Author Topic: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~  (Read 87318 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Dr. வீ கிம் வீ (மக்கள் அதிபர்) - வரலாற்று நாயகர்!

"வாழ்க்கை என்ற அதிர்ஷ்ட குலுக்கில் நாம் எவ்வாறு பிறக்கிறோம் என்பதையோ,பிறந்த பிறகு வரும் அதிர்ஷ்டங்களையோ துரதிர்ஷ்டங்களையோ நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் அவற்றை எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது நம் கைகளில் இருக்கிறது. தன்னம்பிக்கை இழக்காமல் முழுமையாக போராடினால் துரதிர்ஷ்டம் நம் பாதையைக் கடந்தாலும் நம்மால் அதனை வெற்றியாக மாற்ற முடியும்".

1994 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 30ந்தேதி உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் அது. குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு பின்னர் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ஒரு வரலாற்று நாயகர் அந்தக் கெளரவ பட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் கூறிய கருத்து அது. சிங்கப்பூரர்களின் ஒட்டு மொத்த நன்மதிப்பையும் பெற்றிருந்த அவர் வேறு யாருமல்ல புன்னகை மட்டுமே பூக்கத் தெரிந்தவரும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தும் சராசரி சிங்கப்பூரர்களோடு சரிசமமாக பழகியவரும், சிங்கப்பூரர்களால் 'மக்கள் அதிபர்' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான சிங்கப்பூரின் முன்னால் அதிபர் டாக்டர் வீ கிம் வீ.



சிங்கப்பூரின் நான்காவது அதிபராக எட்டாண்டு காலம் பணியாற்றியவர். வறுமையில் பிறந்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதை திரு.வீ கிம் வீயின் கதை. 1915 ஆம் ஆண்டு நவம்பர் 4ந்தேதி சிங்கப்பூரில் ஒரு சராசரி குடும்பத்தில் நான்காவதும், கடைசிப் பிள்ளையுமாக பிறந்தார் திரு வீ. அன்புக்கு பஞ்சமில்லாத அந்த வீட்டில் வறுமைக்கும் பஞ்சமில்லை. மிக எளிமையான சூழ்நிலையில் வளர்ந்த அவர் தனது ஆரம்பக் கல்வியை 'பெர்ல்ஸ் ஹில்' தொடக்கப்பள்ளியில் பயின்றார். அவருக்கு எட்டு வயதானபோது அவரது தந்தை தொண்டைப் புற்று நோயால் காலமானார். அதனால் குடும்ப நிலமை இன்னும் மோசமானது. எப்படியோ சிரமபட்டு 'ராஃபிள்ஸ்' கல்விக் கழகத்தில் உயர்நிலை படிப்பை மேற்கொண்டார் திரு வீ. ஆனால் குடும்ப வறுமை அலைக்கழிக்க இரண்டு ஆண்டுகள்தான் அவரால் அங்கு நிலைக்க முடிந்தது.

1930 ஆம் ஆண்டில் அவர்  "ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்" பத்திரிக்கையில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். கடுமையாக உழைத்ததால் அவர் பின்னர் விளம்பர பிரிவில் சேர்ந்தார். அதன்பின்னர் நிருபராக அவருக்கு பதவி உயர்வு கிட்டியது. 1941 ல் அவர்  'யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷன்(யு.பி.ஏ)'  எனப்ப்டும் அமெரிக்க செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானிய ஆட்சிக் காலத்தின்போது அந்த வேலையை அவரால் தொடர முடியவில்லை. ஜப்பானிய இராணுவ அமைப்பில் எழுத்தராக வேலை செய்தார். 1945 ஆம் ஆண்டு ஜப்பானிய ஆட்சியிலிருந்து சிங்கப்பூர் விடுபட்டபோது அவர் மீண்டும் 'யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷனில்(யு.பி.ஏ)' சேர்ந்தார். அதில் நல்ல பத்திரிக்கை அனுபவம் கிடைத்ததால் அவர் மீண்டும் 1959 ஆம் ஆண்டில்  "ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில்” சேர்ந்தார். இம்முறை அவருக்கு கிடைத்தது உதவி ஆசிரியர் பணி.



அந்தக்கால கட்டத்தில் நிருபராக இருந்து பல முக்கிய நிகழ்வுகளை சிங்கப்பூரர்களுக்கு கொண்டு வரும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. குறிப்பாக 1966 ஆம் ஆண்டு இந்தோனோசியாவுக்கும், மலேசியாவுக்கு இடையே நிலவிய 'கான்ப்ரெண்டேஷன் (CONFRONTATION)' எனப்படும் அரசியல் பதற்றத்தின்போது தைரியமாக ஜகர்தாவுக்கு சென்று இந்தோனோசியாவின் முன்னால் அதிபர் சுகார்த்தோவை நேரடியாக பேட்டி எடுத்தார். அடுத்த நாளே மூன்றாண்டு பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தோனோசியா விரும்புகிறது என்ற தலைப்புச் செய்தியை உலகுக்குத் தந்தார் திரு வீ கிம் வீ. 1973 ஆம் ஆண்டு அவர் பதவி ஓய்வுபெற இரண்டு ஆண்டுகளே இருந்தபோது அவரை மலேசியாவிற்கான தூதராக நியமித்தது சிங்கப்பூர் அரசாங்கம். மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்க வேண்டிய அந்த பதவியில் திரு. வீ ஏழு ஆண்டுகள் நீடித்தார். அந்த ஏழு ஆண்டுகளில் சுமூகமான சிங்கப்பூர், மலேசிய உறவுகளுக்கு அவர் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

அந்தப்பணி முடிந்து 1980 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கான தூதராகவும், அதற்கு அடுத்த ஆண்டு கூடுதலாக கொரியாவுக்கான தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அவருடைய அரசதந்திர பணி 1984 ல் முடிவடைந்ததும் முன்னைய சிங்கப்பூர் ஒளிப்பரப்புக் கழக்த்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டே அதாவது 1985 ஆகஸ்ட் 30ந்தேதி சிங்கப்பூரின் நான்காவது அதிபராக அவரை தேர்ந்தெடுத்தது நாடாளுமன்றம். அடுத்த எட்டு ஆண்டுகள் அந்தப் பணியை செவ்வெனெச் செய்தார் திரு.வீ கிம் வீ. 1936 ஆம் ஆண்டு 'கோ சாக் ஷியாங்’ என்பவரை மணந்து கொண்ட திரு. வீ அவர்களுக்கு ஒரு ஆண், ஆறு பெண்கள் என எழு பிள்ளைகள் பிறந்தனர். 1966 ஆம் ஆண்டு 'justice of the peace' ஆக நியமிக்கப்பட்டார். 1963-ல் பொதுச்சேவைக்கான நட்சத்திர விருதையும், 1979 ஆம் ஆண்டு மெச்சத்தக்க சேவை விருதையும் வென்றார்.



1993 செப்டம்பர் மாதம் அவர் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். தனது கல்விப் பயணத்தில் பல்கலைக்கழகத்தில் காலடி வைக்க முடியாத திரு.வீ அவர்களுக்கு 1994 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 30ந்தேதி மாதம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கவுர டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அதனை ஏற்று அவர் ஆற்றிய உருக்கமான உரையில்.... "வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிட்ட எனக்கு பட்டப்படிப்பு படிக்காமலேயே இவ்வுளவு பெரிய கவுரம் கிடைத்தது குறித்து உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் சென்ற ஒரே பல்கலைக் கழகம் வாழ்க்கை என்ற பல்கலைக்கழகம்தான்" என்று கூறினார். அதே உரையில் அவர் தன் வாழ்க்கையில் பின்பற்றிய மூன்று கொள்கைகளைப்பற்றி பேசினார். முதல் கொள்கை வாழ்க்கையில் நிறைவு காண வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது.

இந்தக்கொள்கைகளுக்கு உதாரணமாக எட்டு ஆண்டுகள் அதிபராக இருந்தபோது பரந்து விரிந்த "இஸ்தானா" மாளிகையில் வசிக்க வாய்ப்பிருந்தபோதும் சிக்லாப்பில் இருந்த தனது சொந்த வீட்டிலேயே வசித்தார் என்பது குறிப்பிடதக்கது. இரண்டாவது கொள்கை எல்லோரையும், அவர்கள் எவ்வுளவு தாழ்ந்து போனவர்களாக இருந்தாலும் மனிதர்களைப்போல் நடத்த வேண்டும், உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது. இதனை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததால்தான் அவரை 'மக்கள் அதிபர்' என்று எல்லோரும் அழைத்தனர். மூன்றாவது கொள்கை எப்போதும் பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். Harry Truman என்பவர் அமெரிக்காவின் அதிபரான பிறகும் தன் காலணிகளை சொந்தமாகவே பாலிஷ் செய்துகொள்வார் என்ற கதையைக்கூறி தானும் அதிபரான பிறகுகூட சொந்தமாகவே காலணிகளுக்கு பாலிஷ் செய்துகொள்வதையும், சொந்தமாகவே காஃபிகூட போட்டுக்கொள்வதையும் கடைப்பிடித்தார் டாக்டர். வீ கிம் வீ.



கடைசிவரை அவர் கடைப்பிடித்த எளிமைதான் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டு 'Glimpses and Reflections' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் டாக்டர் வீ. அவரது சுயசரிதையைப் படித்துப்பார்த்தால் எவ்வுளவு பெரிய உச்சங்களைத் தொட்ட ஒரு மனிதன் எப்படிப்பட்ட சாதரணமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். நமக்கு ஆச்சரியத்தால் புருவங்கள் விரியும். தன்னுடைய பனிரெண்டாவது வயதில் தலமையாசிரியரிடம் தான் வாங்கிய பிரம்படி எப்படி தன் வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று அந்தப் புக்கத்தில் சுவைபட கூறியிருக்கிறார் டாக்டர் வீ. மிக எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் அந்த நூல் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய ஒரு நூல். அந்த நூலின் விற்பனை மூலம் கிடைத்த சுமார் அரை மில்லியன் டாலரை எட்டு அறநிறுவனங்களுக்கு வழங்கினார், மனுகுலம் பயன்பெற வேண்டும் என்று விரும்பிய நன்நெஞ்சம் கொண்ட டாக்டர் வீ.   

'மக்கள் அதிபர்' என்று புகழப்பட்ட டாக்டர் வீ கிம் வீ, சில ஆண்டுகளாகவே 'Prostate' எனப்படும் சிறுநீர்ப்பை சுரப்பி புற்றுநோயால் அவதிப்பட்டார். 2005 ஆம் ஆண்டு மே மாதம் 2ந்தேதி தமது 89 ஆவது வயதில் காலமானார். அந்தத் தருணம் தங்களுடைய உறவினர் ஒருவர் இறந்துபோனதுபோன்று உணர்ந்தனர் அவரது அன்பையும், மனித நேயத்தையும், புன்னகை பூக்கும் முகத்தையும் மறக்க முடியாத சிங்கப்பூர் மக்கள். அதனால்தான் நவீன சிங்கப்பூர் வரலாறு காணாத அளவுக்கு பல்லாயிரம் மக்கள் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்த இஸ்தானாவில் வரிசை பிடித்து நின்றனர்.

வாழும்போது எளிமையை விரும்பிய டாக்டர் வீ, மறைந்தபோதும் எளிமையாகவே நினைக்கப்பட விரும்பினார். அதனால் தன்னுடைய அஸ்தியை சராசரி சிங்கப்பூரர்களின் அஸ்திகளுக்கு மத்தியில் வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பொதுவாக அதிபர்கள் 'கிராஞ்சி' சமாதியில்தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் டாக்டர் வீ அவர்களின் அஸ்தியோ அவரது விருப்பம்போலவே 'மண்டாய்' அஸ்தி மாடத்தில் மற்ற சாரசரி சிங்கப்பூரர்களின் அஸ்திகளோடு அவரது அஸ்தியும் வைக்கப்பட்டுள்ளது.



நாட்டின் உயர்ந்த பதவியை எட்டியபோதும் அதிகாரமோ, தலைக்கணமோ, அகம்பாவமோ அவரது தலைக்கு ஏறவில்லை. மாறாக எட்டாத தூரத்திலிருந்த ஒரு பதவியை அவர் சாமானிய மக்களுக்கும் எட்டும் உயரத்திற்கு கொண்டு வந்தார். அவரது புன்னகைக்கும், கனிவான பேச்சுக்கும் வசப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏழ்மையில் பிறந்து பட்டப்படிப்பு படிக்காமலேயே சிங்கப்பூரின் ஆக உயரிய பதவியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவருடைய நேர்மை, கனிவு, பரிவு, மனிதநேயம், தன்னம்பிக்கை, கடும் உழைப்பு, விடாமுயற்சியும்தான். இவற்றிற்கெல்லாம் மேலாக...

"இந்த உலகத்தில் வாழ்கின்ற காலத்தில் ஐந்து அல்லது பத்து சக மானிடர்கள் மகிழ்ச்சியோடு வாழ நான் முயன்றிருந்தால் அதுவே நான் பிறவி எடுத்ததன் பயனாகும்"

என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதனை வாழ்ந்தும் காட்டிய அந்த மாமனிதருக்கு அவர் விரும்பிய வானத்துடன் மனுகுலமும் சேர்ந்தே வசப்பட்டது.வறுமையில் பிறந்தாலும் டாக்டர்.வீ கிம் வீ அவர்கள் வாழ்ந்துகாட்டியதுபோல் எளிமையையே விரும்பி அவர் கடைபிடித்த ஓரிரண்டு பண்புகளைப் பின்பற்றி வாழ்க்கையில் விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் எந்த வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜெசி ஓவன்ஸ் (Olympic Legend) - வரலாற்று நாயகர்!

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ். அந்தப் பெயரை ஒலிம்பிக் போட்டிகள் என்ற வானம் இன்றும் பெருமையுடன் சுமந்து நிற்கிறது.

ஜேம்ஸ் கிளீவ்லண்ட் ஓவன்ஸ் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஓர் எளிமையான கருப்பர் இன குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார். அவரது தாத்தா கொத்தடிமையாக இருந்தவர். James Cleveland Owens என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஓவன்ஸை எல்லோரும் J C என்று அழைப்பார்கள். அவர் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அவரது பெயரை ஆசிரியர் கேட்க ஜெ சி என்று சொல்ல அதனை ஜெசி என்று எழுதிக்கொண்டார் அந்த ஆசிரியர். அன்றிலிருந்து அவரது பெயர் ஜெசி ஓவன்ஸ் என்றானது. குடும்பம் ஏழ்மையாக இருந்ததால் வாழ்க்கை சிரமமாக இருந்தது. குடும்பத்திற்கு உதவ மளிகைப்பொருட்களை விநியோகம் செய்வது, காலணிகள் பழுது பார்ப்பது, மின்தூக்கிகள் இயக்குவது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்தார் ஜெசி. அந்த வேலைகளைச் செய்யும்போதுதான் ஓடுவது என்றால் தனக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்தார் அவர். அந்தத் தெளிவுதான் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது.



பள்ளியில் ஒருநாள் அறுபது மீட்டர் தூரம் ஓடும் பயிற்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஓடிய ஜெசியைப் பார்த்து அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார் பயிற்றுவிப்பாளர் ச்சார்லி ரைலி. ஜெசிக்கு நல்ல பயிற்சி அளிக்க விரும்பினார். ஆனால் பள்ளி முடிந்து பல வேலைகள் பார்க்கும் நிர்பந்தம் இருந்ததால் எப்படி பயிற்சியில் ஈடுபடுவது என்று தயங்கினார் ஜெசி. அவரது நிலையை புரிந்துகொண்ட ரைலி காலை நேரங்களில் தனியாக பயிற்சியளிப்பதாக கூறவே அதனை ஏற்றுக்கொண்டார் ஜெசி. அதிலிருந்து அவர் பட்டைத் தீட்டிய வைரமாக ஜொலிக்கத் தொடங்கினார். அவருக்கு 19 வயதானபோது கல்லூரித் திடல்திடப் போட்டிகளில் நூறு மீட்டர் ஓட்டத்தில் அப்போதிருந்த உலகச் சாதனையை சமன் செய்தார். அவரது அபாரத் திறனைக் கண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அவரை தங்கள் மாணவராக்கிக் கொள்ள போட்டிப் போட்டனர்.

