார்கள்.

வந்தியத்தேவனுடைய உள்ளம் எவ்வளவு குழம்பியிருந்தாலும் அவன் உறுதி அணுவளவும் குன்றவில்லை. தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் ஒரு கணத்துக்கு மேல் சிந்திக்கவில்லை. கையிலிருந்த வேலைக் குறி பார்த்து ஒரே வீச்சாக வீசி எறிந்தான். வேல் முதலையின் கெட்டியான முதுகில் பாய்ந்து சிறிது உள்ளேயும் சென்று செங்குத்தாக நின்றது. உடனே நமது வீரன் உடைவாளை உருவிக்கொண்டு முதலையை ஒரேயடியாக வேலை தீர்த்துவிடுவது என்ற உறுதியுடன் பாய்ந்து ஓடி வந்தான்.

முன்போலவே, அந்தச் சமயத்தில் அப்பெண்கள் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் காதுக்கு அது நாராசமாயிருந்தது. இத்தகைய அபாயகரமான வேளையில் எதற்காக அவர்கள் சிரிக்கிறார்கள்? பாய்ந்து ஓடி வந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். அப்பெண்களின் முகங்களைப் பார்த்தான். பயமோ, பீதியோ அம்முகங்களில் அவன் காணவில்லை. அதற்கு மாறாகப் பரிகாசச் சிரிப்பின் அறிகுறிகளையே கண்டான். சற்றுமுன், "ஐயோ! ஐயோ!" என்று கத்தியவர்கள் அவர்கள் தான் என்றே நம்ப முடியவில்லை. அவர்களில் ஒருத்தி... சோதிடர் வீட்டில் தான் பார்த்த பெண் - கம்பீரமான இனிய குரலில், "பெண்களே! சும்மா இருங்கள்! எதற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்று அதட்டும் குரலில் கூறியது கனவில் கேட்பது போல அவன் காதில் விழுந்தது.

முதலையண்டை பாய்ந்து சென்றவன் வாளை ஓங்கியவண்ணம் தயங்கி நின்றான். முதலையை உற்றுப் பார்த்தான். அந்தப் பெண்களின் முகங்களையும் இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். அவன் உள்ளத்தை வெட்கி மருகச் செய்த, உடலைக் குன்றச் செய்த, ஒரு சந்தேகம் உதித்தது.

இதற்குள்ளாக அந்தப் பெண்மணி, மற்றவர்களைப் பிரிந்து முன்னால் வந்தாள். முதலைக்கு எதிர்ப்புறத்தில், அதைக் காப்பாற்றுகிறவளைப்போல் நின்றாள்.

"ஐயா! தங்களுக்கு மிக்க வந்தனம். தாங்கள் வீணில் சிரமப்பட வேண்டாம்!" என்றாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

15. வானதியின் ஜாலம்


இளைய பிராட்டி குந்தவை தேவியும், கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.

"அடியே, தாரகை! இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் பாரடி! அவள் பேரில் நம் இளைய பிராட்டிக்கு என்னடி இவ்வளவு ஆசை?" என்றாள் ஒருத்தி.

"ஆசையுமில்லை, ஒன்றுமில்லையடி, வாரிணி! நாலு மாதமாக அந்தப் பெண் ஒரு மாதிரி கிறுக்குப் பிடித்தவள் போல் இருக்கிறாள். அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து தொலைக்கிறாள். தாய் தகப்பனார் இல்லாத பெண்ணை நம்மை நம்பி ஒப்புவித்திருக்கிறார்களே என்று இளைய பிராட்டிக்குக் கவலை. அதானால்தான், வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்கச் சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார்! ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா? அப்படியிருந்தால் ஏதாவது மந்திரம் கிந்திரம் போட்டு ஓட்ட வேண்டும் அல்லவா?" என்றாள் தாரகை.

"பேயுமில்லை, பிசாசுமில்லையடி! இவளை வந்து எந்தப் பிசாசு பிடிக்கப் போகிறது? இவளே நூறு பிசாசை அடித்து ஓட்டி விடுவாளே?" என்றாள் வாரிணி.

"வானதி மயக்கம் போட்டு விழுவது கூடப் பாசாங்குதானடி! இப்படியெல்லாம் செய்தால் மெதுவாக இளவரசரைத் தன் வலையில் போட்டுக்கொண்டு விடலாம் என்று அவளுடைய எண்ணம்!" என்றாள் இன்னொருத்தி.

