Author Topic: ஈறில்லா குளிர்..  (Read 691 times)

Offline sasikumarkpm

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • அதான் personal ஆச்சே...
ஈறில்லா குளிர்..
« on: April 29, 2014, 07:02:18 PM »
டொக்.. டொக்….
டொக்.. டொக்..
டொக்.. டொக்..
இரட்டை கிளவிகளை அடுத்தடுத்து ஈன்றெடுத்து அந்த சுவர் கடிகாரம் நள்ளிரவின் சூன்யத்தை வினாடிகளினால் நிரப்பிக் கொண்டிருந்த நேரம்!!
அசெளகரியமோ.. வெற்றுக் கனவோ.. எதோ ஒன்று என் நித்திரையினை தடை செய்ய, மேற்கொண்டு உறங்கிடாமல் மெள்ள விழித்தெழுந்தேன்…!
இரவு விளக்கின் மந்தகாச வண்ணக்கதிரின் ஈர்ப்பின்பால் விட்டில் பூச்சி ஒன்று அதையே சுற்றி சுற்றிப் பறந்து தன் காதலினை ரீங்காரமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.. 
மார்கழியின் பனிக்காற்று என்னறையின் சாளர கண்ணாடிகளில் நிலைப்பாடில்லாத ஓவியங்களை தீட்டிக் கொண்டிருப்பதை சரியான நேரெதிர்கோட்டிலிருந்து நிலவுமகள் நீண்ட மெளனத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அந்த நள்ளிரவின் நிசப்தமும், என் தனிமையும் இனம் புரியாத எதோ ஒர் உணர்வை என்னுள் வியாபித்திருக்க, என் மனம் கடந்த கால நினைவுகளின் பிம்பங்களில் லயிக்கத் துவங்கியது..
காலப் புரவியினை சற்று ஆசுவாசப்படுத்தி கடந்த காலத்தின் வாயில்களை கடந்து பயணிக்க நான் அறிவியலாளனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.. தனிமையும், இளமையின் தீராத நினைவுகளும், சுகமான வேதனைகளை அளிக்கும் சில சம்பவங்களுமே போதுமானதாயிருக்கிறது..
தனிமைகளுக்கும் காதல் நினைவுகளுக்கும் நிச்சயமாய் அப்படி ஒரு பந்தமிருக்கவேணும், தனித்திருக்கும் பெரும்பாலான நேரங்களில் காரணங்கள் ஏதுமின்றி, முதலில் தோன்றி ஆட்கொள்வதில் அவற்றிற்கு நிகர் அவை மட்டுமே    .. ரணங்களும், தவிப்புகளுமே அவற்றின் மீதங்களாய் இருக்கும் பட்சத்திலுமே, அவைகளை மனம் எல்லையில்லாமல்  விரும்புவது நிதர்சனமாயிருப்பதன் விளிம்பில் தொக்கி நிற்கின்றன நிறைவேறாத நிமிடங்களின் எதிர்பார்ப்புகள்…!!
   காலம் விட்டுச் சென்ற காயங்களுக்கு காதல் பரிசில்கள் என்று பெயரிட்டுப் பார்க்கும் அந்த ஒரு நிமிடம், காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை வருடிப் பார்க்கும் அந்த ஒரு நாழிகை, நினைவுகளின் உச்சங்களின் எச்சமாய் வழிந்தோடும்  ஒரு துளி கண்ணீர், இவற்றின் வெது வெதுப்பான அரவணைப்பில் வாழ்ந்து வந்த என் மனக்கதவு அந்த நள்ளிரவு மெளனத்தின் வெளிப்பாடாய் லேசாக திறந்தது..
   மெளனம் மொழிகளின் அரசியாயிருந்திருகக்கூடும்.. அது ஏனைய மொழிகள் எளிதில் தோற்றுப் போகுமிடங்களிலும் இணையின்றி கோலோச்சுவதின் நளினத்தில் வெளிப்பாடாகிறது.. உறங்கும் மழலையானது தன் தாய் விரலை இருக்கப் பற்றிக் கொள்ளும் அந்த ஒரு கணமாகட்டும், தோல்வியினால் வெகுண்டழும் பிள்ளையின் தாய் ஆறுதலாய் அவன் தலைக்கோதும் சில நொடிகளாகட்டும், காதலனை பிரியும் காதலி அவன் விரல் பற்றி விழி நோக்கும் மணித்துளிகளாகட்டும், மொழிகளின் தேவையின்றி உணர்வுகளை நம்முள் ஆழப்பதிக்கின்றன..
