Author Topic: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)  (Read 1014 times)

Offline Forum

பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)

நண்பர்கள் கவனத்திற்கு,
 எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும்  புதன்கிழமை   (11-01-2023) இந்திய நேரம் இரவு 12 மணிக்கு  முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
ஆதி அந்தம் காணா
செந்தமிழ் ஆண்டின் அகவை இது
சேற்றில் சிதறிய நெல்மணிகள்
வீட்டின் செல்வந்தமாய் மாறிடவே
நெற்கதிர் பறித்த உழவன் இவன்
செங்கதிரவனின் சிரம் நோக்கி
நன்றி பயக்கும் உழவர் திருநாள் இது
பொங்கி வழியும் பால் போல
பார் மீது பரவட்டும் சந்தோசம்

மார்கழி முப்பத்தொன்றில்
மனைகள் எங்கும் வர்ணஜாலம்
பழையன கழித்து புதியன புகுந்திட
போகிப் பண்டிகையாய் புனர்நிர்மாணம்
தேங்கிய தேவையற்றவை
தீயினில் கருகிடவே - மனதில்
தங்கிய தீயன அனைத்தும்
தீக்கறையாகி புதிய பரிமாணம்
புலப்படும் என்பது ஐதீகம்.....

மாவிலை தோரணங்கள்
வாசலிலே ஊஞ்சல் ஆட
மஞ்சள் நீர் தெளித்து மாக்கோலமிட்டு
பூரண கும்பம் தலை வாழையிலையிலே
புரம் இரண்டும் ஏற்றிய குத்துவிளக்கோடு
கரும்புக்கற்றைகள் காற்றில் ஆட
அருகம்புல்லோடு அமர்ந்திருக்கும்
பிடித்து வைத்த பிள்ளையார் தனி அழகு...

புத்தரிசி புதுப்பானையிலே
பொங்கி வழியும் தீம் பாலோடு
சர்க்கரையும் சேர்ந்திடவே
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்...

ஆதவன் முகம் நோக்கி
ஆரத்தி தட்டெடுத்து - நன்றி பயக்கும்
நன்னாள் இதுவல்லோ....

ஏர் பிடித்த உழவனோடு
என்றும் துணையாய் நிற்கும்
காளைக்கும் நன்றி நவிலும்
பட்டிப் பொங்கல் அடுத்தல்லோ...

வானவில் வண்ணங்கள்
சீவிய கொம்பினிலே - சினம் கொள்ளா
சிறுபிள்ளை குணத்தோடு
சலங்கை மணியோசைகளோடு
சங்கமிக்கும் பாசம் ஒருபுறம் இருக்க
கொம்பு வச்ச சிங்கமாய்
சினம் கொண்ட சிறுத்தையாய்
சீறிப் பாய்கையிலே- வீர மரவர்
ஏர்தழுவும் ஜல்லிக்கட்டு மறுபுறம்....

உற்றார் உறவினர் மனை நாடி
உபசாரங்கள் பல நல்கி
இன்சுவை உணவருந்தி
இன்முகத்தோடு ஆரத்தழுவி - பல
களியாட்ட நிகழ்வுகள் நடக்கும்
காணும் பொங்கல் இதுவல்லோ
கானமயில் கன்னியரும்
புதுப்பானை பொங்கலிட்டு
மஞ்சள் கொத்து கட்டி
தீர்க்க சுமங்கலி ஐவரின்
சிரம் தாழ்த்திய ஆசி பெற்று
செந்தாமரை முகத்தினிலும்
சிவந்த பூப் பாதத்திலும்
மஞ்சள் பூசி மகிழும் - இது
கன்னிப் பொங்கல் அல்லோ...

தீயினில் பொங்கிய பால்
தீண்டிய தரை குளிர்வது போல்
வையத்து மானுட உள்ளங்கள் குளிரட்டுமே
வாழ்வில் வசந்தங்கள் வீசி...
மழை பொய்க்காமல் பொழியட்டுமே
மரம் செடி கொடி வளர
மண்ணில் விதை மணிகள் செழிக்க...

"தை பிறக்கட்டும் வழி கிடைக்கட்டும்"

Offline KS Saravanan

தமிழர்களின் திருநாளாம் பொங்கலோ பொங்கல்..!

போகி பொங்கல்..!
ஆட்கொண்ட கெட்ட எண்ணங்களை
அழித்தெறிய அறியப்பட்ட
நாளாம் போகி பொங்கல்..!
மூன்றாசைகளை போக்கி முக்தி பெரும்
நாளாம் போகி பொங்கல்..!
தீயவை யாவையும் தீயில் இடும்
நாளாம் போகி பொங்கல்..!
இது, மார்கழி திங்களின் கடைசி
நாளாம் போகிப் பொங்கல்..!

தைப்பொங்கல்..!
புதியதோர் விடியலிலே
அகிலமும் சுற்றும் சூரியனை
புதியதோர் வழிகளும் புதியதாக
பிறந்திட போற்றி வணங்குவோம்..!
அறுவடைத்திருநாளில்
புதியதோர் பானையில் ஐந்திணைகளை
படைத்து புது பொங்கலை கொண்டாடுவோம்
தைத்திருநாளை போற்றுவோம்..!

