Author Topic: திருமூலர் - திருமந்திரம்  (Read 43004 times)

Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #90 on: July 27, 2012, 02:26:53 PM »
நான்காம் தந்திரம்-

பதிகம் எண்:11. சாம்பவி மண்டலச் சக்கரம் (பாடல்கள்:9)

பாடல் எண் : 1
சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.

பொழிப்புரை : `சாம்பவி மண்டலம்` என்னும் பெயரினதாகிய சக்கரத்தின் அமைப்பினை யாம் சொல்லின், வரிசைக்கு எட்டு அறைகளாக எட்டு வரிசையில் அறுபத்து நான்கு அறைகளைக் கீறி, அவற்றின் நடுவில் நான்கு அறைகளை, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்னும் நான்கும் அருவத் திருமேனிகளாகக் கருதி, அவற்றையே அச்சக்கரத்தின் கண்களாக வைத்து, அனைத்தையும் முற்ற நோக்குதல் வேண்டும். அப்பொழுதே அச்சக்கர வழிபாட்டினை நாம் அறிந்தவராவோம்.
==============================================
பாடல் எண் : 2
நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே.

பொழிப்புரை : நாடறிந்த மண்டலமான இந்த நல்ல சக்கரத்தில் வளைதல் இல்லாது நேராய்ச் செல்லும் வீதிகளை நாற்புறத்தும் அமைத்து, அவற்றில் ஒவ்வொரு வீதிக் குள்ளாலும் நடுவில் இரண்டிரண்டு அறைகளை இடைவெளியாக விடுக. `நெடிய வீதி` எனப்பட்டவைகளில் உள்ள அறைகள் பதினாறாகும். இங்ஙனம் ஆனபின் வீதிக்குள் அமைந்த அறைகளின் எண்ணிக்கையும், உட்சுற்றில் உள்ள அறைகளின் எண்ணிக்கையும் தனித்தனி இருபதாம்.
==============================================
பாடல் எண் : 3
நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.

பொழிப்புரை : இருபது அறைகளை உடைய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவட்டமாய் நிற்கும். நல்ல வீதிகள் நான்கிலும் திசைக்கு நான்காகப் பதினாறு இலிங்க உருவங்கள் இருக்க, நடுவில் உள்ள நான்கு அறைகளிலும் அவ்வாறே நான்கு இலிங்கங்கள் நடுவில் உள்ள ஓர் இலிங்கத்துடன் நான்கு தாமரை மலர்களோடு நடுவொரு தாமரை மலரில் இருக்கும்.
==============================================
பாடல் எண் : 4
ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

பொழிப்புரை : எட்டு எட்டு(8X8) அறுபத்து நான்கு அறைகள் உள்ள இச்சக்கரத்தில் சுற்று வீதியில் உள்ளவை இருபத்தெட்டு, நடு வில் உள்ளவை நான்கு ஆக முப்பத்திரண்டுடன் திசைக்கு இரண்டாக நான்கு திசைகளிலும் இடைவெளியாக நிற்கும் அறைகள் எட்டுக் கூட அறைகள் நாற்பது. நடுவு நான்கு அறைகளின் நடுவையும் ஓர் அறை யாகக் கொள்ள, கூடிய அறைகள் நாற்பத் தொன்று இவைகளில் உடலெழுத்துக்களில் ஐவருக்கத்து இருபத்தைந்தையும் இருபத்தைந்து இலிங்கங்கட்கும் உரிய எழுத்துக்களாக நடுவண் ஐந்தில் தென்கிழக்கு முதலாகத் தொடங்கிப் பின் மேற்கு முதலாக வலஞ்சென்று இலிங்கங்கட்கு அணியவான கீழ் அறைகளில் அடைத்தல் வேண்டும்.

பின்னர் யகரமாதி நான்கு, ‹ கரமாதி நான்கு ஆக எட்டினையும் சுற்று வீதியில், இடைவெளியாக உள்ள எட்டு அறைகளில் மேற்கு முதல் வலமாக அடைத்து, உட்சென்று வெற்றிடமாய் உள்ள எட்டு அறைகளில் முறையே, `ள, க்ஷ, ஓம், சி, வா, ய, ந, ம` என்னும் எட்டு எழுத்துக்களையும் அடைத்து நிரப்பிச் செபித்தல் வேண்டும். செபிக்கின் குறையின்றி வாழலாம்.
==============================================
பாடல் எண் : 5
குறைவதும் இல்லை குரைகழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
திறம்அது வாகத் தெளியவல் லாருக்
கிறவில்லை என்றென் றியம்பினர் காண.

பொழிப்புரை : வேதத்தால் மூலமந்திரமாகச் சொல்லப்படுவதும் திருவைந்தெழுத்தே ஆதலின், அதனை அவ்வாறே தெளிய வல்லவர்கட்கு உலகப் பயன்களிலும் யாதும் குறைதல் இல்லை. வழிநிலைக் காலத்தில் `இறப்பு` என்பது இல்லாமல், சிவபெருமானது ஒலிக்கும் வீரக்கழலையணிந்த திருவடியும் கிடைக்கும் என்று, அறிந்தோர் பன்முறையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
==============================================
பாடல் எண் : 6
காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.