   மெளனம் என்னுடன் நெருங்கிப் பழகிய தோழி.. உன்னைப் போலவே!!! நீ இல்லாத நேரங்களில் என் வெறுமையை போக்கியது அவளுடனான சம்பாஷனைகள் தாம்.. பெரும்பாலும் அவை, என் நினைவிலும் கனவிலும் நீக்கமற நிறைந்திட்ட உன்னைப் பற்றியதாயிருப்பதில் பெருத்த வியப்பேதுமில்லை..
   உனக்கும் எனக்குமான இந்த காந்தர்வப் பந்தம் இன்று நேற்று துவங்கியதல்ல.. செழித்து வளர்ந்திட்ட குவளை மொட்டின் இதழ் இளஞ்சூட்டின் வாகை கொண்ட காலைக்கதிரவனின் கதிர் தீண்ட மலர்ந்திட்ட அசைவென, இதழ் குவித்து மொழி பழகிய காலந்தொட்டது..
   என் மனதினால் நீ நான் சேர்ந்திருந்த எந்த ஒரு காட்சியினையுமே மறக்க முடியவில்லை.. நாம் நம் வீட்டை அந்த கடலோர கிராமத்தின் கடைசியில் அமைய பெற்றிருந்தோம்.. அடுத்தடுத்து அமைந்திருந்த நம் வீட்டின் புறக்கடையில் ஆரம்பிக்கும் அந்த கடற்கரை.. நம் குழந்தை பருவங்களில் பெரும்பாலான நேரத்தினை செலவிட்டது அந்த நீண்ட நெடிய கடற்கரையில் தான்.. விடிந்தும் விடியாத வேளை தொட்டு அந்தியில் கதிரவன் தொடுவானின் மென்பிடியிலிருந்து மெல்ல மெல்ல நழுவி எல்லையற்று பரவியிருந்த ஆழியினுள் ஆசையோடு மூழ்கித் திளைக்கும் பொழுது வரை நம் நாட்களினை களிப்பினால் நிரப்பித் திரிந்ததும்  இங்கே தான்.
   கரையை ஒட்டிய அந்த பெரும் பாறைக்குவியலின் மத்தியில் பொழுதுகளை பொருட்படுத்தாது கவிந்திருக்கும் நிழலில் தான் நாம் சந்தித்திக் கொள்வோம்..  சில நாட்களில் நீ எனக்காய் உன் வீட்டிலிருந்து அப்பம் கொண்டு வருவாய், அவற்றை அப்பத்தினும் சுவையான உன் மென்கரங்களால் சிறு துண்டுகளிட்டு என் வாயிலடைப்பாய்.
 ஓரிரு விழுங்களுக்கு பிறகு கள்ளப் பார்வையுடன் வேண்டுமென விக்கலிடுவேன், உன் வலக்கையில் அப்பத்தட்டினை இடையோடனைத்தபடி இடக்கையினால் மெல்ல என் உச்சியில் தட்டிக்கொடுப்பாய்.. உலகின் இதுவரையிலான கோடான கோடி கவிகளங்கே இருந்திருக்க வேண்டும் அப்போது நான் பரவசித்திருக்கும்  நிலையினை வர்ணிக்க.. “தாகம்” தீர்ந்தவனாய் விக்கலினை நிறுத்திக் கொள்வேன்.
வேறு சில நேரங்களில் காலங்களாய் பரவிக் கிடக்கும் மணலினை குவித்து கோபுரங்களமைத்து விளையாடிக் கிடந்தோம்.. குவியலின் ஈரம் குன்றிப் போகின்ற தருணங்களில் சரிந்து விழும் நீ கட்டிய கோபுரங்களின் அருகில் பொய்யாக அழுது கிடப்பாய், சற்று நேரம் நானதை என் கோபுரங்களின் அருகிலமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பேன்.. சில தருணங்களில் உன் கடைக்கண்ணிலிருந்து கசிந்துருகும் கண்ணீர் நேர்பின்னிருக்கும் சூரியனின் கதிரடக்கி வைரமென பிராகாசிக்கும்.. சட்டென என் கோபுரங்களையும் கலைத்திடுவேன், வழிந்திட்ட கண்ணீரை துடைத்து என் செயல் கண்டு புன்முறுவலிடுவாய்.. புளங்காகிதமடைந்தவனாய் நான்..!
நெடிய கடற்கரையின் முழுவது நீயும் நானும் ஒன்றாய் பாதமிடாத இடமேதுமிருப்பதாய் நானறியேன்.. பருவங்கள் வளர்ந்திட பாவையாய் நீ.!