மாட்டுப்பொங்கல்..!
இது உழவர் திருநாளாம்
உழவனுக்கு தோள் கொடுக்கும்
தோழனின் திருநாளாம்..!
உலகிற்கு உணவு தரும்
உன்னதமான திருநாளாம்..!
மனிதனுக்கு தன்னையே தரும்
நண்பனின் திருநாளாம்..!
தெரியாமல் போன தலைமுறைக்கு
தெறிய வைப்போம் ஆவின் 
அருமைகளை போற்றிடுவோம்..!

காணும் பொங்கல்..!
உறைந்து போன உறவுகளும்
உயிர்த்தெழும் திருநாளாம்
கண் கானா தூரம் போன
கண்மணிகளை காணும் நாளாம்..!
வாங்கப்படாத வாழ்த்துக்களை
வாங்கும் நன்னாளாம்
வழங்கப்படாத செல்வங்களை
வழங்கும் திருநாளாம்..!
« Last Edit: January 15, 2023, 07:56:36 PM by KS Saravanan »


Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 642
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பொங்கலோ பொங்கல் ..
================================

ஆடியில் நல்விதை தேடி விதைத்து..
ஆறுதிங்கள் கவனமாக காத்திருந்து....
ஆர்வத்துடன் அறுவடை முடித்து...
ஆனந்தமாக கொண்டாடும் நாளிது..

அதிகாலை முற்றத்தில் நீர் தெளித்து...
அழகு வண்ணத்தில் கோலமிட்டு..
அடுக்கி வைத்த.. மண் கட்டிகளை..
அடுப்புகளாக கூட்டி வைத்து..

இனிப்பு பொங்கல் ஓர் அடுப்பு..
இதமான வெண்பொங்கல் ஓர் அடுப்பு..
இனியதொரு.. தொடக்கமாக..
இனிதே தொடங்கியது.. இந்நாளுமே....

புதிதாய்  பறித்த தலைவாழையிலையில்
புத்தாண்டில் விளைந்த காய்,கனி,மஞ்சள் உடனே..
புது பானை பொங்கலினை... எடுத்து வைத்து..
புத்துணர்வுடன்.. தொடர்ந்தது இந்நாளுமே..

கதிரவனின் முகம் பார்த்தே.. காலத்தை..
கவனமாக கணித்து.. உயிர்வாழ..
கற்று கொண்ட நாமெல்லாம்.... அவனுக்கு.. 
கடன்தீருக்கும் தருணம்..  இந்நாளுமே..
     
மகரத்தில் தங்கும் ஆதவனின்
மங்காதா மாசறு  இத்திருநாளினையே...
மனித உயிரெல்லாம்.. வேறு வேறு பெயரில் 
மகிழ்வுடன்... கொண்டாடும். நாள் இதுவே..

இன்னல் இன்றி உயிர் வாழவே... மனிதனுமே
இயற்கையினை  இறுக பற்றுகின்றான்..
இணையில்லா மனித வாழ்வும்..
இணைந்தது இவ்விதம் அறிவியலுடனே ...

அறிவியல் இல்லா... ஆன்மீகம் இல்லை...
ஆன்மீகம் இல்லா... பண்டிகை இல்லை...
பண்டிகை இல்லா.. பாரம்பரியம் இல்லை..
பாரம்பரியம் இல்லா.. சந்தோசம் இல்லை...

பொங்கலோ பொங்கல் ..
பொங்கலோ பொங்கல் ..
பொங்கலோ பொங்கல் ..
பொங்கலோ பொங்கல் ..
« Last Edit: January 12, 2023, 08:42:05 AM by TiNu »

Offline Mechanic

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 49
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
தமிழர் திருநாள் இது தமிழர்களின்
வாழ்வை வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின் களைப்பை
போக்கி களிப்பில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும் திருநாள்....
உறங்கும் பெண்களை அதிகாலையில் எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருவிழா...
மிரட்டி வரும் காளைகளை 
விரட்டி அடக்கும் வீரத்திருநாள்...
பழைய எண்ணங்கள் அவிழ்ந்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான  திருநாள்...

இனிய பொங்கல்..
கரும்பின் இனிப்பு பாலின் வெண்மையுடன் இணைந்து
அறுவடை செய்த அரிசியின் புத்துணர்ச்சி,
மஞ்சள் மசாலாப் பொருள்களின் நன்மை
பானையில் விளிம்பில் கொதிக்க
நன்றியுணர்வின் அடையாளமாய்
இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறது
மேலும் வளத்துடன் வாழ்க பிரகாசமாக
எதிர்காலத்தை கொண்டு வாருங்கள்..
உழவர்களையும் மனதில் நினைப்போம்..
உறவுகளையும் அன்போடு அணைப்போம் ..
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...