பொழிப்புரை : ஐம்புல நுகர்ச்சியவாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்களும், நினைக்கின்ற பல தெய்வங்களை வழிபடுதல், போற்றப்படுகின்ற திவ்யதலங்களில் வாழ்தல், பெருகி ஓடுகின்ற நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் ஆகியவற்றால் வரும் பயன்களும் நுகர்ச்சியும் நல்ல அறிவும், கவலையற்ற உறக்கமும், எல்லாம் தானேயாய் நிற்கும் பொன்னும் ஆகிய எல்லாம் இச்சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.
==============================================
பாடல் எண் : 7
ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

பொழிப்புரை : திருவைந்தெழுத்து எஞ்ஞான்றும் நன்மைக்கு ஏதுவாம் வழி உண்டாகவே செய்யும். அதனையே தெளிந்து வல்லாராதல் யாருக்குக்கூடும்! கூடுமாயின், நினைத்த வற்றை முடித்தல் கூடும். உலகில் நமக்குப் பகைவரும் இலாரவர்.
==============================================
பாடல் எண் : 8
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

பொழிப்புரை : திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் பகை, பெரியோர் இகழும் இகழ்ச்சி, இருவினை, பொருந்தாச் செயல்கள், இடையூறு என்பவை இல்லையாம். நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றக் கழுவித் தூய்மையைத் தரும் நீராம்.
==============================================
பாடல் எண் : 9
ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.

பொழிப்புரை : மண்ணும், விண்ணுமாகிய எல்லா இடத்திலும், பகலும், இரவுமாகிய எல்லாக் காலத்திலும் வாழ்தலை யுடைய எல்லா உயிரும், அவற்றின் உணர்வுமாய் இருப்பது திருவைந்தெழுத்து. அதனால், எதனை வேண்டுவோரும் அந்த மந்திரத்தை ஓதலாம். ஓதுவதால் உலகில் பிறர் அறிந்திலாத விடய இன்பமும், இறை இன்பமும் மிகவும் உளவாம்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #91 on: July 27, 2012, 02:28:13 PM »
நான்காம் தந்திரம்

பதிகம் எண்:12. புவனாபதிச் சக்கரம் (பாடல்கள்:12)

பாடல் எண் : 1
ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

பொழிப்புரை :  மேல் (1158) \\\"தக்க பராவித்தை\\\" என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட `ஸ்ரீவித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள மாட்டாத மெலியோர்க்கு அமைந்தது இச்சக்கரம் என்பது உணர்த்துதற்கு முதல் நான்கு மந்திரங்களால் ஸ்ரீவித்தையின் இயல்பே கூறுகின்றார். ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.
==============================================
பாடல் எண் : 2
ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

பொழிப்புரை :  மாணவனே, யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே மந்திரங்களில் தலையாயது. இம்மந்திரத்திற்குரிய தேவிதன் பெருமையை ஆராயின் இவளையன்றித் தெய்வம் வேறில்லையாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஸ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின்பக் கடலாயும் விளங்கும். இன்னும் ஆழ்ந்து நோக்கின், ஸ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் வடிவாகிய சிதாகாசமாம்.
==============================================
பாடல் எண் : 3
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

பொழிப்புரை :  பராசத்தியாய் உள்ளது ஒன்றே; அதுவே பரசிவத்திற்கு வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஸ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் உளவாம். இனிப் பராசத்தி ஒன்றேயாயினும் சிவன் அங்கியாய் நிற்கச்சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்றல் உண்மையால், எட்டாய்ப் பிரிந்து நிற்றல் உண்டாகின்றது.
==============================================
பாடல் எண் : 4
எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

பொழிப்புரை :  பராசத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய மேற்கூறிய எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்றொழியும். (ஒழியவே பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம்.) இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.
==============================================
பாடல் எண் : 5
ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.

பொழிப்புரை :  இதுமுதலாகவே புவனாபதிசக்கரம் கூறுகின்றார். வழிபடுவோர்க்கு எப்பயனையும் தருவதாய், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை எந்தத் துதியினாலேனும் துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து. நீ இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச் செய்து, பிறவி நீக்கத்தைச் சிறப்பாக விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.
==============================================
பாடல் எண் : 6
சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேலும், `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளி யில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அவ் இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயி ரெழுத்துப் பதினாறனையும் அகாரம் முதலாக முறையானே எழுதுக.
==============================================
பாடல் எண் : 7
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.

