தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

<< < (5/5)

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 21

திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள்

வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.


அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா சிண்ட்ரம் (The Niagara Syndrome) என்ற பிரச்னையில் கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறுகிறார். அந்தப் பிரச்னையில் திட்டமில்லா மனிதர்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.


“வாழ்க்கையை ஒரு நதியாகச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் எங்கே போய் முடிய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலேயே அதில் குதித்து விடுகின்றனர். விரைவிலேயே வாழ்க்கை நதியின் அவ்வப்போதைய நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போதைய நிகழ்வுகள், அப்போதைய பயங்கள், அப்போதைய சவால்களை எதிர்கொள்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை நதியில் கிளைகள் வரும் போதும் அவர்கள் எந்தப் பக்கம் போவது என்றோ, எதில் செல்வது இலாபகரமானது என்றோ கவனம் கொடுத்து தீர்மானிப்பதில்லை. தானாக எதில் கொண்டு போய் விடுகிறதோ அதில் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இப்படி அரை மயக்கத்தில் செல்லும் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தட்டி எழுப்புவது தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் ஓசை தான். விழித்துக் கொள்ளும் போது தான் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஐந்தடி தூரத்தில் துடுப்பில்லாத படகில் வேகமாக வந்து கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நேரத்து ஞானோதயம் காலம் கடந்ததாக இருந்து விடுகிறது. அந்த வீழ்ச்சியில் விழுந்தே தீர வேண்டியிருக்கிறது. அது உணர்ச்சிகளின் வீழ்ச்சியாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம், பொருளாதார வீழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக சரியான முடிவுகளைத் திட்டமிட்டு எடுத்திருந்தால் இதைக் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்.”


திட்டமிடா விட்டாலும் வாழ்க்கை நகரத்தான் போகிறது. ஆனால் அது போகும் பாதை நமக்கு அனுகூலமாக இருக்கத்தான் வாய்ப்பில்லை. அந்தோணி ராபின்ஸ் கூறுவது போல அது ஏதோ ஒரு வீழ்ச்சியில் என்றோ ஒரு நாள் உங்களை வீழ்த்தக்கூடும். திட்டமில்லா மனிதர்களுக்குத் திறமையும், உழைப்பும், உற்சாகமும் பெரிதாக பயன்பட்டு விடப்போவதில்லை. காரணம் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. காட்டாறு போல பிரவாகம் எடுத்து வரும் அனைத்தும் கட்டுப்பாடான கரைகளுக்குள் இல்லாமல் கண்டபடி எல்லா பக்கங்களிலும் போவதால் சீக்கிரமே வடிந்து விடுகிறது. அதனால் ஒரு சமயத்தில் பிரம்மாண்டமாகத் தெரிகிற வளர்ச்சி இன்னொரு சமயத்தில் கண்ணிற்கே தென்படுவதில்லை.


திட்டமிடாதவர்கள் வாழ்க்கையை அவர்களைத் தவிர அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு நகர்த்துகிறார்கள். மற்ற சூழ்நிலைகளும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மற்ற மனிதர்களும் சூழ்நிலைகளும் தீர்மானிக்கும் போது அதை எதிர்க்கும் சக்தி திட்டமில்லா மனிதர்களுக்கு இருப்பதில்லை.


வாழ்க்கை என்ற நீண்ட ஓட்டத்தை விடுங்கள். ஒரு விடுமுறை நாள் என்ற குறுகிய காலம் கூட திட்டம் என்று ஒன்று இல்லா விட்டால் நமக்கு பயன்படும்படி அமைவதில்லை. அந்த நாளில் ஒரு பகுதியை வம்புப் பேச்சு கழித்து விட முடியும். இன்னொரு பகுதியை டிவி திருடிக் கொண்டு விட முடியும். இன்னொரு பகுதியைத் தேவையோ, உபயோகமோ இல்லாத இன்னொரு செயல் இழுத்துச் சென்று விட முடியும். மீதிப்பகுதியை சோம்பலோ, ஊர்சுற்றலோ எடுத்துக் கொண்டு விட முடியும்.


