மீனம்
மீனம்: எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளை உள்ளமும் வெளிப்படையான பேச்சும் கொண்டவர்கள். கடந்த ஒரு மாத காலமாக 5ல் அமர்ந்து உங்களை பாடாய்படுத்தி, எதிலும் ஒரு தெளிவில்லாமல் செய்த சூரியன் இப்போது 6ம் வீட்டில் அமர்ந்ததால் குழப்பம், கோபம் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க புது வழி பிறக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொண்டை வலி, மூக்கடைப்பு வந்து போகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். யோகாதிபதி செவ்வாய் 19ந் தேதி முதல் 5ல் நீச்சம் பெற்று அமர்வதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்களின் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அவர்களின் உடல் நிலை பாதிக்கும். ராசிநாதன் குருபகவான் 4ல் தொடர்வதால் வேலைச்சுமை, அலைச்சல், தலைச்சுற்றல் வந்துபோகும். தாயாருடன் விவாதம் வேண்டாம். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
அஷ்டமத்துச் சனி தொடர்வதால் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் விலை உயர்ந்த நகை, பணம், பத்திரத்தை பாதுகாப்பாக வைத்துச் செல்வது நல்லது. களவுபோக வாய்ப்பிருக்கிறது. 2ல் கேதுவும், 8ல் ராகுவும் தொடர்வதால் சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சி மேல்மட்டத்தை விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். அளவோடு பழகுங்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உங்களின் புது முயற்சியை ஆதரிப்பார்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பம்பு செட் பழுதாகி சரியாகும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பழைய நண்பர்களாலும் பிரபலங்களின் ஆதரவாலும் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
ஆகஸ்ட் 17, 18, 19, 20, 26, 27, 29, செப்டம்பர் 1, 4, 5, 7, 13, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
பரிகாரம்:
தேனி - கம்பம் பாதையில் அமைந்துள்ள வீரபாண்டி கௌமாரி அம்மனை தரிசியுங்கள். கோயில் கும்பாபிஷேகங்களுக்கு உதவுங்கள்.