பொழிப்புரை :  சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடைநிலம் எட்டிலும் எட்டு ஹகார மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம், என்னும் பீசங்களை எழுதுக.
==============================================
பாடல் எண் : 8
மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

பொழிப்புரை : பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடு.
==============================================
பாடல் எண் : 9
பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

பொழிப்புரை :  புவனாபதியம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தைக் காமாதி குற்றங்களின் நீங்கித் தூய்மையுடையதாகப் பண்ணி, அகத்தில் அவளது உருவத்தை நினைவு கூர்ந்து, பின்பு வெளியில் கும்பம், (நிறை குடம்) விம்பம், (திருவுருவம்) இச் சக்கரம் என்பவைகளில், அவ்வம் மறைமொழிகளால், (மந்திரங் களால்) ஆவாகனம், (வரவழைத்தல்) தாபனம், (இருத்துதல்) சந்நிதானம், (முகநோக்கம்) சந்நிரோதனம், (வேண்டிக்கோடல்) என்பவைகளால் விளக்கம் பெற நிறுத்திப் பின் உபசாரங்கள், (முகமன்கள்) பலவும் செய்து முடித்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நில்.
==============================================
பாடல் எண் : 10
செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

பொழிப்புரை : புவனாபதியம்மைதன் வடிவில் விளங்குவன செம்மை நிறம், செம்பட்டு உடை , கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும், அவயங்களில் அவ்வவற்றிற்கு ஏற்ற அணிகலன்கள் தலையில் இரத்தின கிரீடம் என்பவாம்.
==============================================
பாடல் எண் : 11
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால \\\"நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.

பொழிப்புரை :  புவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். நிவேதனம் பால் அடிசிலேயாம். நிவேதிக்கும் மந்திரம் `ஓம் நாரதாயை சுவா:\\\" என்பது, இம் மந்திரத்தால் நான்கு திசைகளிலும் நிவேதனம் செய்தல் வேண்டும். வழிபாடு யாவும் முடிந்த பின்பு பாரங்முக அர்க்கியத்தால் அம்மையை முகம் மாற்றிய பின்பே நிர்மாலிய நிவேதனத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.
==============================================
பாடல் எண் : 12
சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.

பொழிப்புரை :  `சேடம்` எனப்படுகின்ற நிவேதப்பொருளைக் கைக்கொள்வதற்கு முன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை ஒடுக்கிக் கொள்ளுதற்குரிய மந்திரம் கிரியை பாவனைகளால் இருதயத்தில் ஒடுக்கி, யாவர்க்கும் அணுகுதற்கரிய மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வை; பின்பு இது நினைத்தவற்றை யெல்லாம் உனக்குக் கொடுக்கும்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #92 on: July 27, 2012, 02:29:48 PM »
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:13.

நவாக்கரிச்  சக்கரம் (பாடல்கள்:001-025)


பாகம் I

பாடல் எண் : 1
நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.
பொழிப்புரை :  நவாக்கரி சக்கரத்தின் இயல்பை நான் உனக்குச் சொல்லுமிடத்து, ஒன்பதெழுத்துத் தொகுதியில் ஒவ்வொன்றும் ஒன்பதெழுத்தாகின்ற முறையால் ஒன்பதெழுத்துக்கள், `எண்பத்தோரெழுத்து` என்னும் தொகை பெறும்படி ஒன்பதெழுத்தாய் நிற்கும் அத் தொகுதியாவது `ஸௌம்` என்னும் முதலினையும், `க்லீம்` என்னும் இறுதியையும் உடையது.
==============================================

பாடல் எண் : 2
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

பொழிப்புரை : `ஸௌம்` என்பது `முதல்` என மேற்கூறிய அவற்றோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம்,  ‹்ரீம்` என்பவை முறையே தொடர்ந்த பின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடி வெழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று சொல்; நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.
==============================================

பாடல் எண் : 3
நவாக் கரியாவதும் நானறி வித்தை
நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.
பொழிப்புரை :  நவாக்கரி சக்கர வழிபாடும் நான் சிறந்த ஒன்றாக அறிந்த வழிபாடாம். அதனால், நலங்கள் பல விளையும். ஆதலின், நவாக்கரி மந்திரத்தை நாம் புடைபெயரும் அளவாகக் கணித்தால், அம்மந்திரத்திற்குரிய சத்தி எல்லா நன்மைகளையும் தருவாள்.
==============================================

பாடல் எண் : 4
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.
பொழிப்புரை : நவாக்கரி சக்கர வழிபாட்டினால் பெருநன்மையைத் தருவதாகிய அனுபவ ஞானமும் அதற்கு ஏதுவாகிய கலா ஞானமும் வலியுற்று நிலைபெறும். அதற்கு முன்னே உம்முடைய வலிய வினைகள் உம்மை நோக்காது விட்டு ஓடிவிடும். `அஃது எவ்வாறு` எனில், இவ்வழிபாட்டினால், வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து, உமக்குத் துன்பத்தைத் தரஇருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டும் ஆதலால்,
==============================================

பாடல் எண் : 5
கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.
பொழிப்புரை :  நவாக்கரி சக்கரத்தை வெள்ளி, பொன், செம்பு என்னும் இவற்றுள் ஒன்றாலான தகட்டிலே அமையுங்கள்; பின்பு மனத்திலும் அதனை ஊன்றி நினையுங்கள். அங்ஙனம் நினைத்தலால் உள்ளத்தில் நிலைபெறுகின்ற அச்சக்கரம் உம்மை நோக்கி வருகின்ற வினைகளை வெல்லவும், உலகத்தை வெற்றிகொள்ளவும் நீவிர் நினைப்பீராயின் நினைத்த அளவிலே அப்பயன்களை உங்களுக்குத் தரும்.
==============================================

