Author Topic: வீண் செலவு வேண்டாமே!  (Read 1792 times)

Offline Yousuf

வீண் செலவு வேண்டாமே!
« on: October 30, 2011, 11:43:36 AM »
நாலு ஏக்கர் தென்னந்தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே....' என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் 'பே ஷன்' என்றோ 'டிரன்ட்' என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.

உங்களுக்கு எதிரே செல்லும் இளைஞனின் கையிலிருக்கும் செல்போனின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்பதுதான் பதறடிக்கும் உண்மை! நண்பனிடம் ஒரு ஐபோன் இருந்தால் தானும் ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என பலர் துடிக்கிறார்கள். புதிதாக என்ன மாடலில் செல்போன் வந்தாலும் அதை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பு இன்றைய இளைஞனிடம் காணப்படுகிறது.

தாங்கள் பட்ட கஷ்டத்தைத் தங்கள் பிள்ளைகள் படக் கூடாது ' என பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம் வீசுவார்கள். பணத்தின் அருமை பிள்ளைகளுக்குப் புரியாமல் போவதற்கு இதுவே கூட காரணமாகி விடுகிறது.

இளம்பெண்களிடம் இருக்கும் ஒரு பழக்கம், ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை வாங்கிக் குவிப்பது உடல் ஆரோகியத்துக்கு ஆபத்தானது, தோலுக்குத் துரோகம் இழைப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் கரடியாய் கத்தினாலும் பலரும் பொருட்படுத்துவதில்லை.
அழகு என்பது மேக்கப் பொருட்களால் வருவதல்ல, ஒரு சின்ன புன்னகையின் மின்னலில் மிளிர்வது என்பதை இளம்பெண்கள் உணர்ந்தாலே போதும். குறைந்தபட்ச மேக்கப் பொருட்களே போதும் உங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள.

ஹேய்... என்னோட சட்டை எப்படி இருக்கு? பிரபல கம்பெனியின் தயாரிப்பு... விலை இரண்டாயிரம் ரூபாய்... என பந்தா விடுவதில் பல இளைஞர்களுக்கு சில வினாடி சுகம் கிடைக்கிறது. இது தன்னம்பிக்கைக் குறைபாட்டின் வெளிப்பாடு என்கிறது உளவியல்.

பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கொண்டே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் மனம் இவர்களுடையது. தனது பணத்தை வீணாக பிறருடைய ' அபிப்பிராயத்துகாக ' செலவிடும் அப்பாவிகள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். நமது பணம் அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த அல்ல எனும் அடிப்படை உண்மை உணர்தல் முக்கியம்.

பலர் அலுவலகங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதையே கவுரவக் குறைச்சலாக நினைத்து விடுகிறார்கள். நண்பர்களுடன் உயர்தர ஹோட்டல்களில் உணவருந்துவதுதான் உயர்ந்தது என கருதிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் வார இறுதிக் கொண்டாட்டங்களுக்காக கடற்கரை ஓரங்களிலோ, ஹோட்டல்களிலோ அவர்கள் செலவு செய்யும் பணத்தில் ஏழைகளின் பட்டினியை பல வாரங்களுக்கு விரட்டலாம். வீட்டில் சாப்பிடுவது உங்கள் பர்சை மட்டுமல்ல, உங்கள் ஆரோகியத்தையும், குடும்ப உறவையும் வலுவாக்கும்.

சில சமயங்களில் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து இந்தப் பழக்கம் இளம் வயதினருக்குத் தொற்றுவதுண்டு. பல அம்மாக்களும், ஐயாக்களும் விளம்பரங்களைக் கண்டால் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். இலவசமாய்க் கிடைக்கும் கரண்டிக்காக பட்டு சேலை வாங்க முண்டியடிப்பார்கள்.