ஆனால் முன்கூட்டியே திட்டம் என்று ஒன்றிருக்குமானால், நாம் செய்ய வேண்டியவை இன்னதெல்லாம் என்று முன்கூட்டியே தீர்மானம் ஒன்று இருக்குமானால் அந்த நாளை மேலே சொன்ன எதுவும் நம்மிடம் இருந்து பிடுங்கிச் சென்று விட முடியாது. அதற்கான அவகாசத்தையே நாம் தந்து விடப் போவதில்லை.


திட்டமிட்டால் மட்டும் அப்படியேவா நடத்தி விட முடிகிறது என்ற நியாயமான கேள்வியைக் கேட்கலாம். நாம் ஒன்று நினைத்தால் நாம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அத்தனை திட்டத்தையும் பாழடிக்கிற மாதிரி வந்து சேரலாம். அது தான் வாழ்க்கையின் யதார்த்தமும். ஆனால் திட்டம் என்று ஒன்று இருக்கையில் அந்த சூழ்நிலையில் இருந்து எவ்வளவு வேகமாக வர முடியுமோ அந்த அளவு வேகமாக வெளியே வந்து விடுகிறோம். முன்னமே திட்டம் இட்ட சில வேலைகளையாவது செய்து முடிக்கிறோம்.


நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டி இருக்கிறது, நம் வாழ்க்கை எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும். பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் ஆரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிகக் குறையும். ஊர்வம்பில் சேர்வதற்கோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கோ நம்மை அது விடாது. இப்படி நமக்கு பயன்படுவதற்கு மட்டுமல்லாமல் அடுத்தவரைத் தொந்திரவு செய்யாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுவது உதவும்.


திட்டமில்லாத மனிதர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் உறைக்கும். நயாகரா சிண்ட்ரம் என்று அந்தோணி ராபின்ஸ் சொன்னது போல என்ன நிலவரம் என்பது வீழ்ச்சிக்கு முன்னால் தான் புரியும். அந்த நேரத்தில் என்ன தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதிக வேகமும், செயல்திறனும் காட்டினாலும் அது பயன் தருவது மிக அபூர்வமே.


ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இத்தனை சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்கள் திட்டம் நூறு சதவீதம் நிறைவேறாது. முன்பே சொன்னது போல நாம் நினைத்திராத எத்தனையோ தடைகளும், சூழ்நிலைகளும் வந்து சேரலாம். அதற்கென்று திட்டமே வேண்டாம் என்று முடிவு கட்டி  விடாதீர்கள். தடைகளைத் தாண்ட முடியுமா என்றும் சூழ்நிலைகளை மாற்ற முடியுமா என்றும் பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். அப்போது தான் நம் திறமைகளே நமக்கு அறிமுகமாகும்.  அப்படி முடியா விட்டாலும் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு பழையபடி திட்டமிட்ட வாழ்க்கைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வாருங்கள். செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்.


திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் சுமார் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல. மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் என்றும் நீங்கள் வருந்தக் காரணமிருக்காது.

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 22

கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!

இன்றைய காலத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குப் புதிராக இருப்பது என்ன தெரியுமா? மகிழ்ச்சி தான். அதையே அனைவரும் தேடி அலைகிறார்கள். அதற்காக படாத பாடு படுகிறார்கள். பார்க்கின்ற பலரிடம் அது இருப்பதாக எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஆனால் தங்களிடத்தில் மட்டும் ஏனது இல்லை என்று மனம் புழுங்குகிறார்கள். பொருள்களை வாங்கிச் சேர்த்தால் வருமா என்று பார்க்கிறார்கள். குடித்தால் கிடைக்குமா, புகைத்தால் கிடைக்குமா என்று மயங்குகிறார்கள். கேளிக்கைகளில் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். புகழால் பெற முடியுமா என்று முயற்சிக்கிறார்கள்.  ஆனால் மகிழ்ச்சி பலருக்கும் என்றும் ஒரு புதிராகவே தங்கி விடுகிறது.