அப்படி முன்வந்த 28 பல்கலைக்கழகங்களிலிருந்து ஒஹாயோ ஸ்டேட் (Ohio State University) பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார் ஜெசி ஓவன்ஸ். அப்போது அமெரிக்காவில் இன ஒதுக்கல் நடப்பில் இருந்ததால் பல இன்னல்களைச் சந்தித்தார் ஜெசி. அவர் கருப்பர் என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. திடல்திட விளையாட்டுக் குழுக்களோடு பயணம் செய்யும்போது கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட உணவகங்களிலும், ஹோட்டல்களில் மட்டும்தான் அவர் உணவு உண்ண முடியும், தங்க முடியும். அல்லது உண்வை பொட்டலமாக வாங்கி வெளியில் சாப்பிட வேண்டும். தவிர்க்க முடியாத சில சமயங்களில் வெள்ளையர்களின் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் அவர் பின் கதவு வழியாகத்தான் நுழைய அனுமதிக்கப்பட்டார். மேலும் ஹோட்டலுக்குள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. படிகளில் ஏற வேண்டும்.

இப்படி வெள்ளை இன பெரும்பான்மையினரால் எல்லா விதங்களிலும் ஒதுக்கப்பட்ட ஓவன்ஸ் அவரது ஓட்டத்திறமைக்காக மட்டும் விரும்பபட்டார். தனக்கு இழைக்கப்படும் சமூக அநீகளுக்கு தன் கால்களாலேயே பதிலடி தந்தார் ஓவன்ஸ். 1935 ஆம் ஆண்டு மே 25ந்தேதி ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அந்த ஒரே நாளில் அவர் மூன்று உலகச் சாதனையை நிகழ்த்தி நான்காவது சாதனையைச் சமன் செய்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வுளவு தெரியுமா? வெறும் 45 நிமிடங்கள்தான். விளையாட்டு உலகில் அதற்கு முன்னும் அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை, அதற்குப் பிறகும் அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. அந்த அதிசயத்தை நிகழ்த்திய அடுத்த ஆண்டே உலகை வியப்பிலும், ஹிட்லரை வெறுப்பிலும் ஆழ்த்தினார் ஜெசி ஓவன்ஸ். 1936 ஆம் ஆண்டு பெர்லனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் பிரகாசமாக மின்னினார்.



ஹிட்லர் அப்போது ஆட்சியில் இருந்ததால் பலர் ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அதனை வருணித்தனர். ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்போடு அமர்ந்திருந்த ஹிட்லரின் கண்களுக்கு முன்னே ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று உலகச் சாதனைகளோடு நான்கு தங்கப்பதக்கங்களை வென்று குவித்தார் ஜெசி ஓவன்ஸ். உலகின் கண்களுக்கு முன் தனது சித்தாந்தம் சிதைந்து போன வெறுப்பில் ஒலிம்பிக்ஸ் அரங்கத்தை விட்டு ஆத்திரத்தோடு வெளிநடப்புச் செய்தார் ஹிட்லர். ஆனால் ஜெர்மன் விளையாட்டு ரசிகர்களோ ஓவன்ஸை கைதட்டி ஊக்கமூட்டினர். 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஓவன்ஸ்க்கு தங்கம் கிடைத்தது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது.



அப்படிப்பட்ட சாதனையைச் செய்தும் அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த விளம்பர நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதுபோன்ற அநீதிகளால்தான் மார்ட்டின் லூதர் கிங் போன்ற சுதந்திர வீரர்கள் அமெரிக்காவில் உதித்தனர். தனக்கு நன்றாக பேசும் திறன் உண்டு என்பதை உணர்ந்த ஓவன்ஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசவும், விரிவுரை வழங்கவும் தொடங்கினார். அவரது சுபாவம் பலருக்கும் பிடித்திருந்ததால் சொந்தமாக பொது உறவு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மதம், நேர்மை, கடும் உழைப்பு ஆகிய மூன்றை பற்றியும் அவர் பேசினார். வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் இளையர்களுக்காக பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், ஆதரவளித்தும் ஊக்கமூட்டினார்.



1976 ஆம் ஆண்டு ஓவன்ஸ்க்கு 'Presidential Medal of Freedom' எனப்படும் தனி நபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட். பின்னாளில் புற்றுநோய் ஏற்பட்டு 1980 ஆம் ஆண்டு மார்ச் 31ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார் ஜெசி ஓவன்ஸ். தான் காதலித்த ரூத் சாலமன் என்ற பெண்ணை மணந்து கொண்டு Gloria, Beverly, Marlene, என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் ஓவன்ஸ். அவரது மனைவியும் மகள் மார்லினும் இன்றுவரை “ஜெசி ஓவன்ஸ் பவுண்டேஷன்ஸ்” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். தங்கள் இலக்கை அடைய விரும்பும் தகுதி நிறைந்த ஆனால் வசதி குறைந்த இளையர்களுக்கு இன்றும் நிதியுதவி வழங்குகிறது ஜெசி ஓவன்ஸ் அறக்கட்டளை.



வறுமை, நிறவெறி, இன ஒதுக்கல், என பல சமூக அநீதிகளைத்தாண்டி ஓவன்ஸால் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்க முடிந்ததென்றால், நமக்கு தடையாக இருப்பவை எவை? கொத்தடிமையாக வாழ்ந்த ஒருவரின் பேரன் விளையாட்டு உலகில் உச்சத்தைத் தொட்டது அதிர்ஷ்டத்தாலோ, மாய மந்திரத்தாலோ, ஊக்க மருந்துகளாலோ அல்ல. பயிற்சித் தடங்களில் அவர் சிந்திய வியர்வையும், தன் தோலின் நிறம் ஒரு குறையல்ல என்ற நம்பிக்கையும், கடும் உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் உலகம் எப்போதுமே தலைவணங்கும் என்ற தைரியமும்தான் ஜெசி ஓவன்ஸ்க்கு 'ஒலிம்பிக்ஸ்' என்ற வானத்தை வசப்படுத்தியது. ஓவன்ஸைப்போல் வியர்வை சிந்தவும், விடாமுயற்சியோடு உழைக்கவும் தயங்காதோருக்கு எந்த வானமும் தயங்காமல் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தந்தை பெரியார் (தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்) - வரலாற்று நாயகர்!

இந்தியா இன்று பல துறைகளில் முன்னேறி வருகிறது. போதுமான மனித வளமும், அறிவு வளமும் அதற்கு நிறையவே இருக்கிறது. அந்த மனித வளத்தையெல்லாம் சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் பயன்படுத்தினால் நமது இந்தியா உலகுக்கே ஒரு முன்னுதாரண தேசமாக விளங்க முடியும். ஆனால் உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தேசங்களில் ஒன்றான நமது இந்தியாவில்தான் பல தேசங்களில் காண முடியாத ஓர் அநாகரிகமும் வேரூன்றி இருக்கிறது. அதுதான் தீண்டாமை, சாதிப்பிரிவினை என்ற அநாகரிகம் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்துகூட விடுதலை பெற்று விட்டது நமது தேசம். ஆனால் காலங்காலமாக தங்களை மேல்சாதி என்று கூறிக்கொள்பவர்களின் அடக்கு முறையிலிருந்தும், அநாகரிகத்திலிருந்தும் விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றனர் கீழ்சாதி என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்.

மேலை நாடுகளில்கூட தோலின் நிறத்தில் அடிப்படையில்தான் இன ஒதுக்கல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் நமது தேசத்தில்தான் பிறப்பின் அடிப்படையிலும், செய்யும் தொழிலின் அடிப்படையிலும் ஒருவன் மேல்சாதி என்றும், கீழ்சாதி என்றும் தரம் பிரிக்கப்பட்டான் இன்றும் பிரிக்கப்படுகிறான். இந்த அநீதிகளால் கூனிக்குறுகிப் போய் சுய மரியாதையை இழந்து தாங்கள் மனிதர்கள் என்ற உணர்வையும் மறந்துபோன உயிர்கள் எத்தனைக்கோடி இருக்கும்? அந்த எண்ணிக்கையை வரலாறுகூட மறந்துபோயிருக்கும். பாதிக்கப்பட்டோரில் பலர் அது நம் விதி என்று ஒதுங்கி நிற்க, அது விதியல்ல ஆதிக்கவர்க்கத்தின் சதி என்று துணிந்து சொன்னார் ஒருவர். அறியாமையும் மூட நம்பிக்கைகளுமே தீண்டாமைக்கும், சாதிக்கொடுமைகளுக்கும் காரணம் என்று நம்பிய அவர் தாழ்த்தப்பட்டவர்களை தூக்கி நிறுத்த சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பிராமநேயம் போன்றவற்றை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அவர்தான் 'தந்தை பெரியார்' என்று தமிழுலகம் மரியாதையோடு போற்றும் திரு.ஈ.வெ.ராமசாமி.



1879 ஆம் ஆண்டு செம்படம்பர் 17ந்தேதி வெங்கடப்ப நாயக்கர், சின்னத்தாயி அம்மாள் ஆகியோருக்கு மகனாக தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தார் ஈ.வெ.ரா எனப்படும் ஈ.வெ.ராமசாமி. குடும்பம் வசதியானது. இருந்தும் அவர் மூன்று ஆண்டுகள்தான் கல்வி கற்றார். இளம் வயதிலேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தந்தையின் வணிக முயற்சிகளில் உதவத் தொடங்கினார். உயர்சாதி என்று கருதிக் கொண்டவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க, ஈ.வெ.ராவுக்கு மட்டும் சிறு வயதிலேருந்தே சமத்துவம், சமநீதி என்ற எண்ணம் வளரத் தொடங்கியது. சமுதாயப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். 1919 ஆம் ஆண்டு 40 வயதானபோது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட அவர் மளிகை வியாபாரம் உட்பட நல்ல வருமானம் தந்துகொண்டிருந்த அத்தனை தொழில்களையும் விட்டுவிட்டு சமூகப்பணியில் ஈடுபடுவதற்காக இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஈரோடு நகரமன்றத் தலைவர் பதவி உட்பட மொத்தம் 29 பொறுப்புகளிலிருந்தும் ஈ.வெ.ரா விலகினார். காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.



1922 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் கீழ்சாதி, மேல்சாதி என்ற பேதமில்லாமல் எல்லோரும் எல்லா கோவில்களிலும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பிராமணர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டத்தில் பின் வாங்காத ஈ.வே.ரா அடுத்த மூன்று ஆண்டுகளில் வைக்கம் (சாதி எதிர்ப்பு போராட்டம்) சத்தியாகிரகம் மேற்கொண்டார். அதன் வெற்றியால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் அச்சமின்றி பொதுச்சாலைகளைப் பயன்படுத்த முடிந்தது. நவீன இந்தியாவின் வரலாற்றில் அதுவே முதல் சமூகப் போராட்டமாக வருணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமையை ஒழிக்க எவ்வுளவோ முயன்றார் ஈ.வெ.ரா சமத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறை அறிமுகமாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு காந்தியடிகள் மறுப்புத் தெரிவிக்கவே 1925 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகினார் ஈ.வெ.ரா அதே ஆண்டு அவருக்கு மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தூக்கி எரியுமாறு தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்தார். பூசாரிகள் இல்லாமல் சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சாதி வேற்றுமை பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளவும், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளவும் ஊக்கமூட்டினார். கோவில்களில் பின்பற்றப்பட்ட தேவதாசிகள் முறையை ஒழிக்க சட்டப்பூர்வமாக ஆதரவு திரட்டினார். குழந்தைகள் திருமணத்தை வன்மையாகக் கண்டித்தார். அவருடைய தொடர்ந்த விடாப்பிடியான முயற்சியால் 1928 ஆம் ஆண்டு அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறையை சென்னை நிர்வாகம் அறிமுகம் செய்தது.

1937 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்கினார் அதனை வன்மையாக எதிர்த்த ஈ.வெ.ராவின் உறுதியான தலமையில் 1938 ஆம் ஆண்டு பெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது அதனால் சிறையில் அடைக்கப்பட்டார் ஈ.வெ.ரா. அவர் சிறையில் இருந்தபோது சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ.ராவை இனிமேல் 'பெரியார்' என அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றிலிருந்துதான் ஈ.வெ.ராவுக்கு பெரியார் என்ற பெயர் நிலைத்தது. சிறையிலிருந்து வந்ததும் சுதந்திர திராவிட நாடு வேண்டும் என்ற போராட்டத்தில் இறங்கினார் பெரியார். அதே நேரம் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்தது இறுதியில் 1940 ஆம் ஆண்டு ஜனவரி 21ந்தேதி கட்டாய இந்தி மொழிக்கல்வியை மீட்டுக்கொண்டது சென்னை நிர்வாகம். பெரியாரின் தொடர் போராட்டத்திற்கு இன்னொரு வெற்றி கிடைத்தது 1941 ஆம் ஆண்டில் இரயில்வே நிலையங்களில் இருந்த உணவகங்களில் பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் தனித்தனியாக உணவு பறிமாறப்படும் அருவெறுப்பான பழக்கம் அந்த ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டது.



1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பெயரை 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார் பெரியார். கழக உறுப்பினர்கள் தங்கள் பெயரிகளிலிருந்து குலப்பெயர்களையும், சாதிப்பெயர்களையும் நீக்கிவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 1948 ஆம் ஆண்டு தமது 70 ஆவது வயதில் 30 வயதான மணியம்மையை மணந்து கொண்டார் பெரியார். அதனைக் காரணம் காட்டித்தான் சிலர் திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்து அறிஞர் அண்ணாவின் தலமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர். 1952 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்த ராஜாஜி ஒரு விசித்திரமான திட்டத்தை அறிவித்தார். பள்ளி சிறுவர்கள் காலை நேரங்களில் பள்ளிப் பாடங்களையும், மதிய நேரங்களில் அவர் அவரது பெற்றோர் செய்து வந்த தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திட்டம். குலக்கல்வி திட்டம் என்று அழைக்கப்பட்ட அது தீண்டாமையைத் தொடரச் செய்யும் ஒரு சூசகமான திட்டம் என்று கொதித்தெழுந்த பெரியார் அதனை மீட்டுக்கொள்ளுமாறு முழங்கினார். அதன் விளைவாக 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ராஜாஜிக்கு ஏற்பட்டது.

அடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்த காமராஜர் உடனடியாக குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தினார். முதிர்ந்த வயதிலும் சமத்துவத்துக்கும், சமநீதிக்குமுமான போராட்டத்தை நிறுத்தவில்லை தந்தை பெரியார். அதன் பலனாக 1971 ஆம் ஆண்டு ஜனவரி 12ந்தேதி சாதி, குலம் என்ற அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். பின்னர் 1973 ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். கோவில்களில் உள்ள கர்ப்ப கிரகத்துக்குள் எந்த சாதியைச் சேர்ந்த ஒருவரும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அந்த போராட்டத்தின் நோக்கம். இதுபோன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டுமென்று தன் கடைசி மூச்சுவரை போராடி சுய மரியாதை உணர்வை விதைத்து தீண்டாமையை ஒழித்து சாதிக்கொடுமைகளை புறமுதுகிட்டோடச் செய்த தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி தமது 94 ஆவது வயதில் காலமானார். அவரது வீரியமான பேச்சுக்களிலிருந்து இதோ ஒருசில வரிகள்...