"நிரவதி சொல்லுவதுதான் சரி! அது மட்டுமா! அன்றைக்கு இளவரசர் புறப்படும்போது கையிலிருந்த தீபத் தட்டைக் கீழே போட்டாளே? அதுகூடத் தன்னை அவர் கவனிக்க வேண்டுமென்பதற்காகச் செய்த காரியந்தான்! இரண்டு கையாலும் ஏந்திக் கொண்டிருந்த தட்டு அப்படித் தவறி விழுந்துவிடுமா? அல்லது நம் இளவரசர் என்ன புலியா, கரடியா, அவரைப் பார்த்து இவள் பயப்படுவதற்கு?" என்றாள் வாரிணி.

"உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டதாகப் பாசாங்கு செய்தாளே? அதற்கு எவ்வளவு கெட்டிக்காரத்தனம் வேண்டும்?" என்றாள் நிரவதி.

"அவள் செய்த ஜாலத்தைக் காட்டிலும் அந்த ஜாலத்தில் குந்தவை தேவியும், இளவரசரும் ஏமாந்து போனார்களே, அது தான் பெரிய வேடிக்கை!" என்றாள் செந்திரு என்பவள்.

"பொய்யும் புனைசுருட்டும், ஜாலமும் மாய்மாலமும் செய்கின்றவர்களுக்குத்தான் இது காலம்!" என்றாள் மந்தாகினி.

"யுத்தத்துக்குப் புறப்பட்டான பிறகு இளவரசர், திரும்பி வந்து இந்த வானதியைப் பார்த்துவிட்டுப் போனாரே, இதைவிட என்னடி வேண்டும்? அவளுடைய மாயாஜாலம் எவ்வளவு தூரம் பலித்து விட்டது பார்த்தாயா?" என்றாள் வாரிணி.

"அதெல்லாம் ஒன்றுமில்லை; இளவரசர் அவ்வளவு மேன்மையான குணமுள்ளவர். ஒரு பெண் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் என்றால், அவளைப் பார்த்து விசாரியாமல் போவாராடி? அதிலிருந்து நீ ஒன்றும் அர்த்தம் கற்பிக்க வேண்டாம்!" என்றாள் தாரகை.

"இளவரசரைப் பற்றி நீ சொல்வது உண்மைதான். அவரைப் போன்ற குணசாலி இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் வேறு யார் இருக்க முடியும்? கவிதைகளிலும் காவியங்களிலும் கூடக் கிடையாது. ஆனால் நான் சொல்கிறது வேறு. இவள் - இந்த வானதி, - மயக்கம் போட்டு விழுந்தாளே, அது என்ன மயக்கம் தெரியுமா? அதைக் கேட்கச் சோதிடரிடமே போயிருக்க வேண்டியதில்லை. என்னைக் கேட்டிருந்தால் நானே சொல்லியிருப்பேன்!" என்றாள் வாரிணி.

"அது என்ன மயக்கமடி? எங்களுக்குத்தான் சொல்லேன்!" என்றாள் செந்திரு. வாரிணி செந்திருவின் காதோடு ஏதோ சொன்னாள்.

"என்னடி இரகசியம் சொன்னாள்? எங்களுக்குத் தெரியக் கூடாதா?" என்று நிரவதி கேட்டாள்.

"அது சாதாரண மயக்கமில்லையாம்? மையல் மயக்கமாம்!" என்றாள் செந்திரு.

உடனே எல்லோரும் கலகலவென்று சிரித்தார்கள். அதைக் கேட்டு விட்டு நதிக்கரை மரங்களில் இருந்த பறவைகள் சடசடவென்று இறக்கையை அடித்துக் கொண்டு பறந்து சென்றன.

"நம் இளவரசர் இலங்கையிலிருந்து திரும்பி வந்தால் மறுபடியும் இவள் மாயப்பொடி போடப் பார்ப்பாள். அதற்கு நாம் இடங்கொடுத்துவிடாமல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!" என்று சொன்னாள் நிரவதி.

"இளவரசர் திரும்பி வருவதற்குள் இந்த வானதி பைத்தியம் பிடித்து பிதற்ற ஆரம்பிக்காவிட்டால் என் பெயர் தாரகை இல்லை; பெயரைத் தாடகை என்று மாற்றி வைத்துக்கொள்ளுகிறேன்!" என்றாள் தாரகை.

"அது கிடக்கட்டுமடி! இளைய பிராட்டி சொல்லிவிட்டுப் போன காரியத்தை அவர் வருவதற்குள் செய்து வைக்க வேண்டாமா? வாங்களடி" என்றாள் மந்தாகினி.