சில சமயங்களில் மகிழ்ச்சி கிடைப்பது போலத் தெரிகின்றது. ஆனால் ஒருசில சின்ன மாற்றங்களில் அது மின்னல் வேகத்தில் மறைந்தும் போகிறது. இதோ கிடைத்து விடும், இப்போது கிடைத்து விடும், இதைச் செய்தால் கிடைத்து விடும், இது கிடைத்தால் கிடைத்து விடும் என்று சலிக்காமல் அதன் பின்னால் போகும் மனிதனுக்கு மகிழ்ச்சி கடைசி வரை முழுமையாக பிடிபடுவதில்லை. அதனால் தான் பல சமயங்களில் கிளர்ச்சியையே மகிழ்ச்சி என்று எண்ணி அவன் ஏமாந்து விடுகிறான். வெறுமனே ஏமாந்தாலும் பரவாயில்லை அதனால் சிறிதும் எதிர்பாராத பல பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறான்.


உதாரணத்திற்கு சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம். செய்தி ஒன்று-கல்லூரி மாணவ நண்பர்கள் சிலர் ஜாலியாக இருக்க எண்ணி மது அருந்தி இருக்கிறார்கள். போதையில் பேசிக் கொண்டு இருந்த போது அவர்களுக்குள் சண்டை வந்து விட்டது. வாய் வார்த்தைகள் கைகலப்பாகி, கடைசியில் ஒரு மாணவன் தன் நண்பனைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டான்.


நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல கல்லூரியில் சீட் கிடைத்து இன்ஜீனியராகும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த இரண்டு மாணவர்களில் ஒருவன் இறந்து விட்டான். இன்னொருவன் சிறையில் இருக்கிறான். அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடனும், வேதனையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை மதுவில் தேடியதில் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் கிடைத்தது பெருத்த சோகமே.


மது மனக்கவலைக்கு ஒரு மருந்து என்கிற எண்ணம் பலருக்கு உண்டு. இது வரை மது எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைத்ததாய் யாரும் சொல்லி விட முடியாது. போதையால் பிரச்னைகள் உருவாகலாமே ஒழிய தீராது, குறையாது. மூளையை மழுங்கடித்து மந்தமாக்கி யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது. 


இன்னொரு செய்தியைப் பார்ப்போம். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஒரு இளைஞன் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறான். திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தையுடன் நல்ல குடும்பஸ்தனாக இருக்கிறான். அந்த சமயத்தில் அவனுக்கு கூட வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவளுடனேயே அதிகம் இருக்கிறான், குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை, வீட்டு செலவுக்குப் பணம் தருவதில்லை என்ற நிலை வந்தவுடன் தான் அவன் மனைவிக்கு உண்மை தெரிய வருகிறது. அவள் அவளுடைய சகோதரனிடம் சொல்ல அவன் அவளுடைய கணவனுக்கு புத்திமதி சொல்கிறான். ஆனால் அது எடுபடாமல் போகிறது. சகோதரன் சிலரை வைத்து கணவனைக் குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் சிறை வைத்து மிரட்ட, வெளியே தப்பி வந்த கணவன் போலீசிடம் புகார் தருகிறான். சகோதரனுக்கு ஆதரவாக இருந்து இதை செய்ய வைத்த மனைவியைப் போலீஸ் கூப்பிட்டு விசாரிக்கிறது. இனி கைதும் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்ற பயம் வந்த மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த சகோதரனையும், குண்டர்களையும் போலீஸ் தேடுகிறது. இதில் பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக தாயில்லாமல் தவித்து நிற்கிறது.


கள்ள உறவு கிளர்ச்சியைத் தரலாம், அது என்றும் மகிழ்ச்சியைத் தராது. அந்தந்த நேரத்தில் மயங்க வைக்கலாம், ஆனால் என்றும் மனநிறைவைத் தராது. மனைவி, குழந்தை, அமைதியான குடும்பம், நல்ல வேலை என்று ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சியைத் தேடிப் போய் கள்ள உறவில் ஈடுபட்டு குடும்பத்தையே நாசப்படுத்திக் கொண்டு விட்டான் அந்த இளைஞன்.


இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சி என்றால் என்னதென்று அறியாமல் கிளர்ச்சியை மகிழ்ச்சியாய் எண்ணியதால் விளைந்த கொடுமைகள். கானல் நீரை நிஜமென்று எண்ணி பயணித்து ஏமாந்த கதைகள். மகிழ்ச்சியைத் தேடி ஏதேதோ செய்யப் போய் அதற்கு நேர்மாறான துக்கத்தை சம்பாதித்த கதைகள். இந்த அளவிற்கு விபரீதத்தில் போய் முடியா விட்டாலும் கிளர்ச்சிகள் என்றுமே வாழ்க்கையில் நன்மையையும், மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது என்பது மட்டும் உண்மை.


ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்திற்கு விளக்கவுரை எழுதும் போது ராஜாஜி மிக அழகாகச் சொல்வார். “இதில் என்ன குற்றம் என்று எண்ணி மோசம் போக வேண்டாம். கண்கள் வழி திருப்தி உண்டாகாது. உண்டாவது ஆசை தான். ஒருவன் தண்ணீரைத் தேடுவான். தாகத்தை யாரேனும் தேடுவரோ? தேடினால் பிறகு உடனே தண்ணீரைத் தேட வேண்டுமல்லவா? நேர்மையை இழக்க எண்ணமில்லையாயின்  ஏன் நீயாகக் கஷ்டத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்?”


தத்துவார்த்தமாகச் சொல்லப்பட்டாலும் ராஜாஜி அவர்கள் சொன்னதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. தண்ணீரைத் தேடுவது இயற்கை. ஆனால் தாகத்தையே தேடுவது செயற்கை. செயற்கையான எதிலும் மகிழ்ச்சி வந்து விடாது.


கிளர்ச்சிகளின் குணம் எப்போதும் ஒன்றே. அது அக்னியைப் போன்றது. எத்தனை விறகு போட்டாலும் அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும். தீனி போட்டு அதன் பசியைத் தீர்க்க முடியாது. தீனி போடுவதாலேயே பசி அதிகரிக்கும். அழிவு நிச்சயம் என்ற போதிலும் அடங்கி விடாது. அது அழித்தே அணையும்.


தீய பழக்கங்கள் தான் கிளர்ச்சிகள் என்றில்லை. ஒரு வரம்பை மீறி உங்களிடத்தில் எழும் எதுவும் கிளர்ச்சியாக மாறி விடலாம். பண ஆசை, புகழ் ஆசை, பொருளாசை முதலான எதுவும் வரைமுறைக்குள் இருக்கும் போது சாதாரண ஆசைகளாக இருக்கக்கூடியவை. ஒரு வரம்பை விட்டு மேலும் மேலும் அதிகரிக்கும் போது அவை கிளர்ச்சிகளாக மாறி விடும். கட்டுப்பாடு இல்லாமல் போகும். என்ன விலை கொடுத்தாவது அடையத் தோன்றும். மனிதன் என்ற நிலையிலிருந்து மிருக நிலைக்கும் போக வைக்கும். இந்த அறிகுறிகள் தோன்றுமானால் கிளர்ச்சி தன் ஆதிக்கத்தை உங்கள் மேல் செலுத்த ஆரம்பித்து விட்டது என்று பொருள்.


இத்தனையும் செய்வது மகிழ்ச்சிக்காகத் தான் என்ற பொய்யான மனோபாவத்தை அது மனதில் ஏற்படுத்தும். இதில் என்ன குற்றம் என்று அது வாதம் செய்யும். யாரும் செய்யாததா என்ற கேள்வியைக் கேட்கும். அப்போதெல்லாம் ஒரு உண்மையை மறந்து விடாதீர்கள்- கிளர்ச்சிகள் எல்லாம் மகிழ்ச்சிகள் அல்ல.


உண்மையான மகிழ்ச்சி உங்களுடன் அடுத்தவரையும் மகிழ வைக்கும். உங்களோடு சேர்ந்து உங்களுக்கு நெருங்கியவர்களையும் மகிழ வைக்கும். உண்மையான மகிழ்ச்சி நேர் வழியில் தான் வரும். பின்னால் வருந்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் கிளர்ச்சி மகிழ்ச்சியைத் தருவது போல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாது. ஆசைப்பட்டதைப் பெற எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். உங்கள் நல்ல தன்மைகளைப் படிப்படியாக அழிக்கும். உங்களையும் உங்களுக்கு நெருங்கியவர்களையும் கடைசியில் துக்கத்தில் ஆழ்த்தி விடும்.


