Author Topic: வேண்டாம் இந்த கொலைவெறி  (Read 2432 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வேண்டாம் இந்த கொலைவெறி
« on: February 26, 2012, 04:47:36 AM »
வேண்டாம் இந்த கொலைவெறி



இசை என்பது புலன்களுக்கு அமைதியையும் புத்துணர்வையும் ஏற்ப்படுத்துகிறது. அதிலும் அவ்விசைக்கு ஏற்ப வார்த்தைகளை மிகவும் நேர்த்தியாக கோர்த்து இணைக்கப்பட்ட பாடல்களை கேட்கும்போது மனதில் இனம் புரியாத ஆனந்தம் ஏற்ப்படுவதை உணரமுடிகிறது. வயிற்றிலிருக்கும் சிசுவிற்கு அதே விதமான ஆனந்த உணர்வுகளை அளிக்கிறது என்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது, தாயின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தாயின் அத்தனை உணர்வுகளையும் அறிந்துகொள்ளும் சக்தி உண்டென்பதால் கருவுற்றிருக்கும் பெண்களின் மனம் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருத்தல் அவசியம் என்று மருத்துவம் கூறுகிறது. வண்ண மலர்கள் அழகிய இயற்க்கை போன்ற கண்களையும் கருத்தையும் கவரக்கூடிய காட்ச்சிகளை எப்போதும் கருவுற்ற பெண் ரசித்து பரவசமடைதலால் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆரோக்கியமான மனநிறைவுடன் வளர்கிறது என்பதையும் அறிவியல் நிரூபித்திருக்கிறது.

வயிற்றிலிருக்கும் சிசுவிற்கு மட்டுமே இவை உரித்தானது இல்லை மனிதர்களின் மனதிற்கும் இவ்வகையான அழகிய மலர்களும் இயற்கையும் ரம்மியமான இசையும் மன அமைதியையும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது. ' கெட்டவற்றை பார்க்காதே, கெட்டவற்றை கேளாதே, கெட்டவற்றை பேசாதே' என்கின்ற காந்தீய கொள்கையை சித்தரிக்கும் மூன்று குரங்குகளின் மூலம் சொல்லப்பட்ட மகத்துவமான கோட்ப்பாடும் அதுவே. அதுமட்டுமின்றி நாம் பிறர் மீது பொறாமை அல்லது வன்மம் கொள்ளும்போது நமது உடலில் தேவையற்ற ரசாயன மாற்றங்கள் நிகழ்வதால் தேவையற்ற நோய்களை நாமே வலிய சென்று அழைத்து நம்முடலில் இணைத்துகொள்கின்றோம். இவைகளின் அடிப்படையில் உருவானவை கடவுள் வழிப்பாடு. கடவுளை வழிபடுகின்ற போது நமது இரு கண்களையும் மூடிக்கொண்டு குறிப்பிட்ட காரணத்தைப்பற்றிய முழு சிந்தையுடன் முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கின்றோம், அதுவும் அவ்வாறே நடந்துவிடுகிறது. இதற்க்கு கடவுள் காரணம் என்று நாம் முழுமையாக நம்புகிறோம். அவ்வாறே அடுத்தவருக்கு கேடு விளைவிக்கும் எண்ணங்களையும் நம் மனதில் வன்மத்துடன் சிந்திக்கின்றோம், செயல்படுகின்றோம். ஒரே மனதில் கெட்ட மற்றும் தீயவற்றிற்க்கும் இடம் கொடுத்தாலும் நாளடைவில் நாம் எதிர் நோக்கி காத்திருக்கும் வேண்டுதல்கள் பலனளிக்காமல் வேதனையுறுகிறோம், இவற்றிக்கு காரணம் கடவுள் கெட்டவனுக்கு பதில் அளிப்பதில்லை என்று நாம் நம்புகிறோம்.