'சூப்பர் ஆபர்' என அடித்துப் பிடித்து வாங்கிய பொருட்களில் எத்தனை பொருட்கள் நமக்குத் தேவையானவை? 'கண்டிப்பாக வேண்டும்' என வாங்கிக் குவித்த பொருட்களை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் கொஞ்சம் அலசிப் பாருங்கள். ஒரு ஆண்டில் எத்தனை முறை அது பயன்பட்டது? அதை வாங்காமல் இருந்திருந்தால் என்னென்ன இழப்புகள் நேரிட்டிருக்கும்? வாங்கியதால் என்னென்ன நன்மைகள் வந்திருக்கின்றன? என கொஞ்சம் யோசியுங்கள்!

பாதிக்கு மேலான பொருட்கள் 'ஏண்டா வாங்கினோம்?' என நம்மை யோசிக்க வைக்கும் என்பது சர்வ நிச்சயம்.

தேவையான அளவு செலவு செய்வதும், சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சில சிறப்பும் பண்புகளாகும். குடும்பத்தை வலுவாக்கவும், அதன் மூலம் வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இது ரொம்பவே அவசியம்.

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப் போகிறேன் என்பதை முன் கூட்டியே திட்டமிடுங்கள். உதாரணமாக வீட்டு வாடகை, பயணச் செலவு, உணவு, போன்பில், இத்யாதி என பட்டியலிடுங்கள். அந்த பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கச்சிதமாக நிறுத்துங்கள் 'எது ரொம்ப முக்கியம்' என ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி அந்த வரிசைப்படி பொருட்களை வாங்க முயலுங்கள். மாத இறுதியில் நீங்கள் திட்டமிட்டபடி செயல் பட்டிருக்கிறீர்களா என்று பாருங்கள.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பேன் என முடிவெடுங்கள். அது எவ்வளவு என்பதை நீங்களே முடிவெடுங்கள். சின்ன வயதில் உண்டியலில் சேமிப்பதைப் போல், சட்டென எடுக்க முடியாத ஒரு வங்கியில் அந்த சேமிப்பு இருப்பது நல்லது.

புத்திசாலிதனமான இளைஞர்கள் வேலை கிடைத்த உடனேயே தங்கள் ரிட்டயர்மென்ட்டுக்காக சேமிக்க துவங்குவார்கள். சின்னத் தொகையாக இருந்தாலும், பணி வாழ்க்கை முடிந்த பின் அந்த பணம் நமக்கான பொருளாதார ஊன்றுகோலாய் மாறும்.

இளைஞர்கள் சிக்கிக்கொள்ளும் இன்னொரு இடம் கிரடிட் கார்ட். கிரடிட் கார்ட் இருபுறமும் கூரான வாள் போன்றது. சரியாகக் கையாலவில்லையேல் காயம் நிச்சயம். சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கான அட்வைஸ், 'என்ன செலவு செய்தாலும் பணப்பரிமாற்றமே வைத்துக் கொள்ளுங்கள்' என்பதுதான். செலவு குறையும் என்பது சர்வ நிச்சயம்.

பிரியத்துக்குரியவர்களுக்கு 'கிப்ட்' கொடுப்பதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கள். பரிசுப் பொருட்கள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை அன்பில் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பல வேளைகளில் கையால் நாம் உருவாக்கும் கடிதங்களோ, கை வினைப் பொருட்களோ தரும் ஆத்ம திருப்தி, போகும் வழியில் வாங்கிச் செல்லும் விலையுயர்ந்த பொருட்களுக்கு இருப்பதில்லை!

அப்படியே ஏதேனும் வாங்க வேண்டுமெனும் கட்டாயமெனில் முன்னமே திட்டமிடுங்கள். கடைசி நேரத்தில் அலைபாயும்போது செலவு அதிகமாகும். சில மாதங்களுக்கு முன்பே யோசித்தால் நல்ல விலைக்குப் பொருட்கள் கிடைக்கக்கூடும்.