எனவே மகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்திருங்கள். மகிழ்ச்சியை நாடுங்கள். கிளர்ச்சியை விலக்குங்கள்.

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 23

காலம் அறிந்து செயல்படுங்கள்!

வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.


வெற்றிக்கான இந்த முக்கிய காரணிக்கு காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் ஒதுக்கி உள்ளார்.


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)


(தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.)


ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். (484)


(காலத்தை அறிந்து தகுந்த இடத்தில் செயலைச் செய்பவர் இந்த உலகையே பெற நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.)


காலம் அறிந்து செயல்புரியக் கூடியவனுக்கு முடியாத காரியம் இல்லை, உலகையே பெற நினைத்தாலும் அது கைகூடும் என்கிற அளவுக்கு திருவள்ளுவர் உயர்த்திச் சொன்னது பொருளில்லாமல் அல்ல. வெற்றியாளர்களின் சரித்திரங்களை ஆராய்ந்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.


காலம் மிக முக்கியமானது. விதைக்க ஒரு காலம், விளைய ஒரு காலம், அறுக்க ஒரு காலம் என்று விவசாயத்தில் காலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. காசிருக்கும் போது விதைகள் வாங்கி, மனம் தோன்றுகிற போது விதைத்து, பொழுது கிடைக்கிற போது அறுக்க நினைத்தால் அது எப்படி மற்றவர்களின் நகைப்பிற்கிடமாகுமோ அப்படித்தான் காலம் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும்.


சின்னப் பிள்ளைகளுக்குக் கூட இது போன்ற விஷயங்களில் அதிக விவரமுண்டு. எந்த நேரத்தில் அப்பாவிடம் காசு கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் வேண்டிய பொருள்கள் கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் குறும்பு செய்வது அபாயம் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துபடி. அவர்கள் எல்லா நேரத்திலும் எல்லாமே செய்து விட மாட்டார்கள். பெற்றோரின் மனநிலையும், வீட்டின் சூழ்நிலையும் அறிந்து செயல்படுவார்கள். தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். அந்த அளவு சூட்சுமமான புத்திசாலித்தனம் அவர்களுக்கு பெரும்பாலும் உண்டு.


அதே சூட்சும அறிவு ஒரு வெற்றியாளனுக்கு மிக முக்கியத் தேவை. ஒரு காலத்தில் வெற்றி தருவது இன்னொரு காலத்தில் வெற்றி தராது. ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில் அனாவசியமாகி விடலாம். ஒரு காலத்தில் பேசுவது உத்தமமாக இருக்கும் என்றால் இன்னொரு காலத்தில் பேசுவது வம்பை விலைக்கு வாங்குவது போலத் தான். இப்படி வாழ்க்கையில் பெரும்பாலானவை காலத்திற்கேற்ப மாறுபவையே. எனவே எந்த நேரத்தில் எது பயன் தரும் என்பதை உணர்ந்து அதை செய்தால் ஒழிய ஒருவன் வெற்றி பெற முடியாது.


ஒரு பணக்கார மனிதரை காலம் அறிதல் உலகப்பெரும் பணக்காரராக்கிய ஒரு உதாரணம் பார்க்கலாம். இரும்புத் தொழிலில் நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஆண்ட்ரூ கார்னிஜி என்ற அமெரிக்க செல்வந்தர். அந்த நேரத்தில் தான் இரும்பிலிருந்து எஃகு கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடையும் தன்மை உடையது. ஆனால் எஃகோ நன்றாக வளையக்கூடியதாகவும், அதிக உறுதியானதாகவும் இருந்தது. அதனால் இனி எஃகிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி தன்னுடைய மூலதனத்தை எஃகிற்கு மாற்ற எண்ணினார். அவருடன் சேர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த அவருடைய வியாபாரக் கூட்டாளிகள் அது மிகவும் அபாயகரமானது என்று எண்ணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இப்போதே நல்ல இலாபம் ஈட்டும் தொழில் இருக்கையில் இந்த புதிய மாற்றம் தேவை இல்லாதது என்று எண்ணினார்கள்.