"மூடநம்பிக்கைகளை பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது"

"சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியாமையாதது, ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்துகொண்டபடியே சொல்லுவது ஆகும். பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்"

தந்தை பெரியாருக்கு 1970 ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு விருது வழங்கிச் சிறப்பித்தது. அந்த விருதில் பொறிக்கப்பட்ட வாசகம் இது...

புதிய யுகத்திற்கான தூதுவர், தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ், சமுதாயச் சீர்திருத்தத்தின் தந்தை, அறியாமை மூடபழக்கங்கள் ஆகியவற்றின் எதிரி...

இந்த அத்தனை வருணனைக்கும் பொருத்தமானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைப்போல் தனக்குச் சரியென்று பட்டதை தயங்காமல் சொல்லும் அஞ்சாமையும், எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்கும் பண்பும், சமத்துவம் ஓங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மூடபழக்கவழக்கங்களை தூக்கி எறியும் திணவும் தைரியமும் உள்ள எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை உலகின் பிதாமகன் மாமேதை பீத்தோவன் - வரலாற்று நாயகர்!

வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்!
தரவிறக்க

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வரலாற்றில் தனது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது ஆஸ்திரியா. தங்கள் தேசத்தை சேர்ந்த பலர் உலகப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்பதையும், அவர்களின் உடல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த ஆஸ்திரியர்கள் அவர்கள் எல்லோரையும் வியன்னாவின் மையப்புற இடுகாட்டில் மறு அடக்கம் செய்ய விரும்பினர். 'grave of honor' என்ற ஒரு பகுதியை ஒதுக்கி வியன்னாவின் புகழை உலகெல்லாம் பரவச்செய்த வரலாற்று நாயகர்களின் மிச்சங்களை அங்கு மறு அடக்கம் செய்தனர்.

ஆண்டுதோறும் வியன்னாவுக்கு செல்லும் பல்லாயிரக் கணக்கானோர் 'grave of honor' என்ற அந்த சமாதிக்கு செல்ல தவறியதில்லை. ஒரு குறிப்பிட்ட கல்லறைக்கு முன் நின்று மரியாதை செலுத்தாமல் போவதில்லை. அந்தக் கல்லறையிலும் வரலாற்று ஏடுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் பீத்தோவன். இசைமேதை மோட்ஸார்ட் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவருடைய பாராட்டையும் பெற்று தனது இசையால் உலகையே வசீகரித்த உன்னத இசைக் கலைஞன் பீத்தோவன்.



1770 ஆம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி ஜெர்மனியின் பான் நகரில் பிறந்தார் லுட்விக் வான் பீத்தோவன். அவரது தாத்தாவும், தந்தையும் இசைக் கலைஞர்கள் தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்றாலும் பீத்தோவனின் இசைத் திறமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து ஊக்கமூட்டினார். ஜெர்மனியில் சிறு வயதிலேயே 'நீஃப்' என்ற இசைக் கலைஞரிடம் பியானோ இசைக்கக் கற்றுக் கொண்டார் பீத்தோவன். பனிரெண்டு வயதிலேயே அவர் இசைக்கூறுகளை வடிக்கத் தொடங்கினார்.



அவரது இசைத் திறமை அனைவருக்கும் தெரியவர பதினேழாவது இசைக் கச்சேரி நிகழ்த்த வியன்னா சென்றார். அங்கு பதினான்கு வயது மூத்தவரான மோட்ஸார்ட்டுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நிகழ்த்தி மொஸார்ட்டின் பாராட்டையும் பெற்றார். அப்போது முதல் மோட்ஸார்ட்டும், பீத்தோவனும் இணைந்து பணியாற்றியிருக்கக்கூடும் ஆனால் தாயாருக்கு நோய்வாய்ப் படவே பான் நகர் திரும்பினார் பீத்தோவன். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர் மீண்டும் வியன்னாவுக்கு வர முடிந்தது. அதற்குள் மோட்ஸார்ட் இயற்கை எய்தியிருந்தார்.



அந்த இரு இசை மேதைகளையும் ஒன்றாக இணைந்து பணியாற்ற இயற்கை அனுமதித்திருந்தால் இன்னும் பல இசை அதிசயங்களை உலகம் சந்தித்திருக்கக்கூடும். ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் ஆஸ்திரியர்கள் நல்ல புரவலர்களாக இருந்ததால் வியன்னாவில் குடியேறினார் பீத்தோவன். செல்வந்தர்கள் அவரை தத்தெடுத்துக் கொள்ள போட்டி போட்டனர். அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தந்தையிடம் இருந்த குடிப்பழக்கம் அவரிடம் இல்லாவிட்டாலும் வேறு சில கெட்ட குணங்கள் இருந்தன. நேரம் தவறாமையை அவர் கடைப்பிடித்ததில்லை, எளிதில் ஆத்திரமடைவார் எரிச்சலடைவார், பார்ப்பதற்கு தூய்மையாகவும் இருக்க மாட்டார். ஆனால் பியானோவில் அவர் நிகழ்த்திய அதிசயங்களால் அந்தப் பிழைகள் பெரிதாகப் படவில்லை.



பீத்தோவனை உலகம் வியந்து போற்ற ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆரம்பத்தில் எந்த குறைபாடும் இல்லாத அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் குறைந்து கொண்டே போய் பின்னர் முற்றிலுமாக காது கேளாமல் போனது. தன் குறைபாட்டை நினைத்து மிகவும் நொந்துபோன பீத்தோவன் தற்கொலைக்குகூட முயன்றிருக்கிறார் என்பது வரலாற்று உண்மை. கண் தெரியாத ஒருவர் அழகான ஓவியம் தீட்ட முடியும் என்பதை எப்படி நம் மூளையால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல்தான் காது கேளாத ஒருவரால் அற்புத இசையை பிரசவிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசைக்குத் தேவையான புலனே செவிகள்தானே! ஆனால் அதைத்தான் செய்து காட்டினார் அந்த அதிசய மனிதன். ஆம் முழுமையான நிசப்த உலகில் வாழ்ந்து கொண்டே பல அமர படைப்புகளை உருவாக்கினார் பீத்தோவன். பீத்தோவனின் பெயர் சொல்லும் இசைப் படைப்புகள் யாவுமே அவர் கேட்கும் சக்தியை இழந்த பிறகு உருவானவை என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மெய்ப்பிக்கின்றன.



தான் கேட்டு ரசிக்க முடியாத நிலையில் அவரால் எப்படி மகிழ்ச்சி, காதல், சோகம், வேதனை, விரக்தி, வீரியம், அச்சம், பக்தி, ஹாஸ்யம், எழுச்சி, என பல்வேறு பரிமாணங்களை தன் இசையில் வெளிக்கொணர முடிந்தது என்பதுதான் வரலாற்றுக்குகூட புரியாத புதிராக இருக்கிறது. உலகையே தனது இசையை காதலிக்கச் செய்த அவர் தன் வாழ்நாளில் சில பெண்களை காதலித்தார். ஆனால் ஒரு காதல்கூட கைகூடவில்லை. கடைசி வரை அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது சோர்ந்து போயிருந்த ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்ட உலகப் புகழ்பெற்ற BBC எனப்படும் பிரிட்டிஷ் ஒளிப்பரப்புக் கழகம் என்ன செய்தது தெரியுமா? பீத்தோவனின் எழுச்சியூட்டும் 5th சிம்பொனி எனப்படும் இசைக்கூறின் ஒரு பகுதியை தனது செய்திகளுக்கும், அறிவுப்புகளுக்கும் முன் ஒளிப்பரப்பியது.

(பீத்தோவன் - 5th சிம்பொனி)
<a href="http://www.youtube.com/v/_4IRMYuE1hI&amp;wide=1&amp;feature=player_embedded" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/_4IRMYuE1hI&amp;wide=1&amp;feature=player_embedded</a>

இந்த இசையை கேட்ட போதெல்லாம் நலிந்திருந்த தேசமே புத்துயிர் பெற்றனர் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். காது கேளாமல் போனதிலிருந்து மேலும் 25 ஆண்டுகள் வாழ்ந்து 1827 ஆம் ஆண்டு மார்ச் 26ந்தேதி தனது 56 ஆவது வயதில் காலமானார் பீத்தோவன். தன் உடற்குறை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இசை உலகம் தோற்று போயிருக்கும் வரலாறும் அவரை மறந்து போயிருக்கும். ஆனால் அவர் மறைந்தபோது பத்தாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். வீட்டிலிருந்து தேவாலயம் சுமார் ஆயிரம் அடி தொலைவில்தான் இருந்தாலும் கூட்ட நெரிசலால் அவரது இறுதிப் பயணம் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாம்.



காது கேளாமல் போனபோது தன்னம்பிக்கையின் அடி மட்டத்தைத் தொட்டாலும் ஒரு கால் நூற்றாண்டு உதாரண வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் பீத்தோவன். இயற்கை வரம் தர மறுத்தாலும் திறமையான கரமே அவருக்கு வரமாக பட்டது அதன் மூலம் அவர் விரும்பிய வானமும் வசப்பட்டது. நாமும் நம்மிடம் உள்ள குறைகளை எண்ணி துவண்டு கிடக்காமல் திறமைகளைத் தேடி புடம் போட்டுக்கொண்டால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் அதிர்ஷ்டசாலி எனக்குதான் அதிர்ஷ்டம் இல்லை என்று எத்தனையோ பேர் புலம்ப கேள்விப்பட்டிருப்போம். நாம் சந்திக்கவிருக்கும் வரலாற்று நாயகர் அதிர்ஷ்டத்தை இவ்வாறு விளக்குகிறார். "Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get" அதாவது அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி. எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். உழைப்பும் அதற்காக சிந்தப்படும் வியர்வையும்தான் நம் உயர்வை நிர்ணயிக்கிறது என்ற உண்மையை அழகாகச் சொன்னதோடு அதனை வாழ்ந்தும் காட்டிய ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.



பலர் வேலை ஓய்வைப்பற்றி சிந்திக்கும் 52 வயதில் ஒரு தொழிலை தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துச் சேர்த்தவர் அவர். அவரது பெயரைச் சொன்னால் பெரும்பாலோருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவர் தொடங்கிய தொழிலின் அல்லது நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் மூன்று வயது குழந்தைகூட குதூகலிக்கும். ஆம் ஹம்பர்கர், ப்ரெஞ்ச்ப்ரைஸ், மில்க்‌ஷேக்ஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெயர் மெக்டொனால்ட்ஸாகத்தான் இருக்கும். 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று 120 நாடுகளில் முப்பதாயிரம் உணவகங்களாக விரிவடைந்திருக்கிறது. பில்லியன் கணக்கானோரின் உண்ணும் பழக்கத்தையே மாற்றி அமைத்த அந்த உணவகப் புரட்சி எப்படி சாத்தியமாயிற்று? வாருங்கள் 'M' என்ற தங்க வளைவுகளை உலகுக்குத் தந்த திரு. ரே க்ராக்கின் வாழ்க்கையை அலசிப் பார்ப்போம்.



ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் 1902 ஆம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி சிக்காக்கோவில் பிறந்தார். கல்வியில் அதிக நாட்டமில்லாத அவர் உயர்நிலைக் கல்வியை முறையாக முடிக்காமலேயே வெளியேறினார். பொருள் ஈட்ட வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப்போர் சமயத்தில் அவர் தொண்டூழிய அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக சிலகாலம் பணிபுரிந்தார். சிறிதுகாலம் ஓர் இசைக்குழுவில் இசைக் கலைஞராக இருந்தார். பொருட்களை விற்பனை செய்வதில் அவருக்கு தனி ஆர்வம் இருந்தது. எனவே விற்பனை முகவராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் லில்லி சூலிட் கப் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக காகித கப் மற்றும் தட்டுகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் மில்க்‌ஷேக் தயாரிக்கும் இயந்திரங்களை விற்கத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மில்க்‌ஷேக் இயந்திரங்களை விற்றார். கிட்டதட்ட 30 ஆண்டுகள் விற்பனைத் துறையில் இருந்த பிறகுதான் உணவகம் திறக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.

கலிஃபோர்னியாவில்  San Bernardino என்ற பகுதியில் "Dick" McDonald , "Mac" McDonald என்ற இரண்டு சகோதரர்கள் ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர். 1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்‌ஷேக் இயந்திரங்களை ரே க்ராக்கிடமிருந்து வாங்கினர். ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ராக் அந்த சகோதரர்களின் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார். மக்கள் வரிசைப் பிடித்து உணவு வாங்கிச் செல்வதைக் கண்டார். தேவையை சமாளிக்கத்தான் அந்த சகோதரர்களுக்கு அத்தனை இயந்திரங்கள் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தார். அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த பாங்கும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

15 காசுக்கு ஒரு பர்கர், 10 காசுக்கு (அமெரிக்க டாலர்) ஒரு மெதுபானம் இப்படி என அவற்றை விரைவாக வாங்கிச் செல்வது மக்களுக்கு பிடித்திருந்ததையும் அவர் கவனித்தார். அம்மாதிரியான உணவகங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பதை அந்தக்கணமே கண்டுகொண்டார் ரே க்ராக். உடனே அந்த சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை 'franchised' எனப்படும் நிறுவன உரிமம் முறையில் நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார். அந்த சகோதரர்களும் இணங்கவே அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் Des Plaines என்ற பகுதியில் திறந்தார். நிறுவன உரிமத் தொகையிலிருந்து முகவருக்கான தொகை மட்டும்தான் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த உணவகத்தின் வருமானம் அவர் பெற்ற தொகையை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை  'franchised' அடிப்படையில் திறப்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார்.



ஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ராக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பெற்றார் ரே க்ராக். ஆனால் தங்கள் முதல் San Bernardino உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். ரே க்ராக் என்ன செய்தார் தெரியுமா? அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தொடங்கினார் அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. தரம், தூய்மை, விரைவான சேவை, நியாயமான விலை இவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. முதல் உணவகம் திறக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன. பத்தே ஆண்டுகளில் ரே க்ராக்கின் மெக்டொனால்ட்ஸ் உணவகம் பங்குசந்தையில் இடம் பிடித்தது.

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை முதலாளித்துவத்தின் சின்னம் என்று ஒதுக்கிய சோவியத் மண்ணிலும் 1990 ஆம் ஆண்டில் அது கால் பதித்தது. உலகின் ஆக சுறுசுறுப்பான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ரஷ்யாவில்தான் இயங்குகிறது. உலகின் ஆகப்பெரிய மெக்டொனால்ட்ஸ் உணவகம் 1992 ல் சீனாவில் திறக்கப்பட்டது. இன்று உலகின் எந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு நீங்கள் சென்றாலும் உணவின் சுவை கிட்டதட்ட ஒன்றாகவே இருக்கும். அதற்கு காரணம் உணவு தயாரிக்கும் முறையும் அளவுகளும் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப் பட்டிருப்பதுதான். மெக்டொனால்ட்ஸின் இமாயல வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் அதோடு காலத்துக்கேற்பவும் அது மாறி வந்திருக்கிறது. உதாரணத்திற்கு அந்த உணவகங்களில் வேலை செய்ய ஆரம்பத்தில் பதின்ம வயதினரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1980 களுக்கு பிறகு பெரியவர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும், காலை உணவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.



1977 ஆம் ஆண்டு 'Grinding It Out' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் ரே க்ராக். அதில் அவரது முதல் வரிகள் இவை "I have always believed that each man makes his own happiness and is responsible for his own problems." அதாவது ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியைத் தானே உருவாக்கிக்கொள்கிறான் அதேபோல் அவனது பிரச்சினைகளுக்கும் அவனே பொறுப்பு. மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகப் புரட்சியின் மூலம் தனது மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு 'ஹம்பர்கர் கிங்' என்று பெயரெடுத்த ரே க்ராக் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 14 ந்தேதி தனது 82 ஆவது வயதில் கலிஃபோர்னியாவில் காலமானார்.