ஒன்றாய் ஓடிப் பழகிய நாம் இப்போழுது சந்திப்பதே சிரமமாய் போனது.. நேரங்கிட்டிய போதெல்லாம் நம் பாறைவீட்டின் மறைவிலமர்ந்து மனமாறிக்கொள்வோம்.. ஓயாமல் பேசிக்கிடக்கும் உன் இதழ் இன்றென்னெல்லாக் கேள்விகளுக்குமே புன்னகையினை பதிலாயளித்து என்னை சலனப்படுத்தியது..
யாருமில்லா அந்தி வேளைகளிலே கைவிடப்பட்ட அந்த படகின் அருகிலமர்ந்து நம் உரையாடலின் வாயிலாக வருங்காலத்தினை வடிவமைத்துக் கொண்டிருப்போம்.. நம் உரையாடலின் கணம் புரிந்து ஓய்ந்திடாட அலையோசை கூட அப்போது சற்று சாந்தமாய் தன்னை பிரசவிக்கும்.. மாலைக் கதிரவனும் நமக்கு நேரமளித்திட தன்னாலியன்ற அளவு மெல்ல மெல்ல அடங்கிப் போவதை தாமதிப்பான்.. வாழ்வின் பொன்னான தருணங்களவை..
நாம் சந்த்திக் கொள்ளும் பொழுதுகள் கணிசமாய் குறைவதன் தாக்கம் தணிக்க அன்று நீ என்னிடம் எந்நினைவாய் ஏதும் கொண்டுவரச் சொன்னாய்.
 என்னிடமிருந்து எதையுமே எதிர்பாராத நீ முதன் முறையாக கேட்டதற்கு பதிலாய் என்ன தரலாம் என்றெண்ணிக் நெடிய பகலனைத்தும் குமைந்தேன்.. அன்று வரை நான் பெரியதாய் எண்ணியவையெல்லாமே உன்னையும் உன் நினைவுகளையும் தான்..!! ஆகையால் பிறர்க்கு வியப்பளிக்காதிருக்கவும், உன்னோடு எப்போதிருக்கும் பொருட்டும் நன்கு வளர்ந்த வலம்புரிச்சங்கு ஒன்றினை தேர்ந்தெடுத்தேன், காதோடு நீ அதை வைக்கும் வேளையிலே நான் உனக்காய் கூற நினைக்கும் வார்த்தைகளை அது உரைக்குமென்ற நம்பிக்கையில்!!
   ஊரடங்கிய பின் பாறைவீட்டிலே சந்திப்பதாய் நீ சொல்லியிருந்தாய், அங்கே உன் கண்களில் தேடலை காணும் பொருட்டு சங்கினை என் பின்புறத்தினில் மறைத்து வைத்து காத்திருந்தேன்.. காற்றும் முகில்களும் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தன, ஏனோ எனக்கு நம் குழந்தை பருவ நினைவுகள் வர, இதழோரம் புன்னகைத்தேன்.!
பூ, மலர்ந்த கணம் முதல் அதன் மீது காதல் கொண்டு காத்திருந்த நிலமகனின் மேல் மையல் கொண்ட மலர் பெண்ணவள் நேரம் வந்ததும் காம்பிலிருந்து கழண்டு காற்றிலே மெல்ல சரிந்து பூமிக்காதலனை அடையும் அழகோடு மென்னடையிட்டு நீ அப்போது அங்கு வந்தாய்.. நீயும் என் கண்களில் ஆர்வம் காணும் பொருட்டாயோ என்னவோ எனக்காய் கொண்டு வந்த பொருளினை உன் தாவணியின் தலைப்பைக்கொண்டு மறைத்திருந்தாய். உன் கண்கள் முழுவதும் ஆர்வம் நிரப்பி, இதழில் புன்னகை கொண்டு உனக்கான பொருளினை உரிமையோடு கேட்டாய்! முதலில் நான் எனக்காய் நீ கொணர்ந்த பொருள் காணாமல் உனக்கான பொருளை காட்ட மாட்டேனென பொய்சண்டையிட்டு காதல் வளர்த்தேன்!