ஆண்ட்ரூ கார்னிஜி புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு எஃகுத் தொழிலில் முழு மூச்சோடு இறங்கினார். அவருடைய பழைய கூட்டாளிகள் வெறும் பணக்காரர்களாக இருந்து விட்ட போது அவர் உலகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தது அவர் அப்படி காலம் அறிந்து செயல்பட்டதால் தான்.


எனவே காலம் அறிந்து செயல்படுவது மிக முக்கியமானது. காலம் வருவதற்கு முன்போ, காலம் கடந்த பின்போ கடும் முயற்சிகள் எடுப்பதும், காலம் கனியும் போது ஒடுங்கிக் கிடப்பதும் தோல்விக்கான தொடர் வழிகள். கடும் உழைப்பாளிகளில் பலர் கீழ்மட்டத்திலேயே தங்கி இருப்பதைப் பார்க்கிறோம். நல்ல திறமைசாலிகளில் பலரும் வாழ்க்கையில் சோபிக்காததையும் பார்க்கிறோம். ஆனால் காலம் அறிந்து அதற்கேற்ற மாதிரி செயல்படுபவர்களுக்கு ஓரளவு திறமையும், ஓரளவு உழைப்பும் இருந்தால் கூட போதும் நல்ல நிலைக்கு விரைவிலேயே உயர்ந்து விடுகிறார்கள். இதுவே யதார்த்தம்.


எனவே காலத்தின் ஓட்டத்தை கவனமாகக் கவனியுங்கள். எல்லாவற்றையும் விட அதிகமான முக்கியத்துவத்தை அதற்குக் கொடுங்கள். காலம் கனியும் போது விரைவாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள். காலம் அறிதல் அதிகாரத்தை மிக அழகாக இப்படிச் சொல்லி திருவள்ளுவர் முடிக்கிறார்.


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (490)


(பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். தக்க காலம் வரும் போது கொக்கு மீனைக் குத்துவது போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்)


எனவே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பாக உழைக்கவும் தயாராக இருங்கள். ஆனால் காலம் அறிந்து செயல்படுங்கள். அப்படி செயல்படும் போது சந்தேகங்களோ, தயக்கமோ வைத்துக் கொள்ளாதீர்கள். (உண்மையாக நீங்கள் காலம் அறிந்தவராக இருந்தால் சந்தேகமோ, தயக்கமோ வரும் வாய்ப்பும் இல்லை.) அப்படி செய்யும் போது காலத்தை உங்கள் துணையாகக் கொள்கிறீர்கள். காலத்தைத் துணையாகக் கொண்டு செயல்படுபவனுக்கு திருவள்ளுவர் கூறியது போல முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 24

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!

பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான  வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக தினசரி வாழ்வில் சீக்கிரமாகவே அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.


உலகம் தன்னிஷ்டப்படியே இயங்குகிறது. நிகழ்வுகள் பலதும் நம் கருத்துக்களை அனுசரித்துப் போவதில்லை. நம்மால் முழுவதும் உணர முடியாத ஏதோ ஒரு விதியின்படியே பலதும் நடக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல சமயங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத,
நம்மால் மாற்றியமைக்க முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த நிலைமையை எள்ளளவும் மாற்றி விடப் போவதில்லை.


ஒரு மரணம் நிகழ்கிறது. இறந்தவர் நம்மால் மிகவும் நேசிக்கப்பட்டவர், அவர் மரணம் நாம் சிறிதும் எதிர்பாராதது என்று வைத்துக் கொள்வோம். அந்த மரணம் நமக்குக் கண்டிப்பாக பெரும் துக்கத்தைத் தரும் தான். அதுவும் இறந்தவர், கணவனாகவோ, மனைவியாகவோ, பிள்ளைகளாகவோ, தாயாகவோ, தந்தையாகவோ இருந்தால் அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அதுவும் அவரால் ஆக வேண்டிய காரியங்கள் நிறைய இருந்தால் மனரீதியாக மட்டுமல்லாமல் எல்லா வகையிலும் நாம் பாதிக்கப்படுவதால் சிரமங்களும் மிக அதிகமாகத் தான் இருக்கும். அதனால் அந்த துக்கம் இயற்கையானது. நியாயமானதும் கூட.