இனி சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்...

Xerox - நிறுவனம் ஒரு பில்லியன் டாலரை சம்பாதிக்க அதற்கு 63 ஆண்டுகள் பிடித்தன. அதே தொகையை சம்பாதிக்க IBM - கணினி நிறுவனத்திற்கு 46 ஆண்டுகள் ஆயின. ஆனால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒரு பில்லியன் டாலரை 22 ஆண்டுகளில் ஈட்டியது. தரத்திற்கும், தூய்மைக்கும், சுவைக்கும், விரைவான சேவைக்கும், நியாயமான விலைக்கும் உலகம் தந்த பரிசு அது.

அப்படிப்பட்ட வருமானத்தைக் குவித்த ரே க்ராக் கூறிய இன்னொரு பொன்மொழி என்ன தெரியுமா? "If you work just for money, you'll never make it, but if you love what you're doing and you always put the customer first, success will be yours" பணத்திற்காக நீங்கள் வேலை செய்தால் உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது, ஆனால் எதையும் ஆழமான விருப்பத்தோடு செய்து வாடிக்கையாளர்களை முதன்மையாகக் கொண்டால் வெற்றி உங்களுடையது. எவ்வுளவு உண்மை இன்று உலகம் முழுவது 30 ஆயிரம் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் அன்றாடம் 46 பில்லியன் பேர் உணவுண்டு மகிழ்கின்றனர்.



அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டத்துக்கு வரும் ஒன்றல்ல. வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஒன்று என்பதை வாழ்ந்து காட்டியவர் ரே க்ராக். வாய்ப்புகளை கண்டுகொள்ளும் திறமையும், தரம், தூய்மை, விரைவான சேவை, ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதும், உழைப்புதான் உயர்வைத் தரும் என்ற நம்பிக்கையும், கனவுகளை நனவாக்கிக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்ற தைரியமும்தான் ரே க்ராக் என்ற ஹம்பர்கர் மன்னனுக்கு விரைவு உணவகம் என்ற வானத்தை வசப்படுத்தின. இதே பண்புகளோடும் விடா முயற்சியோடும் செயல்பட்டால் நாமும்கூட நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதில் சந்தேகம் ஏதும் உங்களுக்கு உண்டா?!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை) - வரலாற்று நாயகர்!

வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்!
தரவிறக்க

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.



1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இங்கிலாந்தில் ஒரு கருங்கொல்லருக்கும், இல்லப் பணிபெண்ணுக்கும் மகனாக பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்கூட சிரமம். ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியை பதினான்கு துண்டுகளாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார் மைக்கேல். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்கள் வாசிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த பிரியம் இருந்தது. லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார் மைக்கேல். ஆனால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்ட ஆரம்பித்தனர். ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேல் இரக்கப்பட்டு தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி தந்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையை தெரிந்துகொண்டு ஒரு வேலையையும் தந்தார். வாரம் மூன்று சிலிங்குகள் சம்பளம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

லண்டன் முழுவதும் புத்தகங்களை கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை.  அதில் மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் விஞ்ஞானம் சம்பந்தபட்டவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல விசயங்கள் அவருக்கு புரியாது. நம்மில் பலருக்கு புரியாத விசயங்கள் என்று வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்த பிறகு அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் விஞ்ஞானியாக உயர்த்தியது.



லண்டனில் அந்தக்கால கட்டத்தில் விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் அதற்கு கட்டணம் உண்டு. அந்த விரிவுரைகளை கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் விரிவுரைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த விரிவுரைதான் மைக்கேலின் வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த விரிவுரையை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள் கழித்து அதனைப் பெற்ற ஹம்ப்ரி டேவி மலைத்துப்போனார். தனது விரிவுரை அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ட்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.



முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரை சக விஞ்ஞானி அளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். 30 ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். எந்த நேரமும் எதாவது ஆராய்ட்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் மைக்கேல் அதற்கு சராவும் உதவி புரிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆராய்ட்ச்சிகளை இங்கிலாந்து மெச்சத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்த இரண்டு கண்டுபிடிப்புகள் நிகழாதிருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் சந்தித்திருக்க முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்போது புரிகிறதா அந்தக் கண்டுபிடிப்பின் மகிமை.



பணம் சேர்த்து வைப்பதை பாவமாக கருதிய 'சேண்டிமேனியன்' என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மைக்கேல் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனுக்குலச் சேவைக்காகவே அன்றி தான் செல்வந்தன் ஆவதற்கு அல்ல என்ற மனப்பான்மை அவருடையது. தன் சிரமமான பிள்ளைப்பருவத்தை மறக்காத மைக்கேல் தன்னைப்போன்ற ஏழைச்சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் 'கிறிஸ்துமஸ் விரிவுரைகள்' என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது ஃபாரடே விரிவுரைகள் என்று இன்றும் ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரம் மாணவர்கள் அந்த விரிவுரையால் பலன் அடைகிறார்கள். மின்சாரப் பயன்பாட்டில் புரட்சியைக்கொண்டு வந்த அந்த மகத்தான விஞ்ஞானியைத் தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன் என்றுகூறி இரண்டையுமே மறுத்துவிட்டார் அந்த அதிசய விஞ்ஞானி.



இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப்போலவே அவரது நல்லுடலும் 'Westminster Abbey' யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. "ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று கேட்கப்பட்டது" அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே. ஒரு மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கை நமக்குக்கூறும் உண்மை மிக மிக எளிதானது. உலகைக்கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நிறைய கேள்வி கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டித்துண்டுதான் என்றாலும் நம்பிக்கையோடு போராட வேண்டும். மைக்கேலைப் போலவே வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடும் எவருக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கு வசப்பட்ட அதே வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அணுவைத் துளைத்த விஞ்ஞானியின் கதை - ('சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு') வரலாற்று நாயகர்!
 
'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று திருக்குறளைப் புகழ்ந்துப் பாடினார் ஒளவையார். திருக்குறள் எவ்வுளவு சிறிய வடிவில் எவ்வுளவு பெரிய விசயங்களைச் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த ஆகச் சிறியப் பொருள் அணுதான். அந்த அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகுத்துவதென்றால் முடியக்கூடியக் காரியமா? ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய ஒளவையாரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே ஆகச்சிறியப் பொருளான அணுவைத் துளைக்க முடியாதா? என்று அவர் சிந்தித்திருக்கிறார் அப்போது வேர்விட்ட அந்த சிந்தனை பல காலத்திற்குப் பிறகு உண்மை என்று நிரூபிக்கப்பட்டது அறிவியல் உலகில். ஆம் அணுவையும் துளைக்க முடியும் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி.



அந்தச் சாதனையின் மூலம் உலகம் பல நன்மைகளையும் கண்டிருக்கிறது, சில தீமைகளையும் கண்டிருக்கிறது. நன்மைகளை மட்டுமே நாம் அளவுகோலாகக் கொண்டுப் பார்த்தால் எந்தக் கண்டுபிடிப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். அணுவைப் பிளக்கும் கண்டுபிடிப்பு அணுகுண்டு உற்பத்திக்குத் துணையாக இருந்தது என்ற ஒன்றை ஒதுக்கி விட்டு நாம் அந்த கண்டுப் பிடிப்பாளரின் கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு'.



1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 30ந்தேதி நியூசிலாந்தின் நெல்சன் எனும் இடத்தில் பிறந்தார் ரூதர்ஃபோர்டு. பனிரெண்டு பிள்ளைகளில் நான்காமவர். அவரது குடும்பம் ஓர் எளிய விவசாய குடும்பம். குடும்பப் பண்ணையில் பெற்றோருக்கு உதவியாக இருந்த அவர் கல்வியில் சிறந்து விளங்கினார் சிறிய வயதிலேயே அவர் கடும் உழைப்பாளியாக இருந்தார். உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. விளையாட்டுக்களில் கூட ரூதர்ஃபோர்டின் புத்திக்கூர்மை பளிச்சிட்டது. அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். பீரங்கிகள் கம்பீரமாக முழங்குவதைப் பார்த்திருந்த அவர் அதே மாதிரி சத்தம் எழுப்பக் கூடிய ஆனால் அழிவை ஏற்படுத்தாத ஒரு பொம்மை பீரங்கியைச் செய்ய விரும்பினார்.


சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வெடி மருந்தையும் பயன்படுத்தி பொம்மைப் பீரங்கியைச் செய்தார் அதனை இயக்கி விட்டு ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டார். பெரும் சத்தத்துடன் விளையாட்டுப் பீரங்கி வெடித்து ஓய்ந்தது. மகிழ்ந்து போன ரூதர்ஃபோர்டு அதோடு நின்று விடவில்லை அந்த பீரங்கியின் வேகத்தையும் அது எழுப்பும் சத்தத்தையும் மேலும் எப்படி அதிகரிக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். இப்படி ஓயாமல் சிந்திக்கும் அவரது பண்புதான் பிற்காலத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்ய அவருக்கு உறுதுணையாக இருந்தது.



கல்வியில் சிறந்து விளங்கிய ரூதர்ஃபோர்டுக்கு நெல்சன் கல்லூரி உபகாரச்சம்பளம் வழங்கியது. பின்னொரு அந்த உபகாரச் சம்பளத்தைப் பற்றி குறிப்பிட்ட ரூதர்ஃபோர்டு அது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஒரு விவசாயியாக போயிருக்கக்கூடும் என்று கூறினார். கல்லூரி முடிந்து நியூசிலாந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்த அவர் தனது 22 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழக நாட்களில் மின் காந்த அலைகளின் சோதனையில் முகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார். அந்தத் துறையில் தொடர்ந்து ஆராய்ட்சி செய்ய அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது இங்கிலாந்தின் கேம்ஃபிரிட்ஜ் பல்கலைக்கழகம். 24 வயதில் கேம்ஃபிரிட்ஜ் வந்து சேர்ந்த ரூதர்ஃபோர்டு மின்காந்த அலைகள், மின் கதிர்வீச்சு ஆகியவற்றில் ஆராய்ட்சிகள் செய்தார். கெவெண்டிஷ் ஆராய்ட்சிக் கூடத்தில் அவர் யுரேனியம் என்ற தனிமத்தைக் கொண்டும் ஆராய்ட்சிகள் செய்தார். யுரேனியம் வெளியிடும் கதிர்வீச்சை அளக்க ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அந்தக் கதிர்வீச்சுகளுக்கு ஆல்பா, பீட்டா, காமா என்று பெயரிட்டார். 



ரூதர்ஃபோர்டின் ஆராய்ட்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த கனடாவின் Montreal பலகலைக்கழகம் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றும்படி அவருக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று 27 ஆவது வயதில் அங்கு சென்ற ரூதர்ஃபோர்டு தனது ஆராய்ட்சிகளைத் தொடர்ந்ததோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்து திரும்பிய ரூதர்ஃபோர்டு இந்த முறை Manchester பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்தார். யுரேனியம் வெளியிடும் அணுக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததற்காக ரூதர்ஃபோர்டுக்கு 1908 ஆம் ஆண்டுக்கான இராசயனத்துறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு வழங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் மிக முக்கியமான இன்னொரு கண்டுபிடிப்பைச் செய்தார் ரூதர்ஃபோர்டு. அணு என்பது ஒரு திடப்பொருளல்ல எப்படி சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ அதேபோல் அணுவுக்குள் நியூக்ளியர் என்ற நடுநாயகத்தை எலக்ட்ரான்ஸ் என்பவை சுற்றி வருகின்றன என்பதுதான் அந்த உண்மை.



அணுவின் தன்மைப் பற்றி அதுவரை அறியப்படாத உண்மை அது. முதல் உலகப்போரின்போது நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கருவி ஒன்றை உருவாக்கித் தந்தார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரூதர்ஃபோர்டுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது இங்கிலாந்து அரசு. ரூதர்ஃபோர்டுக்கு அழியாப் புகழ் கிடைத்த ஆண்டு 1919 இந்த ஆண்டில்தான் அவர் அதுவரை முடியாது என நம்ப பட்டதை செய்து காட்டினார் ஆம் அணுவை பிளந்து காட்டினார். யுரேனியத்தில் ஆல்பா துகள்களை செலுத்தினால் எதிர் விளைவுகள் சங்கிலித் தொடர்போல் ஏற்படும் என்பதை விளக்கிக் காட்டினார். அந்த உண்மைதான் பிற்காலத்தில் அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது. ஆனால் அவரது ஆராய்ட்ச்சிகளின் நோக்கம் அழிவுக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்வதல்ல. அணுசக்தியால் மனுகுலத்திற்கு நன்மைகள் ஏற்படும் என்று அவர் நம்பினார். அதே நோக்கத்துடன் கடைசி வரை உழைத்த ரூதர்ஃபோர்டு 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார். அவரது அஸ்தி  Westminster Abbey யில் நியூட்டன் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

நல்லவேளையாக ரூதர்ஃபோர்டு வாழ்ந்த காலம்வரை அணுகுண்டுகளோ, ஹைட்ரஜன் குண்டுகளோ உற்பத்தி செய்யப்படவில்லை. இல்லையெனில் எளிமையையே விரும்பிய அந்த விஞ்ஞானி மனம் நொந்து போயிருப்பார். இன்று அணுசக்தியால் உலகம் பல நன்மைகளை அனுபவித்து வருகிறது. மின் உற்பத்தி மற்றும் நெடுந்தூர கடல் பயணம் போன்றவற்றிற்கெல்லாம் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இன்னும் பல ஆக்க சக்திகளுக்கு அணுசக்தியை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டே வருகின்றனர். அந்த நன்மைக்கெல்லாம் உலகம் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. தன் வாழ்நாளில் பல பட்டங்களையும், விருதுகளையும் வாங்கிக் குவித்தார் ரூதர்ஃபோர்டு. அவரை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடன், ரஷ்யா, கனடா, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் ரூதர்ஃபோர்டின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டிருக்கின்றன.



இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்த ரூதர்ஃபோர்டுக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான். அப்படி விடாமுயற்சியோடு செயல்பட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதால்தான் அவர் மறைந்த பிறகும் அவரது பெயரை வரலாறு பெருமையுடன் நினைவில் வைத்திருக்கிறது. ரூதர்ஃபோர்டைப் போலவே நாமும் இந்த இரண்டு பண்புகளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடினால் நிச்சயமாக வரலாறும் இடம் தரும் அதன் மூலம் நாம் விரும்பும் வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஸ்காட் ஹமில்டன் (figure skating championship) - வரலாற்று நாயகர்!
 
நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்துவிட்டு மறைகிறோமா? அல்லது பாரமாக பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்கிறோமா? என்பதைப் பொருத்துதான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கிறது. நம்மில் பெரும்பாலோர் வரையறுக்கப்பட்டப் பாதைகளில் செல்லும் வழிப்போக்கர்களாக மட்டும் இருப்பதால் மக்கள் தொகையில் ஒரு புள்ளி விபரமாகவே இருந்துவிட்டு மறைகிறோம். ஒருசிலர்தான் தங்களுக்கு முன் இருக்கும் முட்புதர்களைக் களைந்து புதியப் பாதைகளை அமைத்து புதிய பயணங்களை மேற்கொள்ளும் போதுதான் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற உண்மையை உலகம் உணருகிறது. அந்த உண்மை விளையாட்டுத் துறைக்கு அதிகமாகவே பொருந்தும்.

