Author Topic: எங்கே மனிதம்?  (Read 2292 times)

Offline Yousuf

எங்கே மனிதம்?
« on: May 31, 2012, 06:13:54 AM »
கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக.........என்ற வாசகத்தினை மறந்து போனது மானுடம்...! அடிப்படையில் வாழ்வில் கற்கும் எல்லாமே கல்வி...அந்த அனுபத்தை பின்பற்றாமல்....மனிதம் மிருகமாவதினைப் பற்றி கருத்துக்கள் இதோ



மாநகர பேருந்து...

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள்,அவர்களின் அறிவுக்கண்ணை திறந்து விட்ட ஆசிரியர்கள்,அலுவலகம் சென்று வீடு திரும்பும் பட்டதாரிகள் என நிரம்பி வழிகிறது. ஒரு இளம் தாய்,தோளில் மூன்று மாத சிசுவுடன் கைகளில் சுமக்க மாட்டாத பாரத்துடன் ஏறுகிறார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு விரக்தியுடன் கால்களுக்கிடையே கை பாரத்தை வைத்து விட்டுகம்பியை ஒற்றைகையாலும் மறு கையால் குழந்தையை பிடித்துக்கொண்டும் பயணிக்கிறார்...



சாலையோரம்...

பைக்கில் சென்றுக்கொண்டிருந்த ஒருவரை ஒரு மூதாட்டி நிறுத்தி ஏதோ கேட்கிறார்.பதிலுக்கு கோபத்துடன் பைக்கில் வந்தவர் ஏதோ சொல்கிறார்.இதற்கிடையே பின்னால் வந்த தண்னீர் லாரிக்காக வழி விட பைக்கை நகர்தியவர் கவனக்குறைவினால் பக்கத்தில் எதற்காகவோ தோண்டிய குழியில் சரிந்து விடுகிறார் அது ஒன்றும் பெரிய பள்ளமல்ல சமாளித்து எழுந்தவர் ஓங்கி அந்த மூதாட்டியின் கன்னங்களில் அறைந்து விட்டு கிளம்பிவிட்டார். ”ஏன் பாட்டி வழில போறவர நிறுத்துனீங?”ன்னு கேட்டதுக்கு அந்த பாட்டி சொன்ன பதில்
“அவன் என் புள்ள தான்ப்பு பாத்து ரொம்ப நாளாச்சேன்னு..”.


பெரிய பதவியில் இருக்கும் கணவனும், சமூக சேவகியான மனைவியும் வசிக்கும் வீடு... பத்து வயது சிறுமிகள் இருவர். பள்ளி செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த ஒருத்திக்கு உதவி செய்துக்கொண்டும்,சிறு பையன் ஒருவனை கண்காணித்துக்கோண்டும் மற்றவள். கணவனிடம் மனைவி”டியர், வேணி நல்ல டைப்பா தெரியுரா அவளுக்கு உடம்பு சுகமில்லைன்னு பொண்ண அனுப்பி வச்சுருக்கா பாருங்கலேன்”....பள்ளிக்கு கிளம்பிய குழந்தை மற்றவளிடம் “ நீ இன்னிக்கு ஸ்கூல் போகலியா?”வென கேட்க, ”ம்ஹூம் அம்மாக்கு முடியல அதான்”னு ஏக்கமாக சொல்கிறது



இது போன்ற நிகழ்வுகளை கடக்கும் போதெல்லாம் ரவுத்திரம் பழகு ரவுத்திரம் பழகுன்னு சொன்ன பாரதிய புற்ந்தள்ளி தெரசாவோட புன்னகையை எடுத்தது தப்போன்னு மனசு நொறுங்கி கூழாங்கல்லாயிடும்.சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்க வேணுமாய் மனம் சாட்டை சுழற்றும்,

ஆனால் ..
சமூகம் என்பது யார்?
நான் தானே... நானும் என் போன்றவர்களும் தானே...
அப்படியென்றால் நான் என்னைதான் உலுக்க வேண்டுமா ?!
இத்தேடலில் எனக்கு கிடைத்தவைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்!



உலக உயிரினங்களில் சிறந்தவன் மனிதன் ஏனென்றால் அவனிடம் மட்டுமே பகுத்து ஆராயும் ஆறாம் அறிவு இருக்கிறது.இப்படிதான் நாம நம்மை பெருமையா நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் அடிப்படையில் இந்த அறிவு ஜீன்களில் இருந்தாலும் அதை சரியான வழியில் வெளிக்கொணர்வது சூழ்நிலையும், வாழ்வியலும்தான்.அதற்காகத்தான்,கல்வி என்ற மாபெரும் புதையல் மனிதனுக்கு கிடைத்திருக்கிறது.