ஆனால் மரணம் ஒவ்வொருவரும் சந்தித்தாக வேண்டிய ஒரு நிகழ்வு. மரண காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்கிற போது அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். உடனே தோன்றுகிற இயல்பான துக்கத்தில் இருந்து விரைவாக நாம் மீண்டு எழத்தான் வேண்டும். நடக்க வேண்டிய காரியங்களை சரியாக கவனித்து செயல்பட்டே தீரவேண்டும். இறந்தவர்களுக்காக இருக்கிறவர்களை புறக்கணித்து விடக் கூடாது. அது நியாயமும் அல்ல, விவேகமும் அல்ல. ஆனால் பலர் இந்த துக்கத்தில் இருந்து மீள்வதில்லை. ’இந்த மரணம் நியாயமா? சரியான காலத்தில் தான் வந்திருக்கிறதா? சாவுக்காக எத்தனையோ பேர் காத்திருக்கையில் இவருக்கு ஏன் வரவேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளிலேயே தங்கி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு உலகம் பதிலளிப்பதில்லை.


மரணம் போன்ற இன்னும் எத்தனையோ பெரிய விஷயங்கள் இருக்கின்றன. விபத்துகள், நோய்கள், பெரும் நஷ்டங்கள், மோசமான மாற்றங்கள் எல்லாம் நம் சீரான வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடும். வந்ததை மறுப்பதால் பிரச்சினைகள் கூடுமே ஒழிய குறையாது. உண்மை நிலையை உணர்ந்து ஏற்றுக் கொண்டால் மட்டுமே தெளிவாக சிந்திக்கவும், செயல்படவும் முடியும். அந்த வகையில் மட்டுமே ஓரளவாவது பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள முடியும். யார் காரணம் என்று ஆராய்வதிலும், குற்றப்பத்திரிக்கை தயார் செய்வதிலும், எனக்குப் போய் இப்படி ஆகி விட்டதே என்று சுயபச்சாதபத்தில் மூழ்குவதிலும் எந்த விதத்திலும் ஒருவருக்கு பயன் கிடைக்காது.


பெரிய விஷயங்களைப் பார்த்தோம். இனி சின்ன விஷயங்களைப் பார்ப்போம். முக்கிய வேலையாகப் போகிறோம். வழியில் ட்ராஃபிக் ஜாம் ஆகி விடுகிறது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இது சந்தோஷப்பட வேண்டிய சூழ்நிலை அல்ல தான். ஆனால் சிலர் அந்த நேரத்தில் படும் அவசரமும், அவஸ்தையும் கொஞ்ச நஞ்சமல்ல. புலம்பித் தீர்ப்பதும், குடியே மூழ்கிப் போய் விட்டது போல மன அமைதி இழப்பதும் பலரிடம் நாம் பார்க்க முடிந்த தன்மைகள்.


அந்தப் புலம்பலாலும், அவசரத்தாலும் அந்த நிலைமையை மாற்றி விட முடியுமா? சில நிமிட தாமதங்களால் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நிகழ்வுகள் நிகழ்ந்து விடுமா? சரி செய்யவே முடியாத பேரிழப்பா அது? சில நிமிட சில்லறை அசௌகரியத்திற்கு பலரும் அமைதியிழந்து தவிப்பதும், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதும் என்னவொரு அறியாமை? மன அமைதியை இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் இழக்க ஆரம்பித்தால் மனம் அந்த அளவு பலவீனம் என்றல்லவா அர்த்தம். எது வேண்டுமானாலும் எவ்வளவு சீக்கிரமும் அதைப் பதட்டமடையச் செய்து விடும் என்றும், சுலபமாக அசைத்து விடும் என்றல்லவா பொருள்.