பொய்யாய் கோபிக்கும் உன் எழில் முகம் கண்டு எல்லையில்லாமல் ஆனந்தித்தவனாய் சங்கினை எடுத்து கொடுத்தேன்!! திகைத்திட்ட நீ வார்த்தைகள் எதுமற்றவளாய், விம்மினாய், புன்முறுவலிட்டாய், பெருமிதத்துடன் கண்ணீர் காட்டினாய். பிறகு மறைபொருளாய் கொண்டிருந்த எனக்கான அந்த பொருளினை மிடுக்காய் காட்டினாய், என்னவளே எனக்காய் நீ எனக்காய் கொண்டு வந்த வலம்புரிச்சங்கினை எடுத்து! காதல் இதுதானென புரிந்த நீயும் நானும் வார்த்தைகளற்று விழி பேசிக்கிடந்தோம் கால நேரம் மறந்து!   வார்த்தைகளால் உணர்த்திட இயலாத பல உலகங்களை உருண்டு பேசும் உன் விழியசைவு எனக்கு உணர்த்திற்று..
எனக்காக நீ, உனக்காக நான் என்று வளர்த்து வந்த நம் உலகம் நம் குடும்பத்திற்காக முடிவுற நேர்ந்தது. கையறு நிலையாய் கடைசியில் நீ எனக்களித்த இருதுளி கண்ணீர் போதும் அன்பே.. இந்த வாழ்வினை உன் நினைவோடு வாழ்ந்து முடிக்க.
பேசிப் பேசி நாம் வளர்த்த அந்த புனிதமான காதலை நாம் கலந்து பேசி நம்முள்ளே புதைத்துக் கொண்டோம்..  விதிவசத்தால் நம் காதல் பிரிந்ததனால் வலி நமக்கு மட்டுமல்ல நம் காதலுக்கு சாட்சியாய் நின்ற இயற்கைக்குங்கூடத்தான் போல, இன்றளவும் கடற்கரையில் நான் தனித்து நிற்கும் பொழுதெல்லாம் என்னை இனங்கண்டு அந்த கடலலை கூட ஓடிவந்து ஓவென ஓலமிடுகிறது!!
யுகங்கள் பல கடந்த பின்னும் இன்னமும் உன்குரல் பேசிக்கிடக்கிறது நீ எனக்களித்த சங்கு..! என் தவிப்புகள், திகைப்புகள், புலம்பலகள், புரிதல்கள் யாவுமறிந்து மெளனித்திருக்கும் ஒரு உயிறற்ற சாட்சியாய்.. 
காலத்தால் என்னை சுற்றி சில புதிய உறவுகளை பின்னத்தான் முடிந்ததே தவிர என்னுள் என்றும் நிறைந்திருக்கும் உன் நினைவுகளை அசைக்கக் கூட முடியவில்லை.. காதலுக்காய் தோற்றதை கொண்டு காலம் கூட பெருமை பேசி திரிகிறது இன்று.!
என் குருதி, ஊணென நிறைந்திருக்கும் உன் ருசுவாய் இன்றெனக்கு ஒரு செல்ல மகள்.. சொன்னால் நம்ப மாட்டாய், அவள் உதடு குவித்து சிரிக்கும் தருணங்களில் அட்சரசுத்தமாய் உன் முகப்பொலிவினை ஒரு கணம் காட்டத்தான் செய்கிறாள்..
ஒருகணம் கண்களை இருக்க மூடி உன் புன்னகைத்த முகத்தினை என் மனத்திரையிலிட்டு பார்க்கிறேன்..ஆகா.. என் மனமெங்கும் திருவிழா கோலம் தான்.. காற்று கூட இப்போது சற்று குளிர்ந்து இதமாய் வீசுவதை என்னால் உணரமுடிகிறது.. என் நினைவலைகள் உன் வசந்த கால வரவையெண்ணி என்னுள் ஒரு புது உயிரோட்டத்தை அளிக்கிறது.. தலை முதல் கால் வரை ஒரு உணர்வு பரவிட சிலிர்த்திட்டேன்..
நீ எனக்காய் அளித்த அந்த அமரச்சின்னம் என் காதுகளில் ஏதோ சொல்கிறதே.. இல்லை இல்லை.. கேட்கிறது.. நீ எனக்காய் முதலில் அளித்த முத்தம் எவ்விடம் என்பதை.. வெட்கத்தை மட்டுமே பதிலாய் அளிக்க முடிந்த எனக்கு இந்த உலகம் கிறுகிறுத்தது.. என்னறையினை அச்சாய் கொண்டு கடும் வேகத்தோடு சுற்றத் தொடங்கியது.. எனக்கு கவலை இல்லை.. என் விரல் பற்றி நீயல்லவா என்னை இட்டுச் செல்கிறாய்.. மெல்ல இருள் கவிய நினைவிழந்தேன்.. என்னைச் சுற்றி இருந்ததெல்லாம் நிசப்தம்.. ஈறில்லா குளிர்..
சசிகுமார்..