நமது செயல்களும் எண்ணங்களும் அதிகமான தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தி பழகிவிடுகின்ற போது நமக்குள் நாமே எதிர்வினைகளால் நிரப்பப்பட்டு விடுகிறோம், அவ்வாறு நிரப்பப்படும் எதிர் வினைகளினூடே நல்லதிற்க்காகவோ சுகத்திற்க்காகவோ நாம் வேண்டிக்கொள்ளுகின்ற போது அல்லது எதிர்பார்த்து காத்திருக்கின்ற போது அவை நம்மை வந்து அடைய விடாமல் எதிர்வினைகளால் நிறைவேற்ற இயலாமல் தடுக்கப்படுகிறது. தோல்விகளை இழப்புகளை சந்திக்க நேர்ந்து மன அமைதி இழக்க நேருகிறது, ஆக நமது சிந்தையும் செயலும் நல்லவற்றையே நாடி அதற்காக காத்திருக்கும் போது அவை நடந்துவிடுவதற்க்கு தடையாக எதிர்வினைகள் ஏதுமின்றி நடந்துவிடுகிறது. நாம் நற்சிந்தையும் செயலும் கொண்டவர்களாக இருப்பது நமக்குத்தான் பெரும் அமைதியையும் வெற்றிகளையும் ஏற்ப்படுத்தி கொடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.

'கொலைவெறி கொலைவெறி' என்று நாம் விளையாட்டாக பாடிக்கொண்டிருந்தாலும் அல்லது அவ்வாறு பாடுவதை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பதாலும் நம்மை சுற்றி அல்லது நமது மனதினுள் எதிர்வினையான தாக்கங்களை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 'மனசே சரியில்லை' என்று கூறிவிட்டு மனதை சரியாக்குவதற்க்காக இசை கேட்க்கிறேன் பேர்வழி என்று 'கொலைவெறி' பாடலையோ அதைப்போன்ற பாடல்களையோ அல்லது பழிக்கு பழி வாங்கும் திரைப்படங்களையோ பார்த்து ரசிப்பதால் மன உளைச்சல் அதிகரிக்குமே தவிர நிச்சயமாக குறையாது. எத்தனையோ அருமையான வார்த்தைகளை கொண்ட அழகிய மெல்லிசைபாடல்கள் ஏராளமாக இருக்க மக்கள் எதற்க்காக இந்த 'கொலைவெறி' பிரியர்களாக்கப்படுகிரார்கள் என்பது வேதனைக்குரிய கேள்வி. விளையாட்டாக கூட இவ்விதமான சொற்களை திரும்ப திரும்ப உபயோகிப்பது நாமே நமக்கு ஆப்பு வைத்துக்கொள்ளுகிறோம் என்பதுதான் நிஜம்.

இசை மூலம் பல அறிய நோய்கள் குணமாக்கப்படுவதை அறிவியல் நிருபித்துள்ளது என்பதை நாம் அறிந்திருந்தும் இவ்வாறான தவறுகளை எதற்க்காக செய்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதில்லை. பல வருடங்களுக்கு முன்னர் வந்த பழைய திரைப்படபாடல் ஒன்று மிகவும் மோசமானதாக அக்காலத்தில் பரபரப்பாக எங்கும் பேசப்பட்டது. 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான், அதை கொடுத்தாலும் வாங்கவில்லை எந்தன் கன்னம் வேண்டுமென்றான்', 'மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே, மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற', இன்னும் பல பாடல்கள். பெரும்பாலும் இவை அக்காலத்தில் கவிஞர் வாலி அவர்களாலேயே எழுதப்பட்டதால் அவரை கொச்சையாக விமரிசித்து பேசப்பட்டதுண்டு. ஆனால் இப்போது 'தயிர் சாதம் வடு மாங்காய்' வரை மிக சகஜமாக எழுதி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகி ஐக்கியமாகிவிட்டது.

மாசுபடுத்தப்படுவது சுற்றுப்புற சூழலை மட்டுமல்ல மனித மனங்களைக்கூடத்தான், இவ்வகையான மாசு சமூகத்தில் மனிதர்களின் மனங்களில் எதிர்வினைகள் செழித்தோங்க வழிவகுக்கிறது. புகை பிடிப்பதால் புகை பிடிப்பவரை விட அக்கம் பக்கத்தில் அந்த புகையை சுவாசிக்கின்ற அனைவருக்குமே உடலில் புற்று நோய் உருவாக்குவது போல இவ்வகையான பாடல்களும் மனதில் தீயவற்றை விதைக்கவே பயன்படும் என்பதை நாம் உணர வேண்டும்.