7
« Last post by Kavii on September 10, 2024, 11:40:36 PM »
உன் நினைவில் விழித்த கண்ணில்,
நிலா திகழும் நட்சத்திர இரவின் கோலத்தில்,
உன்னை நினைத்தேன் –
நீயும் எனக்காகதான் வாழ்கிறாய் எனும் கனவோடு!
அழகாய் எங்கேயோ தொலைந்த நீ,
நிலவின் மெல்லிய ஒளியில் எனைத் தேடி வந்தாய்,
சிலிர்க்கும் தென்றல் உன் குரலின் நிழலாய்க் கடலடியில்,
என் மனதின் ஓசைக் கேட்கிறதா உனக்கு?
நிலவு சிரிக்கிறது –
நம் காதலின் ரகசியம் தெரிந்தால் போல!
கடலலைகள் கரை அடிக்கின்றன,
என் இதயத்தின் துடிப்பாய் ஒலிக்கின்றன!
உன் நினைவுகள் என் சுவாசத்தில்,
நீ என்னிடம் இரவின் மௌனத்தில்,
நெஞ்சில் பூத்த மலராக!
உன் கையினில் தாலாட்டும் நிலவின் கவிதை!
கடல் அலைகளின் தொடுதலில்
உன் ஸ்பரிசம் உணர்கிறேன்,
நீயும் கடலைப் போல என் மீது கரைகிறாய்,
நிலவாய் என் இரவுகளைத் தழுவுகிறாய்!
உன் பார்வையிலே நான் கற்றதெல்லாம்,
காதல் என்ற உன்னதத்தின் மொழியென்றால்,
உன் சுவாசத்தில் நான் காணும் கனவெல்லாம்
என் இதயத்தின் நிழலாய் நிற்கின்றன!
நிழல் போல் நான் உன் பின்னால்,
அலைகள் நம் பாதம் தடவ,,
நிலாவின் வெளிச்சத்தில் உன் கண்களில் காதல் மின்ன
உன் அன்பிலே என் உயிர் நனைந்தது.!
நீ வராத நேரம் கூட
உன் நினைவுகளில் மூழ்கித் தவிக்கிறது,
நிலவு மௌனமாக இருக்கும்போது
உன் அன்பின் கதைகளை கூறிக்கொண்டிருக்கிறது!
நிலவாய் வந்து என் நெஞ்சில் ஒளிந்தாய்,
கடலாய் வந்து என் கனவில் கரைந்தாய்
நீ ஒரு கனவோ, நிஜமோ என்று தெரியவில்லை,
ஆனால் என் உயிரோடு நீயும் கலந்திருக்கிறாய்!
நாம் எண்ணங்கள் சங்கமிக்கும் காதல் என்னும் கடலில்
நீயோ கடல் அலை போல மறைந்து போகின்றாய்!
நானோ தனிமையிலே கரைந்து போகின்றேன் !
நிலா மட்டும் நம் காதலின் சாட்சி!