பிறகு அப்பெண்களில் இருவர் படகின் அடியில் ஏற்கெனவே சிறிது பெயர்ந்திருந்த ஒரு பலகையைப் பெயர்த்து எடுத்தார்கள். பெயர்க்கப்பட்ட இடத்தில் நீளமான பெட்டி போல் அமைந்த பள்ளத்தில் ஒரு முதலை கிடந்தது! அதாவது செத்துப் போன முதலையின் உடலைப் பதப்படுத்தி உள்ளே பஞ்சும் நாரும் திணித்து வைத்திருந்த பொம்மை முதலை. அதை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டார்கள். படகைச் சிறிது தூரம் செலுத்திக் கொண்டு சென்று, நதிக்கரை ஓரத்தில் பெரிய பெரிய வேர்கள் விட்டு வளர்ந்திருந்த ஒரு பெரு மரத்தின் அருகில் வந்தார்கள். அம்மரத்தின் ஓரத்தில் அத்தோல் முதலையை எடுத்து விட்டார்கள். அது மர வேர்களிலே பாதியும் நதி வெள்ளத்தில் பாதியுமாகக் கிடந்தது. பார்ப்பதற்கு நிஜ முதலையைப் போலவே பயங்கரமான தோற்றம் அளித்தது. வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடாமல் ஒரு சிறிய மணிக் கயிற்றை அதன் கால் ஒன்றில் கட்டி வேரோடு சேர்த்துப் பிணைத்தார்கள். கயிறு வெளியில் தெரியாதபடி நீருக்குள்ளே அமுங்கியிருக்கும்படி கட்டினார்கள்.

"ஏனடி, மந்தாகினி! எதற்காக இந்தப் பொம்மை முதலையை இப்படி மரத்தடியில் கட்டி வைக்கச் சொல்லியிருக்கிறார் இளைய பிராட்டி?" என்று தாரகை கேட்டாள்.

"உனக்குத் தெரியாதா? வானதி மிக்க பயந்தாங்கொள்ளியாயிருக்கிறாள் அல்லவா? அவளுடைய பயத்தைப் போக்கித் தைரியசாலி ஆக்குவதற்குத்தான்!" என்றாள் மந்தாகினி.

"எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், வானதியை இளவரசருக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றே குந்தவை தேவி உத்தேசித்திருக்கிறார் போலிருக்கிறது!" என்றாள் நிரவதி.

"அப்படி ஏதாவது பேச்சு வந்தால் நான் இந்த வானதிக்கு விஷத்தைக் கொடுத்துக் கொன்றுவிடுகிறேன். பார்த்துக் கொண்டிரு!" என்றாள் பொறாமைக்காரியான வாரிணி.

"நீ இப்படியெல்லாம் எரிச்சல் அடைவதற்குக் காரணமே இல்லை. மானிய கேடத்து இரட்டை மண்டலச் சக்கரவர்த்தியும் வேங்கி நாட்டின் மன்னரும் கலிங்க தேசத்து ராஜாவும் வடக்கே வெகு தூரத்தில் உள்ள கன்னோசி சக்கரவர்த்தியும் கூட நம் இளவரசருக்குப் பெண் கொடுக்கக் காத்திருக்கிறார்களாம்! அப்படியிருக்க இந்தக் கொடும்பாளூர் வானதியை யாரடி இலட்சியம் செய்யப்போகிறார்கள்!" என்றாள் மந்தாகினி.

"நீ சொல்லுகிறபடி அந்த அரசர்கள் காத்திருக்கலாமடி! ஆனால் நம் இளவரசருடைய விருப்பம் அல்லவா முக்கியம்? இளவரசர் 'நான் எப்போதாவது கலியாணம் செய்து கொண்டால் தமிழகத்துப் பெண்ணைத்தான் மணந்து கொள்வேன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!" உங்களுக்கெல்லாம் இது தெரியாதா?" என்றாள் செந்திரு.

"அப்படியானால் மிகவும் நல்லதாய்ப் போயிற்று. நாம் எல்லோரும் சேர்ந்து தனித்தனியே நம் கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே? இந்த வானதியினால் முடிகிற காரியம் நம்மால் முடியாது போய் விடுமா? அவளிடம் உள்ள மாயப் பொடி நம்மிடமும் இல்லையா, என்ன?" என்றாள் தாரகை.

இப்படியெல்லாம் இந்தப் பெண்கள் பேசியதற்கு ஆதாரமான நிகழ்ச்சி என்னவென்பதை நேயர்களுக்கு இப்போது தெரிவிக்க விரும்புகிறோம்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்