Author Topic: எங்கிருந்து வந்தன  (Read 527 times)

Offline thamilan

எங்கிருந்து வந்தன
« on: November 01, 2022, 04:39:39 PM »

எல்லாம் எங்கிருந்து வருகின்றனவோ
அங்கேயே போய் சேர்கின்றன

பூவுக்கு மனம் எங்கிருந்தோ வருகிறது
மெல்லமெல்ல காற்றினில் கலந்து
கரைந்து விடுகிறது

இசைக் கருவியில்
எங்கிருந்தோ இசை வருகிறது
மெல்ல மெல்ல காற்றினில்
கரைந்து மறைந்து விடுகிறது

மெழுகுவர்த்தியின் சுடர்
நெருப்பினால் வருகிறது
அது அணைந்ததும்
மெல்ல மெல்ல காற்றுடன் கலந்து
மறைந்து விடுகிறது

கரைந்த மணம்
மறைந்த இசை
அணைந்த சுடர்
எங்கே போய் சேர்ந்தன

அவை எங்கிருந்து வந்ததோ
அந்த இடத்துக்கே
போய் சேர்ந்தன

அந்த இடத்தில்
மல்லிகை மணம்
சாக்கடையின் மணம்
என்ற பேதம் இல்லை

அகல் விளக்கின் சுடர்
மெழுகுவர்த்தியின் சுடர்
என்ற பேதம் இல்லை

புல்லாங்குழலின் இசை
கழுதையின் கதறல்
என்ற வேறுபாடு இல்லை

பொருள் ஒன்று தான்
படைப்புகளில் தான் வேறுபாடுகள்

கோவிலில் மந்திரம் சொல்லும்
ஓசை கேட்கிறது
சர்ச்சில் மணியோசை கேட்கிறது
பள்ளிவாசல்களில் தொழுகைக்கான
அழைப்பொலி கேட்கின்றன

இவை மூன்றும்
காற்றினில் கரைந்து
மவுனத்தில் ஒன்றாகி விடுகின்றன
இதை அறியாத மனிதன்
வெறும் சத்தங்களின்
வேறுபாட்டை வைத்து
சண்டை போடுகிறான்