குறையில்லாமல் பிறந்து விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்கள் மின்சாரம் பாய்ந்ததும் ஒளிரும் மின்விளக்குப் போன்றவர்கள். கடும் உழைப்பு என்ற மின்சாரம் பாயும்வரை அவர்கள் ஒளிர்வது உறுதி. ஆனால் குறையோடு பிறந்தும் விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்கள் திரிவிளக்கு போன்றவர்கள் தொடர்ந்து எண்ணெய் வார்த்து திரியை மாற்றினாலும் பலத்த காற்று வீசினால் அவர்கள் அணைந்து போகும் அபாயம் உண்டு. அப்படிபார்த்தால் மின்விளக்கு தரும் ஒளியைவிட திரிவிளக்கு தரும் ஒளி அதிக மகிமை வாய்ந்தது அழகு வாய்ந்தது. நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் விளையாட்டு வீரர் திரிவிளக்குப் போன்றவர். உடற்கூறை புற்றுநோய் என்ற பலத்த காற்று வீசியபோதும் பிரகாசமாக ஒளிரும் ஓர் உன்னத வீரர். உலக வீரர் பட்டத்தை நான்குமுறை வென்ற அதிசய வீரர். ஆம் அவர்தான் ஸ்காட் ஹமில்டன்.



1958 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 28ந்தேதி அமெரிக்காவில் பிறந்தார் ஸ்காட் ஹமில்டன். அவர் பிறந்து ஆறே வாரங்களில் எர்னஸ்ட் ஹமில்டன், டார்த்தி ஹலில்டன் என்ற தம்பதியினர் தத்தெடுத்துக் கொண்டனர். இரண்டு வயதானபோது ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்காட். அந்த நோய் உடல் வளர்ச்சியைத் தடுக்கும் ஓர் நோய். அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவமனைதான் ஹமில்டனின் இரண்டாவது இல்லமாக இருந்தது. என்னனமோ மருந்துகளை பரிந்துரைத்தனர் மருத்துவர்கள். ஹமில்டனுக்கு இருப்பது சிஸ்டிக் பைப்ராஸிஸ் என்று தவறுதலாக கணித்த மருத்துவர்கள் ஹமில்டன் இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிர் வாழ்வார் என்றும் கெடு கொடுத்தனர். பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன்தான் அது உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோய் என்பது தெரிந்தது. சிறப்பான உணவுத்திட்டம் மற்றும் உடற்பயிற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம்பெற தொடங்கினார் ஸ்காட்.

ஹமில்டனின் சகோதரி சூசன் பனிச்சறுக்குப் போட்டியில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை அவர் அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த ஹமில்டனுக்கு தானும் சறுக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஒருமுறை சறுக்கிப்பார்த்த ஹமில்டனுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆரம்பத்திலிருந்தே தைரியமாகவும் மிகுந்த வேகத்துடனும் சறுக்கத் தொடங்கினார் ஹமில்டன். குளிர்ச்சியான சூழ்நிலையில் அவர் செய்த கடுமையான சறுக்குப் பயிற்சியால் அவரது உடல் அதிசய வேகத்தில் குணமடையத் தொடங்கியது. ஹமில்டன் மூண்டும் வளரத் தொடங்கினார். இருப்பினும் ஒரே ஒத்த வயதுடைய பையன்களுடன் ஒப்பிடும்போது அவரது உயரம் குறைவாகவே இருந்தது. தனது 13 ஆவது வயதில் ஹமில்டன் தேசிய உள்ளரங்கு போட்டியில் கலந்துகொள்வதற்காக பயிற்சி செய்யத் தொடங்கினார். அந்தப் பயிற்சிக்கு செலவு அதிகம் என்பதால் அதிக பணம் சம்பாதிக்க தனக்கு புற்றுநோய் இருந்ததையும் பொருட்படுத்தாமல் அவரது தாயார் சிரமப்பட்டு கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கினார்.



தன் முன்னேற்றத்திற்காக உழைத்த அந்த தாய் புற்றுநோயால் மரணமடைந்தபோது கலங்கிய ஹமில்டன், பனிச்சறுக்குப் போட்டியில் உலக விருதை வெல்வதே தன் தாய் தன்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு தான் செய்யக்கூடிய கைமாறு என்று உறுதி பூண்டார். வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு தன் உடலை வருத்தி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். இங்கு அந்த ஜோதியை அணைப்பதற்கு இன்னுமொரு காற்று வீசியது. பனிச்சறுக்குப் போட்டிகளில் நடுவர்களாக இருந்த சிலர் ஹமில்டனைப் பார்த்து உலக அரங்கில் சறுக்குவதற்குரிய உயரமும், கம்பீரமும் அவருக்குக் கிடையாது என்றும் எனவே அந்த விளையாட்டை மறந்துவிடுமாறும் கூறினர். ஏற்கனவே வளர்ச்சிக் கோளாற்றை கடுமையாக போராடி வென்ற ஸ்காட் இந்த நடுவர்களின் கருத்துக் கோளாற்றையும் போராடி வெல்ல வேண்டியிருந்தது. நடுவர்களின் கூற்றை பொய்யாக்கிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இன்னும் கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார் ஸ்காட் அதற்கான உழைப்பு வீண்போகவில்லை.



1980 ஆம் ஆண்டு ஸ்காட்டிற்கு 22 வயதானபோது தேசிய அளவிலான உள்ளரங்கு பனிச்சறுக்குப் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்று அமெரிக்க ஒலிம்பிக் குழுவிலும் ஓர் இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு லேக் பிளஸிடில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்தாவது இடத்தை வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற பனிச்சறுக்கு முதல் இடத்தை வென்ற ஹமில்டன் தான் கனவு கண்டதைப் போலவே உலக பனிச்சறுக்குப் போட்டியிலும் முதல் இடத்தை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரது குள்ளத்தை காரணம் காட்டி உள்ளத்தை முடக்க நினைத்த அந்த நடுவர்கள் அப்போது தோற்றுப்போயினர். அதுமட்டுமல்ல அடுத்த நான்கு ஆண்டுகள் நடைபெற்ற அனைத்து தேசிய மற்றும் உலகப் போட்டிகளிலும் ஹமில்டனுக்கே முதலிடம். தொடர்ந்து எட்டு விருதுகளை வென்ற அந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.



தனது பனிச்சறுக்கு சாதனைகளின் உச்சகட்டமாக 1984 ஆம் ஆண்டு சரயபோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கபதக்கத்தை வென்றார் ஸ்காட் ஹமில்டன். தங்கபதக்கம் வென்றபோதும் அந்த ஜோதியின் மீது தொடர்ந்து காற்று வீசியது. உள்ளரங்கு பனிச்சறுக்கு விளையாட்டில் பெண்களே சிறக்க முடியும் என்றும், அவர்களாலேயே ரசிகர்களை கவர முடியும் என்று கூறி ஹமில்டனை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தத் தயங்கின பல நிறுவனங்கள். இரண்டு ஆண்டுகள் ஐஸ்கபேப்ஸ் என்ற பனிச்சறுக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அதில் தலமையத்துவ மாற்றம் ஏற்பட்டபோது ஸ்காட் வெளியேற்றப்பட்டார். ஆண் பனிச்சறுக்கு வீரர்களுக்கும் குறிப்பாக தனக்கும் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் வெறுப்படைந்த ஹமில்டன் என்ன செய்தார் தெரியுமா?! 'The Scott Hamilton America Tour' என்ற தனது சொந்த நிபுனத்துவ பனிச்சறுக்குக் காட்சியை உருவாக்கி அமெரிக்கா முழுவதும் அதனை கொண்டு சென்றார். மிகவும் பிரபலமடைந்த அந்த நிகழ்ச்சிதான் பின்னர் உலக புகழ்பெற்ற 'Stars on Ice' என்ற நிகழ்ச்சியாக மாறியது.

உள்ளரங்கு பனிச்சறுக்கில் ஹமில்டன் கொண்டு வந்த நளினமும், கம்பீரமும் பல புதிய பார்வையாளர்களை அந்த விளையாட்டிற்கு ஈர்த்தது. 12 ஆண்டுகள் அவரை ஒதுக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்னார் அவரைத் தேடி வந்தன. 1984 மற்றும் 1986 ஆம் ஆண்டிலும் உலக 'figure skating championship' விருதை வென்ற ஸ்காட்டின் பெயர் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒலிம்பிக் சாதனையாளர்களில் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1997 ஆம் ஆண்டு அந்த ஜோதியை அணைக்க மற்றுமொரு காற்று வீசியது. அந்த ஆண்டு மார்ச் 18ந்தேதி ஹமில்டனுக்கு ஆண்விதையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போராட்டத்திற்கு பழக்கப்பட்டுப்போன ஸ்காட் அப்போது கூறியது என்ன தெரியுமா?! "The Only Disability in Life is a Bad Attitude" தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு என்று கூறிய அவர் அந்த புற்றுநோயையும் போராடி வென்றார். 



வெற்றிகரமான அறுவை சிகிச்சை மற்றும் மூன்றுமாத கெமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஹமில்டன் மீண்டும் பனிச்சறுக்கில் சாகசம் காட்டத் தொடங்கினார். அதோடு நின்றுவிடவில்லை 'Scott Hamilton CARES' என்ற புற்றுநோய் ஆராய்ட்சி அமைப்பை ஏற்படுத்தி அந்த நோய்க்கு தீர்வு காணும் எல்லா முயற்சிகளுக்கும் உதவி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் அந்த அறநிதி அமைப்பு புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், ஆராய்ட்ச்சிக்காவும் சுமார் பத்து மில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலர் நிதி திரட்டியிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு 'Landing It' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்ட ஸ்காட், 2001 ஆம் ஆண்டில் நிபுனத்துவ பனிச்சறுக்கிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் Make a wish Foundation, Special Olympics, Aids அறக்கட்டளை, ஆகிய சமூக அமைப்புகளுக்கு உதவி வருகிறார்.

விளையாட்டுத் துறையில் உச்சத்தைத் தொட நல்ல உடல்கட்டு அவசியம் மட்டுமல்ல அடிப்படையும்கூட, அந்த அடிப்படையே ஆட்டம் கண்ட நிலையிலும் ஸ்காட் ஹமில்டனால் அவர் விரும்பிய வானத்தை வசப்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் தன் உடற்குறை ஒரு பொருட்டல்ல என்ற தன்னம்பிக்கையும், உழைப்பவன் உயர்வான் என்ற உண்மையில் நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியமும், தன்னால் உலகம் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும்தான். இந்தப் பண்புகள் நமக்கு இல்லாவிட்டாலும்கூட ஸ்காட் ஹமில்டன் கூறியதுபோல "The Only Disability in Life is a Bad Attitude" அதாவது தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு என்பதில் உள்ள உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் விடாமுயற்சியோடு செயல்பட்டாலே போதும் நம்மாலும் அந்த வானத்தை வசப்படுத்த முடியும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird (வரலாற்று நாயகர்)
 
உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு. 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் John Logie Baird. வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை Baird.



1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை ஒரு பாதிரியார் குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். பேர்ட்க்கு சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது பணிரெண்டாவது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.



17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ட்சிகளை செய்து பார்த்தார்.



இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட். எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆராய்ட்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார்.



அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்தக் கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி 1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். ஜான் லோகி பேர்ட் 12 ஆவது வயதிலேயே தொலைக்காட்சிப் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார் என்று கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அவர்களைப் போன்றொர்களுக்குதான் வரலாறும் இடம்தர காத்திருக்கிறது. உடல் நலமின்மையும் வறுமையும்கூட ஜான் லோகி பேர்டின் கனவையும், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குலைத்து விடவில்லை. இதேபோல் நாமும் நமது வாழ்வில் கனவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியோடு முன்னேறினால் இவற்றுக்கு முன் எந்தத் தடையும் உடையும். எந்த வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாவீரன் நெப்போலியன் (ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்') - வரலாற்று நாயகர்!
 


1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.



1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற்குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந்தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடுத்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே  Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்டெழுந்த நெப்போலியன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812.



நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண்டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாயினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன்.

கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன். புதிய படையை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல்ஜியத்தின் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என்ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது.



பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அமைதி நிலவியது. பொருளாதார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயிண்ட் ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உருவாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவர் வகுத்துத் தந்த Civil Code என்ற புதிய சட்டங்கள். அந்தச் சட்டங்கள் Code of Napoleon என்றும் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச்சட்டங்கள் மூலம் நெப்போலியனுக்கு கிடைத்தது.



சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது.  “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை, முயற்சி ஆகியவை நமக்கு இருந்தால் நமக்கும் நாம் விரும்பும் வெற்றியும் அதன்மூலம் அந்த வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 1
 




மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா)

உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர்போன காலனித்துவ ஆட்சியியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய இந்தியாவின் தேசப்பிதா அன்னல் காந்தியடிகள். உலக வரலாறு மஹாத்மா எனற பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர். 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் மீனவ கிராமத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அவரது தந்தை காபா கரம்சந்த் காந்தி 25 வயதிலேயே அமைச்சரானவர். தாயார் பெயர் புத்திலிபாய்.



சிறுவயதில் 'அரிச்சந்திரா' நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது காந்திக்கு. அந்தப் பிஞ்சு வயதிலேயே அரிச்சந்திரன் கதாபாத்திரம் அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேச வேண்டும் என்ற எண்ணத்தையும் அவருக்குள் விதைத்தது. காந்தி தொடக்கப்பள்ளியில் பயின்றபோது ஒருமுறை சோதனை அதிகாரி வந்தார் சில சொற்களைச் சொல்லி எல்லா மாணவர்களையும் எழுதச் சொன்னார். காந்தி ஒரு வார்த்தையை தவறாக எழுதியிருந்ததைப் பார்த்து அவருடைய ஆசிரியர் காந்தியின் காலை மிதித்துப் பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதும்படி சைகைக் காட்டினாராம். ஆனால் ஆசிரியரே தவறான வழிகாட்டிய போதிலும் அவ்வாறு செய்ய மறுத்து விட்டாராம் காந்தி. தொடக்கப்பள்ளியில்கூட அவர் காட்டிய நேர்மை வியப்பைத் தருகிறதல்லவா!!



அந்தக்காலத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் பரவலாக இருந்ததால் 13 ஆவது வயதிலேயே காந்திக்கு திருமணம் நடைபெற்றது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை அவர் மணந்துகொண்டார். கல்லூரிக் கல்வி வரை இந்தியாவிலேயே முடித்த காந்தி சட்டத்துறையில் பட்டம்பெற இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் தன்மகன் கெட்டுப்போய் விடுவான் என்று அஞ்சிய தாயார் காந்தி வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தார். மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்துதந்த பிறகே காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதித்தார் தாய். செளகரியத்திற்காக சத்தியம் செய்யும் பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். ஆனால் சத்தியம் காப்பதற்காகவே பிறந்தவர் என்பதை அந்த இளம் வயதிலேயே வாழ்ந்து காட்டினார் காந்தி. தான் தாய்க்குக் கொடுத்த வாக்கை மீறாமல் ஒரு முழுமையான மனிதனாக 1891 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.



மீண்டும் இந்தியா திரும்பி வழக்கறிஞர் தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. ஒரு வழக்குக் காரணமாக தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம் காந்திக்கு ஏற்பட்டது. 1893 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அந்தப் பயணம்தான் காந்தியின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவில் அப்போது நிறவெறிக் கொள்கையும், இனஒதுக்கல் கொள்கையும் தலை விரித்தாடியது. அங்கு இந்தியர்கள் அவமானப்படுத்தப் படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டு திடுக்கிட்டுப்போன காந்தி அந்த அநீதிகளைக் கண்டு மனம் கலங்கினார். நம்மில் பெரும்பாலோர் அநீதிகளை கண்டு கலங்குவதோடு நின்று விடுவோம் ஆனால் காந்தி அதனை எதிர்க்க முற்பட்டார். தென்னாப்பிரிக்கவிலேயே தங்கி இந்தியர்களின் சம உரிமைக்காகப் போராட முடிவெடுத்தார்.