பாடல் எண் : 6
நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.
பொழிப்புரை :  உன்னத் தக்க க்லீம் என்பவற்றை ஈறாக உடைய நவாக்கரங்களை அங்ஙனமே வைத்து உன்னப்படுகின்ற சக்கரத்தின் முதலெழுத்து முதல் ஈற்றெழுத்து முடிய, இச்சக்கர சத்தி தன்னுள்ளே விரும்புகின்ற செந்நெல், அறுகம் புல் என்பவற்றை நீயும் மனத்திலே கொண்டு அவற்றைக்கொண்டு அருச்சனை செய். அப்பொழுது உனது அருச்சனையை அச்சத்தி ஏற்றுக்கொள்வாள்.
==============================================

பாடல் எண் : 7
நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
பொழிப்புரை : வழிபடுவார்க்கு நேர் வந்து அருள் புரிகின்ற அந்தச் சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள்? அழகிய தேவியாகிய அவள் மேகம் போலும் நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பு செல்லும் வண்ணம் நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை யெல்லாம் உனக்குக் கைகூடும்.
==============================================

பாடல் எண் : 8
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.
பொழிப்புரை : இச்சக்கர சத்திபால் நீ அன்புசெய்து ஒழுகினால் நீ இவ்வுலகில் நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; கூற்றுவன் உன்னைக் கொண்டு போவதற்குக் குறித்துவைத்த நாளும் அங்ஙனம் கொண்டுபோகாமலே கடந்துவிடும். உனது பெயர் உலகெங்கும் பரவும்; உனது உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல விளங்குவதாகும். இப்பயன்களை யெல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.
==============================================

பாடல் எண் : 9
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.
பொழிப்புரை : பொன், வெள்ளி, நவமணிகள் ஆகிய பொருள்கள் யாவும் குறைவின்றி உன்பால் வந்துசேரும்; நல்வினையாலன்றிச் சிவனது அருளால் ஆம் செல்வங்கள் கிடைக்கும். தேவர்கள் பதவியும் தாமாகவே வரும்; இவையெல்லாம் இங்ஙனம் ஆமாற்றை அறிந்து இச்சக்கர வழிபாட்டினை நீ செய்.
==============================================

பாடல் எண் : 10
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.
பொழிப்புரை : மெய்யறிவுடையோர் உண்மை அமரர்களாதல் பொருட்டு அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் பிளந்துகொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையைச் சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் பணிகின்ற சத்தியை நீவிர் வழிபட்டு மேற்கூறிய பயன்களைப் பெறுங்கள்.
==============================================

பாடல் எண் : 11
நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம்
தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.
பொழிப்புரை : நீங்கள் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்பதில் \\\"ஹ்ரீம்\\\" என்பது முதலாகவும், `ஷ்ரீம்` என்பது இறுதி யாகவும் அமையும் வகை சிறந்ததாகும்.
==============================================

பாடல் எண் : 12
கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.
பொழிப்புரை :மேற்கூறிய வகைச் சக்கரத்தின் வழியே ஒப்பற்ற அச்சத்தியைக் காணுங்கள். கண்டால், முகந்து கொள்ளலாம் போலும் முக வசீகரம் உங்கட்கு உண்டாகலாம். அநாதி பரஞ்சுடராகிய சிவபெருமானும் நீவீர் காணநின்று, அழிவற்ற அவளைத் தன்பால் எடுத்து வைத்துக்கொள்வான்.
==============================================

பாடல் எண் : 13
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.
பொழிப்புரை : நீங்கள் பெறத் தக்க பேறுகட்கெல்லாம் உரியவளாகிய சத்தியின் பெருமையை அறிந்து வழிபட்டால் மன்னரும் நம் வசப்படுவர்; பகைவர்கள் சீவித்திரார். ஆதலின், சிவனது ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீவிர் துதியுங்கள். இரண்டாம் அடி உயிரெதுகை.
==============================================

பாடல் எண் : 14
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.
பொழிப்புரை : சத்தி எல்லா உலகங்களையும் உடையளாதலை அறிந்து துதியுங்கள்; அதனால், உலகின் சில பகுதிகட்குத் தலைவராயுள்ள தேவர்களது வாழ்வு வேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; பின்னும், மீள மீள இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்குங்கள். முடிவாக அச்சத்தியது திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.
==============================================

பாடல் எண் : 15
சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.
பொழிப்புரை :சத்தி தன் திருவடியில் சேர்ந்து நீங்காது இருக்க எண்ணினவர் அவளது மந்திரத்தை நாவிற்குள்ளே சொல்லித் துதிப்பர். புறத்திலே மலர்களை அவளது திருவடியிலே தூவி விளக்கம் பெற்றிருப்பவர், அவளது பெருமை பொருந்திய திருவடிகளைத் தரிசிக்கும் வழியை அறிந்தவராவர்.
==============================================

பாடல் எண் : 16
ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே.
பொழிப்புரை : நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற சக்கரம் அந்த `ஐம்` என்பது முதலாகப் பொருந்திப் பின்பு, `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் உடைய தாகும். அந்த `ஐம்` என்பதை முதலாகக் கொண்ட அனைத்தெழுத்துக் களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.
==============================================

