பஞ்சாங்க நாள் பார்த்து..
வதுவை கோலம் கண்டு , கண்ணாளனின்
வலக்கரம் பற்றி அக்கினி வலம் வந்து
புது தாலி ஏற்றுக்கொண்டாள்
இளம்பெண்ணொருத்தி..
நெற்றித்திலகமும் ,நெஞ்சை தொடும் மங்கள நாணும்
திருமதி கோலத்தை மேலும் அழகாக்க..
பழக்கமில்லா மெட்டி சேலைநுனி இடறி விட ..
வெட்கம் மேலும் செம்மை சேர்த்தது அவள் அழகிய கன்னத்தில்..
கலக்கமுற்ற நடையில் கால்களும் பின்ன
உற்றார் உறவினர் கேலி பேசி கையசைக்க
பெற்றாரோ கை மறைவில் கண்ணீர் மறைக்க..
புது அகம் நோக்கி பயணித்தால் புதுப்பெண்ணொருத்தி ..
கனவுகள் கருவிழிகளில் மின்ன
கல்யாண கோலம் பூண்ட காரிகையவள்
மாமியார், நாத்தனார் புது உறவுகள் சூழ..
காலடி எடுத்து வைத்தாள் புது மனைதனில்
சமயலறியாதவள் என மாமியார் வைவாரோ?
அண்ணனின் அன்பு தனக்கே என நாத்தனார் முரண்படுவாளோ ?
பாழாய்ப்போன சீரியல் கதைகள் எண்ணத்தில் ஓட..
பேதை மனமோ பேதலித்து பலவாறு குழம்ப..
கண்ணசைவில் கலக்கமறிந்த கணவனோ
மாலை மறைவில் கை அழுத்தி..
கண்சிமிட்டி சிரிப்பில் கலக்கம் துடைத்தான்..
தோளோடு கட்டி அணைத்து தோழமையை உணர்வித்து..
நான் இருக்கின்றேன் என சங்கேத மொழி பேசினான்..
காதலோடு தோழமையும் உணர்வித்தவன்..
மௌனமொழியிலே மனதறிந்தவன்
இனிவரும் காலம் யாவும் இந்த இனியவன் துணை
காதலனே கணவனாய் வாய்த்தால் இனியேது வினை ?