டர்பன் நகரில் நாட்டல் என்ற பகுதியில் ஒன்றல்ல இரண்டல்ல 21 ஆண்டுகள் தங்கி பல சமூக அரசியல் பரிசோதனைகளைச் செய்துப் பார்த்தார். அந்த முயற்சிகளின் மூலம் அவர் உலகுக்குத் தந்த பெரும்கொடைதான் 'சத்தியாக்கிரகம்' என்ற அகிம்சை அறவழிப் போராட்டம். தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியில் பயணம் செய்யும்போது ஒரு பெட்டியில் ஒரு வெள்ளையர் இருந்தாலும் அந்தப்பெட்டியில் கருப்பரோ, இந்தியரோ ஏறக்கூடாது என்ற சட்டம் இருந்தது. ஒருமுறை ஆங்கிலேயர் இருந்த ஒரு பெட்டியில் காந்தி ஏறினார். உடனடியாக இறங்குமாறு அந்த ஆங்கிலேயர் சொன்னதுக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியை உதைத்து வெளியில் தள்ளினார் அந்த வெள்ளைக்காரர். இந்த மாதிரி பல அவமானங்கள் ஏற்பட்டபோதும் அகிம்சை வழியில் உலகை வெல்லலாம் என்ற அவரது மன உறுதி சற்றும் குலையவில்லை. இறுதியில் காந்தியம்தான் வென்றிருக்கிறது. ஏனெனில் எந்த புகை வண்டி நிலையத்தில் அவர் உதைத்துத் தள்ளப்பட்டாரோ அதே நிலையத்தில் இன்று காந்தியடிகளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.



21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா வாழ்க்கையை முடித்துக்கொண்டு 1915 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய காந்தி சபர்மதி நதிக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு வாழத் தொடங்கினார். காந்தியை இந்திய அரசியலில் ஈடுபடுத்தினார் கோபால கிருஷ்ண கோகலே என்ற தலைவர். முதலாம் உலக்போரின்போது இந்தியாவில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்க உதவினார் காந்தி. அதற்குக் காரணம் போர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் சுதந்திர தாகத்தைத் தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பியதுதான். ஆனால் பிரிட்டிஷ் அரசோ போர் முடிந்த பிறகு ரெவ்ளட் என்ற சட்டம் மூலம் இந்தியர்களின் சுதந்திர உணர்வையும், எதிர்பார்ப்பையும் நசுக்கியது. அதனை நம்பிக்கைத் துரோகம் என்று கருதிய காந்தி வெகுண்டெழுந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்ற நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.



பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். வரி செலுத்த மறுக்குமாறு வற்புறுத்தினார். பல உயிர்களை பலி வாங்கினாலும் ஒத்துழையாமை இயக்கம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்தியின் தலைமையில் டெல்லியில் மாபெரும் தீ வளர்த்து விலையுயர்ந்த ஆடைகள் எரிக்கப்பட்டன. அதைப்பார்த்து வேதனைப்பட்ட காந்தியின் ஆங்கிலேயே நண்பர் சி.எப்.ஆண்ட்ரூஸ் அந்தத் துணிகளை எரிப்பதற்கு பதில் ஏன் அவற்றை ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது? என்று கேட்டார். அதற்கு காந்தி சொன்ன பதில் ஏழைகளுக்குக்கூட தன்மானம் உண்டு. 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி பூர்னஸ்வரஜ் அதாவது முழுச்சுதந்திரம் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. அதற்கு அடுத்த ஆண்டு சத்தியாகிரகத்தின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தினார் காந்தி. அப்போது உப்புக்குகூட வரிவிதித்தது பிரிட்டிஷ் ஆட்சி வரி அதிகமில்லையென்றாலும் ஏழைகளை அது வெகுவாக பாதித்தது. எனவே அந்த வரியை எதிர்த்து புகழ்பெற்ற 'தண்டியாத்திரை' மேற்கொண்டார் காந்தி.



அகமதாபாத்திலிருந்து 78 தொண்டர்களுடன் புறப்பட்டு 24 நாட்களில் சுமார் 300 கிராமங்களை நடந்தே கடந்து தண்டி கடற்கரையை அடைந்தார். அங்கு சட்டத்தை மீறி அவர் கடற்கரையிலிருந்து சிறிதளவு உப்பைச் சேகரித்தார் முன் அறிவிப்பு செய்துவிட்டுத்தான் அவர் அந்த உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். அவருடைய மனோதிடத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சி சற்று தடுமாறிப் போனது உண்மைதான். இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் அவரை சிறையில் அடைத்தது. அவரை மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக திரண்டியிருந்த சுமார் 60000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தாங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக ஒரு விரலை கூட உயர்த்தாமல் அகிம்சை காத்தனர் பலர். பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச்செய்த பல சம்பவங்களுள் அந்த உப்பு சத்தியாகிரகம் மிக முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், காந்திக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்படவே ஒத்துழையாமை இயக்கத்தை மீட்டுக்கொண்டார் காந்தி. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார் ஆனால் ஏமாற்றத்தோடு திரும்பினார்.



பொருத்தது போதும் என்ற பொங்கியெழுந்த காந்தி 1942 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தைத் தொடங்கி உடனடியாக சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அன்றிரவே பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கைது செய்தது. ஆனால் சுதந்திர வேட்கை நாடு முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு 1945 ஆம் ஆண்டு லண்டனில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதை வன்மையாக எதிர்த்து வந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆட்சி பதவி இழந்தது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது. தொழிற்கட்சியின் தலைவர் கிளமெண்ட் அட்லி இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தைக் கண்டு மனமிறங்கி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடுவெடுத்தார். ஆனால் எல்லாம் கைகூடி வந்த நேரம் இந்தியாவை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்றப் பிரிவினைவாதக் கோரிக்கை தலையெடுத்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.

காந்திக்கு அதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால் நேருவும் பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில் மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கொட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர். ஆனால் அந்தச் சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 2
 
மஹாத்மா காந்தியடிகள் (வரலாற்று நாயகர்) பாகம் - 2:

சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு இரண்டாகப் பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி மூச்சுவரை அந்தப் பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள். அவர் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். சொந்த நிலம், வீடு, சொத்து, வியாபாரம், வேலை, கல்வி, நண்பர்கள் என அனைத்தையும் விட்டு தங்கள் எதிர்காலத்திற்கு அஞ்சி மக்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையை கடந்தபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சுதந்திரம் கிடைத்தும் அந்த மதக்கலவரக் கொடுமையில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.



தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதுகூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும் அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களே ஆகியிருந்த நிலையில் அதனைப் பெற்றுத் தந்தவரின் உயிருக்கு சுதந்திரம் தர எத்தனித்தான் நாதுராம் கோட்ஸே என்ற ஒரு மதவெறியன். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள். சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பை நிராகரித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்து என்ற அந்தப் பின்னனியில் ஜனவரி 30ந்தேதி இன்னொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அன்றைய தினம் காந்தியடிகளை குனிந்து வணங்குவதுபோல பாவனை செய்துவிட்டு நிமிர்ந்தான் அந்த மதவெறியன். அவனை வணங்குவதற்காக கைகளைக் கூப்பினார் காந்தியடிகள். சற்றும் சிந்திக்காமல் தன் கைத் துப்பாக்கியைக் கொண்டு கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கிச் சுட்டான் அவன். மூன்று குண்டுகள் அன்னலின் மெலிந்த தேகத்தைப் பதம்பார்த்தன. கைகள் கூப்பிய நிலையிலேயே ஹேராம்...ஹேராம் என்ற வார்த்தைகளை உதிர்த்து சரிந்தார் காந்தியடிகள். இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு பிரிந்தது அந்தத் தேசப்பிதாவின் உயிர். தன் கடைசி மூச்சுவரை அகிம்சையைப் போதித்த அந்த மாமனிதனுக்கு அமைதியான மரணத்தை வழங்க முடியாத கலங்கத்தை இன்றுவரை சுமந்து நிற்கிறது இந்தியா.



தன் வாழ்நாளில் தீண்டாமை ஒழிப்புக்காக அரும்பாடுபட்டார் காந்தியடிகள். தீண்டத்தகாதவர்கள் எவரும் கிடையாது என்று கூறிய அவர் தீண்டாமையைக் கடவுளுக்கு எதிரான பாவச்செயல் என்றும் சாடினார். ஒருமுறை தனது ஆசிரமத்தில் தீண்டத்தகாத ஆசிரியரையும், அவரது குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டபோது அவரது மனைவிகூட அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். தீண்டாமையை இந்தியாவின் அவமானம் என்று கூறிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? அவர்கள் இந்த ஆசிரமத்தில் தங்குவதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ இந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறலாம் என்று தனது மனைவியைப் பார்த்து கூறினார். கஸ்தூரிபாய் வேறு வழியின்றி அமைதியானார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஹரிஜன்ஸ் என்று பெயரிட்டார் காந்தியடிகள். அதன் பொருள் கடவுளின் பிள்ளைகள் என்பதாகும்.

தனது சத்திய சோதனை என்ற நூலில் காந்தியடிகள் புகழ்பெற்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களை அவர்களில் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையைக் கழுவுமாறு நாம் சொல்வதற்கு முன் இந்துக்களாகிய நாம் நம் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையை கழுவ வேண்டாமா? என்று தீண்டாமைக் குறித்து ஆதங்கத்தோடு கேள்வியெழுப்பினார் காந்தியடிகள். அவரது போராட்டங்களால் தீண்டத்தகாதவர்களை ஒரு தனிச்சமூகமாகக் கருதி அவர்களுக்கு தனி ஓட்டுரிமை வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுத்தது. ஆனால் அவ்வாறு செய்வது பிரச்சினையை இன்னும் மோசமாக்கும் என்று நம்பிய காந்தியடிகள் துணிவான ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ஹரிஜனங்கள் தனிச்சமூகம் என்ற திட்டத்தைக் கைவிடா விட்டால் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போவதாக பூனா சிறையிலிருந்தவாறே அறிவித்தார். அவரது வைராக்கியத்தைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் பூனா ஒப்பந்தத்திற்கு இணங்கியது. அதன்படி இனிமேல் இந்துக்களில் பிறப்பின் காரணமாக எவரும் கீழ்சாதி என்பது கிடையாது என்று அறிவித்து தனது உண்ணாவிரத்தை முடித்தார் காந்தியடிகள்.

காந்தியடிகள் எவ்வளவு தெளிவான சிந்தனையுடயவர் என்பதற்கு இன்னொரு சம்பவம் தன் ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியின் வேதனையைப் பார்த்து கலங்கிய அவர் அதனை கொன்று விடுமாறு கூறினார். பசுவைக் கொல்வது பாவம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே சில தீவிர இந்துக்கள் அவரைப் பாவி என்று வசைபாடினர். ஆனால் வேதங்களை விட ஓர் உயிரின் வேதனைதான் அன்னலின் கண்களுக்குப் பெரிதாகப்பட்டது. 1922 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியடிகளை சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தபோது அவர் பைபிள், குர்ரான் போன்ற நூல்களையும், இந்து வேதங்களையும் படித்தார். தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். 1925ல் காங்கிரஸ் தலைமைத்துவத்திலிருந்து விலகிய காந்தியடிகள் அடுத்த மூன்று ஆண்டுகள் கிராமம் கிராமமாக சென்று இராட்டினம் மூலம் சுய தொழில் செய்வதைப் பற்றியும், ஒத்துழையாமைப் பற்றியும் மக்களிடம் பேசினார்.



அவ்வாறு ஒருமுறை பேசியபோது கிராம மக்கள் சேர்ந்து காந்தியடிகளுக்கு மலர்மாலை அணிவித்தனர். அப்போது அவர்களைப்பார்த்து இந்த மலர்மாலைக்காக நீங்கள் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் 16 பேர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி தர உதவும் என்று கூறினார். கட்டாயத்தின் பேரில் தான் பால்ய விவாகம் செய்து கொண்டாலும் அதனை வன்மையாக எதிர்த்தார் காந்தியடிகள். பிள்ளைகளின் வாழ்க்கை குலைக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். விதவைகளைப் பார்த்து மறுமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் மறுமணம் செய்துகொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று முழங்கினார். உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்கு என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவரும் நாக்கைக் கட்டுப்படுத்தினால் உலகில் பாதி பிரச்சினைகள் ஒழிந்துவிடும் என்று நம்பிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? தன் வாழ்நாள் முழுவதும் திங்கள் கிழமைகளில் மவுன விரதம் இருந்தார். ஒரு மணிநேரம்கூட மவுனமாக இருப்பது நம்மில் பலருக்கு முடியாத காரியம். ஆனால் அரசியலில் ஈடுபட்டிருந்தபோதுகூட, எவ்வளவு பெரிய நபர்களை சந்திக்க வேண்டியிருந்தபோதும்கூட திங்கள் கிழமை மவுன விரதத்தைக் கைவிட்டதில்லை காந்தியடிகள்.



நாடு முழுவதும் இரயில் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் காந்தியடிகள் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்தார். சாதரண மக்கள் சிரமப்படும்போது தனக்கு செளகரியங்கள் தேவையில்லை என்பதுதான் அவரது எண்ணம். அதே எண்ணம் அவரது ஆடையிலும் பிரதிபலித்தது. இந்தியர்களின் வறுமை நிலையைப் பார்த்து மனம் வெம்பியதால்தான் காந்தியடிகள் நான்கு முழத் துண்டை மட்டும் ஆடையாக அணியத் தொடங்கினார். இப்படி தன் மக்களுக்காக துயருற்று அவர்கள் அனுபவித்த வேதனைகளை தானும் அனுபவித்து மக்கள் நலனை மட்டுமே குறியாக கொண்டு செயலாற்றிய வேறு ஒரு தலைவர் உலக வரலாற்றில் இருந்திப்பாரா என்பது சந்தேகமே. உண்மை பேசுவதைவிட ஒரு சிறந்த பண்பு இருக்க முடியாது என்று உளமாற நம்பிய காந்தியடிகள் My Experiments with Truth என்ற புகழ்பெற்ற சுயசரிதையையும் எழுதினார். முழுமையாகத் தெரிந்துகொள்ள 'சத்திய சோதனை' என்ற அந்த நூலை படித்துப் பாருங்கள்.

உலக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். உலகில் ஏற்பட்ட எந்த புரட்சியும் ஆயுதம் ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், உயிர்பலி இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. அந்த விதியை மாற்றி அமைத்தவர் அன்னல் காந்தியடிகள். கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம் என அகிம்சை வழியிலேயே ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் காந்தியடிகள். அதனால்தான் அன்னல் காந்தியடிகளைப் பற்றி சிங்கப்பூரின் மதியுரை அமைச்சர் லீ குவான் யூ ஒருமுறை உரையாற்றும்போது நான் ஒரு இந்திய போப்பாக இருந்திருந்தால் மஹாத்மா காந்திக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியிருப்பேன் என்று கூறினார். இப்படி உலக தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனுகுலமும் காந்தியடிகளை போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவதற்கு அடிப்படைக் காரணம் அவர் உலகுக்குத் தந்த இரண்டு மாபெரும் கொடைகளான அகிம்சை, வாய்மை.



இந்த அவசர உலகில் அகிம்சைக்கும், வாய்மைக்கும் இடம் உண்டு என்பதை வாழ்ந்து காட்டியதால்தான் உலகம் அவரை மட்டும் 'மஹாத்மா' என்றழைக்கிறது. அந்த ஒப்பற்ற ஜீவன் பின்பற்றிய அகிம்சையையும், வாய்மையையும் பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமையாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வில்லியம் மார்ட்டன் (மருத்துவ உலகின் ஒரு மாமனிதரின் கதை) - வரலாற்று நாயகர்!
 