அதே போல் நிறைய சின்ன விஷயங்கள் பலரையும் தேவைக்கும் அதிகமாக மன அமைதி இழக்கச் செய்கின்றன. மழை விடாது பெய்தால் மன சங்கடம் வந்து விடுகிறது. அலுவலகத்திலும், அக்கம்பக்கத்திலும் ஒருசிலருடைய குணாதிசயங்கள் எரிச்சலைக் கிளப்புவதாக இருந்தால் மன அமைதி பறி போகிறது. எதிர்பார்த்தபடி அடுத்தவர்கள் நடக்கா விட்டால் மனம் குமுறுகிறது. இது போன்ற சின்னச் சின்ன இயற்கையான, நம்மால் மாற்ற முடியாத விஷயங்களில் மன அமைதியை இழப்பது அதிகம் நடக்கிறது. தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் சீண்டிப்பார்க்கக் கூடிய இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் அதிகம் வருவது இயல்பே. இதைப்பற்றி அதிகம் நினைத்து, இதைப் பற்றியே அதிகம் புலம்பி தானும் வருந்தி சுற்றியுள்ளவர்களுக்கு அந்த மனநிலையை பரப்பி அமைதியை அந்த வட்டாரத்திலேயே இல்லாமல் செய்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். 




இந்தக் கூட்டத்தில் நீங்களும் இருக்கிறீர்களா என்று பாருங்கள். வாழ்க்கையில் சகிக்க முடியாதவற்றில் மாற்றக் கூடியவை நிறைய உண்டு. அதை மாற்றும் முயற்சியில் மனிதன் ஈடுபட்டதால் மட்டுமே உலகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது. மனித சமுதாயம் வளர்ந்துள்ளதற்கும் காரணம் அதுவே. ஆனால் அதே போல மாற்ற முடியாத விஷயங்களும் நிறைய உண்டு. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை நாம் இங்கு பார்த்தோம். இவை நாம் முகம் சுளிப்பதால் தவிர்க்க முடிந்தவை அல்ல. இவை நாம் புலம்பினால் வராமல் இருப்பவையும் அல்ல. இது போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கையை நாம் லகுவாக்கிக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்ளும் போது நம் சக்தி வீணாவதைத் தடுக்கிறோம். மன அமைதியும் பெறுகிறோம்.


அப்போது ‘ஐயோ இப்படி ஆகி விட்டதே’ என்ற ஒப்பாரிக்கு பதிலாக ‘இனி என்ன செய்வது?’ என்ற ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கிறது. இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான சிந்தனையால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தும் விடுபடும் வழியோ, அல்லது அந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் வழியோ பிறக்கிறது. இப்படி மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் போது உலகத்துடன் போராடுவதை விட்டு விட்டு, உலகத்துடன் ஒத்துப் போய் சமாளித்து வெற்றி பெறுகிறோம்.

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 25


எல்லாம் ஒரு நாள் முடியும்!


இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்த பாடங்களைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால் இவற்றை வாழ்ந்து காட்டுவது சுலபமல்ல. பெரும்பாலானோரும் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறோம். சிலவற்றிலோ பற்பல முறைகள் சறுக்கி விடுகிறோம். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று சிறப்பு பெறுவது யதார்த்த உலகில் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை வாழ்ந்து பார்க்கும் போது தான் நமக்குப் புரிகிறது. எல்லாப் பாடங்களையும் கற்று கடைபிடிக்க ஒரு வாழ்நாள் போதுமானதாக இருப்பதில்லை என்பதையும் பலர் உணர்கிறார்கள்.

இந்தக் கடைசி பாடம் வெற்றிகரமான சிறப்பான வாழ்க்கைக்கல்ல. வெற்றியோ, தோல்வியோ, நிறைவான வாழ்க்கையோ, குறைவான வாழ்க்கையோ, மொத்தத்தில் மன அமைதியை உணர வைக்கும் பாடம். அது தான் எல்லாம் ஒரு நாள் முடியும் என்றுணர்வது!

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!

நன்றி வாசகர்களே. வாழ்ந்து படிக்கும் பாடங்கள் ஏராளமாக இருப்பினும் இந்த அதிமுக்கிய பாடத்தோடு இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன்.

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version