ஒரு தலைமுறையினர் தாம் அறிந்தது ,ஆராய்ந்தது ,தெரிந்தது,தேடியது என வாழ்வியலுக்கு தேவையான அனைத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கின்றனர்.இவ்வாறாகத்தான் கல்வியின் துறைகள் பல்கிப்பெருகியது,மனிதப்பண்புகளை சீராக்கி,அவனது எண்ணங்களை, சிந்தனைகளை சரியான வழியில் இட்டுச் சென்றது கல்வி.

ஆனால் இன்றைய கல்வி...


முதல் வகுப்பில், அறம் செய விரும்பு என சொல்லிக்கொடுக்கிறார்கள்
கற்றுக்கொடுப்பவர்களுக்கு நிர்வாகத்தில் அல்லது தலைமையிடத்தில் “குட்’ வாங்க வேண்டும்.கற்றுக்கொள்பவனுக்கு முழு மதிப்பெண் பெற்று பெற்றோரிடமும் ,ஆசிரியர்களிடமும் குட் வாங்க வேண்டும்.
அதற்காக அழகாக உச்சரிக்க, பிழையில்லாமல் எழுத என பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது


வெறும் அழகாக உச்சரிக்கவும், பிழையில்லாமல் எழுதவும், குட் வாங்கவும் மட்டும் தானா இவை?
புரிந்துக்கொள்ளவும், புரிந்ததை தம் வாழ்வில் பதித்து செம்மையாக்கவும் இல்லையா?
கல்வியின் நோக்கமே, அதைக் கற்று, அதன் படி செயல்பட்டு, தன்னால் இயன்றளவு பிறருக்கும் கற்றுக்கொடுத்து, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குதல் தானே. முதல் வகுப்பில் ஆத்திச்சூடி என ஆரம்பித்து போகப்போக எத்தனையோ நல்ல நல்ல் வாழ்வியல் தத்துவங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் அவையெல்லம் வெறும் மதிப்பெண்ணுக்காக என்றாகி விட்டது.



கேட்டால் இது போட்டிகள் நிறைந்த உலகம் என்று பதில் சொல்லப்படுகிறது. அறிவியல் வளர்ச்சி நம்மை இப்படி ஆக்கி விட்டதொ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகெளெல்லாம் மங்கி தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற டார்வினிஸம் அல்லவா நம்மில் பதிந்து விட்டது. நகம் வெட்டும் நகவெட்டி விரலையும் சேர்த்து வெட்டிக்கொண்டிருக்கிறதோ?! எதிர் வருபவற்றை ஏறி மிதித்து ஓடும் ஓட்டத்தில் நாம் மனிதத்தை அல்லவா குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கிறோம்...




போகட்டும் இது வரை எப்படியோ இனிமேலாவது விழித்துக்கொள்வோம் நண்பர்களே!
இல்லையெனில், அதோ அந்த இளம்தாய்க்கு ஏற்பட்ட விரக்தி, அம்மூதாட்டிகு ஏற்பட்ட வேதனை, அக்குழந்தைக்கு ஏற்பட்ட ஏக்கம்
ஒட்டுமொத்த சமூகத்தின் புற்றாகி விடும். இப்புற்று இருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத்தயும் தின்ற,சமூகத்தை சவக்காடாக்கும் முன் விழித்துக்கொள்வோம் தோழர்களே.


ஏழிலிருந்து பதினைந்து வயதிற்குள் ஒருவனில் விழும் எண்ணங்களின் விளைவுகளாய்த்தான் பெரும்பாலும் அவனது எஞ்சிய வாழ்விருக்கும் என்றிருக்கிறார்கள்.எனவே தான் நாம் இந்த கால கட்டத்தை கல்விகூடங்களில் செலவழிக்கிறோம்.எனவே



கற்பிக்கும் பொழுதும் நாம்மொழிப்பாட இலக்கியங்களின் நல்ல நல்ல கருத்துக்களை உள்வாங்கப் பழகுவோம்; அறிவியலின் ஆக்கங்களை ஈர்த்து,அழிவுகளை புறந்தள்ளப்பழகுவோம்; வரலாறுகளில் வெற்றிக்கும்,வீழ்சிக்குமான காரணங்களை நம் வாழ்வோடும் பொறுத்திப் பார்க்கப் பழகுவோம்;.




இது ஆரோக்கியமான மனிதப்பண்புகளை உருவாக்கலாம்
இப்பண்புகள் செழுமையான சமூகத்தை உருவாக்கலாம்
இச்சமூகம் வலிமை மிகு நாடுகளை உருவாக்கலாம்
உலகம் முழுதும் இப்படிப்பட்ட வலிமைமிகு நாடுகளாய் இருக்க வேண்டும்.