மருத்துவத்துறையின் மிக முக்கியமான ஒரு கூறு அறுவை சிகிச்சையாகும். மருந்துகளாலும், மாத்திரைகளாலும் மட்டும் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமாகிறது. நோய்களுக்கு மட்டுமல்ல விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்துபோனோருக்கும், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கெல்லாம் மயக்க மருந்து கொடுக்காமல் உடலை அறுத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்ககூட சிரமமாக இருக்கிறதல்லவா? சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அது கற்பனையாக அல்ல நிஜமான ஒன்றாகவே இருந்தது. அறுவை சிகிச்சை என்றால் அலறல் மட்டுமே நிச்சயம் என்று இருந்த காலகட்டம் அது. வலியை மறைக்க அல்லது உடல் வலியை உணராமல் இருக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று மருத்துவச்சமூகம் ஏங்கிய அந்தக்கணங்களில் அந்த ஏக்கத்தைப் போக்கினார் ஒருவர்.

அவர் கண்டுபிடித்துத் தந்த மயக்க மருந்தினால் அலறல் ஓய்ந்து மருத்துவர்கள் அமைதியாக தங்கள் அறுவை சிகிச்சை பணியை மேற்கொள்ள முடிந்தது. உடல் வலியை உணராமல் இருக்கச்செய்யும் அந்த அற்புத அருமருந்தை உலகுக்குத் தந்த மாமனிதர் வில்லியம் மார்ட்டன். Sir Stamford Raffles ஆல் சிங்கப்பூர் கண்டுபிடிக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1819 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி Massachusettsல் பிறந்தார் William Thomas Green Morton. கல்வியில் சிறப்பாகச் செய்த அவர்  Baltimore பல் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். தனது 23 ஆவது வயதில் அவர் பல் மருத்துவரானார். தனக்குப் பாடம் கற்பித்த Dr. Horace Wells என்பவருடன் சேர்ந்து மார்டன் இரண்டு ஆண்டுகள் ஒரே மருந்தகத்தில் பல் சிகிச்சை வழங்கி வந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே மார்ட்டன் தனியாக தொழில் செய்யத் தொடங்கினார்.



பற்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகள் அனுபவித்த வேதனையை கண்கூடாகப் பார்த்து அந்த வேதனையை தானும் உணர்ந்தார் மார்ட்டன். வலியைப் போக்க மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் அவருக்குள் எழுந்தது. எனவே தன் தொழிலைக் கவனித்த அதே வேளையில் பல்வேறு பரிசோதனைகளையும் செய்துப் பார்க்கத் தொடங்கினார். அதே நேரத்தில் Dr. Horace Wells அவர்களும் வலி போக்கி மருந்துகளைப் பற்றி சிந்தித்து வந்தார். அவர் சிரிப்பு வாயு என்றழைக்கப்பட்ட  நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்த்தார் பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. உற்சாகமடைந்த Dr.Wells அந்த வாயுவின் பலனை பொதுமக்களுக்கு நிரூபித்துக் காட்ட விரும்பினார். அதற்கு மார்டனின் துணையை நாடினார் மார்ட்டனும் உதவவே 1845 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  Massachusetts பொது மருத்துவமனையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நைட்ரஸ் ஆக்ஸைடு கொடுத்து ஒருவரின் பல்லைப் பிடுங்கியபோது அவர் வலியால் அலறவே அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவமானம் அடைந்த  Dr.Wells தலை குனிந்தவாறே மருத்துவமனையை விட்டு வெளியேறினார். பல் மருத்துவத்தில் செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் நிபுனத்துவம் பெற்றிருந்தார் மார்ட்டன். அவ்வாறு செய்வதற்கு பழைய பற்களை வேரோடுப் பிடுங்கி எடுக்க வேண்டியிருக்கும். மயக்க மருந்து இல்லாமல் அதனைச் செய்தால் மரண வேதனைதான் மிஞ்சும். அந்த வலியை மறக்கடிக்க நைட்ரஸ் ஆக்ஸைடு போதாது என்று உணர்ந்த மார்ட்டன் அதிக வலிமைப் பொருந்திய ஒரு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். Dr. Charles T. Jackson என்ற மூத்த மருத்துவர் ஈத்தரைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற ஆலோசனையை மார்ட்டனிடம் தெரிவித்தார். ஈத்தருக்கு மயக்க சக்தி உண்டு என்பதை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே பேரசூஸஸ் என்ற சுவிஸ் இரசாயணவியலார் கண்டுபிடித்திருந்தார்.

ஆனால் எந்த மருத்துவரும் அதனை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தியதில்லை. ஈத்தரின் தன்மைகளைப் பற்றி மேலும் ஆராய்ட்சிகளைச் செய்தார் மார்டன். தன் நாய்க் குட்டியின் மீதும் பின்னர் தன் மீதும் ஈத்தரைப் பயன்படுத்திப் பார்த்தார். அதனை ஒரு நோயாளியின் மீது பயன்படுத்திப் பார்க்கும் அற்புத வாய்ப்பு மார்ட்டனுக்கு 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி கிடைத்தது. அன்றைய தினம் தாங்க முடியா பல் வலியுடன் ஈவன் ப்ரோத் என்பவர் மார்ட்டனின் மருந்தகத்திற்கு வந்தார். என்ன செய்தாவது தனது வலியைப் போக்குமாறு மார்ட்டனிடம் கெஞ்சினார். இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று நம்பிய மார்ட்டன் முதலில் அந்த நோயாளியை ஈத்தரை நுகரச் செய்தார். நோயாளி மயக்கமடையவே பல்லைப் பிடுங்கி எடுத்தார். மயக்கம் தெளிந்த நோயாளி தான் எந்த வலியையும் உணரவில்லை என்றார். உலகிற்கு மயக்க மருந்தை தந்துவிட்ட களிப்பில் மகிழ்ந்தார் மார்ட்டன்.



தன் முதல் முயற்சி வெற்றி தந்து அடுத்தநாள் பத்திரிக்கைகளில் அந்தச் செய்தி வெளி வந்திருந்தாலும் மருத்துவ உலகம் பெரிதாக மகிழ்ந்து விடவில்லை. இன்னும் பெரிய அளவில் ஈத்தரின் தன்மையை விளக்கிக் காட்ட வேண்டும் என்பதை உணர்ந்த மார்ட்டன் பல மருத்துவர்களுக்கு முன்னிலையில் அதைச் செய்துகாட்ட  Massachusetts பொது மருத்துவமனையின் மூத்த அறுவை மருத்துவர் Dr. John Collins Warren ஒரு வாய்ப்புக் கேட்டார்.Dr. John Collins Warren இணங்கவே இரண்டே வாரங்களில் அதாவது 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 11ந்தேதி நிறைய மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கூடினர். அவர்களுக்கு முன்னிலையில் கில்பர் ஆல்பர்ட் என்ற நோயாளிக்கு ஈத்தரைக் கொடுத்தார் மார்ட்டன். அதன் பிறகு அந்த நோயாளின் கழுத்திலிருந்த ஒரு கட்டியை வெட்டி எடுத்தார் Dr. Warren. நோயாளிக்கு எந்தவித வலியும் தெரியவில்லை. மயக்க மருந்து முழுமையாக வேலை செய்ததை மருத்துவ உலகம் கண்டு வியந்தது. மார்ட்டனின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.



மருத்துவ உலகிற்கு மிகத் தேவையான ஒரு கண்டுபிடிப்பு (ஈத்தர்) என்பதால் அதற்கான காப்புரிமம் பெறவதற்காக விண்ணப்பித்தார் மார்ட்டன். அவருக்கு காப்புரிமம் கிடைத்தாலும் மயக்க மருந்து கண்டுபிடித்ததில் வேறு சிலரும் உரிமை கொண்டாடினர். நைட்ரஸ் ஆக்ஸைடைப் பயன்படுத்தித் தோற்றுப்போன Dr. Horace Wells, ஈத்தரைப் பயன்படுத்திப் பார்க்குமாறு ஆலோசனைக் கூறிய  Dr. Charles T. Jackson இருவரும் அதில் உரிமை கொண்டாடினர். அவர்களைத் தவிர்த்து Dr.  Crawford Williamson Long என்பவர் மார்ட்டன் செய்துகாட்டியதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1842 ஆம் ஆண்டிலயே ஈத்தரைப் பயன்ப்டுத்தி தான் அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அதுபற்றிய அவரது கட்டுரை மார்ட்டனின் வெற்றிக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வெளிவந்தது. எனவே முதன்முதலாக ஈத்தரை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர் என்று மார்ட்டனின் பெயரையே வரலாறு நினைவில் வைத்துள்ளது.

எனினும் அந்த பெருமையைப் பெற அந்த நான்கு மருத்துவர்களுமே சட்டத்தின் உதவியை நாடினர். அந்த இழுபறி நீடித்த வேளையில் மற்ற மருத்துவர்கள் ஈத்தரைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் மருத்துவமனைகள்  ராயல்டி எனப்படும் உரிமைத்தொகையைச் செலுத்த மறுத்தனர். அதனாலும் கண்டுபிடிப்பு உரிமையை நிலைநாட்ட ஆன நீதிமன்றச் செலவுகளாலும் வெறுப்படைந்தார் மார்ட்டன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்த அவர் தனது சொத்துகள் அனைத்தையும் இழந்தார். நோயாளிகளின் வலிதீர பாடுபட்ட அவருக்கு இறுதி நாட்களில் மன வேதனையும், ஏழ்மையும்தான் மிஞ்சியது. இறுதியில் 1868 ஆம் ஆண்டு ஜூலை 15ந்தேதி தனது 48ஆவது வயதில் நியூயார்க்கில் காலமானார். அவரது மனைவிக்கும், ஐந்து பிள்ளைகளுக்கும்கூட எந்த சொத்தையோ, பொருளையோ விட்டுச்செல்லவில்லை.



தங்கள் கண்டுபிடிப்புகள் மனுகுல மேன்மைக்காகவே அன்றி சொத்து சேர்த்து செல்வந்தர்கள் ஆவதற்கு அல்ல என்று வாழ்ந்த பல வரலாற்று மாந்தர்களுக்கு மத்தியில் மார்ட்டன் தனது கண்டுபிடிப்பின் மூலம் பணமும், புகழும் சேர்க்க விரும்பியது என்னவோ உண்மைதான். ஆனால் அது அவரது கண்டுபிடிப்பின் மகத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துவிடாது. மார்ட்டன் தைரியமாக உலகுக்குச் செய்து காட்டியதால்தான் கடந்த 165 ஆண்டுகளாக நோயாளிகள் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிகிறது. இது ஒன்றே மார்ட்டனுக்கு வானம் வசப்பட்டதற்குச் சமம்.

“சுவாசிக்கும் மயக்க மருந்தை உலகுக்குத் தந்து அறுவை சிகிச்சையிலிருந்து வலியை அறுத்தெடுத்தவர், இவருக்கு முன் வலியும் வேதனையும்தான் மிச்சம் இவருக்குப் பிறகுதான் வலியைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டது விஞ்ஞானம்”

என்ற இந்த வாசகங்கள் மார்ட்டனின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன. உண்மைதானே! அடுத்தமுறை நீங்கள் யாரேனும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேர்ந்தால் வில்லியம் மார்ட்டனுக்கு நன்றி சொல்லுங்கள். அன்று மார்ட்டன் சிந்திய வியர்வையும், விடாமுயற்சியும்தான் இன்று உலக மக்கள் பலர் வலி இல்லாமல் நிம்மதியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிகிறது. மனத்தை ஒருநிலைப் படுத்தி தன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் விடா முயற்சியோடு பயணம் செய்யும் எவருக்கும் அவர்கள் விரும்பும் வானம் வசப்படும் என்பதுதான் மார்ட்டனின் வாழ்க்கை நமக்கு வலி இல்லாமல் சொல்லும் உண்மை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று நாயகர்!
 
எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம், என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த ஒரு கார் ஜாம்பவானைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்த தொழில் பிரம்மா ஹென்றி ஃபோர்ட்.

1863 ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஹென்றி ஃபோர்ட். ஆறு பிள்ளைகளில் அவரே மூத்தவர். ஃபோர்ட் குடும்பத்திற்கு பெரிய பண்ணை ஒன்று இருந்தது. மற்ற 19ஆம் நூற்றாண்டு சிறுவர்களைப்போல ஃபோர்டும் தனது இளமைக்காலத்தில் அவரது பண்ணையில் பல்வேறு வேலைகளைச் செய்தார். ஆனால் அவருக்கு பண்ணை வேலை சலிப்பைத் தந்தது. நகரும் பாகங்களைக் கொண்ட பொருட்களின்மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதிலேயே கடிகாரங்களை பழுது பார்க்க கற்றுக்கொண்டார். ஒருமுறை பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நீராவியால் இயங்கிய ஒரு ட்ராக்டர் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்வதை கவனித்தார். அந்தக் கணம்தான் போக்குவரவு வரலாற்றை மாற்றப்போகும் கணமாக அமைந்தது. ஏனெனில் அப்போதே ஃபோர்டின் மனதில் பயணிகள் வாகனம் உதித்தது.



16 வயதானபோது ஃபோர்ட் குடும்பத்தை விட்டு டெட்ராய்ட் நகரில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்ற பிறகு மீண்டும் மிச்சிகன் திரும்பினார். அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின்மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படவே அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதனை கழற்றி பழுது பார்ப்பதிலும் நேரம் செலவிட்டார். அதேநேரம் பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய எரிவாயுவில் இயங்கும் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கினார். ஃபோர்ட்க்கு 30 வயதானபோது சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கிய தண்ணீர் பம்ப் ஒன்றைக் கண்டார். அதை ஏன் ஒரு வண்டியில் பொருத்திப் பார்க்கக்கூடாது என்று சிந்தித்தார். அதே ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனின் நிறுவனத்தில் நூறு டாலர் சம்பளத்திற்கு தலமைப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.



அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் ஒரு காரை உருவாக்க அயராது உழைத்தார் ஃபோர்ட். 1896 ஆம் ஆண்டு மே மாதம் பல்வேறு உதிரிப் பாகங்களையும், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார். ஆனால் அந்த வாகனத்திற்குப் பிரேக் கிடையாது. அதனைப் பின்னோக்கியும் செலுத்த முடியாது. அதற்கு 'Quadricycle' என்று பெயரிட்டார். பார்ப்பதற்கு சைக்கிள்போன்று இருக்கும் ஆனால் நான்கு சக்கரங்களும் ஓர் இருக்கையும் கொண்டிருக்கும். ஆர்வமாக அதை ஓட்டிப்பார்க்கலாம் என்று முற்பட்டபோதுதான் கூடாரத்தின் கதவு சிறியதாக இருந்ததை ஃபோர்ட் அப்போதுதான் உணர்ந்தார்.



தன் கண்டுபிடிப்பை உடனே சோதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து செங்கல் சுவற்றை இடித்துவிட்டு அந்த வாகனத்தை வெளியே கொண்டு வந்தார். அவரது வாகனம் சாலையில் வலம் வந்தது. ஃபோர்ட் அகமகிழ்ந்து போனார். தொழிலியல் உலகில் அது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1903 ஆம் ஆண்டு அவர் மிச்சிகனில் ‘Ford Motor Company’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க பரந்து விரிந்து கிடப்பதால் ஒரு காலத்தில் கார்களின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பிய ஃபோர்ட் கடுமையாக உழைத்து 1908 ஆம் ஆண்டு Model T என்ற காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமல்ல. சாமானியர்களும்கூட காரை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஃபோர்டின் அடிப்படை விருப்பமாக இருந்தது. அதனால் காரின் விலையை மிகக் குறைவாக வைத்திருக்க தயாரிப்புச் செலவுகளை கவனமாக பார்த்துக்கொண்டார். அப்போது அந்தக் காரின் விலை என்னத் தெரியுமா? வெறும் 500 டாலர்தான்.



தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான அந்த Model T  வாகனம் ஆயிரக் கணக்கில் விற்பனையாகத் தொடங்கியது. பதினெட்டே ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது ஃபோர்ட் நிறுவனம். ஃபோர்டின் தொலைநோக்கு  மிக்க தலமையின் கீழ் அந்த நிறுவனம் அபரிதமான வளர்ச்சிகண்டு உலகின் மிகப்பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலபதிராக அவரை உயர்த்தியது. ஃபோர்ட் புரட்சிகரமான இன்னொரு காரியத்தையும் செய்தார். ஊழியர்களின் நலனை பெரிதாக மதித்ததால் அவர் சம்பளங்களைக் கூட்டி வேலை நேரத்தைக் குறைத்தார். அப்போது 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம். ஃபோர்ட் என்ன செய்தார் தெரியுமா? இருந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் சம்பளம் 5 டாலர் என்று அறிவித்தார். மேலும் வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைத்து 8 மணிநேர வேலையாக்கினார்.

பல பொருளியல் நிபுனர்கள் அவரது அந்த நடவடிக்கையை எள்ளி நகையாடினர். ஆனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்ததால் உற்பத்தித் திறன் பெருகி நிறுவனம் அபரித வளர்ச்சி கண்டது. வாழ்வில் செல்வம் கொழித்த அளவுக்கு அவரது மனதில் கருனையும் ஊற்றெடுத்தது. 'டிசன் இன்ஸ்டட்டியூட்’ என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன் சொத்தில் பெரும்பங்கை செலவழித்தார் அந்த தொழில் மேதை. போரை அறவே வெறுத்த அவர் முதலாம் உலக்போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பி ஐரோப்பாவுக்கு பயணமும் மேற்கொண்டார். 1936 ஆம் ஆண்டு தனது மகன் எட்சல் ஃபோர்டின் தலமையில் 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ என்ற உன்னத அறநிறுவனத்தை தோற்றுவித்தார் ஹென்றி ஃபோர்ட். அந்த அறநிறுவனம் உலகம் போற்றும் பல உன்னத அறப்பணிகளை மேற்கொண்டது.

1943 ஆம் ஆண்டு எதிர்பார விதமாக மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்ட் நிறுவனத்தின் தலமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஹென்றி ஃபோர்ட். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி ஃபோர்ட் தனது 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுச் சென்றார். வாழ்வில் செல்வம் சேரும்போது சுயநலமும் சேர்ந்துகொள்வதை பலமுறை சந்தித்திருக்கிறது வரலாறு. ஆனால் போக்குவரவு துறையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து செல்வந்தரான ஃபோர்ட் மிகப்பெரிய சமூக கடப்பாட்டைக் காட்டினார். சமூக நலத்திற்காக தன் சொத்தை வாரி வழங்கினார்.



அடுத்தமுறை நீங்கள் வாகனம் ஓட்ட நேர்ந்தால் ஃபோர்டுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவரது ஆய்வுகளும், சோதனைகளும், கடின உழைப்பும், வியர்வையும், தொலைநோக்கும்தான் உங்களது வாகனத்துக்குப் பின்னால் இருப்பவை. சமூகம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைப்பவர்களுக்கும், வசதி வரும்போது அதே சமூகத்திற்காக வாரி வழங்குபவர்களுக்கும் வானத்தை வசப்படுத்துவது வரலாற்றின் கடமை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கிரிகோர் மெண்டல் (மரபியலின் தந்தை) - வரலாற்று நாயகர்
 
மனுகுலம் உண்மையாக வளர்ச்சி அடையத் தொடங்கியது எப்போது? என்று கேட்டால் அதற்கு அறிஞர்களின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். மனிதன் எப்போது 'ஏன்' என்று கேள்விக் கேட்கத் தொடங்கினானோ அப்போதுதான் மனுகுலம் முன்னேறத் தொடங்கியது. உலகில் இதுவரை நிகழ்ந்திருக்கும் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அத்தனைக்கும் வித்திட்டது 'ஏன்' என்ற கேள்விதான், விதண்டாவாதத்துக்காக எழுப்ப பட்ட கேள்விகள் அல்ல. புரியாததை புரிந்துகொள்வதற்காகவும், அறியாததை அறிந்து கொள்வதற்காகவும் கேட்கப்பட்ட கேள்விகள். அவ்வாறு எழுந்த ஒரு கேள்விதான் ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஏன் ஒரே சாயலாக இருக்கின்றன என்பது.

சிந்திக்கத் தயங்கியவர்களும், மருத்துவர்களும் அது ஆண்டவன் படைப்பு என்று விட்டுவிட்டனர். அவர்களையெல்லாம் வரலாறும் விட்டுவிட்டது. ஆனால் ஒருவர் துணிந்து சிந்தித்தார் உண்மையை உணர்ந்துகொள்ள கடுமையாகவும் கட்டொழுங்கோடும் உழைத்தார். அதன் பலன் வரலாறு அவரது பெயரை தன் ஏடுகளில் பெருமையுடன் பதித்து கொண்டது. ஒரே குடும்பத்தில் பிறப்போர் ஒரே சாயலில் இருப்பதற்கு காரணம் அவர்களது அனுக்களில் உள்ள ஜீன் எனப்படும் மரபுக்கூறு என்ற உண்மையைக் கண்டு சொன்ன மாபெரும் விஞ்ஞானியைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.



1822 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி ஆஸ்திரியாவில் Heinzendorf என்ற ஊரில் பிறந்தார் கிரிகோர் ஜோஹைன் மெண்டல். குடும்பம் மிக ஏழ்மையானது எனவே அவரை பள்ளிக்கு அனுப்பக்கூட பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதித்து அதை கொண்டு படித்தார் மெண்டல். பள்ளியில் நன்றாக படித்த அவர் தனது 21 ஆவது வயதில் மேல்படிப்புக்காக புனித தாமஸ் மடாலயத்தில் சேர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் படித்து பாதிரியாரானார் மெண்டல். பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பெற்று சான்றிதழ்க்காகத் தேர்வு எழுதினார். உயிரியல், புவியியல் ஆகியப் பாடங்களில் குறைவான மதிப்பென்கள் பெற்று அந்த தேர்வில் தோல்வியுற்றார். இருப்பினும் மடாலயத்தின் உயர் அதிகாரி அவரை வியன்னா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார். அங்கு உயிரியலும், கணிதமும் கற்ற பிறகு 1854 ஆம் ஆண்டு முதல் பிரண்ட் என்ற பள்ளியில் இயற்கை அறிவியல் ஆசிரியராகப் பணி புரியத் தொடங்கினார்.



இயற்கையை அதிகம் நேசித்தார் மெண்டல் குறிப்பாக செடி கொடிகளை அதிகம் விரும்பினார். ஏன் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்ற கேள்வி அவரை ஆராய்ட்சிகள் செய்யத் தூண்டியது. இருவேறு வண்ணங்களை கலந்தால் இன்னொரு வண்ணம் கிடைப்பதுபோல வெள்ளை மலர்த் தாவரத்தையும், சிவப்பு மலர்த் தாவரத்தையும் இனச்சேர்க்கை செய்தால் அடுத்த தலைமுறைச் செடிகள் ஃபிங்க் வண்ணமாக இருக்கும் என்று பலஎ நம்பி வந்தனர். அதனை நம்ப மறுத்த மெண்டல் ஆராய்ட்சியில் ஈடுபட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த மனிதனின் உழைப்பைக் கேட்டால் வியந்து போவீர்கள்.



தன் ஆய்வுக்காக Pea Plants எனப்படும் பட்டாணிச்செடிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு பல்வேறு விதமான சோதனைகளைச் செய்தார் மெண்டல். உதாரணத்திற்கு குட்டையான செடியையும், உயரமானச் செடியையும் இனக்கலப்பு செய்து வளர்த்தார். வெவ்வேறு வண்ண மலர்கள் கொண்ட செடிகளை இனக்கலப்பு செய்து பார்த்தார். அவ்வாறு தான் செய்த ஒவ்வொரு இனக்கலப்பையும் கவணமாக குறிப்பெடுத்து ஆண்டுக் கணக்கில் ஆராய்ந்தார். ஒவ்வொரு செடியின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் இப்படி மிக நுணுக்கமான விபரங்களை அனுக்கமாக கவணித்துப் பொறுமையாகவும் சோர்ந்து போகமாலும், புள்ளி விபரங்களாகச் சேகரித்தார். சுமார் 8 ஆண்டுகள் கடுமையாக உழைத்து அவர் வளர்த்து பரிசோதித்த செடிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 28000 செடிகள். அத்தனைச் செடிகளையும் ஆராய்ந்த மெண்டல் செடிகளின் உயரம், நிறம், ஆரோக்கியம் போன்ற குணங்களை ஏதோ ஒன்று தீர்மானிக்கிறது என முடிவுக்கு வந்தார்.

அந்த ஏதோ ஒன்றுதான் மரபனு என்ற ஜீன்ஸ் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் அப்போது மெண்டல் அதனை கேரக்டர்ஸ் என்று அழைத்தார். அந்த ஆய்வுகளின் மூலம் அவர் கண்டுபிடித்ததுதான் ஹெரிடிட்டி எனப்படும் மரபுவழி விதிகள். 1865 ஆம் ஆண்டு தனது ஆராய்ட்சிகளை விளக்கி பிரண்ட் இயற்கை வரலாற்றுக் கழகத்திடம் சமர்பித்தார். Experiments with Plant Hybrids என்ற தலைப்பில் அவரது கட்டுரை பிரசுரமானது. மூன்று ஆண்டுகள் கழித்து மற்றொரு கட்டுரையையும் எழுதிச் சமர்பித்தார்.உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி இருப்பதற்கு மரபுக்கூறுகள்தான் காரணம் என்று பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு அந்த மரபுக்கூறுகள் செல்கின்றன என்றும், மரபுக்கூறுகள் இணையாகச் செயல்படுகின்றன என்றும் இரண்டு மரபுக்கூறுகள் ஒரு பண்பை நிர்ணயிக்கின்றன என்றும், எந்த மரபுக்கூறு வீரியமாக இருக்கிறதோ அந்த மரபுக்கூறு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்றும் வீரியம் குறைந்த மரபுக்கூறு அடுத்தடுத்த தலைமுறைகளில் வெளிப்ப்டலாம் என்றும் மெண்டல் அந்தக் கட்டுரைகளில் விளக்கியிருந்தார்.



அந்த உண்மைகள்தான் தற்போதைய ஜினெடிக்ஸ் எனப்படும் மரபுவழி பண்பியலுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. இருபதெட்டாயிரம் செடிகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் அந்த முடிவுகளில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தார் மெண்டல். ஆனால் அந்தக் காலத்தின் சிறந்த நிபுனர்களால்கூட  அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மெண்டலின் தத்துவம் சமகால விஞ்ஞானிகளின் சிந்தனையைவிட வெகுதூரம் முன்னேறியிருந்தது. ‘காலத்தை முந்திய கவிஞன்’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மெண்டலோ காலத்தை விஞ்சிய விஞ்ஞானியாக இருந்தார். அதனால் அவரது கட்டுரைகளும் முடிவுகளும் கிட்டதட்ட மறக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டன. அந்த சமயம் மடாலயத்தின் தலமைப் பொறுப்பு மெண்டலுக்கு கிடைக்கவே நிர்வாகப் பணிகள் காரணமாக அவரால் தனது தாவர ஆராய்ட்சிகளைத் தொடர முடியவில்லை.

1884 ஆம் ஆண்டு ஜனவரி 6ந்தேதி தனது 61 வயதில் கிரிகோர் மெண்டல் காலமானபோது அவரது அளப்பறிய ஆராய்ட்சி முடிவுகளை உலகம் கிட்டதட்ட மறந்துபோயிருந்தது. அவர் வாழ்ந்தபோது அவருக்கு எந்த கவுரமும் கிட்டவில்லை. அவர் இறந்து 16 ஆண்டுகள் கழித்து அதாவது 1900 ஆம் ஆண்டில் விஞ்ஞான உலகின் அதிசயங்களில் ஒன்று நிகழ்ந்தது. ஹியூகோ டி ரைஷ் என்ற டச்சு விஞ்ஞானி, ஃகால் கொரன்ஸ் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி,  எரிக் வார்ன் டிஷ்மார்க் என்ற ஆஸ்திரிய விஞ்ஞானி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி தனித்தனியாக தாவர ஆராய்ட்சிகளை மேற்கொண்டிருந்தனர். மூவருமே மெண்டல் கண்டுபிடித்த விதிகளை தாங்களும் கண்டுபிடித்தனர் என்பதுதான் ஆச்சர்யம். அவற்றைக் கட்டுரையாக எழுத எத்தனித்தபோதுதான் 34 ஆண்டுகளுக்கு முன் மெண்டல் எழுதிய கட்டுரையைப் படித்து வியந்தனர்.



தங்களுடைய ஆராய்ட்சிகள் மெண்டல் கண்டுபிடித்த விதிகளை உறுதி செய்கின்றன என்று மூவருமே தனித்தனியாக கட்டுரைகள் எழுதினர். அதே ஆண்டு மெண்டலின் கட்டுரைப் படித்த வில்லியம் பேட்ஷன் என்ற ஆங்கில விஞ்ஞானி அதனை அறிவியல் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். அந்த ஆண்டே மெண்டலின் வியத்தகு ஆராய்ட்சிகளையும், அவர் கண்டு சொன்ன விதிகளையும் போற்றத் தொடங்கியது உலகம். அவரது ‘மெண்டல் விதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன. தாவரங்களைக் கொண்டு செய்யப்பட்ட அந்த ஆராய்ட்சி முடிவுகள் மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். தற்போதைய நவீன அறிவியல் குறையுள்ள மரபனுக்கூறை தனிமைப்படுத்தி நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியமான உயிர்களைப் பிறப்பிக்கவும், நோய்களே வராமல் தடுக்கவும் முனைப்பாக முயன்றுகொண்டிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் வித்திட்டது கிரிகோர் மெண்டல் பொறுமையாக மணிக்கணக்கில் கொட்டிய உழைப்பும், சிந்திய வியர்வையும்தான்.

கிரிகோர் மெண்டலுக்கு வாழும்போது கிடைக்கவேண்டிய மதிப்பும், அங்கீகாரமும் கவுரமும் கிடைக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் உயிர் அறிவியலின் அடிப்படையையே கண்டுபிடித்த அவரை 'ஜினெட்டிக்ஸ் எனப்படும் மரபுவழிப் பண்பியலின் தந்தை’ என்று பெருமையுடன் சுமந்து நிற்கிறது வரலாறு. இது ஒன்றே அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். தேர்வுகள் எழுதுவது என்றாலே நடுக்கம் எடுக்குமாம் மெண்டலுக்கு, அப்படி தேர்வுகளில் தோற்றவர்தான் மனுகுலம் போற்றும் அறிவியல் ஆராய்ட்சிகள் மூலம் அழியாப்புகழ் பெற்றிருக்கிறார். தேர்வுகளில் முதலிடம் வாங்காவிட்டாலும் அவரது ஆராய்ட்சிகளுக்கு முதலிடம் கொடுக்கலாம். நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தும். நம்மால் சிறப்பாக செய்ய முடிந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு நூறு விழுக்காடு உழைப்பைத் தந்து தன்னம்பிக்கையோடு முன்னேறினால் எந்தத் துறையிலும் முதலிடம் பெறலாம் அதன்மூலம் நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்தலாம்.