« Last Edit: January 12, 2023, 09:03:53 PM by Mechanic »

Offline MeoW

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 51
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பொங்கல் வாழ்த்து
தரையில் கால் படாமல் சுழல் நாற்காலியில் அமர்ந்து தட்டில் கை படாமல் கொத்தி கொத்திச் சாப்பிடும் நாம் நினைத்திராத ஒன்று; நம்மால் முடியாத ஒன்று - ஒரு நெல் சில மாதங்களில் எவ்வாறு நூறாகிறது ?
அந்த வானம் மழை பொழிந்தாலொழிய இந்த மண்ணில் விதை விழுந்தாலொழிய அதற்கு உழவன் பாடு பட்டாலொழிய நெல்லை சொல்லில் மட்டுமே காணலாம்.
பொங்கல் - வெறும் விடுமுறை நாளல்ல மனிதமும் இயற்கையும் உறவாடும் நாள் நாத்திகரும் நன்றியுடன் நமஸ்கரிக்கும் நாள் விஞ்ஞானியும் மெய்ஞானத்தில் மூழ்கும் நாள்.
அறுவடை பலனை அடையுமுன் அதற்கு உறுதுணையாய் இருந்த ஆதவன் முதல் ஆடு மாடுகளுக்கும் நன்றி கூறும் நன்னாளே பொங்கல்.
இந்த சிறப்புமிக்க பொங்கல் திருநாளில் நாமும் சிரத்தையுடன் நன்றி கூறுவோம் இயந்திர மயமான இக்காலத்திலும் உலகம் வாழ உழவு செய்வோர்க்கு !
[/i][/b]
« Last Edit: January 12, 2023, 07:03:59 PM by MeoW »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
வீடெங்கும் பூக்கோலம் 
வாசலிலே மாக்கோலம்
தெருவெங்கும் வண்ணக் கோலம் 

கதவு ஜன்னல் நிலையெல்லாம்
காண்பவர்க்கு பளிச்சிடும்...
புத்தம் புது சுண்ணாம்பின்
நறுமணமோ நுகர்பவர்க்கு இனித்திடும்...
மாவிலையும் ,மஞ்சளும்
கண்ணுப்பீளையும், வேப்பிலையும்
சேர்த்து கட்டிய தோரணங்கள்
வாசலிலே ஆடிடும்..


மங்களமாய் துவங்கிடும்
தமிழர் திருநாளில் 
மஞ்சள் கொத்து சேர்த்து  
கட்டிய செப்புப் பானையில் 
பச்சரிசியும் பாலும் இட்டு ,
இனிப்பிற்கு வெல்லம் சேர்த்து,
வாசத்துக்கு ஏலம் சேர்த்து
பக்குவமாய் பொங்கும் போது சந்தோசக் குலவியிடுவோம்
பொங்கலோப் பொங்கல்  என்று ..

நெய்யிலே வறுத்தெடுத்த
முந்திரியும் திராட்சையும் தூவி
இறக்கி வைத்த பொங்கலிலே முதல் கரண்டி சாமிக்கு படைத்து,
கூடி நின்ற சொந்தங்களுக்கு
மிச்சம் இருக்கும் பொங்கலை
மிச்சம் இல்லாமல்  வார்த்து விட்டு
நினைத்தாலே எச்சில் ஊறும்
அடிக்கரும்பை வெட்டி எடுத்து
பற்களால் இழுத்து உறிஞ்சிய
சாற்றில் தித்திப்பது நமது
நாக்கு மட்டுமல்ல.. நம் மனங்களும்...

உழவினை முன்னிருத்தி
உலகிற்கு உணவளிக்கும்
உழவனின் வாழ்வும் ஓங்கட்டும் ..
தைத் திருநாளாம் இந்நாள் போல் 
எந்நாளும் சிறக்கட்டும் 
நமது வாழ்வும்...

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


தேடிச்சோரு நிதந் தின்று
என்று பாடினான் அந்நாளில் பாரதி
நீ தேடி செல்லும் சோறு கிடைக்க
இரவு பகல் பாராமல் உழைப்பான்
உழவன் என்ற உழைப்பாளி

பல தொழில் புரியும் மக்களும்
பசி என்று வந்தால்
புசி என்று கொடுப்பவன் உழவன்
எத்தொழில் செய்து சுழன்றாலும்
உலகம்
ஏர் தொழிலின் பின்னே தான் சுற்ற வேண்டும்


வருடத்தில் ஒரு நாள்
அது உழவனுக்கான நாள்
அவன் உழைப்புக்கு நன்றி சொல்லும் நாள்

தீயில் தீயவை பொசுங்கட்டும்
போகியுடன் பொங்கல் தொடங்கட்டும்
வாசலில் வண்ணக்கோலம் ஜோலிக்கட்டும்
புத்தாடையில் குடும்பம் குதூகலிக்கட்டும்

உழவனின் உழைப்பில் வந்த
அரிசி வெள்ளம் நெய் கொண்டு
புதுப்பானையில் பொங்கட்டும் பொங்கல்
போங்கலோ பொங்கல்..

பயிர் தழைக்க செய்த சூரியனுக்கும்
மண்ணை உழுது பொன்னாக்கும் மாட்டிற்கும்
உலகின் பசி போக்கும் உழவனுக்கும்
கோடான கோடி நன்றிகள்

உழவனை போற்றும் நல்உள்ளங்களுக்கு
தமிழர் திருநாளாம்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....