பாடல் எண் : 17
வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப்
பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.
பொழிப்புரை :மேற்கூறிய சக்கர சத்தி சிவாகமங்கள் கூறும் வாகீசுவரியாம், `வேதம்` என்றும், `ஆகமம்` என்றும் இவ்வாறு பலவாகப் பகுத்துச் சொல்லப்படும் நூல்கள் அனைத்தையும் தனது ஒரு நாவினாலே எளிதிற் சொல்ல வல்லவளாகிய இச்சத்தியை நீங்கள் உங்கள் வாக்கிலும் விரையத் தோன்றும் வண்ணம் வணங்குங்கள்.
==============================================

பாடல் எண் : 18
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.
பொழிப்புரை :மேற்சொல்லிய வகையில் அறியப்பட்ட இச்சக்கரத்தினை நாவில் பதித்துக்கொண்டால், இதற்குக் கொள்ளப் பட்ட இந்த எழுத்துக்களே சிவனது எழுத்துக்களாய் விடும். அதனால், திருவம்பலத் தியானமாகிய தகர வித்தையும் மக்களுக்குக் கைவர, ஞானசத்தி பதிதலால், இவ்வழிபாட்டைச் செய்பவனும் உலக மாயையை வெல்லுபவனாவான்.
==============================================

பாடல் எண் : 19
மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லிய லாக நடந்திடுந் தானே.
பொழிப்புரை :மெய்ப்பொருளாம் இயல்பினளாகிய இச்சத்தியை இங்குக் கூறிய இம்மந்திரத்தின் வழியே பற்றி அவ்வழிபாட்டில் நில்லுங்கள். பல்வேறு வகையினவாய் மிக்குச் செல்லுகின்ற உங்கள் நாள்கள் பலவும் நல்ல நாள்களேயாய்ச் செல்லும்.
==============================================

பாடல் எண் : 20
நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.
பொழிப்புரை : இச்சக்கர சத்தி வாகீசுவரி யாதலின், இவளது அருள் கிடைக்கப் பெற்றவனுக்கு அவன் வேண்டிய நன்மைகள் யாவும் அவன் சொன்ன அளவிலே அங்ஙனமே முடியும். வழக்கும் செய்யுளுமாய்த் தொடர்கின்ற சொற்கள் அனைத்தையும், அவற்றின் பொருளோடு அவன் முற்ற உணர்ந்தவனாவான். விரிந்துகிடக்கின்ற இவ்வுலகில் ஓரிடத்தும் அவனுக்குப் பகையாவர் இல்லை. (நண்பரும் உறவினருமே உளராவர் என்பதாம்.)
==============================================

பாடல் எண் : 21
பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம்
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.
பொழிப்புரை : இனி, `கௌம்` என்பதை முதலாகவும், `ஐம்` என்பதை இறுதியாகவும் கொண்ட சக்கரத்தின் பெருமையை நன்கு அறிந்து வழிபடுகின்றவர்கட்கு இவ்வுலகில் வெளிப்படையாய் வருகின்ற பகைவரும், மறைவாக நின்று புறங்கூறுபவரும் இலராவர். (நண்பரும், உறவினருமாய் நெஞ்சாரப் புகழ்கின்றவரே உளராவர் என்றபடி.) மேலும் பல்வேறு வகையினவாய உயிர்களும் இவனை எதிர்க்க வழியில்லாமல் பணிந்து நடக்கும். யான் சொல்லிய இவை மிகையாதல் இல்லை; உண்மையேயாம்.
==============================================

பாடல் எண் : 22
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.
பொழிப்புரை : மும்மலங்களால் வருந்துகின்ற பல உயிர்களுள் பக்குவம் எய்தப் பெற்ற உயிர்கள் சத்திதன் பெருமையை உணர்ந்து அவளை வணங்கும். அவ்வணக்கத்தின் பயனாக அவைகளைப் பற்றியுள்ள, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களும் நீங்கும். அவை நீங்கவே `அவற்றால் உண்டாகும்` என நூல்கள் சொல்லிய வினைகளும் இல்லையாம்.
==============================================

பாடல் எண் : 23
தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே.
பொழிப்புரை : பக்குவ முதிர்ச்சியால் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றைத் தானே திருத்தியமையவும், தான் ஆய்ந்துணர்ந்த வற்றைப் பிறருக்குச் செவியறிவுறுக்கவும் வல்லனாய், இறைவனது ஒப்பற்ற நடனத்தை எஞ்ஞான்றும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டுச் சமயத் தலைவனாயும் விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 24
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

பொழிப்புரை : தானே எல்லாமாய் நிற்கின்ற சத்தி, அனைத்துயிராகியும் நிற்கின்றாள். எல்லாப் பொருள்களும் தம் தன்மையில் தாமேயாயும், சத்தியின் வியாபகத்தால் தம்மை ஈன்ற அவளாகியும் நிற்கும். ஆகையால் பக்குவன் அவளை வணங்கிய வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆகிய பயன்களை எய்துவான்.
==============================================
பாடல் எண் : 25
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை : சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் உலக முழுவதும், தவ மிகுதியால் வரும் பெருமையுடையவானகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவர்க்கும் உரியவனாய் விளங்குவான்.


