Author Topic: வெற்றி, தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால்....  (Read 2927 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வாழ்க்கையில் சிலர் மட்டும் வெற்றி பெறுகிறார்கள் பலர் தோல்வி அடைந்துவிடுகிறார்கள். இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம் இதே போல் ஒரு செயலில் இறக்குகிறோம்; சில சமயங்களில் வெற்றி கிடைக்கின்றது. பல சமயங்களில் தோல்வியே முடிவாகின்றது.

காரணம் என்ன?

நாம் அடைந்த வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்ன என்று சிந்தித்துப் புதிய செயலில் இறக்கும்போது இந்தக் குறைபாடுகளை நீக்கிச் செயல்பட்டால் வெற்றி கிட்டும். இதே போல் இதைவிட, நம் கண் முன்னால் வெற்றிநடை போடுகின்றவர்களை அவர்களுடைய செயல் முறைகளை அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை எண்ணிப்பார்த்தால் காரணம் விளங்கும்.

இதில் ஒரு கூடுதல் நன்மையும் உண்டு. நம்மைப் பற்றி நாமே சிந்தித்து அறிவதைவிட மற்றவர்களின் செயல்முறைகளைக் கண்டு அறிந்து குறை நிறைகளைக் காணுவது எளிது; அடுத்தவர் செயல்களை விருப்பு வெறுப்பற்ற நிலையில் ஆய்வதால் உண்மை தெளிவாகப் புலப்படும்.

வெற்றிக்குரியவர்கள்

வெற்றிக்குரியவர்களை எண்ணிப் பாருங்கள். அவர்களுடைய முயற்சியே அவர்களுக்கு மூலதனமாக இருக்கும். எந்தச் செயலை எடுத்தாலும் முயன்று பார்ப்போம் என்று எழுந்து நிற்பார்கள். முடியும் என்று நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் மேற்கொள்ளும் செயலைப் பற்றிய முழுவிவரங்களையும் சிந்திப்பார்கள். தன்னுடைய திறமை எவ்வளவு? அதற்குத் தடையாக இருக்கின்றவை எவை எவை என்று கணக்கிட்டுப் பார்ப்பார்கள். செயலைத் தொடங்குவார்கள்.

ஒன்றிலேயே குறி

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும். அதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நோக்கம் எல்லாம் அதிலேயே இருக்க வேண்டும்.

24 மணி நேரமும் அந்தச் செயலைப் பற்றிய எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற காரியங்களில் முன்னரே வெற்றிகொண்டவர்களின் முயற்சியைக் கணக்கிட்டுப் பார்த்தால் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் எத்தகைய கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியும்.நாம் செய்யும் முயற்சியின் அளவு எத்தகையது என்பதையும் கணக்கிட்டு நமது முயற்சியை அவ்வப்போது அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்ந்த முயற்சி

பலரின் தோல்விக்கு தொடர்ந்த முயற்சியின்மை முதன்மையான காரணம் என்பதை எண்ணிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். தொடக்கத்தில் மட்டும் முயற்சிஎடுத்துக் கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்யாமலேயே தோல்வி கண்டவர்களே பலராவர்.

வேட்டைநாய் முதலில் அங்கும் இங்கும் ஓடித் தன் திறமையை வீணடித்துவிட்டு வேட்டை கிடைக்கும்போது பிடிக்க முடியாமல் வெறுமனே திரும்பிவிடுவது போல் பலர் தொடக்கத்திலேயே முயற்சியை வீணடித்தும் விடுகிறார்கள். ஆதலில் வேட்டை நாய்கள் போல் நாம் ஆகிவிடக்கூடாது. புலியைப் போல காலமும் இடமும் பார்த்து முடிக்கும் வரை முயற்சியை வீணாக்காமல் காத்திருந்து செயல்படவேண்டும்.

சளைக்கக் கூடாது

வெற்றி எல்லாம் எடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. இடை இடையே தடைகள், மனச் சோர்வை உண்டாக்கக்கூடிய நிகழ்ச்சிகள், இன்னபிற தொல்லைகள் எல்லாம் ஏற்படும். அதனால் தளர்ச்சி கொள்ளக்கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள்தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன.

அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள்கூட நமக்குத் தேவைதான். வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். அப்பப்பா, என்னுடைய முன்னேற்றத்துக்குத் தான் எத்தனை தடைகள்? இருந்தாலும் நான் மனந்தளரவில்லை.

சளைக்காமல் முயன்றேன். அதனால் தான் இன்று இந்த நிலையில் வாழ்கிறேன் என்பார்கள். பயணம் செய்யும்போது வழியில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும். பார்த்து நடக்க வேண்டும். தவறிப்போய் முள் குத்தினாலும் அதைப் பிடுங்கி எறிந்து விட்டுப் பயணத்தைக் தொடரவேண்டியதுதான். அதற்காக அங்கேயே உட்கார்ந்துவிடுகிறோமா?என்ன?

உடலும் உள்ளமும்

வெற்றி பெற பல்வேறு காரணங்களுடன் உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் பல்வேறு கவலைகளுக்கு இடம் அளித்துவிட்டு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் மட்டும் போதாது; செயல் நடைபெறாது.

அதனால் வேண்டாதவைகளை மனதிலிருந்து நீங்விட வேண்டும். வேண்டிய இன்றியமையாத செயல்களை மட்டும் மேற்கொள்ள வெண்டும். அதேபோல்தான் உடலையும் செம்மையான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நம் செயலுக்கு அடிப்படைக் கருவியைப்போல விளங்கக்கூடியது உடம்பு. நமது உடம்பே நம் செயலுக்குத் தடையாக இருக்கக் கூடாது. பலர் சோம்பலினாலேயே தங்களின் வளமான வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள்.

நினைவுகூருங்கள்

சிறிதும் தளர்ச்சி இல்லாமல், தொடர்ந்து முயற்சியோடு செய்தால் செய்பவனுக்கு எல்லா நலன்களும் தானாக வந்து சேரும் என்பது அறிஞர்கள் நமக்குக் கூறும் அனுபவ உரையாகும். இதை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி தேவையா? தொடர்ந்து முயற்சியோடு உழையுங்கள். இதை தவிர வேறொன்றும் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட கால முயற்சி மட்டும் போதாது. அது செயல் முடியும் வரை தொடர்ந்து இருக்க வேண்டும். வாழ்க்கை செழிப்புற அம் முயற்சி வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் .... விழுந்தும் எழுந்தோம் என்பதில்தான் பெருமை ..... நல்ல தகவல் கருத்து பரிமாற்றம் ஸ்ரு