இன்றைக்கு உங்கள் பின்னால் ஓடி ஓடி வரும் 'பர்சனல் லோன்' புதைகுழியில் மறந்தும் விழுந்து விடாதீர்கள். கால் வைத்து விட்டால் அப்படியே உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும். முதலில் வசீகரமாய்ப் பேசி பின் கோரமாய்ப் பல்லிளிக்கும். அதீத எச்சரிக்கை தேவை! பலரும் நண்பர்களை இம்ப்ரஸ் செய்கிறேன் பேர்வழி என லோன் வாங்கிக் குவிக்கும் பொருட்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை டைனோசர் மாதிரிக் கடித்துக் குதறிவிடும்.

பல இளைஞர்கள் நண்பர்கள் செய்கிறார்களே என்பதற்காக ஜிம், டென்னிஸ் கிளப், கிரிக்கேட் கிளப், நீச்சல் கிளப் என ஒரு பந்தாவுக்காக எல்லாவற்றிலும் உறுப்பினர் ஆகி விடுவார்கள். ஆனால் எதிலும் உருப்படியாகப் போவதில்லை. தேவையற்ற இடங்களில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தாலே கணிசமான பணம் சேமிக்கலாம்.

உங்களிடம் உறைந்து கிடைக்கக்கூடிய ஏதோ ஒரு திறமையைக் கூர் தீட்டினால் கிடைக்கக்கூடிய மரியாதை அலாதியானது. எழுத்தோ, ஓவியமோ, கணிதமோ, தையலோ ஏதோ ஒன்றில் உங்கள் ஸ்பெ ஷாலிட்டி இருக்கலாம். உங்களிடம் கார் இருக்கிறது என்பதை விடப் பெரிய கவுரவம் நீங்கள் நல்ல ஓவியர் என்பது ! இந்த உண்மையை உணர்ந்தாலே நீங்கள் பணத்தின் மூலம் அடுத்தவர்களை ஈர்க்கும் குணாதிசயத்திலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.


o உங்களிடம் என்ன இல்லை என்பதை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். என்ன இருக்கிறது என்பதை நினைத்து தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

o அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை விடுங்கள். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் அபிப்பிராயம் சொல்வதையும் தவிருங்கள்.

o என்ன செலவு செய்தாலும் அதன் நீண்டகாலப் பயன்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு துளிப் பணமும் பல கோடி மக்களுக்கு எட்டாக் கனி என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

o சூதாட்டம், மது, போதை போன்ற தவறான வழிகளுக்கு நிரந்தரப் பூட்டு போடுங்கள். உங்கள் வருமானத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சும் வேகமான வாய் அவற்றுக்கு உண்டு.

o பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டிருங்கள். நீங்கள் ஒரு நேரம் ஹோட்டலில் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதற்காகச் செலவிடும் பணத்தை ஒரு ஏழைக்குக் கொடுங்கள். கொடுப்பதில் இருக்கும் சுகம், வாங்கிக் குவிப்பதில் இருப்பதில்லை எனும் உண்மை உணர்வீர்கள்.

o பொருட்கள் எப்போதுமே நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆழமான நட்பும், அன்புமே நிரந்தர மகிழ்வைத் தருபவை என்பதைக் கவனத்தில் இருத்துங்கள்.

Offline RemO

Re: வீண் செலவு வேண்டாமே!
« Reply #1 on: October 30, 2011, 04:00:12 PM »
good one

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வீண் செலவு வேண்டாமே!
« Reply #2 on: October 31, 2011, 04:02:45 AM »
kaalaththuku kaalam maatram thevai padum onru veen selavu seiratha pathi solrenga... aana sampaathichu pooti vachu enna panna poram... anubavikurathula thapilathane... atha thappa anubavikama iruntha sari... matha padi anubavikurathula thapilai enrathu en karuthu



yow makeup potathana super figure erenga a >:( >:( >:(
                    

Offline Yousuf

Re: வீண் செலவு வேண்டாமே!
« Reply #3 on: October 31, 2011, 11:04:51 AM »
Nanum atha thaney sonnen selavu seiyalam atha thappana valila selavu seiyama irukanumnu >:( >:( >:(