Offline Anu

Re: திருமூலர் - திருமந்திரம்
« Reply #93 on: September 25, 2012, 12:40:56 PM »
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:13.

நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:026-050)


பாகம் II

பாடல் எண் : 26
தானது கம்இரீம் கௌமது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்திக்
கேனது! வையம் கிளரொளி யானதே.

பொழிப்புரை : தானே சக்கரமாகின்ற முதலெழுத்து `க்ரீம்` என்பதும், ஈற்றெழுத்து `கௌம்` என்பதுமாக அமைகின்ற அந்தச் சக்கரமே ஞானத்தை விரும்புவார்க்கு நான் சொல்வது. அது சத்திக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற நல்ல சோலையாய் விளங்கும். ஆயினும், அதில் வேறறக் கலந்து நிற்கின்ற அவளுக்கு அஃது எதன்பொருட்டு வேண்டும்! உலகம் ஒளி பெற்று விளங்குவதே அதன்பயன்.
==============================================
பாடல் எண் : 27
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின்
களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.
 
பொழிப்புரை : இச்சக்கத்தில் நின்று ஞானத்தை வழங்குகின்ற சத்தி ஒருவனது உள்ளத்தில் நிலைபெறுவாளாயின், அவனது உள்ளம் அவனையும் அறியாமல் ஒரு களிப்பினை யுடையதாகும். தன் அடியவரைப் பல்லாற்றானும் நன்னிலையில் வைத்துக் காக்கின்ற இச்சத்தியது பெருமையை அறிந்து இவளை அடைகின்றவர்கட்கு இது பற்றிய ஆராய்ச்சியில் இதனைக் காரணங் காட்டித் தெளிவிப்ப தாகிய அருள்மழையுடன், பொருட் செல்வத்தையும் இவள் உண்டாக்குவாள்.
==============================================
பாடல் எண் : 28
அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே
எறிந்திடும் வையத் திடரவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.

பொழிப்புரை : உண்மையை நோக்குமிடத்து, இங்கு அறியப் படுகின்ற இச்சக்கர வழிபாட்டினால் உலகத்துன்பங்கள் அழிக்கப் படும். பிணங்குகின்ற அரசனும் இணங்கி வணங்குதல் செய்வான். தீக்குணத்தை உடைய உள்ளம் அஃது இன்றித் திருந்தும்.
==============================================
பாடல் எண் : 29
புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.

பொழிப்புரை :  மேற் சொல்லியவாறு தீக்குணம் அகலும்; முன்பு யோக நிலையிற் சொல்லிய பொன்போலும் உடல் ஒளியும் உண்டாகும். பகை யாதும் இல்லாமையால், அரண்தேட வேண்டுவ தில்லை. இப்பயன்களைப்பெற உலகருக்கு வகை இல்லை. தனக்கு மேல் ஒன்றில்லாத இச்சக்கர வழிபாட்டினை மேற்கொண்டவர்க்கே இவை கிடைப்பனவாம்.
==============================================
பாடல் எண் : 30
சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

பொழிப்புரை :  இச் சக்கர வழிபாட்டினை மேற் கொண்ட வரிடத்தில் மிக விரைந்து எழுகின்ற உள்ளொளியாகிய ஞானம் உலகில் பலராலும் அறியப்படும். ஆதலின், ஆணவத்தால் விளையும் அறியாமையும், திரிபுணர்வும் கெடும். அதனால் இவர்கள் எட்டுத் திசைக்கும் விளக்குப்போல்பவரும், தம்மை வந்து வருத்துகின்ற ஆகாமிய வினை தோன்றப்பெறாதவரும் ஆவர்.
==============================================
பாடல் எண் : 31
ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளியது ஞானமும் சிந்தையும் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.

பொழிப்புரை : ஒளியை உடையதாகிய `ஹௌம்` என்னும் பீசத்தை முதலிலும், `க்ரீம்` என்னும் பீசத்தை இறுதியிலும் கொண்ட, களிப்பைத் தருவதாகிய அச்சக்கரத்தின் உண்மையை நன்குணர்ந்த வர்கட்குத் தெளிவாகிய ஞானமும் தோன்ற, அதனை உள்ளமும் பற்ற, அதனால், அச்சக்கரம் எல்லா ஞானத்திற்கும் இடமாயுள்ள திருவைந்தெழுத்துமாய் விடும்.
==============================================
பாடல் எண் : 32
ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.

பொழிப்புரை :  `சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் மூன்று மாயைகளினின்றும் மூவகைக் கருவிகளைத் தருபவளாகிய சத்தி, அக்கருவிகளைப்பெறும் உயிர்களாய் நிற்றலே யன்றி, இச் சக்கரத்துள்ளும் இதுவேயாய் நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 33
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.

