உஷாரா இருக்கணும்
திருமணம், அட்சய திரிதியை மற்றும் விழாக்காலங்களில் தங்கநகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். தவிர தள்ளுபடி, ஆஃபர் என ஒரு பக்கம் இருந்தாலும் சாதாரண நாட்களிலும் தங்கம் வாங்குவதில் இருந்து மக்கள் பின்வாங்குவதில்லை. தங்கம் வாங்கும்போது, எங்கு? எதை? வாங்குவது என்று தீயாக யோசனை செய்த பிறகே மக்கள் தங்கத்தை வாங்கும் முதல் அடியை எடுத்து வைக்கின்றனர். பலவகை கலெக்ஷன்ஸ், டிசைன்ஸ், போன்றவைகளை எதிர்பார்க்கும் மக்கள், 916 ஹால்மார்க்குடன், செய்கூலி, சேதாரம் மற்றும் விலை குறைவான தங்க நகைகளையே வாங்கத் திட்டமிடுகின்றனர். விலையைப் பார்க்கும் நாம் வேறென்ன முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்
KDM நகைகள், பயனும் பலவீனமும்...
தூய்மையான தங்கத்தில் ஆபரணங்கள் செய்யமுடியாது என்பதால், தங்கத்தில் சிறிதளவு பிற உலோகம் கலக்கப்படுகிறது. 916 ஹால்மார்க் நகையில் 91.6% சதவீதம் தங்கமும் மீதமிருக்கும் 8.4 சதவீதத்தில் வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் கலந்திருக்கும், 91.6% தங்கமுள்ள ஆபரணங்களே 22 கேரட் ஆபரணங்கள் என அழைக்கப்படுகின்றன. இது தவிர, நகை செய்யும்போது ஆபரணத்தின் இரு பாகங்களை பற்றவைத்து இணைப்பதற்கும் செம்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்யப்பட்ட பழைய 22 கேரட் தங்கத்தை உருக்கி புது நகை செய்யும்போது, மேலும் இணைப்பு உலோகங்கள் பயன்படும், இதனால் ஒவ்வொருமுறை உருக்கி புது நகை செய்யும்போதும் நகையின் தரம் குறைந்துகொண்டே போகும்! இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக கேட்மியம் (Cadmium or KDM) என்ற வெள்ளை நிறத்தினாலான உலோகம் பயன்பட்டது. விலை மலிவான KDM வைத்து நகைகளை இணைத்து பற்றவைக்கும்போது, கேட்மியம் ஆவியாகிவிடும். இதனால் அதில் தங்கத்தை தவிர வேறெந்த உலோகமும் இருக்காது. மேலும் சேதாரமும் அதிகளவில் இருக்காது.
ஆனால், நகை செய்பவர்கள் கேட்மியம் ஆவியை சுவாசிப்பதால், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. KDM நகைகளை அணிபவர்களும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்பதனால் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS), கேட்மியத்தை தடை செய்தது. எனவே, ஏதாவது நகைக்கடை சேதாரம் குறைவான, தரமான KDM நகைகளை நாங்கள் விற்கிறோம் எனக் கூறினால் யோசிக்காமல் அங்கிருந்து நடையைக் கட்டிவிடுவதே நல்லது!