பொழிப்புரை :  இச்சக்கரத்தில் நின்றும், உலக முழுதையும் தன்னுடையதாகக் கொண்டும், என் உள்ளத்திலும் இருந்தும் எல்லாப் பொருளும் தன்னிடத்தில் அடங்க நிற்கின்ற சத்தி, பஞ்ச பூதங்களின் உள்ளும், என் கண்ணின் உள்ளும், உடம்பின் உள்ளும் காணக் கூடியவளாகின்றாள்.
==============================================
பாடல் எண் : 34
காணலு மாகும் கலந்துயிர் செய்வன
காணலு மாகும் கருத்துள் இருந்திடில்
காணலு மாகும் கலந்து வழிசெயல்
காணலு மாகும் கருத்துற நில்லே.

பொழிப்புரை : சத்தியின் துணையாலே உயிர்கள் செயற்பட்டு வரும் முறைகளை உணரலாம். `எப்பொழுது` எனின், அவள் உனது உள்ளத்தில் விளங்கும்பொழுது. அப்பொழுதே அவள் உயிர்களுக்கு உய்யும் வழியைச்செய்து வருதலையும் உணரலாம். ஆதலின், இவ்வுணர்வுகளைப் பெற நீ உனது உள்ளம் அவளிடத்திற்பொருந்தும் வகையில் நிற்பாயாக. 
==============================================
பாடல் எண் : 35
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே. பொழிப்புரை : சத்தியது தியானத்தால் ஏழுலகங்களில் ஒன்றைச் சுட்டியறியும் ஏகதேச உணர்வு நீங்கப்பெற்று, அனைத்தையும் ஒன்றாகக் காண்கின்ற வியாபக உணர்வு வரப் பெற்ற உயிர் அவ்வுணர்வானே தனது வியாபகத்தையும் உணர்வதாகும். அதனால், முக்குண வயப்படுதலும், வினைத் தொடக்கும் ஒழியும். அஃது ஒழியவே, அவ்வுயிர் மெய்ப்பொருளைத் தலைப்படும்.
==============================================
பாடல் எண் : 36
மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

பொழிப்புரை : சத்தி `அமுதேசுவரி` என்னும் பெயருடன், மெய்ப் பொருளை உணர்த்தும் `ஔம்` என்னும் பீசம் முதலாகவும், `ஹௌம்` என்னும் பீசத்தை ஈறாகவும் பொருந்திக் கைப்பொருள்போலத் தப்பாது பயன்தருகின்ற சக்கரத்தைத் தனது பொருளாகக் கொண்டு நன்மையைத் தருகின்ற ஒருபொருளாய் அதன் நடுவில் இருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 37
தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

பொழிப்புரை : இச்சக்கரத்திலே தனது திருவடி பொருந்த நிற்கின்ற அமுதேசுவரி வாசி யோகத்தால் வெளிப்படத் தோன்றும்படி பிராண வாயுவை அவள்பாற் கலக்கச் செய்யின், ஒவ்வொரு நாளும் புதுமைகள் பல தோன்றும். உடம்பும் அழிதலை யொழிந்து நிலை நிற்கும். ஆதலின், அங்ஙனம் செய்யப்படும் யோக முறையை வல்லார் வாய்க் கேட்டு, அதனை மேற்கொள்வாயாக.
==============================================
பாடல் எண் : 38
கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.

பொழிப்புரை :  பேரொளிப் பொருளாகிய அமுதேசுவரியை மேற்கூறியவாறு கண்டபின் காண விரும்பவேண்டுவது ஒன்றும் இல்லை; உடம்பிற்கு அழிவும் இல்லை. அழிவு இல்லாமையால், நாள் முதலிய பாகுபாடுகளையுடைய காலம் நீங்கினமையின், காலத்தோடு கூடியே தம் பயனைத் தருகின்ற இடப்பாகு பாடுகளும் இல்லையாம். இனி முற்கூறிய பேரொளியால் உயிரினது குறிக்கோள் பொருந்திய இடத்திற்குச் செல்லும் வழி நன்கு காணப்படுதலின், அதன்பின் அவ்வழியை மூடி மறைக்கும் வினைக்காடு இல்லையாம்.
==============================================
பாடல் எண் : 39
உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக்
கற்றிடமெல்லாம் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.

பொழிப்புரை :  கிளரொளியாகிய அமுதேசுவரியைக் கண்டபின் அக்காட்சி சலித்தற்குச் சிறிதும் இடனில்லாதபடி உறைத்து நில். நின் றால், காணப்பட்ட இடங்கள் யாவும் அழிவற்ற பாழாய், கற்ற நூல்கள் தாமும் வெற்ற வெளியாய் அவ்விடத்திற்குப் பயன் செய்யாதவை யாய்விடும். அங்ஙனம் ஆகாத இடங்களும், நூல்களும் இல்லை யாம். அதனால், அவளிடத்தினின்றும் விலகிச் செல்லுதற்கு ஏதுவே யில்லை. இனி, விலகிச்செல்ல, `தான்` என்று ஒரு முதலும் இல்லையாம்.
==============================================
பாடல் எண் : 40
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

பொழிப்புரை :  அமுதேசுவரியைச் சலிப்பின்றிக் காணின், நிலை பெற்றுள்ள ஏழ் கடல், ஏழ் நிலம் முதலியயாவும், அலைவின்றி நிலைத்த அவ்வுள்ளத்தில் நினைத்தவாறே ஆகும். முடிவாக கிளரொளி யாகிய அச்சத்தி ஒழிவின்றித் தன்னிடத்தில் நிலைபெற்று நிற்கும்.
==============================================
பாடல் எண் : 41
விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.

பொழிப்புரை : விளக்கொளி போல்வதாகிய `ஸௌம்` என்னும் பீசம் முதலும், `ஔம்` என்னும் பீசம் ஈறும் ஆகி நிற்பின் அச் சக்கரம் விளக்கொளிச் சக்கரமாம். அது மெய்ப்பொருளாயே நிற்கும். எல்லா வற்றையும் விளக்கியருள்கின்ற ஒளியாகிய சத்தியை அச்சக்கரத்தில் விளக்கொளி வடிவமாகவே நீ கருதி வழிபடு.
==============================================
பாடல் எண் : 42
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

பொழிப்புரை : விளங்கி நிற்பதாக மேலைமந்திரத்திற் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை இன்னதெனக் கூறின், அது சிவ சத்தியேயாம். தானே விளங்குந் தன்மையுடையதும், மெய்ம்மையானதும், அறிவே வடிவாய் உள்ளதும் ஆகிய அந்தப்பொருளை உணர்பவர்களே ஞானம்பெற்றவராவர்.
==============================================
பாடல் எண் : 43
தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகளமே.

பொழிப்புரை : மேற்கூறிய மெய்ப்பொருளாகிய ச்ததி, தான் ஒருத்தியே பூதாகாயமாகி எங்கும் நிறைந்தும், பராகாயமாகி எல்லா வற்றிற்கும் மேலாகியும் நிற்பாள். தானே எல்லாப் பொருளையும் தோற்றுவித்து அழிப்பவளாவாள். தானே பலவாயுள்ள அண்டங் களையும் தனது வடிவமாக உடையவளாவாள்.
==============================================
பாடல் எண் : 44
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே. 

பொழிப்புரை : அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சத்தியது தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில் பலர் மந்திரம் கிரியை பாவனைகளால் காண்பார்களாயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்கும் நிலையை அவர் அறிதல் இல்லை.
==============================================
பாடல் எண் : 45
கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார் சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே. 

பொழிப்புரை : சிவ சத்தி இருக்க அவளை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.
==============================================
பாடல் எண் : 46
தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே. 

பொழிப்புரை :  ஒன்ப தெழுத்துக்களால் இயல்பாக அமைந்த சக்கரத்தின் இயல்பைக் கூறின், நெடுக்காகப் பத்துக் கோடும், குறுக்காகப் பத்துக் கோடும் இட்டு, ஒன்பதிற்றொன்பது (9X9) எண்பத்தொன்றாகின்ற அறைகளை அறிவாயாக.
==============================================
பாடல் எண் : 47
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே. 

பொழிப்புரை : மேற்கூறிய சகக்ரத்தின் இயல்பை இன்னும் சொல்லும்பொழுது, வெற்றியைக் கொண்ட அதன் வடிவமாகிய அறைகளின் நிறம் பொன்மை; அழுந்த இடப்பட்ட கோடுகளின் நிறம் செம்மை. ஞாயிற்றைப் போல ஒளிவிட்டு விளங்கும் சத்தி வடிவ மாகிய எழுத்துக்களின் நிறம் பச்சை.
==============================================
பாடல் எண் : 48
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே. 

பொழிப்புரை :  பொருந்திய மர உரியில் (மரப் பட்டையில்) எழுதப்பட்டுப் பொருந்திய எழுத்துக்களை மேற்சொல்லிய எண்பத் தோர் அறைகளில் அடைத்த பின்பு, வெண்ணெய் அப்பொழுது காய்ந்து அடங்கியதனால் உண்டான நெய்யில் நன்கு ஆய்ந்த அரிசியால் முறைப்படி அடப்பட்ட சோற்றைக் கலந்து ஆயிரமுறை ஆகுதியால் ஓமம் பண்ணி வழிபடுங்கள்.
==============================================
பாடல் எண் : 49
பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென மேயநற் சொக்கனு மாமே. 

பொழிப்புரை :  மேற்கூறிய முறையில் ஓமம் செய்து அச்சத்தியை நீ மெல்லப் பிடித்தால், கணக்கிட்டுக் கூறப்பட்ட நாள்களுக்குள்ளே நன்மை உண்டாகும். ஒமத்தைச் செம்மையாக வளர்த்தமையால், `பிரமனுக்கு நிகரான பிராமணனாயினான்` என்ற புகழை உலகத்தார் சொல்லும் அளவிற்கு இவ்வழிபாட்டில் சிறந்து நின்றபின், விரைவில் அவன் மிக உடல் அழகு பெற்றும் விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 50
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே. 

பொழிப்புரை :  மேற்கூறிய சக்கரத்திற்கு ஆகும் பொருள்கள், `சந்தனம், குங்குமப்பூ, மான்மதம், கண்ணேறு போதற்கு ஏதுவான கருஞ்சாந்து, சவ்வாது, புனுகுசட்டம், நெய், கோரோசனை, நீர்` என்னும் ஒன்பதுமாம். இவற்றை ஒருங்கு கூட்டி வைத்துக்கொண்டு வழிபாட்டினைத் தொடங்குவாயாக.